Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம், HANDOUT

படக்குறிப்பு, கோவையில் ஒரு வீட்டில் பாம்பை பிடிக்கும் போது பாம்பு கடித்து உயிரிழந்த சந்தோஷ்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சேவியர் செல்வகுமார்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 22 மார்ச் 2025, 06:18 GMT

கோவையில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளை பிடித்துள்ள பாம்பு பிடிக்கும் நபரான சந்தோஷ், பாம்பு கடித்து உயிரிழந்துள்ளார். பாம்பு பிடிக்கும் போது உருவாகிற சூழ்நிலையும், அவர்களின் அறியாமையுமே இந்த மரணங்களுக்குக் காரணம் என்கின்றனர் ஆய்வாளர்கள்.

பாம்பு பிடிப்பதற்கான முறையான பயிற்சி மற்றும் உபகரணங்களை அளித்து, இவர்களை துறையுடன் சேர்த்து ஒருங்கிணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக வனத்துறையின் தலைவர் சீனிவாச ரெட்டி பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.

பாம்பு பிடிப்பவர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பு

கோவையைச் சேர்ந்த சந்தோஷ் (வயது 39) என்ற பாம்பு பிடிக்கும் நபர், கடந்த மார்ச் 17 அன்று, தொண்டாமுத்துார் பகுதியிலுள்ள ஒரு வீட்டில் நாகப் பாம்பை பிடிக்கும் போது, பாம்பால் கடிபட்டு, கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்க்கப்பட்டிருந்தார். மார்ச் 19 இரவு அவர் மரணமடைந்துள்ளார். விஷ முறிவுக்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் இதய செயலிழப்பால் உயிரிழந்ததாக அவருக்கு சிகிச்சை அளித்துள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆகஸ்டில் கோவையில் முரளீதரன் என்பவரும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நிர்மல் என்பவரும் பாம்பு பிடிக்கும் முயற்சியில் உயிரிழந்தனர். கடலுார் மாவட்டம் நெல்லிக்குப்பத்தைச் சேர்ந்த உமர் அலி, கடந்த ஆண்டு ஏப்ரலில் குடியிருப்புப் பகுதியில் பிடித்த பாம்பை வனப்பகுதியில் விடுவதற்காகச் சென்ற போது அந்த பாம்பு கடித்து பலியானார்.

தற்போது கோவையில் மரணமடைந்த சந்தோஷின் நண்பரும், காட்டுயிர் ஆர்வலருமான ராஜன் பிபிசி தமிழிடம் பேசுகையில், ''கடந்த 20 ஆண்டுகளில் சந்தோஷ் 7 ஆயிரத்துக்கும் அதிகமான பாம்புகளைப் பிடித்து, காட்டுக்குள் கொண்டு விட்டுள்ளார். ஆனால் அவரது மறைவால் இன்றைக்கு அவர் குடும்பம் நிர்க்கதியில் இருக்கிறது. அவருடைய இரண்டு பெண் குழந்தைகளில் ஒரு குழந்தை மாற்றுத்திறனாளி. அவருடைய குடும்பத்துக்கு தமிழக அரசு ஏதாவது ஒரு வகையில் உதவ வேண்டும்.'' என்று கேட்டுக் கொண்டார்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம், HANDOUT

பாம்பு பிடிப்பதில் பழங்குடிகளுக்கும் மற்றவர்களுக்கும் என்ன வித்தியாசம்?

உலகிலேயே ஆஸ்திரேலியாவில்தான் பாம்புக்கடி அதிகம் என்றாலும், பாம்புக்கடியால் உயிரிழப்பவர்கள் எண்ணிக்கை இந்தியாவை விட அங்கே மிகவும் குறைவு என்று என்கிறார் மனோஜ். இவர் கிருஷ்ணகிரியில் இயங்கி வரும் உலகளாவிய பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியும் ஆவார். பாம்புக்கடி குறித்த ஆராய்ச்சியில் முனைவர் பட்டம் பெற்றுள்ள இவர், தற்போது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்துடன் (ICMR) இணைந்து ஆராய்ச்சிப் பணிகளைச் செய்து வருகிறார். ஆஸ்திரேலியாவில் அந்த பிரச்னையைக் கையாளும் விதமும், விஷமுறிவு மருந்துகளும் மிகச்சிறப்பாக இருப்பதே இதற்குக் காரணம் என்கிறார் மனோஜ்.

பாரம்பரியமாக பாம்பு பிடிக்கும் பழங்குடிகளுக்கும், மற்றவர்களும் பாம்புகளை அணுகும் முறையில் நிறைய வித்தியாசங்கள் இருப்பதாக அவர் கூறுகிறார்.

செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த இருளர் இனப் பழங்குடியினரான மாசி சடையன் மற்றும் வடிவேல் ஆகிய இருவரும் அமெரிக்கா மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளுக்கு, அந்த அரசுகளின் அழைப்பின் பேரில் பாம்பு பிடிப்பதற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள், 'பாம்பு பிடிப்பதில் தனித்துவமானவர்கள்' என்று இந்தியாவின் பாம்பு மனிதன் என்று அழைக்கப்படும் ராமுலஸ் விட்டோகர் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் நெம்மேலியில் இருளர் பாம்பு பிடிக்கும் தொழில் கூட்டுறவு சங்கம் இயங்கி வருகிறது. அதில் இவர்கள் உட்பட 350க்கும் மேற்பட்ட இருளர்கள் உறுப்பினர்களாகவுள்ளனர். அவர்கள் பழையபெருங்களத்தூர், புதுப்பெருங்களத்தூர், சென்னேரி, மாம்பாக்கம், காயார், வெம்பேடு ஆகிய பகுதிகளில் உள்ள காட்டுப் பகுதிகளில் பாம்புகளைப் பிடித்து விஷத்தைச் சேகரித்து, மீண்டும் காட்டுக்குள் விடும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம்,MAANOJ

படக்குறிப்பு,முனைவர் மனோஜ்

"கடித்த பாம்பை மொபைலில் படமெடுப்பது அவசியம்"

பாம்பு பிடிக்கும் போது, அங்குள்ள சூழ்நிலையையும், பாம்பு கடித்துவிட்டால் அந்த நேரத்தில் நடந்து கொள்ள வேண்டிய முறையையும் உணர்ந்து பழங்குடிகளைப் போன்று விழிப்புணர்வுடன் செயல்பட்டால், உயிரிழப்புகளைத் தடுத்துவிட முடியும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார் இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனரும், ஊர்வனவியலாளருமான ரமேஸ்வரன் மாரியப்பன்.

பாம்பு பிடிக்கும் போது வீடியோ எடுக்கும் ஆர்வத்துடன் பலரும் கூடுவது, பாம்புகளிடம் அச்சத்தையும், கோபத்தையும் ஏற்படுத்துவதே பாம்பு பிடிப்பவர்களுக்கு ஆபத்தில் முடிவதாகக் கூறுகிறார் அவர். பிபிசி தமிழிடம் பேசிய ரமேஸ்வரன் மாரியப்பன், ''பாம்பைக் காப்பாற்றவே நாம் வந்துள்ளோம் என்பதையும், நம் உயிரும் முக்கியம் என்பதையும் உணர்ந்து பாம்பு பிடிப்பவர்கள் செயல்பட வேண்டும். சிறிய பாம்பு, பெரிய பாம்பு எதுவாயினும் கடித்து விட்டால் தாமதிக்காமல் மருத்துவமனை செல்ல வேண்டும்.'' என்றார்.

மேலும் "பாம்பு பிடி வீரர் என்ற வார்த்தை தவறு. அவர்களை பாம்பு பிடிப்பவர்கள் அல்லது பாம்புகளை பாதுகாப்பவர்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இந்த வீரர் என்ற வார்த்தைதான், பாம்பைப் பற்றி அடிப்படை அறிவும், அனுபவமும் இல்லாதவர்களையும் பாம்புகளைப் பிடிக்கத் துாண்டி வருகிறது.'' என்றார்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம்,RAMESWARAN MARIAPPAN

படக்குறிப்பு, இந்திய ஊர்வன ஆராய்ச்சி, கல்வி மற்றும் பாதுகாப்பு மையத்தின் நிறுவனர் ரமேஸ்வரன் மாரியப்பன்.

பாம்பு கடித்துவிட்டால், அது எந்த வகைப் பாம்பு என்று அறிவதற்கு, அதனை உடனே போட்டோ எடுத்துக் கொள்ள வேண்டும் என்று ஆலோசனை கூறும் விஞ்ஞானி மனோஜ், கட்டு வரியனைத் தவிர மற்ற பாம்புகள் கடித்தால் அந்த இடத்தில் வலி, வீக்கம், நிறம் மாற்றம் ஏற்படும் என்றார். எந்த பாம்பு கடித்தாலும் பதற்றமடைந்தால் ரத்தத்தில் விஷம் வேகமாகப் பரவும் என்பதால், பயம், பதற்றம் இல்லாமல் விரைவாக மருத்துவமனைக்குச் செல்ல வேண்டுமென்பதை மீண்டும் அவர் வலியுறுத்துகிறார்.

