Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் நிலத்தின் தொன்மையும், ஸ்டாலினின் அரசியல் அறைகூவலும்!

Jan 29, 2025
Ironage-tamilnadu.jpg

பாலசுப்ரமணியம் முத்துசாமி

அண்மையில் தமிழ்நாடு தொல்லியல் துறை, தமிழ்நாட்டில் மேற்கொண்ட தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில், தமிழ்நாட்டில் இரும்பு கால நாகரீகம் என்பது 5000 ஆண்டுகளுக்கு முந்தய ஒன்று என்னும் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டது. சிவகளை, மயிலாடும்பாறை, ஆதிச்ச நல்லூர் முதலிய இடங்களில் தொல்லியல் ஆய்வுகளின் வழியே கிடைத்த பொருட்கள், மூன்று முக்கியமான ஆய்வுக் கூடங்களுக்கு அனுப்பப்பட்டு, அவற்றின் காலம் அறிவியற்பூர்வமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. Antiquity of the Tamil Land

Antiquity of the Tamil Land Dilip Kumar Chakravarthi திலீப் குமார் சக்ரவர்த்தி

இந்த ஆய்வு முடிவுகள் ஒரு  புத்தகமாக அண்மையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களால் வெளியிடப்பட்டது. அந்தப் புத்தகத்தைப் பெற்றுக் கொண்ட கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தின் மதிப்பு மிகு பேராசிரியர் (Professor Emeritus), திலீப் குமார் சக்ரவர்த்தி,  ‘இந்தப் புத்தகம், ஒரு இந்தியனாகவும், தொல்லியல் ஆய்வாளனாகவும் என்னை உணர்ச்சி வசப்பட வைக்கிறது. இரும்பு உருக்கு தொழில்நுட்பம், கி.மு 3500 ஆண்டுகளுக்கு முன்பே இருந்தது என்பதை தமிழ்நாட்டின் தொல்லியல் துறை கண்டுபிடித்துள்ளது. இது இந்தியாவுக்கு மட்டுமல்ல, உலகுக்கே முக்கியமான ஒன்றாகும்’, எனக் கூறியுள்ளார்.

இது அறிவியல்!   இன்றுள்ள சான்றுகளின் படி!

இந்த புத்தகத்தை வெளியிட்ட தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், ‘இரும்பு நாகரீகம் தமிழ் மண்ணில் இருந்து தோன்றியது’, எனச் சொல்லியுள்ளார்.  ‘நமது பழங்கால இலக்கியங்களில் சொல்லப்பட்ட நம் பண்பாட்டின் தொன்மை இன்று நிரூபிக்கப்பட்ட வரலாறாக மாறியுள்ளது. இது நம் திராவிட மாதிரி அரசின் முயற்சிகளுக்கு கிடைத்த பலன்’, என டிவிட்டர் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு இனிமேலும் தமிழ்நாட்டைப் புறக்கணிக்க முடியாது. சொல்லப்போனால், இந்தியாவின் வரலாறு, இங்கிருந்துதான் தொடங்கப்பட வேண்டும்’, என்றொரு அரசியல் அறைகூவலை முன்வைத்திருக்கிறார்.

இது அரசியல் நிலைப்பாடு (Political Rhetoric)!

சரி, ஸ்டாலின் இதில் ஏன் அரசியல் செய்கிறார்? அது சரிதானா?

மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற சிந்து சமவெளி நாகரிக தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பதற்கு 50 ஆண்டுகள் முன்பேயே ஆதிச்சநல்லூர் கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது. ஆனால், சிந்து வெளி தொல்லியல் தளங்களின் பிரம்மாண்டம் காரணமாக அவை முன் சென்றன. விடுதலை பெற்ற பின்னர், தில்லியை மையமாகக் கொண்ட அரசியல் அமைப்பில் ஆதிச்சநல்லூர்கள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டன.  

