Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: PRIYATHARSHAN

19 JUN, 2025 | 04:06 PM

image

வீ. பிரியதர்சன்

உங்கள் பிள்ளை, உடன்பிறந்தவர், கணவன், மனைவி அல்லது பெற்றோர் என ஒரு அன்புக்குரியவர் காணாமல்போனதை கற்பனை செய்து பாருங்கள், அவர்களை  மீண்டும் கொண்டுவர அல்லது குறைந்தபட்சம் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைக் கண்டறிய நீங்கள் உங்களால் முடிந்த அனைத்தையும் செய்வீர்கள், அதற்குப் பதிலாக உங்கள் வேண்டுகோள்கள் செவிடர் காதுகளில் விழுகின்றன. அரசாங்கங்களும் புரட்சிகளும் வந்துபோயின. அனைத்தும் நீதியை உறுதியளித்தன. ஆனால் இறுதியில் அந்த நீதியை வழங்கத் தவறிவிட்டன. ஆயினும் இலங்கையின் வடக்கு, கிழக்கில் 3 மூவாயிரம் நாட்களுக்கு மேலாக காணாமல்போனவர்களின் உறவினர்கள் போராடிக்கொண்டிருக்கின்றனர் நீதிக்காக. 

IMG_20250605_103810.jpg

ஆம், இந்நிலையிலேயே 2025 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8 ஆம் திகதி பாரிய மனிதப் புதைகுழியாக யாழ்ப்பாணத்தின் அரியாலைப் பகுதியிலுள்ள செம்மணி - சிந்துப்பாத்தி பகுதி அறிவிக்கப்பட்டது. அங்கு 19 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீண்டும் அங்கு அகழ்வாராய்ச்சி தொடங்கும் போது மேலும் பல எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்படலாமென எதிர்பார்க்கப்படுகின்றது.

1000046433.jpg

செம்மணி மனித புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட  19 எலும்புக்கூடுகளில் 3 பிறந்த குழந்தைகளின் எலும்புக்கூடுகள் அல்லது பத்துமாதத்திற்கும் குறைவான குழந்தைகளின் எலும்புக்கூடுகள், மனித புதைகுழிகளின் 40 வீதத்தினை மாத்திரமே இதுவரை அகழ்ந்துள்ளோம். செயற்கோள் படங்கள் மற்றும் ஆளில்லா விமான படங்கள் மூலம்  இரண்டாவது மனித புதைகுழி இருப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஏற்கனவே கண்டுபிடித்துள்ளதாக செம்மணி மனித புதைகுழி அகழ்வாராய்ச்சி நடவடிக்கைகளுக்கு தலைமைதாங்கும் தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர்  ராஜ்சோமதேவ கூறுகிறார்.

1996 ஆம் ஆண்டில் கிருஷாந்தி குமாரசாமி வழக்கில் தண்டனை பெற்ற ஒரு இராணுவ சிப்பாயால் 1998 ஆம் ஆண்டில் முதன் முதலில் அம்பலப்படுத்தப்பட்டது செம்மணி புதைகுழி. இதையடுத்து 1999 ஆம் ஆண்டு அங்கு இடம்பெற்ற ஆகழ்வின்போது 15 எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றில் சில எழும்புக்கூடுகள் கண்கள் கட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டன. இருப்பினும் அந்தக்காலப்பகுதியில் நீதி நிறுத்தப்பட்டது.

பல ஆண்டுகளாக வடக்கு, கிழக்கைச் சேர்ந்த குடும்பங்கள் முக்கியமாக தாய்மார்கள் மற்றும் கணவனை தொலைத்த மனைவிமார்கள் தங்கள் காணாமல்போன அன்புக்குரியவர்களின்  புகைப்படங்களை ஏந்தி நீதி கோரி தொடர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்ற நிலையில், அண்மையில் செம்மணியில் உள்ள சித்துபாத்தி இந்து மயான மனிதப் புதைகுழியின் முன் போராட்டத்தை நடத்திய வடக்கு, கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத்தினர், சர்வதேச மேற்பார்வை மற்றும் சர்வதேச தரநிர்ணயங்களுக்கு அமைய மனிதப் புதைகுழியின் அகழ்வினை மேற்கொள்ளுமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியதுடன் இது ஒரு தனியான சம்பவமல்ல. இது குறித்த விசாரணைகள் மற்றும் அகழ்வுகள் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் பற்றிய முழு உண்மையையும் வெளிக்கொணர உதவும்" என கூறினர்.

