Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சாரதா வி

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

உலக கல்லீரல் தினம் ஏப்ரல் 19-ஆம் தேதி அனுசரிக்கப்படும் வேளையில் கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரலுக்கும் குடல் ஆரோக்கியத்துக்கும் இருக்கும் தொடர்பு குறித்து கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன் பிபிசி தமிழிடம் பேசினார் .

அவருடனான நேர்காணலின் சில பகுதிகள் இங்கே தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

கல்லீரலை பாதுகாக்க நாம் செய்ய வேண்டிய முதல் விசயம் என்ன?

உடலில் உள்ள எல்லா உறுப்புகளின் செயல்பாடும் நமக்கு தெரியும். ஆனால், கல்லீரல் குறிப்பாக என்ன செய்கிறது என்று பலருக்கு தெரியாது. ஏனென்றால் கல்லீரல் உடலில் 500 வகையான வேலைகளை செய்கிறது. நாம் சாப்பிடும் உணவை வடிகட்டுகிறது, புரதம் உற்பத்தி செய்கிறது, எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது. எனவே நாம் சாப்பிடும் சாப்பாட்டை கவனமாக எடுத்துக் கொண்டாலே கல்லீரலை பாதுகாக்கலாம்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,SPECIAL ARRANGEMENT

படக்குறிப்பு,கல்லீரல் மற்றும் கணைய புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவர் பாலமுருகன் ஶ்ரீநிவாசன்

கல்லீரல் பாதிப்புக்கு பொதுவாக மது பழக்கமே காரணம் என்று கூறப்படுகிறது. அது உண்மையா?

அப்படி இல்லை. முழு உடல் பரிசோதனை செய்யும் போது, பலருக்கும் ஃபேட்டி லிவர் (Fatty-Liver) இருப்பது தெரியவருகிறது. இதில் கிரேட் 1, கிரேட் 2, கிரேட் 3, கிரேட் 4 என்று நான்கு நிலைகள் உள்ளன. இப்போதுள்ள சூழலில் தமிழ்நாட்டில் 30-40% பேருக்கு கிரேட் 1 ஃபேட்டி லிவர் இருக்கும் என்று கூறலாம். ஆனால் அவர்களில் சுமார் 18% பேர் மட்டுமே குடிப் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்கள் அந்த பழக்கம் கிடையாது.

Nonalcoholic steatohepatitis என்ற வகையிலான, குடிப் பழக்கம் அல்லாத காரணங்களினால் கல்லீரல் பாதிப்புகள் அதிகமாகி வருகின்றன. இதற்கு காரணம் நமது மந்தமான வாழ்க்கை முறை. நாம் உடலின் தேவைக்கு அதிகமாக சாப்பிடுகிறோம். சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுகிறேன் என்று சொல்பவர்கள் சிலர் அதிகமாக குளிர்பானங்கள் குடிக்கலாம், இனிப்புகள் எடுத்துக் கொள்ளலாம், பஜ்ஜி போண்டா போன்ற எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடலாம். இவை எல்லாம் ஃபேட்டி லிவருக்கு இட்டுச் செல்லும்.

ஃபேட்டி லிவர் என்பது பலர் நினைத்துக் கொள்வது போல கொழுப்புச் சத்து அல்ல. ஃபேட்டி லிவருக்கு முக்கிய காரணம் கார்போஹைட்ரேட் எனும் மாவுச் சத்து தான். மாவுச்சத்தை கொழுப்பாக மாற்றும் திறன் கல்லீரலுக்கு உண்டு. எனவே அதிக மாவுச் சத்து, அதிக சர்க்கரை, இவை எல்லாமே கொழுப்பாக மாறி கல்லீரலில் சேரும்.

மிக எளிமையாக இதை சொல்ல வேண்டும் என்றால் - எந்த உணவாக இருந்தாலும் அது முதலில் கல்லீரலில் தான் சேரும். கல்லீரல் தான் உடலுக்கு தேவையான நல்ல உணவை வடிகட்டி அதை மட்டும் இருதயத்துக்கு அனுப்பும். இருதயம் அதனை உடல் முழுவதும் பகிர்ந்து கொடுக்கும்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆரோக்யமற்ற உணவு பழக்கத்தினால் மட்டுமே கல்லீரல் பாதிப்பு ஒருவருக்கு ஏற்பட வாய்ப்பு உண்டா?

