Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வரலாற்றில் கற்றுக்கொள்ள மறுத்த பாடம்

March 8, 2025

 — கருணாகரன் —

இலங்கை அரசியலில் பேரலையாக எழுச்சியடைந்திருக்கும் தேசியமக்கள் சக்தி (NPP) யை எதிர்கொள்வதில் எதிர்க்கட்சிகளுக்கு(எதிரணிகளுக்கு) சவாலே மிஞ்சுகிறது. இதனால் தனிப்பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்திருக்கும் NPP அரசாங்கத்தை எதிர்கொள்வதற்கு பலமான தரப்புகள் எதுவுமே தற்போதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. NPPயை விமர்சிப்பதற்குக் கூட பலமான காரணங்களை எதிரணிகள் கண்டுபிடிக்கவில்லை. 

பாராளுமன்றத்திலும் வெளியிலும் சில காரணங்களை அவை சொன்னாலும் அவை ஒன்றும் சனங்களிடம் எடுபடக் கூடிய அளவுக்கில்லை. இதனால் எந்த ஊடகங்களிலும் அவற்றுக்கு முன்னிலை இல்லை. மலையில் எறும்பு ஊர்வதைப்போலவே முன்வைக்கப்படும் விமர்சனங்கள் உள்ளன.

இது அரசியல் அரங்கில் தேசியமக்கள் சக்தியை மேலும் உயரத்துக்கே கொண்டு செல்லவைத்துள்ளது. 

இதனால், எதிர்வரும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல், மாகாண சபைகளுக்கான தேர்தல் ஆகியவற்றில் பல இடங்களிலும்  NPP வெற்றியடையக் கூடிய சூழலே காணப்படுகிறது. 

இந்த நிலையை எதிர்கொள்வதற்கு எதிர்த்தரப்புகளில் ஐ.தே.க வும் ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும் என்று அவற்றின் ஆதரவாளர்கள் விரும்புகிறார்கள். அதற்காக ஐ.தே.க வுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் (ரணிலுக்கும் சஜித்துக்கும்) இடையில் உள்ள பனிப்போர் இன்னமும் முடியவில்லை. இரு தரப்பையும் உடன்பாட்டுக்குக் கொண்டுவருவதற்கு மேற்கொள்ளப்படும் சமரச முயற்சிகள் இன்னும் பெரியளவுக்குப் பயனளிக்கவில்லை என்று கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருந்தாலும் எப்படியாவது இரண்டு தரப்பையும் ஒன்றாக்கவேணும். குறைந்த பட்சம் சில அடிப்படைகளிலேனும் ஒருங்கிணைந்து செயற்படவைக்க வேண்டும் என இரு தரப்பிலும் உள்ள விக்கிரமாதித்தியன்கள் மனந்தளராமல் முயற்சித்துக் கொண்டேயிருக்கிறார்கள். ஆனால், உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வேட்பு மனுக்களைக் கொடுப்பதற்கான காலம் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் முடியப்போகிறது. 

மறுபக்கத்தில் வெறுங்கையோடு நிற்கும் பொதுஜன பெரமுன, வீம்புக்காகக் காற்றில் வாளைச்சுழற்றுகிறது. பொழுதுபோகவில்லை என்பதற்காக அதில் உள்ளவர்கள் அவ்வப்போது ஜோக்கடித்துக் கொண்டிருக்கிறார்கள். இறுதியாக வந்த ஜோக், ‘ஊழல் இல்லாதவர்களுக்கும் குற்றச்சாட்டுகள் எதுவும் இல்லாதவர்களுக்கும் மட்டுமே உள்ளுராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்கு பெரமுன இடமளிக்கும்‘ என்று அது சொல்லியிருப்பதாகும். 

இது உண்மையென்றால், பொதுஜன பெரமுனவில் யாருமே இருக்க மாட்டார்கள். கட்சியே இருக்காதே!

இந்த நிலையில் பெரமுன எப்படி NPP யை எதிர்கொள்வது?  மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவின் முன்னாள் – இன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களையும் முன்னாள் அமைச்சர்களையும் இலக்கு வைத்து, அதைப் பலவீனப்படுத்துவதற்கு  தேசியமக்கள் சக்தி (NPP) வியூகத்தை அமைத்துக் கொண்டிருக்கிறது. மக்களிலிருந்து இவர்களைத் தனிமைப்படுத்தும் விதமாகக் குற்றச்சாட்டுகள் அடுக்கப்படுகின்றன. அநேகமாக அடுத்த சில மாதங்களில் பெரமுனவிலுள்ள சில தலைகள் சிறைக்குள் தள்ளப்படலாம்.

