Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மக்கோச்சி ஒகாஃபோர்

  • பதவி, பிபிசி ஆப்ரிக்கா, லாகோஸ்

  • 58 நிமிடங்களுக்கு முன்னர்

நைஜீரியாவில் சராசரியாக ஒவ்வொரு ஏழு நிமிடங்களுக்கும் ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார். தனது 24 வது வயதில் நிறைமாத கர்ப்பிணியாக இருந்த நஃபிசா சலாஹுவும் இந்த புள்ளிவிவரத்தில் இடம் பெற்றிருப்பார்.

அவர் அப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். துரதிர்ஷ்டவசமாக மருத்துவர்கள் போராட்டத்தில் இறங்கியிருந்த காலகட்டம் அது. மருத்துவமனையில் இருந்த போதும் கூட, சிக்கலான சூழல் எழும் போது எந்த நிபுணர்களின் உதவியும் சரியான நேரத்திற்கு அவருக்கு கிடைக்கவில்லை.

பிரசவத்தின் போது அவருடைய குழந்தையின் தலை சிக்கிக் கொண்டது. பிரசவ வலியில் துடித்துக் கொண்டிருந்த அவரை அப்படியே படுத்திருக்கும்படி கூறியிருக்கின்றனர் அங்கிருந்த மருத்துவப் பணியாளர்கள். அவரின் பிரசவ வலியானது மூன்று நாட்களுக்கு நீடித்தது.

இறுதியில் அறுவை சிகிச்சை மூலமாக குழந்தையை வெளியே எடுக்க முடிவெடுக்கப்பட்டது. மருத்துவரை தேடி கண்டுபிடித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது.

"நான் கடவுளுக்குத்தான் நன்றி கூற வேண்டும். ஏன் என்றால் நான் அப்போது இறக்கும் தருவாயில் இருந்தேன். என்னிடம் துளியும் பலம் இல்லை. என்னிடம் எதுவுமே இல்லை," என்று பிபிசியிடம் பேசிய போது நஃபிசா கூறுகிறார்.

நைஜீரியாவின் வடக்குப் பிராந்தியத்தில் இருக்கும் கனோ மாகாணத்தில் அவர் வசித்து வருகிறார்.

அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் உயிர் பிழைத்தார். ஆனால் அவருடைய குழந்தைக்கு அத்தகைய வாய்ப்பு கிடைக்கவில்லை.

மரணத்தின் வாசல் வரை நஃபிசா சென்று திரும்பி 11 வருடங்கள் ஆகிவிட்டன. அதன் பின்னரும் சில முறை குழந்தைப்பேறுக்காக அவர் மருத்துவமனை சென்றிருக்கிறார். மரண தருவாய் அனுபவத்தில் மாற்றம் ஏதுமில்லை.

"ஒவ்வொரு முறையும் வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே நான் இருந்தேன் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் இப்போது அச்சப்படுவதில்லை," என்று அவர் கூறினார்.

நஃபிசாவின் அனுபவம் ஒன்றும் வழக்கத்திற்கு மாறானது அல்ல.

குழந்தை பெற்றெடுக்க மிகவும் மோசமான சூழலைக் கொண்ட நாடாக நைஜீரியா அறியப்படுகிறது.

2023 தரவுகளை அடிப்படையாகக் கொண்டு சமீபத்தில் ஐ.நா. வெளியிட்டிருக்கும் அறிவிப்பின்படி, நூற்றில் ஒரு பெண் பிரசவத்தின் போதோ அதற்கு பிறகான நாட்களிலோ உயிரிழக்கிறார்.

இதுவே இந்த பட்டியலில் அந்த நாட்டை முதலிடத்தில் வைக்கிறது.

2023-ஆம் ஆண்டு உலக அளவில் பிரசவகாலத்தில் நிகழும் மரணத்தில் கால்வாசிக்கும் அதிகமான மரணங்கள் நைஜீரியாவில் பதிவானது. உலக அளவில் பிரசவத்தின் போது மரணிக்கும் பெண்களில் 29% பேர் நைஜீரியாவில் இறக்கின்றனர்.

