"அமெரிக்க விமானங்களுக்கு அனுமதி மறுத்தோம்" - இலங்கை அதிபரின் கருத்தால் எழும் விவாதம் என்ன? பட மூலாதாரம்,PMD SRI LANKA படக்குறிப்பு,இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர் வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள் அமெரிக்க போர் விமானங்களை தரையிறக்க இலங்கை அனுமதி மறுத்ததாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (மார்ச் 20) வெளியிட்ட கருத்து, தற்போது சர்வதேச ரீதியில் பேசு பொருளாகியுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்களில், இலங்கை நடுநிலைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதை வெளிகொணரும் வகையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்த விடயத்தை நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இரானுக்கு சொந்தமான 3 கடற்படை கப்பல்கள் இலங்கைக்கு வருகைத் தர அனுமதி கோரிய நிலையில், அந்த விடயம் குறித்து ஆராய்ந்துக் கொண்டிருந்த தருணத்திலேயே அமெரிக்கா தமது போர் விமானங்களை இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியிருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அமெரிக்கா மற்றும் இரான் ஆகிய இரண்டு நாடுகளினாலும் விடுக்கப்பட்ட கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்திருந்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். இரானிய கப்பலுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை என சிலர் கேள்வி எழுப்பிய நிலையிலேயே அவர் இந்த பதிலை வழங்கியுள்ளார். இரானிய கப்பலுக்கு அனுமதி வழங்கியிருந்தால், தமது நாட்டின் ஒட்டு மொத்த நடுநிலைத் தன்மையும் சீர்குலைந்திருக்கும் எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம்,AP படக்குறிப்பு,இலங்கையை அண்மித்த கடல் பரப்பில் ஐஆர்ஐஎஸ் தேனா என்ற இரானிய கப்பல் தாக்குதலுக்கு இலக்காகியது. (கோப்புப் படம்) இந்த மோதல்கள் விவகாரத்தில் தமது நாடு நடுநிலைத் தன்மையுடன் செயற்பட்டு வருவதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். ''இந்தப் பிரச்னையில் எமது தொடர்ச்சியான நிலைப்பாடு நடுநிலைத்தன்மை என்பதாகும். எமது தாய் நாட்டின் கௌரவம், நீதி தொடர்பான பிரச்னை மற்றும் சர்வதேச அங்கீகாரம் ஆகியவற்றை எமது நடுநிலைத்தன்மையைப் பாதுகாப்பதன் மூலமே நாம் வென்றெடுக்க முடியும். எனவே, எத்தகைய அழுத்தங்கள் வந்தபோதிலும், இந்த நடுநிலைத்தன்மை கை நழுவிப் போக நாம் இடமளிக்க மாட்டோம்." என்றார். ஆனால் சில நாடாளுமன்ற உறுப்பினர்களும், சில தரப்பினரும் இலங்கை குறிப்பிட்ட ஒரு தரப்பிற்கு ஆதரவாகச் செயல்படுவதாகக் கூறும் குற்றச்சாட்டுக்களை குறிப்பிட்ட அவர், "அவை முற்றிலும் உண்மையற்றவை.'' எனவும் கூறினார். இரானின் கப்பல்கள் மற்றும் அமெரிக்காவின் போர் விமானங்கள் குறித்து ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இலங்கை நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் (மார்ச் 20) கருத்து வெளியிட்டிருந்தார். "ஒத்துழைப்பை மேம்படுத்தும் விஜயமாக 03 இரான் கடற்படைக் கப்பல்கள் மார்ச் 09 மற்றும் 13 ஆம் தேதிகளில் இலங்கைக்கு வருகை தருவதற்கு அனுமதி கோரப்பட்டது. அதற்கான அனுமதியை வழங்குவது குறித்து நாம் ஆராய்ந்து கொண்டிருந்தோம். அதே வேளை, அன்றைய தினம் மாலையில் அமெரிக்கா தனது இரண்டு போர் விமானங்களை இலங்கையின் மத்தள விமான நிலையத்தில் தரையிறக்க அனுமதி கோரியது. எமது நாட்டின் நடுநிலைத்தன்மை குறித்து நாம் மிகத் தெளிவான முடிவை எடுத்தோம். அந்த நேரத்தில் போர் மோதல்களுக்கான