Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
பதியப்பட்டது

ஏழு வருடங்களாக எதுவும் செய்யாத ஓ. எம். பி. எதற்கு? காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் கேள்வி

December 3, 2024
p-696x390.png

ஏழு வருடங்கள் கடந்தும் ஓர் உண்மையைகூட கண்டறியப்படவில்லை. எனவே, செயல்திறனற்ற ஓ. எம். பி. உடனடியாக கலைக்கப்பட வேண்டும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் 15 வருடங்களாக எமது உறவுகளைத் தேடி வருவதுடன் 20. 02. 2017 இலிருந்து தொடர் கவனவீர்ப்புப் போராட்டத்திலும் ஈடுபட்டு வருகின்றோம். தொடர்ந்து வந்த அரச தலைமைகளால் காலத்துக்குக் காலம் ஏமாற்றப்பட்டு வந்ததால் சர்வதேச நீதியை வலியுறுத்தி இன்னும் போராடி வருகின்றோம் என்று காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்தனர்.

காணாமல் போன ஆட்கள் பற்றிய (ஓ. எம். பி.) அலுவலகத்துக்கு புதிய நியமன கோரிக்கை தொடர்பில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினர் வெளியிட்ட ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

ஓ. எம். பி. சட்டம் வரையப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை பாதிக்கப்பட்டவர்களின் அபிப்பிராயங்களுக்கோ அல்லது அவர்களின் வேண்டுகோள்களுக்கோ செவிசாய்க்காது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் சர்வாதிகாரத்துடன் பாரபட்சமாகவே நடத்தப்பட்டு வந்தார்கள்.

பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடியோ அவர்களின் பங்குபற்றலுடனோ அப்பொறிமுறையைச் செயல்படுத்த முனைப்புக்காட்டப்படுவதில்லை. மாறாக நாங்கள் செய்வதை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற சர்வாதிகாரப் போக்கும் வெளிப்படைத்தன்மையற்ற நிலையுமே காணப்படுகிறது.

எந்தப் பொறிமுறையும் சம்பந்தப்பட்டவர்களின் பங்களிப்போ, விருப்போ இல்லாவிட்டால் வெற்றியளிக்காது என்ற கூற்றை ஏற்றுக் கொள்ள எவரும் தயாரில்லை.

ஓ. எம். பி. சட்டம் உருவாக்குவதற்காக, பாதிக்கப்பட்டவர்களின் கருத்தறிய ஏற்படுத்தப்பட்ட கலந்தாலோசனைச் செயலணியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளாகிய நாம் எவ்வித ஊதியமும் இன்றி ஊர் ஊராகச் சென்று கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்து பரிந்துரைகளை அரசாங்கத்திடம் கையளிக்கப்படும் வரை அர்ப்பணிப்புடன் பணியாற்றியிருந்தோம்.

பரிந்துரைகள் கையளிக்கப்படும் முன்னரே அவசர அவசரமாக வரையப்பட்ட ஓ. எம். பி. சட்டமூலத்தில், எமக்கு உடன்பாடில்லாத விடயங்களைச் சுட்டிக்காட்டி சில திருத்தங்களை செய்யும்படி கேட்டிருந்தோம்.

ஆனால், அதற்குரிய நடவடிக்கை எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. அது மாத்திரமல்ல கலந்தாலோசனைச் செயலணியால் பரிந்துரைக்கப்பட்டவையில் முக்கியமான பரிந்துரைகள் பல கருத்தில் கொள்ளப்படவில்லை.

பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் நடவடிக்கைகள் எதையும் எடுக்காதது மட்டுமல்லாது, எமது எதிர்ப்பையும் மீறி ஓ. எம். பி. அலுவலகத்தை திறப்பதில் சம்பந்தப்பட்டவர்கள் உறுதியுடன் இருந்தார்கள்.

அதனால் யாழ்ப்பாணத்தில் அதிகாலை 4. 30 மணிக்கும், கிளிநொச்சியில் ஊரடங்கு அமுலில் இருந்த நேரத்திலும் அலுவலகத்தைத் திறந்தார்கள்.

