Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வெப்கேம் மாடல்

பட மூலாதாரம்,JORGE CALLE / BBC

படக்குறிப்பு, தற்போது 20 வயதாகும் கெய்னி, தனது 17 வயதில் வெப்கேம் மாடலாக வேலை செய்யத் தொடங்கினார்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், சோபியா பெட்டிசா

  • பதவி, பிபிசி

  • 27 ஜூன் 2025, 04:23 GMT

    புதுப்பிக்கப்பட்டது 34 நிமிடங்களுக்கு முன்னர்

ஒரு நாள் இசபெல்லா பள்ளி முடிந்து வீட்டிற்குக் சென்றுக் கொண்டிருந்தபோது, யாரோ ஒருவர் அவர் கையில் ஒரு துண்டுப்பிரசுரத்தை திணித்தார். "உன் அழகைப் பயன்படுத்தி பணம் சம்பாதிக்க விரும்புகிறாயா?" என்று அந்த துண்டுப் பிரசுரத்தில் கேட்கப்பட்டிருந்தது.

கொலம்பியாவின் தலைநகரான பொகோட்டாவில் தனது பகுதியில் உள்ள டீனேஜ் மாணவிகளை குறிவைத்து ஒரு ஸ்டுடியோ செயல்படுவதாக இசபெல்லா கூறுகிறார். இந்த ஸ்டுடியோ, மாடல்களாக செயல்பட மாணவிகளை ஊக்குவிக்கிறது.

இசபெல்லாவுக்கு அப்போது 17 வயதுதான். ஆனால், இரண்டு வயது மகனின் தாய். தனது குழந்தையை பராமரிக்க அவருக்கு பணம் தேவைப்பட்டதால், விசயத்தைத் தெரிந்துக் கொள்ள அவர் சென்றிருக்கிறார்.

அவர் சென்றடைந்த இடம், ஒரு பாழடைந்த பகுதியில் உள்ள வீடு. அந்த வீட்டில் இருந்த எட்டு அறைகளும், படுக்கையறைகள் போல அலங்கரிக்கப்பட்டிருந்தன, ஒரு தம்பதியினர் நடத்திவந்த செக்ஸ் கேம் ஸ்டுடியோ அது.

சிறிய, குறைந்த பட்ஜெட்டில் செயல்படும் ஸ்டுடியோக்கள் முதல் பெரிய அளவிலான ஸ்டுடியோக்கள் என பல வகை உள்ளன. அவற்றில், விளக்குகள், கணினிகள், வெப்கேம்கள் மற்றும் இணைய இணைப்புடன் கூடிய தனி அறைகள் இருக்கும். பாலியல் செயல்களை மாடல்கள் செய்வது ஸ்ட்ரீம் செய்யப்படும். பார்வையாளர்களின் விருப்பத்துக்கு ஏற்றாற்போல, ஸ்டுடியோக்களில் இருந்து ஸ்ட்ரீம் செய்யப்படுகின்றன. ஸ்டுடியோ நடத்துபவர்கள் அல்லது இடைத்தரகர்கள்/ கண்காணிப்பாளர்கள் மூலம் பார்வையாளர்கள் கோரிக்கைகளை வைக்கிறார்கள்.

கொலம்பியாவில் 18 வயதுக்குட்பட்ட வெப்கேம் மாடல்களை ஸ்டுடியோக்கள் பயன்படுத்துவது சட்டவிரோதமானது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த நாள், இசபெல்லா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது வேலையைத் தொடங்கிவிட்டார். தனது சம்பளம் என்ன, உரிமைகள் என்ன என்பதை விவரிக்கும் எழுத்துப்பூர்வ ஒப்பந்தம் எதுவும் போடப்படவில்லை என்று அவர் பிபிசி உலக சேவையிடம் கூறினார்.

"எனக்கு அவர்கள் எதையும் சொல்லிக் கொடுக்கவில்லை, அவர்கள் நேரடியாக என்னை ஸ்ட்ரீமிங் செய்ய வைத்தனர். 'இதோ கேமரா இருக்கிறது, லைவுக்கு போகலாம்' என்றார்கள்."

இந்த வேலையில் சேர்ந்த சில நாட்களிலேயே, பள்ளியிலிருந்து நேரடி ஒளிபரப்பு செய்ய வேண்டும் என்று இசபெல்லாவிடம் ஸ்டுடியோ கேட்டுக் கொண்டது.

