Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கூகுள்

பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், தாமஸ் ஜெர்மைன்

  • பதவி, மூத்த தொழில்நுட்ப செய்தியாளர், பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தனது தேடுபொறியில் ஒரு புதிய செயற்கை நுண்ணறிவுக் கருவியை பொருத்தி இணையத்தைப் புதுப்பிக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. கூகுளின் இந்த நடவடிக்கையால் இணையதளங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படும் என்று பல நிபுணர்கள் கணிக்கின்றனர். இந்தக் கணிப்பு சரியா தவறா என்பதற்கு அப்பால், ஆன்லைன் வரலாற்றின் தற்போதைய அத்தியாயம் அதன் முடிவை நோக்கிச் செல்கிறது என்பது தெளிவாகப் புரிகிறது.

"இயந்திரமயமான இணையதளங்களுக்கு" உங்களை வரவேற்கிறோம்.

ஓர் எளிய பேரத்தின் அடிப்படையில் இணையம் கட்டமைக்கப்பட்டுள்ளது. கூகுள் போன்ற தேடுபொறிகள் தங்கள் உள்ளடக்கத்தை இலவசமாகப் பெற இணையதளங்கள் அனுமதிக்கின்றன. 'கூகுள் சர்ச்' மக்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது, அங்கு அவர்களுக்கு கூகுள் போன்ற தேடுபொறிகள் விளம்பரங்களைக் காட்டுகின்றன. அதன் மூலமாக மக்கள் பொருட்களை வாங்குகிறார்கள். பெரும்பாலான இணையதளங்கள் இப்படித்தான் பணம் சம்பாதிக்கின்றன.

இணைய செயல்பாடுகளில் 68% தேடுபொறிகளில் இருந்தே தொடங்குவதாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், சுமார் 90% தேடல்கள் கூகுளில் நடைபெறுகின்றன. இணையம் ஒரு தோட்டம் என்று வைத்துக் கொண்டால், பூக்களை வளர்க்க உதவும் சூரியன் என்று கூகுளை குறிப்பிடலாம்.

தற்போதைய இந்த ஏற்பாடு பல தசாப்தங்களாக வலுவாக இருந்தது. ஆனால் ஒரு சிறிய மாற்றம், இந்த அமைப்பு சிதைந்து வருவதாக சிலரை நம்பச் செய்துள்ளது. கூகுள் தேடுபொறியில் ஒரு புதிய AI கருவி விரைவில் பயன்பாட்டிற்கு வரவுள்ளது. இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றபோதிலும், விமர்சகர்கள் அச்சப்படுகின்றனர். அவர்களது கணிப்புகள் நிதர்சனமாகிவிட்டால், இணையத்தில் பெரும் தாக்கம் ஏற்படலாம். தரமான தகவல்கள் ஆன்லைனில் கிடைப்பது அரிதாகலாம், ஏராளமான மக்கள் வேலைகளை இழக்க நேரிடலாம் என விமர்சகர்கள் அஞ்சுகின்றனர்.

இருந்தபோதிலும் விமர்சகர்களின் கணிப்புக்கு மாறாக, இது இணையதளங்களின் வணிக மாதிரியை மேம்படுத்தலாம் என்றும், சிறந்த உள்ளடக்கத்தைக் கண்டறியும் வாய்ப்புகளை விரிவுபடுத்தலாம் என்றும் பல நிபுணர்கள் கணிக்கின்றனர். ஆனால், எப்படியிருந்தாலும் உங்களுடைய டிஜிட்டல் அனுபவங்கள் இதுவரை இருந்தது போல இனி இருக்காது என்பது மட்டும் தெளிவாகத் தெரிகிறது.

கூகுள் தேடுபொறியில் ஒரு விஷயத்தை தேடும்போது, AI உருவாக்கிய பதில்களான AI ஓவர்வியூஸ் தற்போது தோன்றுகிறது. இது அறிமுகப்படுத்தப்பட்டு ஓர் ஆண்டுதான் ஆகிறது. 2025 மே 20ஆம் தேதியன்று கூகுளின் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் பேசிய நிறுவனத்தின் தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சை, தற்போது கூகுள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறிச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார்.

அதாவது, "ஒரு முழுமையான செயற்கை நுண்ணறிவுத் தேடல் அனுபவத்தை விரும்புவோருக்கு, நாங்கள் ஒரு புதிய AI மோட்-ஐ அறிமுகப்படுத்துகிறோம். இது தேடலின் முழுமையான மறுபரிணாமமாக இருக்கும்," என்று அவர் கூறினார்.

பல ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு தொடர்பான செய்திகள் மிகைப்படுத்தப்பட்டு இருப்பதால், இதையும் நீங்கள் சந்தேகிக்கலாம். ஆனால் இது மிகைப்படுத்தல் அல்ல, நிதர்சனமான உண்மை.

'இது கூகுள் தேடலின் எதிர்காலம்'

கூகுள்

பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES

மக்கள் ஆண்டுக்கு ஐந்து டிரில்லியன் முறை கூகுள் தேடலைப் பயன்படுத்துகிறார்கள். இது இணையத்தின் வடிவத்தை வரையறுக்கிறது. AI மோட் ஒரு தீவிரமான மாற்றமாக இருக்கும். AI ஓவர்வியூஸ் போலன்றி, AI மோட் பாரம்பரிய தேடல் முடிவுகளை முழுவதுமாக மாற்றுகிறது. அதற்குப் பதிலாக, உங்கள் கேள்விக்குப் பதிலளிக்க சாட்பாட் ஒரு குறுங்கட்டுரையைத் திறம்பட உருவாக்குகிறது.

நீங்கள் இதைப் படித்துக் கொண்டிருக்கும்போது, AI மோட் அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு சோதனை அடிப்படையில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இது தேடுபொறி மற்றும் நிறுவனத்தின் செயலியில் ஒரு பொத்தானாகத் தோன்றும். இது இப்போதைக்கு விருப்பத் தேர்வாக இருந்தாலும், "இது கூகுள் தேடலின் எதிர்காலம்" என்று கூகுள் சர்ச் பிரிவின் தலைவர் லிஸ் ரீட் இந்த செயற்கை நுண்ணறிவுக் கருவியைத் தொடங்கும்போதே தெளிவாகக் கூறிவிட்டார்.

AI ஓவர்வியூஸ் ஏற்கெனவே இணையத்தின் மற்ற பகுதிகளுக்கு மிகக் குறைந்த போக்குவரத்தை அனுப்பும் நிலையில், AI மோட் அந்தப் போக்கை மேலும் அதிகப்படுத்தக்கூடும் என்று விமர்சகர்கள் அஞ்சுகிறார்கள். இது நடந்தால், கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாக நீங்கள் அனுபவித்து வரும் டிஜிட்டல் உள்ளடக்கத்தைத் தூண்டிய 'வணிக மாதிரி' நசுக்கப்படக்கூடும்.

"கூகுள் அதன் தற்போதைய வடிவத்தில் AI மோட் வசதியை இயல்பு நிலையாக மாற்றினால், அது இணையத்தில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தும்," என சந்தைப்படுத்தல் நிறுவனமான ஆம்சிவின் சர்ச் எஞ்சின் ஆப்டிமைசேஷன் (SEO) உத்தி மற்றும் ஆராய்ச்சியின் துணைத் தலைவர் லில்லி ரே கூறுகிறார்.

"இது பெரும்பாலான வெளியீட்டாளர்களின் முக்கிய வருவாய் ஆதாரத்தை கணிசமாகக் குறைக்கும், மேலும் இது ஆர்கானிக் தேடல் மூலம் வரும் பயனர்களை நம்பியிருக்கும் உள்ளடக்க படைப்பாளர்களை ஊக்கமிழக்கச் செய்யும். அதாவது குறைந்தபட்சம் லட்சக்கணக்கான இணையதளங்கள் பாதிக்கப்படலாம். கூகுளிடம் அதற்கான சக்தி உள்ளது" என அவர் மேலும் கூறுகிறார்.

