Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

2024 பாரளுமன்ற தேர்தல் முடிவுகள்; தேசிய மக்கள் கட்சியும் தமிழ் மக்களும்

ச. வி. கிருபாகரன், பிரான்ஸ்

எமது பாடசலை காலங்களில், இளைஞர்கள் யுவதிகள் ஒருவரை ஒருவர் காதலிப்பதும், பின்னர் பிரிவில் முடிந்ததும், அதிகமாக தமது காதல் கடிதங்களில் எழுதும் சினிமாப்படல் என்பது, 1962ம் ஆண்டில் வெளியான “நெஞ்சில் ஓர் ஆலயம் படத்தில்” வெளியான ஓர் பாடல். இப்பாடலை விரும்பியவர்கள் முழுதாக கேட்டால் இன்னும் பல சிந்தனைகளுடன் இன்றைய தமிழ் அரசியலில், விசேடமாக கடந்த வெள்ளிக்கிழமை 15ம் திகதி வெளியான இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் முடிவுகளுடன் ஒப்பீடு செய்து பார்க்க முடியும்.

தமிழ் வைத்தியம் என சொல்லப்படும், ஆயுள்வேத வைத்தியத்தின் மருந்துகள் மிகவும் கசப்பும் கைப்பும் நிறைந்தவை. இந்த அடிப்படையில், அந்த மருந்தை கொடுக்கும் வைத்தியர் இந்த மருந்துக்களை தேனுடன் சேர்த்து உண்ணுங்கள் என்பார். இந்த அடிப்படையில், இந்த பாடலில் சில வரிகளை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
“நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை, நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றுமில்லை;……எங்கே வாழ்க்கை தொடங்கும்… அது எங்கே எவ்விதம் முடியும், இதுதான் பாதை இது தான் பயணம் என்பது யாருக்கும் தெரியாது”.

இப்பொழுது எமது தமிழ் அரசியலின் காதலிற்கும் பிரிவிற்கும் வருவோம். வடக்கு, கிழக்கு தமிழர்களது தாயகபூமி என்ற இலங்கைத் தீவின் சரித்திரத்திற்கு 1948ம் ஆண்டுவரை இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களான போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர்கள், பிரித்தானியர்கள் சாட்சியாக உள்ளார்கள்.

anura-5-1024x453.jpg

இந்த நிலையில் எமது தமிழ் அரசியல் என்பது, இன்று தலைகீழாக வருவதற்கு வழிவகுத்தவர்கள் யார் என்பதை திமிர்பிடித்த சில குறிப்பிட்ட தமிழ் அரசியல்வாதிகள் மக்களிற்கு பதில் சொல்வதற்கு காலம் பிந்தியுள்ளது. காரணம், மக்கள் ஏற்கனவே தமது பாதைகளை தேடியுள்ளார்கள் என்பதை தமிழர் பிரதேசங்களின் கோட்டையாக விளங்கிய யாழ்.மாவட்டத்தின் தேர்தல் முடிவு நன்றாக விளக்கியிருக்கிறது.

இதற்கு ஆய்வாளர் எனும் பெயரில் உலாவரும் ஆய்வாளர்கள், இந்த தோல்விக்கான காரணங்களை தமது விதண்டாவாத கருத்துக்களின் அடிப்படையில் ஆய்வு செய்வது, “வீழ்ந்தாலும் மீசையில் மண் படவில்லை” என்பதற்கு ஒப்பானது.

முதற்கண் தமிழரின் தாயக பூமியின் தலைநகரான திருகோணமலை மற்றும் கிழக்கு பறிபோயுள்ளது என்று எண்ணுபவர்களிற்கு, “இல்லை” அது நீற்றுப் போன தணலாக இருந்தது என்பதை நிரூபித்த – திருகோணமலை, மட்டக்களப்பு, வன்னி மாவட்டங்களில் வெற்றி பெற்று “தமிழன் என்று சொல்லடா, தலை நிமிர்ந்து” நில்லடா என்று பெருமையை கூறவைத்த, மதிப்பிற்குரிய வெற்றி பெற்ற தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இதேவேளை, உங்கள் வெற்றி என்பது, உங்கள் பிரதேசங்கள், எதிர்காலத்தில் சிங்கள பௌத்த பிரதேசங்களாக மேலும் விரைவாக மாற்றுவதற்கான வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்படும் என்பதையும், உங்கள் கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறோம். ஆகையால் உங்கள் வழமையான கண்காணிப்பு உங்கள் பிரதேசங்களில் மிக மிக அவசியம்.

அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டும்

அடுத்து யாழ்.மாவட்டத்தில் – தேசிய மக்கள் சக்தியில் மூவரும், தமிழரசு கட்சி, தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளிலிருந்து ஒவ்வொருவருமாக ஆறு வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். யாழ்.மாவட்டத்தில், தமிழரசு கட்சியின் மானத்தை காப்பாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்கள்.தோல்வியடைந்த சுமந்திரனால் தேர்தல் காலங்களில் தொடர்ந்து கூறப்பட்டு வந்த, “தமிழரசு கட்சியிலிருப்பவர்கள், யாராவது மதுபான (பார்) அனுமதி பெற்றிருந்தால், அவர்கள் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்ற பின்னரும் தண்டிக்கப்படுவார்கள்” என கூறியதன் அடிப்படை சூழ்ச்சியை சிறிதரனின் வெற்றியை மறுதலிக்கும் திட்டம் என்பதை தமிழரசு கட்சியில் விசேடமாக சிவஞானம் உட்பட மற்றைய உறுப்பினர்களும் தமிழ் மக்களும் இப்பொழுது நன்றாக புரிந்து கொள்வார்களென நம்புகிறோம்.இதேவேளை மாமனிதர் குமார் பொன்னம்பலத்தின் மகன் கஜேந்திரகுமார், வைத்தியர் இராமநாதன் அச்சுதன் ஆகியோரும் யாழ் மாவட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு சில விடயங்களை நாம் ஆராய கடமைப்பட்டுள்ளோம். முதலாவதாக யாழ்.மாவட்டத்தில் மூன்று இடங்களை பெற்று கொண்ட ஜே.வி.பி அல்லது தேசிய மக்கள் சக்தியில் வென்றவர்கள் யாவரும் தமிழர்களே.

அடுத்து ஒட்டுமொத்தமாக, யாழ்.மாவட்டத்தில் வெற்றி பெற்றவர்களை நாம் பார்க்கும் பொழுது, அங்கு தெரிவான ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள், அரசியல் முதிர்ச்சியும் தகமையும் அனுபமும் கொண்டவர்களாக காணப்படுவது, முன்பு தமிழரசில், தமிழ் காங்கிரசில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களை நினைவுபடுத்துகிறது.

யாழ்.மாவட்டத்தில் தேர்தலில் எல்லாமாக 396 வேட்பாளர்கள் போட்டி போட்டிருந்தாலும், யாவரும் தமிழர்களாக காணப்பட்ட பொழுதிலும், இதில் ஒரு சிலர் “தெற்கிற்கு தலையையும், வடக்கிற்கு வாலையும” காட்டி வேலை செய்து, தமிழ்த் தேசியம், நாளுக்கு நாள் மறைந்து போவதற்கு சிறு சிறுதாக வித்திட்ட காரணத்தினால், இவர்கள் நிச்சயம் தமிழர் அரசியலிலிருந்து நீக்கப்பட வேண்டும் என்பதில் பலர் இவர்கள் தோல்விக்கு முன்னின்று உழைத்தார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

இங்கு தெரிவான ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில், இருவர் தவிர்ந்த மற்றைய நால்வர்களில், வைத்தியர் அர்ச்சுணா கடந்த சில மாதங்களாக சாவகச்சேரி வைத்தியசாலையில் நடந்துள்ள தில்லுமுல்லுகளை வெளிக்கொண்டு வந்த காரணங்களினால் மக்களிற்கு ஓரளவு தெரிவதை தவிர, மற்றைய தேசிய மக்கள் சக்தியில் தெரிவான மூவரையும், மக்கள் அறவே அறிந்திராத புதியவர்கள். ஆகையால் இவர்களை மக்கள் ஆதரித்தார்கள் என்பதற்கு மேலாக, தேசிய மக்கள் சக்தியை மக்கள் ஆதரித்தார்கள் என்பதே உண்மை.

வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி

ஆகையால் யாழ்.மாவட்டம் மட்டுமல்லாது, பொதுவாக வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தியை சார்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களுக்கு தேசிய மக்கள் கட்சியினர், கடந்த காலங்களில், தமிழ் தேசியத்திற்கு இவர்கள் எதிராக செய்யப்பட்ட விடயங்களிற்கான விளக்கங்களையும், அவற்றை நிவர்த்தி செய்யும் வழிகளில் இவர்களது செயற்பாடுகளும் அமைய வேண்டும் என்பது இங்கு குறிப்பிடதக்கது.

உதாரணமாக;

1) 2002ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளுக்கும் அரசிற்குமான பேச்சுவார்த்தையை இவர்கள் எதிர்த்ததுடன், கண்டிவரை ஊர்வலம் சென்றார்கள்
2) 2005ம் ஆண்டு தமிழீழ விடுதலை புலிகளிற்கும் அரசிற்கும் இடையில் கைச்சாத்தான சுனாமி மனிதாபிமான கட்டமைப்பை இவர்கள் எதிர்த்தார்கள்.
3) ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை, தமிழீழ விடுதலை புலிகளுடனான யுத்தத்தை தொடருமாறு இவர்கள் வற்புறுத்தியது மட்டுமல்லாமல், தெற்கில் உள்ள இளைஞர்கள் இராணுவத்தில் இணைவதற்கு மறுத்த காலப்பகுதியில் ஜே.வி.பி.தெற்கின் கிராமப்பகுதி இளைஞர்கள், யுவதிகளை, விசேடமாக பதினெட்டு வயதிற்கு குறைவானவர்களை இராணுவத்தில் இணைத்ததுடன், யுத்த நிறுத்தத்திறகும் சமாதான முயற்சிகளிற்கும் இவர்கள் தடையாக நின்றார்கள்
4) 2006ம் ஆண்டு நீதிமன்றம் மூலம் வடக்கு – கிழக்கை பிரித்தார்கள்.
5) முள்ளிவாய்க்காலில் எந்தவிதமான மனிதாபிமான உதவிகளையோ அல்லது அவர்கள் மீது ராஜபக்ச அரசினால் மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பிற்காகவோ, எந்தவித அனுதாபமும் காட்டாது கண்மூடித்தனமாக இருந்தவர்கள் இவர்கள்.
6) இன அழிப்பிற்கு காரணமான போர்க்குற்றவாளிகள் விடயத்தில் இவர்கள் அவர்களை தாம் தண்டிக்கமட்டோம் என்ற நிலைப்பாட்டை ஏற்கனவே எடுத்துள்ளனர்.தேசிய மக்கள் சக்தி நிச்சயம் சர்வதேச ரீதியாக பல சிக்கல்கள், கஸ்டங்களை எதிர்காலத்தில் ஏற்படுத்தும் என்பதை இவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

இன்று தேசிய மக்கள் சக்திக்கு தமிழர் பிரதேசங்களில் வாக்களித்துள்ள பெரும்பான்மையானோர் தமது உறவினர்கள், நண்பர்கள், போன்று ஆயிரக்கணக்கானோரை முள்ளிவாய்க்காலில் மட்டுமல்லாது, அதற்கு முன்பும் காணாமல் ஆக்கப்பட்டும் படுகொலையும் செய்யப்பட்டுள்ளனர் என்பதை இவர்கள் உணர்ந்து அவற்றிற்கு நீதி காண்பதற்கு முன்வர வேண்டும்.

விசேடமாக வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளிற்காக என்ன செய்வார்கள் என்பதை தேசிய மக்கள் சக்தியினர் மேடை பேச்சில் மட்டும் கூறுவதை தவிர்த்து செயலில் செய்ய வேண்டும். இன்று இவர்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை உள்ள நிலையில், எந்தவித தங்கு தடையுமின்றி செய்கையில் இவர்கள் செய்ய முடியும்.இதை தவிர்த்து, தமிழர் பிரதேசத்தில் “தோழர் தோழர்” என்று இவர்கள் கூறுவது அல்ல, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வு.

