Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

02 JUL, 2025 | 02:59 PM

image

திபெத்தின் ஆன்மிக தலைவர் தலாய்லாமா தான் மரணத்திற்கு பின்னர் மறுபிறவியெடுப்பேன் என தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா தனது 90வயதை குறிக்குகமாக இடம்பெற்ற நிகழ்வின்போது உரையாற்றுகையில் இதனை தெரிவித்துள்ளார்.

தனது வாரிசை கண்டுபிடித்து கடந்தகாலபௌத்த மரபுகளின்படி அங்கீகரிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலாய்லாமா என்ற கட்டமைப்பு தொடரும் என அமைதிக்கான நோபல்பரிசை வென்ற திபெத்தின் ஆன்மீக தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கான செய்தியில் தலாய்லாமா தனக்கு பின்னர் ஒருவரை கண்டுபிடித்து அவரை அங்கீகரிக்கும் பொறுப்பு 2015 இல் தான் உருவாக்கிய அமைப்பிற்கே உரியது என குறிப்பிட்டுள்ளார்.

வேறு எவருக்கும் இந்த விடயத்தில் தலையிட உரிமையில்லை என குறிப்பிட்டுள்ள அவர் கடந்தகால பாரம்பரியங்களிற்கு ஏற்ப எதிர்கால தலாய்லாமாவை தேடவேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சீனா தலாய்லாமாவிற்கு பின்னர் யார் என்பதை சீன அரசாங்கம் அனுமதிக்கவேண்டும் என தெரிவித்துள்ளார்.

அடுத்த தலாய் லாமா திபெத்திலிருந்து வர வேண்டிய அவசியமில்லை என்று பின்னர் சீன அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

தலாய்லாமாவின் இந்த முடிவு சீனாவை சீற்றத்திற்குள்ளாக்கும் என கருத்துக்கள் வெளியாகியுள்ளன. 

ஏனெனில் அடுத்த மதத் தலைவரை அங்கீகரிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உள்ளது என்று சீனா பலமுறை தெரிவித்துள்ளது.

மறுபிறவி எடுத்த நபர் சீனாவின் திபெத்திய பகுதிகளில் காணப்பட வேண்டும் என்றும் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதில் கம்யூனிஸ்ட் அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும் என்றும்  சீனா வலியுறுத்துகிறது.

திபெத்திய மதத் தலைமை மூத்த லாமாக்களுடன் கலந்தாலோசித்தல் மற்றும் பாரம்பரிய ஜோசியம் மூலம் தனது மறுபிறவியை அடையாளம் காணும் பண்டைய செயல்முறையை மேற்கொள்ளும் என்பதை பகிரங்கமாக மீண்டும் உறுதிப்படுத்துவதன் மூலம் தலாய் லாமா ஆன்மீக நியாயத்தன்மையையும் திபெத்திய சுயாட்சியையும் வலுப்படுத்த முயன்றுள்ளார்.

அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பதில் ஒரு தீர்க்கமான பங்கை வகிக்க விரும்புவதாக பெய்ஜிங் நீண்ட காலமாக சமிக்ஞை செய்து வருகிறது .

இதன்காரணமாக சீனாவுடன் இணங்கிபோகக்கூடிய ஆன்மீக தலைவர் குறித்து திபெத்தில் அச்சம் காணப்படுகின்றது.

https://www.virakesari.lk/article/219019

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமா தேர்வு எப்படி நடக்கிறது? - 600 ஆண்டுகளாக தொடரும் 'ஆன்மீக மரபு'

திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா 28 ஜூலை 2022 அன்று ஒரு போதனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய போது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திபெத்திய ஆன்மீகத் தலைவர் தலாய் லாமா

கட்டுரை தகவல்

  • சுவாமிநாதன் நடராஜன்

  • பிபிசி உலக சேவை

  • 2 ஜூலை 2025

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

தலாய் லாமா தனது 90வது பிறந்தநாளை ஜூலை 6ஆம் தேதி கொண்டாடுகிறார்.

திபெத்திய பௌத்தத்தின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாமல், சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவும் பலர் அவரைப் பார்க்கிறார்கள்.

ஆனால் ஒவ்வொரு ஆண்டு கடந்து செல்லும்போதும், அடுத்த தலாய் லாமாவாக யார் வருவார்கள் என்ற சர்ச்சைக்குரிய கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.

