Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆசிய கோப்பை: அபிஷேக் சர்மா, சூர்ய குமார், கில் விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா

அடுத்தடுத்து 3 விக்கெட்களை இழந்து தடுமாறும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

28 செப்டெம்பர் 2025, 13:58 GMT

புதுப்பிக்கப்பட்டது 5 நிமிடங்களுக்கு முன்னர்

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

ஆசிய கோப்பை 2025 இறுதிப் போட்டியில், இந்திய அணிக்கு 147 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அணி மோசமான தொடக்கத்தையே பெற்றது. நான்கு ஓவர்களில் மூன்று பேட்ஸ்மேன்கள் ஆட்டமிழந்தனர்

முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 19.1 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. நல்ல தொடக்கத்திற்குப் பிறகு, பாகிஸ்தான் அணி 33 ரன்களுக்குள் ஒன்பது விக்கெட்டுகளை இழந்தது.

முதலிலே விக்கெட்டை இழந்த இந்தியா

இந்தியா அணியில் தொடக்க வீரர்களாக அபிஷேக் சர்மா, சுப்மன் கில் களமிறங்கினர்.

ஆனால், இரண்டாம் ஓவரில் முதல் பந்திலே அபிஷேக் சர்மா 5 ரன்களில் அவுட்டானார் சிறந்த ஃபார்மில் இருந்த அபிஷேக் சர்மாவின் விக்கெட்டை ஃபஹீம் அஷ்ரப் வீழ்த்தினார்.

மூன்றாவது ஓவரின் மூன்றாவது பந்தில் ஷாஹீன் அப்ரிடி கேப்டன் சூர்யகுமார் யாதவை ஆட்டமிழக்கச் செய்தார். சூர்ய குமார் ஒரு ரன்னில் ஆவுட்டானார்.

நான்காவது ஓவரின் கடைசி பந்தில் ஷுப்மான் கில்லை ஃபஹீம் அஷ்ரஃப் அவுட்டாக்கினார். கில் 12 ரன்கள் எடுத்தார்.

நான்கு ஓவர் முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்புக்கு 20 ரன்களை எடுத்தது.

தடுமாறிய பாகிஸ்தான்

2 ஓவர் முடிவில் 11-0 என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடி வந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2 ஓவர் முடிவில் 11-0 என்ற நிலையில் பாகிஸ்தான் விளையாடி வந்தது.

டாஸ் வென்ற இந்தியா முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய சொன்னது. ஃபகர் ஜமான், சாஹிப்சாதா ஃபர்ஹான் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.

முதல் ஓவரில் சிவம் துபே பந்து வீசினார். முதல் 4 பந்துகளில் ரன் ஏதும் அடிக்காமல் இருந்த பாகிஸ்தான் வீரர் ஃபர்ஹான், 5வது பந்தில் பவுண்டரியுடன் ஆட்டத்தை தொடங்கினார்.

பின் நிதானமாக விளையாடிய ஃபகர் ஜமான், சாஹிப்சாதா தங்களின் பாட்னர்ஷிப்பில் 50 ரன்களை சேர்த்தனர். 9 ஓவர் வரை விக்கெட்டை இழக்காமல் ஆடி வந்த பாகிஸ்தான், அந்த ஓவரின் 4வது பந்தில் வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சில் முதல் விக்கெட்டை பறிகொடுத்தது.

38 பந்துகளில் 57 ரன்களை விளாசி ஃபர்ஹான் ஆட்டமிழந்தார். அவருக்கு பதிலாக சைம் ஆயுப் களமிறங்கியுள்ளார். அதன்பிறகு 12.5வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார் சைம் ஆயுப். குல்தீப் யாதவ் இவரின் விக்கெட்டை எடுத்தார்.

அதன்பின் ஐந்து பந்துகளுக்குள் இரண்டு விக்கெட்டுகளை இழந்துவிட்டது பாகிஸ்தான்.

