Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கலாநிதி க.சர்வேஸ்வரன்
 
1.தேசிய மக்கள் சக்தியையும் (ஜே.வி.பி.)யையும் தமிழ் மக்களின் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்களையும் ஒரே நோக்கம் கொண்டவையாக பார்க்க முடியாது. தமிழ் மக்கள் மத்தியில் தோன்றிய விடுதலை இயக்கங்கள் யாவும் தமிழ் மக்களின் விடுதலைக்காக மட்டுமே போராடின. அது ஓரினம் சார்ந்த விடுதலைப் போராட்டம். எமது இயக்கம் ஒரு வர்க்கப் போராட்டத்தை முன்னின்று நடத்தும் செயற்பாட்டை கொண்டது.

2.”வர்க்கப் போராட்டம் என்பது இந்த நாட்டின் அல்லலுற்று- துன்பப்பட்டு அரசியல் அனாதைகள் ஆக்கப்பட்ட மக்கள் கூட்டத்தின் போராட்டமாகும். இந்த மக்கள் கூட்டத்தையே நாம் வர்க்கம் என்று குறிப்பிடுகிறோம். இந்த வர்க்கத்தில் பல இனங்கள், பல சமயங்கள், பல மொழிகள் இருக்கலாம்.”

3.” இரண்டு தரப்பும் விடுதலைக்காக போராடின. ஆனால் இவை இரண்டினதும் கொள்கைகள் ஒன்றுக்கொன்று முரணானது. மேற்கண்ட கோட்பாட்டு மற்றும் கொள்கை ரீதியான ஜே.வி.பி.யின் விளக்கம் கடந்த வாரம் வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

50 ஆண்டுகளுக்கு மேலாகப் போராடி வரும் ஜே.வி.பி. வர்க்கம் வர்க்கப் போராட்டம், தேசிய இன விடுதலைப் போராட்டம் இவ்விரண்டுக்கும் இடையேயான தொடர்பு ஆகியவை பற்றி எந்த அளவுக்கு கோளாறான பார்வையைக் கொண்டிருக்கிறது. இது தவறான பார்வை. எந்த அளவிற்கு இந்த நாட்டின் வர்க்க விடுதலை மற்றும் தேசிய இன உரிமைகள் மீது பாதகமான தாக்கம் செலுத்தியது ஆகியவற்றை புரிந்து கொள்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

வர்க்க போராட்டம் என்பது மாக்ஸிய சித்தாந்த அடிப்படையில் தொழிலாளர் வர்க்க புரட்சிக்கான போராட்டம் ஆகும். இப் போராட்டத்தின் இலக்கு என்பது தொழிலாளர் வர்க்கம் ஆட்சியை கைப்பற்றுவது என்பதாகும். காரணம், உலகெங்கும் தொழிலாளர் வர்க்கம் பெரும்பான்மையாகவும் முதலாளி வர்க்கம் சிறுபான்மையாகவுமே உள்ளது.

 

இலங்கையும் அவ்வாறே. இங்கு தொழிலாளி வர்க்கம் உழைக்கும் வர்க்கமாகவும் முதலாளி வர்க்கம் தொழிலாளி வர்க்கத்தின் உழைப்பை சுரண்டி தனது செல்வத்தை மென்மேலும் பெருக்கும் வாய்ப்பைக் கொண்டதாகவும் தொழிலாளி வர்க்கம் தொடர்ந்தும் தொழிலாளி வர்க்கமாகவே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தினுள் வைக்கப்படும் பண்பை கொண்டதுமாகும். இவ்வர்க்க போராட்டம் பல்வேறு நாடுகளில் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு வடிவங்களில் முன்னெடுக்கப்பட்டு வந்தது. அதன் விளைவே உலக அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்ட எட்டு மணி நேர வேலை மற்றும் பல்வேறு நாடுகளில் செயல்படுத்தப்படும் தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்கள். இவற்றை வழிகாட்ட அல்லது தலைமை தாங்க உலக அளவில் அங்கீகரிக்கப்பட்டு- செயற்பட்டுவரும் சர்வதேச தொழிலாளர் நிறுவனம்  ஆகும்.