இந்தக் கவலைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் கூறுகிறது. AI மோட், இணையதளங்களை ஆரோக்கியமாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும் என்று நிறுவனம் நம்புகிறது.

"ஒவ்வொரு நாளும், கோடிக்கணக்கான கிளிக்குகளை இணையதளங்களுக்கு அனுப்புகிறோம், மக்களை இணையத்துடன் இணைப்பது தொடர்ந்து எங்களுடைய முன்னுரிமையாக உள்ளது," என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.

"AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் போன்ற புதிய முயற்சிகள் தேடலை மேம்படுத்துகின்றன மற்றும் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகின்றன. இது உள்ளடக்கத்தைக் கண்டறிவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்குகிறது" என அவர் மேலும் குறிப்பிட்டார்.

இப்படி பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருப்பினும், கூகுள் மற்றும் அதன் விமர்சகர்கள் ஒரேயொரு விஷயத்தில் உடன்படுகிறார்கள்: "அது, இணையம் மிகவும் வித்தியாசமாக மாறப் போகிறது" என்பதுதான். குறைந்தபட்சம் அடுத்த ஓர் ஆண்டில் தற்போதைய ஆன்லைன் சகாப்தம் முடிவுக்கு வரும். அந்த மாற்றத்தின் இறுதியில் இணைய உலகம் எப்படி இருக்கும் என்பதுதான் ஒரே கேள்வி.

வெளியீட்டாளர்களின் கவலை

இணையம் எங்கும் செல்லவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். சமூக ஊடக தளங்கள் எப்போதும் இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்படுகின்றன, கட்டணத் திரைகளைக் கொண்ட சில பிரபலமான தளங்கள் செழிப்பாக இருக்கின்றன. மக்கள் ஆன்லைனில் தகவல்களை தேடிக் கண்டறியும் முறை மட்டுமே மாறப் போகிறது.

சிலரின் அச்சம், "பொதுவான இணையதளம்" ஆபத்தில் உள்ளது என்பதே. அதாவது, சுதந்திரமாக அணுகக்கூடிய சுயாதீன இணையதளங்களின் சுற்றுச்சூழல் அமைப்பு, அவற்றின் உரிமையாளர்கள் மற்றும் அவர்களின் வணிகங்களுக்கு சிக்கல் வரலாம் என்று அஞ்சப்படுகிறது. தகவல், படங்கள் மற்றும் வீடியோவை பகிர்ந்து கொள்ளும் அவர்கள், பெரும்பாலும் "வெளியீட்டாளர்கள்" என்று அழைக்கப்படுகிறார்கள்,

இருப்பினும், இதற்கு முன்னரே நாம் இதைப் பற்றிக் கேள்விப்பட்டுள்ளோம். 2010இல் "இணையதளம் இறந்துவிட்டது" என்று வயர்டு பத்திரிகையின் ஓர் அட்டைப்படம் குறிப்பிட்டிருந்தது. ஆனால் இன்றும் நாம் இங்கே இருக்கிறோம். ஸ்மார்ட்போன்கள், செயலிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அனைத்தும் உலகளாவிய இணையதளம் தொடர்பான 'இறுதி நாள்' கணிப்புகளைத் தூண்டிவிட்டன. ஆனால் மே மாதத்தில் கூகுள் அறிவித்ததைத் தொடர்ந்து, டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு AI மோட் முன்னோடியில்லாத அச்சுறுத்தலை ஏற்படுத்துவதாகக் கூறும் நிபுணர்கள் பலரிடம் பிபிசி பேசியது.

"இணையதளங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பதற்கு 'அழிந்துவிடும்' என்று சொல்வது அதிகப்படியானது என்று நான் நினைக்கிறேன்," என போலெமிக் டிஜிட்டல் (Polemic Digital) என்ற எஸ்.இ.ஓ நிறுவனத்தின் நிறுவனர் பாரி ஆடம்ஸ் கூறுகிறார். அவர், "Decimation (பெருமளவில் குறையும்) என்பது சரியான சொல்" என்கிறார்.

கூகுள் இதை ஏற்கவில்லை. உண்மையில், AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இணையத்திற்கு நல்லது என்று கூகுள் நிறுவனம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்த அம்சங்கள், பயனர்களை "இணையதளங்களின் பன்முகத்தன்மையை அதிகரிக்கின்றன" என்றும், மக்கள் தாங்கள் கிளிக் செய்யும் இணைப்புகளில் அதிக நேரம் செலவிடுவதால் "உயர் தரம்" கொண்ட தேடல் அனுபவம் சாத்தியமாகும் என்றும் கூகுள் உறுதிபடக் கூறுகிறது.

இருந்தபோதிலும், கூகுளின் இந்தக் கூற்றுகளை ஆதரிக்கும் தரவை அந்த நிறுவனம் வழங்கவில்லை. ஆர்வமுள்ள வெளியீட்டாளர்களுக்கு கூகுள் AI வழிகாட்டி ஒன்றை வைத்துள்ளது. ஆனால் AI ஓவர்வியூஸ் இணையதளங்களில் ஏற்படுத்தும் தாக்கங்களைப் பற்றிய தெளிவான தகவல்களை அது வழங்கவில்லை. இந்த தொடர்பான கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை. அத்துடன், இந்த AI கருவிகள் தேடல் இணையத்திற்கு அனுப்பும் மொத்த டிராஃபிக்கை குறைக்கின்றன என்பதை கூகுள் மறுக்கவில்லை அல்லது குறைந்தபட்சம் நேரடியாக மறுக்கவில்லை என்றும் கூறலாம்.

"AI ஓவர்வியூஸ் மற்றும் AI மோட் இரண்டுமே மூலங்களுக்கான இணைப்புகளை உள்ளடக்கியுள்ளன, இருந்தபோதிலும் நீங்கள் தேடும் கேள்விக்கான பதிலை AI கொடுத்துவிட்டால், நீங்கள் ஏன் மூல பக்கத்தை கிளிக் செய்ய வேண்டும்?" என்ற கேள்வியை விமர்சகர்கள் எழுப்புகின்றனர்.

தரவுகள் இந்த தர்க்கத்தை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. மக்கள் எதைத் தேடுகிறார்கள் என்பதைப் பொறுத்து, "கிளிக்-த்ரூ ரேட்" என்று அழைக்கப்படும் இணையதளங்களுக்கு கூகுள் அனுப்பும் போக்குவரத்தின் அளவை AI ஓவர்வியூஸ் 30% முதல் 70% வரை குறைப்பதாகப் பல்வேறு பகுப்பாய்வுகள் கூறுகின்றன. கூகுள் சர்ச்சில் இப்போது சுமார் 60% "ஜீரோ-கிளிக்" ஆக இருப்பதாகவும், பயனர் ஒரு இணைப்பை பார்வையிடாமலேயே அவர்களுக்கான பதில் கிடைத்து விடுவதாகவும் பகுப்பாய்வுகள் கண்டறிந்துள்ளன.

'இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன'

தரவுகள்

பட மூலாதாரம்,GOOGLE/ BBC

AI மோட் வசதியின் சில பதிப்புகள் விரைவில் இயல்புநிலையாக மாறும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர், மேலும் இது பாரம்பரிய இணைப்புகளின் பட்டியலை முற்றிலுமாக நீக்குவதால், தேடுதலில் AI ஏற்படுத்தும் தாக்கம் அதிகரிக்கும்.

"கூகுளின் AI மோட், இணையதளங்களுக்குச் செல்லும் கிளிக்குகளின் எண்ணிக்கையை பாதியாகக் குறைக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். ஆனால் இது நேர்மறையிலான சூழ்நிலையில்தான்," என்கிறார் ஆடம்ஸ்.

"அதிக அளவிலான பயனர்கள் AI அவர்களுக்கு என்ன கொடுக்கிறதோ அதிலேயே திருப்தி அடைவார்கள் என நினைக்கிறேன். இது வணிகத்தில் சாத்தியமான லாபம் கிடைப்பதற்கும், திவாலாவதற்கும் உள்ள வித்தியாசமாக இருக்கலாம். பல வெளியீட்டாளர்களுக்கு, இது வியத்தகு முறையில் இருக்கும்."

