Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
"சாதிக் கொடுமை"
 
 
சாதி அமைப்புகளின் வரலாற்றைக் கொண்ட பல ஆசியா சமூகங்களில், உதாரணமாக, தெற்காசியாவில் உள்ள பல்வேறு சமூகங்களிடையே இருந்ததைப் போலவே, சாதி அடிப்படையிலான பாகுபாடும் கொடுமையும் இலங்கைத் தமிழர்களிடையே பிரச்சினையாக இருந்த காலம் அது. இலங்கையில் உள்ள தமிழ் சமூகம் பெரும்பாலும் இந்துக்களிடம் சாதி அமைப்பு பாரம்பரியமாக அவர்களின் சமூக மற்றும் கலாச்சார நடைமுறைகளில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டு இருந்தது. என்றாலும் சாதி அடிப்படையிலான பாகுபாடு முன்பு இருந்ததைப் போல பரவலாகவோ அல்லது வெளிப்படையாகவோ இல்லாவிட்டாலும், அது தமிழ் சமூகத்தின் பல பகுதிகளில் இன்னும் ஓரளவு இருந்துகொண்டுதான் இருக்கிறது.
 
அன்றைய காலத்தில் யாழ்ப்பாணத்தில் "உயர்குடி" இந்துக்களே கோவில்களில் வழிபட அனுமதிக்கப்பட்டு வந்தனர். இவ்வாறே மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலிலும் தாழ்ந்த சாதி இந்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. 1950கள், 60களில் ஆலயப்பிரவேசப் போராட்டங்கள் யாழ்ப்பாணத்தில் எழுச்சி பெற்றன. 1956 சூலை 9 இல் நல்லூர் கந்தசுவாமி கோவில், வண்ணார்பண்ணைச் சிவன் கோவில், பெருமாள் கோவில் போன்ற பல புகழ்பெற்ற கோவில்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்டன. 1968 ஆம் ஆண்டில் பல நூற்றுக்கணக்கான தாழ்ந்த சாதி இந்துக்கள் (குறிப்பாக பள்ளர், நளவர் போன்றவர்கள்) மாவிட்டபுரம் கந்தசுவாமி கோவிலின் முன்பாக சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்தனர். இப்போராட்டத்தை வெள்ளாளர் எனப்படும் உயர்சாதி இந்துகள் செ. சுந்தரலிங்கம் தலைமையில் வன்முறைகள் மூலம் எதிர்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 'உயர்குடிகளின்' எதிர்ப்புக்குத் தலைமை வகித்த செ சுந்தரலிங்கத்திற்கு "சமூக ஏற்றத்தாழ்வு ஒழிப்புச் சட்டத்தின்" கீழ் குற்றவாளியாக அறிவித்து ரூ. 50 தண்டம் மட்டுமே அறிவித்தது. இந்த செல்லப்பா சுந்தரலிங்கம் (1895 ஆகத்து 19 - 1985 பெப்ரவரி 11) இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், கல்விமானும், வழக்கறிஞரும் ஆவார். இவர் நாடாளுமன்ற உறுப்பினராகவும், அமைச்சரவை உறுப்பினராகவும் இருந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல 1931 இல் இலங்கைக்கு சர்வஜன வாக்குரிமை வழங்கப்பட்டபோது, ராமநாதன் எல்லா மக்களுக்கு வாக்குரிமை வழங்குவதை எதிர்த்து வேளாளர் சாதி ஆண்களுக்கு மட்டுமே வாக்குரிமையை இடஒதுக்கீடு செய்ய வலியுறுத்தினார் என்பது மற்றும் ஒரு வெட்கத்துக்கு உரிய தமிழ் அரசியல் வாதிகளின் செயலாகும். இது தான் அன்றைய நிலைப்பாடு.
 
