Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

"கிராமியக் கலைஞன்"

ஆழமான வேரூன்றிய பாரம்பரியங்களுக்கும் துடிப்பான நாட்டுப்புறக் கலைகளுக்கும் பெயர் பெற்ற, யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட இலங்கையின் வடமாகாணத்தில், தமிழ்செல்வன் அச்சுவேலி என்ற சிறிய கிராமத்தில் பிறந்து வளர்ந்தான். அவன் சிறு வயதிலிருந்தே, ‘அரிச்சந்திரா” கூத்து என்றால் அனைவருக்கும் முதலில் நினைவிற்கு வரும், காங்கேசன்துறையைச் சேர்ந்த நடிகமணி வி.வி.வைரமுத்துவின் [பெப்ரவரி 11, 771924 - ஜூலை 8, 1989] 'மயானகாண்டம்' நாடகதின் மேலும் பாசையூர் அண்ணாவியார் கலாபூஷணம் முடியப்பு அருள்பிரகாத்தின் 'சங்கிலியன்' நாட்டுக்கூத்து மேலும் கொண்ட பற்றினால், பாரம்பரிய இசையின் தாளங்களாலும், கரகாட்டம், கோலாட்டம், கூத்து போன்ற நாட்டுப்புற நடனங்களின் துடிப்பான அசைவுகளாலும் கவரப்பட்டு, அவன் தனது இளமை பருவத்திலேயே அச்சுவேலி கிராமத்தில் ஒரு திறமையான நாட்டுப்புற நடனக் கலைஞர் மற்றும் பாடகராக பெயர் பெற்று, கோவில் திருவிழாக்கள் மற்றும் உள்ளூர் விழாக்களில் கூத்து நிகழ்ச்சிகளை நடத்தி, ஆதரவும் அங்கீகாரமும் பெற்றான். அச்சுவேலியில் அவன் சுமாரான வாழ்க்கை வாழ்ந்தாலும், தமிழ்செல்வன் திறமையாக பாடி, நடனமாடியதும் அவரது சமூகத்தை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

அச்சுவேலி நாட்டுப்புறக் கலையில் நீண்டகால பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. மேலும் அதன் மிகவும் பிரபலமான நாட்டுப்புற நடனக் கலைஞர்களில் ஒருவரிடம் தமிழ்செல்வன் நேரடியாக கரகாட்டம் மற்றும் கூத்து ஆகியவற்றில் இளம்வயதிலேயே தேர்ச்சி பெற்றவர் ஆவார். பழங்கால பாணியையும் மொழியையும் மற்றும் நவீன கதைசொல்லலையும் இணைத்து புதுமையான நடன அமைப்பிற்கு பெயர் பெற்ற அந்த குருவிடம், பயிற்சிகளை முறையாக பெற்றதால், தமிழ் கலாச்சாரத்தில் நடனம் மற்றும் இசையின் அழகையும் முக்கியத்துவத்தையும் பறைசாற்றிய சங்க இலக்கியங்களில் இருந்து சமூக ஒற்றுமை, ஆன்மீக பக்தி மற்றும் உணர்ச்சி வெளிப்பாடு ஆகியவற்றை இணைத்து கிராமிய கலையின் பங்கை மேம்படுத்துவதில் தமிழ்செல்வன் தன் கவனத்தை பெரும்பாலும் செலுத்தினான்.

அதேவேளை, ஒரு ஏழை விவசாயியின் மகளான முத்துச்செல்வி பக்கத்து கிராமத்தில் வாழ்ந்து வந்ததுடன், அவள் தன் பெற்றோருடன் வயல்களில் வேலை செய்து, அன்றாட வாழ்க்கைக்கும் உதவினாள். அவர்களின் வாழ்க்கை கடினமாக இருந்தது மட்டும் அல்ல, அவர்களின் கனவுகள் கூட ஒரு எல்லைக்குள் முடங்கிவிட்டது. ஆனாலும், முத்துச்செல்வி தனது கிராமத்தின் இயற்க்கை அழகிலும் மற்றும் நாட்டுப்புற நிகழ்ச்சிகளின் துடிப்பான கலை ஆற்றலிலும் ஓரளவு ஆறுதல் கண்டாள். அத்துடன் தமிழ்செல்வன் மற்றும் கிராமிய கலைஞர்களின் நிகழ்ச்சிகளில் அவள் முடிந்த அளவு கலந்து கொண்டாள்.

