Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

”வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது. அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர, “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத்தோற்றமே"

ஜெ.பி.

13-2.jpg

கடந்த முறையை விட இம்முறை 36 ஆயிரம் வாக்குகள் குறைவாக அளிக்கப்பட்டுள்ளன. எல்லா மாவட்டங்களிலும் கடந்த முறையை விட இம்முறை சற்றுக் குறைந்தளவே வாக்குப்பதிவு நடந்ததது (2020: 76% -2024: 69%). இதனால் யாழ்.மாவட்டத்தில் ‘தமிழ்த் தேசிய’ கட்சிகளுக்கு தனியான தாக்கம் ஏற்பட்டதாக கருதமுடியாது. ஜனாதிபதித் தேர்தலை ஒட்டியும் வெற்றியின் பின்னரும் தேசிய அளவில் ஏற்பட்ட “அநுர ஆதரவு அலை” யாழ் மாவட்டத்திலும் ( பெரும்பாலும் இளைய தலைமுறையினரிடத்தில்) தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் “தமிழ்த் தேசியத்தை” மையப்படுத்திய கட்சிகளிடத்தில் அநுர முழுமையாக தாக்கம் செலுத்தியிருப்பதாக கொள்ள முடியாது. தென்னிலங்கையின் தேசியக் கட்சிகளுக்கும் கடந்த காலங்களில் யாழ்.மக்கள் வாக்களித்து வந்துள்ளனர். பெரும்பாலும் ஆளும்கட்சியின் அல்லது பிரதான எதிர்க்கட்சியின் கூட்டணியாக இருக்கும் அணிகள் யாழ்ப்பாணத்தில் அவர்களுக்குரிய ஆசனங்களை தக்க வைத்து வந்துள்ளன.

அந்த அணிகள் தனித்தனியே போட்டியிட்டதாலும் அரசாங்க கட்சிகள் மீதான நம்பிக்கையீனம் காரணமாகவும் பிரதான ‘தமிழ்த்தேசிய’ கட்சியைத் தாண்டி வாக்குகளை அள்ள முடியாதிருந்தது.

இலங்கையின் விகிதிசார தேர்தல் முறையில்- ஒவ்வொரு தேர்தல் மாவட்டத்திலும் கூடுதல் வாக்குகளைப் பெறும் கட்சி ஒரு ஆசனத்தை போனசாக பெறும். அதன்படி யாழ். மாவட்டத்தில் போனஸ் ஆசனத்தை பிரதான தமிழ்த்தேசிய அணி பெற்று வந்தது. மீதமுள்ள ஆசனங்கள் தான்( இம்முறை 6-1 போனஸ்= 5) விகிதாசார முறையில் கட்சிகளிடையே பங்கிடப்பட்டுள்ளது. 2020 இல் யாழ்.மாவட்டத்துக்கு கிடைத்த 7 ஆசனங்கள் சனத்தொகை அடிப்படையில் இம்முறை 6 ஆக குறைக்கப்பட்டதால் போட்டி சற்று கடுமையாகத்தான் இருந்தது.

30 ஆண்டுகால யுத்தத்தின் பிடியில் கல்வி, தொழில் மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் பல்வேறு புறக்கணிப்புகளுக்கு உள்ளாகிவந்த வடக்கு-கிழக்கு மற்றும் மலையகத்தை மையப்படுத்திய சிறுபான்மை சமூகங்களில் கணிசமானோர் மத்திய அதிகாரத்தில் பங்கெடுக்காத இன-ரீதியான பிராந்தியக் கட்சிகளிலும் பார்க்க தேசியக் கட்சிகளின் கூட்டணியில் செல்வாக்கு செலுத்தும் தலைவர்களுக்கு / கட்சிகளுக்கு வாக்களிப்பது சிறந்தது என்று கருதி வந்துள்ளனர். இதன் மூலம் அந்தக் கட்சிகள் தங்களுக்கான ஆசனங்களை தக்க வைத்து வந்துள்ளன.

இம்முறை ‘அநுர அலை’ ஏற்படுத்திய அலையில் தென்னிலங்கையில் பிரதான தேசியக் கட்சிகள் காணாமல் போனதைப் போல வடக்கிலும் காணாமல் போயுள்ளன. அவர்கள் பெற்றுவந்த ஆசனங்கள் அப்படியே ஜனாதிபதி அநுர அணிக்கு கைமாறியுள்ளன..

பிரதான “தமிழ்த்தேசிய” அணிகள் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தேசியக் கட்சிகளைவிட உள்வீட்டு குத்துவெட்டுக்களை இம்முறை அதிகம் சமாளிக்க வேண்டியிருந்தது. சம்பந்தர் என்கின்ற Pre-wartime அரசியல் ஆளுமை இருந்த போதே வெடித்திருந்த உள்வீட்டு சண்டை அவருக்குப் பின்னர் பூதாகரமாகியிருந்தது. அறியப்பட்ட பல பழைய முகங்கள் தமிழ்த் தேசியப் பரப்பில் வெவ்வேறு முகாம்களில் போட்டியிட்டன. பிரதான கூட்டணியில் பல புதிய முகங்கள் பிரதான வேட்பாளர்களாக இறக்கப்பட்டனர்.

