Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 20 ஜூன் 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

சன் நெட்வொர்க் நிறுவனத்தின் பங்குகளை மோசடியாகத் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டதாக குற்றம் சாட்டி, வழக்கறிஞர் மூலமாக அவரது சகோதரர் தயாநிதி மாறன் எம்.பி நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

'முரசொலி மாறனின் சொத்து அவரது சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு முறையாகப் பகிர்ந்து அளிக்கப்படவில்லை' எனவும் நோட்டீஸில் தயாநிதி மாறன் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகள் அடிப்படை ஆதாரமற்றவை மற்றும் அவதூறானவை என சன் குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

சன் நெட்வொர்க் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர் கலாநிதி மாறன், அவரது மனைவி காவேரி மாறன் உள்பட 8 பேருக்குத் தனது வழக்கறிஞர் மூலமாக கடந்த ஜூன் 10ஆம் தேதியன்று தயாநிதி மாறன் நோட்டீஸ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

அதில், சட்டவிரோத பங்கு பரிமாற்றம் மூலம் சன் நெட்வொர்க்கின் சொத்துகளை கலாநிதி மாறன் அபகரித்துக் கொண்டதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதில், "கடந்த 1985ஆம் ஆண்டு டிசம்பர் 12 முதல் சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் என்ற நிறுவனம், முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது. இதனால் இந்த இரு குடும்பங்களும் தலா 50 சதவிகித பங்குகளை வைத்திருந்தன" எனக் கூறியுள்ளார்.

"தயாநிதி மாறனின் தந்தை எஸ்.என்.மாறன் என்ற முரசொலி மாறனுக்கு 47,500 பங்குகளும் மல்லிகா மாறனுக்கு 9 ஆயிரம் பங்குகளும் ஒதுக்கப்பட்டன. ஏற்கெனவே மல்லிகா மாறனிடம் ஆயிரம் பங்குகள் இருந்ததால், இத்துடன் சேர்த்து 10 ஆயிரம் பங்குகளாக இருந்தன" எனக் கூறியுள்ளார் தயாநிதி மாறன்.

இந்த சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் பின்னர் சன் டிவி லிமிடெட்டாக பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

நோட்டீஸில் என்ன உள்ளது?

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

"கடந்த 2002ஆம் ஆண்டு பங்குதாரர்களுக்கும் முரசொலி மாறன் மற்றும் மல்லிகா மாறனுக்கும் போனஸ் பங்குகள் வழங்கப்பட்டுள்ளன. அதன்படி முரசொலி மாறனின் கணக்கில் 95 ஆயிரம் பங்குகளும் மல்லிகா மாறனின் கணக்கில் 20 ஆயிரம் பங்குகளும் சேர்ந்தன" எனவும் தயாநிதி மாறன் கூறுகிறார்.

தொடக்கத்தில் இருந்து 2003 செப்டம்பர் 15 வரை சன் நெட்வொர்க் நிறுவனத்தில் சம்பளம் பெறும் ஊழியராக கலாநிதி மாறன் இருந்ததாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்த நிறுவனங்களில் எந்தவித பங்கும் அவருக்கு இல்லை. ஆரோக்கியத்துடன் முரசொலி மாறன் இருந்தபோது கலாநிதிக்கு எந்தப் பங்குகளையும் அவர் அளிக்கவில்லை" என்கிறார்.

கடந்த 2002ஆம் ஆண்டில் முரசொலி மாறனுக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடல் உறுப்புகள் செயலிழந்ததால், கோமா நிலைக்குச் சென்றதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "2002 நவம்பர் மாதம் சிகிச்சைக்காக அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டபோது, சிகிச்சைகள் பலன் அளிக்கவில்லை" எனக் கூறியுள்ளார்.

இதன் பிறகு தமிழ்நாட்டுக்குக் கொண்டு வரப்பட்ட முரசொலி மாறன், சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்தார்.

தந்தையின் உடல்நிலை மோசமான நேரத்தில் குடும்பமே அதுகுறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருந்தபோது, "தனிப்பட்ட நலனுக்காக முழு சொத்துகளையும் அபகரிக்கும் நோக்கில் தனது சதித் திட்டத்தை கலாநிதி மாறன் செயல்படுத்தினார்" என தயாநிதி மாறன் நோட்டீஸில் விமர்சித்துள்ளார்.

தயாநிதி மாறன் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன?

