Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இன அழிப்பின் குறியீடே தையிட்டி விகாரை- அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம்

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள விகாரை இன அழிப்பின் குறியீடு என அரசியல் ஆய்வாளர் சட்டத்தரணி சி.அ. யோதிலிங்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவரால் இன்றையதினம்(15) வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தையிட்டி விகாரை தொடர்பாக தமிழ் மக்களின் ஒன்றிணைந்த போராட்டம் கடந்த 12ஆம் திகதி புதன்கிழமை பௌர்ணமி தினத்தன்று நடந்து முடிந்திருக்கின்றது. 

ஆயிரக்கணக்கில் மக்கள் போராட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்.

போராட்டக்காரர்களுக்கும், பொலிசாருக்குமிடையே வாக்குவாதங்களும் இடம்பெற்றிருக்கின்றன. 

சிங்கள மக்களை விகாரை வளவுக்குள் அனுமதித்த பொலிஸார் தமிழ் மக்களை அனுமதிக்காததையிட்டு பலத்த கண்டனங்களும் தெரிவிக்கப்பட்டுள்ளன. 

வெளிநாட்டவர்கள்; சிலரும் போராட்டத்தை பார்வையிட்டுள்ளனர்.

தையிட்டி விவகாரத்தை பொறுத்தவரை சகல தரப்பும் ஒன்றிணைந்து நடாத்திய போராட்டம் இதுதான். 

இதுவரை காலமும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியே அடையாளப் போராட்டங்களை நடாத்தி வந்தது. 

இந்தத் தடவை அனைத்து கட்சிகளும், அனைத்து சிவில் அமைப்புகளும் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தன. 

மரபுக்கு மாறாக ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும், அங்கஜன் இராமநாதன் தரப்பினரும் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கியிருந்தனர்.

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினர்  இது தொடர்பாக ஊடகவியலாளர் மாநாட்டையும் நடாத்தியுள்ளனர். 

இதனை “பொத்துவில் முதல் பொலிகண்டி வரை" போராட்டம் போல தமிழ் மக்கள் தேசமாக திரண்டெழுந்த போராட்டம் எனலாம்.

தேசிய மக்கள் சக்தி மட்டும் இதில் பங்குபற்றவில்லை. அது ஆளும் கட்சியாக இருப்பதும், தென்னிலங்கைக் கட்சியாக இருப்பதும் இதற்கு காரணமாக இருக்கலாம். பங்குபற்றாவிட்டாலும் காத்திரமான எதிர்ப்பு எதனையும் காட்டவில்லை.

மேம்போக்கான எதிர்கருத்துக்கள் மட்டுமே சந்திரசேகரிடமிருந்து வந்திருந்தன. உள்ளூராட்சி சபைத் தேர்தல் வர இருப்பதால் தேசிய மக்கள் சக்தி அடக்கி வாசித்திருக்கலாம். 

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் யாழ்மாநகர சபையை கைப்பற்றும் கனவும் அதற்கு உண்டு. 

தமிழரசுக் கட்சியில் சிறீதரன் பிரிவினரும், முன்னாள் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும் போராட்டத்தில் பங்கு பற்றியிருந்தனர். 

சுமந்திரன் பிரிவினர் பெரியளவிற்கு பங்குபற்றவில்லை. அப்பிரிவின் முக்கியஸ்தர்களான சுமந்திரன், சி.வி.கே.சிவஞானம், சுகிர்தன், சயந்தன் எவரையுமே போராட்டத்தில் காணக்கிடைக்கவில்லை.

கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் அவசரப்பட்டு கருத்துக்களை கூறியிருந்தார். 

அக்கருத்துக்கள் பலத்த எதிர்வினைகளை தோற்றுவித்திருந்தன. 

“இனவாதம் மதவாதத்திற்கு இடமில்லை" என அவர் கூறியிருந்தார். 

மதவாதத்திற்கு இடமில்லை என்றால் தேசிய மக்கள் சக்தியும் போராட்டத்தில் பங்கு பற்றியிருக்க வேண்டும். 