இதுதான் போட்டியின் திருப்புமுனையாக அமைந்தது. அதுவரை நிதானமாக ரன்களை சேர்த்து வந்த பாகிஸ்தான் அடுத்தடுத்து ஆட்டமிழக்க தொடங்கியதால் போட்டி இந்தியாவுக்கு சாதகமாக திரும்பியது.

14வது ஓவரின் 4வது பந்தில், அக்சர் படேல் முகமது ஹாரிஸை டக் அவுட்டாக்கி பெவிலியனுக்கு திருப்பி அனுப்பினார். 15 ஓவர் முடிவில், 4 விக்கெட்கள் இழப்பிற்கு 128 ரன்களை எடுத்திருந்தது பாகிஸ்தான்.

குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, குல்தீப் யாதவ் 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

பின் மீண்டும் 16வது ஓவரை வீச வந்த குல்தீப் யாதவ் முதல் பந்திலேயே கேப்டன் சல்மான் ஆகாவை அவுட்டாக்கினார். 8 ரன்கள் மட்டுமே சேர்த்த சல்மான் பெவிலியன் திரும்பினார்.

அதன்பிறகு பாட்னர்ஷிப் சரியாக அமையாததால் பாகிஸ்தான் அணி ரன்களை சேர்க்க சற்று சிரமப்பட்டது.

தொடர்ந்து 16.4வது ஓவரிலேயே மற்றொரு விக்கெட்டை வீழ்த்தினார் குல்தீப் யாதவ். இது ஷாஹீன் அஃப்ரிடியின் விக்கெட் ஆகும். LBW முறையில் அவரை டக் அவுட் ஆக்கி திருப்பி அனுப்பினார்.

பின் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட்டாக ஃபஹீம் அஷ்ரவை அவுட்டாக்கினார் குல்தீப் யாதவ்.

இந்த நிலையில் 17 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 138 ரன்கள் சேர்த்திருந்தது.

அதன்பின் 17வது ஓவரில் பும்ரா தனது பங்கிற்கு ஹரிஸ் ரவுஃபின் விக்கெட்டை வீழ்த்தினார்.

19 ஓவர் முடிவில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 146 ரன்களை எடுத்தது பாகிஸ்தான்.

பின் கடைசி ஓவரில் மீண்டும் பும்ரா களமிறங்கி முதல் பந்திலேயே நவாஸ் விக்கெடுட்டை வீழ்த்தி ஆட்டத்தை முடித்தார்.

இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 30 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளையும், பும்ரா, அக்சர் மற்றும் வருண் சக்ரவர்த்தி தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.

பாகிஸ்தான் அணியில் அதிகபட்சமாக சாஹிப்சாதா ஃபர்ஹான் 57 ரன்கள் எடுத்தார்.

இறுதிப் போட்டியின் சமீபத்திய நேரடி ஸ்கோரைப் பார்க்க இங்கே கிளிக் செய்யவும்.

ஆசிய கோப்பை: இந்திய அணி முதலில் பந்துவீச்சு, தொடரும் கைகுலுக்காத சர்ச்சை

பட மூலாதாரம், Getty Images

ஹர்திக் பாண்ட்யா இல்லை

டாஸின்போது வழக்கம்போல் இந்த முறையும் இரு அணிகளின் கேப்டன்களும் கைகுலுக்கிக் கொள்ளவில்லை.

டாஸ் பிறகு வென்ற பேசிய சூர்யகுமார் யாதவ், "நாங்கள் முதலில் பந்துவீச உள்ளோம். நாங்கள் முதலில் நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறோம். ஆனால் இன்று சேசிங் செய்ய விரும்புகிறோம். கடந்த 5-6 போட்டிகளில் நாங்கள் நன்றாகவே விளையாடியுள்ளோம்" என்றார்.

மேலும் இந்த போட்டியில் ஹர்திக் பாண்ட்யா காயம் காரணமாக பங்கேற்கவில்லை என தெரிவித்தார்.

அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் கான் ஆகியோரும் இப்போட்டியில் இடம்பெறவில்லை.