30/1 தீர்மானத்தின்படி, உண்மை, நீதி, இழப்பீடு, மீள நிகழாமை ஆகிய நான்கு தூண்கள் முக்கியமானவை எனக் கூறப்பட்டது. உண்மையை கண்டறிந்தபின் அவ்விடயம் நீதிப்பொறிமுறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

ஆனால், ஓ. எம்.பி. ஆரம்பித்து ஏழு வருடங்கள் ஆகின்ற போதும் ஓர் உண்மைகூட கண்டறியப்படவில்லை. ஆனால், அதற்குள் நீதியை ஓரங்கட்டிவிட்டு இழப்பீட்டு அலுவலகம் திறக்க வேண்டிய தேவை என்ன? உண்மையை கண்டறியாமலே பணத்தை கொடுத்து ஏழைகளின் வாயைமூடி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை குறைத்துக் காட்டுவதற்காகவா?.

பன்னாட்டு தூதுவர்களுக்கு OMP இல் எமக்குள்ள திருப்தியீனம் தொடர்பில் காரணங்களுடன் தெரிவிக்கும்போது அவர்கள் ஒரு தடவை அதனுடன் இணைந்து செயல்பட்டு பாருங்கள் என்று கேட்டுக் கொண்டதற்கிணங்கவும், அவர்களுக்கு OMP இன் செயல்திறன் தொடர்பில் புரியவைப்பதற்குமாக 20.07.2019 இல் உண்மையை கண்டறிவதற்காக நாம் ஒப்படைத்த ஐந்து வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விவரங்கள் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாதது மட்டுமல்ல அவற்றை தொலைத்துவிட்டு மீள பிரதியை கோரி நின்றமையானது இந்த அலுவலகம் எவ்வளவு பொறுப்பின்மையுடன் நடந்து கொள்கின்றது என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

உண்மையிலேயே எமக்கு எமது உறவுகளின் ஆவணங்கள் உயிர்மூச்சு. ஆனால் அவர்களுக்கு அவை வெறும் காகிதம் மட்டுமே. இதுவே பாதிக்கப்பட்ட ஒரு உறவாக இருந்தால் அவருக்கு எம் வலி, தவிப்பு, அதன் பெறுமதி புரிந்திருக்கும்.

கடந்தகால அனுபவமும், OMP மற்றும் அரசாங்கம் எம்மை நடாத்திய விதமும் எம்மைச் சோர்வடையச் செய்துள்ளதோடு, மீளவும் மன அதிர்வுக்கு உள்ளாக்கியுள்ளன. அவை OMP ஒரு போலியான பொறிமுறை என்ற முடிவுக்கு வருவதற்கு எம்மைத் தள்ளியுள்ளன.

உண்மையாகவே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனைக்குத் தீர்வு காண்பதற்கு விரும்புவார்களாயின் செயல்திறனற்ற இந்த OMP உடனடியாகக் கலைக்கப்படவேண்டும் என்பதுடன் எமது உறவுகள் சரணடைந்த, கையளிக்கப்பட்ட, கைது செய்யப்பட்ட முக்கியமான நான்கு காவலரண்களுக்குப் பொறுப்பாக இருந்தவர்கள் விசாரிக்கப்பட்டு உண்மை அறியப்பட வேண்டும்.

எமது உறவுகளைக் காணாமலாக்கிய இராணுவ அதிகாரிகள் தற்போதும் உயிருடனும் பதவியிலும் உள்ளார்கள். அவர்களை உடனடியாக விசாரிப்பதன் மூலம் உண்மையை கண்டறிய வேண்டும். அதுவே காலம் காலமாக ஏமாற்றப்பட்டு வந்த எமக்கு நல்லெண்ண சமிக்ஞையாக இருக்கும்.

அதை விடுத்து எம்மால் நிராகரிக்கப்பட்ட OMP இற்கு புதியவர்களை உள்வாங்க ஆட்சேர்ப்பு செய்ய முனைவதானது எம்மை தொடர்ந்து ஏமாற்றவே சகலரும் முயற்சிக்கிறார்கள் என்ற உணர்வை பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது.

மாற்றம் எனும் கோஷத்துடன் பதவி ஏறிய புதிய அரசு, பழைய சிங்கள அரசுகள் போலவேதான் தமிழ் மக்களின் மிக முக்கியமான வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பிரச்சனையை அணுகவுள்ளது என்பதையே காட்டுகின்றது.

சர்வதேச நீதி பொறிமுறையையே (சர்வதேச குற்றவியல் நீதிமன்றம், ICC) எமது பிரச்சனைக்கான தீர்வாகும். நாம் தொடர்ச்சியாக சர்வதேச நீதியை நோக்கியே போராடி வருகின்றோம் என்று அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

https://eelanadu.lk/ஏழு-வருடங்களாக-எதுவும்-ச/



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.