இதேவேளை, இன்று வடக்கு, கிழக்கில் வெற்றி பெற்ற தேசிய மக்கள் சக்தி மட்டுமல்லாது, திமிர் கொண்ட சில அரசியல்வாதிகளும், சில விடயங்களை உணர வேண்டும். அன்று 2009ம் ஆண்டில், போர் முடிந்த காலப்பகுதியில், பிறந்த குழந்தைகளிற்கு இன்று பதினைந்து, பதினாறு வயது. இதேவேளை அன்று ஐந்திலிருந்து பத்து வரை காணப்பட்ட சிறுவர்களிற்கு, இன்று இருபது, இருபத்தைந்து வயது.
இந்த நிலையில் திமிர் கொண்ட தமிழ் அரசியல்வாதிகள், தமிழ் மக்களின் அரசியல் என்ன என்பதை மறந்து, கட்சிகளின் முக்கியத்துவத்தை மறந்து, இவர்கள் யாரும் தமிழ் இளைஞர்களிற்கு ஒழுக்கமான அரசியலை கற்பித்தது கிடையாது. தமிழ் அரசியல்வாதிகள் இளைஞர்களிற்கு கற்பித்தவை யாவும் – எப்படியாக ஐக்கியத்தை உடைக்கலாம், எப்படியாக கட்சியை பிரிக்கலாம், எப்படியாக மற்றவர்களிற்கு சேறு பூசலாம் , எப்படியாக கட்சியை தமதாக்கலாம், மற்றைய தமிழர்களுடன் இணைந்தால் தமது வளர்ச்சி எப்படியாக பாதிக்கப்படும் போன்ற விடயங்களையே.இதனால் இந்த இளைய தலைமுறை, இவர்களிற்கு காலம் கொடுத்தும் இவர்கள் திருந்தாத காரணத்தினால், இளைஞர்கள் திமிர் கொண்ட தமிழ் அரசியல்வாதிகளிற்கு இன்று பாடம் கற்பித்துள்ளார்கள்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியும் சில விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும். 1972ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட அரசியல் யாப்பும் அன்றைய அரசின் நடவடிக்கைகளுமே, தமிழ் மக்களிற்கான ஏமாற்றத்திற்கு வித்திட்டதுடன், வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் இளைஞர்கள் ஒட்டுமொத்தமாக, தமிழ் மக்களிற்கான அரசியல் தீர்வை ஆயுத போராட்டம் மூலமே பெற்று கொள்ளலாம் என்ற முடிவிற்கு வர காரணமாக இருந்தது.தொடர்ச்சியான முப்பது ஆண்டு கால ஆயுத போராட்டம் மூலம், தமிழீழ விடுதலை புலிகள் வடக்கு, கிழக்கின் மூன்றில் இரண்டு பிரதேசங்களில், ஓர் நடைமுறை அரசை நிறுவினார்கள் என்பதை யாரும் மறுக்க முடியாது. ஆனால் இந்த போராட்டம் சர்வதேசத்தின் ஆதரவுடன் நடைபெறாதது ஓர் துர்ப்பாக்கியம்.

ஆகையால், தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசியல் யாப்பு என்பது, வடக்கு கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தாது நடைமுறைப்படுத்தப்படுமானால், இன்று உங்களிற்கு வாக்களித்துள்ள வடக்கு, கிழக்கு வாழ் இளைய தலைமுறை, எதிர்காலத்தில் சர்வதேசத்தின் துணையுடன் உங்களிடமிருந்து தமது அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக் கூடிய அரசியல் தீர்வை அவர்கள் தேடிக் கொள்வார்கள் என்பதை தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் மனதில் கொள்ள வேண்டும்.

ஜே.வி.பி.யான தேசிய மக்கள் சக்தி தமது பழைய கால அனுபவங்கள் மூலம் வடக்கு, கிழக்கு வாழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை திருப்திப்படுத்தக்கூடிய அரசியல் தீர்வை அவர்களால் நிச்சயம் முன்வைக்க முடியும். அவை தவறும் பட்சத்தில், “யாவும் பழைய குருடி, கதவை திறவடி” என்ற கதையாகவே முடியும் என்பதில் எந்த ஐயமுமில்லை.
இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதை கண்டுள்ள தமிழ் தலைமைகள் என்ன எண்ணம், திட்டத்தில் உள்ளார்கள் என்பதை நாம் இன்னும் சில நாட்களில் காணமுடியும். ஆனால் இவர்கள் சிதறி நின்று கூட்டணி, கூட்டமைப்பு என்று அணி சேர்வது தமிழர் அரசியலில் அறவே நடைமுறைக்கு சாத்வீகம் இல்லாத விடயம் என்தை நாம் கடந்த பதினைந்து வருடங்களில் பார்த்துள்ளோம்.