அழகிய யாழ்ப்பாண நகரத்தில், முருகன் மற்றும் எழிலரசி என்ற இரண்டு இளம் மாணவர்கள் முறையே யாழ் மத்திய கல்லூரியிலும் வேம்படி மகளீர் கல்லூரியிலும் உயர் வகுப்பில் படித்து வந்தார்கள். ஒரு பிரகாசமான மற்றும் உறுதியான இளைஞரான முருகன் ஒரு தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்தவர். அவர் ஒரு வெற்றிகரமான பொறியியலாளராக வேண்டும் என்ற கனவுகளுடன் தனது புத்திசாலித்தனத்திற்கும் வசீகரத்திற்கும் பெயர் பெற்றவர். அவரது குடும்பம் தாழ்த்தப்பட்ட சாதி என்று தம்மை மற்றவர்கள் பாகுபடுத்தி பிரித்து தள்ளி வைத்ததால், எப்படியும் கல்வி மூலம் ஒரு சிறந்த எதிர்காலத்திற்கான பாதையை அமைக்க வேண்டும் என்ற நம்பிக்கையை அவன் தனக்குள் விதைத்திருந்தான். அதேநேரம் எழிலரசி ஒரு நல்ல குடும்பத்தைச் சேர்ந்த படித்த, உயர் சாதிப் பெண். அவர் வழக்கறிஞர் ஆக ஆசைப்பட்ட ஒரு சிறந்த மாணவி ஆகும். அது மட்டும் அல்ல, அங்கு கடுமையாக இன்னும் இருக்கும் சாதி அடிப்படையிலான பாகுபாடும் மற்றும் பிரச்சினைகளில் உள்ள உண்மைகளை அறிய அவள் குடும்பத்திற்குள் அவளுக்கு வாய்ப்பு இருக்கவில்லை, அவளுடைய வளர்ப்பு சலுகை மற்றும் வசதிகளால் அந்த அனுபவமும் அவளுக்கு கிடைக்கவில்லை.
 
சாதி அடிப்படையிலான பாகுபாடு யாழ்ப்பாணத்தில் வெளிப்படையாக தெரியாவிட்டாலும், கூலித்தொழிலாளிகளாக இருந்த தனது பெற்றோர்கள் மனிதர்களை விட குறைவாக நடத்தப்படுவதை கண்டவன் என்பதால், அது அங்கு ஆழமாக வேரூன்றி இருக்கிறது என்பதை உணர்ந்தான். உயர்சாதிக் குடும்பங்கள் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதி, அதிகாரத்தின் மீது இரும்புப் பிடியை வைத்திருந்தனர், அதே நேரத்தில் முருகனின் குடும்பத்தைப் போன்றவர்கள் அற்ப இருப்பை வெளிப்படுத்தவே போராடவேண்டி இருந்தது. சிறு வயதிலிருந்தே, முருகன் சாதிக் கொடுமையின் கடுமையான யதார்த்தங்களை, சாதி அடிப்படையிலான பாகுபாட்டையும் அதனால் தனக்கும் தன்னைப் போன்ற இளைஞர்களுக்கும் ஏற்படும் பிரச்சினைகளை கண்டவன், அனுபவித்தவன். எனவே சாதிக் கொடுமையின் சங்கிலியிலிருந்து விடுபட அறிவுதான் முக்கியம் என்று அவன் சிறுவயதில் இருந்தே நம்பினான். அது மட்டும் அல்ல, அந்த அறிவால் பெரும், பெரிய பதவி கூட ஒரு அந்தஸ்த்தை கொடுத்து, தான் கண்ட அநியாயங்களுக்கு எதிராக குரல் கொடுக்க உதவும் என்பது அவனின் திட நம்பிக்கை. அவன் தனது சாதியைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களின் அவலநிலையில் அனுதாபம் கொண்ட மற்றவர்களின், ஒத்த எண்ணம் கொண்ட யாழ்ப்பாண வாசிகளின், குறிப்பாக சக மாணவர்களின் அனுதாபங்களை திரட்டுவதிலும் ஆர்வமாக இருந்தான். எனினும் இதனால் தனக்கோ அல்லது தன் குடும்பத்துக்கு என்ன நடக்கும் என்பதை அவன் அப்பொழுது சிந்திக்கவில்லை.
 
