Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

10 AUG, 2025 | 09:19 AM

image

(நா.தனுஜா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அன்றைய தினமே இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை உயர்ஸ்தானிகரால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது.

தற்போது நடைமுறையில் இருக்கும் இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல் என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும்.

அதேவேளை இலங்கை தொடர்பில் நடைமுறையில் இருக்கும் இத்தீர்மானம் எதிர்வரும் செப்டெம்பர் மாதத்துடன் முடிவுக்குவரும் நிலையில், இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானத்தைக் கொண்டுவரவிருப்பதாக பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் ஏற்கனவே அறிவித்துள்ளன.

இருப்பினும் அத்தீர்மானத்தின் திருத்தப்படாத வரைபு மற்றும் அதன் மீதான வாக்கெடுப்புக்கான திகதி என்பன இன்னமும் வெளியாகவில்லை. இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் இலங்கை சார்பில் வெளிவிவகார, வெளிநாட்டு அலுவல்கள் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழுவினர் பங்கேற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222190

  • 4 weeks later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை ஆரம்பம்

07 Sep, 2025 | 08:27 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய திங்கட்கிழமை (8) ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில், நாளைய தினமே ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் இலங்கை தொடர்பான எழுத்துமூல அறிக்கை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஜெனீவாவில் நாளைய தினம் ஜெனீவா நேரப்படி காலை 10.00 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 1.30) ஆரம்பமாகவிருக்கும் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதலாம் நாள் அமர்வில் உலகளாவிய மனித உரிமைகள் நிலைவரம் குறித்து ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உரையாற்றுவார்.

அதனைத்தொடர்ந்து மியன்மார் தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கை மற்றும் சுயாதீன விசாரணைப்பொறிமுறை குறித்த விவாதம் நடைபெறும். அதன் பின்னர் ஜெனீவா நேரப்படி நண்பகல் 12.15 மணிக்கு (இலங்கை நேரப்படி பி.ப 3.45) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் இலங்கை தொடர்பான அறிக்கை மீதான விவாதம் இடம்பெறும்.

'இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமங்களுக்கு ஏற்றவாறு அமையக்கூடிய சுயாதீனமானதும், நியாயமானதும், செயற்திறன்மிக்கதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்குத் தற்போதுவரை தவறியிருக்கின்றன.

இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பவற்றை உறுதிப்படுத்துவதற்கு பாதிக்கப்பட்ட தரப்பினரதும், சர்வதேச சமூகத்தினதும் நம்பிக்கையை வென்றெடுத்த முன்னேற்றகரமானதொரு செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகரவேண்டும்' என உயர்ஸ்தானிகர் அலுவலக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்வறிக்கை தொடர்பில் உறுப்புநாடுகளின் பிரதிநிதிகள் தமது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றியதன் பின்னர், இலங்கை சார்பில் கூட்டத்தொடரில் பங்கேற்றவுள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித்த ஹேரத் அரசாங்கத்தின் நிலைப்பாட்டையும், தாம் முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளையும் தெளிவுபடுத்திப் பதிலளிப்பார்.

இது இவ்வாறிருக்க இம்முறை இலங்கை தொடர்பில் பிரிட்டன் தலைமையிலான உறுப்புநாடுகளினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ள புதிய பிரேரணை குறித்த உத்தியோகபூர்வமற்ற கலந்துரையாடல்கள் இம்மாதம் 15 ஆம் திகதியின் பின்னர் ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ளன.

https://www.virakesari.lk/article/224408

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்!

08 Sep, 2025 | 09:45 AM

image

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த  கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. 

இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் இடமபெறவுள்ளது.

இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். 

இந்த விஜயத்தின் போது அரச பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உள்ளிட்ட  பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. 

இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது  கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார்.

இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். 

இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது,

எந்தவொரு வெளியகபொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியொழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காகது. எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம்.

எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

https://www.virakesari.lk/article/224496

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இலங்கைக்கு மிக முக்கியத்துவமானது : அரசாங்கம் மிக நுணுக்கமாக அணுக வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹாநாம

08 Sep, 2025 | 01:58 PM

image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2010 இலிருந்து இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அவற்றை இணைத்து ஐ.நா. பொதுசபைக் கூட்டத்திலும் பின்னர் பாதுகாப்பு சபையிலும் சமர்ப்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே அரசாங்கம் இதனை மிகவும் நுணுக்கமாக அணுக வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் இவ்வாண்டும் புதிய பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. 