இதேவிதமாகப் பலவீனமாகவே உள்ளது சிறிலங்கா சுதந்திரக்கட்சியும். சுதந்திரக் கட்சிக்கு இப்பொழுது யார் தலைமை என்று கட்சிக்கும் தெரியாது. மக்களுக்கும் தெரியாது. 1977 இல் ஆட்சியைக் கைப்பற்றிய ஜே.ஆர். ஜெயவர்த்தன சிறிமாவோ பண்டாரநாயக்கவின் குடியுரிமையைப் பறித்து, சுதந்திரக் கட்சியை முடக்கினார். இப்பொழுது தானாகவே சுதந்திரக் கட்சி முடங்கி விட்டது. அதை முன்னரங்குக் கொண்டு வருவதற்கான வீரர்களும் இல்லை. சூரர்களுமில்லை. அதிசயம், அற்புதம் என்று சிங்கள மக்களிடத்தில் ஏதாவது மாற்றங்கள் நடந்தால் மட்டுமே சுதந்திரக் கட்சி உயிர்ப்படையக்கூடிய நிலை. 

இடதுசாரிகளைக் கண்ணுக்கெட்டிய தொலைவு வரையில் காணவேயில்லை. 2009 க்குப் பின்னர் வாசுதேவ நாணயக்கார, திஸ்ஸ விதாரண, டி.யு. குணசேகர, தினேஸ் குணவர்த்தன போன்றோர் அமைச்சர்களாக இருந்துள்ளனர். தேசிய மக்கள் முன்னணியின் அலையில் இவர்கள் அடித்துச் செல்லப்பட்டு விட்டனர்.

இதற்கு முன் அவ்வப்போது இடதுசாரிகள் ஆட்சியதிகாரத்தில் பங்கேற்றிருந்தனர். இந்தத் தடவை பாராளுமன்றத்திலே ஒருவர் கூட இல்லை என்றாகிவிட்டது. 

சிங்களப் பிராந்தியத்தில் செல்வாக்குச் செலுத்தும் கட்சிகளின் நிலை இப்படியென்றால், வடக்குக்கிழக்கு, மலையகம் உள்ளிட்ட தமிழ் பேசும் மக்களின் பிராந்தியத்திலும் ஏறக்குறைய இதே நிலைதான்.

முஸ்லிம் கட்சிகள் தங்களுக்குமுன்னே உள்ள அரசியல் நிலைமைகள் குறித்தோ, உருவாகிக் கொண்டிருக்கும் அபாயங்களைப் பற்றியோ சிந்திப்பதாகத் தெரியவில்லை. உள்ளுரக் கவலைகளிருந்தாலும் அதை எப்படிச் சரி செய்வது என்று அவற்றுக்குத் தெரியவில்லை. ஆனால் அவை இப்படியே தொடர்ந்தும் குண்டுச்சட்டிக்குள் குதிரையை ஓட்டிக்கொண்டிருக்க முடியாது. இதைப்புரிந்து கொண்டாலும் இதிலிருந்து வெளியே வருவதற்கு அவற்றுக்கு உளத் தடைகளுண்டு. தேவையற்ற அச்சமுண்டு. 

அப்படித்தான் மலையகக் கட்சிகளும் ஆளுக்கொன்றாகத் திசைக் கொன்றாகச் சிதறிப்போயுள்ளன. இவற்றை ஒருங்கிணைக்கவே முடியாது. அப்படி ஒருங்கிணைப்பதாக இருந்தால், அதற்கு மேலும் மக்கள் தண்டனை அளிக்கவேண்டும். அதாவது நெருக்கடியைக் கொடுக்கவேண்டும். அல்லது மலையகத்தில் தேசிய மக்கள் சக்தி மேலும் பலமடைய வேண்டும். 

இங்கே ஒரு விடயத்தைக் கவனிக்க வேண்டும். சிங்களக்கட்சிகள் (அப்படித்தான் நடைமுறையில் உள்ளன) தற்போது சோர்வையும் பின்னடைவையும் சந்தித்திருந்தாலும் அடுத்த சுற்றில் எப்படியோ தம்மைச்சுதாகரித்துக் கொள்ளும். அல்லது சிங்கள மக்கள் அடுத்த சுற்றில் இன்னொரு வகையானஅரசியற் தேர்வுக்கு வழி செய்து, அதிகாரம் ஒரே இடத்தில் குவிவதைத் தடுத்துக்கொள்வார்கள். அவ்வாறான சந்தர்ப்பத்தில் மீண்டும் இந்தக்கட்சிகளில் ஒன்றோ இரண்டோ மேலெழுந்து கொள்ளும். அல்லது இவற்றின் புதிய கூட்டொன்று உருவாகும். அல்லது இன்னொரு புதிய கட்சியேனும் உதயமாகலாம். 

சிங்களச் சமூகம் தமிழ்ச் சமூகத்தினரைப் போலல்ல. அவர்கள் எந்த நிரந்தரங்களையும் ஏற்பதில்லை. எதிலும் திருப்தி அடைவதில்லை. ஒப்பீட்டளவில் தங்களுடைய அரசியலில் மாற்றங்களை எப்போதும் நிகழ்த்திப் பார்க்கும் ஆவலைக்கொண்டவர்கள் சிங்கள மக்கள். அதாவது ஜனநாயகத்தின் நரம்பைக் கெட்டுப்போக விடுவதில்லை அவர்கள். 

ஆனால், தமிழ்க்கட்சிகளின் – தமிழ் அரசியலின் நிலை?

