Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"பெண்ணே புயலாகு” 

 

இலங்கைத் தீவானது, தொன்மை வாய்ந்த இரு நாகரீகங்களின் வரலாற்றுத் தாயகமாகும். வேறுபட்ட மொழிகள், பாரம்பரியங்கள், பண்பாடுகள், வேறுபட்ட நிலப்பரப்புகள், வெவ்வேறான வரலாறுகளைக் கொண்ட இரு தனித்துவமான தேசிய இனங்களாக அது விளங்கின என்பது வரலாற்று உண்மையாகும். என்றாலும் சிங்களப் பெரும்பான்மையினரிடம் அரசியல் அதிகாரம் கைமாறியதை அடுத்து, சிங்களப் புத்த பேரினவாதம் மேலாண்மை பெற்றது. இதனால் தமிழர்களுக்கு எதிரான அரச அடக்குமுறை குரூரமான வன்முறை வடிவமாக, கொஞ்சம் கொஞ்சமாக 1956, 1958, 1966, 1977, 1981, 1983, 1985, கலவரமாக மாறத் தொடங்கி, அது 2009 உச்சகட்டத்தை அடைந்தது வரலாறு ஆகும்.  

வன்னி அடிப்படையில் நீர் மேலாண்மைக் குடியிருப்பு ஆகும். ஆறுகளும், கடல்களும், குளங்களும், நீரிணைகளும், வாய்க்கால்களும், ஓடைகளும், நீரேரிகளும் அதனை வடிவமைத்தன. நீராலேயே அதன் ஊர்கள் பலவும் பெயரிடப் பட்டன. அதைவிட அங்கு வயல்கள், தோட்டங்கள், சதுப்புக்கள், சிறுகுன்றுகள், பெருமரங்கள், காடுகள் என்பனவற்றுடன் பறவைகள், விலங்குகள் முதலான அப்பிராந்தியத்திற்கே சிறப்பாகவுள்ள மரபுரிமைச் சொத்துக்களைக் கொண்டுள்ளன. 

ஆனால் 2008 / 2009 ஆண்டில் அங்கு ஏற்பட்ட  கொந்தளிப்பான சூழலில், போர் ஆழமான வடுக்களைச் செதுக்கி, அமைதி தொலைதூர கனவாக மாறிய அந்த தருணத்தில், 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் தேதி இலங்கையில் 30 வருடங்கள் தொடர்ந்த ஆயுதம் ஏந்திய விடுதலைப் போராட்டம் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட அந்த தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாயும் அவளது மகள் மலர்மேனியும் முல்லைத்தீவில் வாழ்ந்து கொண்டு இருந்தனர். 

முல்லைத்தீவில் நடந்த மோதலில், இதயத்தை உலுக்கும் கடைசி நாட்களில், ஒவ்வொரு சாத்தியமான வழியிலும் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, தங்கள் வீட்டை மட்டும்மல்ல, தங்கள் குடும்பத்தின் தலைவன், அன்னக்கொடியின் கணவன் மற்றும் அவளது மகனையும் காணாமலாக்கப்பட்டதால், வன்முறை மற்றும் அவநம்பிக்கையின் எச்சங்கள் நிழல்கள் போல நீடித்திருக்கும் அந்த மண்ணில் இருந்து இருவரும், களப்பு வழியாக, சிறிய நீர்ப்பகுதி, சேற்றுப்பகுதி ஊருக்குள்ளாலும் காட்டு வழிகளினாலும் செத்தவர் போக மிஞ்சியவர்கள், காயப்பட்டவர்கள் என பல பேருடன் இடம் பெயர்ந்து தற்காலிக குடிகளில், வாழ அவர்களை விட்டுவிட்டது.   

இடம் பெயர்ந்த மக்களாக, வன்னியில் அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, அவர்களுக்கு நிலையான தங்குமிடம் இல்லாமலும் எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது. உணவைத் தேடுவதற்கும் பாதுகாப்பான சூழலில் வாழ்வதற்கும் அவர்களின் வாழ்க்கை முடிவில்லாத போராட்டங்களாக இருந்தன. அவர்களின் தற்காலிக குடியிருப்புக்கு அருகிலுள்ள இராணுவ முகாம் அவளுக்கு போரையும் அதன் பின்விளைவுகளையும் நினைவூட்டிக்கொண்டு இருந்தது. ஒவ்வொரு இரவும், அன்னக்கொடி ஒழுங்காக நித்திரை கொள்ளவில்லை. எந்த சத்தமும் அவளுக்கு ஒரு பயத்தைக் கொடுத்துக் கொண்டே இருந்தது.