பாரம்பரியமாக உலகில் இரண்டு வகை தொழிலாளர் புரட்சிகள் நடந்தன. ஒன்று ரஷ்யாவில் ஏற்பட்ட தொழிலாளர் புரட்சி. இது முதலாளி வர்க்கத்திற்கு எதிராக பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஏற்படுத்திய புரட்சி. மாற்றையது நில சுவாந்தர்களுக்கு எதிராக நிலமற்ற விவசாய தொழிலாளர்களின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய சீன புரட்சி. இலங்கையை பொறுத்தவரை இது ஓர் வளர்ச்சி அடைந்து வரும் நாடு என்ற வகையைச் சார்ந்தது. இங்கு வளர்ச்சி அடைந்த இந்த நாட்டு முதலாளி வர்க்கம் குறிப்பிடும் படியாக இல்லை. மாறாக இலங்கை தங்குநிலை முதலாளிகளை கொண்டது. அதாவது பொருட்களை இறக்குமதி செய்து விற்கும்  முதலாளி வகை சார்ந்தது. இங்கு கட்டமைக்கப்பட்ட தொழிலாளி வர்க்கம் இல்லை. இங்கு கட்டமைக்கப்பட்ட பலமான உண்மையான தொழிலாளர் வர்க்கம் என்பது தேயிலைத் தோட்ட கூலிகள் அவர். இவை தவிர அரசாங்க உத்தியோகம் சார்ந்த பல தொழிற்சங்கங்களும் சிறு முதலாளிகளின் தொழிற்சங்கங்களும் உண்டு. இவர்கள் மாத வருமானம், ஓய்வூதியம் போன்ற திடமான வருமானத்தினை கொண்ட மத்திய தர வர்க்கமாகும். எனவே இந்த நாட்டில் வர்க்கப் போராட்டத்தை முன்னெடுப்பவர் எவராயினும் அவர்களது உறுதியான தளம் என்பது தோட்டத் தொழிலாளர்களாகவே இருக்க முடியும். ஏனையவை இதற்கு பலம் சேர்க்கும் வகைகளாகவே இருக்க முடியும்.

ஆனால் ஜே.வி.பி.யின் புரிதலின்படி இந்த நாட்டின் அல்லலுற்று துன்பப்படும் அரசியல் அனாதைகளாக்கப்பட்ட மக்களையே வர்க்கம் என்கின்றனர். இவ்வகையில் பார்த்தால் இந்த நாட்டில் முதலில் அரசியல் அனாதைகளாக்கப்பட்டவர்களும் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களே. அவர்களைத் தொடர்ந்து குடியரசு அரசியல் யாப்பின் பிரகாரம் தமிழ், முஸ்லிம் மக்களும் அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். தேயிலைத்தோட்ட தொழிலாளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். ஏனையோருக்கு இருந்த சோல்பரி அரசியலமைப்பின் 29 பி பிரிவின் சிறுபான்மை உரிமை, பாதுகாப்பு அம்சம் நீக்கப்பட்டு அரசியல் அனாதைகளாக்கப்பட்டனர். ஆனால் ஜே.வி.பி.யின் ஆயுதக் கிளர்ச்சியில் இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் எவரும் இல்லை. இன்றுவரை ஜே.வி.பி ஓர் தென்னிலங்கை கட்சியாக பார்க்கப்படும் வகையிலேயே உள்ளது. தமிழ், முஸ்லிம் உறுப்பினர்கள், தலைவர்கள் மிக மிக சொற்பமே.

அல்லலுற்று துன்பப்படும் மக்கள் எல்லோரும் தொழிலாளி வர்க்கம் கிடையாது. முதலாளிகளும் மத்தியதர வர்க்கத்தினரும் கூட பல்வேறு காரணங்களால் அல்லலுறுவர். இவற்றுக்கு மேலாக இலங்கையில் தமிழ் – சிங்கள இன மோதலுக்கு முடிவு கட்டும் நோக்குடன் 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தம் கொண்டுவரப்பட்டபோது இவ் ஒப்பந்தத்தை எதிர்த்து மிகப்பெரிய வன்முறை போராட்டத்தை தென்னிலங்கையில் நடத்தியது ஜே.வி.பி. இதில் இவ் ஒப்பந்தத்தை ஆதரித்த பெருமளவு பாரம்பரிய இடதுசாரிகள், முற்போக்கு ஜனநாயக அமைப்புகளின் தலைவர்கள், செயற்பாட்டாளர்கள் இவர்களால் கொன்றொளிக்கப்பட்டனர். மாறாக அன்று தமிழ் தேசிய இன விடுதலைப் போராட்டத்தை மாக்சிய கண்ணோட்டத்தில் நோக்கிய ஈரோஸ் மற்றும் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈபிஆர்எல்எப்) ஆகியன கூர்மை அடைந்த இன மோதலுக்கு சோசலிச ஈழத்தை (தமிழ் ஈழமல்ல) உருவாக்குவதன் ஊடாக தென்னிலங்கை இடதுசாரிகளை பலப்படுத்தி சோசலிச இலங்கையை உருவாக்குதல் என்னும் இலக்கை கொண்டு செயல்பட்டனர். அவர்கள் ஈழப் புரட்சியின் முன்னணி படையாக மலையக மக்களை நோக்கினர். அதனாலேயே இப்போராட்ட அமைப்புகளில் கணிசமான மலையக இளைஞர்கள் பங்கேற்றனர்.