வகுப்பறையில் தன்னைச் சுற்றியிருந்த சக மாணவர்கள் ஆங்கிலம் கற்றுக்கொண்டிருந்த நிலையில், இசபெல்லா தொலைபேசியை தனது மேசையில் வைத்து, தன்னை காட்டத் தொடங்கினார்.

தன்னிடம் குறிப்பிட்ட பாலியல் செயல்களைச் செய்யச் சொல்லி பார்வையாளர்கள் கோரிக்கைகள் விடுத்ததைப் பற்றி இசபெல்லா விவரிக்கிறார்.

கழிப்பறைக்குச் செல்வதாக சொல்லி, ஆசிரியரிடம் அனுமதி கேட்டுவிட்டு வகுப்பறையில் இருந்து வெளியேறிய இசபெல்லா, ஒரு அறைக்குச் சென்று, வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றினார்.

ஆசிரியருக்கு என்ன நடக்கிறது என்று எதுவும் தெரியவில்லை. "அதனால் நான் அதை மற்ற வகுப்புகளிலும் செய்ய ஆரம்பித்தேன்" என்று இசபெல்லா கூறுகிறார்.

"நான், 'இதை என் குழந்தைக்காக செய்கிறேன், அவனுக்காகச் செய்கிறேன்' என்று நினைத்துக்கொள்வேன். அது எனக்கு பலத்தைத் தந்தது."

ஸ்டுடியோக்கள்,  ஸ்ட்ரீமிங், மாடல்கள்

பட மூலாதாரம்,JORGE CALLE / BBC

படக்குறிப்பு,சில ஸ்டுடியோக்கள் 18 வயதுக்கும் குறைவானவர்களை ஸ்ட்ரீமிங் செய்ய போலி ஐடிகளைப் பயன்படுத்துவதாக மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்

மீள்சுழற்சி செய்யப்படும் பழைய கணக்குகள் மற்றும் போலி ஐடிகள்

சர்வதேச அளவில் செக்ஸ்கேம் தொழில் செழித்து வருகிறது.

உலகளவில் வெப்கேம் தளங்களின் மாதாந்திர பார்வைகளின் எண்ணிக்கை 2017 முதல் மும்மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, ஏப்ரல் 2025 இல் கிட்டத்தட்ட 1.3 பில்லியனை எட்டியுள்ளது, என பகுப்பாய்வு நிறுவனமான செம்ரஷ் கூறுகிறது.

இப்போது, உலகின் வேறு எந்தவொரு நாட்டையும் விட கொலம்பியாவில் தான் அதிகமான மாடல்கள் (400,000) மற்றும் 12,000 செக்ஸ் கேம் ஸ்டுடியோக்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தத் தகவலை, நாட்டின் 'வயது வந்தோர் வெப்கேம் துறை'யை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பான ஃபெனல்வெப் தெரிவித்துள்ளது.

இந்த ஸ்டுடியோக்கள், கலைஞர்களைப் படம் பிடித்து, உலகளாவிய வெப்கேம் தளங்களுக்கு உள்ளடக்கத்தை வழங்குகின்றன, அவை உலகெங்கிலும் உள்ள லட்சக்கணக்கான பார்வையாளர்களுக்கு ஒளிபரப்புவதன் மூலம் பணம் சம்பாதிக்கின்றன. மாடல்களிடம் கோரிக்கைகளை முன்வைக்கும் பார்வையாளர்கள், டிப்ஸ் மற்றும் பரிசுகளை கொடுக்கின்றனர்.

வீட்டில் தனிமை கிடைக்காதது, உபகரணங்கள் அல்லது நிலையான இணைய இணைப்பு இல்லாதது உட்பட பல காரணங்களால் மாடல்கள் ஸ்டுடியோக்களில் பணிபுரிகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் ஏழைகளாகவோ அல்லது சிறார்களாகவோ இருப்பதும் பெற்றோருடன் இருப்பதாலும் என்று தெரிகிறது.

