Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஈரான்-இசுரேலிய போருக்கான தேவை என்ன?

23 Jul 2025, 6:30 AM

ihhhhh.jpg

பாஸ்கர் செல்வராஜ்

எந்த முகாந்திரமும் இன்றி தான்தோன்றித்தனமாக உலக சட்ட விதிமுறைகளை மதிக்காமல் இன்னொரு நாட்டின் இறையாண்மையை மீறி திடீரென ஈரானின் மீது வான்வழி தாக்குதலில் ஈடுபட்டது இசுரேல். உளவு அமைப்புகள் மூலம் அந்நாட்டுக்குள் ஊடுருவி புரட்சிப் பாதுகாப்புப் படை மற்றும் அணு விஞ்ஞானிகள் அறுபது பேரைப் படுகொலை செய்தது. சிரியாவை அடுத்து ஈரானில் ஆட்சி மாற்றமா? என்று குழம்பிய நிலையில் ஈரானின் பதிலடி தொடங்கியது.

தொடர்ந்த போரின் போது ஈரானின் ஏவுகணைகளைச் செலுத்தும் ஏவூர்திகள் (launchers) பெரும்பாலானவற்றை அழித்து விட்டதாகவும் எஞ்சிய மலைக்குகைக்கு அடியில் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் மையங்களை மட்டுமே அழிக்கவேண்டும் என்றும் அமெரிக்காவிடம் எடுத்துச் சொல்லி அவர்களும் அதனை ஏற்றுக்கொண்டு அந்த மையங்களின் மீது உலகின் மிகப்பெரிய குண்டுகளை வீசினார்கள். இறையாண்மையும் முதுகெலும்பும் இருந்த நாடுகள் இதனைக் கண்டித்தன. ஐரோப்பா, இந்தியா உள்ளிட்ட அமெரிக்க நவகாலனிகள் உழப்பும் வார்த்தைகள் பேசி ஆதரித்தன.

அடுத்த அமெரிக்காவின் மேற்காசியப்போர் வெடிக்கப்போகிறதோ என்று உலகமே பதற்றத்தில் அமர்ந்திருந்த நிலையில் ரசியாவின் முன்னாள் அதிபர் மற்ற நாடுகள் ஈரானுக்கு அணு ஆயுதம் வழங்கலாம் என்று ஒரு மறைமுக செய்தியைப் பகிந்தார். இசுரேல் உலகுக்கு அறிவிக்காமல் அணு ஆயுதம் வைத்திருப்பது அனைவரும் அறிந்த இரகசியம். ஈரான் அப்படி அறிவிக்காமல் வைத்திருக்கிறதா என்று எவரும் அறியாத நிலையில் ரசிய பாதுகாப்பு உயர்மட்ட குழு உறுப்பினரான இவரின் அறிவிப்பு ஈரானின் அடுத்த நகர்வுக்கு முறைமுக ஆதரவும் வழிகாட்டி உதவுவதாகவும் இருந்தது.

image-400-1024x576.png

பின்பு ஈரானின் வெளியுறவு அமைச்சர் ரசியா சென்று புதினின் உதவிக்கான உறுதிமொழியைப் பெற்றுவந்த பிறகு போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டு இதுவரையில் நடைமுறையில் இருக்கிறது. ஈரானின் பாதுகாப்பு அமைச்சர் சீனா சென்று பேசி இருக்கிறார். இது குறித்த அரசியல் அக்கப்போர்கள், இராணுவக் கருவிகளின் நுட்பங்கள், அமெரிக்க அரசியல் கோமாளியின் உளறல்கள் குறித்த செய்திகள், காணொளிகள் எங்கும் கொட்டிக் கிடக்கின்றன. எனவே இவற்றைத் தவிர்த்து இந்தப் போரின் அரசியல் பொருளாதாரம் குறித்து மட்டும் பார்ப்போம்.

உலகப் போர்களைப் பொருத்திப் பார்க்கும் சட்டகம் (Frame)

இரத்தம் சிந்தி செய்யும் போர் அரசியலை அதனைச் சரியான சட்டகத்தில் வைத்துப் பார்த்துப் புரிந்துகொள்வது உலகுடன் ஒத்திசைந்து செல்ல வேண்டிய நமது பாதையைச் செவ்வனே செதுக்கிக் கொள்ள உதவும். மேற்காசியா என்றால் எரிபொருளும் ஆசிய-ஐரோப்பிய வணிகப் பாதையும். அதில் அமெரிக்காவின் தலையீடு என்றால் பெட்ரோ டாலரும் ஆசிய ஐரோப்பிய வணிகக் கட்டுப்பாடும்தான்.

பெட்ரோடாலர் உலகப்பொருள் உற்பத்திக்கான எரிபொருள் மற்றும் தொழில்நுட்ப மூலதனப் பொருள்களின் மதிப்பைத் தெரிவிக்கிறது. இந்த எரிபொருள் தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான உற்பத்திக்கு டாலரைக் கொண்டே இவற்றை வாங்க வேண்டும் என்பதால்தான் அதற்கான தேவை சந்தையில் தொடர்ந்து இருந்து வருகிறது. இந்தக் கட்டமைப்பை நிலைப்படுத்தும் விதிகள் கொண்ட உலக ஒழுங்கு நடைமுறையில் இருந்து வந்தது.

