Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அறிகுறிகளே இல்லாமல் செயலிழக்கும் சிறுநீரகங்கள் - ஆபத்தை தவிர்க்க என்ன செய்யலாம்?

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்புக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தோன்றுவதில்லை என்கின்றனர் நிபுணர்கள்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி

  • பதவி, பிபிசி தமிழ்

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்நாட்டில் சிறுநீரக செயலிழப்பை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து, அதற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக, கடந்த 2023-ஆம் ஆண்டு, ஜூலை மாதம் 'சிறுநீரகம் காக்கும் சீர்மிகு மருத்துவ திட்டம்' தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் கீழ், நீரிழிவு நோயாளிகள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சிறுநீரக பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இத்திட்டம் குறித்து சமீபத்தில் தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறுகையில், "விவசாய தொழிலாளர்கள், கட்டட வேலை செய்வோருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதுதவிர, தமிழ்நாட்டில் நீரிழிவு நோயாளிகள், உயர் ரத்த அழுத்தம் கொண்டவர்கள் என 2 கோடி பேர் உள்ளனர். சிறுநீரக செயலிழப்பால் இவர்களும் பாதிக்கப்படக்கூடும்.

1.07 கோடி பேருக்கு பரிசோதனை செய்ததில் 33,869 பேருக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் கண்டறியப்பட்டுள்ளன. அவர்கள் மேல் சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. ஆரம்ப நிலையிலேயே சிறுநீரக பரிசோதனை செய்து சிகிச்சை அளிக்கப்படுவதால் சிறுநீரக செயலிழப்பை தடுக்க முடியும்." என்று கூறினார்.

சிறுநீரக செயலிழப்பு ஏன் ஏற்படுகிறது, அதற்கான அறிகுறிகள் என்ன, தடுக்கும் வழிமுறைகள் என்ன என்பது குறித்து நிபுணர்கள் பகிர்ந்த தகவல்கள் இங்கே…

"சிறுநீரகம் சார்ந்த நோய்களை இரண்டாக பிரிக்கலாம். ஒன்று, தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், மற்றொன்று தடுக்க இயலாத சிறுநீரக பிரச்னை.

தடுக்கக்கூடிய சிறுநீரக பிரச்னைகள், நம்முடைய வாழ்வியல் மாற்றங்களால் ஏற்படுகின்றன. அதில், முதன்மையாக நீரிழிவு, ரத்த அழுத்தம் ஆகிய வாழ்வியல் நோய்களால் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுகின்றன. இவற்றை நாம் தடுக்க முடியும்.

ஆனால், மரபியல் ரீதியாக ஏற்படும் சிறுநீரக பிரச்னைகளை நாம் தடுக்க முடியாது." என விளக்குகிறார் சென்னையை சேர்ந்த சிறுநீரகவியல் நிபுணர் சங்கநிதி.

"ஆரம்பத்தில் நாம் வேட்டையாடும் சமூகங்களாக இருந்தோம். அதன்பின், வேளாண்மை செய்ய ஆரம்பித்தோம். இப்போது, கடைகள், ஹோட்டல்களில் சாப்பிட ஆரம்பித்து, வீட்டுக்கே இன்று உணவு வருகின்றது. துரித உணவுகளை அதிகமாக சாப்பிடுகிறோம். இப்படியான சூழலில் நம் உடலுக்கு எது சிறந்தது என்பதை அறிந்து உண்ண வேண்டும். அதுதான், நம் சிறுநீரகங்களை காப்பதற்கு நாம் செய்யும் அதிகபட்ச தடுப்பு வழியாக இருக்கும்," என்றார் மருத்துவர் சங்கநிதி.

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்பை தடுப்பதில் உப்பின் அளவை குறைப்பதும் பெரும் பங்கு வகிக்கிறது

சிறுநீரக ஆரோக்கியம் என்று வரும்போது, நாம் எடுத்துக்கொள்ளும் உப்பு, சர்க்கரையில் அதிக அக்கறை செலுத்த வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

"ஏனெனில், நீங்கள் ஒரு டயாலிசிஸ் பிரிவுக்கு செல்வதாக எடுத்துக்கொள்வோம். அங்குள்ள சிறுநீரக நோயாளிகளுள் 70% மேல் நீரிழிவு நோயாளிகளாகவே இருப்பார்கள்." என்கிறார் சிறுநீரகவியல் நிபுணர் சங்கநிதி.

சிறுநீரக ஆரோக்கியம் சார்ந்த கேள்விகளுக்கான பதில்களை சங்கநிதி பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்.