பின் பேசிய பாகிஸ்தான் கேப்டன் சல்மான் ஆகா, "நாங்களும் முதலில் பேட் செய்ய வேண்டும் என்றுதான் விரும்பினோம்." என்றார்.

மேலும், "இன்றைய போட்டிக்கு மிகவும் ஆர்வமாக உள்ளோம். இதுவரை சிறந்த போட்டியை நாங்கள் விளையாடவில்லை. ஆனால் இன்றைய போட்டி சிறப்பானதாக இருக்கும் என நம்புகிறோம்" என்றார்.

ஆசிய கோப்பை: இந்திய அணி முதலில் பந்துவீச்சு

பட மூலாதாரம், Getty Images

அணி விவரம்

சூர்யகுமார் யாதவ் தலைமையில் களமிறங்கும் இந்திய அணியில் அபிஷேக் சர்மா, சுப்மன் கில், திலக் வர்மா, சஞ்சு சாம்சன், சிவம் தூபே, ரிங்கு சிங், அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், பும்லா, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பாகிஸ்தான் அணியில் ஷாஹிப்ஸாதா ஃபர்ஹான், ஃபகர் ஸமான், சைம் ஆயுப், சல்மான் ஆகா, ஹுசைன் தலாத், முகமது ஹரிஸ், முகமது நவாஸ், ஃபஹீம் அஷ்ரப், ஷஹீன் அஃப்ரிடி, ஹரிஸ் ரவுஃப், அப்ரார் அகமது ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆசிய கோப்பை தொடர் வரலாற்றிலேயே இந்தியா, பாகிஸ்தான் அணிகள் முதல்முறையாக இறுதிப்போட்டியில் மோதவதால் எதிர்பார்ப்பு அதிகமாகவே உள்ளது.

ஆசிய கோப்பை: ஏழு ஓவர்களுக்கு பிறகு 50 ரன்களை கடந்த பாகிஸ்தான்

பட மூலாதாரம், Getty Images

ஆசிய கோப்பை 2025

இது 17வது சீசன் ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஆகும். ஆசிய கோப்பை வரலாற்றில் இந்த முறை முதல்முறையாக எட்டு அணிகள் பங்கேற்றன. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், ஆப்கானிஸ்தான் யூஏஇ, ஓமன், ஹாங்காங் அணிகள் பங்கேற்றன.

அதில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேச அணிகள் சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறின. அதில் இந்தியா, பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.

நடப்பு தொடரில் 2 முறையும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்தியா.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நடப்பு தொடரில் 2 முறையும் பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது இந்தியா.

தோல்வியே காணாத இந்திய அணி

நடப்பு ஆசிய தொடரில் குரூப் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் விளையாடிய 6 போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி வாகை சூடியுள்ளது. இதனால் சூர்ய குமார் தலைமையிலான இந்திய அணி பலம் வாய்ந்த அணியாக கருதப்படுகிறது.

நடப்பு தொடரின் லீக் சுற்று மற்றும் சூப்பர் 4 சுற்றுகளில் இந்தியாவுடன் மட்டுமே பாகிஸ்தான் தோல்வியை தழுவியது. அதுதவிர போட்டியிட்ட ஓமன், ஐக்கிய அரபு அமீரகம், வங்கதேசம், இலங்கை என மற்ற அணிகளுடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cp8j5pdyy8vo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாகிஸ்தானை வீழ்த்தி பட்டம் வென்றாலும் கோப்பையை வாங்காத இந்தியா - சூர்யகுமார் கூறியது என்ன?

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • தினேஷ் குமார்

  • பிபிசி தமிழுக்காக

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

41 ஆண்டு கால ஆசிய கோப்பை வரலாற்றில் முதல்முறையாக இந்திய அணி, பைனலில் பாகிஸ்தானை தோற்கடித்து கோப்பை வென்றுள்ளது. துபை சர்வதேச மைதானத்தில் நேற்று நடைபெற்ற பரபரப்பான பைனலில், இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று நடப்பு ஆசிய கோப்பையில், மூன்றாவது முறையாக பாகிஸ்தான் உடனான போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.