உடுத்த உடையைத் தவிர வேறு வேறெதுவும் எடுத்துச் செல்ல முடியாமல் வந்தவர்கள் இவர்கள். வெள்ளப் பாதிப்பினாலோ புயலின் தாக்கத்தினாலோ அகதியானவர்களல்ல. இரத்தம், தீ, காயம், வலி என்ற ஏராளமான வதைகளிலிருந்து, மரணப் பொறிகளிலிருந்து தப்பியவர்கள்; தப்ப முனைந்தவர்கள் தான் இவர்கள். யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. குண்டு வீச்சில்லை, துப்பாக்கி வேட்டுகள் இல்லை, மரணம் இல்லை, மற்றபடி அத்தனை துன்பங்களும் வலிகளும் துயரங்களும் அலைச்சல்களும் இன்னும் இருந்து கொண்டே அவர்களுக்கு இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு நேரும் அங்கொன்றும் இங்கொன்றுமாக மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்! 

அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால் இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவர்கள் வறுமையிலும் துன்பத்திலும் படும் வேதனையை சாதகமாக்கி,  தங்கள் காம பசிக்கு அவர்களை இரையாக்குவதிலேயே சிலரின் கண்கள் மேய்ந்து கொண்டு இருப்பது அவர்களுக்குத் தெரியவில்லை.

பாலியல் வன்முறைகள் என்பது வெறும் பாலியல் வன் புணர்வு அல்ல. அதற்கும் மேலாக, பாலியல் நோக்கத்துடன் கூடிய பேச்சுக்கள், சீண்டல்கள், பார்வைகள், அடக்குமுறைகள், மிரட்டல்கள் போன்ற எல்லாமே அடங்கும். எனவே எடுத்தவுடன் ஒருவனின் வெளிப்படையான நடவடிக்கைகளை வைத்து எடை போடுவது கடினம்.           

அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் கஷடங்களைப் பார்த்து கருணை என்ற போர்வையில் அவளை அணுகி உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, தன்னைச் சுற்றியுள்ள கடுமையான யதார்த்தத்திலிருந்து பாதுகாக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வாழ்க்கையைச் நகர்த்தினாள். 

"பெண்கட்குக் கல்வி வேண்டும்
     குடித்தனம் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
     மக்களைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
     உலகினைப் பேணுதற்கே!
பெண்கட்குக் கல்வி வேண்டும்
     கல்வியைப் பேணுதற்கே!"

என்ற பாரதிதாசன் அடிகளை நன்கு உணர்ந்த மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, தன் தாயின் கனவுகளையும் தன் கனவுகளையும் சுமந்து இடம்பெயர்ந்த குடியிருப்பின் வரம்புகளுக்கு அப்பால், ஒரு வாழ்க்கையை செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், அறிவியல் பாடத்தில் உயர்தரப் பரீட்சைக்கு உட்கார வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, இளம் பெண்ணான மலர்மேனிக்கு பெரும் சவாலாகவும் இருந்தது.

"தீரத் தறைந்த தலையும், தன் கம்பலும்,
காரக் குறைந்து, கறைப்பட்டு வந்து, நம்
சேரியின் போகா முட முதிர் பார்ப்பானை,
தோழி! நீ போற்றுதி என்றி அவன் ஆங்கே," 

ஒரு நாள் மாலை, குடியிருப்பின் மீது சூரியன் நீண்ட நிழல்களைப் பரவிய போது, மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்து கொண்டிருந்தாள். அந்த குடியிருப்பை சேர்ந்த, ஆண்டில் முதிர்ந்த ஒருவன், அவளை ஒரு மூலையில் வழி மறித்தான். உச்சிக் குடுமி வைத்து மொட்டையடித்த தலையை உடையவன் அவன். தன் காதில் கடுக்கன் அணிந்திருந்தான். கிழிந்த கறை பட்ட ஆடை அணிந்திருந்தான். அவன் நம் தெருவை விட்டு எங்கும் செல்லாதவன். அவன் என்ன செய்தான் தெரியுமா? 

