Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மதில் மேல் பூனை

sudumanal

modi.jpg?w=368

மத்தியகிழக்கை மட்டுமல்ல, ஆசியப் பிராந்தியத்தையும் உலுக்கிக் கொண்டிருக்கும் இஸ்ரேல்-ஈரான் யுத்தத்தில் இந்தியா ‘மதில்மேல் பூனையாக’ இன்னும் எவளவு காலம் இருக்கப் போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. பிரிக்ஸ் இன் தோற்றுவாயாக இருந்த முதல் நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. பிறகு தென் ஆபிரிக்காவும் இணைந்து பிரிக் (BRIC) என்பது பிரிக்ஸ் (BRICS) என்றாகியது. இப்போ ஈரானும் அதில் ஒரு புதிய அங்கத்துவ நாடு.

ஒற்றைத் துருவ அரசியலை புரட்டிப்போடும் வலுவான பொருளாதார அமைப்பாக பலம்பெறுகிறது பிரிக்ஸ். பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்ட ஈரானின் மீதான இந்த யுத்தம் பிரிக்ஸ் இன் பொருளாதாரத்தை பாதிக்க வல்லது. அதனால் பிரிக்ஸ் நாடுகள் இந்த யுத்தத்தை விரும்பாதது மட்டுமல்ல, அமைதியான வழியில், ஓர் அரசியல் தீர்வை நோக்கிய வழியில் உடனடியான போர்நிறுத்தம் பற்றி வெளிப்படையாக பேசுகின்றன. பல காலமாக இஸ்ரேலுக்கு விளக்குப் பிடித்து மீண்டுவந்த சவூதி கூட, ஈரான் மீதான இஸ்ரேலின் வலிந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளது. ஆனால் இந்தியா..?

எஸ்.சி.ஓ (SCO- Shanghai Cooperation Organisation) இன் ஓர் அங்கத்துவ நாடாகவும் இந்தியா இருக்கிறது. 2001 இல் தோற்றுவிக்கப்பட்ட இந்த அமைப்பில் இந்தியா, சீனா, ரசியா, பாகிஸ்தான், பெலாரூஸ், கஸஹஸ்தான், கிர்ஹிஸ்தான் உற்ஸ்பெஹிஸ்தான் இருந்தன. 2003 இல் இந்தியாவின் அனுசரணையின் கீழ் ஈரானும் இணைந்துகொண்டது.

இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்தியா இணைந்து கொள்ள மறுத்துள்ளது. ஈரான் மீதான வலிந்த தாக்குதலை இந்த அறிக்கை வன்மையாகக் கண்டிக்கிறது. ஈரானின் இறைமைக்கு எதிராக இஸ்ரேலின் தாக்குதல் ஆரம்பிக்கப்பட்டதை அது சுட்டிக் காட்டுகிறது. அத்தோடு இந் நடவடிக்கை பிராந்திய ரீதியில் மட்டுமல்ல சர்வதேச ரீதியிலும் அமைதிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது என்கிறது அந்த அறிக்கை. இதில் இந்தியாவின் குரல் இல்லாதது ஏமாற்றமாக இருக்கிறது.

2024 இல் இருமுறை வலிந்த தாக்குதலை இஸ்ரேல் ஈரான் மீது மேற்கொண்டது. ஈரானும் எதிர்த் தாக்குதல் செய்தது. ஆனால் இம் முறை நடந்த தாக்குதல் இன்னும் வீரியமான விளைவுகளை ஈரானுக்கு ஏற்படுத்தியுள்ளன. தாக்குதலில் (இதுவரையான கணக்கின்படி) 70 க்கு மேற்பட்ட மக்களை மட்டுமல்ல, அணு விஞ்ஞானிகள், பல்கலைக்கழக பேராசிரியர்கள், உயர்நிலை இராணுவ அதிகாரிகள் என்பவர்களும் இவ் எதிர்பாராத தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்கள். இது ஒரு நாட்டின் இறைமையை மோசமாக மீறிய செயலாகும்.

அத்தோடு பேரழிவை ஏற்படுத்தவல்ல அணுச் சக்தி நிலையங்கள் மீதும் இஸ்ரேல் திட்டமிட்டு தாக்குதல் தொடுத்துள்ளது. ஒன்று புரியவில்லை. இன்று அணுவாயுதங்களை வைத்திருக்கிற இஸ்ரேல் உட்பட்ட நாடுகள் யாரிடம் அனுமதி வாங்கி அதை சாதித்தன. பெருமை வேறு கொண்டாடின. ஈரானுக்கு மட்டும் அதை மறுக்க அமெரிக்காவோ இஸ்ரேலோ யார்?.

