Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"விடியலைத் தேடி" 

கிளிநொச்சி இலங்கையின் வடமாகாணத்தில் அமைந்துள்ள ஒரு நகரமாகும். இம்மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் வேளாண்மையைத் தொழிலாகக் கொண்டுள்ளனர். எனினும் கிளிநொச்சியில் கிராஞ்சி, வலைப்பாடு, பள்ளிக்குடா, இரணைமாதா நகர் மற்றும் நாச்சிகுடா கிராமம் போன்றவை மீன்பிடிக் கிராமமும் ஆகும். 

இந்த நிலவளம், நீர்வளம் நிரம்பிய கிளிநொச்சி பிரதேசம், வன்னி நிலத்தின் முக்கிய பகுதியாக, வடமுனையில் இருக்கிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களிலே, இந்த வன்னிப்  பகுதியில், குறிப்பாக கிளிநொச்சிப் பிரதேசத்தில், ஆங்ஆங்கே சில குடியிருப்புகளே இருந்தன. அதைத் தவிர்த்து அநேக இடங்கள், அடர்ந்த காடுகளான வனப் பகுதியாகவே காணப்பட்டது. அந்தக் காலத்தில் பிற இடங்களில் இருந்து இந்த அடர்ந்த வனம் தேடி, வெறும் மனிதர்களாக வந்தவர்கள், தமது உழைப்பால் காடழித்து, குடியிருப்புகளாகவும் வயல் நிலங்களாகவும் மாற்றி வாழத் தொடங்கினார்கள். மிருகங்களுக்கும் நுளம்புகளுக்கும் பாம்புகளுக்கும் ஈடுகொடுத்து, பெரும் அச்சத்துடனும்  வாழ்ந்தார்கள். எனினும் மண்ணின் மீதான தீராத தாகம், அவர்களை அங்கு வாழவைத்தது. அவர்கள் கனவிலும் தங்கள் நிலம் பறிபோகும் என்றோ, தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகள் ஆவார்கள் என்றோ நினைக்கவில்லை. 

இவர்களின் வழிவந்த சந்ததியில் ஒருவன் தான் கார்மேகம். அங்கே, கிளிநொச்சியின் பரந்த நெற்பயிர்கள் மற்றும் வறண்ட வயல்களில் இருண்ட சாம்பல் நிறத்தை வீசிய வானம் புயல் மேகங்களால் கனமாகத் தொங்கியது. கார்மேகம் தனது காளை வண்டியின் கடிவாளத்தை இழுத்து, நகர சந்தைக்கு செல்லும் சேற்றுப் பாதையில் அதைச் செலுத்தினான். அவனுக்கு அருகில், அவனின் உழைப்பின் பலன்கள், அவனது தேய்ந்து போன வறண்ட மண்ணில் என்ன விளைவிக்க முடிந்ததோ அத்தனையும் இருந்தன: கிழங்கு, கத்தரிக்காய், ஒரு கூடை சுண்டைக்காய் என இருந்தன. எனினும் அது விற்பதால், அவனது செலவுகளை முழுதாக ஈடுசெய்ய முடியாது என்பதே உண்மை!

"மைபடு மாமலை பனுவலின் பொங்கி
கை தோய்வு அன்ன கார்மழைத் தொழுதி
தூஉயன்ன துவலை தூற்றலின்
தேஎம் தேறாக் கடும்பரிக் கடும்பொடு
காஅய்க் கொண்ட நும் இயம் தொய்படாமல்
கூவல் அன்ன விடரகம் புகுமின்"

கரிய நிறமுடைய பெரிய மலையில் பஞ்சிபோல் பொங்கி, கை தொடுவது போல் தன்மை ஒத்த அணுகுதலையுடைய கார்கால முகில் கூட்டங்கள், தூவல் போல மழை நீரைத் தூவுவதால், திசைகள் அறியாத விரைந்து செல்லும் உங்கள் சுற்றத்துடன், தோளில் காவிக் கொண்ட உங்களுடைய இசைக்கருவிகள் நனையாதபடி, கிணறுகள் போன்ற குகைக்குள் நுழையுங்கள் என்று அன்று ஒரு கவிஞன் பாடினான். 