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

  • சன் நெட்வொர்க் குழுமத்தின் 12 லட்சம் பங்குகளை கருணாநிதி குடும்பம் உள்பட பங்குதாரர்களின் ஒப்புதலைப் பெறாமல் தனது பெயருக்கு கலாநிதி மாறன் மாற்றிக் கொண்டார்.

  • கடந்த 2003ஆம் ஆண்டில் சன் நெட்வொர்க்கின் பங்கு மதிப்பு தோராயமாக 2,500 ரூபாய் முதல் 3 ஆயிரம் ரூபாயாக இருந்தது. அப்படி இருக்கும்போது, 10 ரூபாய் மதிப்பில் பங்குகளை மாற்றியுள்ளார்.

  • கடந்த 2003, மார்ச் 31ஆம் தேதியன்று நிறுவனத்தின் இருப்பு மற்றும் உபரித் தொகையாக 253 கோடியே 53 லட்சத்து 71 ஆயிரம் ரூபாய் இருந்தது. 15.9.2003 வரை நிறுவனத்தின் ஒரு பங்குகூட கலாநிதி மாறனிடம் இல்லை. ஆனால், ஒரே நேரத்தில் பெரும்பான்மையான பங்குதாரராக மாறினார்.

  • முரசொலி மாறன் 2003 நவம்பர் 23 அன்று உயிரிழந்தார். சென்னை மாநகராட்சிக்குத் தெரிவிக்கப்பட்டு நவம்பர் 28 அன்று அவரது இறப்பு பதிவு செய்யப்பட்டது. அவர் உயில் எதுவும் எழுதி வைக்கவில்லை.

  • பல்வேறு நிறுவனங்களில் அவரது பங்குகளை உள்ளடக்கிய சொத்து, இந்து வாரிசுரிமை சட்டத்தின் 8வது பிரிவின்படி தாய் சண்முகசுந்தரம், மல்லிகா மாறன், கலாநிதி மாறன், தயாநிதி மாறன், மகள் அன்புக்கரசி ஆகியோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு கொடுக்கப்படவில்லை.

கருணாநிதி கேட்ட கேள்வி

முரசொலி மாறனின் இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு (2003 நவம்பர் 24) அன்று, "சொத்து மற்றும் தொழில்களைப் பிரிப்பது தொடர்பாக ஏதேனும் முடிவு எடுக்கப்பட்டதா?" எனத் தன்னிடம் கருணாநிதி கேட்டதாக தயாநிதி மாறன் நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

அதற்கு "தந்தையைப் போலவே குடும்பத்துக்கு நன்மை தரக்கூடிய செயல்களை கலாநிதி மாறன் செய்வார்" எனத் தான் கருணாநிதியிடம் கூறியதாகவும் தெரிவித்துள்ளதோடு, "ஆனால், அதிர்ச்சியளிக்கும் விதமாக தனது திட்டத்தை அவர் செயல்படுத்தினார்" எனவும் கூறியுள்ளார்.

நம்பிக்கையை மீறுவது, ஏமாற்றுதல், மோசடி செய்தல், குற்றவியல் சதி ஆகியவற்றை இது தெளிவாக உணர்த்தியுள்ளதாகக் கூறியுள்ள தயாநிதி மாறன், "இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 406, 409, 463, 465, 467, 468, 471 மற்றும் 120பி (கூட்டு சதி) ஆகிய பிரிவுகளின்கீழ் இவை தண்டனைக்குரியது" என்று தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

சன் குழுமம் மற்றும் அதனுடன் தொடர்புள்ள நிறுவனங்களை 15.9.2003 அன்று இருந்த நிலைக்கு மீட்டெடுக்க வேண்டும் எனவும் "பங்குகளை உரிமையாளர்களான மு.க.தயாளு மற்றும் முரசொலி மாறனின் சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு மீண்டும் வழங்க வேண்டும்" எனவும் அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

குற்றச்சாட்டுகள் குறித்து சன் குழுமம் கூறுவது என்ன?

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை சன் குழுமம் முழுமையாக மறுத்துள்ளது. மும்பை பங்குச் சந்தை மற்றும் தேசிய பங்குச் சந்தைக்கு நிறுவனத்தின் செயலாளர் ரவி ராமமூர்த்தி, வெள்ளிக்கிழமையன்று (ஜூன் 20) கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சன் நெட்வொர்க் உரிமையாளருக்கும் குடும்ப உறுப்பினருக்கும் இடையில் நடக்கும் விவகாரம் சில ஊடகங்களில் வெளியாகியுள்ளதாக, அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போது குற்றம் சுமத்தப்படும் விஷயங்கள், 22 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனமாக இருந்தபோது நடந்தவை என்றும் ஊடகங்களில் வெளியான தகவல்கள் தவறானவை, அவதூறானவை என்றும் சட்டப்படி எந்த உண்மையும் இல்லை எனவும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

அனைத்து நடவடிக்கைகளும் சட்டப்படியே மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ள சன் நெட்வொர்க் குழுமம், "இடைத்தரகர்களால் அவை சரிபார்க்கப்பட்டன" எனத் தெரிவித்துள்ளது.