இது ஒரு சில வலைப்பதிவர்கள் வேலை இழப்பது தொடர்பானது மட்டுமல்ல, பயனர்கள் இணையத்துடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் தகவல்களை எவ்வாறு கண்டறிகிறார்கள் என்பதையும் மாற்றக்கூடும்.

"இணையதளம் என்பது பல்வேறு தகவல்கள் உங்கள் விரல் நுனியில் உள்ளவை என்றே சொல்லலாம், ஆனால் அது இனி மாறக்கூடும்" என்று காற்றின் தர தயாரிப்புகளை மதிப்பாய்வு செய்யும் ஹவுஸ்ஃப்ரெஷின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ கூறுகிறார். கூகுளால் ஓரங்கட்டப்பட்டதாக உணரும் இணையதளங்களின் பிரதிநிதியாக நவரோ பேசுகிறார். பயனர்கள் தேடும் தகவல்களுக்கான ஆதாரங்களின் பன்முகத்தன்மையை இது மிகவும் குறைத்துவிடக்கூடும் என்று அவர் கவலை தெரிவிக்கிறார்.

"இணையதளம் நம் அனைவருக்குமான மிகப்பெரிய நூலகத்தைப் போன்றது. ஆனால், நூலகரிடம் புத்தகம் கேட்டால் அவர் புத்தகத்தைப் பற்றி மட்டுமே உங்களுக்குச் சொல்வார்" என்று அவர் கூறுகிறார்.

இதுபோன்ற கணிப்புகள் மற்றும் பகுப்பாய்வுகள் தவறானவை என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். பல்வேறு காரணங்களுக்காக இணையதளங்களின் போக்குவரத்து குறையலாம் என்றும், இந்தச் சிக்கல்களை பற்றிச் சொல்லும் ஆய்வுகள் பெரும்பாலும் சீரற்ற தரவு மற்றும் குறைபாடுள்ள முறையைப் பயன்படுத்துகின்றன என்றும் அவர் கூறுகிறார்.

"எங்கள் கண்ணோட்டத்தில், இணையதளங்கள் விருத்தியடைந்து வருகின்றன" என்று கூகுளின் அறிவு மற்றும் தகவல் துறையின் மூத்த துணைத் தலைவர் நிக் ஃபாக்ஸ், தனது சமீபத்திய பாட்காஸ்ட் நேர்காணலில் தெரிவித்துள்ளார். "இணையதளங்களின் நலன் மற்றும் எதிர்காலம் குறித்து கூகுளைவிட அதிக அக்கறை கொண்ட நிறுவனம் வேறெதுவும் இல்லை."

உண்மையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இணையதளங்களில் உள்ள உள்ளடக்கத்தின் அளவு 45% அதிகரித்துள்ளது என்றும், இது ஸ்பேமை தவிர்த்த பிறகு இருக்கும் அளவு என்றும் ஃபாக்ஸ் கூறினார். "இதை தரவுகள் சொல்கின்றன," என்று அவர் கூறினார். "மக்கள் இன்னும் இணையதளங்களிலேயே மிகவும் அதிக அளவில் கிளிக் செய்கிறார்கள்."

பல்வேறு உறுதிமொழிகள் இருந்தபோதிலும், சில இணையதளங்கள் AI அடிப்படையில் இயங்கும் சாட்பாட்கள் மற்றும் தேடுபொறியின் வருகையால் சிரமப்படுகின்றன.

'பொது இணையதளங்களை நிச்சயமாக அழிக்கப் போகிறது'

ஹவுஸ்ஃப்ரெஷ்

பட மூலாதாரம்,HOUSEFRESH/ YUN SUN PARK

கடந்த ஆண்டு, பெரிய பிராண்டுகளுக்கு கிளிக்குகளை மாற்றியமைக்கும் கூகுளின் வழிமுறைகளுக்கான புதுப்பிப்புகளால் பாதிக்கப்பட்டதாகக் கூறிய எண்ணற்ற சிறிய ஆன்லைன் வணிகங்களில் ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனமும் ஒன்று. தற்போது, தங்களுக்கு AI மூலம் சேதங்கள் அதிகரிப்பதாக நவரோ கூறுகிறார்.

"சில வாரங்களுக்கு முன்பு, திடீரென ஓர் அதிகரிப்பைக் கவனித்தோம்," என்று நவரோ கூறுகிறார். கூகுள் தேடலில் ஹவுஸ்ஃப்ரெஷ் எத்தனை முறை தோன்றும் என்ற பதிவுகள் அதிகரித்தன. "ஆனால் அதே நேரத்தில், கிளிக்குகள் குறைந்துவிட்டன. எனவே கூகுள் எங்கள் இணைப்புகளை அடிக்கடி காட்டுகிறது. ஆனால் யாரும் கிளிக் செய்வதில்லை. இது AI ஓவர்வியூஸ் உடன் தொடர்புடையது" என்கிறார் அவர்.

பிரைட்எட்ஜ் தரவு பகுப்பாய்வு நிறுவனத்தின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ் வந்த பிறகு, இணையம் முழுவதும் 49% பதிவுகள் அதிகரித்துள்ளன. ஆனால் மக்கள் தங்கள் பதில்களை செயற்கை நுண்ணறிவிடம் இருந்து பெறுவதால் 30% கிளிக்குகள் குறைந்துள்ளன.

"கூகுள்தான் விதிகளை உருவாக்குகிறது, விளையாட்டை உருவாக்கிய அவர்களே, அதில் பங்கேற்றவர்களுக்கு வெகுமதி அளித்தனர்," என்று கூறும் நவரோ, "இப்போது அவர்களே, 'இது என் உள்கட்டமைப்பு, இணையதளம் அதில் வாழ்கிறது' என்று கூறுகிறார்கள். நமக்குத் தெரிந்த பொதுவான இணையதளத்தை அது நிச்சயமாக அழிக்கப் போகிறது என்று தோன்றுகிறது. அநேகமாக அது ஏற்கெனவே நடந்துவிட்டது."

'இயந்திர இணையதளத்தை வரவேற்போம்'

AI மோட் என்பதன் மிகப்பெரிய தாக்கம், நீங்கள் ஒவ்வொரு நாளும் ஆன்லைனில் பெறும் அனுபவத்தில் எதிரொலிக்கும். சிலர் நம்புவது போல், நாம் புதிய முன்னுதாரணம் ஒன்றின் தொடக்க காலகட்டத்தில் இருக்கலாம். இணையதளத்தை எதிர்காலத்தில் "இயந்திர இணையதளம்" என்றே அழைக்கலாம் என்று தோன்றுகிறது. இணையதளங்கள் என்பது மனிதர்களுக்காக அல்லாமல் AI இயந்திரம் படிக்க உருவாக்கப்படும் இடமாகவும், நாம் சாட்பாட்கள் மூலம் சுருக்கங்களைப் படித்து தகவல்களைத் தெரிந்து கொள்ளும் முதன்மை வழியாகவும் மாறலாம்.

அண்மையில் கூகுள் நிறுவனத்தின் AI ஆராய்ச்சி ஆய்வகமான Google DeepMindஇன் தலைவரான டெமிஸ் ஹசாபிஸ் அளித்த பேட்டி ஒன்றில், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை நேரடியாக செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுக்கு வழங்க விரும்புவார்கள் என்றும், சிலர் அந்தத் தகவலை மனிதர்கள் படிக்கும் வகையில் இணையதளங்களில் வெளியிடுவதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள் என்றும் கூறினார். "சில ஆண்டுகளில் விஷ்யங்கள் மிகவும் வித்தியாசமாக இருக்கும் என நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.