"பாரா, குறழா, பணியா, ‘பொழுது அன்றி,  
யார், இவண் நின்றீர்?’ எனக் கூறி, பையென,
வை காண் முது பகட்டின், பக்கத்தின் போகாது,
‘தையால்! தம்பலம் தின்றியோ?’ என்று, தன்
பக்கு அழித்து, ‘கொண்டீ’ எனத் தரலும் யாது ஒன்றும்"

அவன் அங்கே என்னைப் பார்த்தான். அவன் குள்ளன். பணிவில்லாமல் பேசினான். "பொழுதல்லாப் பொழுதில் இங்கே நிற்கிறாயே, நீ யார்" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். வைக்கோலைக் கண்டு கிழட்டு எருது வருவது போல வந்தான். அங்குமிங்கும் ஒதுங்கவில்லை. "பெண்ணே! வெற்றிலைப் பாக்குப் போட்டுகொள்கிறாயா" என்று கேட்டான். (வெற்றிலைப் பாக்குப் போட்டுக் கொள்கிறாயா என்றால் என்னுடன் கூடியிருக்க ஒப்புகிறாயா என்பது காமுகர் பேசும் பேச்சு) இருவருக்கும் இடையே இருக்கும் இடை வெளியைக் குறைத்துக் கொண்டு என் பக்கம் வந்து "வாங்கிக்கொள்" என்று வெற்றிலைப் பாக்கைக் கொடுத்தான். 

"வாய்வாளேன் நிற்ப கடிது அகன்று கைமாறி,   
‘கைப்படுக்கப்பட்டாய், சிறுமி! நீ' ‘மற்று யான்"

நான் வாய் திறந்து எதுவும் கூறவில்லை. சும்மா நின்று கொண்டிருந்தேன். சற்றே அகன்று நின்றான். "சிறுமியே, நீ என் கையில் அகப்பட்டுக் கொண்டாய்" என்றான். அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர். 

“காதலுக்கு நான்கு கண்கள்
கள்வனுக்கு இரண்டு கண்கள்
காமுகனின் உருவத்தில்
கண்ணுமில்லை காதுமில்லை”

அன்னக்கொடி முணுமுணுத்தாள். அவர்கள் போரில் தப்பிப்பிழைத்தாலும் தொந்தரவுகள் மட்டும் நின்றபாடில்லை. அவர்கள் இடம்பெயர்ந்தனர், வீடு மற்றும் குடும்பத்தை இழந்தனர், இந்த பலவீனமான இருப்பில், அன்னக்கொடி தனது மகளை அவர்களைச் சுற்றியுள்ள கடுமையான உலகத்திலிருந்து பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்று கடுமையாக அன்று இரவு முழுவதும் சிந்தித்தாள். 

காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்க மெல்லாம் உடல் மற்றும் உள்ள இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. அப்படி எனறால், 

"தீ என்னை வாட்டிடினும்
கையைத் தொடாதேயடா - இந்த
முத்தமிழ் நாட்டுக்கு மானம் பெரிதன்றி
மூச்சுப் பெரிதில்லை காண்"

என்று வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் ஒரு துர்கா.” என்று எழவேண்டும் என்று முடிவெடுத்து, அதை மகளிடம் தக்க தருணத்தில் சொல்ல முடிவெடுத்தாள். 


 
ஒரு நாள் மாலை, அன்னக்கொடி எண்ணெய் விளக்கின் மங்கலான ஒளியில் அமர்ந்து, மலர்மேனியின் ஒரே பள்ளி உடையில் கிழிந்த ஒரு பகுதியை தைத்துக் கொண்டு இருந்தாள். அவள் விரல்கள் கவனமாக நகர்ந்தன, ஆனாலும் அவளது அசைவுகளில் உறுதியான வலிமை இருந்தது. அருகில் வீட்டுப் பாடங்களை முடித்துக் கொண்டிருந்த மலர்மேனி, அம்மாவின் முகபாவத்தைக் கவனித்து அமைதியாகப் பேசினாள்.

"அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள்  முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக் கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள். 

அன்னக்கொடி தைத்துக் கொண்டு இருந்த  ஆடையைக் கீழே போட்டு விட்டு மகளின் கண்களை ஆழமாகப் பார்த்தாள். அவள் மலர்மேனியின் கையை இறுக்கிப் பிடித்தாள். "மலர்மேனி," தாயின் குரல் மென்மையாக ஆனால் உறுதியாக இருந்தது  "புயல் என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா?" என்று கேட்டாள். தாய் என்ன சொல்கிறாள் என்று புரியாமல் அவள் தலையை ஆட்டினாள்.

