Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

காணி நிலம் வேண்டும் பராசக்தி

viber_image_2024-03-18_09-54-35-963-02-1

சர்ச்சைக்குரிய அரச வர்த்தமானியை அரசாங்கம் மீளப் பெற்றிருக்கிறது. தமிழ்க் கட்சிகள் இந்த விடயத்தில் திரண்டு நின்று எதிர்ப்பைக் காட்டியதன் விளைவாக அது நடந்திருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் சிங்கள பௌத்த கடும்போக்குப் பிடிவாதத்தோடு அந்த வர்த்தமானியை நியாயப்படுத்தாமல் அதிலிருந்து பின்வாங்கியிருக்கிறது. அதே சமயம் இதில் கிடைத்த வெற்றிக்கு உரிமை கோரி அடிபடும் தமிழ்க் கட்சிகள் அதைப்போல ஆழமான அதோடு தொடர்புடைய ஒரு விடயத்தின் மீதும் கவனம் செலுத்த வேண்டிய நிர்ப்பந்தம் உண்டு.

தாய் நிலத்தை நிலப் பறிப்பிலிருந்து காப்பாற்றுவது அவசியம். அதேயளவு அவசியமானது, தாய் நிலத்தைச் சனச் செழிப்புடையதாகக் கட்டியெழுப்புவது. ஒருபுறம் உரிமை கோரப்படாத,அல்லது உரிமை கோர ஆட்கள் இல்லாத, அல்லது உரிமை கோரத் தேவையான ஆவணங்கள் இல்லாத காணிகள். இன்னொருபுறம் ஒரு துண்டுக் காணிகூடச் சொந்தமாக வைத்திருக்காத ஏழைகள்.

ஒருபுறம் பற்றைகள் மண்டிக் கிடக்கும் அல்லது பூதம் காக்கும் பிரம்மாண்டமான மாளிகைகள். அல்லது சிசிரீவி கமராக்களால் அல்லது செக்யூரிட்டி நிறுவனங்களால் பாதுகாக்கப்படும் பிரமாண்டமான மாளிகைகள். இன்னொருபுறம் ஒரு துண்டுக் காணி கூட இல்லாத ஒரு தொகுதி மக்கள்.

தமிழ் மக்கள் நிலப் பறிப்புக்கு எதிராகப் போராட வேண்டும். அதே சமயம் தாய் நிலத்தில் உள்ள ஆளில்லாத வீடுகளையும் காணிகளையும் வீடில்லாதவர்களுக்கும் காணி இல்லாதவர்களுக்கும் பகிர்ந்து கொடுக்க முன் வர வேண்டும். அதை ஒரு தேசக் கடமையாகச் செய்ய வேண்டும். தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒன்றாகச் செய்ய வேண்டும்.

அண்மையில் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஈடுபட்ட பெண் செயற்பாட்டாளர்களுடனான சந்திப்பொன்றின் போது,யாழ் புறநகர்ப் பகுதியைச் சேர்ந்த,ஒரு பெண் செயல்பாட்டாளர் சொன்னார், தன்னுடைய பகுதிக்குள் மட்டும் 24 ஆளில்லாத வீடுகள் உண்டு என்று. அதுபோல மானிப்பாயில் அந்தோணியார் கோவிலில் நடந்த பொதுமக்கள் சந்திப்பு ஒன்றின்போது அங்கு வந்திருந்த இளவாலை மறைக் கோட்டத்தைச் சேர்ந்த வெவ்வேறு பிரிவினர் தந்த தகவல்களின்படி, ஒவ்வொரு கிராமத்திலும் சராசரியாக பத்துக்குக் குறையாத ஆளில்லாத வீடுகள் உண்டு என்று தெரிகிறது.

தமிழர்கள் மத்தியில் ஆளில்லாத வீடுகள் இரண்டு வகைப்படும். முதலாவது வகை, ஆள் இல்லாத அல்லது பாழடைந்த சிதைந்த வீடுகள். இரண்டாவது வகை புலம்பெயர்ந்த தமிழர்கள் கட்டியெழுப்பும் மாடமாளிகைகள். புலம் பெயர்ந்த தமிழர்கள் தங்கள் சொந்த ஊர்களில் காணிகளை வாங்கி அல்லது வீடுகளை வாங்கி அவற்றைப் புனரமைத்து வருகிறார்கள். இந்த வீடுகளில் புலம்பெயர்ந்த தமிழர்கள் நிரந்தரமாக வசிப்பதில்லை. பருவ காலப் பறவைகளைப்போல அவ்வப்போது வந்து போகிறார்கள். ஊர்த் திருவிழாக்களுக்கு அல்லது நல்லது கெட்டதுக்கு வந்து போகிறார்கள். அவர்களுடைய அந்தஸ்தின் சின்னமாகிய அந்த வீட்டை ஒன்றில் சிசிரீவி கமராக்கள் கண்காணிக்கும். அல்லது பாதுகாப்பு நிறுவனங்கள் கண்காணிக்கும்.