அதாவது ஒவ்வொரு ஆண்டும் 75, 000 பெண்கள் பிரசவத்தின் போது உயிரிழக்கின்றனர். இதனை மீண்டும் துல்லியமாக கணக்கிட்டால் ஒவ்வொரு ஏழு நிமிடத்திற்கு ஒரு பெண் பிரசவத்தின் போது உயிரிழக்கிறார்.

மரணத்திற்கான காரணங்கள் என்ன?

அதிக எண்ணிக்கையில் நிகழும் மரணங்கள் பலருக்கும் கவலை அளித்துள்ளது. பிரசவத்திற்கு பிறகு ஏற்படும் அதீத உதிரப்போக்கு காரணமாகவும் மரணங்கள் நிகழ்கின்றன. முறையான சிகிச்சைகள் மூலம் இத்தகைய மரணங்கள் நிகழ்வதை தடுக்க இயலும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு நைஜீரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் இருக்கும் ஒனித்ஷா நகரத்தில் இருக்கும் ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார் சினேன்யே வேஸே. அவருக்கு அப்போது வயது வெறும் 36. ஆனால் பிரசவத்திற்கு பிறகு ஏற்பட்ட அதீத உதிரப் போக்கின் காரணமாக அவர் உயிரிழக்க நேரிட்டது.

அவரின் மரணம் குறித்து பேசும் அவருடைய சகோதரர் ஹென்றி எடா, "மருத்துவர்களுக்கு இரத்தம் தேவைப்பட்டது. ஆனால் மருத்துவமனையில் தேவையான இரத்தம் இருப்பில் இல்லை. அவர்கள் இரத்தத்தை பெறுவதற்காக இங்கும் அங்கும் ஓடிக் கொண்டிருந்தனர். நல்ல நண்பராக இருந்த என் சகோதரியை நான் இழந்து தவித்த நிலையை என் எதிரியும் கூட அனுபவிக்கக் கூடாது. அது தாங்கிக் கொள்ள இயலாத வலி," என்று கூறினார்.

பெண்கள் அங்கே இறந்து போவதற்கான இதர காரணங்கள்: பிரசவத்தின் போது குழந்தை வெளியே வராமல் இருப்பது, உயர் இரத்த அழுத்தம் மற்றும் பாதுகாப்பற்ற கருக்கலைப்பு முறைகள்.

யுனிசெஃபின் நைஜீரிய அலுவலகத்தில் பணியாற்றும் மார்டின் தோல்ஸ்டென் இது குறித்து பேசும் போது, நைஜீரியாவில் ஏற்படும் அதிகப்படியான மகப்பேறு தொடர்பான மரணங்கள் பல காரணங்களின் ஒன்றுபட்ட விளைவாக உள்ளது என்று குறிப்பிடுகிறார்.

அத்தகைய காரணங்களில் ஒன்று மோசமான மருத்துவ வசதி. மருத்துவர்கள் பற்றாக்குறை, விலையுயர்ந்த சிகிச்சைகள், கலாசார பழக்கவழக்கங்கள் போன்றவை நம்பகத்தன்மையற்ற மருத்துவ பணியாளர்களை நாட வழிவகுக்கிறது. மேலும் இது பாதுகாப்பற்ற தன்மையை உருவாக்குகிறது.

"பிரசவத்தின் போது எந்த பெண்ணுக்கும் இத்தகைய நிலை ஏற்படக் கூடாது," என்று மாபெல் ஒன்வுயேமேனா தெரிவிக்கிறார். அவர் வுமென் ஆஃப் பர்பஸ் டெவெலப்மெண்ட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளராக உள்ளார்.

"கிராமப்புறங்களில் வசிக்கும் பெண்கள் சிலர், மருத்துவமனைக்கு செல்வது நேர விரயம் என்று கருதுகின்றனர்," என்று அவர் விளக்குகிறார்.

"அப்பெண்கள் மருத்துவ உதவிகளை நாடுவதற்கு பதிலாக பாரம்பரிய மருத்துவமுறைகளை நாடிச் செல்கின்றனர். அப்போது ஏதேனும் சிக்கல் ஏற்படும் பட்சத்தில், அது அவர்களின் உயிர் காக்கும் சேவைகளை அணுகுவதை தாமதப்படுத்திவிடுகிறது," என்று தெரிவிக்கிறார்.