ஒரு நாள் அருகிலுள்ள கோவில் திருவிழாவின் போது தமிழ்செல்வன், வீரம் மற்றும் காதல் கதையை அடிப்டையாக வைத்து, ஒரு கூத்து நடத்திக் கொண்டிருந்தான். அவனது வீரம் நிறைந்த குரலும், இனிமை நிறைந்த காதல் குரலும் கூட்டத்தில் எதிரொலித்தது. அவனது நடன அசைவுகள் வசீகரமாகவும் கவர்ச்சியாகவும் இருந்தது. பார்வையாளர்கள் நடுவே, கூத்தை ரசித்துக்கொண்டு நின்றிருந்த முத்துச்செல்வியால் தன் கண்களை அவனிடம் இருந்து விலக்க முடியவில்லை. தற்செயலாக தமிழ்ச்செல்வனும் அவளைக் கவனித்தான். ஆனால் அவனின் கவனம் தன் கூத்திலேயே முழுமையாக இருந்தது. என்றாலும், நாடகம் முடிந்தபின், அவர்களின் கண்கள் சந்தித்தபோது, அவளுக்குள் அவனுக்குள் ஏதோ, சொல்லமுடியாத ஒரு புது உணர்வு கிளர்ந்தெழுந்தது.

"கூத்தாட்டு அவைக்குழாத் தற்றே பெருஞ்செல்வம்

போக்கும் அதுவிளிந் தற்று."

கூத்துப் பார்க்கக் கூடும் கூட்டம் போலவே நிறையும் செல்வம் அது களைவது போலவே கலைந்தும் போகும் என்று திருவள்ளுவர் கூறிச் சென்றார். அப்படித்தான், அவளின் அந்தப் பார்வையும் பின் கலைந்து போகுமோ என்று அவன் தன்னுக்குள் கேட்டுக்கொண்டான்.

என்றாலும், காலப்போக்கில், அவர்களின் சந்திப்புகள் அடிக்கடி நடந்தன. முத்துச்செல்வி நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, தமிழ்ச்செல்வனிடம் சில நேரமாவது நெருங்கிப் பழகவேண்டும் பேச வேண்டும் என்ற அவாவில், மேடையை சுத்தம் செய்ய அல்லது தயார் செய்ய தானாகவே முன்வந்தாள். அவ்வேளையில் அவர்களின் உரையாடல்கள் சாதாரணமானவையாக பொதுவாக இருந்தாலும் ஆழமானவையாகவும் இருந்தன. தமிழ்ச்செல்வன் அவளுடைய நெகிழ்ச்சியையும் கருணையையும் பாராட்டினான், அதே நேரத்தில் முத்துச்செல்வியும் தனது கலையின் மீதான ஆர்வத்தாலும் அர்ப்பணிப்பாலும் ஈர்க்கப்பட்டாள். அதேவேளை, அவர்களின் நட்பில் ஒருவருக்கொருவர் ஆறுதல் கண்டு மகிழ்ந்தனர்.

"நாடகத்தால் உன்னடியார் போல்நடித்து நானடுவே

வீடகத்தே புகுந்திடுவான் மிகப்பெரிதும் விரைகின்றேன்

ஆடகச்சீர் மணிக்குன்றே இடையறா அன்புனக்கென்

ஊடகத்தே நின்றுருகத் தந்தருள்எம் உடையானே."