அது அவனுக்கு ஞாபகம் வந்ததோ என்னவோ, தூரத்தில் ஒரு பெண் தனிய, கிட்டத்தட்ட தன்னைப் போலவே பெரிய மீன் கூடையுடன், அவைகள் நனையாதபடி, சந்தைக்குப்போக, அந்தக் கடும் மழையில் தெளிவாகத் திசைகள் தெரியாமல் போராடுவதைக் கண்டான். அவளை அவனது வண்டியின் கூரைக்குள் நுழைய அழைக்க விரும்பிய கார்மேகம், “ஏய்! பெண்ணே, உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா?" என்றான். 

அப்போது மாரிகாலமாயினும், அன்று காலை வானம் ஓரளவு வெளிப்பாகவும் காற்று வெப்பமாகவும் இருந்த காரணத்தினால், அவள் மெல்லிய பருத்தி உடைகள் அணிந்து கொண்டே, மீனவனின் மகள் ஆழினி, மீன்கூடையுடன் சந்தைக்குப் போனாள். ஆனால், வெளியில் வந்து சில நேரத்தால் வானத்தைப் பார்த்தாள். கருமுகில்கள் கூடி எங்கும் இருண்டு போயிருந்தது. மழை வருமுன்னர் சந்தை போய்ச் சேர்ந்துவிடலாம் என்று எண்ணிக் கொண்டு, விரைவாக நடந்தாள். சிறிது தூரம் போனதும் மழை தூறலாகத் தொடங்கி, பின்னர் இடி மின்னலுடன் சோனாவாரியாகப் பெய்யத் தொடங்கி விட்டது. அத்துடன் கடும் காற்றும் பக்க வாட்டாக அடித்தது. அணிந்திருந்த உடுப்பும் நன்றாக நனைந்து உடலோடு ஒட்டிக் கொண்டது. இனியென்ன செய்வது? சந்தை மட்டும் இப்படியே போய்விடலாம் என்று நினைத்துக் கொண்டு நடக்கும் பொழுது தான், கார்மேகம் அவளைக் கூப்பிட்டான். 

அவளால் மேற் கொண்டு நடக்க முடியவில்லை. என்றாலும் ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ஈரச் சேலையையும் கையில் சேர்த்துப் பிடித்தபடி, தன் முகத்தில் இருந்து மழைத் துளிகளை துடைத்துக் கொண்டு ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தாள். குளிர் ஒரு பக்கம், உடம்பை நடுங்கவைத்தது. தனிய நிற்பதில் பயம் ஒரு பக்கம், அத்துடன் பின்னேர மழை இருட்டு வேறு. அவள் தயங்கினாள், என்றாலும் பின்னர் தலையசைத்தாள், தயக்கத்துடன்  ஆனால் நன்றியுள்ள புன்னகையுடன் மாட்டு வண்டியை நெருங்கினாள்.

“நன்றி. இந்த மழை ... ஓயாமல் இருக்கிறது, ” என்று அவள் அவனது வண்டியின் கூரையின் கீழ் ஒதுங்கினாள் . "நான் ஆழினி."

“நன்றாக நனைந்து விட்டீர்களோ?, நான் கார்மேகம்," அவன் பதிலளித்துக் கொண்டு,  காளைகளை முன்னோக்கி நகர்த்தினான். "சந்தைக்கு போறீங்களா?, நல்ல மழையில் அகப்பட்டு விட்டீர்கள் போலிருக்கிறது.  நல்ல குளிர். இப்படியே இன்னும் கொஞ்சநேரம் நின்றால் தடுமல் காய்ச்சல் வந்துவிடும்" என்று கதையை வளர்த்தான். 

ஆழினி தலையசைத்தாள், அவளது கைகள் அவளது மீன் கூடையை இறுகப் பற்றின. “இவை கெட்டுப் போவதற்குள் விற்க வேண்டும். இந்த நாட்களில் கடல் கூட கோபமாக இருக்கிறது. அலைகள் கடுமையாக கரையைத் தொடுகின்றன. மீன் பிடிப்பதும் கடுமையாகிறது" என்றாள். பாதி இருட்டில் கார்மேகத்தின் உருவம் மங்கலாகத் தெரிந்தது. அப்போது ஏற்பட்ட மின்னல் கீற்று வெளிச்சத்தில் அவனுடைய முகத்தை அப்பத்தான் அவள் முழுதாகக் காணக்கூடியதாக இருந்தது. அவனுக்கும் இவளின் முகத்தையும் கோலத்தையும் முழுமையாக பார்க்க கூடியதாக இருந்தது. 

"இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ ரம்பையோ
மோகினியோ - மனம் முந்தியதோ விழி முந்தியதோ கரம் முந்தியதோ
எனவே" 

நிலவு போன்றவளோ, இவள் அழகே வடிவானவளோ, தேவலோகத்தில் வாழும் ரம்பையோ, அல்லது மனதை மயக்கும் மோகினியோ, [அவளைக்கண்டு] மனம் முதலில் போனதா ?, விழி முதலில் போனதா ?, [துவாலை எடுத்துக் கொண்டு] கரம் முதலில் போனதா ? என்று அவன் தனக்குள்ளே குழம்பிக் கொண்டு, "இந்தாருங்கள் இந்த துவாலையால் போர்த்திக் கொள்ளுங்கள்”; என்று அவளிடம் நீட்டினான் கார்மேகம்.  அவளுக்கு வெட்கம், கூச்சம், பயம் எல்லாம் ஒருங்கே சேர்ந்து அவளைப் வாய் பேசவிடாது அடைத்துவிட்டன. ஒரு ஆணுடன் தனித்து, அந்த நேரத்தில், ஆளரவம் இல்லாத இடத்தில் நிற்கிறேனே என்று மனத்தில் ஒரு கிலி பிடித்தது போலிருந்தது. என்றாலும், அந்தக் கடுங் குளிர் தாங்க முடியாமல் இருந்ததனால், அவன் அன்புடன் நீட்டிய துவாலையை கை நீட்டி வாங்க, அவளுக்கு மறுக்க முடியவில்லை. மழையும் குளிர் காற்றும் அவளின் மூஞ்சையில் அடித்தன. மறு யோசனை யில்லாமல் உடனே கையை நீட்டி அதை வாங்கித் தன்னை மூடிப் போர்த்துக் கொண்டாள். நன்றி சொல்ல முயன்றாள், முடியவில்லை. குளிர் நடுக்கம் வேறு. 

"கடலினைக் கயலைக் கணையைமென் பிணையைக்
   காவியைக் கருவிள மலரை
வடுவினைக் கொடிய மறலியை வலையை
   வாளைவேன் றறவுநீண் டகன்று
கொடுவினை குடிகொண் டிருபுறம் தாவிக்
   குமிழையும் குழையையும் சீறி
விடமெனக் கறுப்புற் றரிபரந் துன்கை
   வேலினும் கூரிய விழியாள்."

என்றாலும் ஆழினியின் மௌனத்திலும் அவளின் விழியழகு கார்மேகத்தை நிறைய வருத்தியது. அவன் அவளை வியந்து பார்த்தான். அவன் அரிச்சந்திரனாக அவளை சந்திரமதியாக, எனோ அந்தத் தருணம் மனதில் கருதினான். அவளின் கண்கள் எல்லா உவமைகளையும் விட அழகு வாய்ந்தவையாக அவனுக்குத் தெரிந்தது. 

ஒப்புமையில் கடலினையும், மீனையும், அம்பையும், மென்மையான பெண் மானையும் நீலோற்பல மலரையும் கருவிளம் பூவையும் , பார்வையால் ஆடவரை துன்புறுத்தி கவர்வதில் கொடிய எமனையும், வலையையும், வாளையும் வென்று முற்றிலும் செவியளவு நீண்டு அகன்று கண்டார் உயிர் உண்ணும் கொடுந்தொழில் நிலை பெற்று இரண்டு பக்கங்களிலும் தாவி குமிழாம் பூ போன்ற மூக்கும் , விசம் போல் கருநிறம் பொருந்தி கூரிய வேலை விட கூர்மையான கண்களை 
உடையவளாக ஆழினி அவனுக்கு இருந்தாள்.

கற்பனையில் மிதந்த அவன் தன்னுக்குள் சிரித்துக்கொண்டு, "இன்று நில வளம் சிறப்பாக இல்லை. வெள்ளம் இல்லையென்றால் வறட்சி தலை காட்டும். பின்னர் யானைகள் இன்னும் ஒரு தொல்லை ... ஒவ்வொரு இரவும், தோட்டம் மற்றும் வயல்களுக்குள் புகுந்து அழித்து கீழே தள்ளி மிதித்து விடுகின்றன." என்றான். 

அவள் லேசாகச் சிரித்தாள், அது, நீர்த்துளிகள் நிலத்தில் வீழ்ந்து துள்ளும், பறை இசை போன்ற சத்தத்தை மீறி, வெளியே வராமல், அவள் போல் வெட்கத்துடன் மறைந்து விட்டது. "நாங்கள் இருவரும் தோல்வியுற்ற போரில் போராடுவது போல் தெரிகிறது." என்றாள். 