மக்கள்தொகையில் மூன்றில் ஒரு பங்கு மக்கள் வறுமையில் வாடும் ஒரு நாட்டில், பணம் சம்பாதிக்க சுலப வழி இது என்று ஸ்டுடியோக்கள் ஆசை காட்டியே மக்களை கவர முயற்சிப்பதாக பிபிசியிடம் பெண்கள் தெரிவித்தனர்.

சில ஸ்டுடியோக்கள் சிறப்பாக நடத்தப்படுவதாகவும், கலைஞர்களுக்கு தொழில்நுட்ப மற்றும் பிற ஆதரவை வழங்குவதாகவும் கூறும் மாடல்கள், நேர்மையற்றவர்கள் அதிகமாக துஷ்பிரயோகம் செய்வதாக கூறுகின்றனர்.

ஸ்டுடியோ உரிமையாளர்களை "அடிமைகளின் எஜமானர்கள்" என்று வர்ணிக்கும் கொலம்பியாஅதிபர் குஸ்டாவோ பெட்ரோ, அவர்கள் இசபெல்லாவைப் போல பெண்களையும் சிறுமிகளையும் ஏமாற்றி அதிக பணம் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தைகளைக் கூறி நம்ப வைப்பதாக கூறுகிறார்.

ஐரோப்பா மற்றும் அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஸ்டுடியோக்களில் இருந்து உள்ளடக்கத்தை ஸ்ட்ரீம் செய்யும் நான்கு பெரிய வெப்கேம் தளங்களான போங்காகேம்ஸ், சாட்டர்பேட், லைவ்ஜாஸ்மின், ஸ்ட்ரிப்சாட் ஆகியவை, 18 அல்லது அதைவிட அதிக வயதானவர்கள் தான் மாடல்களாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், அதனை உறுதிப்படுத்தும் சோதனைகளையும் மேற்கொள்கின்றன.

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் சட்டங்கள், 18 வயதுக்கு குறைவானவர்கள் பங்களிக்கும் பாலியல் உள்ளடக்கங்களை விநியோகிப்பதைத் தடைசெய்கின்றன.

ஆனால், 18 வயதுக்குட்பட்ட பெண்களைப் பணியமர்த்த ஒரு ஸ்டுடியோ விரும்பினால், இந்தச் சோதனைகளை சுலபமாக தவிர்த்துவிட முடியும் என்று மாடல்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

தற்போது நிகழ்ச்சிகள் நடத்தாத ஆனால், சட்டப்பூர்வ வயதுடைய மாடல்களின் பழைய கணக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக, "மீள்சுழற்சி" செய்து, அவற்றை 18 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளுக்குக் கொடுப்பது சுலபமான வழி என்று அவர்கள் கூறுகிறார்கள்.

17 வயதாக இருந்தபோது Chaturbate மற்றும் StripChat இரண்டிலும் மீள்சுழற்சி செய்த கணக்கை வைத்து வேலை செய்ததாக இசபெல்லா கூறுகிறார்.

"நான் 18 வயது ஆகாதவள் என்பதால் எந்த பிரச்னையும் இல்லை என்று ஸ்டுடியோ உரிமையாளர் கூறினார்," என்று சொல்லும் இசபெல்லாவுக்கு தற்போது 18 வயதாகிவிட்டது. "வேறொரு பெண்ணின் கணக்கைப் பயன்படுத்தி, அந்த அடையாளத்தின் கீழ் வேலை செய்யத் தொடங்கினேன்" என்று அவர் சொல்கிறார்.

பிபிசியிடம் பேசிய மற்ற மாடல்கள், தங்களுக்கு ஸ்டுடியோக்கள் போலி ஐடிகள் வழங்கியதாகக் கூறினார்கள். போலி ஐடியை பயன்படுத்தி 17 வயதிலேயே, தான் போங்கா கேம்ஸ் தளத்தில் தோன்றத் தொடங்கியதாக கெய்னி என்ற இளம்பெண் கூறுகிறார்.

கொலம்பியா, போங்கா கேம்ஸ் பிரதிநிதி

படக்குறிப்பு,கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, பணி நிலைமைகளை சரிபார்க்க ஸ்டுடியோக்களுக்குச் செல்வதாகக் கூறுகிறார்

பிபிசியிடம் பேசிய கொலம்பியாவில் உள்ள போங்கா கேம்ஸ் பிரதிநிதியான மில்லி அச்சின்டே, 18 வயதுக்குட்பட்டவர்களை நிகழ்ச்சி நடத்த தாங்கள் அனுமதிப்பதில்லை என்றும், இதுபோன்ற விதிமுறைகளை மீறும் கணக்குகளை மூடுவதாகவும் கூறினார்.

