Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ஏ1, ஏ2 நெய் இரண்டில் எது சிறந்தது?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்குளிக்குமா என்பது குறித்து விவாதம் எழுந்துள்ளது

கட்டுரை தகவல்

  • தீபக் மண்டல்

  • பிபிசி செய்தியாளர்

  • 28 ஜூலை 2025, 03:22 GMT

இந்தியா முழுவதும் சந்தைகளில் ஏ1, ஏ2 என்ற பெயருடன் பால், நெய் மற்றும் வெண்ணெய் விற்பனைக்கு வந்துள்ளது.

வழக்கமான உள்ளூர் நெய்யைவிட ஏ2 நெய் ஆரோக்கியமானது என்ற முறையில் சந்தைப்படுத்தப்படுகின்றன.

சாதாரண உள்ளூர் நெய் சந்தையில் ஒரு கிலோ ரூ.1,000-க்கு விற்பனை செய்யப்பட்டால், ஏ2 நெய் ஒரு கிலோ ரூ.3,000 வரை விற்பனை செய்யப்படுகிறது.

பால் பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஏ2 நெய் நாட்டு மாட்டு பாலிலிருந்து தயாரிக்கப்படுவதால் கூடுதல் பலனளிப்பதாகக் கூறுகின்றன.

இதில், இயற்கையாக கிடைக்கும் A2 பீட்டா-கேசின் புரதம் உள்ளதாகவும், இந்த புரதம் சாதாரண பாலில் காணப்படும் A1 புரதத்தை விட எளிதில் செரிக்கக் கூடியது என்றும், உடலில் உள்ள அழற்சியைக் குறைப்பதாகவும் அந்நிறுவனங்கள் கூறுகின்றன.

இந்த நெய்யில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், கான்ஜுகேட்டட் லினோலிக் அமிலம் (CLA), மற்றும் A, D, E, K வைட்டமின்கள் போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஏ2 நெய் செரிமான மண்டலத்தை வலுப்படுத்துவதாகவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதாகவும், தோல் நிறத்தை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

இது இதய நோய்களுக்கு நல்லது என்றும் கூறப்படுகிறது. இந்த நெய்யை உட்கொள்வது காயங்களை விரைவாக குணப்படுத்த உதவும் என்றும் பால் நிறுவனங்கள் கூறுகின்றன.

பால் பொருள் நிறுவனங்கள் இதை ஒரு புதிய சூப்பர்ஃபுட் ஆக விற்பனை செய்கின்றன.

ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரில் பால்பொருட்களை விற்பனை செய்வது சரியா?

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளிய்ட்ட சுற்றறிக்கை

பட மூலாதாரம், FOOD SAFETY AND STANDARDS

படக்குறிப்பு, ஏ1, ஏ2 பால் பொருட்கள் குறித்து எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. கடந்த வருடம் வெளியிட்ட சுற்றறிக்கை

இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலை ஆணையம் (FSSAI) இத்தகைய ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் பால், நெய், வெண்ணெய் விற்பதை தடை செய்திருந்தது. ஏ2 என்ற பெயரில் நெய் விற்பது தவறான தகவலை அளிப்பதாக உள்ளது என்றும் கூறியது.

கடந்த ஆண்டு, ஏ1 அல்லது A2 என்ற பெயரிடலுடன் பால் அல்லது பால் பொருட்களை விற்பது தவறான தகவலை அளிப்பது மட்டுமல்லாமல், 2006 உணவு பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் சட்டத்தையும், அதன் அடிப்படையில் வகுக்கப்பட்ட விதிகளையும் மீறுவதாக உள்ளது என்று எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது.

ஏ1 மற்றும் ஏ2 என்ற பெயரிடலுடன் உள்ள தயாரிப்புகளை 6 மாதங்களுக்குள் நிறுத்துமாறு நிறுவனங்களுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உத்தரவிட்டது.

ஆனால், எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. ஒரு வாரத்துக்குள் தனது அறிவுறுத்தலை திரும்பப் பெற்றது.

ஏ1 மற்றும் ஏ2 என பெயரிடப்பட்ட பால் பொருட்கள் உண்மையில் ஆரோக்கியத்துக்கு கூடுதல் நன்மை தருகிறதா என்பதுதான் கேள்வி.

ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட உடலுக்கு அதிக பயனளிக்குமா மற்றும் இதற்கு அதிக மருத்துவ குணங்கள் உள்ளனவா?