“என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள்.   அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மகளைக்  தட்டிக்கொடுத்தாள். 

"வாழ்தல்
இனிது என மகிழ்ந்தன்றும் இலமே; முனிவின்,     
இன்னாது என்றலும் இலமே; 'மின்னொடு
வானம் தண் துளி தலைஇ, ஆனாது
கல் பொருது இரங்கும் மல்லல் பேர் யாற்று"
போல் 

“இதை நினைவில் கொள் மலர்மேனி. எமக்கு கிடைத்திருக்கும் வாழ்க்கையை இனிது என்று மகிழத் தேவையும் இல்லை அல்லது வெறுப்பில் ‘வாழ்க்கை துன்ப-மயம்’ என்றும் கூறத்தேவையும் இல்லை, நாங்கள் நதியைப் போன்றவர்களும் கூட , வானம் மின்னி மழை பொழிந்து கல்லை உருட்டிக்கொண்டு இரைச்சலுடன் பாயும் ஆறு போல், எந்தப் பாறையையும் அறுத்துச் செல்லும் சக்தி வாய்ந்தவர்கள்.  இந்த அவர்களின் அத்துமீறல்கள் ... நம்மைத் தடுக்க முயற்சி செய்யலாம், ஆனால் நாம் தொடர்ந்து பாய்ந்து கொண்டே இருப்போம். நாங்கள் பயப்படவோ அல்லது பதுங்கவோ இங்கு வரவில்லை. எங்கள் பாதையை செதுக்க நாங்கள் இங்கு வந்துள்ளோம். இதை உணர் மலர்மேனி, என் அன்பு மகளே !, 'பெண்ணே புயலாகு', நீ துர்காவாக எழுந்து நில்!!, ஆறாக பாய் !!!" என்றாள். 

மறுநாள் காலை, மலர்மேனி பள்ளிக்குச் செல்லும்போது, அம்மாவின் வார்த்தைகளை கவசம் போல சுமந்தாள். இளைஞர்கள் மற்றும்  நடுத்தர ஆண்கள் ஏளனம் செய்வார்கள், சிப்பாய்கள் ஏளனம் செய்வார்கள் என்று அவளுக்குத் தெரியும், ஆனால் அவள் இனி ஒரு புயல், அவள் ஒரு துர்கா!  அவள் எதிர்பார்த்தது போலவே, உள்ளூர் கூட்டம் சாலையோரம் நின்றும் மதகில் குந்தி இருந்தும், அவள் அவர்களை கடந்து செல்லும் பொழுது அவளுக்கு பாலியல் சார்ந்த கேலி மற்றும் மிரட்டல்கள் செய்தார்கள். ஆனால் இந்த முறை அவள் பயந்து விரைவாக நடக்கவில்லை, முகத்தை மறைக்கவில்லை, ஆனால்  "ஏன் என்னை முறைக்கிறாய்?" அவள் துணிந்து கேட்டாள், அவள் குரல் உறுதியாக, கடினமாக இருந்தது. அவளின் பார்வை, கண்ணகி போல,  அவர்களை எரித்துவிடும் போல இருந்தது. 

அந்த ஆண் கூட்டம்  அதிர்ச்சியடைந்தனர். அவள் அவர்களைத் தவிர்ப்பாள், தங்கள் பார்வையில் குறுகிவிடுவாள் என்று அவர்கள் எதிர்பார்த்தார்கள். அவர்களில் ஒருவன், தங்கள் கட்டுப்பாட்டை மீட்டெடுக்க முயன்றான், மீண்டும் கேலி செய்தான்.

"எங்களிடம் அப்படிப் பேசும் நீங்கள், நாம் யார் என்று நினைக்கிறீர்கள்?" என்று மிரட்டலாக கேட்டான். 

மலர்மேனி தலை நிமிர்ந்து நின்றாள். “நான் அன்னக்கொடியின் மகள் மலர்மேனி. நான் இங்கு படிக்க வந்திருக்கிறேன், எதுக்கும் தகுதியற்ற, தெரு நாய்களிலும் கேவலமான உன்னுடைய பேச்சைக் கேட்க அல்ல." ஆணித்தரமாகச் சொன்னாள்.

