Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

மட்டக்களப்பின் தேர்தல் முடிவுகளில் கற்றுக் கொண்ட பாடம் என்ன?

  — கலாநிதி சு.சிவரெத்தினம் —

நடப்பதெல்லாம் நன்மைக்குத்தான் என்பார்கள், பொருளாதார நெருக்கடியும், வரிசைக்(queue) காலமும் இடம்பெற்றதும் நன்மையாகத்தான் முடிந்திருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் பாரம்பரியமாக ஆட்சி செய்து வந்த உயர்வர்க்க ஆட்சியாளர்கள் தூக்கியெறியப்பட்டு சாதாரண உழைக்கும் வர்க்கத்திலிருந்து பல கஸ்ரங்களை அனுபவித்த ஒருவர் ஜனாதிபதியானதும். அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுநிதியையும் அதிகாரத்தையும் எவ்வாறு துஸ்பிரயோகம் செய்திருக்கின்றார்கள் என்பதை புதிய ஜனாதிபதியும் அவருடைய அரசும் வெளிக்காட்டியதும் மக்களை முன்னைய ஆட்சியாளர்கள் மீது அதிருப்தியை ஏற்படுத்தி தேசிய மக்கள் சக்தியினர் மீது விருப்பையும் நம்பிக்கையையும் ஏற்படுத்த உதவியது. 

இதனுடைய பெறுபேற்றினை மக்கள் பாராளுமன்றத் தேர்தலில் வெளிக்காட்டியுள்ளார்கள்.  

தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்டத்தைத் தவிர்ந்த மற்ற மாவட்டங்களில் எல்லாம் பெரும்பான்மை ஆசனங்களைக் கைப்பற்றி பெரு வெற்றியை ஈட்டியுள்ளது. இதுவரை எந்தவொரு கட்சியும் பெறமுடியாத சாதனையையும் நிலைநாட்டியுள்ளது. ஆனால் மட்டக்களப்பில் மட்டும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற முடியாமல் போனதும் கிழக்கின் தனித்துவக் கட்சி என்று தங்களைக் கூறிக் கொண்ட தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி தோற்கடிக்கப்பட்டதும், மட்டக்களப்பில் தழிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதுக்குமான காரணங்கள் பக்கச் சார்பின்றி மதிப்பீடு செய்யப்பட வேண்டியவையாகும். 

இவ்வாறானதொரு மதிப்பீடு அரசியல் நாட்டம் கொண்டவர்களுக்குப் பயனுள்ளதாக அமையாலாம்.

முதலில் தேசிய மக்கள் சக்தி ஏன் மட்டக்களப்பில் பெரும்பான்மை ஆசனங்களைப் பெறமுடியாமல் போனமைக்கான காரணங்களை நோக்குவோமாக இருந்தால்,

தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட உறுப்பினர்கள் மட்டக்களப்பு அரசியல் சூழலை சரியாகக் கணிக்கத் தவறியிருந்தனர். இது தொடர்பாக மட்டக்களப்பில் அரசியலில் அனுபவமுள்ள பலர் அதன் பொறுப்பாளர்களுக்கு எடுத்துக் கூறிய போதும் அது அவர்களால் சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை. சமூக அக்கறை கொண்ட சிலர் இவ்வாறுதான் நடக்கும் என்பதை முன்னமே கணித்து அதனை கொழும்புவரைச் சென்று தேசிய மக்கள் சக்கதியின் தலைமைக் காரியாலையத்தில் தெரியப்படுத்திய போதும் கூட அவர்கள் பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டார்களே தவிர மட்டக்களப்புப் பிரதிநிதிகளின் கணிப்பீட்டை மதித்து சரியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியிருந்தனர்.

வேட்பாளர் பட்டியல் தயாரிக்கும் முன்பு மட்டக்களப்பின் பல்வேறுபட்ட சமூகக் குழுக்களுடன் ஒரு கலந்துரையாடலைச் செய்து வெளிப்படைத் தன்மையுடன் வேட்பாளர் பட்டியலைத் தயாரிக்கும்படி முன்வைத்த கோரிக்கை கூட கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படாமல் கட்சி உறுப்பினர்களுக்கே வேட்பாளர் நியமனம் வழங்கப்பட வேண்டும் என்பதே கட்சியின் முடிவு எனக் கூறிக் கொண்டு ஒரு சில தனிநபர்களின் நலனை மாத்திரம் கருத்தில் கொண்டே வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. ஆயினும் ஏற்கனவே வேறு கட்சியில் வேட்பாளராக நின்று தோற்றவருக்கும் வேறு கட்சியில் உள்ளூராட்சி தேர்தலில் நின்று போட்டியிட்டு உள்ளூராட்சி சபை உறுப்பினராக இருந்தவருக்கும் வேட்பாளர் நியமனம் வழங்கப்பட்டது.

