Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தெற்கு இஸ்ரேலில் உள்ள டிமோனா அணுஉலை

கட்டுரை தகவல்

  • எழுதியவர், அலிசியா ஹெர்னாண்டஸ்

  • பதவி, பிபிசி முண்டோ

  • 23 ஜூன் 2025, 01:22 GMT

இஸ்ரேலிடம் அணு ஆயுதம் 1960கள் முதலே இருக்கிறது என்பது அனைவரும் அறிந்த ஒரு ரகசியம். ஆனாலும் இதனை இஸ்ரேல் ஒருபோதும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்ததில்லை.

கடந்த வாரம் இரான் மீது ராணுவ தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. "அணு ஆயுதத்தை தயாரிக்கும் நிலையை இரான் எட்டியிருக்கிறது" என இஸ்ரேல் குற்றம் சாட்டியது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசி இரான் பதில் தாக்குதல் நடத்திய நிலையில், இரு நாடுகளிடையேயான போராக மாறியது.

அமைதி ஆராய்ச்சிக்கான சுயாதீன அமைப்பான அமைதிக் கல்விக்கான டாலஸ் மையத்தின் (Dallas Center for Peace Studies) ஆராய்ச்சியாளரான முனைவர் ஜேபியர் பிகஸ் பேசுகையில், "மத்திய கிழக்கில் அணு ஆயுதம் வைத்திருக்கும் ஒரே நாடு இஸ்ரேல் தான்" என்று கூறினார்.

சர்வதேச அணுசக்தி முகமையின் தகவல்படி, யுரேனியத்தை செறிவூட்டுவதில் 60 சதவிகிதத்தை இரான் எட்டியுள்ளது. ஆனால் பிகஸ் அளிக்கும் விளக்கத்தின்படி, "அணு ஆயுதத்தை தயாரிக்க யுரேனியம் 90 சதவிகிதத்துக்கு மேல் செறிவூட்டப்பட்டிருக்க வேண்டும்"

இஸ்ரேல் ஒருபோதும் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை. மாறாக, இரான், அமெரிக்கா மற்றும் ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை ஏற்றுக்கொண்டுள்ளன.

இதன் பொருள் என்னவென்றால், அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த ஆய்வுக்கும் இஸ்ரேல் அணு சக்தி மையங்களை உட்படுத்த முடியாது.

இதன் காரணமாகத் தான் இஸ்ரேலின் அணு ஆயுதங்கள் தொடர்பான எந்த தகவல்களும் கசியவிடப்படுவதன் மூலமே பெறப்படுகின்றன. அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித்துறை மற்றும் அணு சக்தி குறித்து கண்காணிப்பு மேற்கொள்ளும் சர்வதேச முகமைகள் மூலமாகவே இந்த தகவல்கள் வெளிப்படுகின்றன.

இது தவிர, இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்களில் வேலை பார்த்து, பின்னர் அங்கிருந்து பணி நீக்கம் செய்யப்பட்டவரான அணு பொறியாளர் மாவ்டுகாய் வானுனு 1986ம் ஆண்டு சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டியின் மூலமாகவும் பல தகவல்கள் கிடைத்தன.

இஸ்ரேலிடம் அணு ஆயுதத்திட்டம் செயல்பாட்டில் இருக்கிறது என்பதை முதன்முதலில் வெளிப்படுத்திய இவர், பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டார்.

அமிமுட் அல்லது வேண்டுமென்றே தெளிவற்ற நிலை

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு, அணு ஆயுதங்கள் குறித்து "தெளிவின்மை" கொள்கையை கடைபிடிக்கும் இஸ்ரேல்

இஸ்ரேலின் அணு ஆயுதம் குறித்த அதிகாரப்பூர்வ கொள்கையானது அமிமுட் (Amimut) என்ற ஹீப்ரு மொழி வார்த்தையால் குறிப்பிடப்படுகிறது. இதற்கு வேண்டுமென்றே தெளிவின்மையை ஏற்படுத்துதல் என பொருள் கொள்ளலாம். அதாவது, ஏற்கெனவே கூறியது போன்று அணு ஆயுதம் இருக்கிறதா என்பதை இஸ்ரேல் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.

