Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • ஆ. நந்தகுமார்

  • பிபிசி தமிழ்

  • 19 ஆகஸ்ட் 2025, 02:52 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

டெல்லியில் உள்ள அனைத்து தெரு நாய்களையும் காப்பகங்களில் அடைக்க வேண்டும் எனச் சமீபத்தில் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது நாடு தழுவிய அளவில் ஒரு பரந்த விவாதத்தைத் தூண்டியுள்ளது.

குழந்தைகளைக் கடிப்பது, சாலையில் நடந்து செல்வோரைக் கடிப்பது, ரேபிஸ் நோய் உயிரிழப்புகள் என தெருநாய்கள் விவகாரம் ஓர் ஆபத்தான விஷயமாக மாறியுள்ளதால், ஒரு தரப்பினர் இந்த உத்தரவை வரவேற்கின்றனர்.

அதேசமயம் நாய்களை இப்படி கூண்டோடு அகற்றுவது மனிதாபிமானமற்ற செயல் என்றும், சுற்றுச்சூழலுக்கும் மனிதர்களுக்கும் பாதிப்பு ஏற்படுத்தக்கூடியது என்றும் விலங்கு நல அமைப்புகள் கூறுகின்றன.

ஆனால், இங்கு எழும் முக்கிய கேள்வி என்னவென்றால் இப்படி நாய்களை ஒட்டுமொத்தமாக அகற்ற முடியுமா? அப்படி அகற்றினால் மக்கள் வசிப்பிடங்களுக்கு என்ன ஆகும் என்பதே.

உச்சநீதிமன்றம் தனது உத்தரவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் அமைதிப் பேரணிகளும் போராட்டங்களும் நடைபெற்றன.

தெருநாய்களை முற்றிலுமாக அகற்றினால் 'சுற்றுச்சூழல் பேரழிவு'- வுக்கு வழிவகுக்கும் எனவும் இதனால் மனிதர்களுக்குத்தான் பெரும் பிரச்னை எனவும் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

'நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதி'

''நாய், பூனை, எலி போன்றவை மனிதர்கள் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பரப்பில் இயற்கையாகவே தகவமைத்து வாழும் தன்மை கொண்டவை. தெருநாய்கள் ஒரு விலங்கு மட்டுமல்ல, நகர்ப்புற சூழலியல் அமைப்பின் ஒரு பகுதியாகும். அவை மற்ற உயிரினங்களையும் மனித சமூகத்தையும் சமநிலைப்படுத்துவதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.'' என்கிறார் பிரிட்டன் எடின்பரோ பல்கலைக்கழகத்தில் மனித - விலங்கு தொடர்பு குறித்த படிப்பான பொலிட்டிகல் ஈகாலஜி பேராசிரியர் கிருத்திகா.

எடின்பரோ பல்கலைக்கழகத்தின் ''Decolonial Approaches to Street Dogs and Rabies Prevention in India'' எனும் ஆய்வில் தலைமை ஆய்வாளராக இவர் பணியாற்றியுள்ளார்.

நாய்களை ஓர் இடத்திலிருந்து அகற்றுவதால் ஏற்படும் ''Vacuum Effect" (வெற்றிடம்) காரணமாக பிரச்னை மேலும் சிக்கலாகும் என்கிறார் கிருத்திகா.

பேராசிரியர் கிருத்திகா

படக்குறிப்பு, பேராசிரியர் கிருத்திகா

''ஒரு தெருவில் இருந்து நாய்களை அகற்றினால், ஆறு மாதத்துக்குள் ஒரு புது தெரு நாய் அங்கு வந்திருக்கும். ஏனெனில் உணவு, தங்குவதற்கு வசதி போன்றவை பிற பகுதி நாய்களை இங்கு ஈர்க்கும். இந்தியா போன்ற பெரிய நாடுகளில் நாய்களின் இடப்பெயர்வைத் தடுக்க முடியாது. இதனால் புதிதாக வந்த நாய்களுக்குள்ளும், நாய்கள் மற்றும் அங்கு வசிக்கும் மக்களுக்கும் இடையே மோதல் வரும். இது சூழலை மிகவும் மோசமாக்கும்'' என்கிறார் அவர்.