யாழ் மத்திய கல்லூரி மற்றும் வேம்படி மகளீர் கல்லூரி இணைந்து நடத்திய உயர் வகுப்பு மாணவர்களின் பட்டி மன்றம் ஒன்று ஒரு நாள் நடந்தது. அதில் எழிலரசி பங்குபற்றி, தன் வாதமாக கூலி வேலை செய்து பிழைக்கும், பள்ளர் சமூகத்தில் பிறந்த திருநாளைப் போவார் நாயனார் என்ற நந்தனாருக்கு ஒரு ஒருநாள் அருகேயுள்ள திருப்புன்கூருக்குச் சென்று பெருமானை நேரில் கும்பிடவேண்டுமென்ற ஆசை பெருகியது. அன்பரின் ஆசை தீர்ப்பதற்கு பெருமான் நந்தியை விலகுமாறு செய்து நேரே தரிசனம் அளித்து எல்லோரும் சமம் என நிறுவினார் என்று பெருமையாக வாதிட்டார். முருகனுக்கு சிரிப்பு தான் வந்தது, தன் முறை வர, இவரை [எழிலரசியைச்] சொல்லி ஒரு குற்றமும் இல்லை. அவளுக்கு, அவள் வளர்ந்த முறையில் இவ்வளவு தான் தெரியும். என் அனுதாபம் அவளுக்கு என்று தொடங்கி, நந்தனார் தாழ்த்தப்பட்ட குலத்தவர் என்பதால், அவரை சிலர் கோவிலுக்குள் சென்று வழிபட அனுமதிக்க வில்லை. ஆகையால் கோவில் வாசலில் இருந்தபடியே, எட்டி எட்டி உள்ளே பார்த்தார். இறைவனின் உருவம் தெரியவில்லை. கருவறைக்கு முன்பாக இருந்த பெரிய நந்தி, மூலவரை மறைத்துக் கொண்டிருந்தது. எனவே மனவருத்தத்துடன் இறைவனை மனமுருகி பாடினார். ஆனால் அந்த இறைவன் கூட உள்ளே வா என்று கூப்பிடவில்லை?? என்றாலும் நந்தியை, சற்றே விலகி இருக்கும்படி பணித்து, வெளியில் இருந்தே தன்னை பார்த்து வழிபடு என்றே பணித்தார் என்பது எழிலரசிக்கு எங்கே விளங்கப் போகிறது என்று அவளை அவன் உற்றுப்பார்த்தான். 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!' கம்பனின் பாடல் அங்கு இருவருக்கும் தெரியாமல் அரங்கேறியது. ஆமாம் அவர்களுடைய கண்கள் ஒன்றை ஒன்று கவ்வி உண்டன, இருவரும் நிலை தடுமாறினர், இருவருடைய உணர்வுகளும் ஒன்றாகிவிட்டன. அவன் தன்னை சமாளித்தபடியே,
 
"நந்தியை விலத்தி-ஒரு அருள்
காட்டியவனை-எனக்குப் புரியவில்லை?
மந்தியின் துணைக்காக-ஒரு வாலியை
கொன்றவனை-எனக்குப் புரியவில்லை?"
"வருணத்தை காப்பாற்ற-ஒரு பக்தனை
நீ அழைக்காதது-எரிச்சலை ஊட்டுகிறது!
கருணைக்கு அகலிகை-ஒரு சீதைக்கு
நீ தீக்குளிப்பு-எரிச்சலை ஊட்டுகிறது!"
 
என்று சொல்லி முடித்தான். எங்கும் கைதட்டல். தன்னை அறியாமலே, எதிர் வரிசையில் இருந்தாலும், எடுப்பான தோற்றமும், வசீகரக் கவர்ச்சியும், கூறிய ஞானமும் கொண்ட எழிலரசி, முருகனிடம் சென்று வாழ்த்து கூறினாள். என் தாயும் உன் தாயும் யார் யாரோ? - உன்னை உயர்ந்தவள் என்கிறார்கள், என்னை தாழ்ந்தவன் என்கிறார்கள். என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானர்கள்? - தமிழ், தமிழன் என்ற உணர்வில் நாம் உறவினர்களே. எந்த உறவின் வழியாக நானும் நீயும் அறிந்துகொண்டோம்? சக மாணவன், மாணவி என்பதே எம் உறவு. செம்மண் நிலத்தில் பெய்த மழைநீர் போல அன்புடைய நம் நெஞ்சம் தாமாக ஒன்றுபட்டனவே! இருவர் வாய்களும் தமக்குள்ள முணுமுணுத்தன.
 
