Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், ANNAMALAI/X

கட்டுரை தகவல்

  • சிராஜ்

  • பிபிசி தமிழ்

  • 7 மணி நேரங்களுக்கு முன்னர்

"வள்ளியம்மா, சிறையில் அடைக்கப்பட்டதற்காக நீ வருந்துகிறாயா?" என்று நான் கேட்டேன். 'வருந்துவதா? மீண்டும் கைது செய்யப்பட்டால் இப்போதே கூட சிறைக்குச் செல்லத் தயாராக இருக்கிறேன்' என்று அந்தப் பெண் கூறினாள்."

"ஆனால் அது உன் மரணத்தில் முடிந்தால் என்ன செய்வது? என நான் கேட்டேன். 'எனக்குப் பிரச்னையில்லை. தாய்நாட்டிற்காக உயிரிழக்க யார் தான் விரும்ப மாட்டார்கள்?' என்று அவரிடமிருந்து பதில் வந்தது"

மகாத்மா காந்தி தனது 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' எனும் நூலில், தில்லையாடி வள்ளியம்மை குறித்து எழுதியுள்ள வரிகள் தான் இவை.

1898ஆம் ஆண்டு பிப்ரவரி 22ஆம் தேதி தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் ஒரு புலம்பெயர் தமிழ் தம்பதியினருக்கு மகளாகப் பிறந்தவர் வள்ளியம்மை. இவரது பெற்றோர் தமிழ்நாட்டின் மயிலாடுதுறை மாவட்டம், தில்லையாடி கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி - மங்களத்தம்மாள்.

வள்ளியம்மை தனது 15ஆம் வயதிலேயே, தென் ஆப்பிரிக்காவில் இனவெறியின் அடிப்படையில் இந்தியர்களுக்கு விரோதமாக கொண்டுவரப்பட்ட சட்டங்களுக்கு எதிரான மகாத்மா காந்தியின் சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டவர்.

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

படக்குறிப்பு, தில்லையாடி வள்ளியம்மையின் உருவச்சிலை (தில்லையாடி கிராமம்)

அதன் காரணமாக அந்த இளம் வயதிலேயே அவர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்த கடுமையான சூழ்நிலைகள், வள்ளியம்மையின் உடல்நிலையைப் பாதித்தன. பிப்ரவரி 1914இல் விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் உடல்நிலை மோசமாகி அவர் உயிரிழந்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் மிக முக்கியமான பங்கு வகித்த சத்தியாகிரகத்திற்கு பெரும் உத்வேகம் அளித்தது 'வள்ளியம்மை மற்றும் தென் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த பல தமிழ் மக்களின் தியாகங்கள் தான்' என்று காந்தி தனது உரைகளில் குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்க சத்தியாகிரகம் (1907–1914) என்பது மகாத்மா காந்தி இந்தியாவில் நடத்திய அஹிம்சை வழியிலான சத்தியாகிரக போராட்டங்களுக்கு ஒரு முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.

தென்னாப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, தென்னாப்பிரிக்காவில் வசித்த இந்தியர்களுடன் மகாத்மா காந்தி (1914)

மகாத்மா காந்தி, 1893ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவிற்கு ஒரு வழக்கறிஞராகப் பணிபுரிய சென்றார். தென்னாப்பிரிக்காவில் அந்தக் காலகட்டத்தில் வாழ்ந்துவந்த இந்திய சமூகங்கள், அங்கு ஆதிக்கம் செலுத்திய ஆங்கிலேயர்களால் கடுமையான இனவெறி ஒடுக்குமுறைக்கு ஆளானார்கள். இந்தியர்களைக் குறிவைத்து பாரபட்சமான சட்டங்கள் நிறைவேற்றப்பட்டன. அவர்களுக்கு வாக்குரிமை மறுக்கப்பட்டது. அவர்கள் இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்பட்டனர்.

மேலும், இந்தியாவில் இருந்து தென் ஆப்பிரிக்காவிற்கு 5 வருட ஒப்பந்த அடிப்படையில் அழைத்துச் செல்லப்படும் இந்தியர்கள் அங்கு ஒப்பந்தம் முடிந்தவுடன், மீண்டும் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திடலாம் அல்லது சுதந்திர இந்தியர்களாக வாழலாம் அல்லது சொந்த செலவில் இந்தியாவிற்கு திரும்ப வேண்டும் என்பதே விதி. அவ்வாறு சுதந்திர இந்தியர்களாக வாழ வேண்டும் என்று விரும்பியவர்கள், 3 பவுண்டுகள் வருடாந்திர வரி செலுத்த வேண்டும்.

இது ஒரு குடும்பத்திற்கு 3 பவுண்டுகள் என்று இல்லாமல், 13 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் மற்றும் 16 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் என ஒவ்வொரு இந்தியருக்கும் 3 பவுண்டுகள் என அறிவிக்கப்பட்டது. இது அப்போதைய சூழலில் இந்தியர்களுக்கு மிகப்பெரிய தொகை.