கீழடி என்னும் ஒரு இடத்தில் ஆய்வு செய்யவே பெரும் போராட்டம் நடத்த வேண்டி இருந்தது. ஆய்வு முடிவுகள் வெளியிடப்படாமல், ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் இடமாற்றம் செய்யப்பட்டார். பின்னர், தமிழ்நாட்டின் தொல்லியல் துறை முன்னின்று கீழடி மற்றும் பல இடங்களில் தொல்லியல் ஆய்வுகளை செய்ய வேண்டி வந்தது.

விடுதலைக்குப் பின்னர், கங்கைச் சமவெளியின் வரலாறே இந்திய வரலாறாக  முக்கியத்துவம் பெற்றது. இந்திய வரலாற்று அறிஞர்களில் பலர், மார்க்சிய வரலாற்றுப் பின்புலத்தில் இருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களாலும், பிராந்திய மனச்சாய்வை (Regional Bias) முற்றிலுமாக ஒதுக்க முடியவில்லை.

அதன் அரசியல் விளைவுகள் பாரதூரமானவை. இந்தியாவில் பள்ளிகளில் தெற்கின் வரலாறு ஒரு சிறு குறிப்பாகவே இருந்து வருகிறது. பள்ளி மாணவர்களுக்கு மாமன்னர் அசோகர் தெரிந்த அளவுக்கு, இராஜராஜ  சோழன் தெரிவதில்லை.  மௌரிய வம்சமும் குப்த வம்சமும், முகலாயர்களும் தெரிந்த அளவுக்கு அஸ்ஸாம் மாநிலத்தின் அகோம் வம்சம் தெரிவதில்லை.

Antiquity of the Tamil Land

இந்திய வரலாற்றில் மிகப் பெரும் கப்பல் படையை உருவாக்கி, இலங்கை, மலேஷியா, பர்மா, சுமத்ரா போன்ற ஆசிய நாடுகளை போரில் வென்று மேலாதிக்கம் செய்தவர்கள்  சோழர்கள். ஒப்பீட்டளவில் சிவாஜியிடம் இருந்தது ஒரு சிறு கடற்படையே. ஆனால், இந்திய கடற்  படையின் சின்னத்தில் இடம் பெற்றிருப்பது  மராத்திய மன்னர் சிவாஜியின் எட்டுமுகம் கொண்ட சின்னத்தின் வடிவம். இந்திய கடற்படையின் பயிற்சி நிலையம் மராத்திய மாநிலம் லோனாவ்லாவில் அமைந்துள்ளது. அதன் பெயர் ஐஎன்எஸ் சிவாஜி. இந்திய கடற்படையின் மேற்கு தலைமையகத்தின் பெயர் ஐஎன்எஸ் ஆங்க்ரே. இது மராத்திய கடற்படைத் தளபதி கனோஜி ஆங்க்ரேவின் பெயரால் அழைக்கப்படுகிறது.

உண்மையான வரலாற்றின் பின்னணியில் சின்னங்களும், பெயர்களும் வைக்கப்பட வேண்டுமெனில், இந்தியக் கடற்படையின் சின்னத்தில் புலிக்கொடி இடம் பெற்றிருக்க வேண்டும். கடற்படையின்  தலைமையகமே இராஜேந்திர சோழனின் பெயரால் அழைக்கப்பட வேண்டும். ஆனால், அது ஒரு போதும் நடவாது. அதன் காரணங்கள் எளிதானவை. இந்தியாவை ஆள்வது வட இந்திய  அரசியல் சக்தியும், மேற்கு இந்திய பண சக்தியும்.

விடுதலை பெற்ற இந்தியாவின் அரசியல் சட்டம் 1950 ல் நிறைவேற்றப்பட்டது. அரசியல் சட்டத்தின் முதல் பத்தியில்,, ‘இந்தியா என்பது மாநிலங்களின் ஒன்றியம்’, எனக்  குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதன் உண்மையான அர்த்தம் இந்தியா ஒரு கூட்டாட்சி நாடாக இருக்க வேண்டும் என்பதே.

