Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!

June 9, 2025

டக்ளஸ் தோழரும் தேசியவாதிகளும்!

— கருணாகரன் —

இலங்கை அரசியலில் NPP செல்வாக்குப் பெற்றதோடு தமிழ், முஸ்லிம், மலையக, சிங்கள அரசியல் எல்லாமே தடுமாற்றத்துக்குள்ளாகி விட்டன. குறிப்பாகத் தமிழ்த்தேசியவாத  அரசியற் கட்சிகள் பெரும் குழப்பத்திற்குள்ளாகியுள்ளன. 

இவ்வளவுக்கும் NPP ஒன்றும் ஆகச் சிறந்த அரசியல் விளைவுகளை உருவாக்கிய சக்தியாக இன்னும் வளர்ச்சியடையவில்லை. எதிர்காலத்தில் அதற்கான சாத்தியங்கள் இருக்கலாம். இதைப்பற்றிப் பல தடவை குறிப்பிட்டதால், மேலும் விளக்கத் தேவையில்லை என்று கருதுகிறேன். அல்லது இன்னொரு கட்டுரையில் தனியாகப் பார்த்துக் கொள்ளலாம். 

இப்பொழுது நமது கவனம், NPP யின் எழுச்சியானது, தமிழ்த்தேசிய அரசியலை எப்படி நெருக்கடிக்கு உள்ளாக்கியிருக்கிறது? அதனால் ஏற்பட்டுள்ள குணாம்ச மாற்றங்கள் என்ன? எவ்வளவு தூரத்துக்குப் படியிறக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதாகும்.

NPP யை ஆதரித்தால் அல்லது அதனுடன் அரசியல் ரீதியான உடன்பாடுகள் எதையாவது வைத்துக் கொண்டால், அது ஏனைய தென்னிலங்கைத் தேசியக் கட்சிகளைப் போலன்றி, அப்படியே தம்மை உள்வாங்கி விழுங்கி விடும், பிராந்திய அரசியலுக்கு (தமிழ் அரசியலுக்கு) இடமில்லாமல் செய்து விடும், ஆகவே அதனுடன் இடைச் சமரசத்துக்குப் போக முடியாது என்ற அச்சத்தினால் எப்படியாவது NPP ஐத் தமிழ்ப் பகுதிகளில் தோற்கடிக்க வேண்டும் அல்லது எதிர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் தமிழ்க் கட்சிகள் அனைத்தும் எதையெதையெல்லாமோ செய்து கொண்டிருக்கின்றன. இதில் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள், அல்லாத கட்சிகள் என்ற பேதமெல்லாம் கிடையாது. எல்லாமே உச்சப் பதட்டத்தோடுதான் உள்ளன. 

இதனால் தமிழ் அரசியல் பரப்பில் ஏராளம் காட்சி மாற்றங்கள். திடீர்த்திருப்பங்கள். புரிந்து கொள்ளவே முடியாத ஆச்சரியமான சம்பவங்கள் எல்லாம் நடக்கின்றன. வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தினமும் எதிர்பார்க்காத – அதிர்ச்சிகரமான சேதிகள் வந்து கொண்டிருக்கின்றன. இது ஊடகப் பரப்பிலும் பரபரப்பை உருவாக்கியுள்ளது. 

இந்த வாரம் நடந்த மூன்று முக்கிய விடயங்களைப் பற்றிச் சொல்லலாம். 

1.   ‘அடைந்தால் மகாதேவி. இல்லையேல் மரண தேவி‘ என்ற பிடிவாதத்தோடு, ‘ஒரு நாடு இரு தேசம்‘, ‘கொள்கையே எமது உயிர்‘என்று சொல்லிக் கொண்டிருந்த கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ்த்தேசியப் பேரவையும் அதற்கு அப்பால் நின்ற ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியும் சேர்ந்துள்ளன. இந்தக் கூட்டு வெறுமனே உள்ளுராட்சி சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கானது மட்டுமல்ல, கொள்கை சார்ந்த கூட்டு என்று இரண்டு தரப்பும் அறிவித்துள்ளன. அதற்கான ஒரு எழுத்து மூலமான உடன்படிக்கையும் செய்யப்பட்டுள்ளது. சுருக்கமாகச் சொன்னால், தேர்தலுக்கு முன்பு செய்யப்படாமல், தேர்தலுக்குப் பின்னர் செய்யப்பட்ட – அதற்கான தேவைகளும் அவசியங்களும் உள்ளதால் – மேற்கொள்ளப்பட்ட கூட்டு. 