43__4_.jpg

இந்நிலையில், “ செம்மணி மனித புதைகுழியை தோண்டும் நடவடிக்கைகள் சர்வதேச நடைமுறைகளை பின்பற்றி இடம்பெறுவது அவசியம் என்றும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களுக்கு நீதியையும் உண்மையையும் வழங்கும் நோக்கமாக அமைய வேண்டுமென்று சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசிய அலுவலகம் வலியுறுத்தியுள்ளது.

JDS1.png

மனித உரிமைகள் மற்றும் மேம்பாட்டு மையம் (CHRD), காணாமல் போனவர்களின் குடும்பங்கள் (FoD), இலங்கை ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள்  (JDS), கொழும்பு சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்டம் - இலங்கை (ITJP) ஆகியன இணைந்து கடந்த 2023 இல் வெளியிட்ட அறிக்கையில், இலங்கையில் கடந்த காலங்களில் இடம்பெற்ற மோதல்களில், உடல்கள் புதைக்கப்பட்ட பல மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படாமல் உள்ளதாகவும் ஆனால் இதுவரை 20 இடங்களில் அடையாளப்படுத்தப்பட்ட மனித புதைகுழிகளில் இருந்து பகுதியளவில் மனித எச்சங்கள், எலும்புக்கூடுகள் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இன்றுவரை தங்கள் அன்புக்குரியவர்களை தொலைத்த எந்தவொரு குடும்பமும் மனித எச்சங்களை பெறவில்லையென குறிப்பிடப்பட்டுள்ளது.

JDS2.png

செம்மணி மனிதப் புதைகுழி குறித்து அரசாங்கமும் தென்னிலங்கை ஊடகங்கள் உள்ளிட்ட ஏனைய தரப்பினரும் மௌனமாக இருக்கின்றமை வலிகளை ஆழமாக்குவதுடன் இலங்கையின் ஒற்றுமை மற்றும் அமைதிக்கான வாய்ப்பை அச்சுறுத்துவதாக அமைகின்றது. எனவே அரசாங்கம் செம்மணி புதைகுழி அகழ்வாராய்ச்சிக்கு நிதி ஒதுக்கி, சர்வதேச தடயவியல் தரங்களை உறுதிப்படுத்த வேண்டும். காணாமல்போனோருக்கான அலுவலகம் போன்ற நிறுவனங்களை இயங்க வைப்பதன் மூலம் உண்மைகளை ஏற்றுக்கொண்டு நம்பிக்கையை கட்டியெழுப்பி, கடந்த காலத்தில் விட்ட தவறுகளை மீண்டும் நிகழாமல் தடுக்கலாம்.

கடந்த 1971 மற்றும் 1987, 1989 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற ஜே.வி.பி. கிளர்ச்சிகளின் போது, தெற்கிலுள்ள சிங்களக் குடும்பங்கள் சூரியகந்த மற்றும் மாத்தளை புதைகுழிகளில் இழந்த அன்புக்குரியவர்களை நினைத்து வேதனையையை எதிர்கொண்டனர். அண்மையில் சர்வதேச தொலைக்காட்சி நேர்காணல் மூலம் வெளிச்சத்துக்கு வந்த படலந்த விவகாரம் பொதுமக்களின் சீற்றத்தை தூண்டியது. ஆனால் இடம்பெற்ற அட்டூழியங்களுக்கு எந்தப்பொறுப்பும் அளிக்கப்படவில்லை. 

1000046438.jpg

சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் என நாம் அனைவரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அழுதோம். அப்படியானால் நாம் ஏன் செம்மணியிலிருந்து விலகிச்செல்கின்றோம் ? கடந்த காலத்தை எதிர்கொள்வது பிரிவினை அல்ல, அது ஒற்றுமைக்கான பாதையாகும். நல்லிணக்கம் என்பது எமது கடந்த காலத்தின் கொடூரங்களை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கான எமது கேடயம், மேலும் பொருளாதார மீட்சிக்கான பாதையும் கூட. நல்லிணக்கம் தான் முன்னோக்கிச் செல்லும் பாதை, அத்துடன் கடந்த கால தவறுகளுக்கு பொறுப்பேற்பது உண்மையைத் தேடுவதற்கும் உண்மையான குணப்படுத்தலுக்கும் இன்றியமையாதது.

https://www.virakesari.lk/article/217915

  • கருத்துக்கள உறவுகள்

செம்மணி – மயூரப்பிரியன்!

adminJune 22, 2025

Semmani-3.jpg?fit=1170%2C734&ssl=1

செம்மணி என்றால் , கூடவே புதைகுழி என்பதும் நிச்சயமாக ஞாபகம் வரும். அந்தளவுக்கு செம்மணி புதைகுழி இலங்கையை 90களின் பிற்பகுதியில் உலுக்கி இருந்தது. மீண்டும் சுமார் 27 வருடங்களின் பின்னர் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி மயானமும் அதனை சூழவுள்ள பிரதேசமும் மனித புதைகுழியாக யாழ் . நீதவான் நீதிமன்றினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

செம்மணி.