"இஸ்ரேலின் இந்த அணுகுமுறை அணு யுகத்தில் தனித்துவமானது என கருதலாம்" என, பிரிட்டனின் ஹவுஸ் ஆஃப் லார்ட்ஸ்க்கு எழுதிய கட்டுரையில் குறிப்பிடுகிறார் பேராசிரியர் ஆவ்னெர் கோஹன். இவர் அணு ஆயுத பரவலை தடுப்பதற்கான கல்விகளுக்கான பேராசிரியர் என்பதோடு, இஸ்ரேல் அணு திட்டங்கள் குறித்த நிபுணராகவும் அறியப்படுகிறார்.

இந்த திட்டம் முற்றிலும் புதிது அல்ல

இஸ்ரேலின் அதிபராகவும், பிரதமராகவும் இருந்துள்ள ஷிமோன் பெரஸ் தமது நினைவுக் குறிப்புகளில் இதனை எழுதியுள்ளார்: "தெளிவின்மைக்கு அசாதாரணமான சக்தி இருக்கிறது. சந்தேகம் என்பது இரண்டாவது ஹோலோகாஸ்ட்டை திட்டமிடுபவர்களுக்கு எதிரான சிறந்த தடுப்பரணாக இருக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

கோஹன் கூறுகையில், "அணு சக்தி குறித்த தெளிவின்மை இஸ்ரேலின் மூலோபாய மற்றும் ராஜீய ரீதியான சாதனை" என குறிப்பிடுகிறார்.

அவரது கருத்தின்படி, சர்வதேச சமூகத்தின் மறைமுக ஒப்புதலுடன் கூடிய இந்த திட்டமானது "இஸ்ரேல் இரண்டு சூழ்நிலைகளிலும் பலனடைய உதவி செய்கிறது" என கூறியுள்ளார்.

"இஸ்ரேல் வேண்டுமேன்றே தெளிவற்ற தன்மையைத் தேர்வு செய்துள்ளது. இந்த நாடு அணுஆயுத பரவலை தடுப்பதற்கான எந்த ஒப்பந்தத்திலும் இணையவில்லை. இதனால் சர்வதேச அமைப்புகளின் எந்த ஆய்வுக்கும் உட்பட வேண்டியதில்லை" என பிபிசி முன்டோவிடம் கூறியுள்ளார் ஜேபியர் பிகஸ்.

"ராணுவ விவகாரங்களில் இஸ்ரேல் மட்டுமல்ல, உலகின் பல நாடுகள் வெளிப்படைத் தன்மை இல்லாமல் தான் உள்ளன. ஆனால், இஸ்ரேல் அணுசக்தி சார்ந்த விவகாரங்களிலும் வெளிப்படைத்தன்மை இன்றி இருக்கிறது " என்கிறார் பிகஸ்.

அவர் மேலும் கூறுகையில், "இஸ்ரேலின் பார்வையிலிருந்து இதனை அணுகும்போது, இந்த தெளிவின்மை அதன் விருப்பங்களை பாதுகாக்கிறது" என்கிறார்.

"இதில் உண்மை என்னவென்றால், இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் உள்ளது என்பது நமக்கு தெரியும், அந்நாட்டிடம் குண்டுகள் உள்ளன என்பதும் தெரியும். அவற்றை பயன்படுத்தும் திறனும் அந்நாட்டுக்கு இருக்கிறது என்பதையும் நாம் அறிவோம்" என பிகஸ் கூறுகிறார்.

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், AHMAD GHARABLI/AFP/GETTY IMAGES

"இந்த தெளிவின்மை வெளியிலிருந்து வந்த தகவல்களால் தான் உடைக்கப்பட்டது. இஸ்ரேல் ஒருபோதும் இதனை மறுக்கவோ, ஒப்புக்கொள்ளவோ இல்லை" என தமது அறிக்கையில் கூறும் கோஹன், "இந்த கொள்கை தனது இருப்பியலுக்கு எதிரான அச்சுறுத்தலில் இருந்து தற்காப்பு அளிப்பதோடு, அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்கு எதிரான அரசியல் பின்விளைவுகளிலிருந்தும் பாதுகாப்பு அளிக்கிறது. மேலும் அணு ஆயுதங்களை வைத்திருப்பதற்காக அரசியல், ராஜ்ஜீய மற்றும் தார்மீக விலைகளையும் இஸ்ரேல் கொடுப்பதில்லை" என கோஹன் கூறுகிறார்.

இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு ஆதரவு பத்திரிகையான 'இஸ்ரேல் ஹாயோம்' அந்நாட்டில் மிகப்பெரிய சந்தாதாரர்களைக் கொண்ட இலவச பத்திரிகையாக அறியப்படுகிறது. இந்த இதழில் வெளியான நீண்ட கட்டுரையில் இஸ்ரேல் தனது அணு சக்தி திறன் குறித்து ஏன் எச்சரிக்கையாக இருக்கிறது என விளக்கப்பட்டுள்ளது.

இந்த பத்திரிகையின் கருத்துப்படி, "அணு ஆயுதப் பரவலை எந்த விலை கொடுத்தேனும் தடுக்க வேண்டும் என்பது தான் இஸ்ரேலின் முதன்மை இலக்கு" என கூறப்பட்டுள்ளது. தெளிவின்மை கொள்கையின் ஆதரவாளர்களின் கூற்றுப்படி, "இந்த அணுகுமுறையை கைவிடுவது மத்தியக் கிழக்கில் அணு ஆயுதப்போட்டி விரிவடைவதற்கும், ஆயுதப் போட்டிக்கும் ஊக்கியாக அமையும்" என கூறப்பட்டுள்ளது.

ஆனால், ஆயுதக் கட்டுப்பாடு மற்றும் பரவலை தடுப்பதற்கான மையத்தின் வாதம் வேறாக உள்ளது. வெளிப்படைத் தன்மையற்று இருப்பது "மத்தியக் கிழக்கில் பேரழிவு ஆயுதங்கள் இல்லாத சூழலை ஏற்படுத்த தடையாக இருப்பதாக" அந்த மையம் கூறுகிறது.

இஸ்ரேலிடம் அணுசக்தி திட்டம் இருப்பதை எப்படி அறியலாம்?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,SATELLITE IMAGE (C) 2020 MAXAR TECHNOLOGIES/GETTY IMAGES

படக்குறிப்பு, நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தின் செயற்கைக்கோள் புகைப்படம்

இஸ்ரேலின் அணுசக்தித்திறன் குறித்த முதல் தகவலானது 1962ம் ஆண்டு அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சகத்தின் குறிப்பாணை ஒன்றின் மூலம் வெளிப்பட்டது. இதில், பிரான்ஸ் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே 1950களில் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் மூலம் தெற்கு இஸ்ரேலின் டிமோனா நகரத்தில் அணு மின் நிலையம் ஒன்று அமைக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

"பிரான்ஸ் உடனான ஒத்துழைப்பு என்பது புளூட்டோனியத்தை உற்பத்தி செய்யும் அணுஉலையை கட்டமைப்பது" என்கிறார் பிகஸ்.

கூகுள் வரைபட உதவியுடனான தேடுதலின் முடிவில், "நெகெவ் அணு ஆராயச்சி மையம்" டிமோனா நகரிலிருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில் பாலைவனத்தின் நடுவே இருப்பதாக அறிய முடிகிறது.

முதலில் இந்த வளாகத்துக்கு ஜவுளி தொழிற்சாலை, உலோகவியல் ஆராய்ச்சி மையம், வேளாண் வளாகம் என பல்வேறு அறிமுகங்கள் கொடுக்கப்பட்டன.

சில காலத்துக்குப் பிறகு 1960களில் அப்போதைய இஸ்ரேல் பிரதமரான டேவிட் பென் குரியன், நாட்டின் அணுசக்தி திட்டம் குறித்து பொதுவெளியில் அறிவித்தார்.