அறிகுறிகள் தென்பட்டிருந்தன. எனவே, நாம் இந்த இரண்டு கோரிக்கைகளுக்கும் அனுமதி வழங்கவில்லை." என்று ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க கூறினார். "இரானியக் கப்பல்களுக்கு ஏன் அனுமதி வழங்கவில்லை எனச் சிலர் கேள்வி எழுப்பினர். அப்படி அனுமதி வழங்கியிருந்தால், எமது ஒட்டுமொத்த நடுநிலைத்தன்மையும் சீர்குலைந்திருக்கும். அத்துடன், எமது பிராந்தியத்திற்கு அப்பால் இருந்த ஒரு போர் மோதல், மத்தளை மற்றும் கொழும்பு துறைமுகத்தை எட்டியிருக்கும். எத்தகைய அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாம் நாட்டைப் பாதுகாத்தோம்.'' எனவும் அவர் தெரிவித்தார். இலங்கை அமெரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் பட மூலாதாரம்,PMD SRI LANKA அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளமையினால், இந்த போரில் ஒரு தரப்பிற்கு சாதகமாக செயற்படுவதாக வெளியிடப்படும் கருத்து முற்றிலும் பொய்யானது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். "அமெரிக்காவின் இரண்டு விமானங்கள் இம்மாதம் 04 மற்றும் 08 ஆம் திகதிகளில் மத்தள விமான நிலையத்தில் தரித்து நிற்பதற்கு அனுமதி கோரியிருந்தன. அந்த விமானங்களின் இறக்கைகளில் 8 கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டிருந்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது." என கூறிய அதிபர், "நாம் அமெரிக்காவுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் செய்துள்ளதால், இந்தப் போரில் ஒரு தரப்பாக மாறுவதைத் தவிர்க்க முடியாது எனச் சிலர் குறிப்பிடுகின்றனர். அது முற்றிலும் பொய்யானது" என்று அநுர குமார திஸாநாயக்க கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "அந்த ஒப்பந்தத்தில், இவ்வாறானதொரு யுத்தத்தின் போது எமக்கிடையிலான உடன்பாடு குறித்து எவ்வித குறிப்பும் இல்லை. அதில் வான்வழிப் போக்குவரத்து சார்ந்த நடவடிக்கைகள், பராமரிப்பு சேவைகள் தொடர்பான பயிற்சித் திட்டங்கள், கடல்சார் எல்லைகள் குறித்த விழிப்புணர்வு, சைபர் பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பான தகவல் பரிமாற்றம், மனிதாபிமான உதவிகள் மற்றும் அனர்த்த அவசரகால பதில் நடவடிக்கைகள் போன்ற விடயங்களே உள்ளடக்கப்பட்டுள்ளன.'' என குறிப்பிடுகின்றார். அமெரிக்கா- இஸ்ரேல் மற்றும் இரான் மோதலில் இலங்கையின் தொடர்பு இந்தியாவில் இடம்பெற்ற பயிற்சி நடவடிக்கைளுக்கான வருகைத் தந்திருந்த இரானுக்கு சொந்தமான கப்பல் ஒன்று, மீண்டும் இரான் நோக்கி பயணித்துக்கொண்டிருந்த சந்தர்ப்பத்தில் கடந்த 4ம் தேதி தாக்குதல் நடாத்தப்பட்டிருந்தது. இலங்கையின் தென் பகுதியை அண்மித்த சர்வதேச கடற்பரப்பில் வைத்தே இரானின் கப்பல் மீது அமெரிக்காவிற்கு சொந்தமான நீர்மூழ்கி கப்பல் தாக்குதல் நடாத்தியிருந்தது. இந்த கப்பலில் 180 பேர் பயணித்திருந்ததாக இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் அன்றைய தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். இதன்படி, கப்பல் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக கிடைக்கப் பெற்ற தகவலை அடுத்து இலங்கையின் கடற்படை மற்றும் விமானப்படை ஆகியோர் இணைந்து மீட்பு பணிகளை துரிதப்படுத்தியிருந்தனர். இதன் பிரகாரம், குறித்த கப்பலில் இருந்து கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த 32 இரான் கடற்படை வீரர்களை இலங்கை கடற்படையினர் காப்பாற்றி, காலி தேசிய மருத்துவமனையில் அனுமதித்திருந்தனர். அதேவேளை, இந்த கடல் பிராந்தியத்திலிருந்து