இந்தத் தளம், ஐடிகளை சரிபார்க்கிறது என்று கூறுகிறார். மேலும், "ஒரு மாடல் எங்களைத் தொடர்பு கொண்டு, குறிப்பிட்ட ஸ்டுடியோவை விட்டு வெளியேறியதைத் தெரிவித்தால், அவர்களின் கணக்கை மூடுவதற்கான கடவுச்சொல்லை நாங்கள் அவர்களுக்கு வழங்குகிறோம்" என்றும் அவர் கூறினார்.

ஒரு அறிக்கையில், போலி ஐடிகளைப் பயன்படுத்துவதை "முற்றிலும்" நிறுத்தியுள்ளதாக தெரிவித்த Chaturbate, அரசாங்கத்தால் வழங்கப்பட்ட புகைப்பட ஐடிகளுக்கு அருகில் மாடல்கள் நின்று புகைப்படங்களை அவ்வப்போது எடுத்து சமர்ப்பிக்க வேண்டும் என்றும், அவை டிஜிட்டல் முறையிலும், வழக்கமான முறையிலும் சரிபார்க்கப்படும் என தெரிவித்துள்ளது.

"அதிகபட்சம் பத்துக்கும் குறைவான ஒளிபரப்பாளர்களுக்கு ஒரு மதிப்பாய்வாளர்" என்ற அளவில் இருப்பதாகவும், கணக்குகளை மீள்சுழற்சி செய்யும் எந்தவொரு முயற்சியும் "தோல்வியடையும்" என்றும், "ஒவ்வொரு ஒளிபரப்பும் தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்டு சரிபார்க்கப்படுவதால்" வயது சரிபார்ப்பு செயல்முறை தொடர்கிறது என்றும் அது கூறியது.

ஸ்ட்ரிப்சாட் வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் "18 வயதுக்கும் குறைவான மாடல்கள் தொடர்பான விவகாரத்தில் பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை" கொண்டிருப்பதாகவும், கலைஞர்கள் "முழுமையான வயது சரிபார்ப்பு செயல்முறைக்கு உட்படுத்தப்பட வேண்டும்" என்றும் கூறியுள்ளது.

மேலும் "மாடல்களின் அடையாளங்களைச் சரிபார்க்க" அதன் உள்ளக மதிப்பீட்டுக் குழு, மூன்றாம் தரப்பு சரிபார்ப்பு சேவைகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் ஸ்ட்ரிப்சாட் கூறியது.

மீள்சுழற்சி செய்யப்பட்ட கணக்குகளை அதன் தளத்தில் பயன்படுத்த முடியாது என்றும், அதன் விதிகளில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்கள் அனைத்தும், கணக்கு வைத்திருப்பவரின் ஒவ்வொரு ஸ்ட்ரீமிலும் இருக்க வேண்டும் என்றும் அது கூறியது. "எனவே, ஒரு மாடல், சுயாதீனமாக வேலை செய்வதற்காக புதிய கணக்கிற்கு மாறினால், அவர்களுடன் இணைக்கப்பட்ட அசல் கணக்கு செயலற்றதாகவும், ஸ்டுடியோவால் பயன்படுத்த முடியாததாகவும் மாறும்" என்று ஸ்ட்ரிப்சாட் கூறுகிறது.

இந்த விவகாரத்தில் லைவ்ஜாஸ்மின் தளத்தின் கருத்தை கேட்டறிய விரும்பிய பிபிசியின் கோரிக்கைகளுக்கு பதிலேதும் கிடைக்கவில்லை.

வெப்கேம் மாடல், ஸ்ட்ரீமிங்

படக்குறிப்பு,கொலம்பிய வெப்கேம் மாடல், கெய்னி ஸ்ட்ரீமிங்கைத் தொடங்கத் தயாராகிறார்

இளமையாக தோன்றுபவர்களையே பார்வையாளர்களுக்குப் பிடிக்கும்

20 வயதாகும் கெய்னி, மெடலினில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் இருந்து வேலை செய்கிறார். இவர், பெரிய சர்வதேச தளங்களுக்குச் செல்லும் பாதையை வழங்கும் மற்றொரு ஸ்டுடியோ வழியாக ஸ்ட்ரீமிங் செய்கிறார்.