இவ்வாறாக, தமிழர் தாயகத்தில் இரண்டு வகை ஆளில்லாத வீடுகள் உண்டு. அதிலும் குறிப்பாக ஆளில்லாத பாழடைந்த வீடுகள் என்று பார்த்தால் தீவுப் பகுதிதான் அவ்வாறான வீடுகளை அதிகமாகக் கொண்டிருக்கிறது. இலங்கைத் தீவிலேயே ஏன் இந்தப் பிராந்தியத்திலேயே ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட கிராமங்களைத் தீவுப் பகுதியிலும் காணமுடியும். இவ்வாறு ஆளில்லா வீடுகளை அதிகமாகக் கொண்ட ஒரு தேசத்தில், ஆண்டு அனுபவிக்க ஆளில்லாத காணிகளை அரசாங்கம் அபகரிக்க முயற்சிக்கின்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு பலாலியில் காணிகளை விடுவிக்கும் நிகழ்வொன்றில் பேசிய ஒரு தளபதி, “தமிழ் மக்கள் காணிக்காகப் போராடுகிறார்கள். ஆனால் விடுவிக்கப்பட்ட காணிகளில் வந்து குடியேறுகிறார்கள் இல்லை” என்று பேசியதாக ஒரு சமயப் பிரமுகர் என்னிடம் சொன்னார்.

முகாமை அண்டிய பகுதிகளில் ஏன் மக்கள் குடியேற மறுக்கிறார்கள் என்பதற்குப் பல காரணங்கள் உண்டு. முன்பு அவர்கள் இருந்தது ஒரு கிராமம். ஆனால் மீளக்கூடியமர்த்தும் போது அவர்களுக்குக் கையளிக்கப்படுவது பெரும்பாலும் ஒரு வெட்டை. ஒரு பெரிய முகாமின் சிறிய பகுதியாக மாற்றப்பட்டு வெட்டையாக்கப்பட்ட ஒரு இடம். எனவே அங்கே திரும்ப ஒரு கிராமத்தை ஸ்தாபிப்பதற்கு பல ஆண்டுகள் செல்லும். கிராமம் என்பது நிலம் மட்டுமல்ல. கிணறு வேண்டும்; கோயில் வேண்டும்; குளம் வேண்டும்; பாடசாலைகள் அரச அலுவலகங்கள் வேண்டும்; மின்சார, நீர் வினியோகங்கள் வேண்டும்… அதற்குரிய எல்லா உட்கட்டுமானங்களும் கட்டியெழுப்பப்படும் பொழுதுதான் அது ஒரு கிராமமாக மீள எழுச்சி பெறும்.எனவே மீளக் குடியேற்றம் எனப்படுவது தனிய நிலத்தைக் கையளிப்பது மட்டுமல்ல. அங்கு ஏற்கனவே செழிப்பாக இருந்து பின்னர் சிதைக்கப்பட்ட அழிக்கப்பட்ட ஒரு வாழ்க்கையை மீளக்கட்டி எழுப்புவது. வெட்டப்பட்ட வேர்களில் இருந்து மீண்டும் ஒரு வனத்தை உருவாக்குவது போல.

ruins-of-war-574x1024.jpg

மேலும், மூன்று தசாப்தங்களுக்கு முன்பு இடம்பெயர்ந்த மக்களுக்குப் பிறந்த பிள்ளைகள் இப்பொழுது இடம்பெயர்ந்து வாழும் புதிய இடங்களுக்குப் பழக்கப்பட்டு விட்டன. புதிய தலைமுறையின் தொழில் வாய்ப்புகளும் புதிய இடத்தைச் சுற்றித் தான் இருக்கும். இதனால் பூர்வ நிலத்துக்குத் திரும்பிச் செல்ல அந்தப் புதிய தலைமுறை தயங்குகிறது.