காயம் காரணமாக ஹர்திக் பாண்ட்யா நீக்கம்

டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தானை பேட் செய்ய பணித்தார். சூப்பர் 4 சுற்றில் இலங்கைக்கு எதிரான ஆட்டத்தின் போது காயமடைந்த பாண்ட்யா, முழு உடற்தகுதியை எட்டாததால் அணியில் சேர்க்கப்படவில்லை. ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் நீக்கப்பட்டு, கடந்த ஆட்டத்தில் ஓய்வளிக்கப்பட்டிருந்த ஷிவம் துபே மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டார்.

ஆல்ரவுண்டர் பாண்ட்யா இல்லாததால் பேட்டிங் வரிசையை வலுப்படுத்தும் விதமாக, அதிரடி ஃபினிசர் ரிங்கு சிங் உள்ளே கொண்டுவரப்பட்டார். பாகிஸ்தான் அணி, கடந்த ஆட்டத்தில் விளையாடிய அதே அணியுடன் களமிறங்கியது. நேற்றைய ஆட்டத்திலும் சூர்யகுமார் யாதவ், பாகிஸ்தான் கேப்டனுடன் கைகுலுக்கவில்லை. டாஸ் நிகழ்வில் இந்திய கேப்டனுடன் மட்டும் ரவி சாஸ்திரி உரையாடினார். பாகிஸ்தான் கேப்டனுடன் பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் பேசினார்.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

பவர்பிளேவில் அசத்திய ஃபர்ஹான்–ஜமான்

ஹர்திக் பாண்ட்யா இல்லாததால், முதல் ஓவரை துபே வீசினார். வழக்கமாக பவர்பிளேவில் சொதப்பும் பாகிஸ்தான், நேற்றைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் விளையாடியது. ஃபர்ஹான் தாறுமாறாக பேட்டை சுழற்றியும் முதல் இரு ஓவர்களில் இரண்டு பவுண்டரிகள் மட்டுமே கிடைத்தன. துபே ஓவரை குறிவைத்து தாக்க வேண்டும் என்ற திட்டத்துடன் அவர் களமிறங்கியது போல இருந்தது.

ஆனால், தன்னால் முடிந்த வரையில் துபே கட்டுப்பாட்டுடன் வீசி ரன் வேகத்தை கட்டுப்படுத்தினார். பும்ராவின் இரண்டாவது ஓவரில் லாங் ஆஃப் திசையில் சிக்சர் விளாசிய ஃபர்ஹான், டி20 கிரிக்கெட்டில் பும்ரா பந்துவீச்சில் 3 சிக்சர்கள் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையை படைத்தார். அதிரடி காட்டிய ஃபர்ஹானுக்கு மற்றொரு தொடக்க வீரர் ஜமான் உறுதுணையான நிற்க, பவர்பிளே முடிவில் பாகிஸ்தான் அணி 45 ரன்கள் எடுத்தது.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த பாகிஸ்தான்

நடப்பு ஆசிய கோப்பையில் இந்தியாவின் துருப்பு சீட்டாக திகழும் குல்தீப் யாதவ் தனது முதல் இரு ஓவர்களில் 23 ரன்களை கொடுத்தார். 150 ஸ்ட்ரைக் ரேட்டில் 57 ரன்கள் குவித்த ஃபர்ஹான் விக்கெட்டை வருண் சக்கரவர்த்தி கைப்பற்ற, ஆட்டத்தில் முதல் திருப்புமுனை ஏற்பட்டது. மூன்றாவது விக்கெட்டுக்கு நடப்பு தொடரில் நான்கு முறை ' டக் அவுட்' ஆன சைம் அயூப் களமிறங்கினார்.