அடுத்தடுத்த வாரங்களில் அவர்களின் நட்பு வளர்ந்து, ஒவ்வொரு முறையும் கார்மேகம் சந்தைக்குச் செல்லும் போது, ஆழினியின் பழக்கப் பட்ட அழகு வடிவத்தை வீதியிலும் சந்தைக் கடைகளிலும் தானாக கண்கள் தேடுவதைக் கண்டான். அவர்கள் இருவரும் தாம் கடுமையாகப் பெற்ற விளைச்சல்களை, பிடித்த மீன்களை வர்த்தகம் செய்து, போராலும் இழப்புகளாலும் பாதிக்கப்பட்ட ஒரு பிராந்தியத்தில் தங்கள் வாழ்வில் ஏற்படும் இடையூறுகளையும் குறுக்கீடுகளையும் பகிர்ந்து கொண்டு அரட்டை அடிப்பது வழக்கமாகியது .

மூடுபனிக்குள் சூரியன் அரிதாகவே தெரியும் ஒரு நாள் காலை,  சாலையோரம் ஆழினி காத்திருப்பதைக் கண்டான் கார்மேகம், அவள் அவனைக் கைகாட்டிக் கூப்பிட்டாள். அவள் முகம் சோர்ந்து காணப்பட்டது, அவளது வழக்கமான புன்னகைக்கு பதிலாக ஒரு கவலையான முகம் தான் அங்கு தெரிந்தது. "கார்மேகம்," என அழைத்து அவள் கொஞ்சம் தயங்க ஆரம்பித்தாள், "உனக்கு எப்போதாவது தோன்றுகிறதா ... நாங்கள் எதோ பிழைத்துக் கொண்டிருக்கிறோம் தவிர உண்மையாக வாழவே இல்லை? " என்றாள். 

கார்மேகம் பெருமூச்சு விட்டான், வீதியின் இரு புறமும் முடிவில்லாமல் நீண்டு கிடக்கும் வயல்களைப் பார்த்துக் கொண்டிருந்தான். "நான் ஒவ்வொரு நாளும் அதைப் பற்றி யோசிக்கிறேன். இந்த வயல்கள் தலைமுறை தலைமுறையாக என் குடும்பத்திற்கு சொந்தமானவை, ஆனால் ஒவ்வொரு பருவத்திலும் விளைச்சல் குறைந்து கொண்டு போவது போல் உணர்கிறேன். மேலும் போருக்கு முன்பு இருந்த நல்ல நெல் விதைகளை அது இன்னும் தரவில்லை. நாங்கள் இழந்ததை மீட்டெடுக்க பல ஆண்டுகள் ஆகும் என்று நான் நம்புகிறேன்.

"ஒருவேளை நாம் தெற்கே செல்லலாம் போல் எனக்குத் தோன்றுகிறது " ஆழினி சொன்னாள், "அதிக வாய்ப்புகளுடன் எங்காவது ... " என்று இழுத்தாள்.  கார்மேகம் தலையை ஆட்டினான். "நான் அதைப் பற்றி யோசித்தேன், ஆனால் இது எங்கள் பரம்பரை நிலம், இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட வரலாறு உண்டு. இது என் பூட்டன், தாத்தா, அப்பா உழைத்த நிலம். அதை விட்டு விடுவது அவர்களை விட்டு விட்டு மறந்து போகும் செயலாகும் என்றான்.

குளிர் காலத்திலும் வெயில் சிந்தும் இனிய நண்பகல் நேரம், எப்பொழுதும் போல, சந்தையால் வீடு திரும்பும் பொழுது, அன்றும் மரங்கள் பல சூழ நாயகமாய் இருக்கும் வழமையான குளக்கரையில் அருகருகே, ஆனால் அவள் கொஞ்சம் இடைவெளி விட்டு அமர்ந்தாள். இந்த குளக்கரை தான் தன் கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் போதி மரம் என்ற எண்ணம் சில நாட்களாக அவளுக்குள் இருந்தது. திடீர் திடீரென தமிழ் பிரதேசங்களில் முளைக்கும் புத்தர் சிலைகளை பார்த்ததால் அப்படியான,  புத்தரின் ஒரு எண்ணம் அவளில் தோன்றி இருக்கலாம்?