இணையதளங்கள் வழக்கம் போலவே, வசதியான முறையில் பதில்களைக் கொடுக்கும் ஓர் உலகமாக இருக்கும். ஆனால் திறந்த இணையதளத்தை மிகவும் பிரபலமாக்கிய சில விஷயங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கக்கூடும். பல புதிய விஷயங்களை தரும் இந்த வாய்ப்பு நல்லதாகவோ அல்லது இல்லாமலோ இருக்கலாம். டீகோடர் பாட்காஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் பேசிய சுந்தர் பிச்சை, இது பயனர்களின் விருப்பத்தைப் பொறுத்தது என்று கூறினார்.

கூகுள்

பட மூலாதாரம்,SERENITY STRULL/ BBC/ GETTY IMAGES

கிட்டத்தட்ட ஐந்தில் ஒரு பங்கு இணையதளங்களுக்கு நெட்வொர்க் சேவைகளை வழங்கும் Cloudflare நிறுவனத்தின் தலைமை நிர்வாகி மேத்யூ பிரின்ஸ், இதிலுள்ள மிகப்பெரிய சிக்கலை முன்னறிவிக்கிறார். "ரோபோக்கள் விளம்பரங்களை கிளிக் செய்வதில்லை," என்று அவர் கூறுகிறார்.

AI பார்வையாளர்களாக மாறினால், படைப்பாளர்களுக்கு எப்படி பணம் கிடைக்கும்? நேரடியான இழப்பீடு என்பது ஒரு வாய்ப்பாக இருக்கலாம். அமேசானின் செயற்கை நுண்ணறிவுக்காக, நியூயார்க் டைம்ஸ் உள்ளடக்க உரிமம் வழங்குகிறது. பயனர் தரவுகளில் செயற்கை நுண்ணறிவை பயிற்றுவிக்க ரெடிட்டுக்கு ஆண்டுக்கு $60 மில்லியன் கட்டணத்தை கூகுள் செலுத்துகிறது. டஜன் கணக்கான பெரிய வெளியீட்டாளர்கள் மற்றும் ஊடக நிறுவனங்கள் OpenAI மற்றும் பிறருடன் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிக தரவுகளைக் கொண்ட மிகப்பெரிய இணையதளங்கள் மட்டுமே இதுபோன்ற ஒப்பந்தங்களைப் பெற்றுள்ளன. "இதுபோன்ற உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்துவது இணையதளத்தைத் தக்கவைக்கத் தேவையான அளவில் செயல்படும் ஒரு மாதிரி என்று எனக்குத் தோன்றவில்லை," என்று விளம்பர தொழில்நுட்ப நிறுவனமான ராப்டிவின் நிர்வாக துணைத் தலைவர் டாம் கிரிட்ச்லோ கூறுகிறார். "கிளிக்குகள் குறைவதற்கு மாற்றாக அது எவ்வாறு செயல்படும் என்பதைப் பார்ப்பது கடினம்" என்கிறார் அவர்.

இணையத்தில் பணம் சம்பாதிப்பது கடினமாகிவிட்டால், சமூக ஊடகங்களில் இருந்து வெளியேறுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று ஆடம்ஸும் மற்றவர்களும் எதிர்பார்க்கிறார்கள். நவரோவை போன்ற பலர் இந்த நிலையை ஏற்கெனவே எதிர்கொண்டுள்ளனர்.

'புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது'

ஹவுஸ்ஃப்ரெஷ் நிறுவனம் யூட்யூபில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. ஆனால் சமூக ஊடக வழிமுறைகளின் விருப்பங்கள் இன்னும் நிலையற்றவையாகவே இருப்பதாக நவரோ கூறுகிறார். மேலும் படைப்பாளர்கள் விஷயத்தின் ஆழத்தையும் விவரங்களையும் தியாகம் செய்ய தளங்கள் கட்டாயப்படுத்துகின்றன.

"உயர்தரம் வாய்ந்த உள்ளடக்கங்களை உருவாக்க எந்தவித ஊக்கமும் கிடைப்பதில்லை. அனைத்துமே பணமாக்குதல் மற்றும் மாற்றம் பற்றியதாக மாறும், அது தகவலை குறைவாகத் தெரிவிக்கவும் அதிகமாக விற்கவும் கட்டாயப்படுத்துகிறது," என்று நவரோ கூறுகிறார்.

இணையதளத்தில் வெளியீட்டாளர்கள் கொண்டிருந்த தன்னிச்சையான செயல்பாட்டை இழப்பது என்பது பார்வையாளர்களாகிய உங்களுக்கு தரம் குறைந்த உள்ளடக்கமே கிடைக்கும் என்பதையே ஒட்டுமொத்தமாகக் குறிக்கிறது என்று நவரோ கூறுகிறார்.

கூகுளுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடிய பிற தேடுபொறிகள் இருப்பதை மறுக்க முடியாது என்றாலும், அவர்களும் தங்கள் தேடல் கருவிகளில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து வருகின்றனர் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். உதாரணமாக, மைக்ரோசாப்ட் அதன் Bing தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவை இணைத்து வருகிறது. ஆனால் கூகுளின் சிறிய போட்டியாளர்கள் மிகக் குறைந்த அளவே சந்தையில் பங்களிப்பதால், அவர்கள் பொருளாதாரத்தில் மாற்றத்தை ஏற்படுத்துவது கடினம் என்பதுடன், பலர் தங்கள் சொந்த AI கருவிகளைச் சேர்க்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இயந்திர இணையதளம் மிகவும் நெருக்கமானதாகவும், பன்முகத் தன்மை குறைவானதாகவும் இருந்தாலும், ஆன்லைனில் தங்கள் நேரத்தைச் செலவிடுவோருக்கு இது மகிழ்ச்சி அளிப்பதாகவும் இருக்கலாம்.

சில பார்வையாளர்கள் பீதியடையவில்லை என்பதையும் கவனிக்கலாம். "பரிணாமம் என்ற அர்த்தத்தில் நான் கவலைப்படவில்லை," என்று சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் கணினி அறிவியல் பேராசிரியரும், 1980களில் உலகளாவிய இணையதளத்தின் முன்னோடியாக இருந்த கட்டமைப்பை வடிவமைத்த ஆரம்பக்கால முன்னோடிகளில் ஒருவருமான டேம் வெண்டி ஹால் கூறுகிறார்.

"செயற்கை நுண்ணறிவு இப்போது சமன்பாட்டிற்குள் வருகிறது, அது அனைத்து இயக்கவியலையும் மாற்றப் போகிறது. என்ன நடக்கப் போகிறது என்பதை நான் சரியாகச் சொல்ல விரும்பவில்லை. இணையதளம் இன்னும் இருக்கிறது, அது இன்னும் திறந்தே இருக்கிறது. கூகுள் இந்த வழியில் சென்றால், பணம் சம்பாதிப்பதற்கான புதிய வழி பிரகாசமாகத் தெரிகிறது," என்று அவர் கூறுகிறார்.

'இதுதான் திருட்டுக்கான வரையறை'

கூகுள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

AI Mode என்பது ஈர்க்கக்கூடிய தொழில்நுட்பம் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. இது ஒரு "fan-out முறையை " பயன்படுத்துகிறது. அதாவது, AI உங்கள் கேள்வியை துணை தலைப்புகளாகப் பிரித்து ஒரே நேரத்தில் பல தேடல்களைச் செய்கிறது. AI Mode மிகவும் மாறுபட்ட ஆதாரங்களைப் பரிந்துரைக்கவும், மிகவும் சிக்கலான கேள்விகளுக்கு ஆழமான பதில்களை உருவாக்கவும், ஆழமாகச் செல்லவும் உதவுகிறது. அத்துடன், தொடர்ந்து கேள்விகளைக் கேட்கும் திறனை நீங்கள் பெறுகிறீர்கள் என்று கூகுள் கூறுகிறது.