யாழ்ப்பாணம் – கண்டி நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணத்திற்குள் உள்நுழையும் போது, நாவற்குழி பாலத்தை தாண்டியதும் யாழ்ப்பாணத்திற்கு வருவோரை வரவேற்கும் முகமாக யாழ் வளைவு என அழைக்கப்படும் பெரும் வளைவு அமைந்துள்ள பிரதேசமே செம்மணி பிரதேசமாகும்.

பரந்த வெளி. நீரேந்து பிரதேசமாகவும் , உப்பளமும் , வயல் வெளியையும் தன்னகத்தே கொண்ட மிக அழகிய இயற்கை வனப்பு கொண்ட பிரதேசம். அது 1990களின் பிற்பகுதியில் கொடிய சூனிய பிரதேசமாக மாற்றம் கண்டது.

1995ஆம் ஆண்டு விடுதலைப்புலிகள் யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறிய பின்னர் யாழ்ப்பாணம் இராணுவ கட்டுப்பட்டுக்குள் முற்றாக வந்தது. அதனை தொடர்ந்து யாழ்ப்பாணத்தில் பல்வேறு பகுதிகளிலும் பாரிய இராணுவ முகாம்கள் தோற்றம் பெற்றன.

அவ்வாறு தோற்றம் பெற்ற இராணுவ முகாம்களில் செம்மணி இராணுவ முகாமும் ஒன்று, ஆள் ஆரவற்றமற்ற வெளி, வயல் வெளிகளும் , செம்மணி உப்பள வெளிகளும் , நீரேந்து பிரதேசத்திற்கு மத்தியிலையே அந்த முகாம் அமைந்திருந்தது.

தென்மராட்சி பகுதிகளில் இருந்து , யாழ்ப்பாண நகர் பகுதிக்கு வருவோரும் , யாழ்ப்பாண நகர் பகுதியில் இருந்து தென்மராட்சி பகுதிகளுக்கு செல்வோரும் இந்த முகாமை தாண்டியே பயணிக்க வேண்டிய கட்டாயம். அந்த முகாமில் சோதனைகள் மிக மோசமாக இருக்கும். உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணித்தல் என்றால் என்ன என்பதனை அக்காலத்தில் அந்த முகாமை தினமும் கடந்து சென்று வந்தவர்களை கேட்டால் சொல்வார்கள்.

அவ்வாறு அந்த முகாமை கடந்து யாழ் . நகர் பகுதியை அண்மித்த பகுதியில் உள்ள சுண்டுக்குழி மகளிர் கல்லூரிக்கு சென்று வந்த மாணவி கிருசாந்தி குமாரசாமி 1996.09.07 அன்று அந்த இராணுவ முகாமில் இருந்த இராணுவத்தினரால் மறித்து , இராணுவ முகாமுக்குள் தடுத்து வைக்கப்பட்டு இருந்தார்.

கிருஷாந்தி இராணுவ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தை நேரடியாக கண்ணுற்ற சிலர் தாயாரிடம் தெரிவித்துள்ளனர்.

உடனே தாயார் இராசம்மா பக்கத்து வீட்டில் வசித்து வந்த சிதம்பரம் கிருபாமூர்த்தியையும் தனியார் வகுப்பு போய் வந்த 16வயதான மகன் பிரணவனையும் அழைத்துக்கொண்டு செம்மணி இராணுவ முகாமிற்க்கு சென்று கிருசாந்தியை விசாரித்தார்

அவர்கள் மூவரையும் இராணுவ முகாமிற்குள் அழைத்து சென்ற இராணுவத்தினர் , கிருஷாந்தியுடன் தடுத்து வைத்தனர், பின்னர் அன்றைய தினம் இரவு கிருசாந்தியை பொலிசாரும் இராணுவத்தினருமாக வன்புணர்வு செய்தனர். நள்ளிரவு பன்னிரண்டு மணியளவில் கிருசாந்தியை வன்புணர்ந்து கொலை செய்தனர். அதன் பின்னர் மூன்று புதைகுழிகளில் நான்கு பேரையும் புதைத்தனர்.