அதனால்தான் உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்க்கிறது என்கிறார் கிருத்திகா.

உலக சுகாதார நிறுவனம் போன்ற உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்கிறது

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, உலகின் பல்வேறு அமைப்புகளும் நாய்களை அதன் இருப்பிடத்தில் இருந்து அகற்றும் நடவடிக்கையை எதிர்கிறது

'எலி, பூனை பிரச்னை அதிகரிக்கலாம்'

ஐரோப்பாவில் சில நாடுகள் தெரு நாய்களை அகற்றியதால் அங்கு அந்த பிரச்சினையில்லை எனக் கூறப்படும் வாதத்துக்குப் பதில் அளித்த கிருத்திகா,''பிரிட்டன் போன்ற நாடுகளில் தெருநாய்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனால், நாய் தொடர்பான பிரச்னைகள் தீரவில்லை. குப்பையாக வீசப்படும் உணவுகளை உண்ண ஓநாய்கள் வருகின்றன. இதனால் ஓநாய்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது'' என்கிறார் கிருத்திகா.

''உதாரணமாகப் பிரிட்டனின் எடின்பரோ நகரில் நான் வசிக்கிறேன். எனது அடிக்குமாடி குடியிருப்பின் பின் பகுதியில் உள்ள பூங்காவுக்குக் கூட ஓநாயும் கழுகும் வருகின்றன. சென்னையில் நீங்கள் வீட்டில் வெளியே எட்டிப்பார்த்தால் நாய் தூங்கிக் கொண்டிருப்பது போல என் வீட்டின் வெளியே எட்டிப்பார்த்தால் ஓநாய் தூங்கிக் கொண்டிருக்கும்'' என கூறுகிறார் அவர்.

சூழலியல் அமைப்பு என்பது கணிக்க முடியாதது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், மனிதர்கள் மனதில் ஒன்று நினைத்து சூழலியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் அதற்கான விளைவு வேறு ஒன்றாக இருக்கும் என்கிறார் கிருத்திகா.

''உதாரணத்துக்கு மும்பையில் சில பகுதிகளில் நாய்களுக்குக் கருத்தடை செய்யும் திட்டத்தைச் சிறப்பாக அமல்படுத்தியதால் தெருநாய்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது. அதே சமயம் பூனைகளின் தொல்லை அதிகரித்துள்ளது. நாய்களின் எண்ணிக்கை குறைவுக்கும், பூனைகளின் எண்ணிக்கை அதிகரிப்புக்கும் ஒரு முக்கிய தொடர்புள்ளது. பூனைகளுக்குக் கருத்தடை செய்யும் திட்டத்தைக் கடந்த சில ஆண்டுகளாக மும்பை மாநகராட்சி செயல்படுத்தி வருவதையும், பூனை தொல்லை குறித்து மக்கள் புகார் அளித்து வருவதையும் பார்க்கிறோம் '' என்கிறார் அவர்.

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு,'மனிதர்கள் மனதில் ஒன்று நினைத்து சூழலியல் அமைப்பில் மாற்றங்களைச் செய்ய நினைத்தால் அதற்கான விளைவு வேறு ஒன்றாக இருக்கும்'

''தெருநாய்கள் இயற்கையாகவே பூனை, எலிகளை வேட்டையாடும். உணவு போன்ற கழிவுகளை தின்று குப்பைகளைக் குறைக்கும். தெருநாய்கள் இல்லையெனில் எலிகள் பெருகி நோய் பரவும் அபாயம் ஏற்படும்'' என்கிறார் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவரும் கால்நடை மருத்துவருமான ராமகிருஷ்ணன்.