உண்மையில் சிறிய நாடுகள் மீதான அச்சுறுத்தல்களுக்கு அணுகுண்டு ஒருவகையில் பாதுகாப்பு அளிக்க வல்லது என்ற கருத்து ஒன்று உண்டு. அது ஏவியவர் உட்பட மனித குலத்தையே அழிவுக்கு உள்ளாக்கும் வலு கொண்டது. அதனால் அதை எடுத்த எடுப்பிலே பாவிக்க முடியாதபடியான அதி எச்சரிக்கைத் தன்மையையும் அந்த வலு உள்ளடக்கியுள்ளது எனலாம்.

தாம் அணுகுண்டை தயாரிக்கவில்லை அதற்கான நோக்கமும் இல்லை என்கிறது ஈரான். அது ஒருபுறம் இருக்கட்டும். இஸ்ரேலின் இருப்புக்கு ஈரான் அணுவாயுத செயல்முறை அச்சுறுத்தலை தரலாம் என நியாயப் பூழல் சொல்லி ஈரானை கட்டுக்குள் கொண்டுவர அமெரிக்கா ஈரானுடன் பேச்சுவார்த்தை தொடங்கியது. இதுவரை 5 தடவைகள் பேசியுமாயிற்று. முன்னேற்றகரமாக இருக்கிறது என இரு தரப்பும் பேசிக்கொண்டிருக்க இஸ்ரேல் ஈரானுக்குள் நுழைந்து வெறியாட்டம் ஆடுகிறது. இதெல்லாம் பெரியண்ணனுக்கு தெரியாமலா நடக்கும் என்பதை ஊகிக்க கடினமேதுமில்லை.

இந்தத் தாக்குதலுக்கான இரகசிய ட்றோன் மறைவிடத்தை மொசாட் ஈரானுக்குள்ளேயே நிறுவி பதுங்கியிருந்ததானது ஈரானின் பாதுகாப்பு கவசத்தின் பலவீனத்தையே காட்டுகிறது. மொசாட் செய்திருக்கிற இந்த சதியில் இதுவரை ஈரானால் கைதுசெய்யப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியர்கள் என்பது இன்னொரு பக்கத்தில் அதிர்ச்சியாக இருக்கிறது. இதில் றோ சம்பந்தப்பட்டதா என்பது தெரியாது.

காஸா படுகொலை நடந்து கொண்டிருக்கிறபோது கூட, மோடி அரசு இஸ்ரேலுக்கு தமது ஆயுத விற்பனையை தொடர்ந்து கொண்டிருக்கிறது. கூட்டுக் கொலை, பட்டினிக் கொலை என்பவற்றின் மீதான மனிதாபிமானத்தையும், இனப்படுகொலையையும் கோடிப்புறத்துள் ஒளித்துவைத்து நடத்தும் இராசதந்திரம் ஜனநாயக அரசு எனப்படுகிற ஒரு நாட்டின் அசிங்கத்தையே வெளிப்படுத்தக் கூடியது.

இந்த இஸ்ரேல்-ஈரான் திடீர் யுத்தம் குறித்து அவசரமாகக் கூடிய ஐநா பொதுச்சபையில் உடனடியானதும் நிபந்தனை ஏதுமற்றதுமான நிரந்தரமான போர் நிறுத்தம் குறித்த வரைவின் மீது நடந்த வாக்கெடுப்பிலும் இந்தியா நடுநிலை வகித்து வாக்களிக்கவில்லை. இரு தரப்பும் போர்நிறுத்தம் செய்யக் கேட்பதில்கூட என்ன நடுநிலை வேண்டிக் கிடக்கிறதோ தெரியவில்லை. இக் கூட்டத்தில் ரசியா சீனா உட்பட பல நாடுகள் கறாராக தமது கருத்துகளை முன்வைத்து விவாதித்தன.

இஸ்ரேலின் ஈரான் மீதான தாக்குதல் நடந்தபின் இந்திய வெளிநாட்டமைச்சர் ஜெய்சங்கர் அவர்கள் “இந்த சம்பவம் குறித்த சர்வதேச சமூகத்தின் ஆழமான அக்கறையை பகிர்ந்துகொள்கிறேன்” என்றார். கழுவுற சட்டியில் நழுவி ஓடும் மீனாக இந்த வார்த்தைகள் நெளிகின்றன. அத்தோடு, இந்த பதட்டநிலையை தவிர்க்க அவசரமாக வேண்டுகோள் விடுப்பதாகவும், விரைந்த இராசதந்திர நகர்வை எடுக்கும் படியும் கோரியிருந்தார். இவையெல்லாம் அவர் ஈரானுடன் தொலைபேசிவழி ஓடவிட்ட வார்த்தைகள். இதைத்தானே ஐநாவும் வரைபாய் முன்வைத்து வாக்கெடுப்புக்கு விட்டது. ஏன்தான் வாக்களிக்காமல் நழுவியது இந்தியா?