கூகுளின் கூற்றுப்படி, AI ஓவர்வியூஸ்க்கான எதிர்வினைகள் AI மோட் மிகவும் பிரபலமாக இருக்கும் என்பதையே குறிக்கிறது. "மக்கள் AI ஓவர்வியூஸ் பயன்படுத்துவதால், அவர்களுக்குக் கிடைக்கும் பதில்களால் திருப்தி அடைவதையும், அவர்கள் அடிக்கடி தேடுவதையும் நாங்கள் காண்கிறோம். கடந்த 10 ஆண்டுகளில் 'தேடுபொறியில்' மிகவும் வெற்றிகரமான வெளியீடுகளில் இதுவும் ஒன்று," என்று கூகுளின் டெவலப்பர் மாநாட்டில் சுந்தர் பிச்சை கூறினார். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இது தேடலை சிறந்ததாக ஆக்குகிறது என்றும் பயனர்கள் விரும்புவது இதுதான் என்றும் கூகுள் கூறுகிறது.

ஆனால் இதை எந்தவிதத்திலும் நியாயப்படுத்திவிட முடியாது என்று 2,200க்கும் மேற்பட்ட பத்திரிகை மற்றும் ஊடக நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வர்த்தகக் குழுவான நியூஸ்/மீடியா அலையன்ஸின் தலைவர் டேனியல் காஃபி கூறுகிறார். (பிபிசி நியூஸ்/மீடியா அலையன்ஸில் உறுப்பினராக உள்ளது.)

"இதுதான் திருட்டுக்கான வரையறை. செயற்கை நுண்ணறிவு பதில்கள், அசல் தயாரிப்புக்கு மாற்றாகும். அவர்கள் எங்களுடைய உள்ளடக்கத்தில் பணம் சம்பாதிக்கிறார்கள், அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவும் கிடைக்காது," என்று காஃபி கூறுகிறார். "விற்கப்படும் பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் சார்பாக இந்த கூகுள் இந்த வணிக முடிவை எடுக்க முடியாது."

வெளியீட்டாளர்களுக்கு வேறு வழியில்லை என்பதுதான் பிரச்னை என்று காஃபி உள்படப் பலரும் கூறுகின்றனர். நீதிமன்ற வழக்கு ஒன்றில் வெளியிடப்பட்ட உள் ஆவணங்கள், கூகுள் அதன் விதிகளை "சத்தமின்றிப் புதுப்பிக்க" தேர்வு செய்திருப்பதைக் காட்டுகின்றன. எனவே கூகுள் 'தேடலில்(search)' பங்கேற்பது என்பது இணையதளங்கள் தானாகவே AI க்காக உள்ளடக்கத்தைப் பயன்படுத்த அனுமதி அளிப்பதற்கு ஒப்புக் கொள்வதாகும் என்பது குறிப்பிடத்தக்கது. வெளியீட்டாளர்கள் விலகலாம் என்றாலும், அவர்கள் தேடல் முடிவுகளை முழுவதுமாக விலக்கினால் மட்டுமே அது முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

'இதுவே முடிவல்ல என நம்ப விரும்புகிறேன்'

இந்த உள் ஆவணங்கள், நிறுவனத்தின் இறுதி முடிவெடுக்கும் செயல்முறையைப் பிரதிபலிக்காத ஆரம்ப விவாதங்களைக் காட்டுகின்றன என்றும், வெளியீட்டாளர்கள் தங்கள் உள்ளடக்கம் கூகுளில் கிடைக்கிறதா என்பதை எப்போதும் கட்டுப்படுத்தி வந்துள்ளனர் என்றும் கூகுள் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார். இணையதள உரிமையாளர்கள் தங்கள் உள்ளடக்கத்தை AI மோட் மற்றும் AI ஓவர்வியூஸ் ஆகியவற்றில் இருந்து கிடைக்கும் பதில்களில் இருந்து விலக்கி வைக்க அனுமதிக்கும் கட்டுப்பாடுகளை கூகுள் வழங்குகிறது என்று செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

"AI பதில்கள் அசல் தயாரிப்புக்கு மாற்றாக உள்ளன. இதை நாம் ஒருபோதும் விருப்பத்துடன் தேர்ந்தெடுக்கும் ஒரு வணிக முன்மொழிவாக நான் பார்க்கவில்லை," என்கிறார் காஃபி.

கடந்த ஓர் ஆண்டாக, தேடுபொறி மற்றும் டிஜிட்டல் விளம்பர வணிகங்களில் கூகுள் ஒன்றல்ல, இரண்டு சட்டவிரோத தனியுரிமையை வைத்திருப்பதாக அமெரிக்க நீதிமன்றங்கள் கண்டறிந்துள்ளன. நீதிமன்றங்கள் இன்னும் விளைவுகளைத் தீர்மானித்து வருகின்றன. மேலும் இணையத்தின் மீதான கூகுளின் கட்டுப்பாட்டிற்குக் கடுமையான பின்னடைவை ஏற்படுத்தக்கூடிய வாய்ப்புக்கான சாத்தியங்களும் உள்ளன. நீதிமன்றங்களின் முடிவுகளுக்கு கூகுள் உடன்படவில்லை என்றும் மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகவும் அந்த நிறுவனம் கூறுகிறது. நிறுவனம் மிகப்பெரிய போட்டியை எதிர்கொள்கிறது என்றும், நிறுவனத்தை உடைப்பதற்கான திட்டங்கள் நுகர்வோருக்கு மோசமானதாக இருக்கும் என்றும், புத்தாக்கங்களை மந்தப்படுத்தும் என்றும் நிறுவனம் வாதிடுகிறது.

ஆனால் கூகுளின் பிடி ஏற்கெனவே சிறிய வழிகளில் தளர்ந்து கொண்டிருக்கலாம். இந்த நீதிமன்ற விசாரணைகளின்போது, சஃபாரியில் கூகுள் தேடல்கள் 22 ஆண்டுகளில் முதல் முறையாகக் குறைந்துள்ளதாக ஆப்பிள் நிர்வாகி எடி கியூ கூறினார்.

இதற்குக் காரணம் மக்கள் AI சாட்பாட்களை பயன்படுத்துவதே. ஆப்பிள் சாதனங்கள் உள்பட ஒட்டுமொத்த 'வினவல் வளர்ச்சியை' நிறுவனம் தொடர்ந்து காண்காணித்து வருவதாக அறிக்கை ஒன்றில் கூகுள் தெரிவித்துள்ளது.

சமீபத்திய கணக்கெடுப்பின்படி, கிட்டத்தட்ட 72% அமெரிக்கர்கள் தேடுபொறிகளுக்குப் பதிலாக சில நேரங்களில் ChatGPT போன்ற AI கருவிகளைப் பயன்படுத்துகிறார்கள். "நீங்களே சர்ச் செய்யும்போது அதிகம் கற்றுக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்," என iPullRank என்ற SEO நிறுவனத்தின் நிறுவனர் மைக் கிங் கூறுகிறார். "ஆனால் பலர் தங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை என்று நினைக்கிறார்கள்" என்றும் அவர் கூறுகிறார்.

ஆனால் AI இணைப்பு என்பது குறிப்பிடத்தக்க செலவுகளுடன் வரக்கூடும். "இது வடிகட்டி குமிழ்களை அதிகமாக உருவாக்கப் போகிறது. ஏனென்றால் கூகுள் உங்கள் வினாவுடன் தொடர்புடைய தகவல்களை உங்களுக்கு வழங்குவதற்குப் பதிலாக, விளக்கத்தைக் கொடுக்கிறது," என்று கிங் கூறுகிறார். AI சாட்பாட்கள் பற்றிய ஆராய்ச்சி, அவை எதிரொலி அறைகளாகச் செயல்படும் போக்கைக் கொண்டுள்ளன என்பதையும் குறிக்கிறது. "நீங்கள் எதிர்பார்க்கும் தகவல் வலுப்படுத்தப்பட்டதாக இருக்கும்," என்று கிங் கூறுகிறார்.

சுந்தர் பிச்சை

பட மூலாதாரம்,GETTY IMAGES

AI பதில்களின் தரம் குறித்த அடிப்படைக் கவலைகள் உள்ளதையும் மறுக்க முடியாது. AI ஹாலிசினேஷன்ஸ், அவற்றின் தொழில்நுட்பத் திறன்கள் மேம்படும்போது மோசமடைந்து வருவதாக சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன. சுந்தர் பிச்சைகூட ஒரு பாட்காஸ்ட் நேர்காணலில் தொழில்நுட்பத்தின் "ஓர் உள்ளார்ந்த அம்சம்" ஹாலிசினேஷன்ஸ் என்று கூறினார்.

