Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது
"காதல் கோட்டை"
 
 
இருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில், யாழ் நகரின் ஒரு சிறு பகுதியான அத்தியடியில் அப்பன் என்ற இளைஞன் வாழ்ந்து வந்தான். அவன் பேராதனை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று கொழும்பு, பொரளையில் அவனின் உறவினர் ஒருவரின் வீட்டில் ஒரு அறையில் தங்கி, ஒரு தனியார் நிறுவனத்தில் உதவி முகாமையாளராக தன் முதல் உத்தியோகத்தை ஆரம்பித்தான். அகவை இருபத்தி மூன்று, இருபத்தி நாலு இருக்கும். ஒரு வாலிபனுக்கான ஆசைகள், கனவுகள் நிறைந்தவனாக, ஒரு உண்மையான அன்பை பெற்று வாழ்வை பூரணமாக்க வேண்டும் என்பதில் அவனுக்கு ஒரு விருப்பம், அவா இருந்ததில் வியப்பு இல்லை.
 
நாளாக ஆக, தன்னுடைய தனிமையை அதிகமாய் உணரத் தொடங்கினான். முன்பு அத்தியடியில், பேராதனையில் இருந்த காலத்தில் எந்த நேரமும் நண்பர்கள் அல்லது பெற்றோர்கள் சகோதரங்கள் சூழ்ந்து இருப்பார்கள். ஆனால் அவனுக்கு கொழும்பு புது அனுபவம். இன்னும் பெயர் கொள்ளக்கூடியதாக பெரிதாக ஒரு நண்பரும் இல்லை. எவ்வளவோ ஜனக்கூட்டத்துக்கு நடுவில் இருந்தும் தான் நண்பர்கள் இன்றித் தனித்திருப்பதைக் அவன் கண்டான். வெற்றியும், புகழும், செல்வாக்கும், திரளான மக்களின் போற்றுதலும் இருந்தும் அவனுடைய இதயத்தில் நிறைவு ஏற்படவில்லை. அதில் ஒரு மூலை சூன்யமாக இருந்தது. அந்தச் சூன்ய மூலையானது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டு வந்தது.
ஒரு வாரஇறுதி அன்று, அவன் இருக்கும் வீட்டுக்காரர்கள் காலிமுக திடலுக்கு போகும் பொழுது, 'தம்பி, நீயும் வந்தால் என்ன?' என்று கேட்க, அவனும் சம்மதித்து, தன் தனிமைக்கு ஒரு தற்காலிக முற்றுப்புள்ளி மாதிரி, அவர்களுடன் புறப்பட்டான். அரும்பு மீசை, உயரத்துக்கு ஏற்ற பருமன், மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றும் காந்தக் கண்கள், கற்பனையில் கவிஞர்கள் கவிதையில் வார்க்கும் அழகை, வாலிப முறுக்குடன் நிஜத்திலேயே கொண்டு இருந்தான்.
 
காலி முக திடலில், அமைதியான நீலக் கடலில் அழகிய அன்னப் பறவை போல் ஒரு சிறிய படகு ஒன்று போய்க் கொண்டிருந்தது. சூரியன் மறையும் நேரம் அது. கீழ்வான முகட்டில் இயற்கைத் தேவி வர்ணக் கோலங்கள் போட்டுக் கொண்டிருந்தாள். அவன் அந்த இயற்கையின் அழகில் மிதந்து கொண்டு இருக்கையில், வெள்ளைக் கலையுடுத்து வெள்ளைப் பணிபூண்டு வெள்ளைக் கமலத்தில் வீற்றிருப்பவள் போல் ஒருவள் திடீரென அங்கு வந்து, ஹாய் டீச்சர் என்றாள். அவன் திரும்பி யார் என்று பார்த்தான். வீட்டு அம்மா, இவள் என்னுடைய பழைய உயர் வகுப்பு மாணவி, இப்ப கொழும்பு பல்கலைக்கழகத்தில் படிக்கிறாள் என்று சிறு அறிமுகம் செய்தார்.
 