image-401-1024x585.png

இந்த ஒழுங்கு ரசியா, ஈரான், வெனிசுவேலா ஆகிய நாடுகள் உலகின் மிகப்பெரிய எரிபொருள் இறக்குமதியாளரான சீனாவுக்கு டாலர் தவிர்த்த சொந்த நாணயங்களில் எரிபொருளை ஏற்றுமதி செய்யத் தொடங்கிய நாள் முதல் உடைப்பைச் சந்திக்க தொடங்கியது. இதோடு முந்தைய மரபான எரிபொருள் தொழிநுட்ப உற்பத்தி மரபுசாரா மின்னணு தொழில்நுட்ப உற்பத்திக்கு மாறி வருகிறது. மாறிக் கொண்டிருக்கும் நவீன மின்னணு மாற்று எரிபொருள் உற்பத்திக்கான நுட்பங்களைச் சீனா அடைந்தது. இது மேலும் டாலர்மைய உலக ஒழுங்கை உடைத்து டாலர் இல்லாமலும் பொருள் உற்பத்தி, வணிகம் செய்யலாம் என்ற சூழலை ஏற்படுத்தியது. அந்த உடைப்பை அமெரிக்கர்கள் சரிசெய்ய போராடிக் கொண்டிருந்தபோது வந்த கொரோனாவினால் உலக உற்பத்தி மேலும் நிலைகுலைந்து நின்றது. அந்த உற்பத்தியில் ஈடுபட்ட நிறுவனங்களின் சொத்துக்களும் அந்த சொத்துக்களின் மீது கட்டப்பட்ட பங்குச்சந்தை மாய மாளிகையும் மதிப்பு குறைந்து உடைந்து இருக்க வேண்டும்.

அப்படி அனுமதிக்காமல் அந்த சொத்துக்களின் மதிப்பைச் செயற்கையாக டாலர் பணத்தை உற்பத்திசெய்து நிலைநிறுத்தியதால் பொருளாதாரச் செயல்பாடுகளுக்கான டாலர் சுழற்சியின்றியும் இப்படி டாலரை அச்சடித்ததாலும் சந்தையில் டாலர் மிகைமூலதனம் திரண்டது. அதாவது சொத்தின் விலையை உயர்த்திக் காட்டி டாலரின் மதிப்பு நீர்க்க வைக்கப்பட்டது. இப்போது நீர்த்து பெருகிப்போன டாலருக்கு ஏற்ப அதற்கு எதிராக மதிப்பிடப்பட்ட மற்ற உலக நாடுகளின் பணத்தின் மதிப்பு மாறவேண்டும். பொருள்களைவிட அதிகமாக உற்பத்தி செய்த டாலர் அதன் மதிப்பை அடைய உலகம் முழுக்க பாய்ந்து சொத்துக்களின் தேவையைக் கூட்டி விலையை உயர்த்தியது. பொருள் உற்பத்தியின்றி ஏற்பட்ட அந்த விலை உயர்வுக்கு ஏற்ப மற்ற நாடுகளில் ஏற்பட்ட பணத்தின் பெருக்கம் இயல்பாக அந்நாடுகளின் பணத்தின் மதிப்பைக் குறைத்தது. அது பணத்தில் இயங்கும் தொழிலாளிகள், விவசாயிகள், சிறுகுறு உற்பத்தியாளர்களின் வருவாய் மற்றும் செல்வத்தை மறைமுகமாக நீர்க்கச் செய்து குறைத்தது. இப்படி பணக்காரர்களின் சொத்தின் மதிப்பு கூடும் அதேவேளை மற்றவர்களின் வருமானம் சொத்து ஆகியவை மறைமுகமாக குறைக்கப்பட்டது.

அப்போது செய்த முதலீடுகள் கொரோனாவிற்குப் பிறகான பொருளாதார உற்பத்தி பெருக்கத்தை எதிர் நோக்கி இடப்பட்டவை. அந்த மதிப்பு வருங்கால உற்பத்தி மீதான உத்தேச மதிப்பு; உண்மை மதிப்பு அல்ல. உண்மை மதிப்பு பின்னர் பொருளை உற்பத்தி செய்து விற்று முதலையும் இலாபத்தையும் அடைவதில் இருக்கிறது. உத்தேச மதிப்பை உண்மையாக்க அதிக விலையில் பொருளை விற்றதால் இலாபம் பெருகி ஜிடிபியும் உயர்ந்தது. ஆனால் ஏற்கனவே பணத்தின் மதிப்பைத் திரித்ததால் வருவாயை இழந்த மக்கள் மேலும் அதிக விலை கொடுத்து பொருளை வாங்கியதால் அவர்களின் வாங்கும் திறன் குறைந்து விற்பனை சரிந்து வருகிறது. அதற்கு ஏற்ப பொருள்களின் விலை வீழ்ந்து சொத்துக்களின் மதிப்பு இப்போது சரியவேண்டும். அதாவது தொடங்கிய இடத்திற்கே முதலாளித்துவம் வந்து நிற்கிறது. அதுதான் அதனுடைய இயல்பு. 