ரிங் லைட்டுகள், ஒரு கேமரா, ஒரு பெரிய திரை என உயர் தொழில்நுட்ப உபகரணங்கள் இல்லையென்றால், கெய்னியின் அறை, ஒரு குழந்தையின் அறையாகவே தோன்றக்கூடும். சுமார் ஒரு டஜன் ஸ்டஃப்டு விலங்குகள், இளஞ்சிவப்பு யூனிகார்ன்கள் மற்றும் டெடி பியர்ஸ் அவரது படுக்கையறையில் நிறைந்துள்ளன.

"மாடல், மிகவும் இளமையாகத் தெரிந்தால் பார்வையாளர்களுக்கு மிகவும் பிடிக்கும்" என்று அவர் கூறுகிறார்.

"சில நேரங்களில் அதுவே பிரச்னையாகவும் மாறிவிடுகிறது என்று நினைக்கிறேன். சில வாடிக்கையாளர்கள் குழந்தையைப் போல நடிக்கச் சொல்கிறார்கள், ஆனால் அது சரியல்ல" என்கிறார் அவர்.

தனது பெற்றோர் விவாகரத்து செய்ய முடிவு செய்த பிறகு, குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவுவதற்காகவே இந்தத் தொழிலில் தான் இறங்கியதாக அவர் கூறுகிறார்.

அவள் என்ன தொழில் செய்கிறார் என்பது தன்னுடைய தந்தைக்குத் தெரியும் என்று கூறும் கெய்னி, அவர் தனக்கு ஆதரவாக இருப்பதாகவும் கூறுகிறார்.

இந்தத் தொழிலில் மிகவும் இளம் வயதிலேயே (17 வயதில்) தான் ஈடுபடுத்தப்பட்டதாக கெய்னி கருதினாலும், அவர் தனது முன்னாள் முதலாளிகளை விமர்சிக்கவில்லை.

தற்போது மாதத்திற்கு சுமார் $2,000 (£1,500) சம்பாதிக்கும் கெய்னி, தனது முன்னாள் முதலாளி, வேலையில் சேர தனக்கு உதவியதாகவே நினைக்கிறார். கொலம்பியாவில் குறைந்தபட்ச மாதாந்திர சம்பளம் சுமார் $300 (£225) என்ற நிலையில், இந்தத் தொகை மிக அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

"இந்த வேலையின் மூலம், என்னுடைய அம்மா, அப்பா, சகோதரி என குடும்பம் முழுவதற்கும் உதவுகிறேன்," என்று அவர் கூறுகிறார்.

இதேக் கண்ணோட்டத்தையே ஸ்டுடியோக்களும் எதிரொலிக்கின்றன. அவற்றில் சில, தங்கள் கலைஞர்களை நன்றாக கவனித்துக்கொள்வதை நிரூபிக்க ஆர்வத்துடன் செயல்படுகின்றன.

மிகப்பெரிய ஸ்டுடியோக்களில் ஒன்றான ஏ.ஜே. ஸ்டுடியோஸை நாங்கள் பார்வையிட்டோம், அங்கு மாடல்களின் மன ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக உளவியலாளர் ஒருவர் பணியமர்த்தப்பட்டிருந்தார். அங்கு ஒரு ஸ்பாவும் இருந்தது. அதில், பெடிக்யூர், மசாஜ், போடாக்ஸ் மற்றும் லிப் ஃபில்லர்கள் "தள்ளுபடி" விலையில் கொடுக்கப்பட்டன. அத்துடன் அதிக வருமான ஈட்டும் அல்லது சக மாடல்களை ஆதரிக்கும் பணியாளர்கள் மற்றும் நன்றாக ஒத்துழைப்பவர்களுக்கு "மாதத்தின் சிறந்த ஊழியர்கள்" என்ற பாராட்டு பெற்றவர்களுக்கும் இந்த ஸ்பாவில் உள்ள பொருட்கள் பரிசாக வழங்கப்பட்டன.