மாணவி கிருஷாந்தியும் அவரது தாய் , தம்பி மற்றும் அயலவர் ஆகியோர் காணாமல் போனமை தொடர்பில் பெரும் அதிர்வலைகள் ஏற்பட்டன. இதனால் பாராளுமன்றத்தில் பெரும் வாதங்கள் எழுந்தன. சர்வதேச ரீதியிலும் குரல் எழுப்பப்பட்டன. அதனால் அன்றைய சந்திரிக்க அரசாங்கம் மாணவி காணாமல் போனமை தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பித்தது.

விசாரணைகளின் அடிப்படையில் இராணுவ முகாமில் கடமையில் இருந்த இராணுவத்தினர் மற்றும் பொலிஸார் என கைது செய்யப்பட்டு நீதிமன்றில் அவர்களுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அரசாங்கம் எதிர்பாராத விதமாய் கிருசாந்தி கொலை வழக்கு செம்மணிப் புதைகுழி வழக்காக மாறியது.

கிருஷாந்தி கொலை வழக்கில் 1998ஆம் ஆண்டு ஜூலை 3ஆம் திகதி மரண தண்டனை விதிக்கப்பட்ட இராணுவத்தை சேர்ந்த சோமரத்தின ராஜபக்ச என்பவர் கொழும்பு நீதிமன்றத்தில் வெளியிட்ட வாக்குமூலம் பெரும் கவனத்தை ஈர்த்தது.

‘”செம்மணியில் கிருசாந்தி, அவரது தம்பி , தாயார், அயலவர் மட்டுமல்ல இன்னும் 300 தொடக்கம் 400 பேர் வரையில் புதைக்கப்பட்டுள்ளார்கள். நான் கிருசாந்தியையோ மற்றவர்களையோ கொலை செய்யவில்லை. எனது மேலதிகாரிகள் கொன்றுவிட்டு கொண்டு வந்த சடலங்களை அவர்களின் கட்டளையின் பேரில் புதைப்பதுதான் எனது வேலை. என்னை செம்மணிக்கு கூட்டிச் சென்றால் அப்படிப் புதைக்கப்பட்ட தமிழர்களின் புதைகுழிகளை என்னால் அடையாளம் காட்ட முடியும்.” என வாக்கு மூலம் அளித்தார். அத்துடன் படுகொலைகளுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளின் பட்டியலையும் தரமுடியும் என்றும் கூறினார்.

அவரது வாக்குமூலம் ஒட்டு மொத்த இலங்கையை உலுக்கியத்துடன் , சர்வதேச நாடுகளின் ஒட்டு மொத்த கவனமும் இலங்கை மீது திரும்பியது.

அதனால் , சந்திரிக்க அரசாங்கம் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து புதைகுழியை அகலும் நடவடிக்கையையும் மேற்கொண்டது. அகழ்வின் போது 13 மனித எலும்பு கூடுகள் மீட்கப்பட்டன.

அதனை தொடர்ந்து வந்த கால பகுதியில் ஆட்சி மாற்றம் , யுத்தம் என காலங்கள் மாறியதால் , கால ஓட்டத்தில் அதனை மறக்கடிக்கும் விதமான காரியங்கள் நிகழ்ந்தன.

இந்த நிலையில் தான் கடந்த ஆண்டின் ஆரம்பத்தில் செம்மணி பகுதியில் உள்ள சிந்துபாத்தி இந்து மயானத்தில் மின் தகன மேடை அமைப்பதற்காக கிடங்குள் வெட்டப்பட்ட வேளை எலும்பு எச்சங்கள் தென்பட்டுள்ளன.

மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டவருடையதாக இருக்கலாம் எனும் எண்ணத்தில் ஆரம்பத்தில் அதனை எவரும் பொருட்படுத்தாத நிலையில் , மீண்டும் ஒரு கிடங்கில் மேல் பகுதியில் இருந்து எலும்புகள் மீட்கப்பட்டமையால் , ஏற்கனவே செம்மணி புதைகுழிகள் இந்து மயானத்திற்கு அருகிலையே ஏற்கனவே கண்டறியப்பட்டு இருந்தமையால் , இவையும் மனித புதைகுழியாக இருக்கலாம் எனும் சந்தேகத்தில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்றதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணி

முறைப்பாட்டின் பிரகராம் பொலிஸார் நீதிமன்றின் கவனத்திற்கு விடயத்தினை கொண்டு சென்றதை அடுத்து கடந்த பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி யாழ் . நீதவான் நீதிமன்ற நீதவான் மேற்கொண்ட ஆய்வுப் பணிகளைத் தொடர்ந்து, அகழ்வுப் பணிகள் கடந்த மே மாதம் 15ஆம் திகதி ஆரம்பமானது.