1994-ஆம் ஆண்டு சூரத்தில் அனைத்து நாய்களும் அகற்றப்பட்ட பிறகு அங்கு எலிகளின் தொல்லை அதிகரித்து மக்களுக்கு பிளேக் நோய் பரவியதாக விலங்கு நல ஆர்வலரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மேனகா காந்தி பல முன்னணி ஆங்கிலப் பத்திரிக்கையில் எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கருத்தில் இருந்து மாறுபடும் கிருத்திகா,'' எலி பிரச்னையோ அல்லது பூனை பிரச்னையோ என இந்தியாவில் என்ன பிரச்னை வரும் என கணிக்க முடியாது. அதுதான் சூழலியல் அமைப்பு. ஆனால், நிச்சயம் புது பிரச்னை ஏற்படும். நீண்ட கால தாக்கம் என்னவென்றால் நாய்கள் விட்டுச்செல்லும் சூழலியல் இடத்தை (உணவு, இடம்) வேறு விலங்குகள் அபகரித்துக் கொள்ளும்.

அமெரிக்கா மற்றும் கனடா போன்ற நாடுகளில், தெரு நாய்கள் வரலாற்று ரீதியாகத் தொடர்ந்து அகற்றப்பட்டும், அழிக்கப்பட்டும் வந்தன. அந்த இடத்தை ஓநாய்களும், ரக்கூன்களும் பிடித்துள்ளதை எங்கள் மற்றொரு ஆய்வு கண்டறிந்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை காகம், கழுகு கூட நாய்கள் உண்ணும் உணவை உண்ணும் தன்மை கொண்டவைதான் '' என்கிறார்.

மேலும் அவர், ''பிடிக்கிறதோ இல்லையோ நாம் நாய்களுடன் வாழப் பழகிவிட்டோம். ஆனால் ஓநாய், கழுகு போன்றவற்றுடன் எப்படி வாழ்வது என்பதை அறிவது மிகவும் கடினம்.'' என்கிறார்.

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

விலங்குகள் இடப்பெயர்வால் அதிகரித்த காசநோய்

பிரிட்டனில் பேட்ஜர் எனும் விலங்கு மாடுகளுக்கு காசநோயை பரப்புவதாக கண்டறியப்பட்ட பிறகு, பேட்ஜர்களை கொல்லுவதன் மூலம் நோயை கட்டுப்படுத்தலாம் என முடிவு செய்யப்பட்டாலும், விளைவுகள் மோசமாக இருந்தது என்கிறது ஓர் ஆய்வு.

ஓர் இடத்தில் இருந்த பேட்ஜர்கள் கொல்லப்பட்ட பிறகு அங்கு வேறு இடத்தில் இருந்து புதிய பேட்ஜர் அந்தப் பகுதிக்கு வந்தது. வெவ்வேறு குழுக்களை சேர்ந்த பேட்ஜர்கள் கலந்ததன் விளைவாக மாடுகளுக்கு காசநோய் பரவல் இன்னும் அதிகரித்தது.

காசநோயை கட்டுப்படுத்த பேட்ஜர்களை கொல்ல எடுத்த முடிவு, நோய் பரவலை அதிகரித்து நிலைமையை மோசமடைய வைத்ததே தவிர பிரச்னையை தீர்க்கவில்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.

அதிகரிக்கும் ஆபத்து?

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 'நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை'

இந்தியாவில் நாய்க்கடி பிரச்னை மற்றும் ரேபிஸ் நோய் பரவலாகக் காணப்படுகிறது. உலகின் ரேபிஸ் இறப்புகளில் 36% இந்தியாவில் நடப்பதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது.

இந்தியாவில் ரேபிஸின் உண்மையான பாதிப்பு முழுமையாகத் தெரியவில்லை என்றும் இருப்பினும் கிடைக்கக்கூடிய தகவல்களின்படி, இது ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் முதல் 20 ஆயிரம் இறப்புகளை ஏற்படுத்துகிறது. இந்தியாவின் ரேபிஸ் இறப்புகளில் சுமார் 30 - 60% 15 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் ஏற்படுகின்றன என அந்த அமைப்பு கூறுகிறது.