இறைவா, உன் அடியார் போல நானும் நடிக்கிறேன். உன் அடியார்கள் மத்தியில் நானும் ஒரு அடியவன் போல புகுந்து , உன் திருவடிகளை அடைய விரைந்து வருகிறேன். அரசன் வேடம் போட்டவன் அரசாங்கம் கேட்டது போல. என் மனதில் அன்பு இல்லை. நான் என்ன செய்வேன். உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாய்

என்று உருகுகிறார் மணிவாசகர். அப்படித்தான் அவளும் தொடக்கத்தில், கூட்டத்தோடு கூட்டமாக, ஒரு ரசிகன் போல் எந்த நோக்கமும் இல்லாமல், அவனின் நாடகத்தை பார்த்து இன்பம் அடைய விரைந்து வந்தவள், இப்ப உள்ளம் உருகும்படி உன்மேல் எப்போதும் காதல் செலுத்த என் மனதில் அன்பைத் தருவாயா என்று கேட்க ஆரம்பித்தாள்.

அவர்கள் இருவரும் காலப்போக்கில் அடிக்கடி சந்திக்கத் தொடங்கினர். ஒரு நாள், அவர்கள் இருவரும் கடற்கரை ஒன்றில், மாலைப்பொழுது சந்தித்தார்கள். அப்பொழுது எப்போதும் இல்லாத அளவுக்குக் காற்றின் வேகம் அதிகமாக இருந்தது. அலைகள் ஒவ்வொன்றும் கரைசேரும்போது அவை மணலைத்தொட்டு முத்தமிட்ட பின் கடலுக்குத் திரும்பிக் கொண்டிருந்தன. கடலுக்குச் சற்று தூரத்தில் சோளங்களைத் தீயில் வாட்டிக்கொண்டிருந்தார் வியாபாரி ஒருவர். தீச்சுவாலைகளில் சுடுபடும் பரவுகிற தீப்பொறிகள், ஆயிரம் மின்மினிகள் கூட்டமாகப் பறப்பது போன்று காட்சியளித்தன. தமிழ்ச்செல்வன் இருவருக்கும் இரண்டு சோளங்கள் வாங்கி, கடற்கரை மண்ணில், முத்துச்செல்வி அவன் அருகே நெருங்கி இருந்தவாறு, சூடான சோளத்தைக் கையில் பிடித்து ஊதி ஊதிக்கொண்டு சாப்பிடும் அழகை, கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் தமிழ்ச்செல்வன்.

"ஹாய் சாப்பிடாம இங்க என்னடா, என்னையே பார்த்துட்டு இருக்க?'' - தன் அகன்ற கண்களை விரித்து அவள் கேட்டாள்.

" ம்ம் முத்துசெல்வியின் முத்தில் அப்படி ஒரு ஆசையடா." அவன் அவளை இழுத்து அணைத்தபடி கூறினான். அப்பொழுது நாலு கண்களும் ஒருகணம் இமைக்காமல் நின்றன.

"கண்ணொடு கண்இணை நோக்கொக்கின் வாய்ச்சொற்கள்

என்ன பயனும் இல"

ஒத்த அன்புடன் கண்களோடு கண்கள் கலந்து ஒன்றுபட்டு விடுமானால், வாய்ச்சொற்கள் தேவையற்றுப் போகின்றன. ஆமாம் அப்படித்தான் அவர்கள் இருந்தார்கள். என்றாலும் காலில் ஒரு பெரும் அலை மோதி, அவர்களை மீண்டும் பூமிக்கு கொண்டுவந்தது.