"கட்டுரைகளில் கூறப்பட்டுள்ள தகவல்கள், வணிகம் அல்லது அதன் அன்றாட நடவடிக்கைகள் மற்றும் உரிமையாளரின் குடும்ப விவகாரங்களில் எந்தவிதத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" எனவும் சன் குழுமம் குறிப்பிட்டுள்ளது.

"பங்குச் சந்தையில் முதலீடு செய்துள்ள பங்குதாரர்கள் எந்தவித குழப்பத்தையும் அடையக்கூடாது" என்பதற்காக சன் குழுமம் தரப்பில் இருந்து விளக்கம் அளிக்கப்பட்டதாகவும் பார்க்கப்படுகிறது.

ஆனால், வழக்கறிஞர் நோட்டீஸ் தொடர்பான எந்த விவரங்களையும் கடிதத்தில் சன் குழுமம் குறிப்பிடவில்லை.

இது தொடர்பாக, தயாநிதி மாறனின் வழக்கறிஞர் சுரேஷை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. "இதுதொடர்பாக எந்தக் கருத்தையும் தெரிவிக்க விரும்பவில்லை" என்று மட்டும் அவர் பதில் அளித்தார்.

சன் குழுமம் உருவான கதை

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சுமங்கலி பப்ளிகேஷன்ஸ் நிறுவனம், 1985 டிசம்பர் 12ஆம் தேதி முதல் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மனைவி மு.க.தயாளு மற்றும் மல்லிகா மாறனால் நடத்தப்பட்டது.

கடந்த 1989ஆம் ஆண்டில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பை கலாநிதி மாறன் கவனித்து வந்தார். 1990ஆம் ஆண்டில் 'பூமாலை' என்ற பெயரில் மாதம் இருமுறை வீடியோ கேசட் ஒன்றை அவர் வெளியிட்டு வந்தார்.

செய்திகளை பின்னணிக் குரலுடன் அதற்கான படங்களைக் காட்சிப்படுத்தி வீடியோவாக உருவாக்கி வெளியிட்டனர். பிறகு 'சுமங்கலி பப்ளிகேஷன்ஸ்', 'சன் டிவி லிமிடெட்' எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

கடந்த 1993ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டது. இதன் பின்னணியில் முரசொலி மாறனும் கலாநிதி மாறனும் இருந்தனர். இதில் தயாளு அம்மாவும் பங்குதாரராக இருந்தார்.

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

சன் தொலைக்காட்சி உருவான காலத்தில் தூர்தர்ஷன் தவிர வேறு தொலைக்காட்சிகள் இல்லாததால் அது பிரபலமடையத் தொடங்கியது. அப்போது 'தமிழ் மாலை' என்ற பெயரில் மூன்று மணிநேரம் மட்டும் ஒளிபரப்பு நடத்தப்பட்டது.

பிறகு கேபிள் தொழிலிலும் கலாநிதி மாறன் இறங்கினார். சுமங்கலி கேபிள் விஷன் (எஸ்சிவி) நிறுவனத்தைத் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் கேபிள் தொழிலை நடத்தி வருகிறார்.

சன் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதில் இருந்து 2007 வரையில் தி.மு.க தலைமை அலுவலகமான அறிவாலயத்தில் செயல்பட்டது. சன் குழுமத்தின் கட்டுப்பாட்டில் இருந்த 'தினகரன்' நாளேட்டில் மு.க.ஸ்டாலின் மற்றும் மு.க.அழகிரியை மையப்படுத்தி கருத்துக் கணிப்பு ஒன்று வெளியானது.

இதனால் அழகிரி தரப்பினர் கோபம் அடையவே, மதுரை தினகரன் அலுவலகம் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் மூன்று ஊழியர்கள் உயிரிழந்தனர். இதன் தொடர்ச்சியாக மாறன் சகோதரர்களை கருணாநிதி விலக்கி வைத்தார்.

அண்ணா சாலையில் இருந்த சன் தொலைக்காட்சி அலுவலகம், அடையாறுக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. 2007ஆம் ஆண்டு செப்டம்பரில் கலைஞர் தொலைக்காட்சி உருவானது.