அமெரிக்க அரசியல் விஞ்ஞானி ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் இந்த வருடம் இந்தியா வந்திருந்தபோது ஒன்றைக் குறிப்பிட்டார். இந்தியாவை பல பரிமாணங்களிலும் ஏற்று, விதந்துரைத்த அவர், “ஒன்றை மட்டும் அழுத்தமாகச் சொல்கிறேன். சீனாவுடனான முரண்பாட்டை அமைதியாக இருவரும் பேசித் தீர்த்துக் கொள்ளுங்கள். தயவுசெய்து அமெரிக்காவின் விளையாட்டை நீங்கள் விளையாடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். (Don’t play American’s game). இதைச் சொல்வதற்காக மன்னித்துக் கொள்ளுங்கள். QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும்” என்றார்.

சீனாவுக்கு எதிராக அமெரிக்கா தலைமையில் கடற்படைப் போருக்குச் சாதகமாகவும் அந்த சீனக் கடற் பிராந்தியத்தில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தை நிலைநிறுத்தும் நோக்குடனும் உருவாக்கப்பட்ட QUAD அமைப்பிலிருந்து இந்தியா வெளியேற வேண்டும் என்பதே அவரது தூர நோக்காகும். நான் விரும்பிப் பார்க்கும் பிரபல இந்திய செய்தியாளர் பல்கி சர்மா உடனான நேர்காணல் அது. மேற்குலகு குறித்து மிகக் கூர்மையாக செய்தியிடும் பல்கி சர்மா, அதற்கு மாறாக ஸக்ஸ் வெளிப்படுத்திக் காட்டும் கூற்றினுள் அமெரிக்க நுண்ணரசியலை புரிந்துகொள்ளாமல் அல்லது புரிய மறுத்து “சீனாவுடனான முரண்பாட்டை நாம் (இந்தியா) எமது பாணியில் சந்திப்போம்” என பதிலளித்திருந்தார்.

அவர்கூட அண்மையில் தனது F. செய்தித் தளத்தில் “இந்த யுத்தத்தில் இந்தியா தனது நடுநிலையை எவளவு தூரத்துக்கு தக்கவைக்கும் என்பது கேள்வி” என்றார். இந்த உண்மையை மோடி அரசு எப்போ புரிந்துகொள்ளப் போகிறது.

அமெரிக்காவின் எதிரியாக இருப்பதைவிட பேரழிவு தரக்கூடியது அமெரிக்காவின் நண்பனாக இருப்பது என கென்றி கிஸிங்கர் சொன்னதை இந்த இடத்தில் சொல்லியாக வேண்டும். எல்லா பிரச்சினைகளிலும் நடுநிலை என்பது ஓர் இராஜதந்திர அணுகுமுறை அல்ல. கோட்பாட்டு ரீதியில் ‘நடுநிலை’ என்பது ஒடுக்குபவர்களின் பக்கம் சாய்ந்து நிற்பதுதான்.

எங்கள் வீட்டு வாசல்படி வரை ஆபத்து வந்தபின் கத்திக் குளறி பிரயோசனமில்லை. யாரும் கண்டுகொள்ள மாட்டார். இதை அனுபவப்பட்டு உணரவேண்டும் என்பதில்லை. மோடி அரசு புரியாமலிருக்கலாம். ஆனால், விமர்சனங்களைக் கொண்டிருக்கிற போதும், பூகோள அரசியலில் நழுவல் போக்கு இன்றி நேரு, இந்திராகாந்தி போன்ற கறாரான நிலைப்பாடுகளை வெளிப்படுத்தி நின்ற தலைவர்களைக் கண்ட இந்திய நாடும், -பார்ப்பனிய சிந்தனைக்கு வெளியில்- சிந்திக்கக் கூடிய இந்திய மக்களும் புரியாத விடயமல்ல,

https://sudumanal.com/2025/06/16/மதில்-மேல்-பூனை/#more-7180

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இனி வருமா

sudumanal

காஸா படுகொலைக்குப் பின் உலகம் பூராவும் இஸ்ரேல் மீதான மக்களின் வெறுப்பு பல மடங்கு அதிகரித்திருக்கிறது. காஸா இனப்படுகொலையை எதிர்த்து பல பேரணிகள் இன்றும் நடந்துகொண்டுதான் இருக்கிறது.