இல்லையேல் மதிப்புமிக்க புதிய சொத்தையும் அதற்கான சந்தையையும் டாலர் நிதிமூலதனம் அடையவேண்டும். ஆனால் அப்படியான மாற்று உற்பத்தி இவர்களிடம் இல்லை. எனவே அந்த உற்பத்தியை வைத்திருக்கும் சீனர்களின் சொத்தை வழக்கம்போல ஆட்டையைப் போடுவதுதான் ஒரேவழி. கொரோனாவின் போது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளைப்போல டாலருக்கு சந்தையைத் திறந்து விடாமல் மூடிக்கொண்டு உற்பத்தியைப் பெருக்கி சந்தையை சீனர்கள் விரிவாக்கி இருக்கிறார்கள். அந்த சொத்தை டாலர் மூலதனம் அடைவது அல்லது அதனை உடைத்து பழைய எரிபொருள் தொழில்நுட்ப உற்பத்தியை மையப்படுத்திய டாலர்மைய ஒழுங்கை மீண்டும் நிலைநாட்டுவது ஒன்றே அமெரிக்கர்களின் நெருக்கடியைத் தீர்க்க இருக்கும் ஒரே வழி. இந்த பொருளாதாரத் தேவைக்கான

1. பழைய உற்பத்தி ஒழுங்கை உடையாமல் காப்பது,

2. புதிய உற்பத்தியில் உருவாகும் சொத்தைத் டாலர் நிதிமூலதனம் அடைவது

ஆகிய இரண்டு நோக்கத்தின் பொருட்டும் நடக்கும் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது.

போருக்கு முந்தைய ஈரான்-இசுரேலிய சூழல்

image-402-1024x683.png

5ஜி தொலைத்தொடர்பு மற்றும் மின் மகிழுந்துகள் உள்ளிட்ட மாற்று உற்பத்தி நுட்பங்களைக் கொண்டிருக்கும் சீனர்களின் புதிய உற்பத்தி தொழில்நுட்ப சொத்துக்களை டாலர் நிதிமூலதனம் அடைய செய்த வணிகப்போர், தொழில்நுட்ப போர், மிரட்டல்கள் அனைத்தும் தோல்வியடைந்தன. டாலரின் வழியான பழைய எரிபொருள் உற்பத்தி வணிக உடைப்பைத் தடுக்கும் பொருட்டு உக்ரைன் பிரச்சனையைத் தூண்டி ரசியாவில் ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருள் கனிமவளங்களைக் கைப்பற்றும் முயற்சியும் தோல்வி. ஆனால் அதனிடம் இருந்த ஐரோப்பிய எரிபொருள் சந்தை வெற்றிகரமாக உடைக்கப்பட்டு கைப்பற்றப்பட்டது. அதற்கான எண்ணெய் எரிவாயு அளிப்பை விலை அதிகமான அமெரிக்க உற்பத்தி கொண்டு மட்டும் செய்துவிட முடியாது.

ரசியாவை அடுத்து அதிகமான எரிவாயு வளத்தை ஈரான்-கத்தார் எரிவாயுவைக் கொண்டு செல்வதிலும் சிக்கல். ஈரானும் ரசியாவும் இணைந்து எரிவாயு தளத்தை கூட்டணி (strategic partnership) அமைத்து ஆசிய-ஐரோப்பிய எரிபொருள் சந்தையைத் தங்களுக்குள் தக்கவைத்துக் கொள்ளும் திசையில் சென்றன. அமெரிக்காவை விலக்கி ஆசிய ஐரோப்பிய எரிபொருள் சந்தையைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சரக்கு போக்குவரத்துக்கான புதிய உலக வடக்கு தெற்கு போக்குவரத்து மண்டலத்தை (INSTC) ஏற்படுத்தின. இந்தக் கூட்டணியில் சீனாவோடு இந்தியாவும் ஐரோப்பிய நாடுகளும் இணையும்போது அமெரிக்கர்களை வெளியேற்றி இந்த மண்டலத்தைத் இவர்களுக்குள் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு ஏற்படும்.

அதனைத் தடுக்க இக்கூட்டணியில் இருந்து இந்திய, ஐரோப்பிய நாடுகளைப் பிரிக்கும் வகையில் இதற்கு மாற்றாக பாலஸ்தீன பகுதியில் இருக்கும் எரிவாயுவையும் எதிர்காலத்தில் கத்தாரின் எரிவாயு ஏற்றுமதியையும் இணைக்கும் இசுரேலை மையப்படுத்திய இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பிய பொருளாதார மண்டலத்தை (IMEC) அறிவித்தது அமெரிக்கா. அந்த நகர்வுக்கு ஹமாசின் இசுரேல் மீதான தாக்குதல் பாலஸ்தீன பிரச்சனையை உலகின்முன் கொண்டுவந்து தடையை ஏற்படுத்தியது. இந்தத் தடையைப் பாலஸ்தீன இனத்தை அழித்து வெளியேற்றி உடைக்க முற்பட்டது இசுரேல்.

image-403-1024x527.png

ஈரான் தனது பொருளாதார நலனைக் காக்கும் நோக்கில் தனது ஆதரவு ஹிஸ்புல்லா, கவுத்தி இயக்கங்களின் வழியாக அமெரிக்க, இசுரேலிய நாடுகளின் நோக்கத்தை அடையாவிடாமல் அரசியல் பொருளாதார இழப்புகளை ஏற்படுத்தியது. இந்தப் போருக்கான நோக்கத்தில் அமெரிக்கா தோல்வியடையும் பட்சத்தில் இசுரேலின் இருப்பும் தேவையும் கேள்விக்குள்ளாகும். போருக்கு செலவிட்ட சுமையும், உடைபட்ட பொருளாதார நெருக்கடியும் பாதுகாப்பின்மையும் அங்கே அரசியல் நெருக்கடியைத் தோற்றுவிக்கும். எனவே இது இசுரேலிய ஆளும்வர்க்கத்துக்கு வாழ்வா சாவா போராட்டம்.