2.   இப்படி இணைந்தாலும் இந்தக் கூட்டினால் எதிர்பார்த்த அளவுக்கு சபைகளில் அதிகாரத்தைக் கைப்பற்ற முடியாது. அப்படிக் கைப்பற்ற வேண்டுமாக இருந்தால், அதற்கு இன்னொரு தரப்பின் ஆதரவு வேண்டும். அதற்காக ஈ.டி.பி.யின் ஆதரவைப்  பெறலாமா என்று ஆலோசிக்க முற்பட்டிருக்கிறது இந்தக் கூட்டு. இதற்கான முயற்சியாகத் தனிப்பட்ட ரீதியிலான உரையாடல்கள் சித்தார்த்தனுக்கும் டக்ளஸ் தேவானந்தாவுக்கும் இடையில் தொலைபேசி வாயிலாகச் சிறிய அளவில் நிகழ்ந்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால் இந்தக் கூட்டின் இன்னொரு தரப்பினரான கஜேந்திரகுமார் இதைக் மறுத்திருக்கிறார். 

3.   தமிழரசுக் கட்சியின் தலைவர் சீ.வி.கே சிவஞானம், தாம் ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்புள்ள சபைகளுக்கு ஆதரவு கேட்டு ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தாவிடம், அவருடைய பணிமனையான ஸ்ரீதர் தியேட்டருக்குச் சென்றது. இதுவும் அரசியற் தேவைகளின் பாற்பட்ட ஒரு நடவடிக்கை. அதற்கான முயற்சி. இதைத் தமிழரசுக் கட்சியிலிருந்து இதுவரையில் யாரும் எதிர்க்கவில்லை என்றாலும் கட்சியின் கீழ் மட்ட உறுப்பினர்களிடையே சற்றுக் குழப்பமான நிலை உண்டு. 

இவற்றுக்கு அரசியல் ரீதியாகப் பெறுமானங்களும் உண்டு. விமர்சனங்களும் உண்டு. அதை அணுக வேண்டிய விதமே வேறு. அப்படி இந்த விடயம் அறிவுசார்ந்து அணுகப்பட்டிருந்தால் அதனால் பயனுண்டு. நிறைவாகவும் இருந்திருக்கும். அது தமிழ்ப்பரப்பில் நிகழவில்லை. இதுதான் துயரமானது.

தமிழ்ப் பரப்பென்பது, இன்னும் மூடுண்ட இருட்பிராந்தியத்துக்குள்ளேதான் கட்டுண்டுள்ளது. இதில் குறிப்பாக இளைய தலைமுறையினரும் சிக்கியிருப்பதே மிகுந்த கவலையை அளிக்கிறது. கடந்த தலைமுறைதான் தவறுகளின் கூடாரத்துக்குள் தங்களுடைய தலைகளை வைத்திருந்தது என்றால், இளைய தலைமுறையும் அப்படியா இருக்க வேண்டும்? அதுவாவது ஒளியைக் காண வேண்டாமா? 

என்பதால்தான் சமூக வலைத்தளங்கள் போர்க்களமாகி, குருதி சிந்திக் கொண்டிருக்கின்றன. ஏட்டிக்குப் போட்டியாகக் கணைகள் பாய்கின்றன. கட்சிகளின் ஆதரவாளர்களிற் சிலர் தாக்குதலின் உக்கிரம் தாங்க முடியாமல் பதுங்கு குழிகளுக்குள் மறைந்து கொண்டுள்ளனர். 

இப்பொழுது தமிழ்த்தேசியவாத அரசியற் பரப்பில் நடந்து கொண்டிருப்பதெல்லாம், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு கனவிலும் நினைத்துப் பார்த்திருக்க முடியாத சங்கதிகள். அதிகம் ஏன், கடந்த மாதம் நடைபெற்ற உள்ளுராட்சி மன்றத் தேர்தல் வரையிற் கூட தமிழ்த்தேசிய முகாமின் பீரங்கிகள் ஏட்டிக்குப் போட்டியாகவே நிறுத்தப்பட்டிருந்தன. தமிழ்த்தேசியவாதத்துக்கு எதிரான தரப்பை நோக்கி மட்டுமல்ல, தமக்குள்ளேயே – தமிழ்த்தேசியவாதத்துக்குள்ளேயே – எதிரெதிர்முனையில் பீரங்கிகள் நிறுத்தப்பட்டன. 