இருப்பினும், முத்துச்செல்வியின் குடும்பம் அவர்களின் பிணைப்பு வளர்ந்து வருவதை அறிந்ததும், அவர்கள் கோபமடைந்தனர். அவர்களைப் பொறுத்தவரை, தமிழ்ச்செல்வனின் நாட்டுப்புறக் கலைஞர் வாழ்க்கை நிலையற்றதாகவும் நம்பகத்தன்மையற்றதாகவும் இருந்தது. தங்களுடைய மகளுக்கு நிலையான வருமானம் உள்ள ஒருவரை, பொருளாதார பாதுகாப்பு அளிக்கக்கூடிய ஒருவரை திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர். குறிப்பாக அவளது தந்தை, தமிழ்செல்வனுடனான வாழ்க்கை, ஒரு போராட்டமாக இருக்கும் என்று எச்சரித்து விடாப்பிடியாக இருந்தார்.

எதிர்ப்பால் மனம் தளராத தமிழ்செல்வன், முத்துச்செல்வியின் குடும்பத்தினரை அணுகி தனது அன்பையும் விருப்பத்தையும் தெரிவித்தான். நிச்சயமற்ற நிலைகள் இருந்தபோதிலும், அவளை கவனித்துக் கொள்வதாகவும், ஒன்றாக ஒரு வாழ்க்கையை உருவாக்குவதாகவும் அவன் உறுதியளித்தான். அவனது இதயப்பூர்வமான வார்த்தைகளும் நேர்மையும் இறுதியில் அவளது தாயின் நிலைப்பாட்டை மென்மையாக்கியது, ஆனால் அவளது தந்தை நம்பவில்லை. பல மாத விடாமுயற்சி மற்றும் கிராமத்தில் மரியாதைக்குரிய பெரியவரின் தலையீட்டிற்குப் பிறகுதான் அவர்கள் இறுதியாக திருமணம் செய்து கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

என்றாலும் அவர்களது திருமண வாழ்க்கை, ஓரிரு ஆண்டுகளுக்குப் பின், குடும்பம் பெரிதாக, பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கிக்கொண்டது. தமிழ்செல்வன் நாட்டுப்புற நிகழ்ச்சிகள் மூலம் சம்பாதிப்பது சொற்பமாக மாறியது. அவர்கள் சாப்பிடுவதற்கு ஓரளவு சமாளித்தாலும் குழந்தைகளின் தேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. முத்துச்செல்வி அவர்களின் வருமானத்தைப் பூர்த்தி செய்வதற்காக சிலவேளை கூலிவேலைகளைச் செய்தாள். ஆனால் அவர்களின் குழந்தைகளை வறுமையில் வளர்க்கும் சுமை அவளைப் பெரிதும் பாரப்படுத்தியது. விவசாயத் தொழிலாளியாகவோ அல்லது மீனவனாகவோ ஒரு நிலையான வேலையைத் தேடுமாறு தமிழ்செல்வனை அவள் அடிக்கடி வற்புறுத்தினாள், ஆனால் அவனுடைய இதயம் அவனது கலையில் நிலைத்திருந்தது.

"நான் சிறுவயதிலிருந்தே நாட்டுப்புற கூத்தடி, பாடகர்" என்று அவன் கூறுவான். “யுத்தத்தின் போது கூட, நாங்கள் வன்னிக்கு இடம்பெயர்ந்தபோதும், எனது பாடல்கள் எங்கள் மனதை வாழவைத்தன. இது எனக்கு ஒரு வேலை மட்டும் இல்லை; அது என் அடையாளம், என் ஆன்மா. எங்கள் நல்வாழ்வு இன்றைய நவீன உலகில் புறக்கணிக்கப்படுகிறது, அது எனக்குத் தெரியும். ஆனால் இந்த பாரம்பரியத்தை என்னால் கைவிட முடியாது. சிவனை தில்லைக்கூத்தன் என்று கொண்டாடும் இந்த தமிழர் இன்று, எம் பாரம்பரிய கூத்தை எனோ கைவிடுகிறார்கள். அது தான் எனக்கு புரியவில்லை" என்றான்.