சுமார் 84 பேரின் சடலங்களை இலங்கை கடற்படையினர் கண்டெடுத்து, காலி தேசிய மருத்துவமனையின் பிரேத அறைக்கு கொண்டு வந்திருந்தனர். இந்த சடலங்கள் மீதான மரண பரிசோதனைகள் நிறைவடைந்ததை அடுத்து, விசேட விமானத்தின் ஊடாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் 84 சடலங்களும் இரானிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தன. அத்துடன், தாக்குதலுக்கு இலக்கான கப்பலில் இருந்து காப்பாற்றப்பட்டு காலி தேசிய மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 32 பேரும் குணமடைந்த நிலையில், அவர்கள் கொக்கல விமானப்படை முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இரான் கப்பலில் இருந்த 206 பேருக்கு அடைக்கலம் பட மூலாதாரம்,SL NAVY படக்குறிப்பு,புஷெர் கப்பல் அதேவேளை, இரானுக்கு சொந்தமான மற்றுமொரு கப்பல் பழுதடைந்த நிலையில், இலங்கை அந்த கப்பலை பொறுப்பேற்று, அந்த கப்பலில் இருந்த 206 பேருக்கும் அடைகலம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். "இரானின் மற்றுமொரு கப்பலின் எஞ்சின் பழுதடைந்துள்ளதால் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதி கோரப்பட்டது. 11 மணி நேரங்களுக்கு முன்பே அனுமதி வழங்கியிருக்கலாம் எனச் சிலர் கூறுவதைக் கண்டேன். அங்கு 11 மணி நேரங்கள் என்று எதுவும் இருக்கவில்லை. முதல் கப்பல் தாக்குதலுக்கு உள்ளான பின்னரே, இரண்டாவது கப்பலில் கோளாறு ஏற்பட்டுள்ளதால் கொழும்பு துறைமுகத்திற்கு வர அனுமதிக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது." என்று அவர் தெரிவிக்கின்றார். மேலும், "அவர்கள் போர் மோதலின் ஒரு தரப்பினர். அவர்கள் எமது கடற்பரப்பிற்குள் நுழையும்போது, சர்வதேசச் சட்டங்களின்படி 24 மணி நேரங்கள் மட்டுமே தங்கியிருக்க முடியும். 24 மணி நேரங்களுக்குள் அவர்கள் வெளியேற வேண்டும் அல்லது எமது பொறுப்பின் கீழ் வர வேண்டும். அப்போதுதான் எமது நடுநிலைத்தன்மை பாதுகாக்கப்படும். அவர்கள் எமது பொறுப்பின் கீழ் வந்த பிறகு, முழு குழுவினரும் தங்கியிருக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். அதற்கமைய, 206 கடற்படை வீரர்களை எமது கடற்படை முகாமிற்கு அழைத்து வந்தோம்." என்றார். "நாம் இந்த 206 பேரையும் ஒன்றாகக் வைத்திருக்கவில்லை. அவர்கள் படையினர், மன அழுத்தத்தில் இருப்பார்கள், என்ன மாதிரியான நிலைமை உருவாகும் என்பதை நாம் அறிவோம். எனவே, மிகுந்த அவதானத்துடன் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் சிகிச்சைகளை வழங்கினோம். நாம் அவர்களை மிகுந்த மனிதாபிமானத்துடன் கவனித்து வருகிறோம். இதன் மூலமே இலங்கை சர்வதேச ரீதியில் அங்கீகாரத்தையும் கீர்த்தியையும் பெறுகின்றது.' எனவும் அவர் குறிப்பிடுகின்றார். 'ஐநா தீர்மானத்தை ஏற்கவில்லை' - ஜனாதிபதி அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய நாடுகளுக்கு இடையில் இடம்பெற்று வரும் மோதல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வந்த தீர்மானத்திற்கு இலங்கை ஆதரவு வழங்கவில்லை என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். இந்த தீர்மானத்தில் குறைபாடுகள் காணப்பட்ட பின்னணியிலேயே, தாம் அந்த தீர்மானத்திற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் அவர் கூறுகின்றார். "கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இந்தத் தாக்குதல்கள் குறித்த தீர்மானம் ஒன்று கொண்டுவரப்பட்டது. பல நாடுகள் அந்தத் தீர்மானத்திற்கு உடன்பட்டன. தமது ஒத்துழைப்பை வழங்கின. ஆனால், நாம் அதற்கு ஆதரவு