சிலருக்கோ உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு செல்வது என்பது சாத்தியமற்றதாக இருக்கிறது. ஏன் என்றால் போதுமான போக்குவரத்து வசதி இல்லை. ஆனால் சரியான நேரத்திற்கு அவர்கள் மருத்துவமனைக்கு வந்தாலும் கூட அவர்களின் பிரச்னைகளுக்கு முடிவென்பதே கிடையாது என்று மாபெல் கூறுகிறார்.

"பல சுகாதார மையங்களில் அடிப்படை வசதிகள், பயிற்சி பெற்ற நிபுணர்கள், மருத்துவ விநியோகம் போன்றவை இல்லாத காரணத்தால் தரமான சேவைகளை வழங்குவதில் பிரச்னை ஏற்படுகிறது."

நைஜீரிய மத்திய அரசாங்கமானது தன்னுடைய வருடாந்திர பட்ஜெட்டில் 5% மட்டுமே மருத்துவ சேவைகளுக்கு ஒதுக்குகிறது. 2001-ஆம் ஆண்டு ஆப்பிரிக்க ஒன்றிய ஒப்பந்தத்தில், 15% என்று நிர்ணயிக்கப்பட்ட இலக்கில் இருந்து நைஜீரியா மிகவும் பின்தங்கியுள்ளது.

மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,HENRY EDEH

படக்குறிப்பு, ஐந்தாண்டுகளுக்கு முன்பு பிரசவத்தின் போது மரணித்த சினேன்யே வேஸே

தரவுகள் கூறுவது என்ன?

2021-ஆம் ஆண்டில், 21.8 கோடி மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 1,21,000 செவிலியர்கள் (பிரசவம் பார்க்க) இருந்தனர். அந்த நாட்டில் நடைபெற்ற பாதிக்கும் மேற்பட்ட பிரசவங்கள் பயிற்சி பெற்ற மருத்துவ பணியாளர்களின் மேற்பார்வையில் நடைபெற்றது.

இந்த மக்கள் தொகைக்கு, உலக சுகாதார மையத்தின் பரிந்துரை விகிதத்தை பூர்த்தி செய்ய, மொத்தமாக 7 லட்சம் செவிலியர்கள் கூடுதலாக தேவைப்படுகின்றனர். மருத்துவர்களின் பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது.

மருத்துவ வசதி மற்றும் மருத்துவர்களின் பற்றாக்குறை காரணமாக சிலர் மருத்துவ உதவியை நாடுவதை நிறுத்திவிடுகின்றனர்.

"உண்மையில் நான் மருத்துவமனைகளை அதிகமாக நம்புவது கிடையாது. பொது மருத்துவமனைகளில் நிகழும் அலட்சியமான போக்கு குறித்து நான் அதிகம் கேள்விப்படுகிறேன்," என்று ஜமீலா இஷாக் கூறுகிறார்.

"நான் நான்காவது முறையாக கர்ப்பமுற்றேன். பிரசவத்தின் போது சிக்கல்கள் ஏற்பட்டது. உள்ளூரில் பிரசவத்தை மேற்பார்வையிட்ட நபர் என்னை மருத்துவமனைக்கு செல்லுமாறு கூறினார். நாங்கள் அங்கே சென்ற போது அங்கே ஒரு சுகாதாரப் பணியாளரும் இல்லை. வீட்டுக்குச் சென்ற நான் அங்கேயே குழந்தையைப் பெற்றெடுத்தேன்," என்று அவர் விளக்கினார்.

28 வயதான, கனோ மாகாணத்தைச் சேர்ந்த இஷாக் தற்போது ஐந்தாவது முறையாக கர்ப்பமடைந்துள்ளார். தனியார் மருத்துவமனைக்கு செல்ல விரும்புவதாக அவர் கூறினாலும் அங்கே கட்டணம் மிகவும் அதிகமாக உள்ளது என்று அவர் தெரிவிக்கிறார்.