'இதற்கான நிதி ஆதாரம் எங்கிருந்து வந்தது?' என அப்போதைய அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பினார். இதற்குப் பதில் அளித்த கருணாநிதி, "சன் டிவியில் என் மனைவி தயாளு அம்மாள் வசமிருந்த 20 சதவிகித பங்குகளை முழுமையாக விட்டுக் கொடுத்ததால் 100 கோடி ரூபாய் கிடைத்தது" எனக் கூறியிருந்தார்.

தமிழைத் தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம், பெங்காளி, மராத்தி, இந்தி ஆகிய மொழிகளில் தொலைக்காட்சி சேனல்களை சன் குழுமம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், சன் டிவி, சன் நியூஸ், சன் மியூசிக், ஆதித்யா, கே டிவி, ஜெமினி டிவி, சன் லைஃப், சுட்டி டிவி, ஜெமினி மூவிஸ் டிவி, ஜெமினி மியூசிக், ஜெமினி காமெடி, குஷி டிவி, ஜெமினி லைஃப், உதயா டிவி, சூர்யா டிவி, சூர்யா மூவிஸ், சூர்யா காமெடி, சூர்யா மியூசிக், கொச்சு டிவி, சன் பங்களா, சன் மராத்தி என இருபதுக்கும் மேற்பட்ட தொலைக்காட்சி சேனல்களை நடத்தி வருகிறது.

மாறன் குடும்பத்தின் பின்னணி

'சட்டவிரோத பங்கு.. கருணாநிதி கேட்ட கேள்வி' - முரசொலி மாறன் குடும்ப பிரச்னையின் பின்னணி என்ன? முழு விவரம்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முத்துவேல் மற்றும் அஞ்சுகம் தம்பதியின் மூன்றாவது மகனாகப் பிறந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு, பெரியநாயகம், சண்முகசுந்தரம் என இரு சகோதரிகள் இருந்தனர்.

சண்முக சுந்தரத்தம்மாள் என அழைக்கப்பட்ட சண்முகசுந்தரத்துக்கு முரசொலி மாறன், முரசொலி செல்வம் ஆகிய மகன்களும் பெரிய நாயகத்துக்கு அமிர்தம் என்ற மகனும் இருந்தனர்.

முரசொலி மாறனின் இயற்பெயரான தியாகராஜ சுந்தரம் என்பதை நெடுமாறன் என கருணாநிதி மாற்றினார். ஆனால், இந்தப் பெயரில் இருவர் இருந்ததால், முரசொலி நாளேட்டின் பெயரையும் சேர்த்து முரசொலி மாறன் என்று அவர் வைத்துக் கொண்டார்.

இவருக்கு கலாநிதி மாறன், தயாநிதி மாறன் என இரு மகன்களும், அன்புக்கரசி என்ற மகளும் உள்ளனர். வெளிநாட்டில் எம்.பி.ஏ படிப்பை முடித்த கலாநிதி மாறன், தொடக்கத்தில் முரசொலி நாளேட்டின் நிர்வாகப் பொறுப்பைக் கவனித்து வந்துள்ளார். இவருக்கு காவேரி என்ற மனைவியும் காவ்யா என்ற மகளும் உள்ளனர்.

கடந்த 2003ஆம் ஆண்டு நவம்பர் 23ஆம் தேதியன்று முரசொலி மாறன் மறைந்தார். அவரது மறைவைத் தொடர்ந்து தீவிர அரசியலுக்குள் தயாநிதி மாறன் வந்தார். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். 2004ஆம் ஆண்டு மத்திய சென்னை தொகுதியில் இருந்து நாடாளுமன்றத்துக்கு அவர் தேர்வு செய்யப்பட்டார். 2004 மே முதல் 2007 மே 13 வரை இந்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் பதவி வகித்தார்.

கருணாநிதியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக அவர் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2008ஆம் ஆண்டு டிசம்பரில் மோதல் முடிவுக்கு வந்தது. இதுகுறித்து அப்போது முதலமைச்சராக இருந்த கருணாநிதியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, "கண்கள் பனித்தது, இதயம் இனித்தது" என்று பதில் அளித்தார்.

கடந்த 2009ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற தயாநிதி மாறன், இந்திய ஜவுளித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். 2011ஆம் ஆண்டு வரை பதவியில் நீடித்தவர், 2ஜி விவகாரம் காரணமாகத் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjel0l2pj80o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.