Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO

கட்டுரை தகவல்
  • எழுதியவர், கார்த்திக் கிருஷ்ணா
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

சமீபத்தில் வெளியான 'பேட் கேர்ள்' திரைப்படத்தின் டீசர் பற்றி சமூக ஊடகங்களில் பெரிய விவாதம் எழுந்துள்ளது. ஒரு பக்கம், ஆண்களின் உலகையே காட்டி வந்த தமிழ் சினிமாவில் ஒரு பெண் இயக்குநரின் தனித்துவமான குரலாக இந்த டீசர் பாராட்டப்பட்டு வருகிறது.

இன்னொரு பக்கம், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த பெண்ணாகக் கதையின் நாயகியைக் காட்டியதற்கும், நாயகி குடிப்பது, புகைப் பிடிப்பது போன்ற காட்சிகளுக்கும் எதிர்மறை கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்துள்ளன.

இயக்குநர் வெற்றிமாறன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ளது 'பேட் கேர்ள்'. பாலிவுட் இயக்குநர் மற்றும் நடிகர் அனுராக் கஷ்யப் இந்தப் படத்தை வெற்றிமாறனுடன் சேர்ந்து வழங்கவுள்ளார்.

இந்தப் படத்தின் டீசர் அண்மையில் வெளியிடப்பட்டது. ஜனவரி 30 அன்று ஆரம்பமாகவுள்ள சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில், டைகர் போட்டிப் பிரிவில் இது திரையிடப்படவுள்ளது.

அஞ்சலி சிவராமன், ஷாந்தி ப்ரியா, ஹ்ரிது ஹரூன், டிஜே அருணாச்சலம் உள்ளிட்டோர் நடித்திருக்கும் இந்தப் படத்திற்கு ப்ரீதா ஜெயராமன், ஜகதீஷ் ரவி, ப்ரின்ஸ் ஆண்டர்சன் உள்ளிட்டோர் ஒளிப்பதிவு செய்துள்ளனர்.

பிரபல பாலிவுட் இசையமைப்பாளர் அமித் திரிவேதி இந்தப் படத்தின் மூலம் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.

பேட் கேர்ள் - கதை என்ன?

"பள்ளி காலத்திலிருந்து கல்லூரி வரையிலும், பிறகு வெளி உலகிலும், ரம்யாவின் கனவு, தனக்கான கச்சிதமான ஓர் ஆணைத் தேடுவதே.

சமூக நெறிகள், கண்டிப்பான பெற்றோர், நிறைவேறாத காதல், அவளது சொந்த மனதின் கட்டுப்பாடில்லாத குழப்பம் ஆகியவற்றால் அந்தக் கனவு தொடர்ந்து தடைபடுகிறது."

"இதைக் குறும்பும் நகைச்சுவையும் கலந்த கதைக்களத்தில் வர்ஷா பரத் எடுத்துள்ள படமே பேட் கேர்ள்" என்று இந்தப் படத்துக்கான அதிகாரபூர்வ கதைச் சுருக்கமாக ராட்டர்டாம் விழாவுக்கான நிகழ்ச்சி நிரலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டீசரில் சர்ச்சைக் காட்சிகளா?

பதின்ம வயது ஆண்களின் ஆசைகளை, தவறுகளைச் சொல்லும் படங்கள் தமிழில் வந்திருக்கின்றன. ஆனால் ஒரு பதின்ம வயதுப் பெண்ணின் வாழ்க்கையைச் சொல்லும் படங்கள் தமிழில் மிகச் சொற்பம். முக்கியமாக, ஒரு பெண்ணைப் பற்றி பெண்களே எடுத்திருக்கும் திரைப்படப் பதிவுகள் தமிழில் குறைவே. அந்த வகையில் பேட் கேர்ள் டீசர், புதிய களமாக உள்ளது.