இந்தச் சட்டத்தின் நோக்கம் என்பது, ஒன்று இந்தியர்கள் குறைவான கூலிக்கு மீண்டும் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்யவேண்டும் அல்லது தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.

பின்னர், 1906 ஆம் ஆண்டில் 'ஆசியப் பதிவுச் சட்டம்' (ப்ளாக் ஆக்ட்) அமலுக்கு வந்தது. இது, தென்னாப்பிரிக்காவின் டிரான்ஸ்வால் மாகாணத்தின் இந்திய மற்றும் சீன சமூகங்களை இலக்காகக் கொண்டு இயற்றப்பட்ட ஒரு பாரபட்சமான சட்டமாகும்.

ஆசியப் பதிவுச் சட்டத்தின்படி, எட்டு வயதுக்கு மேற்பட்ட அனைத்து ஆசிய ஆண்களும் பதிவு செய்து, அடையாளச் சான்றிதழ்களை எடுத்துச் செல்ல வேண்டும். இதில் தனிப்பட்ட விவரங்கள் மற்றும் கைரேகைகள் இருக்கும். இந்தச் சட்டத்திற்கு இணங்கத் தவறினால் அபராதம், சிறைத்தண்டனை அல்லது நாடுகடத்தலுக்கு வழிவகுக்கும்.

இத்தகைய சட்டங்களை எதிர்த்தே தனது சத்தியாகிரகப் போராட்டத்தை தொடங்கினார் காந்தி. அதற்கு தென்னாப்பிரிக்காவின் புலம்பெயர் இந்தியக் குடும்பங்கள் பெரும் ஆதரவளித்தன. அதில் ஒன்று தில்லையாடி வள்ளியம்மையின் குடும்பம்.

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், RANDOM CREATIONS

படக்குறிப்பு, சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா'

இது சுசான் பிராங்கோ எழுதிய 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' எனும் தில்லையாடி வள்ளியம்மையின் வாழ்க்கை வரலாற்று நூலில் பின்வருமாறு விவரிக்கப்பட்டுள்ளது.

"செப்டம்பர் 11, 1906, ஒரு அமைதியான போராட்டத்தின் தொடக்கத்தைக் குறித்தது. அதற்கு சத்தியாகிரகம் என்று மோகன்தாஸ் காந்தி பெயரிட்டிருந்தார். என்னுடைய இளம் வயதிலேயே, இந்த அறியப்படாத, முயற்சிக்கப்படாத, போராட்டத்தின் ஒரு பகுதியாக நான் இருந்தேன். எதிர்காலத்தில் அது ஒரு மிகப்பெரிய போராட்டமாக மாற இருந்தது...".

அதைத் தொடர்ந்து 1911-1913 காலகட்டத்தில் மேலும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. 'தேவாலயங்களில் கிறிஸ்தவச் சடங்குப்படி நடத்தப்படும் திருமணங்கள் மட்டுமே செல்லும்' என்று சட்டம் கொண்டுவரப்பட்டது. இது பிற மதங்களைச் சேர்ந்த மக்களுக்கு பெரும் அதிர்ச்சி அளிக்கிறது. அதன் பிறகு சத்தியாகிரகப் போராட்டங்கள் மேலும் தீவிரமடைகின்றன.

தென்னாப்பிரிக்காவின் காலனித்துவ ஆட்சிக் காலத்தில் தேவாலய சட்டத்தை மீறி நடத்தப்பட்ட அனைத்து திருமணங்களும் செல்லாது என்று அறிவித்தபோது, ஆயிரக்கணக்கான திருமணங்கள் ரத்து செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து காந்தி முன்னெடுத்த சத்தியாகிரக போராட்டத்தில் கலந்துகொண்டார் வள்ளியம்மை.

காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன.

தென்னாப்பிரிக்காவில் மகாத்மா காந்தி 1910 இல் நிறுவிய ஆசிரமம் தான் 'டால்ஸ்டாய் பண்ணை'. டிரான்ஸ்வால் மாகாணத்தில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் பாகுபாட்டிற்கு எதிரான அவரது சத்தியாக்கிரக இயக்கத்தின் தலைமையகமாக இது செயல்பட்டது. 1100 ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த இந்தப் பண்ணையில் பல இந்தியக் குடும்பங்கள் தங்கியிருந்தன. இங்கு வள்ளியம்மையும் சில காலம் தனது தாயுடன் வசித்துள்ளார்.

"இந்தப் பண்ணை அமைதியான இடமாக இருந்தது, அங்கு இந்துக்கள், முஸ்லிம்கள், பார்சிகள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் யூதர்கள் அனைவரும் ஒற்றுமையுடனும், பரஸ்பர மரியாதையுடனும் வாழ்ந்தனர். இளைஞர்களும் முதியவர்களும் தங்கள் வயதுக்கு ஏற்ற எந்த வேலையையும் செய்தனர்" என டால்ஸ்டாய் பண்ணை குறித்து 'சோல் ஃபோர்ஸ்- வள்ளியம்மா' நூலில் வள்ளியம்மை விவரிக்கிறார்.

