Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கேரள மாநிலம் கொச்சியில் கள்ளுக்கடை (கோப்புப் படம்)

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 17 ஜூன் 2025, 02:43 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன?

தமிழ்நாட்டில் கள் விற்க தடை

தமிழ்நாட்டில் கள் இறக்கி விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டுமெனக் கோரி, தூத்துக்குடி மாவட்டத்தில் கள் இறக்கும் போராட்டத்தை நடத்தியிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்கம் நீண்ட காலமாக கள் இறக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி வருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கள்ளை இறக்கி, விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மதுபானங்களைப் பொறுத்தவரை, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வெளிநாட்டு மதுபானங்களை தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் எனப்படும் டாஸ்மாக் மூலம் மொத்தமாக வாங்கி, தன்னுடைய கடைகள் மூலமாக விற்பனை செய்துவருகிறது. இது தவிர, தனியான உரிமங்கள் மூலம் தங்கும் விடுதிகள், தனியார் பார்களிலும் மதுபானங்களை விற்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆனால், அங்கும் கள், சாராயம் போன்றவற்றை விற்க முடியாது.

டாஸ்மாக் கடைகளிலும் உணவகங்களிலும் பார்களிலும் இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களையும் வெளிநாட்டு மதுபானங்களையும் மட்டுமே விற்பனை செய்ய முடியும். கள், சாராயம் போன்ற பானங்களை விற்க முடியாது. ஆனால், வெளிநாட்டு மதுபானங்களை விற்க அனுமதியளிக்கும் நிலையில், கள், சாராயம் போன்ற பானங்களையும் விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாகவே இருந்துவருகிறது.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,SEEMAN4TN_OFFICIAL/INSTAGRAM

கள்ளுக்கு ஏன் அனுமதி இல்லை? ஆர்டிஐ கேள்விக்கு அரசு பதில்

தென்னை மற்றும் பனை மரங்களில் இருந்து கள்ளை இறக்கி, விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் என்பதை அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு 'கள் பாதுகாப்பு இயக்கம்' என்ற அமைப்பு நீண்ட காலமாக இயங்கிவருகிறது.

"2005ல் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் கள்ளுக்கு ஏன் அனுமதியில்லை எனக் கேட்டோம். அதற்குப் பதிலளிக்கும் போது, பனை மரத்தில் இறக்கும் கள்ளில் போதை குறைவு என்பதால் குளோரல் ஹைட்ரேட் கலக்கிக் கொடுப்பார்கள். ஒவ்வொரு பனை மரத்திலிருந்தும் கள்ளை உற்பத்தி செய்ய முடியும் என்பதால், ஒவ்வொரு மரத்தையும் கண்காணிக்க முடியாது. இதனால் 1987ஆம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் கள் இறக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டது என்றார்கள். இதற்குப் பிறகுதான் போராட ஆரம்பித்தோம். தமிழ்நாட்டில் மட்டும்தான் கள் இறக்க முடியவில்லை. புதுச்சேரி, ஆந்திரா, கேரளா ஆகிய மாநிலங்களில் கள் விற்கிறார்கள். அங்கெல்லாம் கலப்படம் நடக்காது, இங்கே மட்டும்தான் நடக்குமா?" எனக் கேள்வி எழுப்புகிறார், தமிழ்நாடு கள் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் நல்லுசாமி.

தங்களைப் பொறுத்தவரை, கள் ஒரு போதை ஏற்படுத்தும் பானமல்ல என்றும் அது உணவின் ஒரு பகுதி என்றும் குறிப்பிடும் அவர், தமிழ்நாடு அரசு தனது மதுக் கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமென்கிறார். "பனை மரத்திலிருந்தும் தென்னை மரத்திலிருந்தும் கள் இறக்குவதில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது. அது போதை ஏற்படுத்தும் பானமே அல்ல" என்கிறார்.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,NALLASAMY

'கலாசார சீரழிவு ஏற்படும்'

ஆனால், கள்ளை ஒரு உணவைப் போல அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையைக் கடுமையாக எதிர்க்கிறார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளரான து. ரவிக்குமார்.

"கள் என்பது அடிப்படையில் மது. அது உணவு அல்ல. கஞ்சாவை மூலிகை என்று சொல்வதைப் போலத்தான், கள்ளை உணவு என்று சொல்வதும். மதுபானங்களின் விலை அதிகம் என்பதால், எல்லோராலும் நிறைய வாங்கிக் குடிக்க முடியாது. ஆனால், கள்ளின் விலை குறைவாக இருக்கும் என்பதால் இன்னும் நிறையப் பேர் குடிக்க ஆரம்பிப்பார்கள். இப்போது குடிப்பதைப் போல அதிக மடங்கு குடிப்பார்கள். குடி நோயாளிகளின் எண்ணிக்கை 3-4 மடங்கு அதிகரிக்கும்" என்கிறார் து. ரவிக்குமார்.