கூகுள் AI பதில்களை நிலைநிறுத்த அதன் பாரம்பரிய தேடல் முறைகளைப் பயன்படுத்துகிறது என்றும், மேலும் அதன் துல்லியத்தன்மை மேம்பட்டு வருவதாகவும் கூகுள் கூறுகிறது. கூகுளின் AI தேடல் பதில்களில் பெரும்பாலானவை உண்மையானவை என்றும், அவற்றின் துல்லியம், மற்ற தேடல் அம்சங்களுடன் இணையாக இருப்பதாகவும் பிபிசியுடனான நேர்காணலில் கூகுள் தெரிவித்துள்ளது.

இருப்பினும், கூகுளின் AI ஓவர்வியூஸ், மக்களை கற்களைச் சாப்பிடவும் பீட்சா ரெசிபிகளில் பசையைச் சேர்க்கவும் அறிவுறுத்திய ஆரம்பக்கால சறுக்கல்கள் இருந்த காலங்களை மனதில் இருந்து அகற்றிவிட முடியாது. பிழைகளைச் சரிசெய்ய கூகுள் தீவிரமாக முயன்றாலும், 2025ஆம் ஆண்டில் ஒரு சமீபத்திய வியாழக்கிழமையில், AI ஓவர்வியூஸ், இது வியாழக்கிழமை அல்ல, இது 2025 அல்ல என்று கூறியதையும் சுலபமாக மறந்துவிட முடியாது.

கணினி விஞ்ஞானிகள் "சாட் சாம்பர்ஸ் (chat chambers)" என்று உருவாக்கிய தவறான தகவல்களைக் கொண்ட அமைப்பையும்கூட ஏஐ ஓவர்வியூஸ் உருவாக்கக்கூடும் என்று ஆராய்ச்சி கூறுகிறது. கூகுள் AI, இணையத்தில் நீங்கள் காண்பதை மட்டுப்படுத்தாமல் உங்கள் ஆர்வங்களுடன் பொருந்துமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது என்று கூகுள் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகிறார்.

இணையத்தை உருவாக்கி அதைச் சார்ந்து இருப்பவர்களுக்கு இயந்திர இணையதளத்தின் அச்சுறுத்தல் கவலையளிக்கும் அதே வேளையில், கூகுள் ஒரு வித்தியாசமான, உற்சாகமான படத்தை வரைகிறது.

"ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு நாங்கள் இணையதளங்களுக்கு போக்குவரத்தை அதிகமாக அனுப்புவதை நீங்கள் பார்க்க முடியும். நாங்கள் உறுதிபூண்டுள்ள தயாரிப்பின் திசை அதுதான் என்று நான் நினைக்கிறேன்," என்று சுந்தர் பிச்சை டீகோடர் நேர்காணலில் தெரிவித்தார்.

கூகுள் பிபிசியிடம் பேசியபோது, "தேடலை மேம்படுத்துவது, பயனர்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை உருவாக்குவது மற்றும் இறுதியில் உள்ளடக்கத்தை உருவாக்குவதற்கும் கண்டுபிடிப்பதற்குமான வாய்ப்புகளை விரிவுபடுத்துவது ஆகியவையே தனது தொலைநோக்குப் பார்வை என்று கூறுகிறது, இருப்பினும் இவை சாத்தியமான வெவ்வேறு வழிகளில்" என்று கூறியது.

கூகுள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"என்ன நடக்கப் போகிறது என்று நான் கணிக்கப் போவதில்லை. ஏனென்றால், நிச்சயமாக, எதிர்காலம் பன்முகத்தன்மை கொண்டது," என்கிறார் நீண்டகால தொழில்நுட்ப ஆதரவாளரும் ஆன்லைன் தளங்களின் சிதைவு குறித்து வரவுள்ள என்ஷிட்டிஃபிகேஷன் புத்தகத்தின் எழுத்தாளருமான கோரி டாக்டரோவ். "ஆனால், தகவல்களைக் கண்டுபிடிப்பதற்கான அல்லது எனது தகவல்களைக் கண்டறிவதற்கான ஒரு வழியாக கூகுளை மதிப்பவராக நான் இன்னும் இருந்திருந்தால், இதைப் பற்றி நான் மிகவும் கவலைப்படுவேன்" என்று அவர் கூறுகிறார்.

ஆனால் இணைய பயனர்கள் தாங்கள் காண விரும்பும் மாற்றங்களுக்கான அழுத்தத்தைக் கொடுக்கும் ஒரு தருணமாகவும் இது இருக்கலாம் என்று அவர் கருதுகிறார். "இந்த நெருக்கடியை நாம் வீணாக்கி விடக்கூடாது" என்கிறார் டாக்டரோவ். "மக்களை மிகவும் கோபப்படுத்தும் ஒன்றை கூகுள் செய்ய உள்ளது. எனது முதல் எண்ணம் 'சரி, அருமை. அந்தக் கோபத்தைப் பயன்படுத்திக் கொள்ள நாம் என்ன செய்யலாம் என்பதுதான்.' கூட்டணியை உருவாக்க இது ஒரு வாய்ப்பாக இருக்கலாம்" எனக் குறிப்பிடுகிறார் அவர்.

சிலர் கூகுளின் தொலைநோக்குப் பார்வை நிறைவேறும் வரையோ அல்லது ஒழுங்குமுறை அதிகாரிகள் செயல்படுவதற்காகவோ காத்திருக்கவில்லை. கிளவுட்ஃப்ளேரின் மேத்யூ பிரின்ஸ், நேரடித் தலையீட்டை ஆதரிக்கிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளடக்கத்திற்கு பணம் செலுத்தாவிட்டால், கிளவுட்ஃப்ளேர் மற்றும் அனைத்து அளவிலான வெளியீட்டாளர்களின் கூட்டமைப்பும் கூட்டாக இணைந்து செயற்கை நுண்ணறிவு மூலம் தகவல்களை நகல் எடுப்பவர்களைத் தடுப்பதே அவரது திட்டம். இது "ஆன்லைனில் அனுமதிக்கப்பட்டவற்றின் விதிமுறைகளை மீட்டமைக்க" மற்றும் சிலிகான் பள்ளத்தாக்கின் மாதிரிகளுக்கு எரிபொருளாக இருக்கும் தங்கள் தரவுகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த கட்டாயப்படுத்தும் ஒரு துணிச்சலான முயற்சி. (இந்தத் திட்டம் குறித்த கேள்விகளுக்கு கூகுள் பதிலளிக்கவில்லை). இது,"எனது மிகவும் நேர்மறையான அணுகுமுறை, மனிதர்கள் இலவசமாக உள்ளடக்கத்தை பெறலாம், தானியங்கு நிரலிகள் உள்ளடக்கத்திற்காகப் பணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதும் என் கோரிக்கை" என்று பிரின்ஸ் கூறுகிறார்.

புதியதும் சிறப்பானதுமான ஒன்று, தற்போது இருப்பதற்கு மாற்றாக வந்தாலும்கூட, இழந்ததைப் பற்றிய ஏக்கத்தை உணராமல் இருப்பது கடினம் என்று நவரோ கூறுகிறார்.

"அந்த இணையதளம் என்பது ஒரு சில மக்கள் தாங்கள் விரும்பும் விஷயங்களை அடையும்போதுதான் நடக்கும்," என்று அவர் கூறுகிறார்.

தனது சிறு வயதில், ராக் இசைக் குழுவான குயினுக்காக தாம் உருவாக்கிய ஸ்பானிஷ் மொழி ரசிகர் தளத்தைப் பற்றி அவர் நினைவு கூர்ந்தார்.