தேர்தல் முடிவுகள் உருவாக்கிய சூழல், இதையெல்லாம் மாற்றி விட்டது. இப்பொழுது போர்க்களம் மூடப்பட்டு, தலைவர்களும் தளபதிகளும் சமாதானத் தூதுகளை அனுப்பி, சந்திப்புகளைச் செய்து கொள்கின்றனர். இந்தச் சந்திப்புகளில் ஆளையாள் கட்டி அணைத்து ஆரத் தழுவிக் கொள்கிறார்கள். 

தமிழ் அரசியலின் குழப்பமும் தேக்கமும்:

—————————————-

தமிழ்த்தேசியப் பேரவையில் உள்ள ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், சரவணபவன், ஐங்கரநேசன், அருந்தவபாலன் போன்றவர்கள், உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான கூட்டில் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியோடு சேர முடியாது என்று இரண்டு மாதத்துக்கு முன் பிடிவாதமாக நின்றார்கள். தேர்தல் முடிவுகளுக்கு பிறகு இந்தப் பிடிவாதமெல்லாம் கரைந்து விட்டது. அதாவது இரண்டு மாதங்களில் ஒரு தலைகீழ் மாற்றம். 

இதற்கு அவர்களின் தரப்பிலிருந்து ஒரு நியாயத்தைச் சொல்லக் கூடும். அப்போது கொள்கைக்கான கூட்டாக யாரும் பேசவில்லை. தேர்தல் கூட்டாக மட்டுமே சிந்திக்கப்பட்டது. இப்போது கொள்கைக்கான கூட்டாக இருப்பதால், எங்களின் ஆதரவைக் கொடுத்துள்ளோம் என. 

அதைப்போல, சிவஞானம் டக்ளஸ் தேவானந்தாவைத் தேடிச் ஸ்ரீதர் தியேட்டருக்கு (ஈ.பி.டி.பி பணிமனைக்கு) சென்றதை சுமந்திரன் வேறுவிதமாக வியாக்கியானப்படுத்தியிருக்கிறார். ஈ.பி.டி.பியுடன் மட்டுமல்ல, அதிக பெரும்பான்மையைக் கொண்ட தரப்பாக தமிழரசுக் கட்சி இருப்பதால், ஆட்சியை அமைப்பதற்காக ஆதரவைப் பல கட்சிகளிடமும் கோரினோம். அதில் ஒன்று இது என்பதாக. அதாவது ஆதரவைக் கோருவது வேறு. அரசியற் கூட்டு என்பது வேறு என்பதாக. இருந்தாலும் சிவஞானம் ஸ்ரீதர் தியேட்டருக்குப் போனது தவறு. தமிழரசுக் கட்சி எப்படித் தன்னுடைய தகுதியை விட்டுப் படியிறங்கலாம் என்று கொந்தளிக்கின்றது புரட்சிப் படை. 

ஆனால், அரசியலில் நிரந்தரமான முடிவுகள் (அதாவது முடிந்த முடிவுகள்) என எவையும் இல்லை. அடிப்படையில் இருக்கும்  கொள்கையோடு, அதற்குச் சேதாரங்கள் வராத வகையில், நிலைமைகளைக் கருத்திற்கொண்டு இயங்குவதே அரசியலாகும். இதையே சாணக்கியம் (Chanakya), இராஜதந்திரம் (Diplomacy), தந்திரோபாயம் (Strategy) என்று அரசியல் வரலாறு குறிப்பிடுகிறது. 

உலகம் முழுவதிலும் வரலாறு முழுவதிலும் இதற்குரிய ஆளுமைகளும் அடையாளங்களும் நிறைய உண்டு. சாணக்கியர், நிக்கோலோ மாக்கியவல்லி, கன்பூசியஸ் போன்ற மேதைகள் இதைப்பற்றித் தெளிவாகவே சொல்லியிருக்கிறார்கள். 

ஆனால், நம்முடைய சமூகச் சூழலில், அரசியலை எவரும் எப்படியும் கையாளலாம் என்ற நிலை உருவாகியுள்ளது. முகநூலில் அல்லது சமூக வலைத்தளங்களில் உள்ளவர்கள் எல்லாம் அரசியலைத் தீர்மானிக்கும் வல்லமையுள்ளோர் என்ற ஒரு நிலையை உருவாக்கியுள்ளனர். இவர்களுடைய பதிவுகளைப் பார்த்து அரசியற் கட்சிகள் தடுமாறுகின்றன. தலைவர்கள் குழம்பிப்போகிறார்கள். உண்மையில் அப்படி இருக்கவே கூடாது. 