ஏனெனில் போராட்டம் சாராம்சத்தில் மத ஆக்கிரமிப்புக்கு எதிரானது. அதன் வழி மதவாதத்திற்கு எதிரானது. அரசியல் யாப்பு ரீதியாக பௌத்த மதம் முதன்மை மதம் என்பதற்காகவும், அதனை பேணிப் பாதுகாப்பது அரசின் கடமை என்பதற்காகவும் தமிழ் மக்களின் சொந்த காணிகளை ஆக்கிரமித்து அடாவடித்தனம் செய்ய முடியாது. 

உண்மையில் தையிட்டி விகாரை இன அழிப்பின்  ஒரு குறியீடு. இன அழிப்பு என்பதே ஒரு தேசிய இனத்தின் நிலத்தை மொழியை, பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை அழிப்பதுதான். 

இந்த வகையில் தையிட்டி விகாரை  கலாச்சார அழிப்பினதும், நிலப்பறிப்பினதும் ஒரு குறியீடு தான். எனவே இன அழிப்பிற்கு எதிரான போராட்டத்தை மதவாதம் என எவ்வாறு கூற முடியும்.

 சந்திரசேகர் உள்ளூராட்சிச் சபை தேர்தல் வர இருப்பதால் போராட்டத்தை நடாத்துகின்றனர் என போராட்டத்தை கேலி செய்கின்றார்.

உள்ளூராட்சி சபைத் தேர்தல் பற்றிய செய்திகள் வருவதற்கு முன்னரே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி விகாரைக்கு எதிரான அடையாளப் போராட்டத்தை தொடர்ச்சியாக நடாத்தி வந்தது.

உண்மையில் இப் போராட்டத்தை தக்கவைத்து பேசு பொருளாக்கியது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். 

அதற்காக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தமிழ் மக்கள் பாராட்ட வேண்டும்.

தவிர அமைச்சர் சந்திரசேகர்  போராட்டம் இனப்பதட்டத்தை அதிகரிக்கும் என வேறு கூறுயிருக்கின்றார்.

தம்புள்ளையில் காளி கோவில் ஒன்று சட்ட விரோதமாக கட்டப்பட்டுள்ளது எனக் கூறி அகற்றப்பட்டது. 

அக்கோவிலின் இந்து மதகுரு சில மதச் சடங்குகளைச் செய்த பின் அகற்றுங்கள் என வேண்டிய போதும் அவ் வேண்டுகோள் நிராகரிக்கப்பட்டது.

பிரேமதாசவின் ஆட்சிக்காலத்தில் போக்குவரத்துக்கு இடைஞ்சலாக இருந்த பல புத்தர் சிலைகள் இரவோடு இரவாக அகற்றப்பட்டன. 

அப்போதெல்லாம் இனப்பதட்டம் வரவில்லை. இப்போது மட்டும் வரும் என எவ்வாறு கூற முடியும். சந்திரசேகர் தனது கருத்துக்களைக் கூறும் அனைத்து சந்தர்ப்பங்களிலும் தமிழ் மக்களை சிறுபான்மையினம் என்றே விழித்து வருகின்றார். 

மாக்சிய வாதியான அவரது மரபுக்கு இவ்வாறு விழிப்பது அழகல்ல. தமிழ் மக்கள் ஒரு சிறுபான்மை இனமல்ல. ஒரு தேசிய இனம் என்பது இன்று பல வழிகளினாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

ஜே.வி.பி. யின் ஸ்தாபகர் ரோகண விஜேவீரா கூட அதனை ஏற்றுக் கொண்டிருக்கின்றார். ஜே.வி.பி.யின் ஆரம்பகால செயலாளராக இருந்த லயனல் போபகே இது பற்றி “தேசிய இனப் பிரச்சினைக்கோர் விளக்கம்" என்ற நூலையும் எழுதியிருந்தார்.

அமைச்சர் சந்திரசேகர் தமிழ் மக்களுக்கும் தமிழக மீனவர்கள், இந்திய ஆட்சியாளர்கள் என்போருக்கும் இடையிலான முரண்பாட்டில் தமிழ்மக்களின் பக்கமே நிற்கின்றார். 

அதற்கான எதிர்ப்புக் குரலை ஆக்ரோசமாக முன்வைக்கின்றார். சென்னையில் வைத்துக் கூட எதிர்ப்புக் குரலை எழுப்ப அவர் தயங்கவில்லை. 