"நான் குயின் இசைக்குழுவை இணையத்தில் தேடினேன். ஆனால் அந்த நேரத்தில் இசைக் குழுவைப் பற்றிய ஸ்பானிஷ் மொழி உள்ளடக்கம் அதிகமாக இல்லை. அதனால் நான் அதை உருவாக்கத் தொடங்கினேன். எனக்கு 10 வயதாக இருந்தபோது அதைச் செய்ய முடியும் என்று உணர்ந்ததால் அதை செய்ய முடிந்தது."

"இதுவே முடிவல்ல என்று நம்ப விரும்புகிறேன்."

*தாமஸ் ஜெர்மைன் பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர். அவர் கடந்த பத்து ஆண்டுகளாக செயற்கை நுண்ணறிவு, தனியுரிமை மற்றும் இணைய கலாசாரத்தின் அம்சங்கள் குறித்து எழுதி வருகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cql2qwp622wo

  • 2 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் அறிமுகமாகும் கூகுள் AI மோட் - இணையதளங்களை நடத்துபவர்கள் அஞ்சுவது ஏன்?

கூகுள் AI மோட் என்றால் என்ன? இணையத்தில் புதிய புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தேடுபொறியில் பயனர்களின் தேடலை எளிமையாக்க கூகுள் புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. ஆனால், இது தங்களை பாதிக்கும் என வெளியீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

இணைய உலகில் ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகக் கூறி, கூகுள் தனது புதிய அம்சத்தை சமீபத்தில் அறிமுகப்படுத்தியது.

இணைய தேடுபொறியில் செயற்கை நுண்ணறிவின் பயன்பாட்டை, AI ஓவர்வியூ என்ற வசதியின் மூலமாக கூகுள் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து தற்போது AI மோட் (AI Mode) என்ற புதிய வசதியை கூகுள் கொண்டு வந்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவில் பயனர்களுக்கு ஒரு விருப்ப அம்சமாக அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதி, தற்போது இந்தியாவில் பரிசோதனை முறையில் அறிமுகப்படுத்தப்படுவதாக கூகுள் அறிவித்துள்ளது.

இந்தப் புதிய செயற்கை நுண்ணறிவு வசதி, மக்கள் இணையத்தைப் பயன்படுத்தும் விதத்தையே மாற்றியமைக்கப் போவதாக கூகுள் கூறுகிறது. இந்தப் புதிய வசதி, கூகுள் தேடுபொறியின் செயல்பாட்டில் கொண்டு வந்துள்ள மாற்றம் குறித்து அனைவரும் மகிழ்ச்சி அடையவில்லை.

கூகுள் கிட்டத்தட்ட இணைய உலகையே அழித்துவிடும் என்று பலரும் அஞ்சும் அளவுக்கு இந்தப் புதிய வசதியில் என்ன இருக்கிறது? AI மோட் என்றால் என்ன? அது பயனர்களுக்கு எவ்வாறு உதவப் போகிறது? இங்கு விரிவாகக் காண்போம்.

கூகுள் – இணையதளங்கள் இடையிலான உறவு

கடந்த 30 ஆண்டுகளாக, கூகுள் நிறுவனமும் அதில் செயல்படும் இணையதளங்களும் ஓர் எளிமையான, பேசப்படாத ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயல்பட்டு வருகின்றன. அதாவது, இணையதளங்கள் உள்ளடக்கங்களை வழங்குகின்றன. அதற்குப் பதிலாக, கூகுள் அவர்களுக்குப் பார்வையாளர்களை அனுப்புகிறது.

அதாவது, பயனர்கள் தாங்கள் தெரிந்துகொள்ள விரும்பும் ஏதாவது ஒரு தகவலைத் தெரிந்துகொள்ளத் தேடுகிறார்கள். அப்படித் தேடும்போது, அது தொடர்பான இணையதளங்களின் இணைப்புகளை கூகுள் தனது தேடுபொறியில் காட்சிப்படுத்துகின்றன.

பயனர்கள் அந்த இணைப்புகளை கிளிக் செய்து, தங்களுக்கு தேவையான, ஒரு குறிப்பிட்ட இணையதளத்திற்குச் செல்கிறார்கள். அதாவது, இணைப்புகளை கிளிக் செய்து, இணையதளத்திற்குள் சென்று, கட்டுரையைப் படிப்பது, காணொளிகளைப் பார்ப்பது ஆகியவற்றில் ஈடுபடுகிறார்கள்.

இதைத்தான் இணைய போக்குவரத்து எனக் குறிப்பிடுகின்றனர். பல இணையதளங்கள் உயிர்ப்புடன் இருப்பதற்கு, விளம்பரங்கள், சந்தாக்கள், தயாரிப்பு விற்பனை எனப் பலவற்றைச் செய்கிறார்கள். அதோடு, கூகுள் தேடலில் கிடைக்கும் கிளிக்குகள் இல்லையெனில், பெரும்பாலான இணையதளங்கள் தொடர்ந்து செயல்படுவதற்கே போராட வேண்டியிருக்கும்.

ஆனால், இந்த AI மோட், இந்த மாதிரியான செயல்பாடுகளை மாற்றியமைத்து, செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தி அதுவே பதில்களை வழங்கினால், இணையதளங்களை நோக்கிப் படையெடுக்கும் மக்களின் அளவு வெகுவாகக் குறைந்துவிடும் என்று பலரும் அஞ்சுகின்றனர்.

ஹவுஸ்ஃப்ரெஷ் இணையதளத்தின் நிர்வாக ஆசிரியர் கிசெல் நவரோ, கூகுள் தனது அடிப்படைவிதிகளை மாற்றுவதாகவும் அதனாலேயே பல இணைய வெளியீட்டாளர்கள் கவலையில் உள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

கூகுள் AI மோட் என்றால் என்ன?

கூகுள் AI மோட் என்றால் என்ன? இணையத்தில் புதிய புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கூகுள் AI மோட் பயனர்கள் தேடும் கேள்விக்கான பதிலைத் தானே தொகுத்து ஒரு கட்டுரையாக வழங்கிவிடுகிறது

கூகுள் தனது தேடுபொறியில் அறிமுகப்படுத்தும் AI மோட் என்பது இதுவரை பயன்படுத்தி வந்த ஓவர்வியூ வசதியின் ஒரு நீட்சிதான். ஆனால், அதைவிட இது மேம்பட்டது.

இது, பயனர்களின் கேள்விகளுக்கு ஏற்ற இணைப்புகளை வழங்குவதற்குப் பதிலாக, அவற்றில் இருந்து தகவல்களைத் தொகுத்து, அந்தக் கேள்விக்கான பதிலைத் தானே ஒரு கட்டுரையாக வழங்கிவிடுகிறது.

ஓர் எடுத்துக்காட்டுடன் இதைப் புரிந்துகொள்வோம். நீங்கள் கூகுள் தேடுபொறியில், "மஞ்சளின் நன்மைகள் என்ன?" என்று ஒரு சந்தேகத்திற்கு விடை தேடுவதாகக் கற்பனை செய்துகொள்வோம்.

கடந்த காலத்தில், கூகுள் அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பல்வேறு இணையதளங்கள் வெளியிட்ட கட்டுரைகளுக்கான இணைப்புகளைப் பட்டியலிடும். அந்தக் கட்டுரைகளை கிளிக் செய்து, நீங்கள் படித்துத் தெரிந்துகொள்ளலாம்.

இப்போது, சமீபத்திய சில காலமாக இருக்கும் AI ஓவர்வியூ வசதி ஒரு படி மேலே சென்று, உங்கள் கேள்விக்கான பதிலை ஒரு குறுங்கட்டுரையாக்கி தொடக்கத்தில் அளிக்கும். அதனுடன், அந்தத் தகவல்கள் எடுக்கப்பட்ட இணையதளங்களின் முகவரிகளை இணைத்துவிடும். இதன்மூலம், நீங்கள் உங்கள் கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்வதோடு, தேவைப்பட்டால் அந்த இணைய முகவரிகளை கிளிக் செய்து விரிவாகவும் படித்துக் கொள்ளலாம்.