அடுத்த தலாய் லாமாவைத் தேர்ந்தெடுப்பது, மறுபிறவியை அடிப்படையாகக் கொண்ட ஒரு ஆன்மீக செயல்முறை என்று அவரைப் பின்பற்றும் மக்கள் நம்புகிறார்கள்.

தலாய் லாமா என்றால் யார் ?

திபெத்தின் ஆன்மீகத் தலைவராகவும், திபெத்திய பௌத்தத்தின் மிகச் சிறந்த முகமாகவும், தலாய் லாமா அவரைப் பின்தொடர்பவர்களால் பார்க்கப்படுகிறார்.

அவரை, திபெத்தின் பாதுகாவலராகக் கருதப்படும் தெய்வமான அவலோகிதேஸ்வரா (அல்லது சென்ரெசிக்) என்பவரின் மனித உருவாகவே அவர்கள் பார்க்கிறார்கள்.

தலாய் லாமாவின் பாத்திரம், பல நூற்றாண்டுகளாக மறுபிறவி என்ற நம்பிக்கையின் அடிப்படையில் நிரப்பப்பட்ட ஒன்று.

காரணம்,யாராவது இறந்தால், அவர்கள் மீண்டும் பிறப்பார்கள் என்பது பௌத்த நம்பிக்கையாக உள்ளது.

தற்போதைய தலாய் லாமா 1935 ஆம் ஆண்டு ஜூலை 6ஆம் தேதி, வடகிழக்கு திபெத்தில் உள்ள ஒரு ஏழை விவசாயக் குடும்பத்தில் பிறந்தார்.

அவருக்கு இரண்டு வயது இருக்கும் போது, அவர் 13வது தலாய் லாமாவின் மறுபிறவியாக அங்கீகரிக்கப்பட்டார்

"தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்" என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா.

முனைவர் துப்டன் ஜின்பா ஒரு முன்னாள் துறவி. அவர் திபெத்திய பௌத்தத்தில் மிக உயர்ந்த இறையியல் தகுதியை அடைந்துள்ளார்.

மேலும் அவர் 1985 முதல் தலாய் லாமாவின் அதிகாரப்பூர்வ ஆங்கில மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றி வருகிறார்.

எல்லா தலாய் லாமாக்களும் ஒரே ஆன்மாவின் தொடர்ச்சியாக இருக்கிறார்கள் என்பது பாரம்பரிய நம்பிக்கையாக இருந்தாலும் , தற்போதைய தலாய் லாமா, இந்த நம்பிக்கையை அப்படியே உண்மையாக எடுத்துக்கொள்வது போலத் தெரியவில்லை என்று முனைவர் துப்டன் கூறுகிறார்.

"14 பேரும் ஒரே நபரின் மறுபிறவி என்று தலாய் லாமா நம்புகிறார் என்று சொல்ல முடியாது, சில சந்தர்ப்பங்களில், அவரே இதை நேரடியாக நம்பவில்லை என்று கூறியதை நான் கேட்டிருக்கிறேன்," என்று பிபிசியிடம் கூறிய ஜின்பா, "ஆனால் அந்த பரம்பரையில் உள்ள ஒவ்வொருவருக்கும், தலாய் லாமா மரபுடன் ஒரு தனித்துவமான ஆன்மீக தொடர்பு இருக்கிறது என்று அனைவரும் நம்புகிறார்கள்," என்றும் கூறினார்.

பௌத்தம் 2,500 ஆண்டுகளுக்கும் மேலான ஒரு பழமையான மதமாக இருக்கிறது. ஆனால் தலாய் லாமா என்ற பதவியும், அதனைச் சுற்றியுள்ள அமைப்பும் சமீபத்தில் உருவானதுதான்.

"முதல் தலாய் லாமாவாக 1391-ல் பிறந்த கெதுன் ட்ருப் என்ற நபர் என்று அங்கீகரிக்கப்பட்டார். ஆனால், ஒரு பௌத்த ஆசிரியர் மறுபிறவி எடுத்து, தங்கள் முன்னோடியின் சொத்துகளையும், அவரைப் பின்பற்றுவபர்களையும் மரபுரிமையாகப் பெறுவார் என்ற சிந்தனை அதைவிட பழமையானது," என்கிறார் அபெர்டீன் பல்கலைக்கழகத்தின் இமயமலை ஆராய்ச்சிக்கான ஸ்காட்டிஷ் மையத்தின் இயக்குனர் பேராசிரியர் மார்ட்டின் ஏ மில்ஸ்.