வெவ்வேறு நிகழ்கால அரசியல் காரணங்களால் பிளவுபட்ட அணிகள் தனித்தனி சின்னங்களில் களமிறங்கியிருந்தன. வழமையில் தென்னிலங்கையின் தேசியக் கட்சிகள் எதிர் “தமிழ்த் தேசிய”கட்சிகள் என்று இருந்த போட்டி, இம்முறை தேசியக் கட்சி (அநுர) எதிர் மட்டுமன்றி, உள்ளூர் தமிழ்த் தேசிய அணிகளின் பரஸ்பர உள்வீட்டுச் சண்டையாகவும் சேர்ந்து பலமுனைப் போட்டியாக விகாரமடைந்திருந்தது.

தேசியக் கட்சிகளின் வாக்கு வங்கியில் பெரும்பங்கு அப்படியே அநுரவுக்கு கைமாறியுள்ளது.அத்தோடு அநுர அலையால் உந்தப்பட்ட புதிய தலைமுறை வாக்குகளும் அவர் பக்கம் சேர்ந்துள்ளன.அத்தோடு பாரம்பரிய அரசியல்வாதிகளின் போக்குகளால் விரக்தியடைந்திருந்த ஒரு தரப்பினர் மாற்றாக புதிய முகங்களை தேடத் தொடங்கியிருந்தனர்.

சுயேட்சை அணிகளாக இறங்கிய புதிய முகங்களின் அதிரடி வருகையாலும் “ தமிழ்த்தேசிய” அணிகளின் உள்வீட்டுச் சண்டைகளாலும் அவர்களின் பாரம்பரிய வாக்கு வங்கி சிதறிப் போனது. வழமைபோல் தனியொரு தமிழ்க் கூட்டணியால் மாவட்டத்தின் அதிகூடிய வாக்குகளை சேர்க்க முடியவில்லை.இதனால் வழமையான போனஸ் ஆசனம் பறிபோனது. ஏற்கனவே சனத்தொகை அடிப்படையில் ஒரு ஆசனத்தை இழந்திருந்த யாழ் மாவட்டத்தில், போனஸ் போக மீதமுள்ள ஐந்து ஆசனங்களில் இரண்டு அநுர அணிக்கு கிடைத்தது. வழமையான தேசியக் கட்சிகளின் வாக்குகளில் பெரும்பங்கு இம்முறை பிளவுபடாமல் சுளையாக அநுரவுக்கு கைமாறியது முக்கிய காரணம்.

மீதமுள்ள மூன்று ஆசனங்களும் சிறு சிறு அணிகளாக பிளவுபட்டு நின்ற தமிழ்த் தேசிய அணிகளுக்கும் புதிதாக வந்த சுயேட்சை அணிக்கும் பகிரப்பட்டன.

கிட்டத்தட்ட இதே நிலைமை தான் வடக்கின் இன்னொரு மாவட்டமான வன்னியிலும் நடந்துள்ளது; பிரதான தமி்ழ்த்தேசிய அணியின் வாக்குகள் சிதறியதால் கடந்த முறை அதற்கு கிடைத்த போனஸ் ஆசனத்தை இம்முறை தேசியக் கட்சியான அநுர அணியிடம் பறிகொடுத்தது. அதனிடம் இருந்த 2 ஆசனங்களில் ஒன்றை பிளவுபட்டு நின்ற மற்ற அணியிடம் இழந்தது.

வடக்கில் தலைமைகள் இடையே ஏற்பட்ட பிளவு கிழக்கில் பெரிய அளவில் தாக்கம் செலுத்தவில்லை. மட்டக்களப்பில் “தமிழ்த் தேசிய” வாக்குவங்கி அணிகளாக சிதையாமல் இருந்ததால் போனஸ் ஆசனத்தையும் தக்கவைத்து கடந்த முறையை விட ஒரு ஆசனத்தை மேலதிகமாகவும் கைப்பற்றியுள்ளது.

திருகோணமலையில் சம்பந்தர் வைத்திருந்த ஒரு ஆசனம் தக்கவைக்கப்பட்டிருக்கின்றது. தென்னிலங்கையை போலவே இங்கும் அநுர அணி மாவட்டத்தை கைப்பற்றியுள்ளது. அம்பாறையில் கடந்த முறை தமிழ்த் தேசிய அணிக்கு கிடைக்காத ஆசனம் இம்முறை கிடைத்திருக்கின்றது. மாவட்டம் அநுர அணியிடம் கைமாறியிருக்கிறது.

ஆக- வடக்கு மாகாணத்தில் மட்டும் “தமிழ்த் தேசிய” அணிகளின் ஆசனங்களில் வீழ்ச்சி ஏற்பட்டிருக்கின்றது.அதற்கு “உள்வீட்டு” சண்டையால் ஏற்பட்ட வாக்குச் சிதைவே முக்கிய காரணமே தவிர “தமிழ்த் தேசிய” வாக்கு வங்கியில் ஏற்பட்ட சரிவு அல்ல. அநுரவுக்கு ஆதரவான வாக்குகள் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான வாக்குகளாக பார்க்கப்படுவது வெறும் மாயத் தோற்றமே.

“தமிழ்த் தேசியம்” என்கின்ற சித்தாந்தம் அரசியல் அணிகளையும் தேர்தல்களையும் கடந்தது.ஆனால், புதிய தலைமுறை வாக்காளர்களையும் உள்வாங்கி, பிளவுபடாத ஒரே அணியாக மாற்றம் பெறுவதே அடுத்த பாராளுமன்றத்தில் பலமான “தமிழ்த் தேசிய” அணியை உருவாக்க ஒரே வழி.

https://thinakkural.lk/article/312707



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.