பிரான்ஸ், பிரித்தானியா, இப்போ ஜேர்மனி என ஆட்சியாளர்கள் இஸ்ரேலுக்கு எதிராக ஏதோ முனகுவதற்கு இந்த எதிர்ப்புப் போராட்டங்கள்தான் காரணம். அது அவர்களின் பிழைப்புவாதமாக இருக்கலாம். ஆனால் இந்த விடயத்தில் நோர்வே, அயர்லாந்து, ஸ்பெயின் நாடுகள் போற்றத் தக்கவை. அவை ஏற்கனவே பலஸ்தீனத்துக்காக குரல் கொடுத்து வருபவை. ஐரோப்பிய ஒன்றியத்தில் அயர்லாந்து காஸா படுகொலையை எதிர்த்தும் சியோனிச இஸ்ரேலை கண்டித்தும் அரசியல் ரீதியாக கிழித்து தொங்கவிட்டுக் கொண்டே இருப்பவர்கள்.

ரசியாவுக்கு விதித்த 27000 பொருளாதாரத்தடையுடன் இன்னும் இன்னுமாய் 17, 19 என கொசுறு கொசுறாய் கூட்டுகிற இந்த ஒன்றியம் இஸ்ரேலுக்கு எதிராக ஒரு தடையைத் தன்னும் ஏவியதில்லை. மாறாக இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என காஸா மக்களின் புதைகுழிமேல் நின்று சங்கு ஊதுவது இன்னும் ஓய்ந்தபாடில்லை.

இப்போ இஸ்ரேல் ஈரான் மீது வலிந்து தொடுத்த தாக்குதலின்போது ஈரான் தன்னை பாதுகாக்கும் உரிமை கொண்டது என்பதை சொல்ல அவர்கள் தயாராக இல்லை. மாறாக ஏதோ ஈரான் இஸ்ரேல் மீது தாக்குதல் தொடுக்கிறதாக மாற்றி மொழிபெயர்த்து, அதனடிப்படையில் இஸ்ரேல் தன்னை பாதுகாக்கும் உரிமை உடையது என அதே சங்கை மீண்டும் ஊதுகிறார்கள். இதுதான் அவர்களின் மேக் அப் ஜனநாயகம்.

ஹமாஸ், ஹிஸ்புல்லாஹ், ஹவுதி அமைப்புகளை சுட்டிக் காட்டி ஈரான் பயங்கரவாதிகளை வளர்ப்பதாகவும், மத அடிப்படைவாதிகளை வளர்ப்பதாகவும் சொல்லும் மேற்குலகமும் அதன் இரைச்சலுக்குள் அகப்பட்டவர்களும் ஒன்றை மறைக்கிறார்கள். அந்த மூன்று அமைப்புகளும் ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இருப்பவர்கள். மத அடிப்படைவாதிகளல்ல.

யார் மத அடிப்படைவாத அமைப்பினராக வெறியாட்டம் ஆடியவர்கள்/ஆடுபவர்கள் என்ற உண்மையை ஏன் மறைக்கிறார்கள். அல் கைடா, ஐஎஸ்ஐஎஸ், பொக்கோ கராம் போன்ற மத அடிப்படைவாதிகள்/பயங்கரவாதிகளை உருவாக்கியவர்கள் அமெரிக்காவும் பிரித்தானியாவும்தான் என்பது வரலாறு. இவர்களே ஏகாதிபத்தியத்துக்கு விளக்கு பிடித்தவர்கள். பிறகு இந்த வளர்த்த கடாவில் ஒரு பட்டி ஆடுகள் இந்த தோற்றுநர்களின் மார்பில் பாய்ந்த கிளை வரலாறும் உண்டு.

இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீன மண்ணின் விளைபொருள் ஹமாஸ். இஸ்ரேலின் லெபனான் மீதான ஆக்கிரமிப்பின் விளைபொருள் ஹிஸ்புல்லாஹ். அவர்களது செயற்பாட்டில் விமர்சனங்கள் இருக்கலாம். இருக்கும். அது அவர்களை பயங்கரவாகிகள் எனவோ மத அடிப்படைவாதிகள் எனவோ அவதூறு சொல்ல போதுமானதல்ல.