100% வாய்ப்பு உள்ளது. கல்லீரல் பாதிப்பில் தொடங்கி, கல்லீரல் செயல்பாடு முற்றிலும் முடங்கிப் போய் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் சில நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக சர்க்கரை நோயாளிகள் உணவு கட்டுப்பாடுடன் இருக்கவில்லை என்றால் மிக விரைவில் கிரேட் 4 வரை அவர்களின் கல்லீரல் பாதிப்பு தீவிரமாகலாம்.

உயர் ரத்த அழுத்த நோயாளிகளுக்கும் இது பொருந்தும். அவர்கள் மாதத்துக்கு ஒரு முறை குடிப்பவர்களாக இருக்கலாம். ஆனால் அவர்களின் கல்லீரல் பாதிப்புக்கு குடிபழக்கத்தை காரணம் சொல்ல முடியாது. சொல்லப்போனால், குடிப்பழக்கம் அல்லாத காரணங்களினால் ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் சதவிகிதம் வேகமாக உயர்ந்து வருகிறது.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கொரோனாவுக்கு பிறகு கல்லீரல் பாதிப்புகள் அதிகரிக்கும் விதத்தில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டுள்ளதா?

வாழ்க்கை முறை மாறியுள்ளது. அலுவலகத்துக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வேலை பார்ப்பவர்கள் அதிகமாகியுள்ளனர். குறிப்பாக ஐடி துறையில் இருப்பவர்கள் இரவு நேரங்களில் வேலை பார்க்கும் போது, பசித்த உடன் உணவு டெலிவரி ஆப் மூலம் உடனடியாக ஆர்ட செய்து சாப்பிடுகின்றனர். அந்த உணவை எப்படி சமைக்கிறார்கள், அது என்ன மாதிரியான கடை என்றெல்லாம் பார்ப்பதில்லை, அருகில் இருப்பது எது என்று மட்டுமே பார்க்கிறார்கள். இவை எல்லாம் பாதிப்புகளை அதிகப்படுத்துகிறது.

இரவு நேரத்தில் சாப்பிடுவதால் கல்லீரல் பாதிப்புக்கான வாய்ப்புகள் அதிகரிக்குமா?

யார் அதிக நாட்கள் வாழ்கிறார்களோ அவர்கள் ஆரோக்யமானவர்களாக கருதப்படுகிறார்கள். அப்படி பார்க்கும் போது கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளில் சராசரி வாழ்நாள் 85 ஆண்டுகள் ஆகும். நம்மை விட 20 ஆண்டுகள் அதிகம். அவர்களின் உணவுப் பழக்கத்தின் முக்கிய அம்சம் – இரவு உணவை அவர்கள் மாலை 6.30 மணிக்கு சாப்பிட்டுவிடுவார்கள். நாம் இரவு 10மணி, 11 மணிக்கு கூட சாப்பிடுவோம். இப்போது இரவு 2 மணி, 3 மணிக்கு கூட பிரியாணி கிடைக்கிறது.

வயிறு முட்ட பிரியாணி சாப்பிடும் போது உடலில் தேவைக்கு மீறிய கலோரிகள் சேர்கின்றன. அவ்வளவு உணவை சாப்பிட்டு விட்டு, உடனே தூங்கிவிடுவார்கள், எந்த வேலையும் செய்ய போவதில்லை. அந்த உணவு நமது கல்லீரலில் தான் சென்று தங்கும்.

இரவு நேரத்தில் சாப்பிடும் போது உணவு செரிக்க நேரமாகும். அவை குடல் பகுதியிலேயே தங்கிவிடும். அப்போது பாக்டீரியாக்கள் செயல்பாடு அதிகரிக்கும். அதாவது பாலை பயன்படுத்தாமல் வைத்திருந்தால் அது கெட்டுபோய்விடும் இல்லையா, அதே போல தான். உணவு செரிக்காமல் அதே இடத்தில் நீண்ட நேரம் தங்கியிருந்தால் அதுவும் கெட ஆரம்பித்துவிடும். அதனால் தான் பலருக்கு Irritable Bowel Syndrome போன்ற சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாக்டீரியாக்கள் அதிகமாகும் போது அவை வாயு உற்பத்தி செய்யும். அந்த வாயு குடலை விரிக்கும். குடலை விரிக்கும் போது கழிப்பறைக்கு செல்லும் உந்துதல் ஏற்படும்.