விசேடமாக ஐக்கியத்திற்கு அறவே முன்வராத ஓர் கறுப்பு ஆடு தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில், ஐக்கியம் என்பது கேள்விக் குறியாகவே தொடரும்.ஆனால், என்று இளைஞர்கள் புதிய ஆட்சியாளர்களாலும் வடக்கு, கிழக்கு வாழ் மக்கள் மீண்டும் ஏமாற்றப்பட்டுள்ளார்கள் என்பதை உணர்கிறார்களோ, அன்று இன்று வாக்களித்த இளைஞர்கள் நிச்சயம் ஓர் ஒருங்கிணைந்த சர்வதேசத்தின் துணையுடன் செயற்படுவார்கள் என்பது தின்னம். அதுவே வடக்கு, கிழக்கை தாயகமாக கொண்ட தமிழர்களின் இறுதி முயற்சியாக அமையும்.

ராஜபச்சா- பொன்சேக்க தோல்வி
இதேவேளை தெற்கின் அரசியலை நாம் பார்த்தால் சகல முன்னாள் – பின்னாள் அரசியல் கட்சிகள் யாவும் கடுமையான தோல்விகளை கண்டுள்ளனர். இதில் யுத்தத்தின் கதாநாயகர்களாக விளங்கிய கட்சியின் கதை என்பது, ஜனாதிபதி தேர்தலிலும், பாராளுமன்ற தேர்தலிலும் மிகவும் மோசமான தோல்விகளை கண்டுள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்ற கோத்தாபய ராஜபக்சவை தொடர்ந்து, நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அவர்கள் கட்சி நூற்று நாற்பத்தைந்து (145) பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றிருந்தனர்.ஆனால் இம்முறை நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் அவர்கள் மிக சொற்ப வாக்குகளை பெற்றதுடன், நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் மூன்று (3) பாராளுமன்ற உறுப்பினர்கள் வெற்றி பெற்றுள்ளனர்.

இங்கு ஓர் முக்கிய விடயத்தை கூறியே ஆக வேண்டும். தற்பொழுது ஈழத்தமிழர்களிடையே மட்டுமல்லாது, உலக மக்களிடையே நிலவும் முக்கிய கேள்வி என்னவெனில், தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் உள்ளாரா? இல்லையா? என்பதில் இரு பிரிவுகள் ஏறக்குறைய இருவருடங்களாக காணப்படுகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் உயிருடன் உள்ளார் என்பதை அடிப்படையாக கொண்டு, என்னால் கொழும்பில் பிரபல்யமான ஆங்கில ஊடகத்தில் – மகிந்த ராஜபக்ச, கோத்தபாய ராஜபக்ச, சரத் பொன்சேக்கா, பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்தின ஆகியோருக்கு பிரபாகரன் உயிருடன் இருப்பதை என்னால் நிரூபிக்க முடியுமென ஓர் சவால் விட்டிருந்தேன். ஆனால் இச் சவாலை எதிர்கொள்ள இவர்கள் யாரும் முன்வரவில்லை. இந்த கட்டுரையை தமிழ் அச்சு ஊடகங்கள் பிரசுரிக்க மறுத்திருந்தாலும், இணையத்தள ஊடகங்கள் வெளியிட்டதுடன், இக் கட்டுரையை எனது சிங்கள நண்பர்கள் சிங்களத்திலும் மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தார்கள்.

இதை இங்கு குறிப்பிடுவதன் முக்கிய காரணம் என்னவெனில், இக் கட்டுரையை தொடர்ந்து, தென் பகுதி மக்கள், ராஜபக்ஸக்களும் தளபதி சரத் பொன்சேக்காவும் தமக்கு நடந்து முடிந்த யுத்தம் பற்றி மாபெரும் பொய்களை கூறி தம்மை ஏமாற்றியுள்ளார்கள் என்பதை மனதில் கொண்டுள்ளதும் ராஜபக்சக்களினதும், சரத் பொன்சேக்காவின் தொடர்ச்சியான தேர்தல் தோல்விகளிற்கான காரணங்களில் ஒன்றாகுமென தெற்கு வாழ் நண்பர்கள் கூறுகிறார்கள்.

 

https://thinakkural.lk/article/312449

 



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.