கழிப்பறைக்கு சென்றால் அபராதம்

ஆனால் நாட்டின் அதிபர் சுட்டிக்காட்டியுள்ளபடி, மாடல்கள் அனைவரும் சரியாக நடத்தப்படுவதில்லை அல்லது நல்ல வருமானம் ஈட்டுவதில்லை.

மேலும், அவர் அறிமுகப்படுத்தும் புதிய தொழிலாளர் சட்டம் கடுமையான விதிமுறைகளை அமல்படுத்துமா என்பதைப் பார்க்க தொழில்துறை காத்திருக்கிறது.

ஸ்ட்ரீமிங் தளங்கள் பொதுவாக பார்வையாளர்கள் செலுத்தும் கட்டணத்தில் 50% எடுத்துக்கொள்கின்றன என்றும், ஸ்டுடியோக்கள் 20-30% எடுத்துக்கொள்கின்றன என்றும், எஞ்சியத் தொகையே மாடல்களுக்கு கிடைப்பதாக மாடல்களும் ஸ்டுடியோக்களும் பிபிசியிடம் தெரிவித்தனர்.

அதாவது ஒரு நிகழ்ச்சியில் 100 டாலர்கள் கிடைத்தால் மாடலுக்கு பொதுவாக 20 முதல் 30 டாலர் வரை கிடைக்கும். நேர்மையற்ற ஸ்டுடியோக்கள் பெரும்பாலும் அதிகமாக வருமானத்தை எடுத்துக்கொள்வதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

எட்டு மணிநேரம் வரையிலான அமர்வுகளில் பணியாற்றி, வெறும் 5 டாலர் வரை மட்டுமே சம்பாதித்த அனுபவங்களும் இருப்பதாக சில மாடல்கள் கூறுகிறார்கள், ஒரு நிகழ்ச்சிக்கு அதிக பார்வையாளர்கள் இல்லையென்றால் இதுபோல் நிகழலாம்.

இடைவேளை இல்லாமல் 18 மணி நேரம் வரை ஸ்ட்ரீமிங் செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதாக சொல்லும் சில மாடல்கள், சாப்பிடவோ அல்லது கழிப்பறைக்குச் செல்வதற்காக ஸ்ட்ரீமிங் செய்வதை இடைநிறுத்தியதற்காக அபராதம் விதிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள்.

இந்தக் கூற்றுகளை, 2024 டிசம்பரில் வெளியிடப்பட்ட மனித உரிமைகள் கண்காணிப்பக பிரசாரக் குழுவின் அறிக்கை ஆமோதிக்கிறது. மூட்டைப் பூச்சிகள் மற்றும் கரப்பான் பூச்சிகள் நிறைந்த, மிகவும் சிறிய மற்றும் அழுக்கான அறைகளில் ஸ்ட்ரீமிங் செய்யவும், பாலியல் செயல்களைச் செய்ய கட்டாயப்படுத்தப்படும் வேதனையான மற்றும் இழிவான நிலை இருப்பதைக் கண்டறிந்ததாக, பிபிசிக்காக இந்தக் கதை குறித்து கூடுதல் ஆராய்ச்சி செய்த எழுத்தாளர் எரின் கில்பிரைட் கூறுகிறார்.

ஸ்டுடியோ

பட மூலாதாரம்,JORGE CALLE / BBC

படக்குறிப்பு,தான் வேலை செய்த ஒரு ஸ்டுடியோ, தான் விரும்பாத பாலியல் செயல்களைச் செய்ய அழுத்தம் கொடுத்ததாக சோஃபி கூறுகிறார்

மெடலினைச் சேர்ந்த சோஃபி, இரண்டு குழந்தைகளுக்குத் தாய். 26 வயதான அவர், இரவு விடுதி ஒன்றில் பணியாற்றி வந்தார், ஆனால் வாடிக்கையாளர்களின் தொடர் அவமதிப்புகளால் சலித்துபோய், வெப்கேம் மாடலிங் துறையில் அவர் இறங்கிவிட்டார்.

தான் பணிபுரிந்த ஒரு ஸ்டுடியோ, வலிமிகுந்த மற்றும் இழிவான பாலியல் செயல்களைச் செய்யவும், அங்கு பணிபுரிந்த மூன்று பெண்களுடன் சேர்ந்து நடிக்கவும் அழுத்தம் கொடுத்தது என்று சொல்கிறார்.