ஆனால், அரசியல் தளத்தில் முதல் நாற்பது ஆண்டுகளில், இந்தியாவை ஆட்சி செய்தது கங்கைச் சமவெளி அரசியல் அதிகாரமே. உத்திரபிரதேச, உத்திராகண்ட், பீஹார் மாநிலங்களின் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 125. இந்திய அரசு மக்களவைத் தொகுதிகளில் நான்கில் ஒரு பங்கு. என்பதால் இந்த முக்கியத்துவம்.

அரசியல் அதிகாரத்தில், பிரதிநிதித்துவத்தில், கலாச்சாரத் தளத்தில் மத்திய வடமாநிலங்களைத் தாண்டி, இந்தியாவின் இதர பகுதிகளுக்கு சரியான  பிரதிநிதித்துவம்  ஒருபோதும் கிடைத்ததில்லை.

2004 தொடங்கி 2014 வரையிலான பத்தாண்டுகளில்தான் இந்தியாவின்  அரசியல் தளத்தில் கூட்டாட்சி என்னும் தத்துவம் ஓரளவு நிறைவேறியது. தென் மாநிலங்களுக்குப் போதுமான அளவு அரசியல் பிரதிநிதித்துவம் கிடைத்தது. ஆனால், 2014 இந்துத்துவ அரசியல் அலையில் மீண்டும் அரசியல் அதிகாரம் மையப்படுத்தப்பட்டு விட்டது. 2014 ஆண்டு பதவிக்கு வந்த பிரதமர் குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தாலும், தனது தொகுதியை கங்கைச் சமவெளிக்கு மாற்றிக் கொண்டார்.

அண்மைகாலத்தில்  வலதுசாரி சாய்வுகளின் காரணமாக, சிந்து சமவெளி நாகரீகத்தை, சரஸ்வதி நாகரீகம் என மடைமாற்றும் நடவடிக்கைகள் பெருமளவில் நடைபெறுவதை பார்க்க முடிகிறது. வேத நாகரீகமே இந்திய நாகரீகம் என யோகி ஆதித்யநாத் போன்ற அரசியல்வாதிகள் ஆதாரங்கள் இல்லாமல் பேசி வருகிறார்கள்.

Ironage-2.jpg

இந்தப் பின்புலத்தில்தான், தமிழ்நாட்டில் இரும்பு நாகரீகத்தின் காலம் கி.மு.3500 என தரவுகளின் அடிப்படையில்,  ஸ்டாலின் தன் அரசியல் அறைகூவலை முன் வைக்கிறார்.

இந்தி, இந்துத்துவா, வேத நாகரீகம் என தேசத்தையே ஒற்றைமயமாக்க இந்துத்துவ அரசியல் தரப்பு துடித்துக் கொண்டிருக்கிறது. அந்தக் கனவிற்கு தடையாக இருக்கும் பெரும்பாலான பிராந்திய அரசியல் காட்சிகளை அது ஒட்டி உறவாடியும், தேர்தல் களத்தில்  எதிர்கொண்டும்  அழித்து விட்டது.  தேசியவாத காங்கிரஸ் (பவார்), சிவசேனா, அகாலிதளம், ஜெகன் ரெட்டியின் கட்சி, பிஜு ஜனதா தளம் என பல உதாரணங்கள் கண் முன்னே உள்ளன.

இந்த அபாயகரமான ஒற்றை மயமாக்கலுக்கு எதிராக  வலுவான அரசியல், பண்பாட்டு நிலைகள் எழுவது முன்னெப்போதையும் விட இன்று  மிகவும் அவசியமாகின்றன.  இதைச் சாத்தியமாக்கும் நிலையில் உயிர்ப்புடன் இருப்பவை சில அரசியல் கட்சிகளே. அவற்றுள் முக்கியமானவை கேரள இடதுசாரிகள், திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக. 