"அந்த நம்பிக்கை குறைந்தபட்சம் 300 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது" என்று பேராசிரியர் மார்ட்டின் ஏ. மில்ஸ் கூறுகிறார்.

தலாய் லாமா எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

முனைவர் துப்டன் ஜின்பா

பட மூலாதாரம்,CHRISTOPHER MICHEL

படக்குறிப்பு, 'தலாய் லாமாவின் அதே ஆன்மா மீண்டும் மீண்டும் பிறக்கிறது என்று திபெத்தியர்கள் நம்புகிறார்கள்' என்கிறார் முனைவர் துப்டன் ஜின்பா.

"தலாய் லாமாவைத் தேர்வு செயல்முறை மிகவும் கடுமையானது, சிக்கலானது மற்றும் விரிவானது" என்று ஜின்பா விளக்குகிறார்.

ஒரு தலாய் லாமாவை அடையாளம் காணும் செயல்முறைக்கு பல ஆண்டுகள் ஆகலாம். உதாரணமாக, 14வது தலாய் லாமாவை அடையாளம் காண நான்கு ஆண்டுகள் எடுத்தது.

முந்தைய தலாய் லாமா இறந்த பிறகு, அந்த நேரத்தில் பிறந்திருக்கக்கூடிய ஒரு சிறுவனைத் தேடுவதற்காக உயர்மட்ட துறவிகள் தங்களது தேடலைத் தொடங்குகிறார்கள்.

இந்த தேடல் பல துப்புகள் மற்றும் ஆன்மீக அறிகுறிகளால் வழிநடத்தப்படுகிறது.

துறவிகளில் ஒருவருக்கு வரும் கனவில் தலாய் லாமாவின் மறுபிறவியாக இருக்கக்கூடிய சிறுவனைப் பற்றிய தகவல்களைப் பெறலாம்.

முந்தைய தலாய் லாமாவின் இறுதிச் சடங்கில் எழும் புகையின் திசையும், மறுபிறவி எங்கு இருக்கக்கூடும் என்பதைச் சுட்டிக்காட்டும் ஒரு அறிகுறியாகக் கருதப்படுகிறது.

சிறுவனின் இருப்பிடம் கண்டறியப்பட்டவுடன், அவனிடம் பல பொருட்கள் காட்டப்படுகின்றன.

அவற்றில் சில, முந்தைய தலாய் லாமாவுக்குச் சொந்தமானவையாக இருக்கும். அந்த சிறுவன் அவற்றை சரியாக அடையாளம் காண்பதால், துறவிகள் அதை மறுபிறவியின் உறுதியான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.

உயர்மட்ட துறவிகள் திருப்தி அடைந்தவுடன், சிறுவன் தேர்ந்தெடுக்கப்பட்டு, பல ஆண்டுகளாக மதப் பயிற்சி மற்றும் இறையியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படுவான்.

ஒருவர் மங்கோலியாவிலும் மற்றொருவர் வடகிழக்கு இந்தியாவிலும் என இரண்டு தலாய் லாமாக்கள் மட்டுமே திபெத்துக்கு வெளியே பிறந்துள்ளனர்.

தற்போதைய தலாய் லாமா, தனக்கு 90 வயது ஆகும் இந்த மாதத்தில், தனது வாரிசு குறித்து மேலும் தெளிவுபடுத்துவதாக உறுதியளித்துள்ளார்.

சீனக் கட்டுப்பாடு

திபெத்திய பெண்கள் சங்கத்தின் (மத்திய) உறுப்பினர்கள் புது தில்லியில் நடந்த போராட்டத்தில் பஞ்சன் லாமாவின் படத்தைப் பிடித்துள்ளனர்.

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, திபெத்திய பௌத்தத்தில் இரண்டாவது முக்கியமான ஆன்மீகத் தலைவரான பஞ்சன் லாமாவாக, தலாய் லாமா 1995-ல் ஒரு ஆறு வயது சிறுவனை தேர்வு செய்தார். அந்த சிறுவன் சில நாட்களில் காணாமல் போனார். அவரையும் அவரது குடும்பத்தினரையும் சீன அரசு கடத்தியதாகக் கூறப்படுகிறது.