"யாயும் ஞாயும் யாரா கியரோ
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்
யானும் நீயும் எவ்வழி யறிதும்
செம்புலப் பெயனீர் போல
அன்புடை நெஞ்சம் தாங்கலந் தனவே."
 
முருகன் மற்றும் எழிலரசி இருவரும் தங்கள் காதலை வெளிப்படையாக சொல்லக்கூடிய சூழல் அன்று இருக்கவில்லை. எனினும் இருவரும் பேராதனை பல்கலைக்கழகத்திற்கு சென்றதும், அவர்களுக்கு வெவ்வேறு பின்னணிகள் இருந்தபோதிலும், அவர்கள் சமூக நீதிக்கான பகிரப்பட்ட ஆர்வத்தில் ஆழமான தொடர்பைக் ஏற்படுத்திய காரணத்தாலும், அன்று மேடையில் சந்தித்த கண்கள் அவர்களை விரைவில் பிரிக்க முடியாதவர்களாக மாற்றியது.
 
அவர்களின் அன்பு, உண்மையான மற்றும் தூய்மையானது, எல்லா முரண்பாடுகளுக்கும் எதிராக மலர்ந்தது. இருப்பினும், அவர்களின் உறவின் கிசுகிசுக்கள் மெல்ல மெல்ல யாழ்ப்பாணத்துக்கும் பரவியது. அது எழிலரசியின் குடும்பம் மற்றும் அவர்களின் உயர்சாதி சமூகத்தினரிடையே வெறுப்பைக் கிளறத் தொடங்கியது. அதே போல முருகன் குடும்பத்தினரும், உயர் சமூகத்தில் இருந்து வரக்கூடிய தொல்லைகள் குறித்து கவலையடைந்தனர். அவர்களின் காதல் ஒரு அச்சுறுத்தலுக்கு வந்தது அவர்களுக்கு சவால் செய்தது.
 
சமூக அழுத்தம் மற்றும் ஆழமாக வேரூன்றிய சாதி வெறியால் எழிலரசியின் குடும்பம் அவர்களின் காதல் உறவை கடுமையாக எதிர்க்க தொடங்கியது. எழிலரசியை உடனடியாக தொடர்பை முறித்துக் கொள்ளுமாறு கோரினர். அது மட்டும் அல்ல, அவளுக்கு உடனடியாக தங்கள் சமூகத்துக்குள் வரன் பார்க்க தொடங்கியதுடன், தங்கள் பணம், சாதி செல்வாக்கால் முருகன் குடும்பத்துக்கு தொல்லைகளும் கொடுக்கத் தொடங்கினர்.
இருவர் குடும்பத்துக்குள்ளும் பதற்றம் அதிகரித்ததால், அவர்களுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. இருவரும் சமூக பாகுபாடு இல்லாமல் தங்கள் காதல் செழித்து வளரக்கூடிய வெளிநாட்டு உலகம் ஒன்றில் அடைக்கலம் தேடி ஓட முடிவு செய்தனர். என்றாலும், அதற்கிடையில் முருகனின் குடும்பத்தை அவர்களின் குடிசையில் இருந்து அடித்து துரத்த எழிலரசியின் பெற்றோர்களின் சதி முருகனுக்கு தெரிய வந்தது. அவனுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. அவனுக்கு இப்ப பெற்றோர்கள், அவனின் தங்கை தம்பி முக்கியம்.
 
அவன் எழிலரசியுடன், அவளின் பெற்றோர் பார்க்கும் இளைஞனை திருமணம் செய்து வாழும் படி புத்திமதி கூறினான். தான் அவளின் எண்ணத்துடனே, சாதி அடிப்படையிலான பாகுபாடுகளை ஒழிக்க, சாதிக் கொடுமை சம்பவங்களை ஆவணப்படுத்தி, அந்தந்த அதிகாரிகளிடமும் புகார் செய்து, பரந்தபட்ட இயக்கம் ஒன்றை நிறுவி, அதற்கு தலைமை தங்கி இயங்கப் போவதாக கூறினான். அவள் எதுவும் பேசவில்லை. மௌனமாக இருந்துவிட்டாள். அது சம்மதத்தின் அறிகுறியா இல்லை கோபமா அவனுக்கு புரியவில்லை.
 