எனவே தனது அனைத்து வலிமையையும் நீண்டகால தயாரிப்புகளையும் பயன்படுத்தி ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா இயக்கத் தலைமைகளைக் கொன்றும் லெபனான் மீது போர்தொடுத்தும் கவுத்தி இயக்கத்தைத் தாக்கியும் ஈரானின் அரசியல் வலிமையை உடைத்தும் வந்தார்கள். உச்சமாக அலாவைத் சிறுபான்மை ஆளும்வர்க்கத்துக்கு எதிராகப் பெரும்பான்மையைத் தூண்டிவிட்டு துருக்கி ஆதரவு கூலிப்படையின் மூலம் சிரியாவில் ஆட்சிக் கவிழப்பை நிகழ்த்தி தன் மீதான ஈரானின் இசுரேலிய சுற்றிவளைப்பை வெற்றிகரமாகத் தகர்த்தார்கள். ஈரானின் மீது சிரிய, ஈராக் வான்வெளி வழியாக தாக்குதல் நடத்த இருந்த தடை இதன்மூலம் நீங்கியது.

கணக்கை மாற்றிப் போட்ட அமெரிக்கா

image-404.png

இதனிடையில் ஆட்சிக்கு வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் முந்தைய சனநாயகக் கட்சியின் ரசிய, சீன சொத்துக்களை மொத்தமாகக் கைப்பற்றி சந்தையை ஆதிக்கம் செய்யும் முயற்சியில் கண்ட தோல்வியை ஒப்புக்கொண்டு ஏற்றத்தாழ்வுடன் இவர்களுடன் பலனைப் பகிர்ந்து கொள்ளும் பாதைக்கு வந்தது. முந்தைய பைடன் நிருவாகத்தின் சில்லுகளுக்கான தொழில்நுட்ப போரின் தோல்வியை ஒப்புக்கொண்டு இப்போது சீனாவையும் மற்ற உலக நாடுகளையும் தனக்கு இசைவான ஒரு பொருளாதார ஒப்பந்தத்துக்குள் கொண்டுவரும் வகையில் உலக நாடுகளின் மீது வரிவிதிப்பு போரை அறிவித்தது. ரசியாவுடன் சமரசம் செய்துகொண்டு ஐரோப்பிய நலனைப் பலிகொடுத்து இவர்கள் இருவரும் சேர்ந்து ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொள்ள பேரம் பேசியது.

எதிர்பாராத விதமாக சீனர்களின் எதிர் வரிவிதிப்பு தாக்குதலினால் அமெரிக்கா வரிவிதிப்பு போர் ஆரம்பத்திலேயே அமெரிக்கர்களைத் திருப்பித் தாக்கியது. வேறுவழியின்றி பின்வாங்கியது ட்ரம்ப் நிருவாகம். தனது நலனை விட்டுக் கொடுக்காத ஐரோப்பிய நாடுகள் உக்ரைன் வழியாக அந்த சமாதான முயற்சிக்கு முட்டுக்கட்டையை ஏற்படுத்தியதால் ரசிய கூட்டு முயற்சியிலும் தோல்வியைத் தழுவியது. ரசியர்களும் இறங்கிவர அடம்பிடித்த நிலையில் ரசிய-சீன-ஈரானிய கூட்டணி பலத்தை உடைக்கும் வகையில் எந்த ஈரான் உடனான அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முன்பு விலகினாரோ அதே ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த வருமாறு மிரட்டினார் டிரம்ப். அதன்மூலம் ஈரானிய எரிபொருளைப் பெற்று ரசியர்களை வழிக்குக் கொண்டுவர முயன்றது அவரது நிர்வாகம்.

ஈரானில் இருக்கும் தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனை முன்னிலைப்படுத்தும் ஆட்சியாளர்கள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள ஆர்வம் காட்டினாலும் புரட்சிக்குப் பிறகு உருவான தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் அரசியல் கட்டுப்பாடு, ரசியாவுடனான எரிவாயு கூட்டணியை உடைத்து அனுகூலம் அடையத் துடிக்கும் அமெரிக்கர்களின் நோக்கம் ஆகியவை காரணமாக அனைவரின் ஒத்துழைப்புடன் கவனமாகக் காய்களை நகர்த்தியது ஈரான். இந்த இக்கட்டை இன்னும் இறங்கி விட்டுக் கொடுத்து தீர்க்கலாம் இல்லையேல் ரசிய, சீன நாடுகளுடன் ஒப்பிட பலகீனமான ஈரானைத் தாக்கி அந்நாட்டு வளத்தை ஓட்டுமொத்தமாகக் கைப்பற்றுவதன் மூலம் பேச்சுவார்த்தை அரசியலின் திசையையே மாற்றலாம்.

image-405.png

இரண்டாவதைத் தெரிவு செய்தார் அமைதி விரும்பியாக வேடமிட்ட டிரம்ப். எனினும் அமெரிக்க தளங்களை இழக்கும் ஆபத்தைத் தவிர்க்க இசுரேலை ஏவிவிட்டு சிரியாவைப் போன்று ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துவது திட்டமாக இருந்திருக்கிறது. ஈரானுடனான ஒப்பந்தம் அந்தப் பகுதியில் இசுரேலின் ஏகபோகத்தை உடைத்து ஈரானின் இடத்தை உறுதிசெய்யும் என்பதால் இசுரேல்முனைப்புடன் ஈரானை முடிக்க களமிறங்கியது.

மன்னர் காலத்தில் ஐரோப்பிய நாடுகளின் நிழலில் உருவான தரகு முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்க உருவான ஈரானிய இராணுவம், இசுலாமிய புரட்சிக்குப் பிறகு உருவான புதிய தேசிய முதலாளித்துவ வர்க்கத்தின் நலனைக் காக்கும் புரட்சிப் பாதுகாப்புப்படை என இரண்டாக பிரிந்திருக்கும் அந்நாட்டின் ஆளும் வர்க்க அரசியலைப் பயன்படுத்தி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த திட்டமிட்டு இருந்திருக்கிறார்கள்.