பலரை பார்க்கின்றோம், பலருடன் பழகுகின்றோம். எல்லோருடைய அழகும் எல்லோரையும் கவருவதில்லை. சிலருடைய அழகு சிலரை கவர்ந்து இழுக்கும். சிலருடைய அழகு பலரையும் கவர்ந்து இழுக்கும். இவள் இரண்டாவது வகை. அப்படி ஒரு அழகு.
 
"பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க
செஞ்செவிய கஞ்சம் நிகர் சீறடியளாகி
அஞ்சொல் இள மஞ்ஞை என அன்னம் என மின்னும்"
 
மயிலின் சாயலும், அன்ன நடையும் வஞ்சிக்கொடி போன்ற இடையும் கொண்டு விளங்கும் இவள் அவனைக் கவர்ந்ததில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை. அவளும் இவனைப்பார்த்து ஹலோ என்றாள். அந்த ஹலோ வுக்கு பின்னால்
 
"வஞ்சி என நஞ்சம் என வஞ்சமகள் வந்தாள்" என்ற கம்பனின் இறுதி வரியை அவன் கவனிக்கவில்லை. அவன் அதை ஜோசிக்கும் நிலையில் அப்ப இருக்கவில்லை. 'நீண்ட நயனங்களையுடைய அந்தப் பெண் மட்டும் இங்கே என் அருகில் தினம் இருந்தால்?' - என்ற எண்ணம் அவனை அறியாமல் அவனுக்கு உண்டாயிற்று. அது அவனுக்கு அளவிலாத ஒரு கனவை ஏற்படுத்தியது. தன்னை அறியாமல் அவன் ஒரு பெருமூச்சு விட்டான். நீங்க கதையுங்கோ, நாம் பிள்ளைகளுடன் கொஞ்ச நேரம் கடலில் இறங்கி விளையாடி விட்டு வருகிறோம் என்று இவனுக்கும் அவளுக்கும் கூறிவிட்டு அவர்கள் போய்விட்டார்கள்.
 
அவள் கொஞ்சம் அருகில் வந்து கதைக்கத் தொடங்கினாள். அவன் இவளை பார்த்தது முதல், விவரிக்க முடியாத ஒரு தொடர்பை உணர்ந்தான், மேலும் அவன் இவள் தனக்குப் பொருத்தமானவள் என்று தனக்குள் உறுதியாக நம்பினான். அங்கு சில்லென்று குளிர் காற்று வீசி, என்னைத் தடை செய்யாதே என்று இருவர் முகத்திலும் அடித்தது. அவர்கள் இருவரும் இப்ப பக்கத்தில் இருந்த வாங்கில் அமர்ந்தபடி பேசத் தொடங்கினார்கள். ஒருவரை ஒருவர் யார் எவர் என்று அறிய அவர்களுக்கு இடையில் இடைவெளி குறைந்து கொண்டே வந்தது. அவளின் பெயர் சுகி, அவன் தன் வாழ்வின் அந்த அற்புதமான சந்திப்பை சுகித்தபடி அவளின் அழகான உதட்டினால் தவழும் கொஞ்சல் பேச்சை கேட்டுக்கொண்டு சொக்குப்பொடி போட்டதுபோல் அதில் தன்னை அறியாமலே கட்டுண்டு விட்டான்.
 
அதற்கிடையில், வீட்டுக்காரர்கள் திருப்பி வந்து வீட்டினம். என்றாலும் இருவரும் அதற்கு முதல் தமது தொலைபேசி, முகநூல் விபரங்களை பகிர்ந்துவிட்டனர். அவள் எல்லோருக்கும் பொதுவாக, ஆனால் அவனை மட்டுமே பார்த்தபடி போய்விட்டு வாறன் என்று சொல்லிவிட்டு நகர்ந்துபோனாள். வீட்டுக்கார அம்மா , எதோ அவனுக்கு சொல்ல வாய்திறந்தார், ஆனால், குட்டி மகளின் அழுகை, அவரின் கவனத்தை திசை திருப்பிவிட்டது.
 