சமூக வலைத்தளங்களில் அபிப்பிராயங்களைப் பகிர்வோரில் பலரும் களச் செயற்பாடுகளில் ஈடுபடுகின்றவர்கள் அல்ல. அரசியல் விடயங்களை, அதன் தாற்பரியங்களைப் புரிந்து கொண்டவர்களும் அல்ல. இவர்கள் தமது விருப்பு வெறுப்புகளை, அபிப்பிராயங்களைப் பகிர்வோராக  இருக்கலாமே தவிர, முடிவுகளை எடுக்கும் சக்திகளாகவோ தீர்மானிக்கும் தரப்பாகவோ இருக்க முடியாது.

இதை மறுத்து, சமூக வலைத்தளங்களுக்கு இன்று வலுவுண்டு. சமூக வலைத்தளப் பதிவர்களால் பல மாற்றங்கள் நிகழ்த்தப்பட்டுள்ளன. அல்லது மாற்றங்களுக்கு அவர்கள் தூண்டு விசையாக இருந்துள்ளனர், இருக்கின்றனர் என யாரும் சொல்லக் கூடும். அவ்வாறான பதிவுகளையும் அவற்றின் விளைவாக உருவாகிய போராட்டங்களையும் ஆழ்ந்து கவனித்தால், அவற்றின் கருத்தியல் தெளிவையும் அவற்றில் உள்ள பன்மைத்துவம், ஜனநாயக அடிப்படை, சர்வதேசத் தன்மை போன்றவற்றை இனங்காண முடியும். 

தமிழ்ச் சமூகத்தின் சமூக வலைத்தளப் பதிவுகள் அப்படியா உள்ளன? வெறும் உணர்ச்சிக் கோசங்களாகவே மலிந்து கிடக்கின்றன. என்பதால்தான் ஜனநாயக மறுப்புக் குரல்களாக துரோகி – தியாகி என்ற கூக்குரல்கள் ஒலிக்கின்றன. இன்னும் தமிழர்களின் அரசியலை அறிவுசார் நடவடிக்கையாக மாறாதிருப்பதற்கான முயற்சியாகவே இவை உள்ளன. இவற்றை மீறி எழ வேண்டிய பொறுப்பு அரசியற் கட்சிகளுக்கும் அரசியற் தலைவர்களுக்கும் உள்ளது.  

ஏனென்றால் அரசியல் என்பது ஒரு கற்கைமுறை. அது ஒரு பொறுப்புள்ள துறை. மக்களுடைய வாழ்க்கையோடும் அவர்களுடைய எதிர்காலத்தோடும் நேரடியாகச் சம்மந்தப்பட்டது. ஏன், மக்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் தீர்மானிப்பதே அரசியல்தான். மக்களுடையது மட்டுமல்ல, நாட்டினுடைய நிகழ்காலத்தையும் அதுவே தீர்மானிப்பது. ஆகவே அத்தகைய துறையை, அதற்குரிய அடிப்படைகளோடு அணுக வேண்டும். அதை அறிவுபூர்வமாகக் கையாள வேண்டும். இந்தப் புரிதலோடு அரசியற் கட்சிகளும் அரசியல்தலைவர்களும் செயற்பட வேண்டும். தமிழ்ச் சமூகத்தை அரசியல் ரீதியாக அறிவூட்ட வேண்டும். 

ஆனால், மேற்படி அரசியலைக் குறித்த அறிவுபூர்வமான  சிந்தனையோ, எண்ணமோ தமிழ்ச் சமூகத்திடம் இல்லை. இங்கே காணக்கிடைப்பதெல்லாம் வெறும் உணர்ச்சிகரமான போக்கே. இது அரசியலுக்கு எப்போதும் எதிர்விளைவுகளையே – பாதகத்தையே உண்டாக்கும். என்பதால்தான் தமிழ் மக்களின் அரசியல் தோற்றுப்போகிறது. இலகுவில் தோற்கடிக்கப்படக் கூடியதாக உள்ளது. 