சிறுநீரக ஆரோக்கியத்துக்கு நாம் எடுத்துக்கொள்ளும் உப்பின் அளவு மிக முக்கியம், அப்படியென்றால் ஒருநாளுக்கு எவ்வளவு உப்பு எடுக்க வேண்டும்?

உப்பை பொறுத்தவரையில் 5 கிராம்தான் ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்ள வேண்டும் என, உலக சுகாதார மையம் பரிந்துரைக்கிறது.

''ஒரு சிறிய டீஸ்பூன் அளவுக்கான உப்பைதான் தினமும் எடுக்க வேண்டும். அதுதவிர, நாம் அப்பளம், ஊறுகாய், ஃபிரெஞ்சு ஃப்ரை, சிப்ஸ், பிஸ்கெட், பிரெட் உள்ளிட்ட பேக்கரி உணவுகள் என, தேவைக்கு மிக அதிகமாக உப்பை எடுத்துக்கொள்கிறோம். பதப்படுத்துவதற்காகத்தான் நாம் ஆரம்பத்தில் உப்பை பயன்படுத்தினோம், உப்பின் பயன்பாடு ஆரம்பத்தில் சுவையை அதிகப்படுத்துவது அல்ல. எனவே, நம்மால் எவ்வளவு உப்பை குறைக்க முடியுமோ அவ்வளவையும் குறைக்க வேண்டும்'' என்கிறார் சங்கநிதி.

கர்ப்பத்தின் போதே ஒருவர் எடுத்துக்கொள்ளும் சர்க்கரை, உப்பின் அளவை குறைக்க வேண்டும். ஏனெனில், இது இரண்டும் கருவின் ஆரோக்கியத்தைப் பாதிக்கும் என கூறுகிறார் சங்கநிதி

''அதுமட்டுமல்லாமல், ஒரு குழந்தைக்கு உப்பே இல்லாமல் உணவைப் பழக்க வேண்டும். குழந்தைகளின் சுவை நரம்பை உப்பு, சர்க்கரை சுவைக்கு மட்டும் பழக்காமல், அதன் உண்மையான சுவைக்குப் பழக்கப்படுத்த வேண்டும். குழந்தை பருவத்திலே இதை பழக்கினால் எளிது. இல்லையென்றால், 40 வயதில் ஒருவர் உப்பு, சர்க்கரையை கைவிடுவது கடினமாக இருக்கும்.'' என்கிறார் அவர்

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, சிறுநீரக செயலிழப்பின் தீவிர நிலை, நாள்பட்ட சிறுநீரக நோய் (சிகேடி) என அறியப்படுகிறது

தண்ணீர் எவ்வளவு அருந்த வேண்டும்?

''ஒருவர் தேவையான அளவு தண்ணீரை அருந்த வேண்டும். சிறுநீரக கல், சிறுநீரக கட்டிகள் உள்ளவர்களுக்கு மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு அதிகரிக்கப்படும். ஆனால், சிறுநீரக பிரச்னை ஏற்பட்டவுடன், அதை சரி செய்கிறோம் என்ற பெயரில் தண்ணீரை நாமே அதிகமாகக் குடிக்கக் கூடாது, அப்போது மருத்துவரின் பரிந்துரைக்கேற்ப தண்ணீரின் அளவு கட்டுப்படுத்தப்படும். ஒரே நாளில் இடைவெளி விட்டு விட்டு தண்ணீர் குடிக்க வேண்டும், ஒரே நேரத்தில் மொத்தமாக குடிக்கக் கூடாது.''என கூறுகிறார் சங்கநிதி

"ஒரு ஆரோக்கியமான நபர் சாதாரணமான நாட்களில் 3 லிட்டர் வரையும் வெயில் அதிகமாக இருக்கும் நாட்களில் 4 லிட்டர் வரையும் தண்ணீர் அருந்த வேண்டும்'' என்கிறார் சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் ஜெயலஷ்மி.

சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் என்னென்ன?

"சிறுநீரக பிரச்னை பெரும்பாலும் அறிகுறிகளே காண்பிக்காது. ஒருவேளை சிறுநீரில் புரதம் வெளியேறினால், சிறுநீர் நுரை, நுரையாக வரலாம். ரத்தம் வெளியேறினால் சிவப்பாக இருக்கும். கல் இருந்தால் முதுகு பின்பகுதியில் இருபுறமும் வலி ஏற்பட்டு அது, சிறுநீர் வெளியேறும் பாதைக்கு பரவும். சிறுநீரில் கிரியேட்டினின் அதிகமாக இருப்பது அறிகுறிகளில் தெரியாது. கடைசி நிலையில்தான் கால் வீக்கம் ஏற்படும்." என்கிறார், மருத்துவர் சங்கநிதி.