அன்று இரவு, அவனுடைய உள்ளத்தைக் கொள்ளை கொண்ட பெண்ணின் முகம் அவன் மனக்கண்ணின் முன்னால் தோன்றி , அவனுடைய இதயம் விரிந்து பொங்கி மேல் நோக்கி எழுந்து நெஞ்சை அடைத்து விடுவதுபோல் ஒரு புது உணர்ச்சியை முதல் முதல் கண்டான். அவளின் யதார்த்தமான சந்திப்பு . . . ஒரு சில நிமிடங்களில் பரிமாறி கொண்ட பார்வைகள் நாட்கள் நகர்ந்தும் மறந்து போகாத அந்த நிமிடங்கள் . . . திரும்பவும் அவளின் ஓர பார்வைக்காக, அவன் இதயம் துடித்து, ஏங்கியது.
 
அப்பன் அடுத்த வார இறுதியில் தனியாக காலிமுக திடலுக்கு, தன்னை கொஞ்சம் கூடுதலாக அலங்கரித்துக்கொண்டு சென்றான். சுகி அங்கு வருவதாக கூறி இருந்தாள். ஆனால் அவளை இன்னும் அங்கு காணவில்லை. அங்கு ஆணும் பெண்ணுமாக அமர்ந்தபடி ஏதோ பேசிக் கொண்டிருந்தனர். அடிக்கடி சிரிப்பு. அப்பன் ஊமைப் படம் போல் அவர்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். அப்படி ஓயாமல் என்ன பேசுவார்கள்? காதல் என்று ஒன்று வந்து விட்டால் அர்த்தமற்றுச் சிரிக்கத் தோன்றுமோ? அபத்தமாகப் பேசுவதைக் கூட ரசித்துச் சிரிக்கத் தோன்றுமோ? அவன் தனக்குள் சிரித்துக்கொண்டான். திரும்பினான். தலையில் சொத்தென்று எதோ பறவை ஒன்றின் எச்சம் வீழ்ந்தது. திடீரென நம் மீது காக்கை எச்சம் இடுவது, தலையில் தட்டுவது, கொத்தி விட்டு போவது போன்ற விஷயங்கள் நமக்கு நன்மை செய்யவே காக்கை அவ்வாறு செய்கிறது என எப்போதோ பஞ்சாங்கத்தில் படித்தது. ஆனால் அப்பனுக்கு இதுகளில் எந்த நம்பிக்கை இல்லாவிட்டாலும், அவளின் நினைவு, அது உண்மையாகட்டும் என்று ஏங்கியவாறு அலையைப் பார்த்து ரசித்தான். அவன் ரசித்துக் கொண்டிருந்த ஒரு அலை பெண்ணாகி அவனைப் பின்தொடருவது போல கற்பனை ஒன்று மனதில் எழ, திரும்பி பார்த்தான், சுகி ஹெலோ என்று அழைத்தவாறு அருகில் வந்துகொண்டு இருந்தாள்.
 