என்றாலும், "ஒரு வாய் பிட்டுக்கு, கூத்தாடி சிவன் மண் சுமக்கவில்லையா?" என்ற முத்துச்செல்வியின் கண்ணீருடன் இணைந்த கேள்வியால், இறுதியில், வாழ்க்கையின் அழுத்தங்களை உணர்ந்த தமிழ்செல்வனை, ஒரு விவசாயக் கூலியாக ஒரு நிரந்தர வேலையைச் செய்யத் தள்ளியது. அவன் வயல்களில் நீண்ட நேரம் வேலை செய்தான், அவன் தனது குடும்பத்திற்கு போதுமான அளவு சம்பாதித்தான். ஆனால் அவன் தனது ஆர்வத்தை ஒருபோதும் கைவிடவில்லை. மாலை வேளைகளில் தனது குழந்தைகளுக்கும் கிராமத்து இளைஞர்களுக்கும் நாட்டுப்புற நடனம் மற்றும் இசைக் கலைகளைக் கற்றுக் கொடுக்கத் தொடங்கினான். முத்துசெல்வியும் அவனுக்குத் துணையாக ஒத்தாசை செய்வாள். அவன் தன் ஊரில் நடக்கும் திருவிழாக்கள் மற்றும் திருமணங்களில் தவறாமல் கூத்து நாடகத்தை அரங்கேற்றுவான், ஆனால் இப்ப பணத்திற்காக அல்ல, ஆனால் பாரம்பரியத்தை உயிர்ப்பிக்க வேண்டும் என்ற ஒரு ஆசையால் மட்டுமே.

முத்துச்செல்வி, ஆரம்பத்தில் நாட்டுப்புறக் கலை, தமது வாழ்வுக்கு போதிய வருமானத்தை தரவில்லை என்று தற்காலிகமாக வெறுப்படைந்தாலும், இன்று அதன் மதிப்பைக் காணத் தொடங்கினாள். இது சமூகத்தை எவ்வாறு ஒன்றிணைத்தது, அவர்களின் குழந்தைகளுக்கு, பெருமை மற்றும் அடையாள உணர்வை எவ்வாறு விதைத்தது, என்பதை அவள் கவனிக்கத் தவறவில்லை. மெதுவாக, அவள் அவனது மிகப்பெரிய ஆதரவாளராக, முன்போல மீண்டும் ஆனார், அவள் நிகழ்ச்சிகளை ஒழுங்கமைக்க உதவியதுடன் அவர்களின் குழந்தைகளையும் கிராமியக் கலை கற்க ஊக்குவித்தாள்.

ஆண்டுகள் கடந்தன, தமிழ்செல்வனின் விடாமுயற்சி பலனளிக்கத் தொடங்கியது. இளைய தலைமுறையினருக்கு கற்பிப்பதற்கான அவனது முயற்சிகள், முன்னோர்களின் நாட்டுப்புற மரபுகள் மறைந்துவிடாமல் இருப்பதை உறுதி செய்தது. கலையின் மதிப்பை வலியுறுத்தும் பண்டைய தமிழ் இலக்கியங்களிலிருந்து அவன் அடிக்கடி மேற்கோள் எடுத்து, சமூகத்திற்கு காட்டினான். நாளடைவில் தமிழ்செல்வனின் கதை அச்சுவேலியில் மட்டும் அல்ல, தமிழர் வாழும் எல்லா பகுதிகளிலும் ஒரு உத்வேகமாக மாறியது.

அவ்வேளையில் தான், 2025 தைப்பொங்கல் தினத்தை ஒட்டி, யாழ் நகரில், முற்றவெளியில் நாட்டுப்புற இசை மற்றும் நடனம் [கூத்து] நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது, அதில் முதன்மை கலைஞராக தமிழ்ச்செல்வன் தலைமைவகுத்தான். அவன் தனது தலைமை உரையில்:

