Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே.

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மைல்ஸ் பர்க்

  • பதவி,

  • 1 ஜூன் 2025, 02:13 GMT

உலகின் மிகவும் சவாலான விஷயங்களுள் ஒன்று, எவரெஸ்ட் மலை உச்சியை ஏறி அடைவது. தற்போது வரை வெகு சிலரே இதனைச் சாதித்துள்ள நிலையில் பலர் இந்த ஆபத்தான மற்றும் சவால் நிறைந்த பயணத்தில் உயிரிழந்தும் உள்ளனர். தற்போது வரை அதிகாரப்பூர்வமாக 330-க்கும் அதிகமானோர் இத்தகைய பயணங்களில் உயிரிழந்துள்ளதாக நேபாள அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.

1953-ம் ஆண்டு தான் முதல் முறையாக மனிதர்களால் எவரெஸ்ட் உச்சியை அடைய முடிந்தது. இதனைச் சாதித்தவர்கள் நியூசிலாந்தைச் சேர்ந்த எட்மண்ட் ஹிலாரி மற்றும் நேபாளியரான டென்சிங் நோர்கே.

உலகம் முழுவதும் உள்ள மலையேற்ற வீரர்களுக்கு எவரெஸ்ட் ஏன் சொர்க்கபுரியாக உள்ளது, அங்கு அவ்வாறு என்ன தான் உள்ளது, அதன் உச்சியை முதலில் அடைந்த இருவர் எவ்வாறு அதனைச் சாதித்தனர்?

உலகத்தின் உச்சியை அடைந்தபோது எப்படி இருந்தது?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

படக்குறிப்பு,எட்மண்ட் ஹிலாரி பிபிசிக்கு அளித்த பேட்டி

எவரெஸ்ட் உச்சியை அடைய எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே உலகின் ஆபத்தான மலைப்பகுதியில் கடினமான பாறைகளை ஏறி, உறைய வைக்கும் பனி மற்றும் ஆக்சிஜன் போதாமை போன்றவற்றை சமாளிக்க வேண்டியிருந்தது. 72 ஆண்டுகள் முன்பு நிகழ்ந்த இந்த சாதனை பற்றி இருவரும் பிபிசியிடம் பகிர்ந்து கொண்டிருந்தனர்.

உலகின் உயரமான புள்ளியை அடைந்த போது ஏற்பட்ட உணர்வை விவரித்த ஹிலாரி, "நான் முதலில் நிம்மதியாக உணர்ந்தேன்" என்று 1953-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி பிபிசிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருந்தார். "நாங்கள் மலை உச்சியை கண்டுபிடித்தோம் என்பதும் அந்த இடத்தை அடைந்தோம் என்பதும் நிம்மதி அளிக்கக் கூடியதாக இருந்தது" என டென்சிங் தனது மொழிபெயர்ப்பாளர் மூலம் தெரிவித்தார்.

கர்னல் ஜான் ஹண்ட் தலைமையிலான குழு இந்தப் பயணத்தை மேற்கொண்டது. "முதலில் பெரு நிம்மதி அடைந்தோம், மிகவும் மகிழ்ச்சியாக உணர்ந்தோம்" எனத் தெரிவித்தார். இருவரும் நிம்மதி அடைந்ததற்கு நியாயமில்லாமல் இல்லை, ஏனெனில் எவரெஸ்ட் உச்சியை அடைவதற்குள் இவர்கள் மலையின் ஆபத்தான பகுதியில் ஏறவே முடியாத 40அடி உயரமுள்ள பாறையை ஏறி கடந்து தான் செல்ல வேண்டும். இந்த இடம் மரணப் பிரதேசம் என்று அழைக்கப்படுகிறது.

கடல் மட்டத்தில் இருந்து 8,849மீட்டர் (29,032 அடி) உயரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரம் நேபாளம் மற்றும் திபெத் எல்லையில் அமைந்துள்ளது. இதற்குப் பல பெயர்கள் வழங்கப்படுகின்றன. பிரிட்டன், இந்த மலைக்கு 1856-ல் சர்வேயர் ஜார்ஜ் எவரெஸ்டின் பெயரை வைத்தது. நேபாளில் இது சாகர்மாதா என்றும் திபெத்தில் சோமோலுங்மா (பூமாதேவி) என்றும் அழைக்கப்படுகின்றது.