2021 ல் ஆட்சிக்கு வந்த பின்னர், அரசியல், பண்பாட்டு தளங்களில் மிக முக்கியமான முன்னெடுப்புகளை ஸ்டாலின்  செய்து வருகிறார். மாவட்டம் தோறும் புத்தக விழாக்கள், கல்லூரிகளில் இலக்கிய உரைகள், வருடம் முழுக்க நடந்த வள்ளலாரின் 200 ஆவது ஆண்டுவிழாக் கொண்டாட்டம் போன்றவை மிக முக்கியமான முன்னெடுப்புகள். இவற்றுடன் திராவிட இயக்கங்களுக்கே  உரிய மக்கள்நலக் கொள்கைத் தளத்தில், பள்ளிகளில் காலை உணவு, பெண்களுக்கு இலவச பஸ் பயணம், பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய், கல்லூரியில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் போன்ற புதிய  திட்டங்களையும் நிறைவேற்றியுள்ளார்.

இவற்றுக்கெல்லாம் சிகரம் வைத்தார் போல, தமிழ்நாடு தொல்லியல் துறையின் ஆய்வுகளின் வழியே, இந்தியாவின் வரலாற்றை தமிழகத்தில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்னும் அம்பை எய்திருக்கிறார். எதிர்தரப்பில், நரேந்திர மோதியின் மௌனமே, எய்யப்பட்ட அம்பின் தாக்கத்தைச் சொல்கிறது.

இந்த அறைகூவலின் மூலம் தமிழ்நாட்டின் தொன்மைக்கு மட்டுமல்லாமல். இந்திய நாட்டின் பன்மைத்துவத்துக்கும் ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கிறார் ஸ்டாலின்.

இந்த அறைகூவலின் வழியே சாதிக்கப் போவதென்ன எனப் பலரும் கேட்பதை புரிந்து கொள்ள முடிகிறது. வருங்காலத்தை கணிப்பது கடினம். எனினும், வெற்றி தோல்வி என்னும் நிலைகளைத் தாண்டி, இந்தியாவின் பன்மைத்துவத்துக்கான குரல்கள் எழுவது மிகவும் முக்கியம். இதைத் தமிழ்நாடும் செய்யாவிட்டால், வேறு யாரும் செய்யப் போவதில்லை. விடுதலை பெற்ற காலத்தில், இந்தியை எல்லா மாநிலங்களும் ஏற்றுக் கொண்ட போது, தமிழ்நாடு மட்டும் எதிர்த்தது. இன்று அதன் முக்கியத்துவத்தை பல மாநிலங்களும் உணர்ந்திருக்கிறார்கள். இரும்பு நாகரிக ஆய்வுகளை முன்வைத்து ஸ்டாலின் எழுப்பியுள்ள அரசியல் அறைகூவலும் அப்படி முக்கியமான ஒன்றே!

கட்டுரையாளார் குறிப்பு:

பாலசுப்ரமணியம் முத்துசாமி 

Balasubramaniam Muthusamy Antiquity of the Tamil Land

பாலசுப்ரமணியம் முத்துசாமி, தனியார் நிறுவனம் ஒன்றின் தலைமைப் பொறுப்பில் தான்சானியாவில் பணியாற்றுகிறார். ஈரோடு பகுதி கிராமத்தைப் பின்னணியாகக் கொண்ட இவர், வேளாண்மையும், ஊரக மேலாண்மையும் பயின்றவர். காந்தியப் பொருளியல், வணிகம், வேளாண்மை முதலிய தளங்களில் எழுதிவருபவர். காந்தியை இன்றைய தலைமுறைக்குக் கொண்டுசெல்லும், ‘இன்றைய காந்திகள்’ நூலின் ஆசிரியர்.
 

https://minnambalam.com/political-news/antiquity-of-the-tamil-land-and-stalins-political-challenge/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.