கள்ளுக் கடைகள் அமையும் இடங்களும் பிரச்னைக்குரியவை என்கிறார் அவர். "யார் வாடிக்கையாளரோ, அவர்களுக்கு அருகில்தான் இந்தக் கடைகளை அமைக்க நினைப்பார்கள். இயல்பாகவே அடித்தட்டு மக்கள் வசிக்கும் பகுதிகளில்தான் இந்தக் கடைகளை அமைப்பார்கள். அது அந்த அடித்தட்டு மக்களை மிகப் பெரிய கலாசாரச் சீரழிவுக்கு இட்டுச் செல்லும்" என்கிறார் அவர்.

ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார்.

"கள்ளுக் கடைகளைத் திறந்தால், அத்தனை கடைகளுக்கும் தேவைப்படும் அளவுக்கெல்லாம் கள் கிடைக்காது. அத்தனை மரங்களில் ஏறவும் ஆட்கள் கிடைக்க மாட்டார்கள். ஆகவே, அதில் கலப்படம்தான் நடக்கும். கள்ளைப் போன்ற பானத்தை உருவாக்குவதற்காக கலக்கப்படும் ரசாயனங்கள் மிகத் தீங்கானவை. போலியான கள்ளை அருந்தியதால் கேரளாவில் பாதிப்புகள் ஏற்பட்டடதாக அவ்வப்போது செய்திகளில் வரத்தான் செய்கின்றன. 20 லிட்டர் கள்ளை வடித்தால், 200 லிட்டர் கள்ளை விற்பனை செய்வார்கள். ஆகவே கள்ளை இறக்க வேண்டும் எனச் சொல்வதே சட்ட விரோதம்" என்கிறார் ரவிக்குமார்.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,WRITERRAVIKUMAR/X

படக்குறிப்பு,ஒவ்வொரு மரத்திலிருந்தும் பெரிய அளவில் கள் இறக்க முடியாது என்பதால் அது கலப்படத்துக்குத்தான் வழிவகுக்கும் என்கிறார் ரவிக்குமார்

கேரளா, ஆந்திராவில் நிலைமை என்ன?

70களின் இறுதியிலும் 80களிலும் கள்ளும் சாராயமும் அடித்தட்டு மக்களை கடுமையாக பாதிக்கிறது என்பதால்தான் கள்ளுக் கடைகளும் சாராயக் கடைகளும் மூடப்பட்டன என்கிறார் அவர்.

தமிழ்நாட்டுக்கு அருகில் உள்ள மாநிலங்களில் கேரளாவிலும் ஆந்திராவிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கள்ளுக்கடைகள் உள்ளன. கேரள அரசின் 2023-24 மதுக் கொள்கையில், கள்ளை கள்ளுக் கடைகளில் மட்டுமல்லாமல் பிராண்ட் செய்து, ஹோட்டல்கள், பார்களிலும் விற்க நினைப்பதாக குறிப்பிட்டது. ஆனால், அங்கு கள் இறக்க பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. கேரளா கள் இறக்கும் தொழிலாளர்கள் நல நிதியில் 2014ல் 30,000 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 2023ல் இந்த எண்ணிக்கை 15,000ஆக குறைந்தது. ஆந்திர மாநில அரசின் 2022-27 ஆண்டுகளுக்கான கள் கொள்கையின்படி, அம்மாநிலத்தில் 4,138 கள்ளுக்கடைகள் இயங்கிவருகின்றன.

நல்லுசாமியைப் பொறுத்தவரை வெளிநாட்டு மதுபான வகைகளின் விற்பனையை நிறுத்திவிட்டு கள் விற்பனையை மட்டும் அனுமதிக்க வேண்டும் என்கிறார். "தமிழ்நாட்டில் விஸ்கி, பிராந்தி போன்ற வெளிநாட்டு மது வகைகளை விற்க தடை விதிக்கப்படுவதோடு, கள் விற்க அனுமதிக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி டிசம்பர் மாதத்தில் கள் விடுதலை - மதுவிலக்கு மாநாடு ஒன்றை நடத்தப் போகிறோம். அந்த மாநாட்டுக்கு பிஹார் முதலமைச்சர் நிதீஷ் குமாரை அழைக்கப்போகிறோம்" என்கிறார் நல்லுசாமி.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளை உணவின் ஓர் அங்கமாக பார்க்க வேண்டும் என, கள் பாதுகாப்பு இயக்கம் கூறுகிறது