1950-ஆம் ஆண்டு, திபெத்தின் மீது உரிமை கோர சீனா ஆயிரக்கணக்கான படைகளை அனுப்பியது. 1959-ஆம் ஆண்டு, சீனாவுக்கு எதிரான எழுச்சி தோல்வியடைந்த பிறகு, தலாய் லாமா திபெத்திலிருந்து தப்பி இந்தியாவுக்கு வந்தார். அங்கு அவர் திபெத்தியர்களுக்காக ஒரு நாடு கடந்த அரசாங்கத்தை அமைத்தார்.

தலாய் லாமா திபெத்திய அரசாங்கத்தின் தலைமை பதவியில் இருந்து விலகியிருந்தாலும், அவர் இன்னும் சீன ஆட்சிக்கு எதிரான எதிர்ப்பின் முகமாகவே பார்க்கப்படுகிறார்.

திபெத்தில் அல்லாமல் வேறு நாட்டில் மறுபிறவி எடுப்பேன் என்ற தலாய் லாமாவின் கூற்று, சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் நிலவும் அரசியல் சூழ்நிலைக்கு எதிரான ஒரு நடைமுறை தீர்வாகவே பார்க்கப்படுகிறது.

மதத்தின் போர்வையில் சீனாவுக்கு எதிரான பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார் எனக் கூறி, திபெத்திலிருந்து வெளியேறிய அரசியல் தலைவர் என்று தலாய் லாமாவை சீன அரசு நிராகரிக்கிறது.

2007 ஆம் ஆண்டில், சீன அரசு 'திபெத்திய பௌத்தத்தில் வாழும் புத்தர்களின் மறுபிறவி மேலாண்மை நடவடிக்கைகள்' என்ற பெயரில் ஒரு ஆணையை வெளியிட்டது. இந்த ஆணை, அடுத்த தலாய் லாமாவை தேர்வு செய்வதை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டது எனக் கருதப்பட்டது.

திபெத்தின் மீதான அழுத்தம்

தலாய் லாமாவின் பாரம்பரிய இடமான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனைக்கு முன்னால் ஒரு சீனக் கொடி பறக்கிறது

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தலாய் லாமாவின் பாரம்பரிய இடமான லாசாவில் உள்ள பொட்டாலா அரண்மனை சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது

சாதாரண திபெத்தியர்கள், வெளிநாட்டு பத்திரிகையாளர்களுடன் பேசினாலோ அல்லது தலாய் லாமாவின் புகைப்படத்தை காட்டினாலோ, சிறையில் அடைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்தியாவைச் சேர்ந்த ஒரு திபெத்திய பிரச்சாரகரின் உதவியுடன், திபெத்தில் வசிக்கும் இரண்டு துறவிகளையும், புத்த மதத்தை பின்பற்றும் ஒருவரையும் பிபிசியால் தொடர்புகொண்டு பேச முடிந்தது.

தலாய் லாமாவின் பிறந்த நாளைக் கொண்டாடுவதைத் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

"என் கிராமத்தில் இரண்டு கூட்டங்கள் நடத்தப்பட்டன. அந்தக் கூட்டங்களில் தலாய் லாமாவை அவமதித்தார்கள், மேலும் அங்கு இருந்த அனைவரையும் கடுமையாக எச்சரித்து, மோசமான விளைவுகள் ஏற்படும் என அச்சுறுத்தினார்கள்," என திபெத்தின் அம்டோ பகுதியில் வசிக்கும் நடுத்தர வயதுடைய ஒருவர் கூறுகிறார். அவர் தனது பெயரை வெளியிட வேண்டாம் என கேட்டுக்கொண்டார்.

அடுத்து வரவுள்ள முக்கிய தினத்தை முன்னிட்டு, சீன போலீசாரும் ராணுவத்தினரும் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் நம்புகிறார்.

"மடத்திலும் அதைச் சுற்றியும் அதிகமான வீரர்கள் இருப்பதை நாங்கள் உணர்ந்தோம்," என்று அவர் கூறுகிறார்.

