Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், கவிதா பூரி

  • பதவி, பிபிசி நியூஸ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

ஷாங்காயில், சியான் சேசென் (Qian Xuesen) என்ற "மக்கள் விஞ்ஞானிக்கு" 70,000 கலைப்பொருட்களைக் கொண்ட ஒரு முழு அருங்காட்சியகம் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் விண்வெளி மற்றும் ஏவுகணைத் திட்டத்தின் தந்தை என சியான் சேசென் போற்றப்படுகிறார்.

சீனாவின் முதல் செயற்கைக்கோளை விண்வெளியில் செலுத்தியவரும், ராக்கெட்டுகளை உருவாக்க உதவிய ஆய்வை மேற்கொண்டவருமான சியான் சேசென், அணு ஆயுதக் களஞ்சியத்தின் ஒரு பகுதியாக மாறிய ஏவுகணைகளையும் உருவாக்கத் தனது ஆய்வுகள் மூலம் உதவியவர்.

அவரது அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாகப் போற்றப்படுகிறார். ஆனால் அமெரிக்காவுக்காக பணிபுரிந்த அவர், சீனாவின் அறிவியல் தொழில்நுட்பத் துறையின் முக்கியமான நபராக மாறியது எப்படி?

அமெரிக்காவில் மேற்படிப்பு படித்து, அங்கேயே பணி புரிந்தார். அங்கு பத்து ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிய அவரை அமெரிக்கா நாட்டை விட்டு வெளியேற்றியது.

அண்மையில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ, கம்யூனிஸ்ட் கட்சியுடன் தொடர்பு கொண்டவர்கள் அல்லது "முக்கியமான துறைகளில்" படிப்பவர்கள் உள்பட சீன மாணவர்களுக்கான விசாக்களை அமெரிக்க நிர்வாகம் "திரும்பப் பெறுவதில் தீவிரம் காட்டும்" என்று அறிவித்தார்.

டொனால்ட் டிரம்பின் சட்டவிரோத குடியேற்றக் கொள்கைக்கு மத்தியில், நியூயார்க் டைம்ஸ் போன்ற ஊடகங்கள், விஞ்ஞானி சியான் சேசென் தொடர்பான செய்திகளை வெளியிட்டன. அமெரிக்கா பல தசாப்தங்களுக்கு முன்பு செய்த தவறைச் சுட்டிக் காட்டும் விதமாக இந்தச் செய்திகள் வெளியாகின.

சியான் சேன்சென் போன்ற திறமையாளர்களை வரவேற்பதற்குப் பதிலாக வெளியேற்றுவதன் அபாயங்கள் ஏற்கெனவே ஒரு காலத்தில் அமெரிக்காவை பாதித்துள்ளன.

அமெரிக்கா மீண்டும் தடுமாறி தவறு செய்கிறதா? சீன விஞ்ஞானி சியான் சேசென் போன்ற புத்திசாலித்தனமான நபர்களை வெளியேற்றியது, அமெரிக்க வரலாற்றில் மிக மோசமான தவறு என்று கூறப்பட்டது. இந்நிலையில், முந்தைய கால தவறையே அமெரிக்கா மீண்டும் தொடருமா என்ற கேள்வி தற்போது எழுப்பப்படுகிறது.

அறிவுத் திறனால் அமெரிக்காவில் கிடைத்த வாய்ப்பு

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தனது திறமையின் பயனாக அவர் எம்.ஐ.டியில் படிக்கும் வாய்ப்பைப் பெற்றார்

சீனாவின் ஏகாதிபத்திய வம்சம் முடிவடைந்து, அந்நாடு குடியரசாக மலரக் காத்துக் கொண்டிருந்த தருணத்தில் 1911ஆம் ஆண்டு சியான் சேசென் பிறந்தார்.

கல்வியில் சிறந்து விளங்கிய குடும்பத்தில் பிறந்த சியான் சேசென்னின் தந்தை ஜப்பானில் பணிபுரிந்து அங்கு பெற்ற அனுபவங்கள் மற்றும் தனது அறிவாற்றலால், சீனாவின் தேசிய கல்வி முறையை நிறுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

திறமை மிக்க மாணவரான சியான் சேசென், ஷாங்காய் ஜியாவோ டோங் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பில் முதலிடம் பிடித்தார். அது அவருக்கு அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் தொழில்நுட்ப நிறுவனத்தில் (MIT) சிறப்பு உதவித்தொகையைப் பெற உதவியது.