தமிழ்நாட்டில் மது விலக்கின் வரலாறு

தமிழ்நாட்டில் மதுவிலக்கு 1937ல் அறிமுகப்படுத்தப்பட்டது. தமிழ்நாட்டை உள்ளடக்கிய சென்னை மாகாணத்தில் ராஜாஜி ஆட்சியில் இருந்தபோது 1937ஆம் ஆண்டு அக்டோபர் 1ஆம் தேதி மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இரண்டாம் உலகப்போரை ஒட்டி, ராஜாஜி தலைமையிலான காங்கிரஸ் அரசு பதவி விலகிய பிறகு மதுவிலக்கு மெல்லமெல்ல தளர்ச்சியடைந்தது.

1947ல் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதலமைச்சராகப் பதவி வகித்த போது, வடஆற்காடு, சேலம், கோயம்புத்தூர் மாவட்டங்களில் மதுவிலக்கு மீண்டும் அமல்படுத்தப்பட்டது. பிறகு 1948ல் அக்டோபர் 2ஆம் தேதி சென்னை மாகாணம் முழுவதும் மதுவிலக்கு அமலுக்கு வந்தது. இந்த நிலையில், இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை ஆங்காங்கே எழுந்துவந்தது.

இது குறித்து ஆராய்ந்து அறிக்கை அளிக்க பஞ்சாபைச் சேர்ந்த ஓய்வுபெற்ற நீதிபதியான டேக் சந்த் என்பவர் தலமையில் ஒரு குழுவை 1963ல் அமைத்தது மத்திய அரசு. இந்தக் குழு 1964ல் தனது அறிக்கையை அளித்தது. அதில் மதுவிலக்கு தொடர்பான பல கடுமையான பரிந்துரைகள் அளிக்கப்பட்டிருந்தன. இந்த அறிக்கையை மாநிலங்கள் ஏற்கவில்லை. மதுவிலக்கினால் பெருமளவு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதையும் அவை சுட்டிக்காட்டின.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், மதுவிலக்கை அமல்படுத்த முன்வரும் மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் பாதியை தாங்கள் தருவதாக மத்திய அரசு கூறியது. ஆனால், மாநிலங்கள் அதில் ஆர்வம் காட்டவில்லை. இந்நிலையில், தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு, ஏற்கெனவே மதுவிலக்கை அமல்படுத்தி வரும் தங்கள் மாநிலத்துக்கும் நிதியுதவி அளிக்க வேண்டும் எனக் கோரியது. ஆனால், மத்திய அரசின் நிதியுதிவி என்பது, புதிதாக மதுவிலக்கை அமல்படுத்தும் மாநிலங்களுக்குத்தானே தவிர, ஏற்கெனவே அமல்படுத்திய மாநிலங்களுக்கு அல்ல எனக் கூறியது. இதையடுத்து, மாநில நிதி நிலையைக் காரணம் காட்டி 1971ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதி முதல் மதுவிலக்கை ஒத்திவைப்பதாக தமிழ்நாடு அரசு அறிவித்தது.

மீண்டும் மதுவிலக்கை அமல்படுத்த நினைத்த தமிழ்நாடு அரசு 1973ல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கள்ளுக்கடைகளையும் மூடுவதாக அறிவித்தது. பிறகு, 1974ல் இருந்த அனைத்துச் சாராயக் கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டது. மீண்டும் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

1977ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு மதுவிலக்கைத் தளர்த்துவதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தது. முடிவில், 1981ஆம் ஆண்டு மே 1ஆம் தேதி முதல் மதுவிலக்குத் தளர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கள்ளுக்கடை, சாராயக் கடை, வெளிநாட்டு மதுபானங்களை விற்கும் கடைகள் திறக்கப்பட்டன. இதற்குப் பிறகு, 1987ல் கள், சாராயக் கடைகளை மூடுவதாக அரசு அறிவித்தது. ஆனால், இந்தியாவிலேயே தயாராகும் வெளிநாட்டு மதுபானங்களின் விற்பனை தொடர்ந்தது.