ட்ரிங்க்ஸ் இடைவேளைக்குப் பிறகு துபே ஓவரில் சைம் அயூப் இரு பவுண்டரிகளை விளாச, 12–வது ஓவரில் பாகிஸ்தான் 100 ரன்களைத் தாண்டி நல்ல நிலையில் இருந்தது. குல்தீப் யாதவ் பந்தில் பாயிண்ட் திசையில் கேட்ச் கொடுத்து சைம் அயூப் (14) ஆட்டமிழக்க, நான்காவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஹாரிஸ், அக்சர் படேலின் அடுத்த ஓவரிலேயே ரன் ஏதுமின்றி நடையைக் கட்டினார்.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

ஒரே ஓவரில் 3 விக்கெட் வீழ்த்திய குல்தீப்

இரண்டு ஓவர்களில் 2 விக்கெட்டுகள் விழுந்த நிலையில், வருண் வீசிய அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக இரண்டாவது சிக்சர் அடிக்கும் முயற்சியில் ஜமான் (46) பாயிண்ட் திசையில் குல்தீப்பிடம் கேட்ச் கொடுத்தார். அக்சர் படேலின் அடுத்த ஓவரில் தலத்தும் (1) பெவிலியன் திரும்ப, தனது கடைசி ஓவரில் பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா, ஷாஹின் ஷா அப்ரிடி, ஃபஹீம் அஷ்ரஃப் என 3 விக்கெட்டுகளை குல்தீப் தூக்கினார். பந்து உள்ளே வருகிறதா வெளியே செல்கிறதா என்ற குழப்பத்திலேயே 3 விக்கெட்டுகளும் விழுந்தன.

அடுத்த ஓவரில் ஹாரிஸ் ராஃப்பை பவுல்டாக்கிய பும்ரா, விமானம் வீழ்வது போல சைகை காண்பித்து அவர் பாணியிலேயே பதிலடி கொடுத்தார். இப்படியாக, தொடர்ச்சியாக 6 ஓவர்களில் விக்கெட்டுகளை பாகிஸ்தான் இழந்தது. இன்னிங்ஸின் கடைசி ஓவரின் முதல் பந்தில் முகமது நவாஸ் விக்கெட்டை பும்ரா கைப்பற்ற, 200 ரன்களுக்கு மேல் குவிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி, 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. கடைசி 9 விக்கெட்டுகளை 33 ரன்களுக்கு பறிகொடுத்தது மரண அடியாக அமைந்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

பைனலில் ஏமாற்றிய அபிஷேக் சர்மா

147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு தொடக்கம் சரியாக அமையவில்லை. கடைசி இரு ஆட்டங்களில் அப்ரிடியின் முதல் பந்தில் பவுண்டரி விளாசிய அபிஷேக் சர்மா, இந்தமுறை இரண்டாவது பந்தில் பவுண்டரி அடித்தார். இந்த தொடரில் இந்தியா அணியின் பேட்டிங் தூணாக விளங்கும் அபிஷேக் சர்மா (5) விக்கெட்டை, இரண்டாவது ஓவரிலேயே ஒரு குறைவேகப்பந்தில் ஃபஹீம் அஷ்ரஃப் கைப்பற்றினார்.

மூன்றாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய ஃபார்மில் இல்லாத கேப்டன் சூர்யகுமார் யாதவ், அடுத்த ஓவரிலேயே அப்ரிடியின் குறைவேகப்பந்தில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பிட்ச்சின் தன்மையை உள்வாங்கிக் கொண்டு, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர்கள் வேகத்தை கூடக் குறைத்து மாற்றி மாற்றி வீசினர். ஃபஹீம் அஷ்ரஃபின் அடுத்த ஓவரில் தொடர்ச்சியாக ஒரு கட்டர் பந்தில் கில்லும் (12) ஆட்டமிழக்க, ஐந்தாவது விக்கெட்டுக்கு களமிறங்கிய சாம்சன், திலக் வர்மாவுடன் ஜோடி சேர்ந்தார். தொடர்ச்சியாக மூன்றாவது ஓவரை வீசிய ஃபஹீம் அஷ்ரஃப் பந்துவீச்சில் திலக் வர்மா, பவுண்டரியும் சிக்சரும் விளாச, பவர்பிளே முடிவில் இந்தியா 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 36 ரன்கள் எடுத்தது.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