மரணப் பிரதேசத்தில் என்ன நடக்கும்?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது.

மரணப் பிரதேசம் என்கிற பெயர் எவரெஸ்ட் மலையின் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு 1952ம் ஆண்டு பயணம் செய்த சுவிட்சர்லாந்து குழுவிற்கு தலைமை தாங்கிய எட்வார்ட் வைஸ்-டுனன்ட்டால் வழங்கப்பட்டது. டென்சிங் இந்தக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். இந்தப் பெயர் 8000 மீட்டருக்கு (26,000 அடி) மேல் மலையேறுபவர்கள் அடைகின்ற இடத்தைக் குறிக்கின்றது. அங்கு நிலவும் குறைந்த ஆக்சிஜன் சூழ்நிலையானது உடலில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும், உடலில் உள்ள அணுக்கள் சாகத் தொடங்கும். எவரெஸ்ட் மலையில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் இந்த மரணப் பிரதேசத்தில் தான் உயிரிழந்துள்ளனர்.

இத்தகைய குளிர்ந்த வெப்பநிலை, பலத்த காற்று மற்றும் குறைவான ஆக்சிஜனில் பிழைப்பதற்கு மனிதர்கள் பழக்கப்படவில்லை. மலையேறுபவர்கள் ஹைபோக்ஸியாவால் பாதிக்கப்படுவார்கள். இதில் முக்கியமான உறுப்புகளுக்கு போதுமான ஆக்சிஜன் கிடைக்காமல் உடல் மெல்ல மெல்ல சிதைய ஆரம்பிக்கும். மூளைக்கும் நுரையீரலுக்கும் ஆக்சிஜன் குறைவதால் இதய துடிப்பு அதிகரித்து மாரடைப்பிற்கான ஆபத்துகள் அதிகமாகும். மூளைக்குச் செல்லும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் அது வீங்கி தலைவலியை, குமட்டலை உண்டாக்கும். இதனால் பதற்றம் உருவாவதால் மலையேறுபவர்களின் முடிவெடுக்கும் திறன் மட்டுப்படும். மூளை வீக்கம் அடைவதால் மலையேற்ற வீரர்கள் மயக்க நிலையை உணர்வார்கள். இதனால் இல்லாத நபர்களிடம் பேசுவது, பனியில் தோண்டுவது அல்லது துணிகளைக் கழற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுவார்கள்.

எவரெஸ்ட் மலையேற்றத்திற்கு எப்படி தயாராகினர்?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, எவரெஸ்ட் மலையேற்றம்

டென்சிங் மற்றும் ஹிலாரி இந்தப் பயணத்தில் உள்ள மற்றவர்களுடன் இமயமலையில் உள்ள கடினமான சூழ்நிலைகளுக்குப் பழகிக் கொள்ள உயரமான இடங்களில் தொடர்ந்து முகாமிட்டனர். அதன் பின்னர், 1953ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் படிப்படியாக ஏறத் தொடங்கினர். இது அவர்களின் நுரையீரல் திறனை அதிகரிக்கவும் நுரையீரலில் இருந்து உடலின் மற்ற இடங்களுக்கு ஆக்சிஜனை எடுத்துச் செல்ல உதவும் ரத்தத்தில் உள்ள புரதமான ஹீமோகுளோபினை அதிகமாக உற்பத்தி செய்யவும் அனுமதிக்கிறது. இதன்மூலம் எவரெஸ்ட் உச்சியை நோக்கி செல்ல செல்ல ஏற்படும் ஆக்சிஜன் குறைபாட்டை ஈடு செய்ய முடிகிறது. இவ்வாறு புதிய தட்பவெட்ப நிலைக்குப் பழக்கப்படுவதில் சிக்கல்களும் உள்ளன, ஏனென்றால் கூடுதல் ஹீமோகுளோபின் அளவு என்பது ரத்தத்தை தடிமனாக்கும். இது சுழற்சியை மேலும் கடினமாக்கும், இதனால் மாரடைப்புக்கான சாத்தியங்கள் மற்றும் நுரையீரலுல் திரவங்கள் சேர்வதை அதிகரிக்கிறது.