முன்பு எல்லாம் இங்கு அமர்ந்து காதல் கண் கொண்டு ஆழினி நோக்கும் போதெல்லாம் , அந்த வானம் அவளின் கண்களில் வண்ணம் பல தூவி வானவில்லைக் காட்டியது. அது ஒரு அழகிய மழைக் காலம். ஆனால் இன்று மேகம் இல்லா இளநீல வானம், கதிரவனின் இளவெயிலில் மஞ்சள் நிறம் மட்டும் பூசி நிற்கிறது. அன்று அவள் விழியில் விழுந்த வானவில்லின் மற்ற நிறங்கள் எங்கே ? அது காதல் அரும்பிய காலம். இப்ப அவளுக்கு, காதலுக்கு ஒரு நிரந்தர முடிச்சு தேவைப்படுகிறது. அன்று அவனைக் கண்டதும் சுற்றும் காட்சிகள் மறந்து மனம் மயங்க அவனைக் கட்டி அனைத்து இமை மூடி அவன் இதழ் முத்தம் பருகினாள். இன்றும் அதே விருப்பம் தான், ஆனால் மனதில் அவன் உண்மையில் காதலிக்கிறானா என்ற ஒரு கேள்வி, அது தான் அவர்கள் குளத்தின் அருகே அமர்ந்திருந்த போது, ஒரு பலவீனமான அமைதி அவளிடம் காணப்பட்டது. ஆழினியின் தலை அங்கிருந்த ஒரு மரத்தில் சாய்ந்து, கார்மேகத்தை பார்த்துக் கொண்டு இருந்தது. 

அவள் தயக்கத்துடன், தன் மனதைக் குழப்பிய கேள்வியை தந்திரமாக, "கார்மேகம், நாங்கள் எப்போதாவது திருமணம் செய்து கொள்வோம், ஒன்றாக, உண்மையான வாழ்வு ஒன்றை உருவாக்குவோம் என்று, நினைக்கிறீர்களா?" என்று கேட்டாள். அவளின் எண்ணம் எல்லாம் அந்த வானவில்லே ! அவர்களின் உறவின் நிஜமே!!  

கார்மேகனின் கை அவளது கையை வருடி, அவர்களின் விரல்கள் ஒன்றோடொன்று இணைந்தன. "ஒரு நாள், மிக விரைவில் கட்டாயம் நடக்கும்" அவன் உறுதியான குரலுடன் கூறினான். "நான் எங்களுக்கு ஒரு வீட்டைக் கட்டுவேன், அதை சிரிப்பு மற்றும் அன்பால் நிரப்புவோம்." என்று அவளை இழுத்து கட்டி அணைத்தபடி கூறினான்.  

அவள் காதலுக்கு ஒரு 'விடியலைத் தேடி' திருமணத்தில் அதை நிஜமாக்கவும், அதேநேரம் தமது பொருளாதாரத்துக்கும் 'விடியலைத் தேடி' தன் திருமண வாழ்வை மகிழ்வாக்கவும் விரும்பினாள். அதனால்த்தான் அவள் தன் கவலையை முழுதாக விட்டுவிடவில்லை  “நான் மீன் சுமந்து விற்கிறேன், நீ விவசாயம் செய்து, அதைச் சுமந்து விற்கிறாய். ஆனால் அது இன்றைய சூழலில் போதுமானதாக இல்லாவிட்டால் என்ன செய்வது? அவள் மீண்டும் தன் கேள்வியைத் தொடர்ந்தாள். 
 


"காதல் முதிராத எம் வாழ்க்கையிலே
இருமனம் இணைந்த மணம் இல்லையேல் 
விடியாத காலை சேவல் கூவியென்ன
கதிரவன் தன் விடியலைத் தந்தென்ன?"    
 


"கரு மேகங்கள் சூழ்ந்த வாழ்க்கையிலே
நிஜங்கள் மறைந்து நிழல் ஆனாலென்ன  
பொருளாதாரம் குறைந்து உடைந்தால் என்ன  
விடியல் தேடலும் உடைந்து விழுமே?"
 

  
"சிதைக்கப் பட்ட எம் நிலமும் 
சிதறிப் போன உழைப்பு வசதியும் 
பறிக்கப் பட்ட எம் வளமும் 
மீண்டும் கிடைக்க விடியலைத் தேடு!"

"காதல் என்பதை புனிதம் ஆக்கி  
கைகள் இரண்டும் அன்பில் இணைத்து 
வாழ்வு ஒன்றை மகிழ்வாக நடத்த
உண்மை அர்ப்பணிப்புடன் விடியலைத் தேடு!"