இதைப் பற்றி குறித்த கட்சிகளின் ஆட்களுக்கே சரியான தெளிவில்லை. என்பதால்தான் துணிச்சலாக எந்த முடிவையும் எடுக்க முடியாமல் தடுமாறுகிறார்கள். அந்தத் தடுமாற்றமே அரசியற் கூட்டுகளை உருவாக்குவதில் நெருக்கடிகளையும்  இணைந்து செயற்படுவதில் குழப்பங்களையும் உண்டாக்குகிறது. 

கட்சிகளுக்கு முண்டு கொடுப்போரின் நிலையும் அதை அனுமதிப்போரின் நிலையும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. இது அனுபவமாகட்டும். ஏனென்றால், ஈழத் தமிழ் அரசியற் தலைவர்கள் உறுப்பினர்களையோ, தொண்டர்களையோ, ஆதரவாளர்களையோ அரசியல் ரீதியாக வளர்த்தெடுக்கவில்லை. அவர்களை மனதிற் கொண்டு ஒரு போதும் தீர்மானங்களை எடுப்பதுமில்லை; செயற்படுவதுமில்லை. எல்லாமே ஏகத் தீர்மானம்தான். ஜனநாயக விதிமுறைகளை ஏற்றுப் பதிவு செய்யப்பட்ட அரசியற் கட்சிகளாக இருந்தாலும், தீர்மானங்களை எடுப்பதும் செயற்படுவதும் இராணுவத் தன்மையோடுதான். 

என்பதால்தான் அரசியற் கூட்டுகள் உருவாகும்போது கட்சிகளுக்குள்ளேயே ஆச்சரியமும் குழப்பமும் ஏற்படுகிறது. அதை விட வெளியே உள்ள அரசியற் சக்திகளுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் அதிர்ச்சி. சமூக வலைத்தளங்களில் இயங்கும் புரட்சியாளர்கள் என்ன செய்வது? என்ன சொல்வது என்று தெரியாத நிலை ஏற்படுகிறது. முக்கியமாக கட்சிக்குள் பேச முடியாததை எல்லாம் சமூக வலைத்தளங்களில் பேசலாம் என்று கருதுகிறார்கள். சமூக வலைத்தளங்களில் உள்ள ஜனநாயக வெளியைப் பயன்படுத்த விளைகிறார்கள். இது அவர்களுக்கு ஒரு விதமான உளத் திருப்தியை அளிக்கிறது. 

இந்த நிலை ஏன் வந்தது என்றால், கடந்த 75 ஆண்டுகளாகத் தமிழ்த் தேசிய அரசியல் நடைமுறைக்கு (யதார்த்தத்துக்கு) வெளியே நிற்கும் ஒன்றாகவே இருந்து வந்துள்ளது. அதாவது இலட்சியவாத அரசியல் என்ற போர்வையில் கற்பனாவாத அரசியலே மேலோங்கியிருந்தது. யதார்த்தவாத அரசியலை, நடைமுறை அரசியலை எதிர்கொள்ள  இது வேறு எங்கும் இல்லாத அளவுக்கு ஈழத் தமிழ் அரசியலில் துரோகி – தியாகி என்ற பிரிகோடும் கறுப்பு – வெள்ளை என்ற எதிர் மனோபாவமும் நீடித்து வந்திருக்கிறது. 

இதை ஆரம்பித்து வைத்தவர், தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் எஸ்.ஜே. வி. செல்வநாயகம். மட்டக்களப்பில் அரசியல் செல்வாக்கு மிக்கவராக இருந்த நல்லையாவை வீழ்த்துவதற்காகச் செல்வநாயகம் ஆரம்பித்து வைத்த ‘துரோகி‘ என்ற அடையாளப்படுத்தும் – ஒதுக்கும் – அரசியலை, பின்னர்  செம்மையாக வளர்த்தவர் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கம். ஆனால், அமிர்தலிங்கமே பின்னாளில் துரோகியாக்கப்பட்டுப் பலியானார்.  

இந்தத் துரோகி – தியாகி அரசியல் விளையாட்டு ஐந்து ஆறு தலைமுறையைக் கடந்து இப்பொழுதும் தமிழ் அரசியற் பரப்பில் தொடருவதால்தான் இந்த அதிர்ச்சியும் பரபரப்பும். 