மேலும், இவ்வடிப்படையிலேயே சிங்கள முற்போக்கு இளைஞர்களும் தொழிற்சங்கவாதிகளும் ஈ.பி.ஆர்.எல்.எப். உடன் இணைந்து செயல்பட்டனர். இங்கு ஜே.வி.பி கூறும் தமிழ் இனத்திற்கான போராளிகள் என தவறாக புரிந்து கொண்ட ஈ.பி.ஆர்.எல்.எப், ஈரோஸ் ஆகியன சோசலிச இலங்கைக்கான இலக்குடன் போராடின. ஆனால் வர்க்கப் போராட்டத்தை தலைமை தாங்குவதாக கூறிக்கொள்ளும் ஜே.வி.பி., தமிழ், முஸ்லிம்களை தவிர்த்து உண்மையான தொழிலாளி வர்க்கத்தை தவிர்த்து அரசியல் அனாதைகளாக்கப்பட்ட துன்புறும் சிங்கள மக்களுக்கான இயக்கமாக சுருங்கி செயல்பட்டது என்பதே யதார்த்தமாகும். இங்கு தமிழ் இயக்கங்கள் சோசலிச இலங்கையை இலக்கு வைத்து தமிழ் மக்களை அணி திரட்டினர். அதே நோக்கத்தோடு ஜே.வி.பி சிங்கள மக்களை அணிதிரட்ட முயன்றது. இரு தரப்பும் அன்றே கைகோர்த்து இருந்தால் சோசலிச இலங்கை சாத்தியமாகி இருக்கலாம். ஆனால் இது ஏன் நடக்கவில்லை? காரணம் தேசிய இன விடுதலைப் போராட்டமும் வர்க்கப் போராட்டமும் முரண்பட்டவை என்ற  தவறான சித்தாந்தத்தால் வளர்க்கப்பட்டமை ஆகும்.

இன, மத, மொழி, பேதம் கடந்து தொழிலாளர் வர்க்கம் சுரண்டலுக்கு எதிரான போராட்டத்தில் ஒன்றுபட்டாலும் ஒவ்வொரு இனமும் தனது தனித்துவமான மொழி, கலை, கலாசாரம், மதம் போன்றவற்றைப் பாதுகாத்துக் கொண்டோ அல்லது அவற்றின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தியே ஒன்றிணைகின்றனர். எனவே ஓர் வர்க்க  போராட்டம் என்பது அவ்வர்க்கத்தில் உள்ளடங்கியுள்ள தேசிய இனங்களின் தனித்துவங்களையும் தன்னாட்சியையும் உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருக்க வேண்டும். இல்லாவிடத்து வர்க்க ஒற்றுமை சாத்தியமற்றது. வர்க்க அடிப்படையில் 16க்கும் மேற்பட்ட மொழிகள், இனங்கள் சோவியத்தாக ஒன்றுபட்டன. இவை ஒன்றுபட்ட அதேவேளை மொழி, பண்பாட்டு அடிப்படையில் அவை தனித்தனி குடியரசாக அங்கீகரிக்கப்பட்டு பிரிந்து செல்லும் சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஒரு நாடாக செயற்பட்டனர். இது ரஷ்யா என இருக்கவில்லை. மாறாக சோவியத் சோசலிச குடியரசுகளின் ஒன்றியம் என்னும் பெயரிலேயே செயற்பட்டது.