தேசிய வர்க்கத்தின் புரட்சிப் பாதுகாப்பு படைப்பிரிவின் தலைமைகளை கொன்றொழித்து அதன் தொடர்புகளைத் துண்டித்து ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகளையும் ஏவுகணைகளை ஏவும் வலிமையை குண்டுவீசி அழித்தும் அவர்களின் தன்னம்பிக்கையை உடைக்கும் போது தரகு முதலாளித்துவ வர்க்கம் இவர்களிடம் மண்டியிட்டு சேவை செய்யத் தயாராகிவிடும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.

நேர்த்தியான இந்தத் திட்டத்தைச் சிறப்பாக முதல் இரண்டு நாட்களில் செயல்படுத்தவும் செய்தார்கள். ஆனால் சிறிய இடைவேளையில் மீண்டு எழுந்த தேசிய வர்க்க புரட்சிப் பாதுகாப்புப்படை இழந்த தொடர்புகளை மீட்டு வெற்றிகரமாக பதிலடியைத் தொடங்கி இவர்களின் திட்டத்தை உடைத்ததன் மூலம் ஈரானின் ஆட்சி மாற்றத்தைத் தவிர்த்து இருக்கிறது.

இதன்பிறகு நடந்தது என்ன?!

https://minnambalam.com/iran-that-avoided-the-regime-change-what-next-1/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்சிமாற்றத்தைத் தவிர்த்த ஈரான் அடுத்து? – பகுதி 2

24 Jul 2025, 9:38 AM

Iran wins war for regime change

பாஸ்கர் செல்வராஜ்

ஆட்சிமாற்றத்துக்கான போரில் அசையாமல் நி(வெ)ன்ற ஈரான்

இதுவரையிலும் மின்சாரம், எண்ணெய், எரிவாயு கொண்டு உற்பத்தி செய்து இணையம் மூலம் இணைத்து இயக்கும் பொருள்கள் என்பதாக உலக உற்பத்தியும் அதற்குத் தேவையான டாலர் உலகப்பணமாகவும் அதனை மையப்படுத்திய உலக ஒழுங்கும் இருந்து வந்தது.

அடுத்த மாற்று எரிபொருளில் உற்பத்தியாகி இயங்கும் மின்னணு மின்கல பொருள் உற்பத்திக்கான தொழில்நுட்ப மூலதன பொருள்களின் உற்பத்தியை சீனா அடைந்து ரசியா, ஈரான் போன்ற நாடுகள் டாலர் அல்லாத நாணயங்களில் மரபான எரிபொருளை விற்க முனைந்த நிலையில் டாலர்மைய உலக ஒழுங்கு உடைப்பைக் கண்டு வந்தது. டாலரின் பங்கு வணிகத்தில் குறைந்து வந்தது.

இதனால் சந்தையில் டாலர் மூலதனம் மிகுந்திருந்த போது கொரோனா வந்தது. அந்தக் காலத்தில் பங்குச்சந்தை வீழ்ச்சியைத் தவிர்க்க வெளியிடப்பட்ட டாலரும் சந்தைக்குள் நுழைந்ததால் சந்தை டாலர் மிகைமூலதனத்தால் நிரம்பி வழிந்தது. 

அது உலகம் முழுக்க பாய்ந்து சொத்துகளின் மதிப்பை உயர்த்தி உலக நாணயங்களின் மதிப்பை நீர்த்து மக்களின் வருமானத்தைக் குறைத்து பொருள்களின் விலைவாசியை உயர்த்தி அதனை வாங்கி நுகர்ந்த மக்களின் வாங்கும்திறனைக் குறைத்ததால் பொருள் விற்பனை சரிந்து வருகிறது.

இந்தப் பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க மாற்று உற்பத்தியில் ஈடுபடும் மதிப்புமிக்க சீனர்களின் சொத்தை டாலர் மூலதனம் அடைய முயல்கிறது. இப்படி டாலர்மைய உற்பத்தி உடைப்பைத் தடுத்து மாற்று உற்பத்தியின் சொத்துகளை அடைவதற்கான பொருளாதாரத் தேவைக்கான அமெரிக்கர்களின் போர் அரசியலே உலக அரசியலாக நடந்து வருகிறது.

image-441-1024x576.png

ஈரானின் மீதான தாக்குதலின் நோக்கம்

சீனர்களுடனான வணிகப்போர், மின்னணு தொழில்நுட்ப போர்கள் தோல்வியடைந்த நிலையில் முந்தைய சனநாயகக் கட்சியின் பைடன் நிர்வாகம் உக்ரைனை நேட்டோவில் சேர்க்க முனைந்து ரசியாவைத் தூண்டி எழுந்த போரின் வழியாக ரசியாவைத் துண்டாடி நிலைகுலைய வைத்து அவர்களின் வளத்தையும் சந்தையையும் கைப்பற்றி டாலர்மைய எரிபொருள் ஒழுங்கைக் காக்க முனைந்தது. ரசிய வீழ்ச்சியில் தனிமைப்படும் சீனாவை வீழ்த்தி அடுத்து அதன் சொத்தைக் கைப்பற்றுவது அந்நோக்கத்தின் நீட்சி. அந்த ஆட்சிமாற்ற சீர்குலைவு முயற்சியில் தோல்வியடைந்து ரசியாவின் ஐரோப்பிய சந்தையை மட்டுமே கைப்பற்ற முடிந்தது.