சுகி நாணமும் மகிழ்ச்சியும் அழகும் வடிவெடுத்து வந்ததுபோல அவனுக்கு எதிரில் தோன்றி உலகை மயக்கவந்த மோகினிதேவி போலப் புன்முறுவல் செய்து நின்றாள். அவள் வழக்கத்திற்கு அதிகமாக மகா ஆடம்பரபமாகவும் வசீகரமாகவும் அலங்கரித்துக்கொண்டு வந்திருந்ததைக் காணவே அப்பனின் கண்கள் அவளைப் பார்த்தபடியே அசையாமல் நின்றுவிட்டது. அதுவுமன்றி, அவளது நண்பிகள் இல்லாமல், அவள் மாத்திரம் தனியாக வந்திருந்தது, அவளும் தன்னை விரும்புகிறாள் என்பதை அவனுக்கு உணர்த்தியது. சுகி வந்ததும் வராததுமாக, அப்பனின் கையை பிடித்தப்பிடி, நாணிக்கோணித் தனது புருவம், கண்கள், உதடு, மார்பு, கைகள் முதலிய வில்களால் ஆயிரக்கணக்கான மன்மத பாணங்களைத் தொடுத்துக் குலுக்கிப் பிலுக்கிக் கிள்ளை போல அழகாகத் தனது வாயைத் திறந்து, 'அப்பன், என்ன கன நேரமாக நிக்கிறீங்களா?' என செல்லமாக அவளின் கார் குழலின் வாசம் காற்றோடு மூக்கை துளைக்க நேருக்கு நேர் நெருங்கி நின்றாள். ஒரு கணம் அசைவற்று நின்றவன், அவளை அணைத்தபடி கடல் அலையில் இருவருமாக இறங்கினர். அமைதி தவழும் முகம், திருத்தமான உடை, அலட்டல் இல்லாத இயல்பான புன்னகை இழைந்தோடும் பார்வையுடன், சுடிதார் நனைவதையும் பொருட்படுத்தாமல் அலைகளுடன் அவனையும் இழுத்து இழுத்து இன்பமாக மாலைப்பொழுதை கழித்தாள்.
 
காலப்போக்கில் சுகி மீதான அப்பனின் உணர்வுகள் மிகவும் வலுவானவையாக மாறின. அவன் தனது இதயத்தில் ஒரு உருவகமான "காதல் கோட்டை" கட்டினான். அங்கு அவன் தனது நம்பிக்கைகள், கனவுகள் மற்றும் பாசம் அனைத்தையும் வைத்தான். அவள் எப்பொழுதும் அவனிடம் அன்பாகவும் நட்பாகவும், நெருக்கமாகவும், வெளிப்படையாகவும் இருந்ததால் அவனுடைய உணர்வுகளை அவள் பிரதிபலிப்பதாக அவன் நம்பினான். ஓய்வு நேரங்களில் தொலைபேசி மூலமும், கடற்கரை மற்றும் பூந்தோட்டத்திலும் அவர்கள் ஒன்றாகச் சிரித்து, கதைகளைப் பகிர்ந்துகொண்டு நேரத்தைக் கழித்தார்கள், ஒவ்வொரு நாளும் அவர்களது தொடர்பு வலுவடைவதை அப்பனால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
 
ஆனால், சுகி, அப்பனுடன் சேர்ந்து காதலியாக இருந்தாலும், அவளின் உள்மனதில் தனது கண்களை வேறு பாதையிலும் வைத்திருந்தாள் . அன்பு, படிப்பு, பண்பாடு, மதிக்கத்தக்க உத்தியோகம் போன்றவற்றை விட, செல்வமும் ஆடம்பரமும் நிறைந்த வாழ்க்கையின் கனவுகளை அவள் கொண்டிருந்தாள், அதை அடைவதற்கு ஒரு பணக்காரனை திருமணம் செய்துகொள்வதே முக்கியம் என்பது அவளின் நம்பிக்கை. அந்த தேடலில் அப்பனை அவளின் காதலனாக இன்று அவள் ஏற்றுக்கொண்டு இருப்பது, துரதிர்ஷ்டவசமாக அவனுக்கு தெரியாது.
 
ஒரு நாள், சுகி திடீரென தான் இனி சந்திக்க முடியாது. பெற்றோர் தனக்கு வெளிநாட்டு மாப்பிளை பார்த்துள்ளார்கள் என்று கூறிவிட்டு, எந்த கவலையும் இன்றி சர்வசாதாரணமாக விலகிப்போனாள். அன்பின் ஆழத்தில் புரிதல் என்பது உள்ளவரை பிரிதல் என்பது இருந்திட முடியாது என்பதில் மிகவும் நம்பிக்கையானவன் அவன். அவளின் செயல் அவனை தூக்கிவாரிப்போட்டது. அவனது இதயம் நொறுங்கியது. அப்பன் பேரழிவிற்கு ஆளானான், ஆனால் அவன் தனது காதல் கோட்டையை கைவிட மறுத்துவிட்டான். சுகி ஒருவேளை குழப்பமடைந்திருக்க வேண்டும் அல்லது பயந்திருக்க வேண்டும் என்றும், இறுதியில் அவள் மீண்டும் வருவாள் என்றும் அவன் தன்னைத்தானே நம்பிக் கொண்டான்.
 