கடந்த 1935ஆம் ஆண்டில் அவர் பாஸ்டனுக்கு மேற்படிப்புக்காக வந்தார். அமெரிக்காவுக்கு மெலிதான உடல்வாகு கொண்ட, கண்ணியமான நபராக வந்து சேர்ந்தார்.

அமெரிக்காவில் அவர், அந்நிய வெறுப்பு மற்றும் இனவாத பிரச்னைகளை எதிர்கொண்டிருக்கலாம் என்று வடக்கு ஜார்ஜியா பல்கலைக் கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியர் கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார்.

ஆனால், "சீனா (அடிப்படையில்) குறிப்பிடத்தக்க வழிகளில் மாறிக் கொண்டிருக்கிறது என்ற நம்பிக்கை அந்தக் காலகட்டத்தில் நிலவியது." மேலும் அறிவுக்கு மதிப்பு கொடுத்தவர்களும் நிச்சயமாக இருந்திருப்பார்கள் என்று அவர் நம்புகிறார்.

கால்டெக் அனுபவங்கள்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1960இல் எடுக்கப்பட்ட வில்லியம் பிக்கரிங், தியோடர் வான் கர்மா மற்றும் பிராங்க் மலினாவின் புகைப்படம்

எம்ஐடியில் இருந்து கலிபோர்னியா தொழில்நுட்ப நிறுவனத்திற்கு (கால்டெக்) குடிபெயர்ந்த சியான் சேசென், அன்றைய மிகவும் செல்வாக்கு மிக்க விமானப் பொறியாளர்களில் ஒருவரான ஹங்கேரிய குடியேறி தியோடோர் வான் கர்மானிடம் படிக்கச் சென்றார்.

அங்கு அவர், மற்றொரு முக்கிய விஞ்ஞானியான பிராங்க் மலினாவுடன் இணைந்தார். 'சூசைட் ஸ்குவாட்' என்ற கண்டுபிடிப்பாளர்களின் சிறிய குழுவின் முக்கிய உறுப்பினராக பிராங்க் மலினா இருந்தார்.

பல்கலைக்கழக வளாகத்தில் ராக்கெட்டை உருவாக்க முயன்ற இந்தக் குழுவினரின் சில பரிசோதனைகள், ஆவியாகும் ரசாயனங்கள் மூலம் தவறாகிப் போனதால், அவர்களின் குழுவை தற்கொலைப் படை என்று அழைத்ததாக "Escape from Earth: A Secret History of the Space Rocket" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஃப்ரேசர் மெக்டொனால்ட் பிபிசியிடம் தெரிவித்தார். அவர்களின் அந்தப் பரிசோதனையில் யாரும் இறக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு நாள், மலினா மற்றும் அவரது குழுவின் பிற உறுப்பினர்களுடன் ஒரு சிக்கலான கணிதப் பிரச்னை பற்றிய விவாதத்தில் ஈடுபட்ட சியான், விரைவில் 'தற்கொலைப் படை' குழுவில் ஒருவராக மாறிவிட்டார். அவரும், ராக்கெட் உந்துவிசை குறித்த அடிப்படை ஆராய்ச்சியில் பங்களித்தார்.

அந்தக் காலகட்டத்தில், ராக்கெட் அறிவியல் என்பது "முட்டாள்கள் மற்றும் கற்பனையாளர்களின் பொருளாக" இருந்தது என்று மெக்டொனால்ட் கூறுகிறார்.

"ராக்கெட் அறிவியலை யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. கணிதத்தில் விருப்பம் இருந்த பொறியாளர்களில் யாருமே அதுதான் எதிர்காலம் என்று கூறி தனது நற்பெயருக்கு ஆபத்தை விளைவித்திருக்க மாட்டார்கள்." ஆனால் இரண்டாம் உலகப் போர் தொடங்கியவுடன், நிலைமை துரிதகதியில் மாறியது.

போர் படைப்பிரிவு

'தற்கொலைப் படை' அமெரிக்க ராணுவத்தின் கவனத்தை ஈர்த்தது, ஜெட் உதவியுடன் கிளம்புவது தொடர்பான ஆராய்ச்சிக்கு நிதியுதவி கிடைத்தது. குறுகிய ஓடுபாதைகளில் இருந்து விமானங்கள் புறப்பட ஏதுவாக ப்ரொப்பல்லர்கள் இணைக்கப்பட்டன.