அடுத்து வந்த குடியரசுக் கட்சியின் டிரம்ப் நிர்வாகம் அந்தத் தோல்வியை ஒப்புக்கொண்டு ரசியர்களுடன் சேர்ந்து கொண்டு ஐரோப்பிய சந்தையைப் பகிர்ந்து கொண்டு ஈரானை விலக்கி சீனாவைத் தனிமைப்படுத்த முயன்றது. அதனை ஐரோப்பியர்கள் தடுத்துக் கொண்டு ரசியர்களும் ஒத்துழைக்க மறுத்த நிலையில் டாலர் அல்லாத நாணயத்தில் எரிபொருள் விற்கும் ஈரானின் பக்கம் திரும்பினார்கள். ஈரானில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி அதன் எரிபொருளை ஐரோப்பிய, இந்திய சந்தைகளுக்கு டாலரில் ஏற்றுமதி செய்து ஐரோப்பிய, மேற்காசிய, இந்தியப் பொருளாதார மண்டலத்தை (IMEC) ஏற்படுத்தி சீன, ரசிய நாடுகளைத் தனிமைப்படுத்தும் நோக்கில் அதன் மீது தாக்குதலைத் தொடுத்து இருக்கிறார்கள்.

image-440-1024x768.png

தாக்குதல் தந்திரங்கள், உத்திகள்

நோக்கத்திற்கு ஏற்றவாறு எரிபொருள் வளத்தைக் காத்து நிற்கும் ஈரானிய புரட்சிப் பாதுகாப்புப் படையின் தலைமைகளையும் அணு ஆய்வு விஞ்ஞானிகளையும் கொன்று ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை அழித்தும் எதிர்த்தாக்குதல் தொடுக்க வழியின்றி ஏவுகணைகளை ஏவும் ஏவூர்திகளை அழித்தும் அதிர்ச்சியூட்டி நிலைகுலைய வைத்தார்கள். இவர்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ஈரானியர்கள் குழப்பமான அரசியல் சூழலைப் பயன்படுத்திக் கொண்டு எதிர்புரட்சியில் ஈடுபடவில்லை. மாறாக உடனடியாக இழப்புகளை ஏற்று மாற்று ஏற்படுகளைச் செய்து இசுரேலின் மீதான தாக்குதலைத் தொடங்கியது ஈரான்.

முதல் ஆட்சிமாற்ற நோக்கம் தோல்வியடைந்த நிலையில் அடுத்த எதிர்த்து தாக்கும் ஏவுகணை வலிமையை இல்லாமல் செய்யும் வகையில் ஏவூர்திகள், ஏவுகணை உற்பத்தி நிலைகள், ஆயுத சேமிப்பு கிடங்குகள், இராணுவ கட்டுப்பாட்டு மையங்களின் மீது இசுரேலிய போர் விமானங்கள் தாக்குதல் நடத்தின. எரிபொருள் ஏற்றுமதி மையங்களைத் தாக்கி ஈரானின் பொருளாதாரத்தைத் தகர்க்கலாம் என்றாலும் பதிலுக்கு எவரும் எரிபொருளை ஏற்றுமதி செய்யாதவாறு அவர்கள் ஹெர்முஸ் நீரிணையை மூடினால் அமெரிக்க, ஐரோப்பிய பொருளாதாரம் தகர்க்கப்படும் என்பதால் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.

ஈரானின் மீது தாக்குதல் நடத்தும் விமானங்களை வீழ்த்த முடியாத நிலையில் அவர்களின் ஆயுத உற்பத்தி மற்றும் விமான தளத்தோடு அந்தச் சிறிய நாட்டைத் தாங்கி நிற்கும் மதிப்புமிக்க மின்னணு, உயிரியல், இராணுவ உற்பத்தி மற்றும் ஆய்வுக்கூடங்கள், வைர பங்குச்சந்தை மையம், எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள், ஹைபா துறைமுகம் போன்ற பொருளாதார நிலைகளைத் தாக்கியது ஈரான். ஈரானின் வான்வெளி பாதுகாப்பு அமைப்புகள் செயலற்று போனதால் எந்த எதிர்ப்பும் இன்றி இசுரேலிய போர் விமானங்கள் புகுந்து அந்நாட்டைத் தாக்கின. அதேபோல இசுரேலின் மூன்று அடுக்கு இரும்புக் கவிகை (iron dome), டேவிட் கவண்  (David sling), தாட் (THAAD) ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளால் பாதுகாக்கப்பட்ட முக்கிய நிலைகளைத் தாக்கி இசுரேலிய வான்வெளி பாதுகாப்பை உடைக்கும் வல்லமையைக் காட்டியது ஈரான்.

இசுரேல் தாக்குதல் அளவைக் கூட்டுவதற்கு ஏற்ப மீவிரைவு ஏவுகணைகள் (hypersonic), அதிக சேதம் விளைவிக்கும் அரை டன் முதல் ஒன்றரை டன் வரை வெடிபொருள் நிரப்பிய ஏவுகணைகள் என ஒவ்வொன்றாக அனுப்பி அவர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தது. முதலில் எண்பது விழுக்காடு ஏவுகணைகளைத் தடுத்த இசுரேல் பின்னர் ஐம்பது 50-60 விழுக்காடு மட்டுமே தடுக்க முடிந்தது. ஒரு வாரத்திற்கு மேல் தொடர்ந்த தாக்குதலில் இசுரேலின் இரண்டாவது இலக்கான ஈரானின் ஏவுகணை வலிமையை உடைக்கும் முயற்சியும் தோல்வி அடைந்து ஏவுகணை எதிர்ப்பும் பலமிழந்து பெருமளவு சேதத்தை எதிர்கொண்ட நிலையில் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் இல்லையேல் தாக்குதல் பலத்தைக் கூட்ட அமெரிக்கா நேரடியாகப் போரில் இறங்க வேண்டும் என்ற நிலை.

image-438-1024x683.png

இறுதியில் வெற்றி யாருக்கு?