இதற்கிடையில், சுகியின் பெற்றோர் அந்த வெளிநாட்டு மாப்பிள்ளையுடன் ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தனர். அவன் பெரிதாக படிக்கவில்லை என்றாலும், வெளிநாடு சென்று அங்கு ஒரு வியாபாரத்தில் ஈடுபட்டு ஒரு பெரிய செல்வத்துடன் ஒரு தொழிலதிபராக இருந்தான். பெரிய நல்ல பழக்கவழக்கம் எதுவும் அவனிடம் காணப்படவில்லை. அழகும் பெரிதாக இல்லை. ஆனால் நிறைய பணம் , மாளிகை மாதிரி வீடு, மற்றும் வசதிகள் தாராளமாக இருந்தன. என்றாலும் சுகி எப்போதும் கனவு கண்ட வாழ்க்கையை வாழ ஒரு வாய்ப்பாக அவள் எடுத்துக்கொண்டாள், மேலும் அவளது இதயம் உண்மையில் உறவில் முதலீடு செய்யவில்லை என்பதால், அப்பனை கைவிட்டு அவரை திருமணம் செய்து கொள்ள சுகி ஒப்புக்கொண்டாள்.
 
சுகியின் திருமணம் விரைவில் நடக்கவிருக்கும் செய்தி வீட்டு கார அம்மா மூலம் அப்பனுக்கு தெரியவந்தது. ஆனால் சுகியின் காதல் இன்னும் அவனது இதயத்தில் ஆழமாகப் புதைந்து இருந்தது. தான் ஏமாற்றப்பட்டு விட்டதை அவன் உணர்ந்தான். சுகியின் திருமண நாள் வந்தது, முழு நகரமும் பெரும் விழாவில் கலந்துகொண்டது. அப்பன், மனம் உடைந்தாலும், தன்னைக் கிழிக்க முடியாமல், தூரத்திலிருந்து பார்த்தான். சுகியின் கழுத்தில் தாலி ஏறியது. அப்பனின் காதல் கோட்டை நொறுங்கத் தொடங்கி, அவனது இதயத்தில் வலி தீவிரமடைந்தது. என்றாலும் அவள் மேல் கொண்டிருந்த அன்பை அவனால் மறக்கவே முடியவில்லை. அவனது காதல் கோட்டை மாயைகள் மற்றும் தவறான நம்பிக்கைகளின் மீது கட்டப்பட்டது என்பதை அவன் உணர்ந்தான். ஆனால் அது அவனது உண்மையான உணர்ச்சிகளின் வலிமையையும் அவனது ஆன்மாவின் நெகிழ்ச்சியையும் அவனுக்கு கற்பித்தது.
 
காதலை காணாமல், அனுபவிக்காமல் எவருமே பொதுவாக வாழ்க்கையில் பயணம் செய்திருக்க முடியாது, ஆனால் அந்த காதல் அவர்கள் வாழும் சூழ்நிலையை பொறுத்து வெவ்வேறாக இருக்கலாம் , ஆனால் காதலும் அது கொடுக்கும் உணர்வும் என்றுமே மாற்றமடையாத ஒன்று! காதலில் வெற்றி பெற்றால் மட்டும் தான் இன்பம் அல்ல, அவரவர் காதலை நினைத்துப் பார்த்தாலே ஒரு பெரும் மகிழ்வுதான்! பழத்தின் சதைகளுக்குள்ளே விதைகள் இருப்பது போலே, கனிந்த இதயத்தின் உள்ளே காதல் தூங்குவதுண்டு, அதுவாய் கனிந்து மெதுவாய் நிமிர்ந்து, சதையை தாண்டி விதியை காண்பது காதல் - அப்படி காதல் கொண்ட கனிந்த காதலிக்காக ஷாஜகான், மும்தாஜ் மஹால் இறந்த பின் ..... கண்களை கலந்து, இதயங்களை ஒன்றாக்கி, மௌனத்தை மொழியாக்கி, சிந்தனையை சீராக்கி, வாழ்வை வசந்தமாக்கி, இன்பத்தை இரட்டிப்பாக்கி கொடுத்து வாழ்ந்த அவள் நினைவாக தாஜ்மகாலை கட்டி அவள் நினைப்பில் வாழ்ந்தான்! ஆனால் இவன் மனதில் கட்டிய காதல் கோட்டையை பிரித்து பிரித்து இடித்துக்கொண்டு இருந்தான், ஆனால் அந்த வேளையிலும், அப்பன் சுகியை திட்டவில்லை.
 