"இன்று மக்கள் நாட்டுப்புற இசை அல்லது நடனத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல சம்பளம் கிடைக்காததால் நாட்டுப்புறக் கலையை தங்கள் தொழிலாக எடுத்துக் கொள்ள இளைய தலைமுறையினர் விரும்புவதும் இல்லை. பாடசாலைகளிலும் அதைப்பற்றி எந்த அறிவும் போதிப்பதும் இல்லை". என்று கூறிவிட்டு கொஞ்சம் அமைதியாக பெருமூச்சு விட்டான். பின், பார்வையாளர்களைப் பார்த்து,

"யுத்தம் மற்றும் இடம்பெயர்வு காரணமாக, பல தலைமுறைகளுக்கு முன்னர் எமது நாட்டுப்புறக் கலைஞர்கள் அணிந்திருந்த பாரம்பரிய உடைகள், நகைகள் மற்றும் கிரீடங்கள் போன்ற பல சாதாரண அலங்கார பொருட்களையும் மற்றும் திறமைகளையும் நாம் இன்று இழந்துள்ளோம். உதாரணமாக, வன்னியில் எமது பாரம்பரிய கலை வடிவங்கள் “கிட்டத்தட்ட அழிந்துவிட்டன” என்பது மிகவும் துரதிஷ்டவசமானது. "கோவலன் கூத்து" மற்றும் "மகுடி ஆட்டம்" ஆகியவை மூன்று தசாப்தங்களுக்கு முன்னர் வன்னியில் மிகவும் பிரபலமானவை, மேலும் கோவில் திருவிழாக்களின் போது இரவு முழுவதும் 15 மணி நேரத்திற்கும் மேலாக நிகழ்த்தப்பட்டன." என்று கூறியவன், மேடையில் அமர்ந்திருந்த ஏற்பாட்டாளர்களை நோக்கி,

"இந்த யாழ்ப்பாண பொங்கல் இசை விழா 2025, கடந்த காலங்களின் தனித்துவ கலை வடிவத்தை மீட்டெடுக்கவும், புத்துயிர் பெறவும், உயிர்த்தெழுப்பவும் மற்றும் பாதுகாக்கவும் கட்டாயம் உதவும்" என்று பெரும் கைத்தட்டலுக்கு மத்தியில் தன் ஆரம்ப பேச்சை முடித்தான்.

அந்த நேரம் அங்கு ஒலிபெருக்கியில்:

"காவடி கரகங்களோடு காத்தான் கூத்தும்

மாவிலை தோரணங்களோடு நாட்டுக் கூத்தும்

பாவெடுத்துப் பாடியாடி பூவெடுத்துத் தூவிக்கூடி

நாவெடுத்துப் பேருஞ்சூடி மாவெடுத்துக் கோலங்காட்டி

சீனடி சிலப்படியொடு சிறந்த நல்ல

சித்திர சிற்பக்கலைகளும் விளங்கும் தேசமே!

சுந்தர தமிழில் வரலாறு செப்பி ஆடும்

கிராமிய கலைஞனே வாழ்கவாழ்கவே!!"

என்று ஒலித்தது!!

[கந்தையா தில்லைவிநாயகலிங்கம்,

அத்தியடி, யாழ்ப்பாணம்]

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, kandiah Thillaivinayagalingam said:

இன்று மக்கள் நாட்டுப்புற இசை அல்லது நடனத்தைக் கற்றுக்கொள்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. நல்ல சம்பளம் கிடைக்காததால் நாட்டுப்புறக் கலையை தங்கள் தொழிலாக எடுத்துக் கொள்ள இளைய தலைமுறையினர் விரும்புவதும் இல்லை. பாடசாலைகளிலும் அதைப்பற்றி எந்த அறிவும் போதிப்பதும் இல்லை

வருந்தத்தக்க நிலைமை. கிட்டடியில் தான் நோயல் நடேசன் எழுதியிருந்தார், கலைவாணி வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து கிழக்கே போய்க் குடியேறி விட்டாள் என்று. அங்கேயாவது வாழ்ந்தால் சந்தோசம் தான்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

எல்லோருக்கும் நன்றிகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.