அதுமட்டுமன்றி தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு வேட்பாளர் பட்டியலில் தலைமை வேட்பாளராக இருப்பவர் பெறும் வாக்கை விட கூடுதலான வாக்குகளைப் பெறக்கூடிய நபர்களை வேட்பாளராக நியமிக்க குறிப்பிட்ட தலைமை வேட்பாளர் விரும்பியிருக்கவில்லை. அதற்கேற்றாற்போல்த்தான் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவ்வாறு தயாரிக்கப்பட்ட அந்த வேட்பாளர்கள் பட்டியலில் உள்ள வேட்பாளர்கள் மட்டக்களப்பு மக்களின் மனங்களை வெல்லக் கூடியவர்களாகவும் இருக்கவில்லை.

வேட்பாளர் நியமனத்துக்குப் பின்பு வேட்பாளர்களை நோக்கி முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு பொறுப்பான விதத்தில் பதில்களை வழங்கி வாக்காளர்களைக் கவருவதற்குப் பதிலாக அந்தக் கேள்விகள் தங்களை தோற்கடிக்கப்படுவதற்காக முன்வைக்கப்படுபவையாகவே தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டன. அந்தக் கேள்விகள், விமர்சனங்கள் தொடர்பாக தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பதிலளிக்காமல் வேட்பாளர்களின் ஆதரவாளர்களே பொறுப்பற்ற விதத்தில் பதிலளித்தார்கள். இது மாற்றரசியல் தொடர்பாக ஆர்வம் கொண்டவர்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவே இருந்தது. இதனால் ஆரோக்கியமான அரசியல் உரையாடலொன்று மக்கள் மத்தியில் நடாத்தப்படவில்லை.

ஜனாதிபதியின் எளிமையும், அவரது ஊழல் ஒழிப்பு, நீதி நிர்வாகத்தில் அரசியல் தலையீடற்ற தன்மை, மக்களுக்கான அரசு, அனைவரும் இலங்கையர் போன்ற அவரது நடத்தைகளுமே மட்டக்களப்பு வேட்பாளர்களின் அரசியல் முதலீடுகளாக இருந்தன. இந்த முதலீடு தேசியளவில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருந்தபோதிலும்  யுத்தத்தினாலும் பல்வேறு அரசியல் பிரச்சினைகளாலும் சமூகப் பொருளாதார ரீதியாக வலுவற்றிருந்த மட்டக்களப்புக்குப் போதுமானவையாக இருக்கவில்லை. குறிப்பாக ஜனாதிபதியின் அனைவரும் இலங்கையர் என்ற கோசம் கூறுவதற்கும் கேட்பதற்கும் நன்றாக இருந்தபோதும் முஸ்லிம்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே இன்னும் அன்னியோன்னியமான உறவு கட்டியெழுப்பப்படவில்லை. கடந்த காலங்களில் முஸ்லிம் அரசியல்வாதிகள் நடந்து கொண்ட முறையும் தமிழ் இயக்கங்கள் முஸ்லிம்கள் விடயத்தில் நடந்துகொண்ட முறையும் இரு இனங்களுக்கும் இடையில் இன்னும் வலுவான நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. இதனால் முஸ்லிம்களும் தமிழர்களும் இணைந்திருக்கின்ற வேட்பாளர் பட்டியலை தமிழர்கள் நிராகரிக்கின்றனர். தங்களுடைய பொல்லைக் கொடுத்து தாங்கள் அடிவாங்குவதற்கு அவர்கள் தயாராக இல்லை. இதற்குச் சிறந்த உதாரணம் ஜனாதிபதித் தேர்தலில் 139110 வாக்குகளைப் பெற்ற ரெலிபோன் சின்னம் பாராளுமன்றத் தேர்தலில் 22570 வாக்குகளை மாத்திரமே பெற முடிந்திருக்கின்றது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். தேசிய மக்கள் சக்தி பெற்ற 55498 வாக்குகளில் அதிகூடிய விருப்புவாக்குகளாக 14856 வாக்குகள் மாத்திரமே உள்ளன. இந்தப் பிரதிநிதியே மட்டக்களப்பில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களில் குறைந்தளவான விருப்புவாக்குகளைப் பெற்ற பிரதிநிதியுமாவார்.