ஆனால் கடல் மட்டத்தில் இருந்து 6000மீட்டருக்கு (19,700 அடி) அதிகமான உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலைக்கும் 8,790 மீட்டர் (28,839) உயரத்திற்கு மேல் அமைந்திருக்கும் அவர்கள் கடக்க வேண்டிய செங்குத்தான பாறையை கடப்பதற்கும் உடலை பழக்கப்படுத்துவதும் என்பது சாத்தியமற்றது. எனவே அந்த உயரத்தில் நிலவும் தட்பவெட்ப நிலையின் தாக்கங்களை சமாளிப்பதற்கென்றே பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆக்சிஜன் உபகரணங்களை அவர்கள் எடுத்து வந்திருந்தனர். ஆனால் அவர்களை எதிர்நோக்கி இருக்கும் சவால்களை பற்றி அவர்கள் எந்த கற்பனையும் கொண்டிருக்கவில்லை. இதற்கு மூன்று நாட்கள் முன்பு தான் அதே குழுவைச் சேர்ந்த டாம் போர்டில்லன் மற்றும் சார்லஸ் எவன்ஸ் உச்சியை அடைவதற்கு 100 மீட்டர் இருக்கும்போது செயலிழந்த ஆக்சிஜன் உபகரணங்கள் மற்றும் நடுங்க வைக்கும் குளிர்ந்த காற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஏற முடியாமல் திரும்பினர்.

குழு முயற்சி

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, டென்சிங் மற்றும் ஹிலாரியின் குழு

29 மே 1953 அன்று டென்சிங் மற்றும் ஹிலாரி குழுவின் இரண்டாவது முயற்சியை தொடங்கினர். பனிக்கு நடுவே மலை முகடுகளைக் கடந்து உச்சியை நோக்கிச் சென்றனர். பனியைக் கடந்து பயணித்தபோது தங்களால் தொடர்ந்து செல்ல முடியுமா என ஹுல்லாரிக்கு சந்தேகங்கள் எழுந்ததாக அவரின் மகன் பீட்டர் 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் கூறியிருந்தார்.

"எனக்கு நினைவில் இருக்கக்கூடிய விஷயம் என்னவென்றால் அந்த சறுக்கலான பனி மற்றும் பாதையைக் கடந்தது பற்றி அவருடைய விவரிப்புகள் தான். அவர் அந்தப் படிகள், பனிப் போர்வை மற்றும் உடைந்துவிழும் பனிக்கட்டிகளைக் கடந்து திபெத்தை நோக்கியுள்ள எவரெஸ்டின் காங்ஷுங் பக்கத்தை நோக்கி (கிழக்கு பக்கம்) சென்றார். அவர் இதைக் கூறியுள்ளார், நான் அவரின் நாட்குறிப்பிலும் பார்த்துள்ளேன். அங்குள்ள சூழ்நிலைகள் மற்றும் தொடர்ந்து செல்வது பாதுகாப்பாக இருக்குமா ஆகியன குறித்து சந்தேகம் வரத் தொடங்கியதாக குறிப்பிட்டுள்ளார்" என்றார் பீட்டர். மேலும், "அவர் இந்தக் கதையை கண்களில் பிரகாசத்துடனும் ஒரு புன்னகையுடனும் சொன்னது எனக்கு நினைவிக்கிறது. தானும் டென்சிங்கும் ஒருவரை ஒருவர் பார்த்து புன்னகைத்தபடியே அந்தச் சூழ்நிலைகளையும் பொருட்படுத்தாமல் தொடர்ந்து சென்றோம் எனக் கூறினார்" என்றார்.

ஹிலாரி உடன் சென்ற டென்சிங் இதனை விதி என உணர்ந்தார், "அவருக்கு மலைகள் மீது ஒரு ஈர்ப்பு இருந்தது. இது அவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு மலையாகும்" என அவரின் மகன் ஜாம்லிங் நோர்கே 2023-ல் பிபிசி விட்னஸ் ஹிஸ்டரி நிகழ்ச்சியில் தெரிவித்தார். "ஏற்கெனவே 21 வருடங்களில் 6 முறை இந்த மலையை ஏற முயற்சித்திருந்தார். சுவிஸ் அணியுடன் செல்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு உச்சிக்கு 400 மீட்டர் வரைச் சென்று திரும்ப வேண்டியதாயிற்று. அவர் எப்போதுமே அது தான் ஏற வேண்டிய மலை என்றே உணர்ந்தார்" என்றார்.

செங்குத்தான பாறையை கடந்தது எப்படி?

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது.