தன்னுடைய மூன்றாவது குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் சின்வெண்டு ஒபியேஜெசியால் தனியார் மருத்துவமனையில் கட்டணம் கட்டி பிரசவம் பார்த்துக் கொள்ளும் பொருளாதார நிலையைப் பெற்றுள்ளார். "வேறெங்கும் பிரசவத்திற்காக செல்வதை நினைத்தும் கூட பார்க்க மாட்டேன்," என்று அவர் தெரிவித்தார்.

அவரின் குடும்பத்திலோ, நட்பு வட்டாரத்திலோ மகப்பேறு மரணங்கள் மிகவும் அரிதாகவே நடைபெறுவதாக தெரிவிக்கும் அவர், தொடர்ச்சியாக பல்வேறு பகுதிகளில் இருந்து மகப்பேறு மரணங்கள் குறித்து கேள்விப்படுவதாக தெரிவிக்கிறார்.

மிகவும் செல்வ செழிப்பான அபுஜாவின் புறநகர் பகுதியில் அவர் வசித்து வருகிறார். அங்கிருந்து மருத்துவமனைகள் செல்வது எளிமையாக இருக்கும். சாலை வசதிகள் சிறப்பாக உள்ளது. அவசர சேவைகளும் சிறப்பாக செயல்படுகிறது. நகரத்தில் வாழும் பெண்கள் பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பதால் மருத்துவமனை செல்வதன் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளனர்.

"பிரசவத்திற்கு முந்தைய மருத்துவ உதவிகள் மற்றும் ஆலோசனைகளை நான் எப்போதும் பெறுகிறேன். தொடர்ச்சியாக மருத்துவர்களிடம் பேசவும், தேவையான முக்கியமான பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்களை செய்யவும் இது எனக்கு உதவுகிறது. மேலும் என்னுடைய மற்றும் என் குழந்தையின் ஆரோக்கியத்தை தொடர்ச்சியாக கண்காணிக்கவும் இது உதவுகிறது," என்று ஒபியேஜெசி கூறுகிறார்.

"உதாரணத்திற்கு என்னுடைய இரண்டாம் கர்ப்ப காலத்தின் போது எனக்கு அதிகப்படியான உதிரப்போக்கு ஏற்படும் என்று அவர்கள் நினைத்தனர். எனவே அதனை ஈடுகட்டுவதற்காக கூடுதலான இரத்தத்தை தயார் நிலையில் வைத்திருந்தனர். நல்ல வேளையாக, எனக்கு தேவைப்படவில்லை. அனைத்தும் சரியாக நடந்தது," என்று அவர் கூறினார்.

இருப்பினும் கூட, அவருடைய குடும்ப நண்பர் ஒருவர் ஒபியேஜெசியைப் போன்று அதிர்ஷ்டத்துடன் இல்லை.

அவரின் இரண்டாவது பிரசவத்தின் போது, "பிரசவம் பார்க்கும் செவிலியரால் குழந்தையை வெளியே எடுக்க இயலவில்லை. அதனால் வலுக்கட்டாயமாக பிரசவிக்கும் வழியை தேர்வு செய்தார். ஆனால் குழந்தை இறந்துவிட்டது. அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது அதிக கால தாமதம் ஏற்பட்டது. இறந்த குழந்தையின் உடலை வெளியே எடுக்க அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இது மிகவும் கவலை அளிக்கக் கூடியது," என்று விவரிக்கிறார் ஒபியேஜெசி.

மகப்பேறு மருத்துவம், ஆரோக்கியம், பெண்களின் ஆரோக்கியம்,

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, பிரசவம் போன்றவற்றை முறையாக மருத்துவமனைகளில் மேற்பார்வையிட போதுமான சுகாதார ஊழியர்கள் இல்லை

குறைகளை நிவர்த்தி செய்யுமா அரசு?