இப்படிப்பட்டதோர் சமூகப் பொருளாதார அரசியல் பின்னணியில், அண்மையில் கிடைத்த சனத்தொகைப் புள்ளிவிபரங்களின்படி,வடபகுதியில் சனத்தொகை வீழ்ச்சி கண்டுள்ளது. தமிழ் மக்கள் மத்தியில் பிள்ளைப்பேறு விகிதம் தாயகத்திலும் புலம்பெயர்ந்த மக்கள் மத்தியிலும் குறைந்து கொண்டே போகிறது. ஒருபுறம் ஜனத்தொகை சிறுக்கின்றது. இன்னொருபுறம் நிலமும் சிறுக்கின்றது.

தவிர,இருக்கின்ற நிலத்திலும் ஆளில்லா வீடுகள். எனவே இந்த விடயத்தில் நிலத்தை அபகரிக்க முற்படும் சிங்கள பௌத்த பெருந்தேசிய வாதத்திடமிருந்து தாய் நிலத்தைக் காப்பாற்றுவதற்காக போராடும் அதே சமயம் தாய் நிலத்தைச் சனப்புழக்கம் உடையதாகக் கட்டியெழுப்புவது பற்றியும் சிந்திக்க வேண்டும். ஆளில்லா வீடுகளை வைத்திருக்கும் உள்நாட்டுத் தமிழர்களும் புலம்பெயர்ந்த தமிழர்களும் தங்களிடமுள்ள மேலதிக காணிகளையும் வீடுகளையும் வீடில்லாதவர்களுக்கும் காணிகள் இல்லாதவர்களுக்கும் தானமாக வழங்கலாம்.

தமது பூர்வீக காணியை,பூர்வீக வீட்டைப் பாதுகாக்க வேண்டும் என்ற விருப்பத்தை நாங்கள் குறைத்து மதிப்பிட முடியாது. எல்லாரும் தங்களுடைய பூர்வீக வீட்டையும் காணியையும் தானம் பண்ண வேண்டும் என்று இந்தக் கட்டுரை கேட்கவில்லை.மாறாக தமிழர் தாயகத்தில் பூதம் காக்கும் ஆளில்லாத வீடுகளை வீடில்லாதவர்களுக்கும்,பற்றைகள் மண்டிக் கிடக்கும் காணிகளை நிலம் இல்லாதவர்களுக்கும் விரும்பினவர்கள் தானமாக வழங்கலாம். அதை ஒரு அரசியல் செயற்பாட்டு இயக்கமாக முன்னெடுக்கலாம்

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் வினோபா அவ்வாறு பூமிதான இயக்கம் ஒன்றை நடத்தினார். சுதந்திரப் போராளியான அவர் காந்தியின் செல்வாக்குக்கு உள்ளாகி குறிப்பாக ஆந்திராவில் இடம்பெற்ற நிலமற்ற விவசாயிகளின் போராட்டப் பின்னணியில் 1951ஆம் ஆண்டு பூமிதான இயக்கத்தைத் தொடங்கினார்.

புலம்பெயர்ந்த தமிழர்கள் இந்த விடயத்தில் முன்னுதாரணமாக இருக்க முடியும். அதற்கு முன்னுதாரணங்கள் ஏற்கனவே உண்டு.கிளிநொச்சியில் பன்னங்கண்டிக் கிராமத்தில் சிவா பசுபதி கமத்தில் உள்ள மேட்டு நிலம் அவ்வாறு அங்கே குடியிருக்கும் மலையக மக்களுக்கு கொடையாக வழங்கப்பட்டது.