ஏ1 மற்றும் ஏ2 பால் அல்லது நெய் என்றால் என்ன?

A1 மற்றும் A2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஏ1 மற்றும் ஏ2 இடையிலான வேறுபாடு, பாலில் காணப்படும் முக்கிய புரதமான பீட்டா-கேசின் புரதத்தை அடிப்படையாகக் கொண்டது. முக்கியமாக இந்த வேறுபாடு பசுவின் இனத்தை சார்ந்து இருக்கிறது.

பாலில் காணப்படும் புரதங்களில் பீட்டா-கேசின் ஒரு முக்கியமான புரதம் என தேசிய வேளாண் அறிவியல் அகாடமி (NAAS) ஆய்வுக் கட்டுரை கூறுகிறது.

பசுவின் பாலில் உள்ள மொத்த புரதத்தில் 95% கேசின் மற்றும் வேய் (whey) புரதங்களால் ஆனது. பீட்டா-கேசின் அமினோ அமிலங்களின் சமநிலையை கொண்டுள்ளது.

இரண்டு வகையான பீட்டா-கேசின்கள் உள்ளன. ஐரோப்பிய இன பசுக்களின் பாலில் அதிகம் காணப்படும் ஏ1 பீட்டா-கேசின் மற்றும் இந்திய உள்நாட்டு பசுக்களின் பாலில் இயற்கையாக காணப்படும் ஏ2 பீட்டா கேசின்.

ஏ1 மற்றும் ஏ2 பீட்டா-கேசின் புரதங்கள் அமினோ அமில அளவில் வேறுபடுகின்றன. இது புரதத்தின் செரிமான செயல்முறையை பாதிக்கிறது.

சில ஆய்வுகள் ஏ2 பால் செரிக்க எளிதாக இருக்கலாம் மற்றும் ஆரோக்கியத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகின்றன, ஆனால் இதுகுறித்து மேலும் ஆய்வுகள் தேவை. போதுமான ஆய்வுகள் இல்லாததால், இது கூடுதல் நன்மைகளை தருகிறது என்று நிரூபிக்கப்படவில்லை.

ஏ2 நெய் குறித்து பால் பொருள் நிபுணர்கள் கூறுவது என்ன?

ஏ2 நெய்யின் நன்மை குறித்து நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் தொடர்பாக கூறப்படுபவை பற்றி நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்

ஏ2 நெய் உண்மையில் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்குமா அல்லது இதுகுறித்து மிகைப்படுத்தப்பட்ட கூறப்படுகிறதா என்பதை அறிய பிபிசி இந்தி, சில பால் பொருள் நிபுணர்களிடம் கேட்டது.

எங்கள் கேள்விக்கு பதிலளித்த அமுலின் முன்னாள் நிர்வாக இயக்குநரும், தற்போது இந்திய பால் பண்ணையாளர் சங்கத்தின் தலைவருமான ஆர்.எஸ். சோதி, "இந்த விளம்பரத்தை அதிலும் குறிப்பாக ஆன்லைன் சந்தையில் பார்த்து வருகிறேன். அங்கு பிரபலமான கூட்டுறவு நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்கள் தங்கள் சிறந்த நெய்யை ஒரு கிலோ ரூ.600 முதல் ரூ.1,000 வரை விற்கின்றன.

அதே நேரத்தில், அதே நெய்யை ஏ2 என்று பெயரிட்டு கிலோ இரண்டு முதல் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கின்றனர். இது வெவ்வேறு வழிகளில் விளம்பரப்படுத்தப்படுகிறது. சிலர் இதை பிலோனா நெய் என்றும், சிலர் உள்நாட்டு பசு இனங்களின் பாலில் இருந்து தயாரிக்கப்பட்ட ஆரோக்கியமான நெய் என்றும் விற்கின்றனர்," என்று தெரிவித்தார்.

"ஏ1 மற்றும் ஏ2 என்பது ஒரு கொழுப்பு அமில சங்கிலியுடன் இணைக்கப்பட்டுள்ள ஒரு வகை புரதம் என்பதை முதலில் தெளிவுபடுத்திவிடுகிறேன். இப்போது எது சிறந்தது என்று விவாதம் நடந்து வருகிறது, ஆனால் எது சிறந்தது என்பதற்கு எந்த அறிவியல் ஆதாரமும் இல்லை என்பதை சொல்லிக்கொள்கிறேன்.