மருத்துவர் நானா சந்தா - அபுபக்கர் நைஜீரியாவின் தேசிய ஆரம்ப சுகாதார சேவை மேம்பாட்டு முகமையின், கம்யூனிட்டி ஹெல்த் சர்வீஸ் பிரிவின் தலைவராக பணியாற்றுகிறார். பிபிசியிடம் பேசும் போது அங்கே நிலவும் அவல நிலையை ஒப்புக் கொண்டார். மேலும் பிரசவ காலங்களில் ஏற்படும் இறப்புகளுக்கான காரணங்களை நிவர்த்தி செய்ய அரசாங்கம் திட்டம் ஒன்றை அமல்படுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நைஜீரிய அரசாங்கம், மம்மி (Maternal Mortality Reduction Innovation Initiative (Mamii)) என்ற திட்டத்தை அமல்படுத்தியது. நாடு முழுவதும் உள்ள 33 மாகாணங்களில், குழந்தை பிறப்பு தொடர்பாக ஏற்படும் இழப்புகளில் பாதிக்கும் மேற்பட்ட இழப்புகளை பதிவு செய்துள்ள, 172 உள்ளாட்சி அமைப்புகளை இலக்குகளாகக் கொண்டு செயல்படுகிறது.

"ஒவ்வொரு கர்ப்பிணியையும் கண்டறிந்து அவரின் மகப்பேறு காலம், குழந்தை பிறப்பு மற்றும் அதற்கு பிறகான நாட்களில் அவருக்குத் தேவைப்படும் ஆதரவை வழங்க இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது," என்று சந்தா தெரிவிக்கிறார்.

''இதுவரை ஆறு மாகாணங்களில், வீடு வீடாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பில் 4 லட்சம் கர்ப்பிணி பெண்களை கண்டறிந்துள்ளோம். மேலும் அவர்கள் மருத்துவ ஆலோசனைப் பெறுகிறார்களா இல்லையா என்பதையும் ஆய்வுக்குட்படுத்தியுள்ளோம். அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் கிடைப்பதையும், பாதுகாப்பான முறையில் குழந்தைகளை பெற்றெடுப்பதையும் உறுதி செய்யும் வகையில் அவர்களை இந்த மம்மி சேவையில் இணைப்பதே இந்த திட்டம்."

உள்ளூர் போக்குவரத்து அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றும் 'மம்மி', நிறைய பெண்களை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முயற்சிக்கிறது. மேலும் குறைந்த செலவிலான பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தில் இணையவும் ஊக்குவிக்கிறது.

இந்த திட்டம் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதா என்பதை தற்போது கூறிவிட இயலாது. உலக நாடுகளில் இருக்கும் போக்கை நைஜீரியாவும் பின்பற்றும் என்று அதிகாரிகள் நம்புகின்றனர்.

2000-ஆம் ஆண்டு துவங்கி, பிரசவத்தின் போது ஏற்படும் மரணங்கள் 40% வரை குறைந்துள்ளது. சுகாதார சேவைகளை அணுகுவதை எளிமையாக்கியது இதற்கு ஒரு முக்கிய காரணம். நைஜீரியாவிலும் இத்தகைய மரணங்கள் குறைத்து வருகிறது. ஆனால் 13% மட்டுமே குறைந்துள்ளது.

மம்மி மற்றும் இதர திட்டங்கள் நடைமுறையில் இருப்பினும் கூட, அதிக அளவு முதலீடு செய்தல் உட்பட பல முக்கிய விசயங்களை மேற்கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

"இத்தகைய திட்டங்களின் வெற்றியானது நிலையான நிதி, திறம்பட மேம்படுத்தும் தன்மை மற்றும் தொடர்ச்சியான கண்காணிப்பு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டே அமைகிறது," என்று தோல்ஸ்டென் கூறுகிறார்.

அதே நேரத்தில், நாள் ஒன்றுக்கு 200 என்ற அளவில் பெண்கள் இறப்பது என்பது அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு பெரிய சோகத்தையே ஏற்படுத்தும்.

ஐந்தாண்டுகளுக்கு முன்பு சகோதரியை இழந்தது எடாவுக்கு பேரடியாக இருந்தது.

"சிறு வயதிலேயே எங்களின் பெற்றோர்களை நாங்கள் இழந்ததால், அவள் எங்கள் குடும்பத்தை தலைமை தாங்கி நடத்தினாள். அவள் இறந்து நீண்ட காலம் ஆனாலும் கூட, அவளை நினைக்கும் போதெல்லாம் அழுகிறேன்."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c9vg312yxpzo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.