சிறுநீர் வாயிலாக வெளியே செல்லக்கூடிய பொருட்கள் வெளியேறாமல் அதனுள்ளேயே இருப்பதுதான் கிரியேட்டினின் (creatinine).

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, ஒருவர் ஒரு நாளைக்கு தோராயமாக 3 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும் என்கிறார் சிறுநீரகவியல் நிபுணர் ஜெயலஷ்மி

சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் சிறுநீரகவியல் நிபுணர் மருத்துவர் ஜெயலஷ்மி கூறுகையில், "சிறுநீரக செயலிழப்பில் அறிகுறிகள் பெரும்பாலும் இருக்காது. கால் வீக்கம் இருக்கலாம், சிறுநீர் குறைவாக வெளியேறலாம், நோய் கொஞ்சம் தீவிரமாகும்போது மூச்சுத்திணறல், ரத்தசோகை, பசியின்மை ஏற்படலாம். அந்த அறிகுறிகளே தீவிர நிலையில்தான் தென்படும்.

தேவையில்லாத மருந்துகளை உட்கொள்வது, வலிநிவாரண மருந்துகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்க்க வேண்டும். உயர் ரத்த அழுத்தமும் சில சந்தர்ப்பங்களில் அறிகுறியாக இருக்கலாம்." என்றார்.

சிறுநீரக பாதிப்புகளை எப்படி கண்டுபிடிப்பது?

நாள்பட்ட சிறுநீரக நோய் (chronic kidney disease - CKD) தான் சிறுநீரக பிரச்னையின் தீவிர நிலையாக கருதப்படுகிறது என்று கூறும் சங்கநிதி, இதில் ஐந்து கட்டங்கள் உள்ளதாக விளக்கினார்.

"கிரியேட்டினின் அளவை வைத்துதான் ஒருவர் எந்த கட்டத்தில் உள்ளார் என்பதைக் கண்டுபிடிக்க முடியும். அதன் அளவு உயர்ந்தால் எந்தளவுக்கு நோய் தீவிரமாக உள்ளது என்பதை கூற முடியும். ஐந்தாம் கட்டம் என்றால் கிட்டத்தட்ட இறுதி நிலை எனலாம். அதாவது, சிறுநீரகம் முழுவதுமாக செயலிழந்துவிட்டது என அர்த்தம். அப்போது, டயாலிசிஸ் அல்லது சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை என்பது தீர்வாக இருக்கும். நிரந்தரமான சிறுநீரக நோயாக மாறிவிட்டால் அதை முழுவதும் குணப்படுத்த முடியாது. தற்காலிகமாக ஏற்படும் பிரச்னைகளை மட்டுமே சரிசெய்ய முடியும்." என்றார்.

கிரியேட்டினின் அளவை வைத்து 'கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்' (Glomerular filtration rate) என்பதை அளவிடுகின்றனர். அதாவது, கிரியேட்டினின் அளவையும் நோயாளியின் வயதையும் வைத்து இதன் மதிப்பை அளவிடுகின்றனர்.

'' அதன் அளவு 90க்கு மேல் இருந்தால் பிரச்னையல்ல, 90 மி.லி.க்கு கீழ் இருந்தால் நாள்பட்ட சிறுநீரக நோய் என்பதை உறுதிசெய்வோம். 15 மி.லி.க்கு கீழே சென்றால் இறுதி நிலை நாள்பட்ட சிறுநீரக நோய் என்பார்கள்.'' என்றார் சங்கநிதி.

சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரக நோய்கள், சிகேடி, க்ரானிக் கிட்னி டிசீஸ், நாள்பட்ட சிறுநீரக நோய்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, உடல் பருமனாக இருப்பவர்களுக்கும் சிறுநீரக நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளதாக கூறுகின்றனர் நிபுணர்கள்

"40 வயதுக்கு மேல் எல்லோருக்கும் ஜி.எஃப்.ஆர்(கிலாமெருலர் ஃபில்ட்ரேஷன் ரேட்) அளவு குறையும். ஆனால், நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு இதன் அளவு ஆண்டுக்கு 5 மி.லி. என்ற அளவில் குறைகிறது. ஆரம்ப நோய்நிலையில், இதன் அளவு குறைவதை சற்று மாற்றியமைப்பதற்கான மாத்திரைகள் வழங்கப்படும்." என்கிறார், சங்கநிதி.

சிறுநீரில் புரதம் வெளியேறுவதை கட்டுப்படுத்துவதற்கான மருந்துகள் ஆரம்ப நிலையில் வழங்கப்படும் என்கிறார், மற்றொரு சிறுநீரகவியல் நிபுணர் ஜெயலஷ்மி. "அவை பெரும்பாலும் நீரிழிவு, ரத்த அழுத்த மருந்துகளாகத் தான் இருக்கும்." என்றும் அவர் தெரிவித்தார்.