ஆனால் தமிழ் மக்களுக்கும,; சிங்கள தேசத்திற்கும் இடையிலான முரண்பாட்டில் சிங்கள தேசம் பக்கம் நிற்கவே முயல்கின்றார். இது ஜே.வி.பி.யின் அடிப்படை இனவாதத்திலிருந்து விலக அவர் விரும்பவில்லை என்பதையே காட்டப் பார்க்கின்றது.

 சிங்கள சமூக உருவாக்கமும் அதன் வழி சிங்கள தேச உருவாக்கமும் பெருந்தேசிய வாத கருத்து நிலையை அடிப்படையாகக் கொண்டவையே! இதன்படி இலங்கைத் தீவு சிங்கள பௌத்தர்களுக்கு மட்டுமே உரியது. 

ஏனைய இனக் குழுமங்கள் இங்கு வாழ்ந்து விட்டுப் போகலாம். ஆனால் ஒரு தேசிய இனமாக எழுச்சி அடைய முடியாது என்பதே இக்கருத்தின் அடிப்படை .

எனவே தமிழ் மக்கள் தேசிய இனமாக இருப்பதை அழிப்பது என்பது சிறீலங்கா அரசின் இலக்குகளில் ஒன்று. இதனால் எந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தாலும் இன அழிப்பை மேற்கொண்டே தீரும். இது விடயத்தில் அளவு ரீதியான வேறுபாடுகள் அரசாங்கங்களிடம் இருக்குமே தவிர பண்பு ரீதியான வேறுபாடுகள் இருக்க மாட்டா. 

இங்கு வேறுபாடு என்பது நக்கிக் கொல்வதும,; கடித்துக் கொல்வதும் மட்டும் தான்

தேசிய மக்கள் சக்திக்கு பல சங்கடங்கள் உண்டு என்பது உண்மைதான். பாராளுமன்றத் தேர்தலின் போது வடக்கில் முதன்மை நிலையைப் பெற்றிருப்பதால் இச்சங்கடங்கள் ஏற்படுகின்றது. அது தனது பெருந்தேசிய வாதத்தை சற்று அடக்கி வாசிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. எனினும் சிங்கள தேசமா? தமிழ்த் தேசமா? என்ற நிலை வரும் போது அது சிங்கள தேசம் என்ற நிலைப்பாட்டையே எடுக்கும.;

சந்திரசேகர் யாழ் மாவட்டத்தில் வாழும் ஐந்து லட்சம் மக்களின் அபிப்பிராயங்களை பெற்ற பின்னரே தையிட்டி விகாரை தொடர்பான தீர்மானங்களை எடுக்க முடியுமென்றும் கூறியிருக்கின்றார். இதனை ஒரு வகையான பொது வாக்கெடுப்பு என கூறலாம்.

தமிழ் மக்களும் இந்த பொது வாக்கெடுப்பை வரவேற்பார்கள். ஆக்கிரமிப்பு தமிழர் தாயகத்தின் பொதுப் பிரச்சினையாக இருப்பதால் தாயகம் தழுவிய வகையில் தமிழ் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவதே இங்கு பொருத்தமாக இருக்கும். இவ்வாறான பொது வாக்கெடுப்புக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தயாராக இருக்கும் எனக் கூறுவது கடினமானது.

தையிட்டி விகாரைக்கான அடிக்கல் நல்லாட்சிக் காலத்திலேயே நாட்டப்பட்டது. இக்காலத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு ஆதரவாக இருந்தது. அரசாங்கத்தை பாதுகாப்பதிலேயே அக்கறையாக இருந்தது. இதன் போது அழுத்தங்களைக் கொடுத்து அடிக்கல் நாட்டுவதை நிறுத்தியிருக்கலாம். கூட்டமைப்பு பெரிய அழுத்தங்கள் எவற்றையும் கொடுக்கவில்லை. 

சம்பந்தன் தலைமை இதனை விரும்பாது இருந்திருக்கலாம். பொதுவாக சம்பந்தனோ, சுமந்திரனோ ஆக்கிரமிப்பு விவகாரங்களில் பெரிய அக்கறையைக் காட்டுவதில்லை. சிங்களத் தரப்புடன் தங்களுக்குள்ள உறவுகளுக்கு பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் தான் இதற்கு காரணம். 