இவ்வாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகளை நாம் நிறைவுக்கு கொண்டு வராவிட்டால் இவை அனைத்தையும் இணைத்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பர். 

அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதனை நேரடியாக பாதுகாப்பு சபை கூட்டத்துக்கும் அனுப்ப முடியும். இது மிகவும் பாரதூரமானதாகும்.

பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எமக்கு சார்பாக இந்த பிரேரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிட்டால் எமக்கு வெவ்வேறு தடைகள் விதிக்கப்படக் கூடும். 

எனவே இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்முறை இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த வரைவொன்று வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்டது. 

அதில் இலங்கை செய்ய வேண்டியவை தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பிரதானமானது புதிய பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க வேண்டும் என்பதாகும்.

ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை சிறந்ததாகும். காரணம் இலங்கை ஒரு சுயாதீன இராச்சியமாகும். எவ்வாறிருப்பினும் இதற்கு முந்தைய பிரேரணைக்கு அமெரிக்க இணை அனுசரணை வழங்கியிருக்கிறது.

ஆனால் தற்போது அமெரிக்கா அதன் அங்கத்தவர்களை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் இதற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தற்போது தனித்து விடப்பட்டுள்ளது.

எனவே தான் அவர்கள் எம்சார்பில் சிறந்த விடயங்களை முன்வைத்திருந்தனர். தற்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எவ்வாறிருப்பினும்  பிரதான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றில் முதலாவது ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும். இதில் கையெழுத்திட்டால் இராணுவத்தினர் எவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. 

இரண்டாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு நாம் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம். அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது சிறந்த விடயமாகும். திட்டமிட்ட குற்றச்செயல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுவதால் இது தொடர்பில் சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும்.

அடுத்தது தேசிய நல்லிணக்கம், புனர்வாழ்வளிப்பு உள்ளிட்டவையாகும். அவை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இறுதியான வடக்கிலுள்ள காணி விடுவிப்பு பிரச்சினையாகும். தற்போது வடக்கில் பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. 

ஜெனீவாவில் 77 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றால் போதுமானது. அதற்கான சாதகமான சூழல் எமக்கு காணப்படுகிறது. இதில் கால அவகாசத்தை கோருவதை விட முறையான நீண்டகால வேலைத்திட்டத்தை திட்டமிட வேண்டும். 

எவ்வாறிருப்பினும் இவற்றில் முக்கியமானது இந்தியாவின் நிலைப்பாடாகும். இந்தியா, இலங்கைக்கு சாதமாக தீர்மானத்தை எடுக்கும் பட்சத்தில் அதிகளவான நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்றார்.

https://www.virakesari.lk/article/224511

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மனிதப்புதைகுழி அகழ்வு சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் - பேரவையில் உறுப்புநாடுகள் வலியுறுத்தல்

Published By: Vishnu

09 Sep, 2025 | 01:31 AM

image

(நா.தனுஜா)

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டுவரும் மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு ஏற்றவாறு அமையவேண்டும் எனவும், தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும் பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட பேரவையின் உறுப்புநாடுகள் வலியுறுத்தியுள்ளன.  

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நேற்று திங்கட்கிழமை ஜெனீவாவில் ஆரம்பமானது. நேற்றைய தொடக்க அமர்வில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதுடன் அதனைத்தொடர்ந்து அறிக்கை மீதான விவாதம் நடைபெற்றது.

அதன்படி தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புக்களின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன்கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்பதாகத் தெரிவித்த ஜப்பான், வட-கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டுவரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தி செயற்திட்டங்கள் தொடர்பில் பாராட்டை வெளிப்படுத்தியது. அதேபோன்று நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புக்களை வழங்குவதற்குத் தாம் தயாராக இருப்பதாகவும் அறிவித்தது.

அதேவேளை நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டிய பிரிட்டன், மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்படவேண்டியது அவசியம் என வலியுறுத்தியது. அத்தோடு சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுவது குறித்தும், பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அச்சட்டம் நீக்கப்படாமை குறித்தும் அதிருப்தியை வெளிப்படுத்தியது.

அதேபோன்று தாம் இலங்கையின் நீண்டகால நட்புறவு நாடாகத் திகழ்வதாகத் தெரிவித்த அவுஸ்திரேலியா, மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும், நிலைமாறுகால நீதியை உறுதிசெய்வதற்கும் இலங்கையினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையாக ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டது. அத்தோடு நபர்களைத் தன்னிச்சையாகக் கைதுசெய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் எனவும், நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியது.