சோவியத் யூனியன் உருவாகி 70 ஆண்டுகளின் பின் ரஷ்ய மொழியாதிக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி பலவீனப்பட்ட போது ஒரு துளி ரத்தம் சிந்தாமல் இப்பதினாறுக்கு மேற்பட்ட மொழி பேசும் தேசிய இனங்களும் இறைமையுள்ள தனி நாடுகளாக பிரிந்து சென்றன. எனவே வர்க்கப் போராட்டமும் தேசிய இன விடுதலைப் போராட்டமும் ஒன்றுக்கொன்று முரணானவை என்பது மாக்சிய லெனினிய அடிப்படைகளை புரிந்து கொள்ளாத சிறு பிள்ளைத்தனமான வாதமாகும்.

50 ஆண்டுக்கு மேலாக ஒரு வர்க்கப் போராட்டத்தை நடத்தி வருவதாக கூறும் ஜே.வி.பி.க்கு இவை தெரியாதா? புரியாதா? ஏன் இந்த தவறை செய்தார்கள்.இக்கேள்விகள் ஏழாவிட்டால் தான் தவறு. எத்தனை வடிவில் வந்தாலும் “மண்டை மேலுள்ள கொண்டையை மறைக்கவில்லையே”  என்ற வடிவேல் நகைச்சுவை போல் ஜே.வி.பி.யின் கொண்டை பலருக்கு தெரியவில்லை. வர்க்கப் போராட்டம் நடத்துவதாக கூறும் ஜே.வி.பி.யின் அடிப்படை கோட்பாடுகளிலேயே அதற்கு எதிரான ஆப்பை சொருகியுள்ளது.

ஜே.வி.பி.யின் அடிப்படை கோட்பாடுகளை விளக்கும் ஐந்து பாடங்களில் ஒன்று இந்திய விஸ்தரிப்பு வாதம் என்பதாகும். இந்திய பிராந்தியத்தின் பெரிய மற்றும் பலமிக்க நாடு இந்தியா. அதன் அயல்நாடுகள் அனைத்தும் மொழியாலோ, மதத்தாலோ, கலாசாரத்தினாலோ நெருங்கிய தொடர்புடையவை. எனவே இந்தியா அயல் நாடுகளை படிப்படியாக ஆக்கிரமிக்கும். எனவே இலங்கையின் இறையாண்மைக்கு இந்தியா ஆபத்தானது. இலங்கையில் தமிழர் எனப்படுவோர் இந்திய விஸ்தரிப்பு வாதத்தின் இலங்கை முகவர்கள் ஆவர். எனவே அவர்களும் இலங்கையின் இறையாண்மைக்கு ஆபத்தானவர்கள். இந்த அடிப்படை கோட்பாடு என்கிற தமிழ் இன எதிர்ப்பு அடிப்படையில் போராட்டம் எவ்வாறு அனைத்து இன மக்களையும் உள்ளடக்கியதாக இருக்க முடியும்? எவ்வாறு தமிழ் தேசிய இன விடுதலையை அங்கீகரிக்க முடியும்?

வர்க்கப் போராட்டமும் தேசிய விடுதலை போராட்டமும் கைகோர்த்துச் செல்பவை என்பதை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும். எனவேதான் இவர்களது வர்க்கப் போராட்டம் குறிப்பிடத்தக்களவுக்கு மக்கள் பயப்படவில்லை. இத்தேர்தல் வெற்றிகள் இவ்வர்க்க போராட்ட கொள்கைகள், கோட்பாடுகளுக்கு கிடைத்த வெற்றி அல்ல. மாறாக பாரம்பரியமாக ஆட்சிகளை அலங்கரித்து வந்த கட்சிகள் மீது சிங்கள மக்கள் கொண்ட அவநம்பிக்கையாலும் தமிழ் தலைமைகள் மீது மக்கள் கொண்ட விரக்தியாலும் வேறு தெரிவின்றி விழுந்த வாக்குகளே.

எனவே ஜே.வி.பி உண்மையில் இன-மத- மொழி பேதமற்ற கொள்கை கோட்பாடுகளுக்கு மாறி, தமிழ் தேசிய இனத்தின் சுயநிர்ணய உரிமையை அங்கீகரித்து, இணைந்த வடக்கு -கிழக்கு தமிழர் தேசம் என்பதை அங்கீகரித்து செயல்வடிவில் அவற்றை  நிரூபித்தால் ஒழிய, இவை தற்காலிக சூழல் காரணமான வெற்றிகளாக மட்டுமே அமையும்.நிலைத்து நிற்க வாய்ப்பிருக்காது.

https://thinakkural.lk/article/314103

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.