15ஆம் திகதி ஆரம்பமான அகழ்வு பணிகள் இரண்டு நாட்கள் நடைபெற்ற நிலையில் , யாழ்ப்பாணத்தில் மழை பெய்தமையால் , சில நாட்கள் தற்காலிகமாக அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டு , மீண்டும் கடந்த 02ஆம் திகதி ஆரம்பமாகி 07ஆம் திகதி வரையில் அகழ்வு பணிகள் இடம்பெற்றன.

அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நாள் முதல் 07ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் 19 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அவற்றில் சிசு மற்றும் சிறார்களுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு எச்சங்களும் மீட்கப்பட்டுள்ளன. அத்துடன் இணைந்த நிலையில் கூட எலும்பு கூடுகள் அடையாளம் காணப்பட்டமையால் , குறித்த பகுதி பாரிய மனித புதைகுழியாக இருக்கலாம் என்ற சந்தேகம் காணப்பட்டது.

மூன்றுக்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் ஒரு பகுதியில் இருந்து மீட்கப்பட்டால் அப்பகுதியினை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற சட்ட ஏற்பாடுகளுக்கு அமைய , யாழ் . நீதவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் , குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த வேண்டும் என விண்ணப்பம் செய்தனர்.

அதன் வழக்கு விசாரணைகளின் போது, சட்ட வைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் பேராசிரியர் ஆகியோரின் நிபுணத்துவ அறிக்கை மற்றும் அபிப்பிராய அறிக்கை ஆகியவை மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.

அகழ்வு இடம்பெறும் இடத்தில் 1.6 அடி ஆழத்தில் மனித சிதிலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. ஒழுங்கு முறையின்றி குழப்பமான சூழலில் மனித என்புக்கூடுகள் புதைக்கப்பட்டுள்ளது. ஆடைகளோ அல்லது தனிப்பட்ட அணிகலன்களோ குறித்த இடங்களில் காணப்படவில்லை போன்ற விடயங்கள் மன்றின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

அதனை அடுத்து அப்பகுதி மனித புதைகுழியாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன் , மேலும் 45 நாட்களுக்கு அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதிமன்று அனுமதித்துள்ளது.

இரண்டாம் கட்ட அகழ்வு பணிகளுக்கான நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றதும் 45 நாட்களுக்கு தொடர் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளது. எதிர்வரும் 26ஆம் திகதியளவில் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த அகழ்வு பணிகள் சர்வதேச கண்காணிப்புடன் நடைபெற வேண்டும் என காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கோரிக்கையை முன் வைத்து போராட்டம் ஒன்றினையும் நடத்தியுள்ளனர்.

செம்மணிப் புதைகுழி விவகாரமும் இப்போது அவ்வாறு

வெளிக்கிளம்பி நீதித்துறையின் கட்டுப்பாட்டில் உரிய வகையில் முன்கொண்டு செல்லப்படுகின்றது. இந்த நிலை வலுவாக்கப்பட வேண்டும் என்பதுடன் புதைகுழிகளின் நீட்சி அறியப்படவும் வேண்டும் என்பதும் மிகவும் அவசியமானது. எந்தவொரு காரணத்தை முன்னிறுத்தியும் புதைகுழி அகழ்வுகள் இடைநிறுத்தப்படக்கூடாது என பல்வேறு தரப்பினரும் கோரி வருகின்றனர்.

அத்துடன் , அவலமாக மரித்த உயிர்களின் ஆத்மாக்கள் அமைதிகொள்ளும் போது தான் நாடுமுன்னோக்கிச் செல்ல முடியும்.

மாறாக அந்த ஆத்மாக்களின் அவலக்கதைகள் தொடர்ந்தும் மூடிமறைக்கப்பட்டால் அவற்றினால் விளையும் பாதிப்புக்கள் நாட்டை மேலும் மோசமானநிலைக்கு இட்டுச் செல்லும்.

இதனையுணர்ந்து செம்மணிப் புதைகுழி விவகாரம் கைவிடப்படும் விடயமாகவன்றி உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்லப்படும் விடயமாக மாறவேண்டும் என்பதை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

கடந்த கால அரசாங்கங்கள் போல் புதைகுழி மூடி மறைக்கப்படுமா ? அல்லது புதைகுழிகளின் உண்மையையும் நீதியையும் நிலைநாட்டக்கூடிய வகையில் முன்கொண்டு செல்ல தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒத்துழைக்குமா ? என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

நன்றி

மயூரப்பிரியன்

https://globaltamilnews.net/2025/217136/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.