சீன அரசு கட்டுப்பாடுகளை விதிப்பதால், சிலரால் தலாய் லாமாவுடன் நெருக்கமாக உணர முடியவில்லை என்றும் அவர் நம்புகிறார்.

"பல இளைஞர்கள் தலாய் லாமாவை ஒருபோதும் நேரில் சந்தித்ததில்லை. ஆனால் அதற்கு முரணாக, அவரைப் பற்றிய தகவலை அவர்கள் [சீன] அரசின் பிரச்சார ஆவணங்களிலிருந்து மட்டுமே கேட்கிறார்கள்," என்கிறார் அந்த நபர்.

தொடர்ந்து பேசியபோது, "வயதானவர்களுடன் ஒப்பிடும்போது இளைஞர்களின் நம்பிக்கை பலவீனமானது"என்றும் அவர் குறிப்பிட்டார்.

பல திபெத்திய மடங்கள் தொடர்ந்து சீன அரசின் கண்காணிப்பில் உள்ளன. ஆனால், சிலர் இன்னும் அந்த மதத்துக்கான ஆடைகளை வெளிப்படையாகப் புலப்படும் வகையில் அணிந்து, மத வாழ்க்கையைத் தேர்ந்தெடுக்கிறார்கள்."

'குறைவான புதிய துறவிகள்'

"நான் என் பெற்றோரின் விருப்பப்படி சிறுவயதிலேயே துறவியாக ஆனேன்," என்கிறார் செரிங் (அவரது உண்மைப் பெயர் மாற்றப்பட்டுள்ளது).

46 வயதான இவர் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள செங்டு மாவட்டத்தைச் சேர்ந்தவர். அவர் ஏழு வயதிலேயே துறவியானார்.

சீனா விதித்துள்ள புதிய கட்டுப்பாடுகளின் காரணமாக, மக்கள் துறவியாக மாற 18 வயது வரை காத்திருக்க வேண்டும். இதன் விளைவாக, மடங்களில் துறவிகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

"மடத்தில் புதிய துறவிகள் குறைந்து வருகிறார்கள்," என்று கூறும் அவர்,

"இந்த ஆண்டு, என் மடத்தில் மூன்று புதிய துறவிகள் மட்டுமே வந்துள்ளனர். முந்தைய ஆண்டுகளைப் போலவே, மற்ற கிராமங்கள் மற்றும் நகரங்களில் இருந்து படிக்கவும் வழிபடவும் வரும் குழந்தைகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது" என்றும் குறிப்பிட்டார்.

திபெத்திய கலாச்சார அழிவின் பொருட்டு கிடைத்தது தான் சீன ஆட்சியின் பொருளாதாரப் பலன்கள் என்று செரிங் கூறுகிறார்.

"சிறுவயதில் எனக்கு உணவுக்கே சிரமமாக இருந்தது. மடத்தில் சில நேரங்களில் மோசமான உணவையே உண்ண வேண்டியிருந்தது," என்ற அவர், "பின்னர் வாழ்க்கை எளிதாகியது. போக்குவரத்து வசதிகள் பெரிதும் மேம்பட்டன. கல்வி வளர்ச்சியும் ஏற்பட்டது." எனவும் தெரிவித்தார்.

ஆனால், "திபெத்திய மொழியின் பயன்பாடு நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது போலத் தெரிகிறது" என்றும் அவர் கூறுகிறார்.

அம்டோ நகாபா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு துறவி ஒருவரை நாங்கள் 'கோன்போ கியாப்' என்று அழைக்கிறோம். "நான் நிறைய மாற்றங்களை காண்கிறேன். ஆனால் அதை வளர்ச்சி என்று அழைப்பது கடினம்" என்கிறார் கோன்போ கியாப்.

தொடர்ந்து பேசிய அவர், "எனது புரிதலின் படி, திபெத்திய மொழியும் எழுத்தும் பௌத்த மரபுகள் மற்றும் பழக்கவழக்கத்தால் மட்டுமே நிலைத்திருக்கின்றன என்கிறார்.

அடுத்த தலாய் லாமா

தலாய் லாமா

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, தலாய் லாமா உலகளவில் நன்கு அறியப்பட்ட பொது நபர் மற்றும் 1989 இல் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

தலாய் லாமா பதவியின் 600 ஆண்டுகள் பழமையான ஆன்மீக மரபு தொடர வேண்டும் என்று 14வது தலாய் லாமா உறுதியாகக் கூறுகிறார்.