கன்னியா ஆக்கிரமிப்பு விவகாரத்தில் சம்பந்தனுக்கு அவரது சொந்தத் தொகுதியாக இருந்த போது கூட பெரிய அக்கறையைக் காட்டவில்லை.

உண்மையில் நாவற்குழி விகாரை கட்டியெழுப்பிய போது பாரிய எதிர்ப்பைக் காட்டியிருந்தால் தையிட்டி விகாரை முயற்சியினைத் தடுத்திருக்கலாம். இரண்டு விகாரைகளுமே இராணுவத்தின் வேலைத்திட்டம். 

அன்றைய காலகட்டத்தில் இராணுவத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் அரசாங்கத்திற்கு இருந்திருக்கும் என்றும் கூறமுடியாது. 

தற்போது இராணுவமும் சற்று பலவீனமாக இருப்பதால் அழுத்தங்களைக் கொடுப்பது இலகுவானது. 

இப் போராட்டங்கள் மூலம் தையிட்டி விகாரையை அகற்றுவது தாமதமாக இருந்தாலும் புதிய விகாரைகள் கட்டப்படுவதைத் தடுக்க முடியும்.

தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்து தையிட்டி விகாரையை பௌத்தசாசன அமைச்சு பொறுப்பெடுக்கப் போவதாக செய்திகள் வருகின்றன. 

இவ்வாறு இடம்பெறுமானால் தையிட்டி விகாரை முழுக்க முழுக்க அரசியல் தலைமையின் ஆதிக்கத்தின் கீழ் வந்துவிடும.; இதன் பின்னர் அழுத்தங்களை கொடுப்பது சற்று இலகுவாக இருக்கும். அரசியல் தலைமை சர்வதேச அழுத்தங்களுக்கும், உள்;ர் அழுத்தங்களுக்கும் கட்டுப்பட்டேயாக வேண்டும். 

அரசாங்கத்தின் பொறுப்பில் வர இருப்பதால் சமரச முயற்சிகளில் அது ஈடுபடப் பார்க்கும். விகாரைக்கு அளவான காணிகளை மட்டும் ஒதுக்கிக் கொண்டு மீதி காணிகளை மக்களிடம் கொடுக்கப் பார்க்கும் விகாரைக் காணிக்கு மாற்றீடாக வேறு காணிகளையோ, நட்டஈட்டையோ கொடுக்க முயற்சிக்கலாம். 

பழைய திஸ்ஸ விகாரை காணிகளை இதற்காக பங்கிட முற்படலாம். அந்தக் காணிகளின் உறுதிகள் உண்மையானதல்ல என்ற ஒரு தகவலும் உண்டு. இந்த மாற்று ஏற்பாடுகள் பொருத்தமானதல்ல. தமிழ் மக்கள் விகாரை அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையே முதன்மைப் படுத்த வேண்டும.;

 அரசாங்கம் உண்மையான அரசாங்கமாக இருந்தால் சகல இனங்களையும் சமமாக மதிக்கும் அரசாங்கமாக இருந்தால் இந்த அத்துமீறிய விகாரை தொடர்பாகவும் ஏற்கனவே கட்டப்பட்ட அத்துமீறிய விகாரைகள் தொடர்பாகவும்  தொடர்ச்சியாக மேற்கொண்டு வரும் ஆக்கிரமிப்புக்கள் தொடர்பாகவும் முதலில் தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

தொடர்ந்து சகல ஆக்கிரமிப்புகளையும் கைவிட வேண்டும் இனிவரும் காலங்களில் எந்தவித ஆக்கிரமிப்புகளும் இடம்பெறாது என்பதற்கான உத்தரவாதத்தை வழங்க வேண்டும்.

இவ்வாறான செயல்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்கும் போது தான் அரசாங்கத்தின் முறைமை மாற்றம,; வளமான வாழ்க்கை, அழகான இலங்கை கீளீன் சிறீலங்கா என்கின்ற இலக்குகள் அர்த்தம் பொருந்தியதாக இருக்கும் .