மறுபுறம், இந்திய அரசு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த தரவுகளின்படி, 2023 இல் 50 ஆக இருந்த ரேபிசால் ஏற்பட்ட உயிரிழப்பு 2024 இல் 54 ஆக அதிகரித்துள்ளது.

2024-ஆம் ஆண்டில் நாடு முழுவதும் 37 லட்சம் நாய்க்கடி சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்கத் தகவல்கள் காட்டுகின்றன

''தெருநாய்கள் குழந்தைகளையும், முதியவர்களையும் அதிகம் தாக்குவதே சமீபத்தில் மக்களின் கோபம் அதிகரித்துள்ளதுக்கு முக்கிய காரணம். இதனால் தெருநாய்களைப் பார்த்தாலே மக்கள் பீதியடைகின்றனர்'' என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன்.

சமீபத்திய உச்சநீதிமன்றம் உத்தரவு கூட டெல்லியில் தெருநாய்க் கடியால் பாதிக்கப்பட்ட மாணவி ஒருவர் ரேபிஸ் தொற்று ஏற்பட்டு உயிரிழந்ததைத் தொடர்ந்தே பிறப்பிக்கப்பட்டது.

நகரங்கள் முதல் கிராமங்கள் வரை நாய் தொல்லை ஒரு மோசமான ஆபத்தாக உருவெடுத்துள்ளது என்கிறார் மருத்துவர் ராமகிருஷ்ணன்.

''நாங்கள் வசிக்கும் குடியிருப்பில் உணவு உண்ணத் தினமும் சுமார் 10 நாய்கள் வரும். தினமும் வழக்கமாகப் பார்த்த நாய் திடீரென ஒருநாள் என்னை கடித்தது. எந்த நாய் இயல்பாக இருக்கிறது, எந்த நாய் ஆக்ரோஷமாக இருக்கிறது என்பதைக் கண்டறிவதே கடினமாக உள்ளது. அப்போதிலிருந்து தெரு நாய்களைப் பார்த்தாலே ஒரு பதற்றம் ஏற்படுகிறது. குடியிருப்பு மக்களும் குழந்தைகளும் பாதுகாப்பாக இருக்கவேண்டுமெனில் கட்டாயம் தெரு நாய்களை அகற்ற வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது'' என்கிறார் நாய்க்கடியால் பாதிக்கப்பட்ட ராஜேஸ்வரி.

இந்தியாவில் தெரு நாய்களே இல்லையென்றால் நகரங்கள் என்னவாகும்?

பட மூலாதாரம், GETTY IMAGES

சிறந்த தீர்வு என்ன?

நாய்கள் பிரச்னைக்கு ஒற்றை தீர்வு என எதுவும் இல்லை என்கிறார் பேராசிரியர் கிருத்திகா.

ரேபிஸ் நோய், நாய்க்கடி மற்றும் விழிப்புணர்வு என மூன்றாக இதனைப் பிரித்து பார்த்தால் மட்டுமே பலன் கிடைக்கும் என்கிறார் அவர்.

''நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துவதுதான் சிறந்த தீர்வாக இருக்கும். அகற்றுவது அல்ல. கடந்த 20 ஆண்டுகளாக நாய்களைக் கொல்வது, ஓர் இடத்தில் இருந்து அகற்றுவது போன்றவற்றைச் செய்யாமல் இனப்பெருக்க தடுப்பு மற்றும் தடுப்பூசிகளைச் செலுத்தி வருகிறோம். ஆனால், இது முழுமையாகவும் சிறப்பாகவும் செய்யப்படவில்லை.'' எனக் கூறும் அவர் 3 விஷயங்களைப் பரிந்துரைக்கிறார்.

''அனைத்து நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பூசியும், நாய் கடிபட்ட மனிதர்களுக்கு உடனே ரேபிஸ் தடுப்பூசியும் செலுத்த வேண்டும். எந்த விலங்கும் ஓரிடத்தில் இருக்கிறது என்றால் அதற்கான உணவும் பிற வசதிகளுக்கும் அங்கு இருக்கிறது என ஆர்த்தம்.