“மலரினும் மெல்லிது காமம் சிலர் அதன்
செவ்வி தலைப்படு வார்”

"இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உனக்கு வள்ளுவர் சொல்லியது . இதெல்லாம் உனக்கு எங்கே விளங்கப்போகுது?" என்றாள்.   

அவளுடைய எதிர்ப்பானது அந்த கூட்டத்தை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. 

"அஞ்சினன் ஆதல் அறிந்து, யான், எஞ்சாது,  
ஒரு கை மணல் கொண்டு, மேல் தூவக் கண்டே,
கடிது அரற்றிப் பூசல் தொடங்கினன், ஆங்கே,"

அவன் பயந்துவிட்டான். அதனை அறிந்து கொண்ட அவள், மேலும் ஒரு கை மண்ணை அள்ளி அவன் மேல் தூவினாள். அவன் ஒரு சலசலப்பை ஏற்படுத்தி வேகமாக கத்த ஆரம்பித்தான். அவள் புயலாக  நடந்து செல்லும் போது அவர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக்கொண்டு அமைதியாகிவிட்டனர். மலர்மேனி தனக்குள் சிரித்துக் கொண்டாள். இது ஒரு சிறிய வெற்றிதான், ஆனால் அது அவளுடைய கண்ணியத்தை மீட்டெடுப்பதற்கான முதல் படியாகும்.

அன்று மாலை அன்னக்கொடி தங்களின் எளிய உணவை தயார் செய்த போது மலர்மேனி தன் தாயிடம் நடந்த சம்பவத்தை கூறினாள். அன்னக்கொடியின் கண்கள் பெருமிதத்தாலும் சோகத்தாலும் நிறைந்தன. மலர்மேனியின் பயணம் எளிதானது அல்ல என்பதை அவள் அறிந்திருந்தாள், ஆனால் அவள் மகளின் இந்த உள் வலிமையை ஒரு ஆரம்ப வெற்றியாகக் கண்டு மகிழ்ந்து, அவளை அணைத்து தட்டிக்கொடுத்தாள். 

"பெண்ணே புயலாகு”


நன்றி


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]


"பெண்ணே புயலாகு” [சுருக்கம்]


இலங்கையில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட தருணத்தில், அன்னக்கொடி என்ற இளம் தாய், தனது கணவன், மகன் இருவரும் முல்லைத்தீவில் காணாமலாக்கப்பட்டதால், மகள் மலர்மேனியுடன் தப்பிப் பிழைத்து உள்நாட்டு அகதிகளாக, அவர்களது வாழ்க்கை கடுமையானதாக, எந்த நிரந்தர வருமானம் இல்லாமலும் இருந்தது.

யுத்தம் முடிந்து விட்டதாகச் சொல்லப்பட்டாலும் அவர்களைப் பொறுத்தவரை அது எதோ ஒரு வகையில் தொடர்வதாகவே இருந்தது. அதிலும், முல்லைத்தீவில் இத்தனை இடையூறுகளுக்கிடையிலும் அவர்கள் கண்டிராத கொடுமை இப்ப அவர்களுக்கு மறைமுகமாகவோ வெளிப்படையாகவோ நேரிடும் பாலியல் வன்கொடுமை தான்!

அன்னக்கொடிக்கு ஒரு நாற்பது அகவை தான் இருக்கும். அவளின் கண்கொள்ளா அழகும் இனிமை நிறைந்த வார்த்தைகளும், அதற்கு ஈடான, ஆனால், இளம் பருவத்தின் பூரிப்பில் தவழும் வஞ்சிக்கொடி போன்று, மெல்லிய இடையினையும் மலர் போன்ற மென்மையான வண்ண மேனியையும் கொண்ட, பதினெட்டு அகவை மலர்மேனிக்கும், அவர்களின் நிறமும் தோற்றமும் தான் எதிரியாகியது அங்கே. அவளின் குடியிருப்புகளில் வாழும் பழக்கமான சில ஆண்கள், சில சமயங்களில், அவள் படும் துன்பங்களைப் பார்த்து, கருணை என்ற போர்வையில், அவளை அணுகி, உதவியும் செய்தார்கள். ஆனால், அதைச் சாட்டாக வைத்து நெருங்கிப் பழக முயன்றாலும், அன்னக்கொடி அதைச் சமாளித்து, வாழ்க்கையை நகர்த்தினாள். மலர்மேனி, கற்பதில் மிகவும் ஆர்வம் கொண்டவளாக, ஒரு வளமான வாழ்க்கையைச் செதுக்க வேண்டும் என்ற நம்பிக்கையில், உறுதியாக இருந்தாள். ஆனால் அந்தக் குடியிருப்பில் தாயும் மகளுமாக இரு பெண்கள் தனிய வாழ்வது, பெரும் சவாலாகவும் இருந்தது.