இஸ்ரேலிய நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில், அணு ஆராய்ச்சி மையமானது "அமைதி நோக்கங்கள்" கொண்டிருப்பதாகக் கூறினார்.

அமெரிக்காவின் பாதுகாப்பு மற்றும் எரிசக்தித் துறைகளின் விசாரணை அறிக்கைகள், "இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருக்கிறது என்பதை தெளிவாக காட்டுகின்றன" என்கிறார் பிகஸ்.

ரகசிய ஆவணங்களாக இருந்து பின்னர் வெளியிடப்பட்ட சில ஆவணங்களின் மூலம், குறைந்தது 1975 வரையிலும் இஸ்ரேல் அணு ஆயுதங்களை தயாரித்தது என்பதில் அமெரிக்க அரசு உறுதியாக இருந்தது என்பது தெரியவந்துள்ளது.

ஆனால், இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த வரலாற்றில் முக்கிய திருப்புமுனையானது ஒரு நபரின் பெயருடன் தொடர்புடையது: அவர் தான் மாவ்டுகாய் வானுனு

சன்டே டைம்ஸ் இதழுக்கு அளித்த பேட்டி

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், DAN PORGES/GETTY IMAGES

படக்குறிப்பு, டிமோனா அணுசக்தி மையத்தில் பணியாற்றிய வானுனு

1980களில் இஸ்ரேலின் அணுசக்தி திட்டங்கள் குறித்த கூடுதல் விவரங்கள் வெளியாயின.

வானுனு டிமோனா அணு உலையில் 1985ம் ஆண்டு வரையிலும் 9 ஆண்டுகள் வேலை பார்த்துள்ளார்.

அங்கிருந்து வெளியேறும் முன்னதாக வளாகத்தை இரண்டு முறை முழுமையாக புகைப்படம் எடுத்திருக்கிறார்.

இந்த புகைப்படங்கள் அணு ஆயுத தயாரிப்புக்காக கதிரியக்கத் தன்மை கொண்ட பொருட்கள் பிரித்தெடுக்கப்படுவது மற்றும் தெர்மோநியூக்ளியர் ஆயுத வடிவமைப்புக்கான ஆய்வகங்களையும் காட்டின.

1986ம் ஆண்டில் ஆஸ்திரேலியா சென்ற வானுனு அணுசக்தி எதிர்ப்பு அமைப்பினரை சந்தித்தார். கொலம்பியாவைச் சேர்ந்த சுயாதீன பத்திரிகையாளரான ஆஸ்கர் கெரேரோவைச் சந்தித்த போது, இந்த புகைப்படங்களை வெளியிட சம்மதித்தார்.

இதன் மூலமாக வானுனு பிரிட்டிஷ் சன்டே டைம்ஸ் இதழுக்கு வேலை பார்க்கும் பீட்டர் ஹன்னம் எனும் பத்திரிகையாளரை சந்தித்தார்.

பிபிசியின் "விட்னஸ் டூ ஹிஸ்டரி" நிகழ்ச்சிக்கு பேட்டி அளித்த பீட்டர் இந்த தகவல்களை வெளியிடுவதன் மூலம், இஸ்ரேல் சர்வதேச அழுத்தத்துக்கு ஆளாகி அணுசக்தி திட்டத்தை நிறுத்தும் என வானுனு நம்பினார் என கூறினார். ஆனால், இந்த நம்பிக்கை எதுவும் நிறைவேறவில்லை.

இந்த நிகழ்ச்சியில் வெளியான தகவல்களின்படி, அணுசக்தி குறித்த தகவல் வெளியானதும் வானுனு கடத்தப்பட்டு, போதை மருந்து கொடுக்கப்பட்டு இஸ்ரேல் கொண்டு செல்லப்பட்டார். விசாரணைக்குப் பின்னர் தேசத் துரோகம் மற்றும் உளவு பார்த்து இஸ்ரேலின் அணு ஆயுத ரகசியங்களை வெளியிட்ட குற்றச்சாட்டுக்காக 18 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

2004ம் ஆண்டு அவர் விடுதலை செய்யப்பட்டார். அப்போது பேசிய அவர், தனது செயலுக்காக "மகிழ்ச்சியும் பெருமையும்" அடைவதாகக் கூறினார். ஆனால் அவர் விடுதலை செய்யப்பட்ட பின்னர், அவருக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை மீறியதற்காக மீண்டும் தண்டிக்கப்பட்டார். இம்முறை வெளிநாட்டினருடன் பேசவும், இஸ்ரேலை விட்டு வெளியேறவும் அவருக்கு தடை விதிக்கப்பட்டது.