ஆபத்பாந்தவனாக மாறிய திலக் வர்மா

பவர்பிளேவுக்குப் பிறகு இந்திய அணியின் மீது சுழல் தாக்குதலை பாகிஸ்தான் தொடுக்க, திலக், சாம்சன் இருவரும் நிதானமாக விளையாடி ஒரு பார்ட்னர்ஷிப்பை காட்டினர். இந்திய வீரர்கள் நிலைத்து நின்று விளையாடி, செட்டில் ஆக கூடாது என்பதற்காக முதல் 10 ஓவர்கள் 6 பந்துவீச்சாளர்களை பயன்படுத்தினார். தேவைப்படும் ரன் ரேட் உயர்ந்தபடி இருந்ததால், அதிரடியை தொடங்கிய சாம்சன் அயூப் பந்துவீச்சில் லாங் ஆன் திசையில் ஒரு அபார சிக்சர் அடித்தார்.

ஆனால், லெக் ஸ்பின்னர் அப்ரார் வீசிய அடுத்த ஓவரில், இன்சைட் அவுட் ஷாட் அடிக்க முயன்று 24 ரன்களில் பாயிண்டில் ஃபர்ஹானிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 6–வது விக்கெட்டுக்கு துபே இயங்கிய நிலையில், ஹாரிஸ் ராஃப் வீசிய 15–வது ஓவரில் 1 சிக்சர் 2 பவுண்டரிகள் உள்பட 17 ரன்களை இந்தியா குவித்தது. கடைசி 30 பந்துகளில் 47 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், அப்ரார் அஹமது, ஹாரிஸ் ராஃப் ஓவர்களில் துபே சிக்சர்கள் விளாசினார். 12 பந்துகளில் 17 ரன்கள் தேவைப்பட, அதிரடியாக விளையாடிக் கொண்டிருந்த துபே (33), ஃபஹீம் பந்தில் லாங் ஆஃப் திசையில் அப்ரிடியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

கடைசி ஓவரில் என்ன நடந்தது?

கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவைப்பட, நடப்பு தொடரில் முதல்முறையாக ஆடும் லெவனில் வாய்ப்பு பெற்ற ரிங்கு சிங் களம்புகுந்தார். குறைவான ஓவர் ரேட் காரணமாக உள்வட்டத்தில் கூடுதல் பில்டர் நிற்க வைக்க பாகிஸ்தானுக்கு உத்தரவிடப்பட்டது. ஹாரிஸ் ராஃப் வீசிய முதல் பந்தில் திலக் வர்மா இரு ரன்கள் ஓட, அடுத்த பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் சிக்சர் அடித்து ஆட்டத்தை கிட்டத்தட்ட ஒரு முடிவுக்கு கொண்டுவந்தார்.

மூன்றாவது பந்தில் திலக் வர்மா சிங்கிள் எடுத்த நிலையில், ஸ்கோர் சமமானது. நான்காவது பந்தில் ரிங்கு சிங் பவுண்டரி விளாச, ஒன்பதாவது முறையாக இந்திய அணி ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை வென்றது. வழக்கத்துக்கு மாறாக டாப் ஆர்டர் கைகொடுக்காத நிலையில், கடைசி வரை நிலைத்து நின்று விளையாடிய திலக் வர்மா 69 ரன்கள் குவித்து இந்தியாவுக்கு ஆட்டத்தை வென்றளித்தார்.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

ஏன் இந்தியா கோப்பையை வாங்க மறுத்தது?

ஆசிய கோப்பை பைனலில் கடைசி ஓவர் திரில்லரில் வென்ற பிறகும், இந்திய அணிக்கு கோப்பையும் மெடலும் வழங்கப்படாதது மீண்டும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஆசிய கிரிக்கெட் கவுன்சில் தலைமைப் பொறுப்பில் இருப்பவர் மொஷின் நக்வி. இவர் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் செபாஷ் ஷெரீப் அரசாங்கத்தில் அமைச்சராகவும் இருக்கிறார்.