கடந்த 1943ஆம் ஆண்டில் தியோடோர் வான் கார்மனின் வழிகாட்டுதலின் கீழ் ஜெட் புராபல்ஷன் ஆய்வகத்தை (JPL) நிறுவ ராணுவ நிதியும் கிடைத்தது. சியான் சேன்சென் மற்றும் ஃபிராங்க் மலினா இருவருமே திட்டத்தில் முக்கியமானவர்களாக இருந்தனர்.

அப்போதைய சீன குடியரசு அமெரிக்காவின் நட்பு நாடாக இருந்ததால், அமெரிக்க விண்வெளித் திட்டத்தில் சீன விஞ்ஞானி முக்கியப் பங்கு வகிப்பதில் எந்தச் சிக்கலும் எழவில்லை.

ரகசிய ஆயுத ஆராய்ச்சியில் பணியாற்ற பாதுகாப்பு அனுமதி பெற்ற சியானுக்கு, அமெரிக்க அரசின் அறிவியல் ஆலோசனைக் குழுவிலும் இடம் கொடுக்கப்பட்டது.

போரின் முடிவில், உலகின் முன்னணி ஜெட் உந்துவிசை நிபுணர்களில் ஒருவராக உயர்ந்தார். தியோடோர் வான் கார்மனுடன் ஜெர்மனிக்கு ஒரு முக்கியமான பணிக்காக அனுப்பப்பட்ட சியான் சேன்சென் அங்கு தற்காலிக லெப்டினன்ட் கர்னலாக பணியாற்றினார்.

ஜெர்மனியின் முன்னணி ராக்கெட் விஞ்ஞானியான வெர்ன்ஹர் வான் பிரவுன் உள்பட நாஜி பொறியாளர்களைச் சந்தித்துப் பேசுவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது. ஜெர்மனியர்களுக்கு தெரிந்த அனைத்தையும் சரியாக அறிய அமெரிக்கா விரும்பியது.

அந்த தசாப்தத்தின் இறுதியில், அமெரிக்காவில் சியானின் வாழ்க்கை திடீரென நிலைதடுமாறியது. அவரது வாழ்க்கையில் சிக்கல்கள் ஏற்படத் தொடங்கின.

சர்வதேச அரசியலில் மாற்றம்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சியானின் அளப்பறிய அறிவுக்காக, அவர் சீனாவின் கதாநாயகனாக போற்றப்படுகிறார்

கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார். அந்தப் பின்னணியில், சீனர்கள் என்றாலே "கெட்டவர்கள்" என்று பார்க்கும் போக்கு அமெரிக்காவில் தொடங்கிவிட்டதாக கிறிஸ் ஜெஸ்பர்சன் கூறுகிறார்.

"அமெரிக்காவில், சீனாவை நேசித்த காலகட்டம் முடிவுக்கு வந்தது. ஏதோ நடந்தது, திடீரென நாம் அந்நாட்டை இழிவாகப் பார்க்கத் தொடங்கி விட்டோம்," என்று வரலாற்றாசிரியர் பிபிசியிடம் கூறுகிறார்.

JPL-இன் புதிய இயக்குநர், தங்கள் ஆய்வகத்தில் உளவாளிகள் இருப்பதாக நம்பினார். சில ஊழியர்கள் குறித்த தனது சந்தேகங்களை எஃப்.பி.ஐ உடன் பகிர்ந்து கொண்டார். "அவர்கள் அனைவரும் சீனர்கள் அல்லது யூதர்கள் என்பதை அவர் கவனித்தார்," என்கிறார் ஃப்ரேசர் மெக்டொனால்ட்.

பனிப்போர் நடந்து கொண்டிருந்தது, மெக்கார்த்தி சகாப்தம் தொடங்கிய அந்த வேளை கம்யூனிச எதிர்ப்பு வீரியமடையத் தொடங்கிய காலம்.

இந்தக் காலகட்டத்தில்தான் எஃப்.பி.ஐ., சியான், ஃபிராங்க் மலினா மற்றும் பிறரை கம்யூனிஸ்டுகள் என்றும், தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துபவர்கள் என்றும் குற்றம் சாட்டியது.

சியான் சேன்சென் செய்த தவறு என்ன?

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1949இல் சீனாவில் கம்யூனிஸ்ட் மக்கள் குடியரசு உருவாக்கப்பட்டதாக அதன் தலைவர் மாவோ அறிவித்தார்

கடந்த 1938ஆம் ஆண்டு அமெரிக்க கம்யூனிஸ்ட் கட்சியின் ஆவணத்தின் அடிப்படையில் சியானுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் அமைந்தன. அவர் ஒரு சமூகக் கூட்டத்தில் கலந்து கொண்டார் என்பதை அது காட்டுகிறது. பசடேனா கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டமாக அது இருக்கலாம் என்று எஃப்.பி.ஐ சந்தேகித்தது.

கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இல்லை என்று சியான் கூறினாலும், அவர் 1938இல் பிராங்க் மலினாவுடன் இணைந்திருந்தார் என்பதை புதிய ஆராய்ச்சி உறுதி செய்தது.

ஆனால் இதனால் மட்டுமே அவர் ஒரு மார்க்சியவாதி என்று கூறிவிட முடியாது. இருப்பினும், அந்த நேரத்தில் கம்யூனிஸ்டாக ஒருவர் இருப்பது இனவெறிக்கு எதிரானது என்ற எண்ணம் நிலவியது என ஃப்ரேசர் மெக்டொனால்ட் தெளிவுப்படுத்துகிறார். இந்தக் குழு, பாசிசத்தின் அச்சுறுத்தலையும், அமெரிக்காவில் இனவெறியின் பயங்கரத்தையும் முன்னிலைப்படுத்த விரும்பியதாக அவர் கூறுகிறார்.

பிரிவினைக்கு எதிரான பிரசாரங்களைப் பற்றி விவாதிக்க அவர்கள் கம்யூனிஸ்ட் கூட்டங்களைப் பயன்படுத்தினார்கள். எடுத்துக்காட்டாக உள்ளூர் பசடேனா நீச்சல் குளத்தில் மதிய வேளையில் கறுப்பினத்தவர்கள் குளித்தால், அவர்கள் பயன்படுத்திய குளத்தை, வெள்ளையர்கள் பயன்படுத்தும் வகையில் சுத்தம் செய்வார்கள்.

பொமோனாவில் அமைந்திருக்கும் கலிபோர்னியா மாநில பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரான சூயோயு வாங், சியான் அமெரிக்காவில் இருந்தபோது சீனாவுக்காக உளவு பார்த்ததாகவோ அல்லது உளவுத்துறை முகவராக இருந்ததற்கோ எந்தவித ஆதாரமும் இல்லை என்று குறிப்பிடுகிறார்.

இருப்பினும் சந்தேகத்தின் அடிப்படையில் சியான் சேசெனின் பாதுகாப்பு அனுமதி பறிக்கப்பட்டது. அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். சியான் குற்றமற்றவர் என தியோடோர் வான் உள்பட சியானின் கால்டெக் சகாக்கள் அரசுக்கு எழுதிய கடிதங்களால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை.

ஐந்து ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த பிறகு, அன்றைய அமெரிக்க அதிபர் ஐசனோவர், சியானை சீனாவுக்கு நாடு கடத்த முடிவு செய்தார். 1955ஆம் ஆண்டில், தனது மனைவி மற்றும் அமெரிக்காவில் பிறந்த இரண்டு குழந்தைகளுடன் சீனாவுக்கு கிளம்பிய சியான் சேன்சென், மீண்டும் ஒருபோதும் அமெரிக்க மண்ணில் கால் வைக்க மாட்டேன் என்று செய்தியாளர்களிடம் கூறினார்.

இறுதி வரை தனது வாக்குறுதியை சியான் சேன்சென் காப்பாற்றினார்.

வேறொரு இலக்கை நோக்கி

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 1950இல் நாடு கடத்தப்படுவது தொடர்பாக நடந்த வழக்கின்போது தனது வழக்கறிஞர் கிராண்ட் கூப்பருடன் சியான்

"அமெரிக்காவின் மிக முக்கியமான விஞ்ஞானிகளில் ஒருவராகத் திகழ்ந்த சியான் சேன்சென், அறிவியலுக்கு மகத்தான பங்களிப்பைச் செய்திருந்தார். அவரால் இன்னும் அதிகமாகப் பங்களித்திருக்க முடியும். ஆனால், அவர் இவ்வாறு அவமதிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டது அவருக்கு அவமானம் மட்டுமல்ல, துரோகமும்கூட" என்று பத்திரிகையாளரும் எழுத்தாளருமான தியான்யு ஃபாங் கூறுகிறார்.

அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு கதாநாயகனைப் போல் சியான் சேன்சென் வந்தார். ஆனால் அவர் உடனடியாக சீன கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்க்கப்படவில்லை.