அது ஒரு வித்தியாசமான கதை. 2017 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் உள்ள காவேரி கலாமன்றத்தின் நிகழ்வு ஒன்றில் பங்குபற்றதற்காக ஒஸ்ரேலியாவில் இருந்து மாலதி வரன் எனப்படும் ஒரு மருத்துவர் வந்திருந்தார். அவர்களோடு இணைந்து யாழ்ப்பாணத்துக்குப் பயணம் செய்ய வேண்டிய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வன் உரிய நேரத்தில் வராமல் பிந்தி வந்திருக்கிறார்.ஏன் என்று கேட்டபோது, பன்னங்கண்டி கிராமத்தில் நடக்கும் நிலமற்ற மக்களின் போராட்டத்தில் செய்தி சேகரிக்கச் சென்ற காரணத்தால் பிந்தி வந்ததாகக் கூறியுள்ளார். உரையாடலின் போக்கில் அந்த காணியின் பெயர் சிவா பசுபதி கமம் என்றும் கூறியுள்ளார்.சிவா பசுபதி என்ற பெயரைக் கேட்டதும் அவர்களோடு பயணம் செய்த மாலதி வரன், இடையில் குறுக்கிட்டு அது தனது தந்தையாகிய முன்னாள் சட்டமா அதிபர் சிவா பசுபதியின் கமம்தான் என்று கூறியுள்ளார். அதனால் அவரை கமத்துக்கு அழைத்துக் கொண்டுபோய் அங்கே போராடும் மக்களோடு கதைக்க வைத்துள்ளார்கள். மக்களோடு கதைத்த மாலதி,வெளிநாடுகளில் வசிக்கும் தனது எழு சகோதரர்களோடு கதைத்த பின் அந்தக் கமத்தைப் போராடும் மக்களுக்கே வழங்கத் தான் தயார் என்றும் உறுதி கூறியுள்ளார். உடனடியாகவே கொழும்புக்குச் சென்று தனது சகோதரர்களோடு கதைத்து அவர்களுடைய சம்மதத்தைப் பெற்றுக் கொண்டு கிளிநொச்சிக்குத் திரும்பி வந்திருக்கிறார்.அந்தக் கமத்தில் நீண்ட காலம் வசித்து வந்த நிலமற்ற மக்களுக்கு அந்தக் கமத்தைச் சேர்ந்த 33 ஏக்கர் மேட்டு நிலம் பகிர்ந்து அளிக்கப்பட்டது.

bb46791d-cb22-4046-9c86-1dab2c46a552-ccc

மாலதி வரனும் காவேரி கலா மன்ற இயக்குனரும்

இது போற்றத்தக்க ஒரு முன்னுதாரணம். நிலம் இல்லாத தன் இனத்தவனுக்கு நிலத்தைக் கொடுப்பது என்பது தேசத்தைக் கட்டியெழுப்பும் பணிகளில் ஒன்று. மருத்துவர் மாலதி வரனைப் போல பல புலம்பெயர்ந்த தமிழர்கள் தமது காணிகளை, வீடுகளைத் தானமாக வழங்கி வருகிறார்கள்.

காணி உரிமைக்கும் சாதி ஒடுக்கு முறைக்கும் இடையே நெருங்கிய தொடர்பு உண்டு.சில ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவில் இருந்து ஆராய்ச்சித் தேவைகளுக்காக இலங்கைக்கு வந்த பேராசிரியர் இசபெல்லா எனப்படும் புலமையாளரை சமூக ஏற்றத்தாழ்வுகளால் தாழ்த்தப்பட்ட மக்கள் வாழும் கிராமங்களுக்கு அழைத்துச் சென்றேன்.அக்கிரமங்களுக்குச் சென்று ஆராய்ந்தபின் அவர் கேட்டார்,”சாதி ஒடுக்குமுறைக்கும் நில உரிமைக்கும் இடையே தொடர்புகள் உண்டல்லவா?” என்று. அது மிக வெளிப்படையான எளிமையான ஓருண்மை.

எனவே நிலமில்லாத மக்களுக்கு தமது நிலத்தை வழங்குவதற்கு தமிழ் மக்கள் மத்தியில் உள்ள நிலச் சுவாந்தர்கள் முன் வர வேண்டும். புலம்பெயர்ந்த தமிழர்கள் முன் வர வேண்டும். அரசியல் கட்சிகளும் செயற்பாட்டாளர்களும் அரச சார்பற்ற நிறுவனங்களும் மேற்படி பணியை ஒருங்கிணைக்கலாம். அதை ஒரு செயல்வாதமாகவே ஒழுங்கமைக்கலாம்.விரைவில் உருவாக்கப்படவிருக்கும் பிரதேச சபைகள் அதைச் செய்யலாம்.

நில அபகரிப்புக்கு எதிராக போராடச் செயற்பாட்டாளர்கள் தேவை.அதுபோலவே நிலத்தைத் தானமாக கொடுப்பதற்கும் செயற்பாட்டு இயக்கங்களும் அறக் கொடைகளும் தேவை. தாய் நிலத்தைக் காப்பாற்றுவது என்பது தாய் நிலத்தை அபகரிக்க முற்படும் அரச வர்த்தமானிகளுக்கு எதிராகப் போராடுவது மட்டுமல்ல,அதேயளவு முக்கியத்துவத்துவமுடையது,தாய் நிலத்தை சனச் செழிப்பு மிக்கதாக மாற்றுவது.காணியற்ற மக்களுக்கு காணிகளை வழங்குவது;வீடற்ற மக்களுக்கு வீடுகளை வழங்குவது. அதுதான் உண்மையான தேசியக் கூட்டுணர்வு.

https://www.nillanthan.com/7440/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.