அதுதான் மிக மோசமாகச்சிதைந்து போயுள்ளதே. தேசிய மக்கள் சக்தியிடம் தோல்வியைச் சந்தித்து, தமிழ் அரசியல் பின்னடைவுக்குள்ளாகிய பின்னும் தம்மை நிதானப்படுத்திக் கொள்வதில் தமிழ் அரசியற் தரப்புகள் தவறுகின்றன. இந்த நெருக்கடியை, தளர்வை, சீர்செய்வதற்கு இவை முயற்சிக்கவில்லை. பதிலாக ஒன்றையொன்று கண்டித்துக் கொண்டும், ஒன்றையொன்று குற்றம்சாட்டிக் கொண்டும் உள்ளன. இதில் இன்னும் உச்சமாகவும் சிரிப்பாகவும் இருப்பது இந்த நிலையிலும் இவை துரோகி – தியாகி விளையாட்டில் தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருப்பதுதான்.

தென்னிலங்கைத் தீவிரவாதம் துரோகி – தியாகி என்று பார்த்து தன்னுடைய அரசியலை மேற்கொள்ளவில்லை. அது ஒட்டுமொத்தமாகவே அனைத்துத் தமிழ்த்தரப்பின் அரசியலையும் காலியாக்குவதற்கு முயற்சிக்கிறது. இதில் அது (NPP) கணிசமான அளவுக்கு முதற்கட்ட வெற்றியையும் பெற்றுள்ளது. அடுத்த கட்ட வெற்றிக்குத் தயாராகிறது. 

ஏற்கனவே தமிழ் அரசியற் தரப்பில் நிலவிய துரோகி – தியாகி விளையாட்டைத் தமக்குச் சாதமாக்கிக் கொண்டு, விடுதலைப் புலிகளை முற்றாக அழித்தது ராஜபக்ஸ தரப்பு. அதன் மூலம் தனக்குச் சவாலாக இருந்த வலுச்சமனிலை அரசியலை அது உடைத்து நிர்மூலமாக்கியது. இதற்காக அது போரை ஒரு நிலையிலும் தேர்தல் அரசியலை இன்னொரு வகையிலும் பயன்படுத்தியது. தனக்கு வாய்ப்பான முறையில் தமிழ்த்தரப்பில் ஒரு சாராரை வளைத்துப் பிடித்து வைத்துக் காரியமாற்றியது. 

அதற்குப் பிறகும் மிஞ்சியிருந்த தமிழ் அரசியலையும் அதனுடைய அடையாளத்தையும் இப்போது துடைத்தழித்து விட முயற்சிக்கிறது தேசிய மக்கள் சக்தி (NPP). இதற்கு அது முற்று முழுதாகவே தேர்தல் அரசியலை அதாவது ஜனநாயக ரீதியில் மக்கள் வழங்கிய தீர்ப்பு என்று காட்டி இதைச் சாதிக்க முயற்சிக்கிறது. தமிழ் பேசும் சமூகத்தின் உரிமைசார் அரசியலையும் அடையாள அரசியலையும் ஏற்றுக் கொள்ளத் தயங்கும் தேசிய மக்கள் சக்தி, தந்திரோபய ரீதியில் இந்த விடயத்தைக் கையாள முற்படுகிறது.

இதைப் புரிந்தும் புரியாத மாதிரி நடந்து கொள்கின்றன தமிழ் அரசியற் தரப்புகள். சிங்களக் கட்சிகளிடத்திலும் இதே வகையான குறைபாடுகளும் பலவீனங்களும் இருந்தாலும் சிங்களச் சமூகம் அதை ஏதோ ஒரு கட்டத்திலாவது Breack பண்ணும். சீர்திருத்திக் கொள்ளும். ஆனால், தமிழ்ச்சமூகத்திடம் இந்தக் குணமும் பண்புமில்லை. அது கேள்விக்கிடமில்லாமல் தன்னுடைய தலையை பலிபீடத்தில் வைக்கும். 

என்பதால்தான் அது தொடர்ந்தும் தோல்விகளையே வரலாறாகக் கொள்கிறது. ஆம், முள்ளிவாய்க்கால் தோல்வியையும் விடப் பெரிய தோல்வியாக இப்போதைய தோல்வி அமைகிறது. எதிர்காலத் தோல்வியும் அப்படித்தான் அமையும். வரலாற்றிலிருந்து எதையும் படித்துக் கொள்ள மறுக்கும் சமூகம் தமிழ் மக்களுடையதல்லவா!

என்பதால் இலங்கை முழுவதிலும் தேசிய மக்கள் சக்திக்கே இப்போதைக்கு வெற்றி வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. இதைச் சற்றுத் திருத்திக் கொள்ள வேண்டும், பெரும்பாலும் என. ஏனெனில் அரசாங்கத்தின் மீது மெல்லிய எதிர்ப்புணர்வும் சலிப்பும் ஒரு சாராரிடம் உருவாகி வருகிறது. எத்தனை நாளைக்குத்தான் வண்ணம் கெடாமல் அலங்காரம் நீடித்திருக்கும்?

https://arangamnews.com/?p=11875

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.