இதற்குக் காரணம் மக்களை அரசியல், சமூகப் பொருளாதார ரீதியாக திருப்திப்படுத்தக் கூடிய எந்தவொரு செயல்திட்டத்தையும் முன்மொழிந்து அதனை நடைமுறைப்படுத்துவோம் என்று கூறக்கூடிய அரசியல் ஆளுமையற்ற செயல்திறனுமற்ற வேட்பாளர்களாகவே அவர்கள் காணப்பட்டனர். ஊசலாடிக் கொண்டிருக்கின்ற வாக்குகளை தம்பக்கம் திருப்பி அவற்றை தேசிய மக்கள் சக்தியின் வாக்குகளாக மாற்றக்கூடிய வல்லமையும் வேட்பாளர்களிடம் இருக்கவில்லை.  

அத்தோடு வேட்பாளர் பட்டியல் தயாரிப்பில் காணப்பட்ட சுயநலத் தன்மை காரணமாக இவர்களும் எல்லா அரசியல் கட்சிகளையும் போல கட்சியை மக்களுக்காக அன்றி தங்களுக்கானதாக பயன்படுத்துபவர்கள் என்கின்ற எண்ணமும் உருவாகியிருந்தது.

ஆரம்பத்தில் தேசிய மக்கள் சக்தியின்பால் மக்களுக்கு இருந்த நாட்டமும் விருப்பமும் மேற்படி காரணங்களால் மெதுமெதுவாக குறைய ஆரம்பித்தது. தேசிய மக்கள் சக்திக்குத்தான் தமது வாக்கையளிப்போம் என இருந்த பலர் யாருக்கு வாக்களிப்பது என்ற குழப்பநிலைக்குத் தள்ளப்பட்டனர். இதனால் வேறு தெரிவின்றி தமிழரசுக் கட்சி என்னதான் சீர்கெட்டுப் போனாலும் இருக்கின்ற கட்சிக்குள் இது பரவாயில்லை தமிழரசுக் கட்சிக்கே அளிப்போம் என்ற முடிவுக்கு வந்தனர். இதன் காரணமாக தேசிய மக்கள் சக்திக்கு அளிக்கப்பட இருந்த வாக்குகள் தமிழரசுக் கட்சிக்குச் சென்று சேர்ந்தன. இதனாலேயே தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பில் பெரும்பான்மை ஆசனங்களை பெற முடியாமல் போனதாகும்.

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தோல்வி

தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினைப் பொறுத்தளவில் அவர்கள் கடந்த தேர்தலில் வெற்றியடைந்தது அவர்களின் கட்சிக் கொள்கையினால் அல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வறட்டுவாதக் கொள்கையினால் தமிழ் பிரதேசங்கள் அவற்றின் பௌதீக உட்கட்டமைப்பிலும் சமூகப் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் எதுவுமின்றி இருக்க, தமிழ் பிரதேசங்களுக்கு அருகாமையில் இருந்த முஸ்லிம் பிரதேசங்கள் சமூகப் பொருளாதாரத்திலும் பௌதீக உட்கட்டமைப்பிலும் முன்னேற்றமடைந்தவைகளாகக் காணப்பட்டன. இதற்குக் காரணம் முஸ்லீம் அரசியல் தலைவர்கள் யதார்த்தரீதியாக அரசியலை முன்னெடுத்தமையினாலாகும். அவ்வாறு யதார்த்த ரீதியாக அரசியலை முன்னெடுக்கக் கூடியவராக அன்றைய சூழலில் சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) அவர்களே காணப்பட்டார். அவரை வெற்றியடைய வைத்தால் மகிந்தராஜபக்ச சகோதரர்களுடன் அவருக்கு இருந்த தனிப்பட்ட தொடர்புகளினாலும் செல்வாக்கினாலும் மட்டக்களப்பில் மட்டக்களப்பு மக்கள் எதிர்பார்க்கும் அபிவிருத்தியை அடையலாம் என மக்கள் எதிர்பார்த்தனர். இந்த எதிர்பார்ப்புக்கு ஏற்றாற்போல் அவர் கிழக்குமாகாண முதலமைச்சராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திச் செயற்பாடுகள் காணப்பட்டன. அத்தோடு மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைமையாக இதுவரைகாலமும் செயற்பட்டு வந்த முஸ்லிம் அரசியல் அராஜகத்தையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்ற ஆர்வமும் மட்டக்களப்புத் தமிழ் மத்தியதர வர்க்கத்தினரிடம் காணப்பட்டது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் காணப்பட்ட யாழ் மேலாதிக்கமும் மட்டக்களப்பின் சமூகநிலைக்கேற்ற அரசியல் நடடிவடிக்கைகளை திட்டமிட்டு செயற்படுத்த முடியாத கையாலாகாத் தனமும் கடந்த முறை மட்டக்களப்பு வாக்காளரை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு வாக்களிக்கத் தூண்டிய காரணிகளில் ஒன்றாக இருந்தது.