ஆனாலும் கற்பனாவாதத்தை விட நடைமுறைக்கு – யதார்தத்துக்கு எப்போதும் வலு அதிகம். என்பதால்தான் 1980 களின் நடுப்பகுதியில் ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி (தமிழரசுக் கட்சி) போன்றவற்றைத் தடை செய்து இல்லாதொழித்த விடுதலைப்புலிகள், 2000 த்தின் தொடக்கத்தில் அவற்றை மீளச் சேர்க்க வேண்டி வந்தது. (தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு) அது புலிகளின் கீழிறக்கமே. அதுவொரு அரசியல் விளைவு. அன்றைய அரசியற் சூழலின் தேவையும் நிர்ப்பந்தமுமாகும். அன்றும் அந்தக் கூட்டில் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில்) இணைந்து கொள்வதற்கும் ஒவ்வொரு கட்சிக்குள்ளும் உணர்ச்சிகரமான பல எதிர்நிலைகள் இருந்தன. அதைப்போல அவற்றை இணைப்பதிலும் புலிகளுக்கும் பலவிதமான உணர்ச்சிகரமான விவாதங்கள் நிகழ்ந்தன. அதையெல்லாம் கடந்தே அந்தக் கூட்டு உருவாகியது. 

இதையெல்லாம் படிப்பினையாக, வரலாற்று உண்மைகளாக, அரசியல் நடைமுறைகளாக, அரசியல் யதார்த்தமாக ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும். முக்கியமாகத் தலைவர்கள் தமது தீர்மானங்களிலும் நடவடிக்கைகளிலும் உறுதியும் தெளிவும் கொண்டிருப்பது அவசியம்.  

அது இல்லாதபோதுதான் குழப்பங்களும் தடுமாற்றங்களும் ஏற்படுகின்றன. இங்கே மிகப் பெரிய சிக்கலாக இருப்பது, தற்போதைய சூழலில் ஈ.பி.டி.பி ஒரு தீர்மானிக்கும் சக்தியாக உள்ளதேயாகும். தமிழ்த்தேசியவாதத் தரப்புகள் இரண்டுக்கும் இப்போது ஈ.பி.டி.பி யின் ஆதரவு வேண்டும். ஆனால், அதைப் பகிரங்கமாகப் பெற முடியாது. இதுதான் பிரச்சினை. கள்ள உறவுக்குத் தயார். அதில் கிடைக்கின்ற இன்பத்தையும் சுகத்தையும் இலாபமாக அனுபவிக்கத் தயார். ஆனால், அதைப் பகிரங்கப்படுத்தத் தயாரில்லை. இந்தக் கேவலமான சிந்தனையை என்னவென்று சொல்வது?

அப்படியென்றால், பேசாமல் விடுங்கள். NPP ஆட்சியமைக்கட்டும். அதாவது எதிர்த்தரப்பு ஆட்சியை அமைத்துக்கொள்ளட்டும். இங்கேதான் சிக்கல். 

ஆனால், ஈ.பி.டி.பியின் தரப்பில் ஒரு நியாயம் சொல்லப்படுகிறது. தாம் தற்போதைய சூழலில் தமிழ்ச்சமூகமாக – தமிழ்த்தரப்பாகவே சிந்திக்கிறோம். அந்த அடிப்படையில்தான் ஆதரவைக் கொடுப்பதா இல்லையா என்று பேச முடியும் என. அதாவது, NPP க்கு எதிரான தரப்புகளாகிய தமிழ்த் தரப்புகள் எல்லாம் ஒன்றாக நிற்பதாக ஒரு தோற்றத்தை – ஒரு நிலையை உருவாக்குவதாக. 

அப்படியானால் எதற்காக தமிழரசுக் கட்சியும் அதனுடைய ஆதரவாளர்களும் தமிழ்த்தேசியப் பேரவையும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணியும் அவற்றின் ஆதரவாளர்களும் பதற்றமடைய வேண்டும். இந்த நியாயத்தைப் பொதுவெளியில் சொல்லி நிமிரலாமே!

https://arangamnews.com/?p=12072

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, கிருபன் said:

புலிகளுக்கும் பலவிதமான உணர்ச்சிகரமான விவாதங்கள் நிகழ்ந்தன

இணைப்புக்கு நன்றி.

புலிகளின் ஆளுகைக்குள் புலி உறுமல். இப்போ புலிகளைப் பலியாக்கி நரி ஊளை. எல்லாம் தமிழினத்தின் கொடும் விதியாகியநிலை.

நட்பார்ந்த நன்றியுடன்

நொச்சி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.