1993 இல் ஐநா சபையால் 160 நாடுகளுக்கு மேல் வாக்களித்த two state (பலஸ்தீனம், இஸ்ரேல்) தீர்வை இஸ்ரேல் இன்றுவரை ஏற்றுக்கொள்ளவில்லை. மாறாக பலஸ்தீன மண்ணை மட்டுமன்றி சிரியா, லெபனான் நாடுகளின் எல்லை தாண்டி ஆக்கிரமிப்பு செய்து அகண்ட இஸ்ரேல் என்ற one state தீர்வினை சாதிக்க வெறியாட்டம் ஆடிவருகிறது. ஈரானும் ஹமாஸ் உம் மறுபக்கத்தில் இஸ்ரேல் என்ற நாட்டை அங்கீகரிக்க தயாராக இல்லை. இந்தப் போக்கை இரு தரப்பும் தொடர்ந்தால் மத்திய கிழக்கில் அமைதி சாத்தியமே இல்லை.

பெரியண்ணனின் நிழலில் மத்திய கிழக்கின் சண்டியனாக வெறியாட்டம் ஆடிய இஸ்ரேலின் பிம்பத்தை எவரும் எதிர்பாராத விதத்தில் ஈரான் அடித்து நொருக்கியிருக்கிறது. இஸ்ரேலின் அடாவடித்தனத்துக்கு எதிரான உலக மக்களின் குரல் பல நாடுகளின் ஆட்சியாளர்களால் உதாசீனம் செய்யப்பட்ட தொடர் கோபத்திலிருந்த மக்கள் இஸ்ரேலின் மீதான ஈரானின் உச்சந்தலை அடியை கொண்டாடுகிறார்கள். இது நசுக்கப்பட்ட அல்லது அரசுகளால் செவி மடுக்கப்படாத தமது மனிதாபிமானம் சார் குரலினதும் மனித அறத்தினதும் தோல்வியிலிருந்து எழுந்திருக்கிற உளவியல்.

ஈரான் இந்த ஆதரவினதும் தமது அதி தாக்குதல் பலத்தினதும் நியாயமான திமிருடன் two state தீர்வை முன்வைத்து மேசைக்கு வர வேண்டும். உலக நாடுகள் ஐநா இனால் ஏற்கனவே முன்மொழியப்பட்ட two state தீர்வின் அடிப்படையில் பேச இஸ்ரேலை மேசைக்கு இழுத்து வர வேண்டும். இல்லையேல் ஈரானின் தாக்குதல் வெற்றிப் படியில் ஏறப் போவதில்லை. இந்த சந்தர்ப்பம் இனி வருமா தெரியாது.

இரு நாடுகளும் தரைப்படை கொண்டு மோத நிலத் தொடர்பு இல்லை. எனவே இராணுவ ரீதியாக எவரும் வெற்றிபெற வாய்ப்பு இல்லை. மூலைமுடுக்கெல்லாம் (சுமார் 750) இராணுவத் தளங்களையும் ஈரானைச் சுற்றி மத்தியகிழக்கு நாடுகளில் அடிவருடிகளையும் கொண்டுள்ள பெரியண்ணன் புகுந்தால் எல்லாம் நாசமாகும். அண்ணனுக்கு நிலத் தொடர்பு எதுவும் தேவையில்லை என்பதை கவனம் கொள்ள வேண்டும். இஸ்ரேலின் நிகழ்ச்சி நிரல் வழி அண்ணன் ஈராக்கினுள் உள்ளட்டதைப் போல, ஈரான் அணுகுண்டுக்கு திரி வைப்பதுதான் பாக்கி என சொல்லி உள்ளட நேரமாகாது. எனவே ஈரான் காலத்தைக் கைப்பற்ற வேண்டும்.

பொருளாதார வீழ்ச்சியும், 2027 இல் சீனாமீது போர் தொடுப்பதற்கான தயாரிப்புகள் காய்நகர்த்தல்கள் எனவும் சிக்குப்பட்டு நிற்கும் அமெரிக்கா நெத்தன்யாகுவின் இந்தப் போருக்குள் உள்ளடுமா என்ற சந்தேகத்தையும் சொல்லி வைக்க வேண்டியிருக்கிறது. அதேநேரம் இஸ்ரேலின் அழிவை அது ஒருபோதுமே சகித்துக் கொள்ளாது என்பதால் ஈரானின் இராஜதந்திர நகர்வு அவசியமானது. சிங்கம் சிங்கிளாத்தான் வரும் என்றெல்லாம் ஈரானின் தாக்குதலைக் காட்டி உசுப்பேத்தும் கதைகள் ஒன்றுக்குமே உதவாது!.

https://sudumanal.com/2025/06/19/இனி-வருமா/#more-7187

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.