மேலும், கடந்தமுறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி அகில இலங்கைத் தமிழர் மகாசபை கட்சியினருடன் ஏற்படுத்தப்பட்ட புரிந்துணர்வின் காரணமாக இரு வேட்பாளர்கள் அகில இலங்கைத் தமிழர் மகாபையின் சார்பில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினரின் வேட்பாளர் பட்டியலில் சேர்த்துக் கொள்ளப்பட்டதனால் அகில இலங்கைத் தமிழர் மகாசபையினரின் பிரச்சாரமும் அவர்கள் நியமித்த வேட்பாளர்களின் செல்வாக்கும் கணிசமான வாக்கை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தன. இதை விட அக்கட்சியினால் முன்னிறுத்தப்பட்ட பிரபல்யமான பெண்சட்டத்தரணி, வர்த்தகப் பாட ஆசிரியர், பிரபல்யமான வைத்திய நிபுணர் என்போரும் கணிசமான வாக்குகளை கட்சிக்குப் பெற்றுக் கொடுத்தனர். இந்த வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் விருப்புவாக்கோடு சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் ஒரு விருப்பு வாக்கை அளிக்குமாறு கேட்டுக் கொண்டனர், சிறையில் இருந்த சிவநேசதுரை சந்திரகாந்தன் மேல் கொண்டிருந்த அனுதாபம் காரணமாக வாக்காளர்கள் அவருக்கான விருப்பு வாக்கையும் அளித்து அவரை வெற்றிகொள்ளவைத்தனர்.

இந்தமுறை பாராளுமன்றத் தேர்தலில் மேற்படி காரணங்கள் இல்லாமல் போயின. இம்முறை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் வேட்பாளர் பட்டியல் அவர்களுடைய கட்சி உறுப்பினர்களைக் கொண்டே தயாரிக்கப்பட்டிருந்தது. அவ்வுறுப்பினர்கள் சென்றமுறை போன்று மட்டக்களப்பு வாக்காளர்களுக்கு அறிமுகமானவர்களாக இருக்கவில்லை. அக்கட்சியில் அறிமுகமான வேட்பாளர்கள் என்றால் அக் கட்சியின் தலைவரும் செயலாளருமேயாகும்.

மேலும், கடந்த முறை சி.சந்திகாந்தன் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்ட்ட பின் தனக்காக வாக்குச் சேகரித்த ஏனைய வேட்பாளர்களை புறந்தள்ளியமை, ஈஸ்ரர் குண்டுத் தாக்குதலில் சந்திரகாந்தன் அவர்களுக்கு இருந்த தொடர்பு பற்றி அக்கட்சியின் முக்கிய உறுப்பினரான அசாத் மௌலான வழங்கிய வாக்கு மூலம், அபிவிருத்தி வேலைகளில் இடம்பெறுகின்ற நிதி மோசடி தொடர்பாக கொந்துராத்துக்காரர்களின் கிசுகிசுப்புக்கள் நேர்மையான நிர்வாக அதிகாரிகளின் நிர்வாகத்தில் தேவையற்ற அரசியல் தலையீடுகள், கால்நடை வளர்ப்போரின் மேச்சல்தரைப் பிரச்சினைக்கு தீர்வு காணமுடியாத கையாலாகாத் தனம் போன்றன சி.சந்திகாந்தன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையினை இல்லாமலாக்கின.

அத்தோடு மத்தியில் இருக்கின்ற அரசோடு இணையக்கூடிய எவ்வித வாய்ப்பும் அற்றவராகவே காணப்பட்டார். இதனால் இவருக்கு வாக்களிப்பதென்பது விழலுக்கிறைத்த நீர் போன்றதாகும் என நினைத்து சி.சந்திரகாந்தன் அவர்கள் புறமொதுக்கப்பட்டார். இந்தப் புறமொதுக்கத்தின் விளைவினால் உருவான வாக்குகளையும் பெற்றுக் கொள்ளும் கட்சியாக தமிழரசுக் கட்சியே இருந்தது.

எனவே பலரும் குறிப்பிடுவது போல் மட்டக்களப்பு தமிழ்த் தேசியத்தை உள்ளார்ந்து உணர்ந்து அதனைப் பாதுகாத்தது என்பது மிகவும் மெருகூட்டப்பட்ட ஒரு கதையாடலாகும். 

தமிழரசுக் கட்சி அதிக ஆசனங்களைப் பெற்றதென்பது தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிர்வாகத்திலும் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியிலும் காணப்பட்ட பலவீனங்களால் நடந்த ஒன்றாகும். தமிழரசுக் கட்சி 33.8 வீத வாக்குகளை மாத்திரமே பெற்றிருக்கின்றார்கள் என்பதைக் கவனத்தில் கொள்வது நல்லதாகும்.

 

https://arangamnews.com/?p=11456



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.