இது விவாதத்திற்கு உரிய விஷயமே இல்லை. ஆனால் ஏ2 சிறந்தது என்று கூறப்படுகிறது, இது தவறு. இவை இரண்டு வகையான பீட்டா-கேசின் புரதங்கள், இந்த புரத சங்கிலியின் 67-வது அமினோ அமிலத்தின் மாற்றத்தால் இந்த வேறுபாடு ஏற்படுகிறது," என்று அவர் தெரிவித்தார்.

ஏ2 நெய்யின் ஊட்டச்சத்து பலன்கள் மற்றும் அதன் மருத்துவ குணங்கள் குறித்து மிகைப்படுத்தப்பட்ட கூற்றுகள் உள்ளன என்று ஆர்.எஸ். சோதி கூறுகிறார்.

"நெய்யில் 99.5 சதவிகிதம் கொழுப்பு உள்ளது. வேறு சிலவும் உள்ளன. எனவே எனது நெய்யில் ஏ2 புரதம் உள்ளது, இது உடலுக்கு மிகவும் பயனளிக்கும் என்று எப்படி கூற முடியும்?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார்.

அவரது கருத்துப்படி, இது மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறொன்றுமில்லை. இது சந்தைப்படுத்தல் மூலம் மக்களை ஏமாற்றுவதாகும்.

ஆனால், A2 நெய் விற்கும் பல பிராண்டுகள் வந்து போய்விட்டன என்றும், அவை சந்தையில் நிலைத்திருப்பது கடினம் என்றும் அவர் கூறுகிறார். ஏனெனில், இந்த நிறுவனங்கள் சந்தைப்படுத்தலுக்கு அதிகம் செலவு செய்கின்றன, பின்னர் தாக்குப்பிடிக்க முடியாமல் அவை சந்தையில் இருந்து வெளியேறுகின்றன.

சுகாதார நிபுணர்கள் கூறுவது என்ன?

ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஏ2 நெய் என்பது ஒரு விளம்பர உக்தி என பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்

ஏ2 நெய் என்ற பெயரில் விற்பனை செய்யப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலன் தரக்கூடியது என சொல்லப்படுவது குறித்து சுகாதார வல்லுநர்களும் கேள்வி எழுப்புகின்றனர்.

டெல்லியில் உள்ள மனித நடத்தை மற்றும் இணை அறிவியல் நிறுவனத்தில் மூத்த உணவியல் நிபுணரான மருத்துவர் விபூதி ரஸ்தோகி, "ஏ2 நெய் என்ற பெயரில் விற்கப்படும் நெய் வழக்கமான நெய்யை விட அதிக பயனளிக்கும் என்று கூறப்படுவது அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படும் வரை, இந்த நெய் சிறந்தது என்று எப்படி கூற முடியும்?" என பிபிசி இந்தியிடம் தெரிவித்தார்.

"இரண்டாவது, இந்த வகையான நெய் இயந்திரங்கள் மூலம் பிரித்தெடுக்கப்படவில்லை என நீங்கள் கூறினால், ஏ2 புரதம் பாலிலிருந்து எவ்வாறு பிரித்தெடுக்கப்படுகிறது என்ற கேள்வி எழுகிறது. அவ்வாறு செய்வது சாத்தியமில்லை. ஏ2 நெய் வழக்கமான நெய்யை விட அதிக பலனளிக்கிறது என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படும்வரை அது ஒரு விற்பனை தந்திரம் என்றே அழைக்கப்படும் என்பதுதான் உண்மை. ஏ2 புரதம் சிறந்தது என்பதற்கு இதுவரை எந்த ஆதாரமும் இல்லை."

நெய் புரதத்திற்காக உண்ணப்படுவதில்லை என்றும் கூறுகிறார் மருத்துவர் ரஸ்தோகி. ஆனால் ஏ2 நெய் புரதத்தின் பெயரால் விற்பனை செய்யப்படுகிறது. நெய்யில் பெயரளவுக்கே புரதம் இருக்கிறது.

ஆயுர்வேதத்தின் படி ஏ2 கூடுதல் நலன்ளுடையது என்று நிறுவனங்கள் கூறுகின்றன. ஆனால் ஏ2 நெய் என சொல்லப்படுவதை உண்பது ஆரோக்கியத்திற்கு நல்லது என ஆயுர்வேதம் எந்த கூற்றையும் முன்வைக்கவில்லை என்றார் அவர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c8rpr2xy65jo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.