வழங்கவில்லை. ஏனெனில் அந்தத் தீர்மானம் குறைபாடுகள் கொண்டிருந்தன." என்று கூறியுள்ளார் அநுர குமார திஸாநாயக்க. அதற்கான காரணம், "சர்வதேச அரங்கில் நாம் எப்போதும் 'நீதி மற்றும் நியாயம்' என்ற சுலோகத்தையே முன்வைக்கிறோம். அதன் அடிப்படையிலேயே நாம் செயற்பட்டுள்ளோம். அதனால்தான் எமது செயற்பாடுகள், கொள்கைகள், தீர்மானங்கள் மற்றும் இணக்கப்பாடுகள் என அனைத்திலும் நாம் எமது நடுநிலைமையைப் பேணி வருகிறோம் என்று நான் எப்போதும் கூறுகிறேன். இவ்வாறானதொரு போர் காலத்தில், தாய்நாட்டின் தனித்துவம், கௌரவம் மற்றும் சர்வதேச அங்கீகாரத்தைப் பாதுகாப்பதற்கான வழிமுறை இதுவேயாகும்" என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவிக்கின்றார். அரசியல் ஆய்வாளர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்? அமெரிக்காவின் போர் விமானங்கள் தரையிறக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை இலங்கை மறுத்ததை பொது வெளியில் சொல்வதானது, எந்தளவு சரியானது என்பது கேள்விக்குறியானது என இலங்கையின் அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். "மத்திய கிழக்கு பிரச்னையில் இலங்கை நடுநிலையை பேணுகின்றோம் என்று சொல்ல வேண்டியதில்லை என்றே நான் நினைக்கின்றேன். இந்த மோதலில் நாங்கள் கருத்துக்களை தெரிவிக்க வேண்டிய தேவை எங்களுக்கு இல்லை. நடுநிலை வகிக்கின்றோம் என்பது எங்களின் நிலைப்பாடாக இருக்கலாம். ஆனால் ராஜதந்திர ரீதியில் பொதுவெளியில் சொல்வது எந்த வகையில் சரியானது என்பது கேள்வி" என அவர் குறிப்பிடுகின்றார். "அமெரிக்காவின் நலன்களுக்கு முரணாக போகாத வகையில் செயற்பட்டால், இலங்கைக்கு பாதிப்பு இல்லை. ஆனால், இப்போது இருக்கின்ற அமெரிக்காவின் நிர்வாகம் இதனை எவ்வாறு பார்க்கும் என்பது ஒரு கேள்வி" என்கிறார். 'இரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையில் நடுநிலையாக இருக்கின்றோம் என்பதை அமெரிக்கா ஆரோக்கியமாக பார்க்காது என்று தான் நான் நினைக்கின்றேன்' என குறிப்பிடும் அவர், "நீண்ட கால அடிப்படையில் இது இலங்கைக்கு நன்மையானது இல்லை." என கூறுகின்றார். அமெரிக்கா, இஸ்ரேல், இரான் மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டிருக்கக்கூடிய அமைதியற்ற சூழ்நிலை தொடர்பில், இந்தியாவின் அணுகுமுறைகளை பின்பற்றி செயற்படுவது, இலங்கை போன்றதொரு சிறிய நாட்டிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் எனவும் அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா குறிப்பிடுகின்றார். "இந்தியாவும் மனிநேய அடிப்படையில் அவர்களுடைய துறைமுகத்திற்குள் ஒரு கப்பலை அனுமதித்தது. இந்த விடயத்தில் இந்தியாவுடன் சேர்ந்து இலங்கை பயணிப்பது ஒரு சாதகமான விடயத்தை ஏற்படுத்தும். இதுவொரு புதிய அனுபவம். ராஜதந்திர ரீதியில் இதனை அணுக வேண்டும்" என்கிறார் அவர். "குறிப்பாக டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் இதனை எவ்வாறு அவதானித்துக்கொண்டிருக்கின்றது என்பது எமக்கு தெரியாது. இது தமக்கு விரோதமான செயற்பாடு என அவர்கள் கருதினால், அது இலங்கையை பாதிக்கும். இலங்கைக்கு சில தீர்மானங்களை எடுக்கும் அளவுக்கான ஆற்றல் இந்த விடயத்தில் இல்லை. ஆனால், பிராந்தியத்தில் ஒரு அங்கம் என்ற விடயத்தில் இந்தியாவின் அணுகுமுறையோடு ஒத்து போகக்கூடிய வகையிலான ஒரு நிலைப்பாட்டை எடுத்தால் மாத்திரமே இலங்கைக்கு சாதகமானது'' என அரசியல் ஆய்வாளர் ஆ.யதீந்திரா தெரிவிக்கின்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg4367zj91o
By
ஏராளன் · 52 minutes ago 52 min