இந்த செங்குத்தான பாறை தான் இந்த இரு மலையேறுபவர்களுக்கும் அவர்களின் இலக்குக்கும் இடையே மிகப்பெரிய தடையாக இருந்தது. கை அல்லது கால் பிடிமானத்திற்கு எதுவுமே இல்லாத அதன் மென்மையான மேற்பரப்பு ஏறுவதற்கு சாத்தியமற்றதாகத் தெரிந்தது. டென்சிங் பிடியில் இருந்த கயிற்றை தன் மீது கட்டிக் கொண்டு ஹிலாரி தன்னுடைய உடலை பாறை முகடு மற்றும் அருகில் உள்ள பனி மேட்டிற்கு இடையே உள்ள ஒரு குறுகிய விரிசலான பகுதிக்குச் சென்றார், பனிக்கட்டி உடைந்து செல்லக்கூடாது என வேண்டிக் கொண்டே இருந்தார். அதன் பின்னர் வலியுடனே மெல்ல மேல்நோக்கிச் சென்றார். அவர் மேலே சென்ற பிறகு கயிற்றை கீழே விட அவரைப் பின் தொடர்ந்து டென்சிங்கும் சென்றார். அவர் கடந்து சென்ற பாறை, அவர் நினைவாக பிற்காலத்தில் ஹிலாரி ஸ்டெப் (Hillary step) எனப் பெயரிடப்பட்டது. இது 2015-ம் ஆண்டு நிகழ்ந்த மிக பயங்கரமான நிலநடுக்கத்தால் அழிந்துபோனது.

"கடைசி தருணங்களில் நாங்கள் அந்த மேட்டில் சென்றபோது அதன் உச்சியை காண முடியவில்லை" என 1953-ல் பிபிசியிடம் ஹிலாரி தெரிவித்தார். "அது எங்களிடமிருந்து வலதுபக்கம் விலகிச் சென்றுகொண்டே இருந்தது. நாங்கள் அதைக் கடந்து வடக்கு பக்கம் உச்சி இருப்பதைப் பாரத்ததும் நிம்மதி அடைந்தோம். எங்களுக்கு மேல் 30, 40 அடி தூரத்தில் தான் உச்சி இருந்தது. நாங்கள் உச்சி மீது ஏறி நின்றோம்" என்றார் ஹிலாரி.

உலகத்தின் உச்சியை அடைந்ததும் இரு மலையேற்ற வீரர்களும் உற்சாக மிகுதியில் ஒருவரையொருவர் அரவணைத்துக் கொண்டனர். ஹிலாரி தன்னுடைய கேமராவை எடுத்து புகைப்படம் எடுக்கத் தொடங்கினார். இந்தியா, நேபாளம், ஐ.நா மற்றும் பிரிட்டன் கொடிகள் அடங்கிய கோடாரியை டென்சிங் அசைத்துக் காண்பித்துக் கொண்டிருந்தார். உலகத்தின் உச்சியிலிருந்து தெரிகின்ற காட்சிகளை அவர் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார். அவர் பனியில் ஒரு குழியை ஏற்படுத்தி சில இனிப்புகள் மற்றும் பிஸ்கட்டுகளை பௌத்த முறை படி புதைத்தார்.

"அங்கு எப்போதும் இருக்கக் கூடியது மாதிரியான பொருள் எங்களிடம் எதுவும் இல்லை" என ஹிலாரி பிபிசியிடம் தெரிவித்திருந்தார். "அங்கு ஒரு கற்குவியலை ஏற்படுத்துவது சாத்தியமற்றதாக இருந்தது. ஏனென்றால் பாறைகள் உச்சியில் இருந்து 30, 40 அடிக்கு கீழ் இருந்தன. டென்சிங் சில உணவுகளை பௌத்த கடவுள்களுக்கு காணிக்கையாக விட்டுச் சென்றார். நாங்கள் நான்கு கொடிகளை உச்சியில் விட்டுச் சென்றோம், ஆனால் அவை நிலைத்திருக்க வாய்ப்பில்லை" என்றார்.