ஒரு நாள் மலர்மேனி மாலை வகுப்புகளில் இருந்து வீடு திரும்பி வந்துகொண்டிருந்தாள். ஆண்டில் முதிர்ந்த ஒருவன், "இருட்டில் போகிறேயே, துணைக்கு வரவா?" என்று கேட்டுக் கொண்டே மெதுவாக நெருங்கினான். "களைத்திருப்பாய், இதை வாங்கிக்கொள்" என்று எதோ ஒன்றைக் கொடுத்தான். என்றாலும், அவள் ஒருவாறு அங்கிருந்து தப்பி வீடு வந்தாள். அன்னக்கொடி தன் மகளின் கண்களில் இருந்த பயத்தைப் பார்த்தாள். அன்று இரவு, தாயும் மகளும் தங்கள் பயத்தைப் பற்றி வெளிப்படையாகப் பேசினர்.

காம வெறியர்களுக்கு நீதி, நேர்மை, நியாயம், அறம், மனித நேயம், கண்ணியம், கட்டுப்பாடு, அன்பு, நல்லொழுக்கம் முதலிய மனிதப் பண்புகளில் நாட்ட மில்லை. இவர்களின் நோக்கமெல்லாம் உடல் மற்றும் இச்சைகளைத் தணிப்பதேயாகும். இவர்களுக்கு அறம் பேசுவதால் ஒரு பயனும் இல்லை. மகளே, வலிமையை நெஞ்சில் ஏற்றி "நான் துர்கா என எழுந்து, 'பெண்ணே புயலாகு' " என்றாள்.

"அம்மா, சில சமயங்களில் விட்டுக்கொடுக்கணும்னு தோணுது, இளைஞர்கள், நடுத்தர ஆண்கள் முறைத்துப் பார்க்கும் விதம் ... அவர்கள் சொல்லும் விடயங்கள் ... மற்றும் ராணுவ வீரர்கள்..." அவள் கொஞ்சம் நிறுத்தினாள், வலியால் அவள் கண்கள் இருண்டன. "நான் சிக்கிக்கொண்டது போல் உணர்கிறேன்." என்றாள்.

“என் மகளே, புயல் பயங்கரமானது, அது மலைகளை நகர்த்துகிறது, பூமியை அசைக்கிறது, அதன் பாதையில் உள்ள அனைத்தையும் மாற்றுகிறது. மக்கள் அதைக் கட்டுப்படுத்த அல்லது கட்டுப்படுத்த முயற்சி செய்யலாம், ஆனால் அவர்களால் முடியாது. நாமும் புயல்களாக இருக்க வேண்டும். நாம் அவர்களுக்குத் தீங்கு செய்ய முற்படுவதால் அல்ல, ஆனால் நம்மை அசைக்க முடியாது என்பதை உலகுக்கும் அவர்களுக்கும் காட்ட வேண்டும் என்பதற்காக." என்றாள். அவளின் கண்ணீரைத் தன் கையால் துடைத்துவிட்டு, "பெண்ணே புயலாகு” என்று மீண்டும் மகளைக் தட்டிக்கொடுத்தாள்.


[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]

471248716_10227628902850907_559660782287869250_n.jpg?_nc_cat=106&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=4vPyj1WOMqcQ7kNvgFhUJ3Q&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-2.xx&_nc_gid=Auipp2NSB35522mDMme-YM9&oh=00_AYDu_4d1Ugxp2Q0XpCJ2QJJ_pYqE2xrLOI2QF0-QmAZgRA&oe=676B25A5  470800856_10227628867370020_1729574250669442522_n.jpg?stp=dst-jpg_s600x600_tt6&_nc_cat=111&ccb=1-7&_nc_sid=127cfc&_nc_ohc=MV_3fzvZ8_oQ7kNvgHrz39y&_nc_zt=23&_nc_ht=scontent-lhr8-1.xx&_nc_gid=Auipp2NSB35522mDMme-YM9&oh=00_AYAgi21we2XcRH7mEPACvooVyra7jMLSd54x4py4-pe2Ug&oe=676B3562

 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.