இந்த டீசரில் ரம்யா என்ற கதாபாத்திரம், தனக்கான ஆண் நண்பனைத் தேடி அலைவது, பள்ளியில் தவறு செய்து மாட்டிக் கொள்வது, பெற்றோரின் கண்டிப்பை எதிர்ப்பது, தன் மகிழ்ச்சிக்கு குறுக்கே வந்ததால் 'இனி தன் இஷ்டம் போலத்தான் நடப்பேன், இல்லையென்றால் தற்கொலை செய்து கொள்வேன்' என்று அவள் அம்மாவை மிரட்டுவது, குடிப்பது, புகைப் பிடிப்பது, பல ஆண்களுடன் உறவில் இருப்பது எனக் காட்சிகள் வரிசை கட்டுகின்றன.

ஒரு பக்கம் இது யாரும் எதிர்பார்க்காத அதிரடியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் இந்தக் காட்சிகள், அந்த டீசரின் யூட்யூப் பக்கத்தின் கருத்துப் பகிர்வு, ட்விட்டர், ரெட்டிட் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் மிகவும் வலுவான விவாதத்தை எழுப்பியுள்ளது.

சமூக ஊடகங்களில் நடந்த விவாதம்

பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO

வர்ஷா என்ன மாதிரியான படத்தைத் தரப் போகிறார் என்று ஆர்வத்துடன் எதிர்நோக்குவதாகவும், பெண்களின் கதைகளை பெண்களே கூறும் ஒரு படம் என்பதால், கண்டிப்பாக திரையரங்கில் சென்று பார்க்கப் போவதாகவும் ஒரு ரசிகை ட்வீட் செய்துள்ளார்.

"இறந்துபோன பெண் கதாபாத்திரத்தைக்கூட புறநிலைப்படுத்துவார்கள், பெண்களுக்கு, திருநங்கைகளுக்கு, தன்பால் ஈர்ப்பாளர்க்கு எதிரான நகைச்சுவையை ரசிப்பார்கள், பாலியல் வன்புணர்வு தொடர்பான நகைச்சுவைகளை எளிதாகக் கடந்து செல்வார்கள், பெண்களை வெறும் ஆபாசமாக சித்தரிக்கும் படங்களைக் கொண்டாடுவார்கள், ஆனால் சுதந்திரமாக இருக்கும் ஒரு பெண் கதாபாத்திரத்தைப் பற்றி ஒரு பெண் எழுதினால் அங்கே தங்கள் எல்லைக் கோடுகளை வரைய ஆரம்பிப்பார்கள்" என்றும் ஒரு பெண் பயனர் ட்வீட் செய்துள்ளார்.

டீசர் வெளியீட்டு நிகழ்வில் பேசிய இயக்குநர் வர்ஷாவும் இந்தக் கருத்தை ஒத்தே பேசியிருந்தார். "இதைவிட மோசமான ஆண் கதாபாத்திரங்களையும், அவர்கள் போற்றப்படுவதையும் நாம் பார்த்திருக்கிறோம், அப்படியான படங்களைப் பார்த்து வளர்ந்தவள் நான். தனது இந்த கதாபாத்திரத்தைப் போற்ற வேண்டாம், ஆனால் ஏற்றுக்கொள்ளலாம் என்றே தாம் நினைப்பதாக" வர்ஷா குறிப்பிட்டிருந்தார்.

டீசர் சொல்லும் கதை கலாசாரத்துக்கு எதிராக இருப்பதாகவே இதை எதிர்க்கும் பலரது கருத்துகளின் அடிநாதம்.

டீசரின் முடிவில் இருக்கும் வசனத்தைக் குறிப்பிட்டுச் சிலர் விமர்சித்துள்ளனர்.

"இதே வார்த்தைகளை ஒரு ஆண் உச்சரித்தால், அவனை ஆணாதிக்கவாதி என்று பெரிய எதிர்ப்பு கிளம்பியிருக்கும், அத்தனை போலி பெண்ணியவாதிகளும் எதிர்ப்பு தெரிவித்து இருப்பார்கள். இது ஆண்களுக்கு எதிரான வெறுப்பை சகஜப்படுத்துகிறது" என்று சிலர் சமூக ஊடகங்களில் கருத்துகளைப் பகிர்ந்துள்ளனர்.