மலையேற்றமும் உயிரிழப்புகளும்

எவரெஸ்ட், மலையேற்றம், நேபாள், திபெத்

படக்குறிப்பு, எட்மண்ட் ஹிலாரி மற்றும் டென்சிங் நோர்கே பேட்டி

இருவரும் 1924-ல் காணாமல் போன மலையேற்ற வீரர்களான ஜார்ஜ் மல்லோரி மற்றும் ஆண்ட்ரூ "சாண்டி" இர்வின் ஆகியோர் பற்றிய தடயங்களைத் தேடினர். மல்லோரி தான் எவரெஸ்ட் மலையை ஏன் ஏற வேண்டும் என பத்திரிகையாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு "ஏனென்றால் அது அங்கு உள்ளது" என்கிற பிரபலமான பதிலை அளித்திருந்தார். இருவர் தேடியும் எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. மல்லோரியின் உடல் 1999-ம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்டது அவரின் கூட்டாளி இர்வினின் உடலின் சில பகுதிகள் 2024-ல் உருகிய பனிப்பாறையால் வெளிப்பட்டது.

டென்சிங்கும் ஹிலாரியும் 15 நிமிடங்கள் தான் உச்சியில் இருந்தனர். "ஆக்சிஜன் குறைந்து கொண்டே வந்ததால் நாங்கள் திரும்பி கீழே வருவதில் குறியாக இருந்தோம்" என்றார் ஹிலாரி. எவரெஸ்ட் உச்சியை அவர்கள் ஒரு குழுவாகத் தான் அடைந்தார்கள் என்பதால் யார் முதலில் உச்சியால் ஏறினார் என்பதை தெரிவிக்கக்கூடாது என இருவரும் ஒப்பந்தம் செய்து கொண்டனர். ஆனால் 1955-ல் வெளியான டைகர் ஆப் தி ஸ்னோஸ் (Tiger of the Snows) என்கிற தனது சுயசரிதையின் மூலம் ஹிலாரி தான் முதலில் ஏறினார் என்பதை வெளிப்படுத்தி யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார் டென்சிங்.

அவர்கள் சோர்வுடன், கீழறங்கி முகாமை அடைந்தபோது அந்தக் குழுவைச் சேர்ந்த ஜார்ஜ் லோவிடம் "நாங்கள் அந்த இடத்தை எட்டி விட்டோம்" எனத் தெரிவித்தார் ஹிலாரி. அவர்களின் சாதனை பற்றிய செய்தி ராணி இரண்டாம் எலிசபெத் முடிசூடிய ஜூன் 2-ம் தேதி வரை வெளியுலகத்திற்குத் தெரியவில்லை. எட்மண்ட் மற்றும் கர்னல் ஹண்டுக்கு அரச பதக்கங்கள் வழங்கிய ராணி, டென்சிங்கிற்கு ஜார்ஜ் பதக்கத்தை வழங்கினார். இது அவர்களுக்கு ஒரே மாதிரியான மரியாதை ஏன் வழங்கப்படவில்லை என்கிற சர்ச்சையை உருவாக்கியது.

அடுத்தடுத்த வருடங்களில் அதிக அளவிலான சாகச வீரர்கள் அவர்களின் சாதனையை மீண்டும் செய்ய முயற்சித்துள்ளனர். இந்த மலையேற்றம் நேபாள அரசுக்கு முக்கியமான வருமான ஆதாரமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் 800 பேர் உச்சியை அடைய முயற்சித்தாலும் அது ஆபத்தான பயணமாகவே இருந்து வருகிறது. 2024-ல் ஒன்பது பேர் உயிரிழந்தனர் அல்லது காணாமல் போயினர் என்றும் அதற்கு முந்தைய வருடம் 18 உயிரிழந்துள்ளனர் என்றும் நேபாள சுற்றுலாத் துறை தெரிவிக்கிறது. நூற்றாண்டுக்கு முன்பு இந்தத் தரவுகள் எல்லாம் பதிவு செய்யத் தொடங்கியதில் இருந்து சுமார் 330-க்கும் அதிகமான இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்த உறைந்த உடல்கள் பல வருடங்களாக மலையிலே இருந்துள்ளன. ஆனால் புவிவெப்பமடைதலால் பனிப் பாறைகள் மற்றும் போர்வைகள் உருக இந்த உடல்கள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

2019-ஆம் ஆண்டு நேபாள அரசு மலையேற்ற வீரர்களின் உடல்களை மீட்கும் முடிவை எடுத்தது. கடந்த ஆண்டு மீட்பாளர்கள் தங்களின் உயிரைப் பணயம் வைத்து மலையின் ஆபத்தான மரணப் பிரதேசத்தில் இருந்து ஐந்து உடல்களை மீட்டு வந்தனர்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cn0gyz7g9l4o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.