என்னென்ன பரிசோதனைகளை செய்ய வேண்டும்?

கிரியேட்டினின் அளவை பரிசோதிப்பதற்கான ரத்தப் பரிசோதனை, ரத்தம் வெளியேறுகிறதா என்பதை சோதிக்க ரத்தப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். மேலும், அல்டிராசவுண்ட் மூலம் சிறுநீரகம் எப்படி இருக்கிறது, அதன் அளவு சரியாக இருக்கிறதா, கல், கட்டி உள்ளதா என்பது குறித்து பரிசோதிக்கப்படும் என்கிறார் சங்கநிதி.

"மேலும், கிரியேட்டினின் அதிகமாக இருந்தால், சிறுநீரகத்தைப் பார்த்தாலே அதற்கு வயதான தோற்றம் ஏற்பட்டிருக்கும். உட்புறம், வெளிப்புறம் சரியாக இருக்கிறதா என்பதை பரிசோதிப்போம்." என்றார்.

மேலும், "டைப் 1 நீரிழிவு நோயாக இருந்தால் ஆரம்பத்திலேயே தெரியும், ஆனால் டைப் 2 நீரிழிவு நோய் எப்போதாவது நாம் பரிசோதிக்கும் போதுதான் தெரியும். ஆனால், நீரிழிவு நோய் நமக்கு எப்போதிலிருந்து இருக்கிறது என்பது தெரியாது. எனவே, நீரிழிவு நோய் கண்டுபிடிக்கப்படும் போதே சிலருக்கு சிறுநீரக நோய் இருக்கலாம்." என்றும் கூறுகிறார் அவர்.

வருமுன் காப்பது எப்படி?

இந்தாண்டு உலக சிறுநீரக தினத்தின் (மார்ச் 13) கருப்பொருளே, 'உங்கள் சிறுநீரகத்தை அறிந்துகொள்ளுங்கள்' (Know your kidney) என்பதுதான். அதில், ஏ, பி, சி, டி, இ என்கின்றனர். A என்பது ஆல்புமின், அதாவது புரதம் வெளியேறுவது, B என்பது ரத்த அழுத்தம் (blood pressure), C (கொலஸ்டிரால்), D என்பது நீரிழிவு நோய் (diabetics), E என்பது (eGFR), F என்பது குடும்பத்தில் யாருக்கேனும் இருக்கிறதா என்பது (family history). இந்த ஆறு அம்சங்களையும் ஒருவர் நினைவில் கொள்ள வேண்டும் என்கிறார், சங்கநிதி.

என்ன மாதிரியான உணவுப் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்?

நீரிழிவு நோய், ரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க என்ன மாதிரியான சரிவிகித உணவுமுறையை கடைபிடிக்கிறோமோ அதுவே நம் சிறுநீரக ஆரோக்கியத்துக்கும் முக்கியம் என பரிந்துரைக்கிறார் சங்கநிதி.

"வாஸ்குலார் (ரத்த நாளங்கள் தொடர்பான) நோய்களைத் தடுக்க பொட்டாசியம் எடுக்க வேண்டும், அதுவே சிறுநீரக பிரச்னை வந்துவிட்டால் பொட்டாசியம் சம்மந்தப்பட்ட உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும்.

உப்பை கூடுமானவரை குறைக்க வேண்டும். மேலும், புரதச்சத்து நிறைந்த இறைச்சி உணவுகளை குறைத்துக்கொள்ள வேண்டும். ஆன்டி ஆக்ஸிடென்ட், நிறைந்த, கார்போஹைட்ரேட் குறைவான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்." என அவர் பரிந்துரைக்கிறார்.

கட்டட தொழிலாளர்கள், விவசாய தொழிலாளர்கள் சிறுநீரக பிரச்னைகள் அதிகம் ஏற்படுவது ஏன்?

"இந்த தொழிலாளர்கள் வெயிலில் அதிகமாக வேலை பார்க்கிறார்கள். தண்ணீர் போதுமான அளவில் அருந்த மாட்டார்கள். கழிவறை வசதி இல்லையென்றால் தண்ணீர் போதுமான அளவில் குடிக்க மாட்டார்கள். எனவே, அவர்களுக்கு சுகாதாரமான கழிப்பட வசதியையும் போதுமான தண்ணீர் வசதியையும் ஏற்படுத்த வேண்டும்." என்கிறார் மருத்துவர் ஜெயலஷ்மி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c861e6y826zo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.