அதற்குக் காரணம், சியானின் மனைவி ஒரு தேசியவாதத் தலைவரின் செல்வ மகள். அதுமட்டுமல்ல, பதவி விலகும் வரை சியான் அமெரிக்காவில் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து வந்தார். மேலும், அமெரிக்க குடியுரிமைக்கு விண்ணப்பிப்பதற்கான முதல்கட்ட ஏற்பாடுகளையும் செய்யத் தொடங்கியிருந்தார்.

கடந்த 1958இல் சியான் சேன்சென் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினரானபோது, ஆட்சியின் நம்பிக்கைக்கு உரியவராகவே இருந்தார். இதனால் அவர் சுத்திகரிப்பு மற்றும் கலாசாரப் புரட்சியில் இருந்து தப்பிப் பிழைத்தார். சீனாவில் அவரது வாழ்க்கை நிம்மதியாகவும் மேம்பட்டதாகவும் இருந்தது.

அவர் சீனாவுக்கு வந்தபோது, அங்கு விண்வெளி அறிவியலைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. ஆனால் 15 ஆண்டுகளுக்குப் பிறகு சீனாவில் இருந்து ஏவப்பட்ட முதல் செயற்கைக்கோளுக்கான பணிகளை அவர் மேற்பார்வையிட்டார்.

பல தசாப்தங்களாக, அவர் புதிய தலைமுறை விஞ்ஞானிகளுக்கு பயிற்சி அளித்தார். அவரது சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

ஏவுகணைத் திட்டம்

சியான் சேசென், சீன விஞ்ஞானி, மக்கள் விஞ்ஞானி, வரலாறு

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சியானின் சீரிய முயற்சியால், சீனா தனது சொந்த விண்வெளி வீரர்களை சந்திரனுக்கு அனுப்புவதற்கான அடித்தளம் அமைக்கப்பட்டது.

சியான் உதவியுடன் சீனாவில் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணைத் திட்டம்தான், பின்னொரு காலத்தில் அமெரிக்காவை நோக்கி ஏவப்பட்ட ஆயுதங்களை உருவாக்க வழிவகுத்தது என்பது சரித்திரம் சொல்லும் உண்மை.

சியானின் "silkworm" ஏவுகணைகள் 1991 வளைகுடா போரில் அமெரிக்கர்கள் மீதும், 2016இல் ஏமனில் ஹுட்டு கிளர்ச்சியாளர்களால் யுஎஸ்எஸ் மேசன் மீதும் ஏவப்பட்டதாக ஃப்ரேசர் மெக்டொனால்ட் குறிப்பிடுகிறார்.

"இது காலத்தின் விசித்திரமான சுழற்சி: அமெரிக்கா வெளியேற்றிய சக்தி, திரும்ப அதையே தாக்கியது."

f41af710-3f8a-11f0-b6e6-4ddb91039da1.jpg

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சீனாவின் சாங்க்-4 2019ஆம் ஆண்டு நிலவின் வெகு தூரத்தில் கால் பதித்த முதல் செயற்கைக்கோளாக மாறியது

சியான் கிட்டத்தட்ட நூறு ஆண்டுகள் வாழ்ந்தார்.

அன்று பல விஷயங்களில் பின்தங்கியிருந்த சீனா, தற்போது பொருளாதார ரீதியாக மட்டுமல்ல, பூமியிலும் விண்வெளியிலும் வல்லரசாக வளர்ந்துள்ளது. அந்த மாற்றத்தின் ஒரு பகுதியாக சியான் இருந்தார்.

ஆனால் அவரது கதை அமெரிக்காவை பெருமைப்படுத்தும் ஒன்றாகவும் இருந்திருக்கக்கூடும். திறமையுள்ள ஒருவர் எங்கு இருந்தாலும் செழித்து வளர முடியும் என்பதை நிரூபித்துவிட்டார் சியான் சேன்சென்.

கடந்த 2019ஆம் ஆண்டில், சந்திரனின் தொலைதூரப் பகுதியில் சீனா தரையிறங்கிய இடத்திற்கு, அமெரிக்காவில் சியானுக்கு வழிகாட்டியாய் திகழ்ந்த விமானப் பொறியாளர் வான் கார்மனின் பெயர் சூட்டப்பட்டது.

அமெரிக்காவின் கம்யூனிச எதிர்ப்பானது, சீனாவை விண்வெளிக்கு கொண்டு செல்ல உதவியது என்று கூறப்படுகிறது.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c14km2jxlzvo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.