அப்பொழுது மென்மையான தங்கம் மற்றும் இளஞ் சிவப்பு நிறங்களில் கதிரவன் நிலத்தை குளிப்பாடிக் கொண்டு இருந்தான். அவன் உடனடியாக பதிலளிக்கவில்லை, ஆனால், அந்த கதிரவன்  அடிவானத்தில் மூழ்குவதைப் பார்த்துக்கொண்டு இருந்தான். “நாங்கள் தொடர்ந்து முயற்சிப்போம், ஆழினி. அது எம் விடியலைத்தேடும் முயற்சி ஆகட்டும். கட்டாயம் எம் நீர் மற்றும் நிலத்தின் விளைச்சல் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை இன்று எனக்கு உண்டு, அது எம் பொருளாதாரத்துக்கும் எம் வாழ்வுக்கும் விடிவைத் தேடித் தரும்." என்றான்.   
 


ஒரு குளிர்ந்த விடியற் காலையில், கார்மேகம் சந்தைக்குப் புறப்படத் தயாரான போது, ஆழினியும் அவனுடன் இணைந்து கொண்டாள்.   அவள் தோள்களில் ஒரு சால்வை [துப்பட்டா] இறுக்கமாகச் சுற்றியிருந்தது. அவள் அவனது வயல்களை வெளியே நின்றபடி பார்த்தாள், அங்கு பயிர்கள் இன்னும் சரியான விளைச்சல்கள் கொடுக்க போராடுவதைக் கண்டாள். " விரைவில் இந்த நிலைமை மாறும், இது ஒரு பழைய நினைவாக மாறட்டும்" என்று முணுமுணுத்தபடி அவன் கையைப் பிடித்தாள். 

அவள் வார்த்தைகளின் கனத்தை உணர்ந்த கார்மேகம் அவளை அருகில் இழுத்தான். "கட்டாயம் நம்மால் முடியும் ஆழினி, சரியான வழியில், சரியான திட்டத்தில், நம்பிக்கை கொண்ட உழைப்பில், அது சாத்தியமாகும், அது வரை ஓயாமல் நாம் "விடியலைத் தேடி" க்கொண்டே இருப்போம்." என்றான். 

அவள் சிரித்தாள், மேகங்களை உடைத்து வரும் விடியலின் மங்கலான ஒளியில், அவள் முகம் மலர்ந்தது. "உன்னுடன், கார்மேகம் ...  என்னால் முடியும் என்று நினைக்கிறேன்." என்றாள். 

“இவ்வளவு பிழைத்துவிட்டோம்” என்று கார்மேகம் முணுமுணுத்தான்,  "நாங்கள் போரின் அவலத்தில் இருந்து  தப்பிப்பிழைக்க முடிந்தால், இங்கும் நாம் தப்பிக்க முடியும்." என்றான். 

ஆழினி  தலையசைத்தாள், அவள் குரல் உறுதியாய் இருந்தது. “ஒரு நாள், நமக்குச் சொந்தமான விடியலைக் காண்போம். அதுவரை நாங்கள் தொடர்ந்து செல்வோம்" என்றாள்.

எனவே, கைகளை பின்னிப்பிணைத்து, உறுதியான இதயங்களுடன், அவர்கள் நிச்சயமற்ற அடிவானத்தை எதிர்கொண்டு ஒன்றாக நின்றனர். விடியல் அவர்களுக்கு முன்னால் நீண்டது - ஒரு பதிலாக அல்ல, மாறாக அவர்களின் உறுதிக்கு ஒரு சான்றாக, ஒளி தொலைவில் இருந்தாலும், அதை அடைய அவர்கள் எடுத்த ஒவ்வொரு அடியும் மதிப்புக்குரியது என்பதை நினைவூட்டியது 


நன்றி

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]  

470146642_10227587744461973_5466160166722841573_n.jpg?_nc_cat=103&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=jq3XyMptYQsQ7kNvgFUnxTK&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=AaEGebrjOpTXZHaNUFLBkuK&oh=00_AYBkv5MfrR6kpONTIAKL0HpXlwwcsJf0HBWAGeReq4DYmg&oe=6761CA56  470158278_10227587744421972_7824264541524839692_n.jpg?_nc_cat=102&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=u1o7GpR_mB0Q7kNvgElPbQ_&_nc_zt=23&_nc_ht=scontent-lhr6-1.xx&_nc_gid=AaEGebrjOpTXZHaNUFLBkuK&oh=00_AYCf1xBVEyLDm2qyZ-n0yV9EqUrRVxnRx0nOSZKU1bLkfA&oe=6761D057


 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.