உன்னை ஒரு பார்வை கேட்டேன், கண்கள் பேசும் சில வார்த்தை கேட்டேன். கன்னத்தில் வந்த ஈரமும் இதயத்தில் நொந்த காயமும்தான் எனக்காக நீ கொடுத்தது! இந்த முறிந்த காதலியை இனி நினைக்க முடியாது! என் என்றால் அவள் எங்கோ யாருடனோ இப்ப மாடி வீட்டில் வெளிநாட்டில் பணக்காரியாக வாழ்கிறாள்!!
 
தன் சிறு பருவத்திலிருந்தே லைலா என்னும் தன் தோழியின்மீது ஆழமான அன்பு கொண்டு வளர்கிறான் 'கைஸ்' ["மஜ்னூன்"] . அன்பு முற்றிக் காதலாகிறது. காதலின் சக்திக்குத் தன்னை முழுவதுமாகக் கொடுத்து காதல் கோட்டையும் கட்டினான். மஜ்னூன் என்றால் பித்தன் என்று பொருள். அவள் வேறு ஒரு பெரும் செல்வனை திருமணம் செய்து கொள்கிறாள். ஒரு முறை, லைலாவின் தெருவில் அலைந்து கொண்டிருந்த மஜ்னூன், அவள் வீட்டின் சுவர்களை முத்தமிட்டுக் கொண்டிருந்தான். அவனைப் பார்த்துப் பரிகாசம் செய்தவர்களின் காதுகளில் விழுமாறு ஒரு கவிதை படிக்கிறான்:
 
"லைலாவின் தெருவில்
அவள் வீட்டின் சுவர்களை
முத்தமிடுகிறேன் நான்.
இந்தச் சுவற்றின் மீதோ
அல்லது அந்தச் சுவற்றின் மீதோ
காதல் கொண்டவனல்ல நான்.
என் மனதில் பொங்கி வழிவது
அந்த வீட்டுக்குள் இருப்பவளின் காதலே!"
 
என்கிறான். "ரோஜா காதலின் சின்னம் என்பது சரிதான். காலையில் இருக்கிறது அவளைப் போல். மாலையில் ஆகிறது என்னைப் போல்." என அப்பன் தன் வேதனையை, அவளின் ஏமாற்றலை முணுமுணுத்தவாறு மனதில் கட்டிய அந்த கோட்டையை நிரந்தரமாக தூக்கி எறிந்தான்!
 
நன்றி
 
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்
அத்தியடி, யாழ்ப்பாணம்]
 
369734821_10223870956424595_140334741404029065_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=ILXrW7a2u-4Q7kNvgGdqTgS&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AjZDhLpicqVk8Kr5f3HlEuk&oh=00_AYBnixEKPVdJneMF_nBkHUbLXxF5g6GOAg9ZnyMHi1DRLQ&oe=674E38CC  374204240_10223870956144588_545145083705908058_n.jpg?_nc_cat=108&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=UCAjPsOCgMYQ7kNvgFc2UAb&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=AjZDhLpicqVk8Kr5f3HlEuk&oh=00_AYAU1s2jn4kZepowobYd6zpMuh-TQD-sKqmG5HHGGt3S9Q&oe=674E3D34  


×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.