முன்னைய அரசாங்கங்கள் போல தொடர்ச்சியான ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளுமாக இருந்தால் அதன் முறைமை மாற்றம் பற்றிய இலக்கு மாத்திரமல்ல பொருளாதார இலக்குகளும் ஒருபோதும் வெற்றியைத் தர மாட்டாது. 

உண்மையில் அரசாங்கத்தின் கிளீன் சிறீலங்கா இலக்கும், முறைமை மாற்ற இலக்கும், வளமான வாழ்க்கை, அழகான இலக்கை, என்ற இலக்குகளும் வெற்றியைத் தர வேண்டுமென்றால் ஆக்கிரமிப்புகளை இல்லாமல் செய்தல் என்கின்ற செயல் திட்டத்திலிருந்தே அவை ஆரம்பிக்கப்பட வேண்டும்.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை பாராளுமன்றத் தேர்தல் காலத்தில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தொடர்பாக இருந்த நம்பிக்கைகள் தற்போது இல்லை. தமிழ் மக்கள் சந்திக்கின்ற அரசியல் தீர்வு என்கின்ற அடிப்படைப் பிரச்சினை, பொறுப்பு கூறல் பிரச்சினை, ஆக்கிரமிப்பு பிரச்சினை, காணிப்பறிப்பு, அரசியல் கைதிகள,; காணாமல் போனோர் விவகாரம் போன்ற நிலை மாறு கால நீதிப் பிரச்சினை அன்றாடப் பிரச்சினை போன்ற ஐந்து பிரதான பிரச்சினைகளிலும் சிறிய முன்னேற்றத்தைக் கூட காட்டவில்லை. இதனால் நம்பகத்தன்மை தொடர்ச்சியாக கீழிறங்கி வருகின்றது.

தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை மட்டும் வைத்துக் கொண்டு தமிழ் மக்களின் மனங்களை வெல்லலாம் என தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் நினைத்தால் அது ஒருபோதும் நடக்கப் போவதில்லை.

தமிழ் மக்களைப் பொறுத்தவரை ஒருங்கிணைந்த செயற்பாடு மிகவும் அவசியமானது. பெருந்தேசிய வாத ஆக்கிரமிப்புகளை கையாள்வதற்கும், சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கும் தேர்தல் அரசியலை கையாளவும் ஒருங்கிணைந்த செயல்பாடு மிக மிக அவசியம். 

இதற்கான ஆரம்பங்களை ஆக்கிரமிப்புகளுக்கு எதிரான போராட்டங்களிலிருந்து தொடங்கலாம் .தொடர்ந்து சர்வதேச அரசியலைக் கையாள்வதற்கு இதனை வளர்த்துச் செல்லலாம.; இவற்றிலிருந்து வரும் புரிந்துணர்வு ஊடாக தேர்தல் அரசியலை நோக்கியும் முன்னேறிச் செல்லலாம் .

ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டங்கள் அடையாளப் போராட்டமாக இல்லாமல் பேரெழுச்சியாக உலகம் தழுவிய வகையில் வளர வேண்டும். இக்கட்டுரையாளர் அடிக்கடி கூறுகின்ற விடயம் பெருந்தேசியவாக அரசாங்கம் அச்சப்படுவது தமிழ் மக்களின் உலகளாவிய அரசியல் போராட்டங்களுக்கு தான்.

எனவே எமது போராட்டங்களும் அரசியல் செயல்பாடுகளும் உலகம் தழுவியதாக அமைதல் முக்கியமானது.

தாயகத்தில் போராட்டங்களும் அரசியல் செயல்பாடுகளும் வலுவாக இருந்தால் அது தமிழ்நாடு புலம்பெயர் நாடுகள் என்பவற்றிலும் அவை பரிணமிக்கத் தொடங்கும் இதனூடாக நிலம், புலம,; தமிழகம் தழுவிய ஒருங்கிணைந்த  அரசியலையும் முன்னெடுக்க முடியும்.

 எல்லாவற்றுக்கும் நிபந்தனை தாயகத்தில்  ஒருங்கிணைந்த அரசியலைக் கட்டியெழுப்புவதே!  இப்போது எழும் முக்கிய கேள்வி தாயகம் இதற்கு தயாராக இருக்கின்றதா? என்றுள்ளது

https://www.thaarakam.com/news/edfe354e-315e-4225-bc04-6bcd0c6a8cb9

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.