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கல்லீரல் ஆரோக்கியத்துக்கு குடல் ஆரோக்கியம் (gut health) எவ்வளவு முக்கியம்?

கல்லீரலும் குடல் கிட்டத்தட்ட ஒரே உறுப்பு போல தான். நாம் சாப்பிடும் உணவில் உள்ள பாக்டீரியா, அவை உடலில் சென்ற பிறகு எப்படி வளர்கின்றன, அவற்றுடன் நமது உறவு எப்படி உள்ளது இவை எல்லாம் பற்றி பேசுவது தான் குடல் ஆரோக்கியம். முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஒரே சமையலறையிலிருந்து சமைத்த உணவை தான் ஒவ்வொருவரும் சாப்பிட்டு வந்தனர். காலை உணவு வீட்டில் சாப்பிடுவோம், மதிய உணவு வீட்டிலிருந்து எடுத்துச் செல்வோம், இரவு உணவையும் வீட்டில் தான் சாப்பிடுவோம். வீட்டில் உள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் இதே வழக்கமாக இருக்கும். அப்போது நமது உடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கும் நமக்குமான தொடர்பு சீராக இருக்கும். ஆனால் இப்போது வெவ்வேறு வேளைகள் வெவ்வேறு இடத்திலிருந்து சாப்பிடுகிறோம். உடலில் பல்வேறு வகையான பாக்டீரியாக்கள் செல்கின்றன. அவை ஒன்றோடு ஒன்று சண்டையிடுகின்றன. அப்போது வாயு உற்பத்தியாகும். இவை எல்லாம் குடலுக்கு உகந்தது அல்ல.

மன அழுத்தம், கல்லீரல், குடல் ஆரோக்கியம் இவற்றுக்கான தொடர்பு என்ன?

சாலையில் நீங்கள் நடந்து செல்லும் போது திடீரென ஒரு லாரி உங்கள் மீது இடிப்பது போல வந்து, நின்றுவிட்டது என்று வைத்துக் கொள்ளலாம். "எனக்கு வயிறு கலக்கிவிட்டது" என்று கூறியிருப்பீர்கள். பதட்டமடையும் போது ஏன் வயிறு கலக்கிறது? நாம் பதட்டம் அடையும் போது வெளியாகும் சில சுரப்பிகள் குடலில் மாற்றங்களை உண்டாக்கும். நிறைய பேருக்கு தற்போது வேலை சூழல் மன அழுத்தம் நிறைந்ததாக இருக்கிறது. அவர்களது உடலில் அதிகபடியான சுரப்பிகள் வெளியாகின்றன. அவை குடலை பாதிக்கும். குடல் சாப்பாட்டை உடனே வெளியேற்றிவிட வேண்டும் என்று நினைக்கும். எனவே தான் சிலருக்கு சாப்பிட்ட உடன் கழிவறை பயன்படுத்த வேண்டிய உந்துதல் ஏற்படும். இவை எல்லாமே மன அழுத்தம் தொடர்பானது தான்.

பாராசிட்டமால் அதிகமாக சாப்பிட்டால் கல்லீரல் பாதிப்பு ஏற்படுமா?

குடிபழக்கம் இல்லாத போதும் கல்லீரல் பாதிக்கப்படுவது ஏன்?