பாம்பு பிடிக்கும் இடங்களில் இப்போது கூட்டம் எளிதாகச் சேர்ந்து விடுவதால், பாம்பு பிடிப்பவர்கள் செல்வதற்குள் அந்த பாம்பு ஒரு வித அச்சத்துக்கும் கோபத்துக்கும் உள்ளாகியிருக்குமென்பதால், அதைக் கையாள்வதில் மிகமிகக் கவனமாக இருக்க வேண்டுமென்கிறார் ரமேஸ்வரன் மாரியப்பன்.

''கோவை போன்ற மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள பகுதிகளில் ராஜநாகங்கள் அதிகமுள்ளன. அது தீண்டினால் உயிர் பிழைப்பது மிகவும் கடினம். நாகப் பாம்பு கடித்துவிட்டால் ஒரு மணி நேரத்துக்குள் உரிய சிகிச்சையை எடுத்தால் மட்டுமே பிழைக்க முடியும்.'' என்கிறார் விஞ்ஞானி மனோஜ்.

பாம்பு பிடிப்பவர்களுக்கு அரசே காப்பீடு வழங்க கோரிக்கை

கோவையைச் சேர்ந்த அமீன், கடந்த 27 ஆண்டுகளாக பாம்பு பிடித்து வருகிறார். "இதுவரை பிடித்துள்ள பாம்புகளைக் கணக்கில் வைத்துக் கொண்டதும் இல்லை; எதையுமே சமூக ஊடகங்களிலும் பகிர்ந்ததில்லை" என்கிறார். சமூக ஊடகங்களில் பகிர விரும்பி கண்மூடித்தனமான துணிச்சலில் பாம்பு பிடிக்க பலரும் முயற்சி செய்வதைத் தடுக்க வேண்டியது வனத்துறையின் பொறுப்பு என்கிறார் அமீன்.

''நான் ஒரே நாளில் 4 பாம்புகளை பிடித்துள்ளேன். 27 ஆண்டுகளுக்கு முன், முதல்முறை பாம்பு பிடித்த போது இருந்த அதே அச்சத்துடனும், விழிப்புடனும் இப்போதும் பிடிக்கிறேன். எங்களைப் போன்று தொழில் முறையில் பாம்பு பிடிப்பவர்களுக்கு வனத்துறை அடையாள அட்டை, மேலைநாடுகளில் பாம்பு பிடிக்க பயன்படுத்தப்படும் உபகரணம் (TONG) போன்றவற்றை வழங்க வேண்டும். வனத்துறையால் அனுமதிக்கப்பட்டவர் மட்டுமே பாம்பு பிடிக்க முடியும் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.'' என்கிறார் அமீன்.

பாம்பு பிடி வீரர் மரணங்கள்

பட மூலாதாரம்,HANDOUT

கேரளா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், பாம்புகளைப் பிடிப்பதற்கு அங்குள்ள வனத்துறைகளின் சார்பில், மொபைல் ஆப்கள் உருவாக்கப்பட்டு, அதைக் கொண்டு பாம்பு பிடிப்பவர்களும் பொதுமக்களும் ஒன்றிணைக்கப்படுகின்றனர். அதேபோன்று தமிழகத்திலும் பாம்பு பிடிக்கும் பணியை வனத்துறை ஒருங்கிணைக்கவும் காட்டுயிர் ஆய்வாளர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இது குறித்து தமிழக வனத்துறைத் தலைவரும், முதன்மை தலைமை வனப் பாதுகாவலருமான சீனிவாச ரெட்டியிடம் பிபிசி தமிழ் கேட்ட போது, ''பாம்பு பிடிப்பதை ஒருங்கிணைப்பதற்கான எல்லாப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கேரளாவில் 'சர்ப்பா' என்ற இணையதளம் மற்றும் மொபைல் ஆப் (SARPA) உருவாக்கப்பட்டது போல, இங்கும் ஒரு மொபைல் ஆப் உருவாக்கப்படவுள்ளது. அதேபோன்று பாம்பு பிடிப்பவர்களுக்கு பயிற்சி வழங்கவும். அவர்களுக்குத் தேவையான உபகரணங்களை வழங்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இந்தப் பணிகள் நிறைவு பெற சற்று கால அவகாசமாகும். அந்தத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும் போது பாம்புகள், மனிதர்கள் என இரு தரப்புக்கும் பாதுகாப்பு கிடைக்கும்'' என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr529m4p9g2o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.