"தன் மகிழ்ச்சிக்கு குறுக்கே வந்தால் தற்கொலை செய்து கொள்வேன்" என்று கூறும் வசனத்திற்கும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

டீசரை பாராட்டியிருக்கும் சிலர் கூட, இந்த வசனம் பொறுப்பற்ற தன்மை கொண்டுள்ளதாகவும், இது போன்ற வசனங்கள் பள்ளி செல்பவர்களைப் பாதிக்கும் என்றும், கடுமையாக விமர்சித்துள்ளனர். மேலும் ரம்யா என்கிற கதாபாத்திரம் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராக சித்தரிக்கப்பட்டிருப்பதும் விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.

எதிர்ப்பிலும் அரசியலா?

பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO

முன்னதாக இயக்குநர் பா ரஞ்சித், பேட் கேர்ள் படத்தை, ''பேட் கேர்ள் படத்தைப் பார்க்க நேர்ந்தது. என்ன ஒரு தைரியமான, புத்துணர்வான திரைப்படம்" என்று பாராட்டியிருந்தார்.

மேலும், "இப்படி துணிச்சலான ஒரு கதையை ஆதரித்ததற்காகவே இயக்குநர் வெற்றிமாறனுக்கு அதிக பாராட்டுகள் போய்ச் சேர வேண்டும். ஒரு தனித்துவமான, புதிய அலை பாணியில், பெண்களின் சிக்கல்கள் குறித்தும், சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்தும் இந்தப் படம் வலிமையாகப் பதிவு செய்துள்ளது. வர்ஷாவுக்கு வாழ்த்துகள். அஞ்சலி சிவராமன் அட்டகாசமான ஒரு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இதைத் தவறவிடாதீர்கள்" என்று ட்வீட் செய்திருந்தார்.

விஜய் சேதுபதி இந்த டீசரை வெளியிட்டு ட்வீட் செய்திருந்ததால், அவரையும் தனிப்பட்ட முறையில் பலர் தாக்கிப் பேசி வருகின்றனர். அதே நேரம் அவருக்கான ஆதரவுப் பதிவுகளையும் ட்விட்டரில் பார்க்க முடிகிறது. மேலும், இந்தக் கதையின் நாயகியை பிராமண சமூகத்தைச் சேர்ந்தவராகக் காட்டியதால் வெற்றிமாறனையும், டீசருக்கு ஆதரவு தெரிவித்த பா.ரஞ்சித்தையும் தாக்கி பல ட்வீட்டுகள் பகிரப்பட்டுள்ளன.

இதைக் குறிப்பிட்டுள்ள சிலர், இந்தப் படத்தை இயக்கியிருக்கும் வர்ஷா ஒரு பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர், வழங்கியிருக்கும் அனுராக் காஷ்யப்பும் பிராமணரே, அப்படியிருக்க, இவர்கள் வெற்றிமாறனையும், ரஞ்சித்தையும் மட்டும் குறிவைத்து விமர்சிப்பதன் பின்னாலும் ஒரு அரசியல் உள்ளதாக கருத்து தெரிவித்துள்ளனர்.

பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,HALITHA/IG

இதுகுறித்து சில்லு கருப்பட்டி, ஏலேய் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் ஹலீதா ஷமீம் பிபிசி தமிழிடம் பேசியபோது, "இப்போது இந்த எதிர்வினைகளுக்கான காரணம், இந்தப் படத்தின் பின்னால் தயாரிப்பாளராக வெற்றிமாறன் இருப்பதும், பா ரஞ்சித், விஜய் சேதுபதி உள்ளிட்டோர் பாராட்டிப் பகிர்ந்திருப்பதும்தான். எனவே இந்த நபர்களைக் குறிவைத்தே இது நடக்கிறது" என்று நினைப்பதாகக் கூறினார்.

அதோடு, "நாயகியை பிராமணப் பெண்ணாகக் காட்டியது குறித்தும் விமர்சனம் எழுந்துள்ளது. ஆனால் ஒரு இயக்குநரால் அவர் வளர்ந்த சூழல், அவரை பாதித்த கதைகளைத்தான் எடுக்க முடியும். இதையெல்லாம் புரிந்து கொள்ளாமல் இப்படி எதிர்க்கும்போது, ஏற்கெனவே படைப்பாளிகளின் சித்தாந்தங்களுடன் ஒத்து வராத எதிர்ப்பாளர்கள் இதை ஒரு எளிய வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரிகிறது.