மேலும் நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் எனவும், சட்டத்தின் ஆட்சி நிலைநாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின.

https://www.virakesari.lk/article/224579

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஐ.நா.வில் எமக்கு அழுத்தமில்லை : மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது - அமைச்சரவை பேச்சாளர்

09 Sep, 2025 | 09:43 PM

image

(எம்.மனோசித்ரா)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது கடந்த அரசாங்கங்களுக்கு காணப்பட்ட அழுத்தம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தேசிய பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். எனினும் அதற்கான காலம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது. இது குறித்த சட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும்.

இதற்கு முன்னர் செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமானால் அரசாங்கங்கள் எவ்வாறு அழுத்தத்தில் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. கடந்த ஜூனில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை எமக்கு சார்பானதாகவே காணப்படுகிறது.

இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எமது நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, நம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேசிய பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்க்ள குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் மதிப்பீடுகளையும் அங்கீகரிக்கின்றோம். எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அநாவசிய தலையீடுகளை செலுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை. அதேவேளை சிறிய அடிப்படைவாத, தீவிரவாத குழுக்கள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது.

பயங்கரவாத தடை சட்டத்தையும் இரத்து செய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நிகழ்நிலை காப்பு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றார்.

https://www.virakesari.lk/article/224664

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளக மற்றும் கலப்புப்பொறிமுறைகளை முற்றாக நிராகரியுங்கள் - ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் 69 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக வலியுறுத்தல்

Published By: Vishnu

11 Sep, 2025 | 04:19 AM

image

(நா.தனுஜா)

பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் என கூட்டாக எச்சரித்திருக்கும் புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள், உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிக்குமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் உறுப்புநாடுகளிடம் வேண்டுகோள்விடுத்துள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இக்கூட்டத்தொடரில் இலங்கை விவகாரம் தொடர்பில் உடனடி நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என வலியுறுத்தி தமிழ் தகவல் நடுவம், தமிழ் ஆய்வு நிலையம், இலங்கைத் தமிழ்ச்சங்கம், தமிழ் இளையோர் அமைப்பு, சர்வதேச ஈழத்தமிழர் பேரவை, கனேடியத் தமிழ்த்தேசிய அவை, உலகத் தமிழ் அமைப்புக்களின் பேரவை என்பன உள்ளடங்கலாக பிரிட்டன், அமெரிக்கா, கனடா, சுவிட்ஸர்லாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, இந்தியா, மலேசியா உள்ளிட்ட உலகநாடுகள் பலவற்றிலும் இயங்கிவரும் 69 புலம்பெயர் தமிழர் அமைப்புக்கள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் அங்கம் வகிக்கும் உறுப்புநாடுகளுக்குக் கூட்டாகக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளன.

ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுவரும் இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தின் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான தன்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு ஏதுவான பலதரப்பட்ட வழிமுறைகள் என்பன தொடர்பில் அக்கடிதத்தில் விரிவாக விளக்கமளிக்கப்பட்டுள்ளன.

அத்தோடு பொறுப்புக்கூறலுக்கான ஆக்கபூர்வமான செயன்முறையை இலங்கை அரசாங்கத்திடம் வலியுத்துவதன் ஊடாக ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் உள்ளகப்பொறிமுறைக்கான இடைவெளியை வழங்குவதானது, அத்தகைய உள்ளகப்பொறிமுறைகளின் நீண்டகாலத்தோல்வியின் பின்னணியில் அச்சுறுத்தலானதொரு நிலையையே தோற்றுவிக்கும் எனவும் அக்கடிதத்தில் கரிசனை வெளியிடப்பட்டுள்ளது. அத்தோடு சுயாதீன சர்வதேச பொறுப்புக்கூறல் பொறிமுறையொன்றை தமிழ்மக்கள் எதிர்பார்த்திருக்கும் சூழ்நிலையில், இவ்வாறான நடவடிக்கைகள் ஐக்கிய நாடுகள் சபையின் மீதான நம்பிக்கையில் சரிவு ஏற்படுவதற்கும், தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு தொடர்வதற்கும் வழிகோலும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்துவதற்கான உள்ளக மற்றும் கலப்புப் பொறிமுறைகளை முற்றாக நிராகரிப்பதாகத் தெரிவித்துள்ள அவ்வமைப்புக்கள், உள்ளகப்பொறிமுறையை நிராகரிக்குமாறும், இனவழிப்புப் பிரகடனத்தின்கீழ் சர்வதேச நீதிமன்றத்தில் இலங்கை தொடர்பான விசாரணைகளை ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளன.