நாய்களுக்குத் தேவையான உணவு, குப்பை கழிவு போன்றவை ஓரு இடத்தில் அல்லது பகுதியில் அதிகம் இருக்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் நாய்க்கடி பிரச்னையை குறைக்கலாம்.

இறுதியாக தெரு நாய்களுடன் எப்படி நடந்துகொள்ள வேண்டும், நாய்களுக்கு எப்படி உணவளிக்க வேண்டும் என மக்களுக்கு போதிய விழிப்புணர்வு வழங்க வேண்டும்.'' என்றார் கிருத்திகா.

''லட்சக்கணக்கான நாய்களை அடைத்து வைப்பது நடைமுறை சாத்தியமற்றது. ஏனெனில் நகர நிர்வாகத்தில் போதிய பராமரிப்பு வசதிகள் இல்லை. ஒரு நாய் சராசரியாக பத்து ஆண்டுகள் உயிருடன் இருக்கும் என வைத்துக்கொண்டால், ஒரு நாய்க்குச் சராசரியாகத் தினமும் 40 - 50 ரூபாய் செலவாகும். லட்சக்கணக்கான நாய்களுக்கு அரசால் செலவு செய்ய முடியுமா?" என்று தமிழ்நாடு மாநில வன உயிரின வாரியத்தின் உறுப்பினரும், விலங்கு நல ஆர்வலருமான ஆண்டனி ரூபின் கேள்வி எழுப்புகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4ge0y5mpq8o

  • கருத்துக்கள உறவுகள்

New-Project-207.jpg?resize=750%2C375&ssl

தெருநாய்கள் தொடர்பான சர்ச்சைக்குரிய தீர்ப்பை மாற்றியமைத்த இந்திய உயர் நீதிமன்றம்!

தெருநாய்களை வேறு இடத்திற்கு மாற்றுவது தொடர்பாக ஆகஸ்ட் 11 ஆம் திகதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை இந்திய உயர் நீதிமன்றம் இன்று (22) மாற்றியமைத்தது.

அதன்படி, தடுப்பூசி மற்றும் கருத்தடைக்குப் பின்னர் தெருநாய்களை அதே இடங்களுக்கு மீண்டும் விடுவிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

3 நீதிபதிகள் கொண்ட அமர்வு, அனைத்து மாநிலங்கள் மற்றும் நகராட்சி பிரதேசங்களுக்கும் பொருந்தும் வகையில், இந்தியா முழுவதும் இந்த விடயத்தின் நோக்கத்தை விரிவுபடுத்தியுள்ளதாகவும் கூறியது.

நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா மற்றும் என்.வி. அஞ்சாரியா ஆகியோர் அடங்கிய அமர்வு, இந்த உத்தரவு ரேபிஸ் (விசர்) நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்குப் பொருந்தாது என்று தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

அதேநேரம், நாய்களுக்கு பொதுவில் உணவளிக்க அனுமதிக்கப்படாது என்றும், தெருநாய்களுக்கு உணவளிக்க பிரத்யேக இடங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

தெருநாய்களுக்கு உணவளிக்கும் பிரத்யேக இடத்தை உருவாக்க நகராட்சி அதிகாரிகளை கேட்டுக் கொண்டது.

டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியம் முழுவதும் உள்ள வீதிகள் இருந்து அனைத்து தெருநாய்களையும் அகற்றுமாறு கடந்த ஆகஸ்ட் 11 அன்று இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவு பிறப்பித்தது.

ஆகஸ்ட் 11 அன்று உயர் நீதிமன்றம், தெருநாய்களை கருத்தடை செய்த பின்னர் அவற்றின் வாழ்விடத்திற்குத் திரும்பக் கொண்டுவரக்கூடாது என்று குறிப்பாக உத்தரவிட்டது.

எனினும், இந்த உத்தரவுக்கு எதிரான சீற்றத்திற்கு மத்தியில், ஆகஸ்ட் 14 அன்று மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவை ஒத்திவைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1444193

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.