வாடிக்கையாளர்களின் விருப்பக் கோரிக்கைகளை, மாடல்களிடம் கொண்டு செல்லும் இடைத்தரகர்களாகச் செயல்பட பணியமர்த்தப்பட்ட ஸ்டுடியோ கண்காணிப்பாளர்கள், தவறான கோரிக்கைகளுக்கும் ஒப்புக் கொண்டதாகவும் அவர் சொல்கிறார்.

தன்னால் அப்படி செய்யமுடியாது என்று ஸ்டுடியோவிடம் சொன்னாலும், "உனக்கு வேறு வழியில்லை என்று அவர்கள் சொன்னார்கள்" என சோஃபி கூறுகிறார்.

"இறுதியில், நான் அவர்கள் சொன்னதை செய்ய வேண்டியிருந்தது, இல்லையெனில் அவர்கள் என் கணக்கை முடக்கிவிடுவார்கள்," என்று சோஃபி சொல்கிறார்.

விருப்பம் இல்லாவிட்டாலும் வெப்கேம் ஸ்டுடியோக்களில் தொடர்ந்து வேலை செய்யும் சோஃபி, கொலம்பியாவில் கிடைக்கும் சாதாரண சம்பளம் தனக்கும் தனது இரண்டு குழந்தைக்கும் போதுமானதாக இருக்காது என்று கூறுகிறார். சட்டக் கல்வி பயில்வதற்காக சோஃபி பணத்தை சேமித்து வருகிறார்.

செக்ஸ்கேம்

படக்குறிப்பு,செக்ஸ்கேம் துறையில் வேலை செய்து குழந்தைகளை வளர்ப்பதாகவும், படிப்புக்காக சேமிப்பதாகவும் சோஃபி கூறுகிறார்

இதுபோன்ற பிரச்னைகளை எதிர்கொள்வது கொலம்பியா மட்டுமல்ல என்கிறார் எரின் கில்பிரைட்.

பல்கேரியா, கனடா, செக் குடியரசு, ஹங்கேரி, இந்தியா, ருமேனியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, உக்ரைன், அமெரிக்கா ஆகிய 10 நாடுகளில் இருக்கும் ஸ்டுடியோக்களிலிருந்து பெரிய நான்கு ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ளடக்கங்களை ஒளிபரப்புவதை அவர் கண்டறிந்தார்.

மேலும், ஸ்ட்ரீமிங் தளங்களில் "மனித உரிமை துஷ்பிரயோகங்களை எளிதாக்கும் அல்லது அதிகப்படுத்தும் கொள்கைகள் மற்றும் நெறிமுறைகளில் உள்ள இடைவெளிகளை" அடையாளம் கண்டதாகவும் அவர் கூறுகிறார்.

ஸ்ட்ரீம் செய்யப்படும் ஸ்டுடியோக்களின் நிலைமைகள் குறித்து நாங்கள் ஸ்ட்ரீமிங் தளங்களிடம் கேட்டோம். போங்கா கேம்ஸைச் சேர்ந்த மில்லி அச்சின்டே, "மாடல்களுக்கு பணம் வழங்கப்படுவதையும், அறைகள் சுத்தமாக இருப்பதையும், அத்துமீறப்படாமல் இருப்பதையும் உறுதி செய்யும்" எட்டு பெண்கள் குழுவில் தானும் இருப்பதாகக் கூறினார். இந்தக் குழு, கொலம்பியாவில் உள்ள சில ஸ்டுடியோக்களுக்குச் சென்று அங்கிருக்கும் நிலைமைகளை மதிப்பிடும்.

StripChat மற்றும் Chaturbate நிறுவனங்கள், அவர்கள் கலைஞர்களின் நேரடி முதலாளிகள் அல்ல என்பதால், ஸ்டுடியோக்களுக்கும் மாடல்களுக்கும் இடையிலான விதிமுறைகளில் தாங்கள் தலையிடுவதில்லை என்றும் கூறின.

ஆனால் பாதுகாப்பான பணிச்சூழலுக்கு உறுதிபூண்டுள்ளதாக அந்த நிறுவனங்கள் பிபிசியிடம் கூறின. ஸ்டுடியோக்கள் "மரியாதைக்குரிய மற்றும் வசதியான பணி நிலைமைகளை" உறுதி செய்யும் என்று எதிர்பார்ப்பதாகவும் StripChat தெரிவித்துள்ளது.