போர் நிறுத்தம் அறிவிப்பதற்கு முன்பாக பாதுகாப்பற்று நிற்கும் ஈரானிய வான்வெளியைப் பயன்படுத்தி அதன் அணு ஆயுத கட்டமைப்புகளை அழித்து மூன்றாவது நோக்கத்தையேனும் அடையும் சாத்தியம் இருந்தது. மற்ற நேரங்களில் அதிக எடைகொண்ட வெடிக்குண்டுகளைத் தாங்கிச் செல்லும் பி-2 போர்விமானங்களைச் சுட்டு வீழ்த்தும் வாய்ப்புண்டு. வலிமையான கிரானைட் பாறைகளாலான மலையின்கீழ் தொண்ணூறு மீட்டருக்கும் கீழ் இருக்கும் யுரேனிய செறிவூட்டும் நிலையத்தைத் தகர்க்க அணு குண்டுகளால் மட்டுமே முடியும்.

அவ்வாறான அளவில் சிறிய போர்த்தந்திர குண்டை (strategic bomb) அமெரிக்கா பயன்படுத்தினால் உலகக் கண்டனங்களை எதிர்கொள்வதோடு மற்றவர்கள் பயன்படுத்தவும் வழிசெய்ததாகிவிடும். பதுங்குகுழிகளைத் தகர்க்கும் ஜிபியூ குண்டுகளைப் பயன்படுத்தினால் சுரங்கத்தைத் தகர்த்து செறிவூட்டும் நிலையத்தைச் செயலற்றதாக்க முடியும் என்று சொல்ல முடியாத குழப்ப நிலை. இறுதியில் நுழைவு வாயில்கள் சுரங்கத்துக்கான காற்றோட்ட திறப்புகள் உள்ள இடத்தில் குறிபார்த்து ஒன்றிற்கும் மேற்பட்ட குண்டுகளை வீசினால் குகை தாகர்ந்துவிடும் வாய்ப்பு இருப்பதாகக் கண்டறிந்து பன்னிரண்டு குண்டுகள் வீசப்பட்டது.

எதிர்பார்த்த விளைவுகள் ஏற்பட்டதற்கான அறிகுறியான அணுக்கசிவு, பாறைகள் நொறுங்கி விழுந்த பள்ளம் என எதுவும் இதுவரை வெளியிடப்படாத நிலையில் அமெரிக்கா தாக்குதல் வெற்றி என அறிவித்து ஈரானுடன் பேசி போர் நிறுத்தம் அறிவித்தது. இசுரேல் நிறுத்தினால் நாங்களும் நிறுத்திக் கொள்கிறோம்; அமெரிக்க தாக்குதலுக்குப் பதிலடியாக கத்தாரில் உள்ள அமெரிக்க இராணுவ தளத்தின் மீது அடையாளப்பூர்வமான தாக்குதல் நடத்துவோம் என்று பேசி வைத்துக்கொண்டு அவ்வாறே ஈரான் தாக்குதலும் நடத்தி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்திருக்கிறது. தெரிந்த தாக்குதலைத் தடுத்து நிறுத்தி சேதம் இல்லை என்று ட்ரம்ப் அறிவித்தார். ஆனாலும் அங்கிருந்த பெரிய அலைக்கொடியைச் (antenna) சேதப்படுத்தி அமெரிக்கர்களின் எறிகணை எதிர்ப்பின் போதாமையை அம்பலப்படுத்தி தனது எறிகணை வலிமையையை ஈரான் காட்டி இருக்கிறது.

இறுதியில் ஆட்சி மாற்றம், ஏவுகணை வலிமையைத் தகர்த்தல், அணுவாயுத திட்டத்தை அழித்தல் ஆகிய மூன்று நோக்கங்களிலும் வெற்றியடையாமல் பின்வாங்கிய அமெரிக்க-இசுரேலிய நாடுகளின் ஈரானுடனான குறுகியகால போர் தோல்வியில் முடிவடைந்து இருக்கிறது. பெருமிழப்புகளைச் சந்தித்தாலும் எதிரிகள் தமது இலக்குகளை அடைய விடாமல் தடுத்து நிலைத்து நின்றதன் மூலம் ஈரான் இந்தப் போரில் வெற்றிபெற்று இருக்கிறது.

image-439-1024x576.png

தோல்வியை அடுத்த மாற்றங்கள்

ஈரான்-இசுரேலிய மோதலின் மையம் இந்தப் பகுதியின் எரிபொருளை ஏற்றுமதி செய்தும், ஆசிய-ஐரோப்பிய வணிகத்தின் மையமாக விளங்கியும் அதன் பலனை யார் அறுவடை செய்வது என்பதுதான். இரண்டு நாடுகளின் அமைவிடம் அதற்கான வாய்ப்புகளைக் கொண்டிருக்கிறது. இந்த இலக்கை எட்ட, இசுரேல் ஈரானை நிலைகுலைக்க வைக்க முயல்வதைப்போல, ஈரான் தன்னைத் தக்கவைத்துக் கொண்டு தனது எதிர்த்தாக்குதலின் மூலம் எதிரியின் அரசியல் பொருளாதார நிலைத்தன்மையை உடைத்து நிலைகுலைய வைப்பதாகவே இருக்கமுடியும். இசுரேலின் பொருளாதார இருப்பு கேள்விக்கு உள்ளாக்கப்பட்டு நெதன்யாகுவின் அரசு நிலைக்கவும் அவர் சிறைக்குச் செல்வதைத் தவிர்க்கவும் போர்களின் வழியாகப் போராடிக் கொண்டிருக்கும் நிலையில் ஈரானின் நேரடியான ஏவுகணைத் தாக்குதல்கள் அதனை வேகப்படுத்தி இருக்கின்றன.