தனது வாரிசுகளைத் தேர்ந்தெடுப்பதில் சீனா தலையிடுவதைத் தடுக்க, எதிர்காலத்தில் சீன அரசு நியமிக்கும் ஒருவரை நிராகரிக்குமாறு தன்னைப் பின்பற்றுபவர்களிடம் தலாய் லாமா ஏற்கனவே கூறியுள்ளார்.

"மக்கள் அமைதியாக நடந்து கொள்வார்கள். ஏனெனில் அவர்கள் தங்கள் உயிரை இழக்க விரும்பவில்லை. ஆனால், சீன அரசு நியமிக்கும் தலாய் லாமாவை அவர்கள் அங்கீகரிக்க மாட்டார்கள்," என்று முனைவர் ஜின்பா கூறுகிறார்.

"சீனாவால் மக்களை உடல் ரீதியாக கட்டுப்படுத்த முடியும், ஆனால் திபெத்தியர்களின் இதயங்களையும் மனதையும் வெல்ல முடியாது," என்றும் அவர் தெரிவித்தார்.

திபெத்தில் "செர்ஃப்கள் மற்றும் அடிமைகள்" ஒரு பிற்போக்கான இறையாட்சியிலிருந்து விடுவிக்கப்பட்டனர் என்ற கண்ணோட்டத்தை சீனா தொடர்ந்து ஊக்குவிக்க முயற்சிக்கிறது.

அதே நேரத்தில், திபெத்தை நவீனமயமாக்கும் பாதையில் கொண்டு சென்றதாகவும், மக்களின் வாழ்க்கையை பெரிதும் மேம்படுத்தியதாகவும் கூறுகிறது.

ஆனால் தலாய் லாமாவின் ஆதரவாளர்கள், திபெத்திய பௌத்தத்தின் தலைமை சீன அரசின் கட்டுப்பாட்டில் செல்லாமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து செயல்படுவார்கள்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2kxnpgk9zo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

03 JUL, 2025 | 04:02 PM

image

புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை (காடன் போட்ராங் அறக்கட்டளை) தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தார்.

ஆனால், புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்து இந்த அறிவிப்பில் சீன அரசு முரண்பட்டுள்ளதுடன், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வதில் தலையிடும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில்தான், 14-வது தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்த அறிவிப்புக்கு ஆதரவாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பவுத்தருமான கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்த தின விழா வரும் 6-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில், மத்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜுவும், ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

https://www.virakesari.lk/article/219111

  • கருத்துக்கள உறவுகள்

தலாய்லாமாவின் வாரிசு தமது அங்கீகாரத்துக்குள் வரவேண்டும் என சீனா கூறுகின்றது. சீனாவிற்கு வெளியில் உருவாகக்கூடிய வாரிசை தாம் அங்கீகரிக்கோம் என்கிறது சீனா. சீன இறையாண்மை, கலாச்சாரம், பண்பாடு இவற்றுடன் ஒத்திசையக்கூடிய தலாய்லாமாவை கொண்டுவருவார்களா என்பது சந்தேகம்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

“புத்த மதம், திபெத் மக்களுக்கு சேவையாற்ற 130 வயது வரை வாழ விரும்புகிறேன்” - தலாய் லாமா

06 JUL, 2025 | 10:14 AM

image

தர்மசாலா: புத்த மதத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன் என்று தலாய் லாமா தெரிவித்துள்ளார்.

திபெத்தின் புத்த மத தலைவரான தலாய் லாமாவின் 90-வது பிறந்தநாள் நாளை( ஜூலை 6) கொண்டாடப்படவுள்ளது. இதனையொட்டி தர்மசாலாவில் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் 15,000-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய தலாய் லாமா, “அவலோகிதேஸ்வராவின் ஆசிகளை நான் பெற்றதாகவே உணர்கிறேன். இதுவரை நான் எனது பணிகளை சிறப்பாக செய்துள்ளேன். நாம் மேலும் 30 முதல் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழ்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

குழந்தைப் பருவம் முதலே எனக்கு அவலோகிதேஸ்வராவுடன் நெருங்கிய தொடர்பு உள்ளது. பவுத்தத்துக்கும், திபெத் மக்களுக்கும் சேவை செய்வதற்காக 130 வயது வரை நான் உயிர் வாழ வேண்டுமென விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார். தலாய் லாமாவின் அடுத்த வாரிசு குறித்த சர்ச்சைகள் அதிகரித்துள்ள நிலையில், அவரின் இந்தக் கருத்துகள் வெளிவந்துள்ளன.