1989ல் ஆட்சிக்கு வந்த தி.மு.க. அரசு, 1990 முதல் மலிவு விலை மதுவை அறிமுகப்படுத்தியது. இதைத் தயாரித்து விற்பனை செய்ய டாஸ்கோ நிறுவனம் தொடங்கப்பட்டது. 1991ல் ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க. அரசு, மலிவு விலை மது விற்பனையைத் தடை செய்தது. ஆனால், இந்தியாவில் தயாராகும் வெளிநாட்டு மது பானங்களின் விற்பனை தொடர்ந்தது. 2003ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் மதுபான விற்பனையை டாஸ்மாக் சில்லரை விற்பனைக் கடைகள் மூலம் நேரடியாக விற்பனை செய்ய ஆரம்பித்தது தமிழ்நாடு அரசு.

அதிர்வலையை ஏற்படுத்திய சசி பெருமாள் மரணம்

கள், தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா, சீமான், நாம் தமிழர் கட்சி, கள் பாதுகாப்பு இயக்கம், பனை மரம், கள் இறக்க அனுமதி

பட மூலாதாரம்,UGC

படக்குறிப்பு,சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தமிழ்நாட்டில் மதுவிலக்குக்கு ஆதரவான கோரிக்கைகள் வலுவடைந்தன. சசி பெருமாள் என்பவர் இதற்காகத் தீவிரப் போராட்டங்களை நடத்திவந்தார். இந்நிலையில், 2015ஆம் ஆண்டில், ஒரு சிறுவனுக்கு அவனுடைய உறவினர் ஒருவர் மது ஊற்றிக் கொடுத்து, அவன் அதைக் குடிப்பதை வீடியோ எடுத்தார். அது சமூக வலைதளங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், அப்போதைய தி.மு.க. தலைவரான மு. கருணாநிதி, தி.மு.க. மீண்டும் ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார். இதையடுத்து பல கட்சிகள், மதுவிலக்கு குறித்து தங்கள் நிலைப்பாட்டை வெளியிட ஆரம்பித்தன.

இந்நிலையில், 2015ஆம் ஆண்டு ஜூலை 31ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் குழித்துறை என்ற இடத்தில் இருந்த மதுபானக் கடையை மூட வேண்டும் என போராட்டம் நடந்துவந்தது. அந்தப் போராட்டத்தில் கலந்துகொண்ட சசி பெருமாள் அருகில் இருந்த செல்போன் டவரில் ஏறி போராட்டம் நடத்தத் திட்டமிட்டார். இதையடுத்து அவரும் அந்த ஊரின் ஊராட்சி தலைவருமான ஜெயசீலனும் செல்போன் டவர் மீது ஏறினர். பாதிக்கு மேல் ஜெயசீலனால் ஏற முடியாத நிலையில், சசி பெருமாள் உச்சிக்குச் சென்றுவிட்டார். சுமார் ஐந்து மணி நேரம் செல்போன் டவர் உச்சியில் இருந்து போராடிய சசி பெருமாள், அங்கேயே மயங்கினார். அவரை தீயணைப்பு படையினர் கீழே இறக்கிவந்தபோது, அவரது உடலில் உயிர் இல்லை.

சசிபெருமாளின் மரணம் தமிழ்நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சில இடங்களில் டாஸ்மாக் கடைகள் தாக்குதலுக்கு இலக்காயின. அன்றைய ஆளும் கட்சி தவிர்த்த அனைத்துக் கட்சிகளுமே பூரண மதுவிலக்குக்காக கோரிக்கை விடுத்தன.

இதற்கு அடுத்த வந்த சட்டமன்றத் தேர்தலில் மீண்டும் ஆளும் அ.தி.மு.கவே வெற்றிபெற்ற நிலையில், மதுவிலக்கு கோரிக்கையை அரசியல் கட்சிகள் படிப்படியாக கைவிட ஆரம்பித்தன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwyqjn553rwo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Kerala, Andhra-ல் கள் விற்கும்போது தமிழ்நாட்டில் அனுமதி வழங்க அரசு மறுப்பது ஏன்?

Tamilnadu Toddy Ban: தமிழ்நாட்டில் ஒரு பக்கம் மதுவிலக்குக் கோரிக்கையை சிலர் முன்வைத்துவரும் நிலையில், கள் இறக்க அனுமதிக்க கோரும் போராட்டங்களும் அவ்வப்போது நடந்துவருகின்றன. கள் இறக்கி விற்பனை செய்வது விவசாயிகளுக்கு உதவும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. இந்தப் போராட்டத்தின் பின்னணி என்ன? கேரளா, ஆந்திராவைப் போல தமிழ்நாட்டிலும் கள்ளுக்கடைகளை திறப்பதில் என்ன பிரச்னை? அரசு கூறும் சிக்கல் என்ன?

#Tamilnadu #Toddy #Liquor

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.