https://www.virakesari.lk/article/224771

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் ஜெனிவா விஜயம்

Published By: Digital Desk 3

14 Sep, 2025 | 11:10 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் மீளாய்வு கூட்டத்தொடர் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இதில் பங்கேற்பதற்காக நீதி அமைச்சின் சிறப்பு குழு இவ்வாரம் இறுதியில் ஜெனிவாவுக்கு செல்லவுள்ளது. இந்த குழுவில் நீதி அமைச்சர் ஹர்ஷண ராஜகருணா மற்றும் பிரதி அமைச்சர் முனீர் மௌலவி உட்பட நீதி அமைச்சின் அதிகாரிகள் சிலர் உள்ளடங்குவதாக வெளிவிவகார அமைச்சின் முக்கிஸ்தர் ஒருவர் குறிப்பிட்டதுடன், எதிர்வரும் 24 ஆம் திகதி புதன்கிழமை இந்த விஜயம் திட்டமிட்டுள்ள போதிலும், அதற்கு முன்னர் பெரும்பாலும் நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்வதற்கான வாய்ப்புகள் உள்ளதாக குறிப்பிட்டார்.

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு கடந்த திங்கட்கிழமை ஜெனிவா சென்று, இலங்கையின் நிலைப்பாட்டை அறிவித்ததன் பின்னர் நாடு திரும்பியுள்ள நிலையில், நீதி அமைச்சின் சிறப்பு குழு மீண்டும் ஜெனிவா செல்கிறது. இவ்வாறானதொரு நிலையில், ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் அறிக்கை ஒரு கலவையான உணர்வைப் பிரதிபலித்திருந்தது. இலங்கை அரசு அண்மையில் அளித்த வாக்குறுதிகளை அவர் அங்கீகரித்தாலும், அவை வெறும் வார்த்தைகளாக நின்றுவிடாமல், உறுதியான நடவடிக்கைகளாக மாற வேண்டும் என அவர் வலியுறுத்தி இருந்தார்.

கடந்தகால மீறல்கள் மற்றும் தண்டனைகளிலிருந்து தப்பிக்கும் போக்கு (Impunity) உருவாக்கிய காயங்களை ஆற்றுவதற்கு இலங்கை அரசுக்கு ஒரு அரிய வாய்ப்பு கிடைத்துள்ளதாகவும் நீதியையும் பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதன் மூலம் நல்லிணக்கத்திற்கான ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க முடியும் என்றும் ஆணையாளர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்தபோது செம்மணி மனிதப்புதைகுழி, மற்றும் கணவனுக்காகக் காத்திருக்கும் தெற்கைச் சேர்ந்த ஒரு பெண் என பாதிக்கப்பட்ட பலரிடமிருந்து நேரடியாகக் கேட்ட துயரங்களை வெளிப்படுத்தினார். சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை நிறுவுவது ஒரு நல்ல முயற்சி எனப் பாராட்டிய ஆணையாளர் வோல்கர் டேர்க், இதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பு அவசியம் என வலியுறுத்தினார். மேலும் சர்வதேச மனிதாபிமானச் சட்ட மீறல்கள் குறித்து விசாரிக்க சுதந்திரமான, பிரத்யேக நீதிப் பொறிமுறையின் அவசியம், பயங்கரவாதத் தடைச் சட்டம் உடனடியாக இடைநிறுத்தப்பட வேண்டும். அத்துடன், நிகழ்நிலைக்காப்புச் சட்டம், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச சமவாயச் சட்டம் உள்ளிட்ட மீறல்களுக்கு வழிவகுக்கும் சட்டங்கள் திருத்தப்பட வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டினார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில், மேற்கொண்டு வரும் உள்நாட்டு சீர்திருத்த நடவடிக்கைகளை அரசாங்கம் சுட்டிக்காட்டியது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கி, அதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஒன்றை உருவாக்குதல், இணையவழி பாதுகாப்புச் சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை குறிப்பிட்டுள்ளது. காணாமல்போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் போன்ற உள்நாட்டுப் பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், காணாமல் போனோர் விவகாரங்களை விரைவுபடுத்த மேலதிக நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

ஐ.நா. உயர்ஸ்தானிகர் ஒரு உறுதியான சர்வதேச அழுத்தத்தை உருவாக்கும் அதே வேளையில், இலங்கை அரசு உள்நாட்டு நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி சர்வதேச சமூகத்தின் தலையீட்டைத் தவிர்க்க முயல்கிறது. இந்த முயற்சிகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையிலேயே நீதி அமைச்சின் சிறப்பு குழு ஜெனிவா செல்கிறது. 

https://www.virakesari.lk/article/225034

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.