லேடி பேர்ட் போன்ற அவர்கள் நினைத்த கதைகளை வெளிநாடுகளில் பெண்கள் சுதந்திரமாக படமாக எடுப்பதைப் பார்க்கும்போது சந்தோஷமாக இருக்கும். அப்படி ஒரு படமாகத்தான் இந்த பேட் கேர்ளும் இருக்கும் என்று நான் நம்புகிறேன். தனிப்பட்ட அனுபவக் கதைகளைப் படமாக எடுக்கும்போது அது நல்ல திரைப்படமாக வரும். ஆனால் அதை இந்த அளவுக்குத் தீவிரமாக எதிர்க்கும்போது இயக்குநருக்கு என்ன மாதிரியான சுதந்திரம் இருக்கும்?" என்று தனது கவலையை வெளிப்படுத்தினார்.

பா.ரஞ்சித்தை நேரடியாக தாக்கிய மோகன் ஜி

பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,GRASS ROOT FILM CO

திரௌபதி, பகாசுரன் போன்ற படங்களை இயக்கிய மோகன் ஜியும், தனது ட்விட்டர் பக்கத்தில், பேட் கேர்ள் டீசரை விமர்சித்துள்ளார்.

இயக்குநர் பா ரஞ்சித்தின் பாராட்டு ட்வீட்டை மீண்டும் பகிர்ந்திருந்த மோகன், "இந்தக் கூட்டத்துக்கு பிராமணப் பெண்களின் தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றிக் கூறினால் தைரியமானதாக, புத்துணர்வு தருவதாக இருக்கும். வெற்றிமாறன், அனுராக் காஷ்யப் உள்ளிட்டோரிடம் இருந்து வேறென்ன எதிர்பார்க்க முடியும்?

வயதான பிராமண அப்பாவை, அம்மாவைத் திட்டுவது நவநாகரீகம் கிடையாது. நீங்கள் சார்ந்த சமூகப் பிரிவைச் சேர்ந்த பெண்களை, உங்கள் குடும்பத்தில் இருப்பவர்களை இப்படி சித்தரிக்க முயற்சி செய்ய்யுங்கள்" என்று நேரடியாகத் தாக்கிக் கருத்து தெரிவித்துள்ளார்.

"இயக்குநர் ரஞ்சித், ஏற்கெனவே ஒரு தலித் பெண் கதாபாத்திரத்தை வைத்து நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தைத் துணிச்சலாகத் தந்தவர்தான்" என்று மோகனின் கருத்துக்கு எதிர்ப்புகள் எழுகின்றன.

அதேவேளையில், "மோகன் சொன்னது சரியே, தமிழ் சினிமாவில் எப்போதுமே பிராமண சமூகத்தை இழிவுபடுத்துகின்றனர்" என்று அவரது கருத்துக்கு ஆதரவாக சிலர் சமூக ஊடகத்தில் அவருக்கு ஆதரவும் தெரிவித்திருந்தனர்.

இயக்குநர் வர்ஷாவின் பொறுப்புத் துறப்பு

பேட் கேர்ள் படத்தின் டீசர் வெளியீட்டு விழாவில் பேசியிருந்த இயக்குநர் வர்ஷா பரத், "இந்த கதாபாத்திரம் ஒரு நாயகி கிடையாது. அவளிடம் குறைகள் உள்ளன, அவள் தவறான சில முடிவுகளை எடுக்கிறாள், அதில் காயப்படுகிறாள். அவள் மனரீதியாகப் பாதிக்கப்பட்டவள். ஆனால் அவள் மற்றவர்களைக் காயப்படுத்துவதில்லை. எல்லோரையும் போலவே அவளும் வீழ்கிறாள், எழுகிறாள். அவள் வாழ வேண்டும் என்று முயல்கிறாள், போராடுகிறாள், வாழ்க்கையைக் கடக்க நினைக்கிறாள். அவள் நம் எல்லோரையும் போன்றவள்தான்" என்று நாயகி கதாபாத்திரம் குறித்துப் பேசியுள்ளார்.

பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,KALILUR RAHMAN/X

பெண்கள் மது அருந்தலாம், புகைப் பிடிக்கலாம் என்பதை இந்தப் படத்தில் தான் ஆதரிக்கவில்லை என்று அவர் அந்த விழாவில் பேசியிருந்தார். "இது ஒரு பெண்ணின் கதை. பெண்கள் மனிதர்களாக இருக்கலாம், எப்போதுமே புனிதர்களாக இருக்கத் தேவையில்லை என்பதே என் கருத்து. இந்தப் படம் ஓர் உரையாடலுக்கான ஆரம்பமே. இதுவொன்றும் சுய உதவிப் புத்தகம் அல்ல" என்றும் வர்ஷா தெரிவித்துள்ளார்.

"இந்த கதாபாத்திரத்தை ஒரு மாதிரியாக வைத்துக் கொள்ளவோ, பின்பற்றவோ வேண்டாம். பொதுவாகவே, நீங்கள் எப்படி வாழ வேண்டும் என்பதைச் சொல்ல, இயக்குநர்கள் சரியான நபர்கள் இல்லை என்றே நான் நினைக்கிறேன்" என்று அழுத்தமாகத் தெரிவித்திருந்தார்.

வெளியீட்டுக்கு முன் தொந்தளிப்பா?

தமிழில் வெளீயான படங்களில் சாதிய அடக்குமுறை, பெண்ணுரிமை, உண்மை சம்பவங்களின் அடிப்படையில் எடுக்கப்படும் அரசியல் கதைகள் எனப் பல்வேறு படங்கள் இதே போல சர்ச்சைக்கு ஆளாகியுள்ளன. வெளியீட்டுக்குப் பிறகு எதிர்ப்பைச் சம்பாதித்து, அதன் பிறகு படத்தில் காட்சிகளோ, வசனங்களோ நீக்கப்பட்ட சம்பவங்களும் நடந்துள்ளன.

பேட் கேர்ள் டீசர்: ஆக்கப்பூர்வமா அல்லது அத்துமீறலா? விவாதங்களை கிளப்புவது ஏன்?

பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI

இதுகுறித்து யூட்யூப் சினிமா விமர்சகரான ரஹ்மானிடம் கேட்டபோது, "எனக்கு இந்தப் படத்தின் டீசர் மிகப் புதியதாக இருந்தது. தமிழில் இப்படி ஒரு படம் எடுக்கப்படுவது நல்ல விஷயமே. இன்னொரு பக்கம் நவீன போராளிகளின் ஆர்வமிகுதியும் சில இடங்களில் தெரிந்தது. ஆனால் ஒரு படம் வெளியாகும் முன்னரே, வெறும் முன்னோட்டத்தை வைத்து அந்தப் படத்தின் மொத்த வடிவம் இதுதான், அது சொல்ல வரும் செய்தி இதுதான் என்று அனுமானம் செய்துகொண்டு எதிர்ப்பு தெரிவிப்பதும், கடுமையான வசவு நிறைந்த விமர்சனங்களை முன்வைப்பதும் எந்த ஒரு பண்பட்ட சமூகத்துக்குமே அழகல்ல," என்று தெரிவித்தார்.

இந்தப் படம் தொடர்பாகத் தனது சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள எழுத்தாளரும், ஆவணப்பட இயக்குநருமான லீனா மணிமேகலை, "ஒரு படத்தை பெண் எழுதி இயக்கியுள்ளார். அவருக்கான அங்கீகாரம் ஏதுமில்லை. ஆனால் அதைத் தயாரித்த ஆணின் பின்னால் அனைவரும் செல்கின்றனர். வெறுப்பவர்கள்கூட பெண் படைப்பாளிகளைக் கண்டுகொள்வதில்லை," என்று குறிப்பிட்டிருந்தார்.

சர்வதேச ராட்டர்டாம் திரைப்பட விழாவில் இந்தப் படம் திரையிடப்படவுள்ளது. அதன் பிறகு "இந்தப் படத்தின் பின்னணி குறித்து தெளிவாகத் தெரிய வரும். அப்போது ஆக்கப்பூர்வமான கருத்துகளை, விமர்சனங்களை முன்வைக்கலாம்," என்றார் ரஹ்மான்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.