முருகனின் முயற்சிகள் கவனிக்கப்படாமல் போகவில்லை, அதிகாரத்தின் மீதான தங்கள் பிடியை இழந்துவிடுமோ என்று பயந்த உயர்சாதிக் குடும்பங்களுக்கிடையில் அவன் விரைவில் எதிரிகளை உருவாக்கினான். அவனுக்கு எதிராக அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன, சில சமயங்களில், அவனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டது. ஆனால் முருகன் நீதி மற்றும் சமத்துவத்திற்கான தனது உறுதிப்பாட்டில் அசைக்காமல் உறுதியாக நின்றான். ஆனால் அதே நேரத்தில் எழிலரசி, பெற்றோர்கள் பார்க்கும் எந்த வரன்களையும் சம்மதிக்காமல் பிடிவாதமாக இருந்தாள். மணந்தால் முருகன் இல்லையேல் சாதல் - அது தான் அவளின் முடிவாகிற்று.
 
ஒரு நாள் எழிலரசி முருகனை சந்தித்து தன் இறுதி முடிவை கூறினாள், தன்னால் இனிமேலும், பெற்றோரின் கட்டாய வேண்டுதலை தட்டிக் கழித்துக்கொண்டு வாழ முடியாது. தான் தற்கொலை செய்யப் போவதாக கூறிவிட்டு, உடனடியாக அவனை திரும்பி பார்க்காமலேயே புறப்பட்டாள். முருகனுக்கு இனிமேலும் அவளுக்கு ஆறுதல் கூறக் கூடிய நிலை இல்லை என்று புரிந்தான். அவளின் கையை ஓடிப்போய் பிடித்து, ஒரு முத்தம் கொடுத்தான். தானும் உன்னுடன் வருகிறேன். இருவரும் சாவில் இணைவோம். அங்கு சாதி இல்லை. அவள் அவனை பார்த்தாள். மீண்டும் 'அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்!'. அது தான் அவர்களின் கடைசிப் பார்வை.
 
"வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே"
 
பிறப்பால் நான்கு பிரிவுகள் உண்டு. அவற்றில் கீழ்க்குலத்தில் பிறந்த ஒருவன் கற்றிருந்தால் மேல்குலத்தில் பிறந்தவனும் அவனிடம் அடக்கமாவான் என்ற ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியனின் புறநானுறு 183, முருகன் மற்றும் எழிலரசி வாழ்வில் அர்த்தமற்று போயிற்று. இரு உடல்களும் ஒன்றாக ஒரு மரக்கிளையில் தொங்கிக்கொண்டு இருந்தன.
 
‘நாடகத்தில் காவியத்தில் காதல் என்றால்
நாட்டினர் தாம் வியப்பெய்தி நன்றாம் என்பார்
ஊடகத்தே வீட்டிலுள்ளே கிணற்றோரத்தே
ஊரினிலே காதல் என்றால் உறுமுகின்றார்
பாடை கட்டி அதைக் கொல்ல வழி செய்கின்றார்.‘
 
என்று பாரதி சொல்வது போல, இங்கே சாதி என்ற வெறி இருவரையும் பாடை கட்டி கொண்டு செல்ல வழிவகுத்து விட்டது.
 
நன்றி
 
[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,
அத்தியடி, யாழ்ப்பாணம்]
404322886_10224342118403350_6274812270186988432_n.jpg?_nc_cat=105&ccb=1-7&_nc_sid=aa7b47&_nc_ohc=RYzD35_XAW4Q7kNvgFcrT03&_nc_zt=23&_nc_ht=scontent-man2-1.xx&_nc_gid=A2WEFjYSRuTTrCN9CY7kUEd&oh=00_AYCZdcZnp4znPU9NHdTkJC7MYnHwjc3rD99Q876d6OMDNA&oe=677B2281
 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.