தென் ஆப்பிரிக்காவில் இந்தியர்களுக்கு எதிரான இனவெறி உச்சத்தில் இருந்தது குறித்தும் அந்த நூலில் அவர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார்.

"நான் ஆப்பிரிக்காவில் தொடர்ந்து வாழ நினைத்தேன், இவ்வளவு அற்புதமான ஒரு நாட்டில் நான் பிறந்ததால் அல்ல, மாறாக என் இதயம் இங்கிருக்கிறது என்பதால். நான் அநீதியை எதிர்த்துப் போராட முடிவு செய்தேன். என் திறமைகளால் பிரச்னைகளைச் சமாளிக்க, ஞானத்தால் சவால்களை வெல்ல, அன்பால் வெறுப்பைக் கைவிடச் செய்ய, முழுமையான நிராகரிப்புடன் இனவெறியை ஒழிக்கவும் முடிவு செய்தேன்."

தில்லையாடி வள்ளியம்மை, மகாத்மா காந்தி, சத்தியாகிரகம், தென்னாப்பிரிக்கா, சுதந்திர தினம், சுதந்திரப் போராட்டம்

பட மூலாதாரம், ARUNANKAPILAN

படக்குறிப்பு, தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் கட்டப்பட்டுள்ள நினைவு மண்டபம்

1913ஆம் ஆண்டில், வள்ளியம்மை தனது தாய் மற்றும் ஏராளமான பெண்களுடன், காந்தியின் டால்ஸ்டாய் பண்ணை அமைந்திருந்த டிரான்ஸ்வாலில் இருந்து நடால் வரை ஊர்வலம் சென்றார். அங்கீகரிக்கப்படாத ஊர்வலங்களை தடைசெய்யும் சட்டங்களை மீறி, நியாயமற்ற நடைமுறைகளுக்கு எதிராகப் போராடினார். இதில் பெண்கள் கைக்குழந்தைகளுடன் போராட்டத்தில் பங்கேற்றனர்.

போராட்டத்தின் ஒருபகுதியாக அங்கிருந்த நிலக்கரிச் சுரங்கங்கள் மற்றும் ரயில்வே முகாம்களுக்கு சென்று தொழிலாளர்களை, பெரும்பாலும் தமிழர்களை சந்தித்து சத்தியாகிரக போராட்டம் குறித்து பேசினர். 'மூன்று பவுண்டு வரி' என்ற சட்டம் ஒழிக்கப்படும் வரை வேலையை நிறுத்துமாறு அவர்களிடம் வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து அக்டோபர் 21, 1913 காந்தியின் மனைவி கஸ்தூர்பா, வள்ளியம்மை உள்பட பல பெண்கள் கைது செய்யப்பட்டனர். கடின உழைப்புடன் கூடிய மூன்று மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, மாரிட்ஸ்பர்க் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கு வள்ளியம்மை நோய்வாய்ப்பட்டார்.

அவர் பிப்ரவரி, 1914ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டபோது கடும் காய்ச்சலுடன் இருந்தார் என மகாத்மா காந்தி 'சத்தியாகிரகா இன் சௌத் ஆப்பிரிக்கா' நூலில் குறிப்பிடுகிறார்.

"வள்ளியம்மா ஆர். முனுசாமி என்ற அந்த பதினாறு வயதுடைய இளம்பெண்ணை எப்படி என்னால் மறக்க முடியும்? ஜோகன்னஸ்பர்க்கைச் சேர்ந்த அவளை நான் பார்த்தபோது அவள் படுக்கையில் கிடத்தப்பட்டிருந்தாள். அவள் ஒரு உயரமான பெண்ணாக இருந்ததால், அவளுடைய மெலிந்த உடலைப் பார்ப்பது எனக்கு வேதனையாக இருந்தது."

சிறையிலிருந்து விடுதலையான சில நாட்கள் கழித்து, பிப்ரவரி 22ஆம் தேதி தனது பிறந்தநாள் அன்றே உடல்நலக்குறைவால் அவரது உயிர் பிரிந்தது.

"இந்தியா என்ற நாடு இருக்கும்வரை வரை, தென்னாப்பிரிக்க சத்தியாகிரக வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் நிலைத்து நிற்கும்." என காந்தி குறிப்பிட்டார்.

வள்ளியம்மையை நினைவுகூரும் வகையில், தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள தில்லையாடியில் நினைவு மண்டபம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. அங்கு ஒரு பொது நூலகமும் செயல்பட்டுவருகிறது. இந்திய அரசின் சார்பில் 2015ஆம் ஆண்டு வள்ளியம்மையின் நூற்றாண்டு நினைவு தினத்தில் அஞ்சல் தலை வெளியிடப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cy4djz807e7o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.