வானுனு வெளிப்படுத்திய பின்னர் இஸ்ரேலிடம் அணு ஆயுத திட்டம் இருப்பது வெளிப்படையாக ஒப்புக் கொள்ளப்பட்டது.

இஸ்ரேலிடம் எத்தனை அணு ஆயுதங்கள் உள்ளன?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம், RONEN ZVULUN/POOL/AFP/GETTY IMAGES

மாவ்டுகாய் வானுனு வெளியிட்ட தகவல்களின் அடிப்படையில், அந்நாளில் இஸ்ரேலிடம் 100 முதல் 200 அணு ஆயுதங்கள் இருக்கலாம் என மதிப்பிடப்பட்டது.

தற்போதைய சூழலில் ஸ்டாக் ஹோம் அமைதி ஆராய்ச்சி நிறுவனம் போன்ற, அணு செயல்பாட்டு கண்காணிப்பு நிறுவனங்களின் மதிப்பீட்டின்படி, இஸ்ரேலிடம் சுமார் 90 அணு ஆயுதங்கள் இருக்கலாம்.

இந்த ஆயுதங்களை தயாரிப்பதற்கான புளூட்டோனியம் டிமோனாவில் உள்ள நெகெவ் அணு ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.

இஸ்ரேலால் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின்படி, இந்த அணு உலையானது 26 மெகாவாட் திறனுடைய வெப்ப உலையைக் கொண்டுள்ளது. ஆனால், இதன் உண்மையான திறன் இன்னும் அதிகமாக இருக்கலாம் என சிலர் நம்புகின்றனர்.

இஸ்ரேலின் மற்ற பகுதிகளில் உள்ள அணு திட்டங்களைப் போன்று இந்த உலையானது சர்வதேச அணுசக்தி முகமையின் பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்பட்டதல்ல. பாதுகாப்பு நெறிமுறைகளானது அணு கட்டமைப்புகள் அமைதியான நோக்கங்களுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதோடு வேறு நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுவதை தடை செய்கிறது.

ஆனால், இஸ்ரேல் அதிகாரப்பூர்வ தகவல்கள் எதையும் கொடுக்காத போது, அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை எப்படி கணக்கிட முடியும்?

"சர்வதேச அமைப்புகள் அணு திட்டங்களை கண்காணித்து, ஆண்டுதோறும் ஆயுதங்கள் குறித்த மதிப்பீடுகளை வழங்குகின்றன" என்கிறார் பிகஸ்.

"குறைவான தகவல்களையே கொண்டிருக்கும் இஸ்ரேல் மற்றும் வடகொரியா போன்ற நாடுகளைப் பொருத்தவரையிலும், கடந்த ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட யுரேனியம் மற்றும் புளூட்டோனியத்தின் உத்தேச அளவு மதிப்பிடப்பட்டு இதன் மூலம் அணு ஆயுதங்கள் கணக்கிடப்படும்" என பிகஸ் விளக்குகிறார்.

அணு உலைகள் இயங்கிய நேரம் மற்றும் அவற்றின் திறன் ஆகியவற்றை கணக்கில் கொண்டு, இவற்றில் தயாரிக்கப்படும் அணு பிளவு பொருளின் அளவு மதிப்பிடப்படுகிறது.

சுமார் 50 அணு ஆயுதங்களை வைத்திருக்கும் வடகொரியாவுக்கோ அல்லது இஸ்ரேலுக்கோ பின்பற்றப்படும் இந்த அணுகுமுறையானது முற்றிலும் புதிது அல்ல.