ஒரு செயலைச் செய்ய மாடல் கட்டாயப்படுத்தப்படுவதாகவோ அல்லது அச்சுறுத்தப்படுவதாகவோ நம்பினால், அதில் தலையிட குழுக்கள் இருப்பதாக போங்கா கேம்ஸ், StripChat மற்றும் Chaturbate ஆகிய நிறுவனங்கள் தெரிவித்தன.

'அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்'

வெம்கேமிங், படிப்பு, குழந்தை பராமரிப்பு என அனைத்து வேலைகளுக்கும் ஈடுகொடுக்க, அதிகாலை 05:00 மணிக்கே கண் விழிக்க வேண்டியிருந்தது. இந்த வேலைக்கு வந்த இரண்டு மாதங்களுக்குப் பிறகு முதல் சம்பளத்தைப் பெற இசபெல்லா ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார்.

ஆனால் அவருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. கிடைத்தத் தொகையில் ஸ்ட்ரீமிங் தளம் மற்றும் ஸ்டுடியோ தங்கள் பங்கைக் கழித்துக் கொண்ட பிறகு, இசபெல்லாவுக்கு வெறும் 174,000 கொலம்பிய பெசோக்கள் (42 டாலர்கள்) மட்டுமே கொடுக்கப்பட்டதாக கூறுகிறார்.

இது தான் எதிர்பார்த்ததை விட மிகக் குறைவானது என்று சொல்லும் இசபெல்லா, ஒப்புக்கொண்டதை விட ஸ்டுடியோ தனக்கு மிகக் குறைந்த சதவீதத்தையே கொடுத்ததாகவும், தனது வருவாயில் பெரும்பகுதியை ஸ்டுடியோ திருடிவிட்டதாகவும் அவர் நம்புகிறார்.

அந்தப் பணம் மிகக் குறைவு என்று கூறும் அவர், கிடைத்த அந்தப் பணத்தில் பால் மற்றும் டயப்பர்கள் வாங்கியதாக சொல்கிறார். "அவர்கள் என்னை ஏமாற்றிவிட்டார்கள்" என்று கூறுகிறார்.

தற்போதும் பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் இசபெல்லா, வெப்கேம் மாடலாக சில மாதங்கள் மட்டுமே பணியாற்றிய பிறகு, அதிலிருந்து விலகிவிட்டார்.

இளம் வயதில் தன்னை இப்படி நடத்தியதால் மன உளைச்சலுக்கு உள்ளான இசபெல்லா, அதிர்ந்துவிட்டார். தொடர்ந்து அழுது கொண்டே இருந்த மகளின் மனநிலையை சரிபடுத்த, அவருடைய அம்மா, ஒரு உளவியலாளரிடம் அழைத்துச் சென்றார்.

இசபெல்லாவும், அவர் பணியாற்றிய ஸ்டுடியோவின் வேறு ஆறு முன்னாள் ஊழியர்களும் சேர்ந்து அரசு வழக்கறிஞர் அலுவலகத்தில் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளனர். சிறார்களைச் சுரண்டுதல், தொழிலாளர் சுரண்டல் மற்றும் பொருளாதார துஷ்பிரயோகம் செய்ததாக ஸ்டுடியோ மீது அனைவரும் கூட்டாக குற்றம் சாட்டியுள்ளனர்.

"18க்கும் குறைவான வயதில் நான் இருந்தபோது எடுக்கப்பட்ட எனது வீடியோக்கள் தற்போதும் இணையத்தில் உள்ளன," என்று அவர் கூறுகிறார், அவற்றை அகற்ற மேற்கொள்ளும் முயற்சிகள் தோல்வியடையும்போது மிகவும் சக்தியற்றவளாக உணர்வதாக அவர் கூறுகிறார்.

"இது என்னை மிகவும் பாதித்துள்ளது, இனி அதைப் பற்றி நினைக்கவே எனக்கு விருப்பமில்லை" என்று இசபெல்லா கூறுகிறார்.

வூடி மோரிஸின் கூடுதல் செய்தியுடன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cr79288vlz1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.