பட மூலாதாரம்,GETTY IMAGES

பாராசிட்டமாமல் தேவைக்கு அதிகமாக எடுத்துக் கொள்ளும் போது கண்டிப்பாக கல்லீரல் பாதிப்பு, சில நேரங்களில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலையும் ஏற்படலாம். குழந்தைகளில் பாராசிடாமல் பாய்சனிங் (paracetamol poisoning) அதிகம் காணப்படுகிறது. குழந்தைகளுக்கு காய்ச்சல் குறையவில்லை என்ற காரணத்தினால் பெற்றோர்கள் அறியாமையினால் மருத்துவர் கூறியதை விட அதிகமாக கொடுப்பார்கள். அதனால் கல்லீரல் பாதிப்பு கண்டிப்பாக ஏற்படுகிறது. மருந்துகள் கொடுத்து நிலைமை சீராகவில்லை என்றால், கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்வதை தவிர வேறு வழியில்லை. ஒவ்வொருவரும் எவ்வளவு பாராசிடாமல் எடுத்துக் கொள்ளலாம் என்பது ஒவ்வொருவரின் உடல் நிலையை பொருத்தது. ஏற்கெனவே குடிபழக்கத்தினால் கல்லீரல் பாதிப்பு ஏற்படத் தொடங்கியுள்ள நபருக்கு ஒரு சில மாத்திரைகள் கூட ஆபத்தாக இருக்கலாம். ஆரோக்யமாக இருப்பவர்களுக்கு ஒரு நாளுக்கு பல மாத்திரைகள் சாப்பிட்டால் கூட பாதிப்பு இருக்காது. கல்லீரல் பாதிப்பு நோயாளிகளுக்கு அறுவை சிகிச்சைகளுக்கு பிறகு வலியை குறைக்கக் கூட பாராசிடாமல் கொடுப்பதை மருத்துவர்கள் தவிர்த்துவிடுவோம். அந்த அளவுக்கு பாராசிட்டமாலும் கல்லீரல் பாதிப்பும் ஒன்றுக்கொன்று தொடர்புடையது.

அதே போன்று உடல் எடை குறைப்பதற்கான பவுடர்களை உட்கொள்வதால் தீவிர கல்லீரல் பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனக்கு தெரிந்த இரண்டு மருத்துவர்கள் அதனை எடுத்துக் கொண்டனர். ஒருவர் இறந்துவிட்டார் . மற்றொருவருக்கு தீவிர பாதிப்பு ஏற்பட்டு தற்போது மெல்ல குணமாகிவருகிறார். அந்த பவுடரை எடுத்துக் கொள்ளும் போது திருப்தியாக சாப்பிட்ட உணர்வு கிடைக்கும். எனவே அந்த நாளில் நமக்கு தேவையான சத்துக்கள் எதையும் நாம் உட்கொள்ள மாட்டோம். அந்த பவுடரால் உடல் எடை குறையும். ஆனால் கல்லீரல் பாதிப்பை ஏற்படுத்தும். இது குறித்து பல ஆய்வுகள் உள்ளன.

பாதிப்படைந்த கல்லீரல் முழுவதும் பழைய நிலைக்கு திரும்ப வழி உண்டா?

கல்லீரல் நமது உடலின் மிக அற்புதமான உறுப்பாகும். கிரேக்க புராணங்களில் வரும் ப்ரோமதியஸ் என்பவருக்கு உடலிலிருந்து வெளியே தொங்கிக் கொண்டிருக்கும் கல்லீரலை காகம் ஒன்று தினமும் வந்து சாப்பிட்டுச் செல்லும். ஆனால் காகம் ஒவ்வொரு முறை வரும் போதும், கல்லீரல் பழைய நிலையில் வளர்ந்திருக்கும்.

கல்லீரலுக்கு மீண்டு வளரும் திறன் உள்ளது, ஆரோக்யமாக இருப்பவரின் கல்லீரலில் 70% வெட்டி எடுத்துவிட்டாலும், அந்த 30% கல்லீரல் அடுத்த ஆறு மாதங்களில் கிட்டத்தட்ட 80% ஆக வளர்ந்திருக்கும். குடிபழக்கத்துக்கு அடிமையானவர்கள், அந்த பழக்கத்தை அடியோடு விட்டுவிட்டால் அப்போது வரை ஏற்பட்டிருந்த பாதிப்புகள் நீங்கி கல்லீரல் மீண்டும் பழைய நிலைக்கு மீண்டும் திரும்பிவிடும். ஆனால் இதை தான் குடிப்பவர்கள் சிலர் தவறாக பயன்படுத்திக் கொள்கின்றனர். குடிப் பழக்கத்துக்கு அடிமையான எனது நோயாளி ஒருவர், அதிகமாக குடிக்கும் போது கண்கள் மஞ்சள் ஆகின்றன, தனக்கு மஞ்சள் காமாலை ஏற்படுகிறது என்று அவருக்கு தெரியும். ஒரு வாரம் சாப்பிடாமல் இருந்தால் சரியாகிவிடும் என்று கூறி கூறி குடித்துக் கொண்டே இருந்தார். இப்போது உயிரிழந்துவிட்டார். கல்லீரல் மீண்டு வளரும் திறன் கொண்டது என்றாலும் அதை தவறாக பயன்படுத்தினால் ஆபத்து ஏற்படும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwy7n54q4pyo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.