புதிய தலாய் லாமா சலசலப்பு - திபெத்திய புத்த மதத் தலைவரான 14-வது தலாய் லாமா இந்தியாவில் தஞ்சம் அடைந்து, இமாச்சலில் உள்ள தர்மசாலாவில் வசித்து வருகிறார். அவர் தனது 90-வது பிறந்தநாளை முன்னிட்டு வெளியிட்ட அறிவிப்பில், “எனது மறைவுக்கு பிறகும் தலாய் லாமா மரபு தொடரும். அடுத்த தலாய் லாமாவை அங்கீகரிக்கும் அதிகாரம் காடன் போட்ராங் அறக்கட்டளைக்கு மட்டுமே உள்ளது” என்று கூறியிருந்தார். இதற்கு சீனா எதிர்ப்பு தெரிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறுகையில், “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம்" என தெரிவித்திருந்தார்.

இதன் தொடர்ச்சியாக, மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு , “அடுத்த தலாய் லாமா யார் என்பதை அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பத்தின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவை பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும் நடைமுறை மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதை தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று கூறியிருந்தார்.

மத்திய அமைச்சரான கிரண் ரிஜிஜு-வின் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த சீன வெளியுறவு அமைச்சகம், “உள்நாட்டு விவகாரங்களில் தலையிட திபெத் பிரச்சினையைப் பயன்படுத்துவதை இந்தியா நிறுத்தும் என்று சீனா நம்புகிறது. மேலும், இரு நாடுகளுக்கு இடையேயான உறவின் வளர்ச்சியில் பாதிப்பை ஏற்படுத்துவதை இந்தியா தவிர்க்கும் என்றும் நம்புகிறது” என்று தெரிவித்தது.

https://www.virakesari.lk/article/219274

  • கருத்துக்கள உறவுகள்

NEP1856-001.webp?fit=1024%2C820&ssl=1

நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன்- தலாய் லாமா

பௌத்த மதத்தின் ஆன்மீகத் தலைவரான  தலாய் லாமா,(Dalai Lama) தனது 90வது பிறந்த நாளை நேற்றுக் கொண்டாடினார்.

கடந்த 1935 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 6 ஆம் திகதி திபெத்தில் உள்ள  தக்சேர் கிராமத்தில் பிறந்த தலாய் லாமா, திபெத் மக்களின் ஆன்மீகத் தலைவராக மட்டுமல்லாது திபெத் மக்களின் உரிமைகள், மத சுதந்திரம், மற்றும் உலக அமைதி ஆகியவற்றுக்காக பல ஆண்டுகளாக அமைதிப்பூர்வமாக போராடி வருகிறார். இதற்காக அவர் கடந்த  1989ஆம் ஆண்டு நோபல் அமைதி பரிசு பெற்றார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் அவர் தனது பிறந்த நாள் உரையில் ‘நான் 130 வயதுவரை வாழ ஆசைப்படுகிறேன். மறுபிறப்பும் தொடரும். என் மறுபிறப்பை நிர்ணயிப்பது என் விருப்பத்திற்கேற்ப இருக்கவேண்டும். இதில் சீன அரசு எவ்விதத் தலையீடும் செய்யக்கூடாது’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

சீன அரசு, தலாய் லாமாவின் மறுபிறப்பை சட்டபூர்வமாக தாங்களே நிர்ணயிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றது. ஆனால் தலாய் லாமா, “Gaden Phodrang Trust” ‘ மூலம் தமது மறுபிறப்பை தீர்மானிக்கப்படும் என முன்னதாகவே அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர்இ தலாய் லாமாவுக்கு ‘பாரத் ரத்னா’ விருது வழங்கக்கோரி முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் அதற்கு  ஆதரவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
https://athavannews.com/2025/1438329

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.