ஆனால், இப்போது அறிமுகமாகியுள்ள AI மோட் வசதியைப் பொறுத்தவரை, செயற்கை நுண்ணறிவே உங்கள் கேள்விக்கான முழு பதிலையும் வடிவமைத்து வழங்கிவிடுகிறது. அதாவது, சாட்ஜிபிடி தளத்தில் நீங்கள் கேள்வி கேட்டால், அது எப்படி முழுமையாகப் பதில் வழங்குகிறதோ, அந்த மாதிரியில் வழங்குகிறது.

கூகுள் இந்த அம்சத்தை மே 20, 2025 அன்று அதன் வருடாந்திர டெவலப்பர் மாநாட்டில் அறிவித்தது. இந்தப் புதிய வசதி குறித்துப் பேசிய கூகுள் தலைமை நிர்வாக அதிகாரியான சுந்தர் பிச்சை இணையத்தின் தேடல் செயல்முறை செயல்படக்கூடிய விதத்தையே இது முற்றிலுமாக மறுபரிசீலனை செய்வதாகக் குறிப்பிட்டார்.

AI மோட் எவ்வாறு செயல்படுகிறது?

கூகுள் AI மோட் என்றால் என்ன? இணையத்தில் புதிய புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த ஆண்டு முதல் கூகுள் தேடுபொறியைப் பயன்படுத்தி வரும் அனைவருமே AI ஓவர்வியூ என்ற வசதியைக் கண்டிருப்பீர்கள். அதாவது, சில தேடல் முடிவுகள் கூகுளில் காட்சிப்படுத்தப்படும்போது, அதன் தொடக்கத்தில் குறுங்கட்டுரையாக, மேலோட்டமாக, தேடப்படும் கேள்விக்கான பதில் வழங்கப்படும்.

ஆனால், அவை வெறும் குறுகிய பதில்களே. அதோடு, விரிவாகத் தெரிந்துகொள்ளத் தேவையான இணைப்புகளும் அதற்குக் கீழே பட்டியலிடப்படும்.

ஆனால், AI மோட் அப்படியல்ல. அது நீங்கள் கேட்கும் கேள்விக்கான முழு பதிலையும் ஒரு கட்டுரையாக, சாட்ஜிபிடியை போலத் தொகுத்து வழங்கிவிடுகிறது. செயற்கை நுண்ணறிவு நீங்கள் கேட்கும் கேள்வியைச் சிறு சிறு பகுதிகளாகப் பிரிக்கிறது. அது தொடர்பான சிறந்த தகவல்களைத் தேடுகிறது. பின்னர் அனைத்து தகவல்களையும் தொகுத்து, படிக்க எளிதான பதிவாக மாற்றிக் காட்டுகிறது.

இதனால் பயனர்கள் தேடும் கேள்விக்கான பதிலைப் படிக்க வேறு எந்த இணையதளத்திற்கு உள்ளேயும் செல்ல வேண்டிய அவசியம் ஏற்படாது. இந்த வசதி, இணையம் செயல்படுவதற்கான அடிப்படைக் கட்டமைப்பையே கிட்டத்தட்ட அசைத்துப் பார்ப்பதாக வெளியீட்டாளர்கள் கவலை கொள்கின்றனர்.

"கூகுளின் இந்த AI மோட் வசதி, இணையதளங்களுக்கு செல்லும் கிளிக்குகளின் (பயனர்களின்) எண்ணிக்கையைப் பாதியாக்கிவிடும் என்று நான் எதிர்பார்க்கிறேன். இணையதள வெளியீட்டாளர்களை இது பெரியளவில் பாதிக்கக்கூடும்," என்கிறார்.

ஆனால், இந்த பயம் தேவையற்றது என்று கூகுள் நிறுவனம் கூறுகிறது. அதோடு, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தப் புதிய வசதியை ஒரு விருப்ப அம்சமாக அமெரிக்காவில் கூகுள் அறிமுகப்படுத்தியது. அப்போது பேசிய கூகுள் தேடல் பிரிவின் தலைவர் லிஸ் ரீட், "இது வெறும் ஆரம்பம்தான்" என்றார்.

மேலும், "இதுதான் கூகுள் தேடலின் எதிர்காலம்" என்றார். எனவே இப்போதைக்கு இந்த வசதியைப் பயன்படுத்தலாமா வேண்டாமா என்பதை பயனர்கள் தேர்வு செய்யலாம் என்றாலும், எதிர்காலத்தில் இதைத் தனது தேடுபொறியின் முக்கிய அம்சமாக கூகுள் மாற்றக்கூடும் என்று வெளியீட்டாளர்கள் அஞ்சுகின்றனர்.

AI மோட் வசதியை கண்டு இணைய வெளியீட்டாளர்கள் அஞ்சுவது ஏன்?

கூகுள் AI மோட் என்றால் என்ன? இணையத்தில் புதிய புரட்சியா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளாக, கூகுள் மற்றும் இணையதளங்கள் இடையே இருக்கும் அடிப்படை உறவையே இந்தப் புதிய வசதி சிதைக்கும் என்று வெளியீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

வெளியீட்டாளர்கள், இணையதள உரிமையாளர்கள், டிஜிட்டல் வணிகங்கள் ஆகியவை கூகுள் தேடுபொறியின் இணைய போக்குவரத்தைப் பெரியளவில் சார்ந்துள்ளன.

அவர்கள் இலவசமாக உள்ளடக்கங்களை உருவாக்கி வெளியிடுகிறார்கள். கூகுள் அதை பயனர்களுக்கு வழங்குகிறது. மக்கள் அதை கிளிக் செய்கிறார்கள். இந்தச் செயல்முறையின் மூலமாக இணைய கட்டமைப்பு கடந்த 30 ஆண்டுகளாக இயங்கி வருகிறது.

இந்த அடிப்படைக் கட்டமைப்பை AI மோட் அச்சுறுத்துகிறது. பயனர்கள் கூகுளின் செயற்கை நுண்ணறிவில் இருந்து நேரடியாகப் பதிலைப் பெற்றுக்கொண்டால், அந்தப் பதில்களுக்கு அது பயன்படுத்திய, இணையத்தில் பதிவேற்றப்படும் உண்மையான உள்ளடங்களை உருவாக்கிய இணையதளங்களுக்கு அவர்கள் செல்வதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அதன் விளைவாக அந்த வெளியீட்டாளர்களுக்கு பார்வையாளர்கள் வரத்து குறையும், விளம்பர வருவாய் குறையும். இது பல சுயாதீன இணையதளங்களின் சரிவுக்கு வழிவகுக்கும் என்று இணைய வெளியீட்டாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கூகுள் தங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி, இழப்பின்றி லாபம் ஈட்டும் என்று வெளியீட்டாளர்கள் கூறுகின்றனர். "இது திருட்டுக்கான ஒரு வரையறை. அவர்கள் எங்கள் உள்ளடக்கத்தைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்கிறார்கள். அதற்கு ஈடாக எங்களுக்கு எதுவுமே கிடைக்காது," என்று வெளிப்படையாகக் கூறியுள்ளார் செய்தி/ஊடக கூட்டமைப்பின் தலைவர் டேனியல் காஃபி.

ஆனால், இந்த அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று கூகுள் வலியுறுத்துகிறது. கூகுளின் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்துப் பேசியபோது, "AI மோட் மக்கள் கேட்கக்கூடிய கேள்விகளின் வகைகளை விரிவுபடுத்துகிறது. கூகுள் செயற்கை நுண்ணறிவு தினசரி கோடிக்கணக்கான பயனர்களை இணையதளங்களுக்கு அனுப்புகிறது" என்று தெரிவித்தார். ஆனால், இந்தக் கூற்றுகளை ஆதரிக்கக்கூடிய தரவுகளை அந்த நிறுவனம் பகிர்ந்து கொள்ளவில்லை.

- பிபிசியின் மூத்த தொழில்நுட்ப செய்தியாளர் தாமஸ் ஜெர்மைனின் கட்டுரையில் இருந்து இந்தத் தகவல்கள் தொகுத்து வழங்கப்பட்டுள்ளன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/clyxr9pv8v7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.