உயிருக்குப் பயந்து இரயில், மகிழுந்து நிறுத்தங்களில் படுக்கையை விரித்து படுக்கவைத்த ஈரானின் தாக்குதல் யூத மக்களின் மனதில் பாதுகாப்பின்மையை விதைத்து இருக்கிறது. அதனால் போர் நின்றால் அங்கே அரசியல் போராட்டம் வெடித்து அந்த அரசு நிலைக்கும் வாய்ப்பில்லை எனும் நிலையில் ஈரானின் போர்க்கள உத்தி போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதாகவே இருக்க முடியும்.

தாக்குதலை மேலும் அதிகப்படுத்தி அமெரிக்கர்களை உள்ளே கொண்டுவந்து அவர்களை மேற்காசியாவில் இருந்து வெளியேற்றி இருநாடுகளையும் ஒருசேர வெல்லும் வல்லமை ஈரானிடம் இல்லை. அப்படியான முடிவு போரை நீட்டித்து இசுரேலைக் காத்து ஈரானின் இழப்பை மேலும் கூட்டுவதாகவே இருக்கும். அவ்வாறான தவறைச் செய்யாமல் போர் நிறுத்த முடிவெடுத்து தற்காத்தல், தாக்குதல் ஆகிய இரண்டிலும் வெற்றிபெற்று இருக்கிறது ஈரான்.

WhatsApp-Image-2025-07-24-at-09.21.20_ed

ஆயுத வலிமை கொண்டு நடத்தப்படும் போரரசியல் உழைத்து உருவாக்கிய உற்பத்தி பொருள் செல்வத்தைக் காப்பது (defensive) உழைக்காமல் மற்றவர்களின் உற்பத்தி செல்வத்தைக் கைப்பற்றுவது (offensive) ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டது. சீன, ரசிய, ஈரானிய போர்களில் அமெரிக்காவின் தோல்வி அவர்களின் தகவல்தொடர்பு, நிதிய, போர்க் கருவிகளினாலான ஆயுதங்கள் கொள்ளையில் ஈடுபட்டு வெற்றிபெறும் வலிமையை இழந்து விட்டத்தையும் மற்ற நாடுகள் உற்பத்தியைத் தற்காத்துக் கொள்ளும் வலிமையைப் பெருக்கிக் கொண்டதையும் காட்டுகிறது.

நேரடி, மறைமுகப் போர்களில் ஈடுபட்டு டிரில்லியன் கணக்கில் செலவுசெய்து தோற்றுவிட்ட அமெரிக்க ஏகாதிபத்தியம் இனி சீன, ரசிய, ஈரானிய நாடுகளுடன் நேரடி போர்களில் ஈடுபட்டு மடிவது அல்லது தனது இடத்தை விட்டுக்கொடுத்து மற்றவர்களுடன் உலகைப் பகிர்ந்து கொண்டு இணையாக பல்துருவ உலகில் வாழ்வது ஆகிய இரண்டில் ஒன்றைத்தான் தெரிவு செய்யவேண்டும். போரில் வென்று உடைந்துவிட்ட டாலர்மைய ஒற்றைத்துருவ உலகை மீட்பது இனி சாத்தியமே இல்லை. ஓரிரு ஆண்டுகளில் புதிய உற்பத்தியைப் பெருக்கி அதற்கான உலக சந்தையைக் கைப்பற்றுவதும் சாத்தியமில்லை. இனி பேச்சுவார்த்தையின் மூலம் வரிவிதிப்பு போரைப் பயன்படுத்தி உருட்டி மிரட்டி இழப்பைக் குறைத்து பலனைக் கூட்ட மட்டுமே முடியும். 

எனவே புதிய பல்துருவ உலகமே எதார்த்தமானது. அதன் தொடக்கம் அனைத்து உற்பத்தி வலிமை மிக்க நாடுகளும் சமமாக பொதுவாக அவரவர் நாணயங்களில் வணிகம் செய்வது என்பதாக மாறிவிட்டது. இதன் முழுமை போர்கள் மற்றும் போராட்டத்தின் ஊடாக எல்லோர்க்கும் பொதுவான மதிப்பு விதியை உருவாக்கிக் கொள்வதாக இருக்கும். அப்படியான விதியின் அடிப்படையிலான உலக ஒழுங்கு முழுமையாக நடைமுறைக்கு வரும் நாள் பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் தோன்றிய ஏகாதிபத்திய காலகட்டத்தின் இறுதியை அறிவிக்கும் நாளாகவும் அதனுள் கருவாகி உருவாகி வளர்ந்து நிற்கும் சோசலிச சமூகம் உறுதியாக சோசலிச மாற்றத்தை நோக்கி நகர்ந்து விட்டதை உறுதி செய்யும் நாளாகவும் இருக்கும்

https://minnambalam.com/iran-wins-war-for-regime-change/

  • கருத்துக்கள உறவுகள்

நல்லதொரு ஆய்வுக்கு கட்டுரை ......... ! 👍

நன்றி கிருபன் ........... !

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.