2011-ல் நியூ ஸ்டார்ட் ஒப்பந்தம் கையெழுத்தாகும் முன்பு , அணு உலைகளில் காலமுறைப்படியான ஆய்வுகள் மற்றும் அதிகாரப்பூர்வ அறிக்கைகள் கட்டாயமாக்கப்படவில்லை. அப்போது, சர்வதேச அமைப்புகள் சோவியத் ஒன்றியம் அமெரிக்காவிடம் இருக்கும் அணு ஆயுதங்களை தோராயமாகவே கணக்கிட்டன என்று பிகஸ் கூறுகிறார். "இந்த மதிப்பீடுகள் பின்னாளில் ஆய்வு நடத்தப்பட்டு வெளியான அறிக்கைகளுடன் ஒத்துப்போயின. எனவே, இஸ்ரேலுக்கான தற்போதைய கணக்கீடு உண்மைக்கு நெருக்கமாக இருக்கும் என நாம் கூறலாம்" என பிகஸ் கூறுகிறார்.

அணு ஆயுதமற்ற நாடாக மாற முடியுமா?

இரான், இஸ்ரேல், அணு ஆயுதம், அணு ஆராய்ச்சி , அணு சக்தி, வானுனு, அணு ஆயுத பரவல்

பட மூலாதாரம்,REUTERS

2012-ஆம் ஆண்டில் ஐ.நா. பொதுசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இஸ்ரேல் தனது அணுசக்தி திட்டங்களை சர்வதேச ஆய்வுக்கு அனுமதிக்குமாறு வலியுறுத்தியது.

இஸ்ரேலை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இணைய வலியுறுத்தும் இந்த தீர்மானத்துக்கு எதிராக இஸ்ரேல், அமெரிக்கா மற்றும் கனடா வாக்களித்தன.

1970-ஆம் ஆண்டு இந்த அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் இரான் கையெழுத்திட்டது. சமீப நாட்களில் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலைத் தொடர்ந்து, இந்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவது குறித்து இரான் நாடாளுமன்றம் ஆலோசித்து வருவதாக, அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் இஸ்மாயில் பாகெய் குறிப்பிட்டார்.

மறுபுறம் மத்திய கிழக்கு பிராந்தியத்தை அணு ஆயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் தீர்மானமானது ஐ.நா. பொதுச்சபையில் அவ்வப்போது முன்மொழியப்படுகிறது.

"இந்த முன்மொழிவை இஸ்ரேல் மறுத்துவிட்டதோடு, இதனை தனது இறையாண்மை மீதான தாக்குதல்" என்றும் விமர்சிக்கிறது என்கிறார் பிகஸ்.

அவரது கூற்றுப்படி, ஐக்கிய நாடுகள் அவையின் ஆயுதக்குறைப்பு ஆராய்ச்சி நிறுவனத்தின் பத்திரிகை காப்பக அறிக்கைகளின்படி, இதுபோன்ற கட்டுப்பாடுகள் பிராந்தியத்தில் உள்ள உண்மையான அபாயங்களை குறைக்காது என இஸ்ரேல் விளக்கம் அளித்துள்ளது.

ஜேபியர் பிகஸ் வலியுறுத்துவது என்னவென்றால், "எந்த ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதும் கவலை அளிக்கக்கூடியது தான். ஏனென்றால், இந்த ஆயுதங்களை வைத்திருப்பது இயல்பாகவே ஆபத்தானது" என்கிறார்.

"ஆனால் உண்மையில் இஸ்ரேல், ஐக்கிய நாடுகள் அவையின் தீர்மானங்களை மீண்டும் மீண்டும் மீறி வருகிறது. சர்வதேச சட்டங்கள், மனிதாபிமான சட்டங்களை தொடர்ந்து புறக்கணிக்கும் இஸ்ரேலிடம் அணு ஆயுதங்கள் உள்ளன. வேறு எந்த நாடும் அவற்றைத் தடுக்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுது என்பது இந்த விஷயத்தை இன்னும் கவலையடையச் செய்கிறது" என பிகஸ் கூறுகிறார்.

இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cnvm326v8njo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.