வெற்றிபெறும் அணிக்கு ஆசிய கிரிக்கெட் கவுன்சிலின் தலைவரான மொஷின் நக்விதான் வெற்றிக் கோப்பையை வழங்குவதாக இருந்தது. ஆனால், இந்திய அணி நிர்வாகம், ஆசிய கோப்பை மற்றும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் மெடல்களை மொஷின் நக்வியிடம் பெற்றுக்கொள்ள விருப்பமில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, உள்ளூர் நேரப்படி ஆட்டம் 10.30 மணிக்கே முடிவடைந்த போதும், நள்ளிரவு வரை பரிசளிப்பு நிகழ்ச்சி தாமதமானது.

தாமதமாக தொடங்கிய பரிசளிப்பு நிகழ்ச்சியில், பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா மட்டும் நக்வியிடம் இரண்டாமிடம் (runners-up) பிடித்த அணிக்கான காசோலையை பெற்றுக்கொண்டார்.

இந்தியா - பாகிஸ்தான், ஆசிய கோப்பை, சூர்யகுமார், மொஷின் நக்வி

பட மூலாதாரம், Getty Images

ஆட்ட நாயகன் விருதை வென்ற திலக் வர்மாவும் தொடர் நாயகன் விருதை வென்ற அபிஷேக் சர்மாவும் மேடையில் இருந்த பிற விருந்தினர்களிடம் பெற்றுக்கொண்டனர். இந்திய அணியினர் விருது பெறும்போது மொஷின் நக்வியை தவிர்த்து மற்ற அனைவரும் கை தட்டினர்.

இந்திய அணி மீது பாகிஸ்தான் கேப்டன் விமர்சனம்

இந்திய அணியின் அணுகுமுறை குறித்து பாகிஸ்தான் கேப்டன் சல்மான் அகா கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். "இந்தத் தொடரில் இந்திய அணி நடந்துகொண்ட விதம் ஏமாற்றமளிக்கிறது. இந்திய அணியினர் கைகுலுக்க மறுத்தது எங்களுக்கு அவமரியாதை அல்ல; அது கிரிக்கெட்டுக்கு அவர்கள் நிகழ்த்திய அவமரியாதை. நாங்கள் கோப்பையுடன் அணியாக புகைப்படம் எடுத்து எங்கள் கடமையைச் சரியாக செய்துவிட்டோம்." என்றார்.

தொடர் தொடங்குவதற்கு முன்பாக தனிப்பட்ட முறையில் தன்னுடன் கைகுலுக்கிய சூர்யகுமார் யாதவ், கேமராவுக்கு முன்பு கைகுலுக்க மறுப்பதாக சல்மான் அகா குற்றம்சாட்டினார். வெளியில் இருந்து வந்த உத்தரவின்படி, அவர் அப்படி நடந்துகொண்டார் என்று அவர் தெரிவித்தார். இந்த நிலையில், நக்வியிடம் இருந்து கோப்பையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என்பது ஓர் அணியாக எடுத்த முடிவு என்று தெரிவித்த சூர்யகுமார், இப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று தங்களுக்கு யாரும் அறிவுறுத்தவில்லை என்றார்.

சூர்யகுமார் கூறியது என்ன?

பரிசளிப்பு விழா முடிந்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய இந்திய கேப்டன் சூர்யகுமார் யாதவ், "நான் கிரிக்கெட் விளையாட, கிரிக்கெட்டை பின்தொடர தொடங்கியதில் இருந்து வெற்றிபெற்ற ஒரு அணிக்கு கோப்பை மறுக்கப்படுவதை இப்போதுதான் முதல்முறையாக பார்க்கிறேன். என்னுடைய கோப்பைகள் (வீரர்கள்) ஓய்வறையில் அமர்ந்துள்ளனர். அணி வீரர்கள் 14 பேரும், பயிற்சியாளர்கள் உதவியாளர்கள்தான் இந்தத் தொடரில் உண்மையான வெற்றிக் கோப்பைகள்." எனக் கூறினார்.

மொஷின் நக்வி நடந்துகொண்ட விதம் குறித்து நவம்பரில் நடக்கும் ஐசிசி கூட்டத்தில் முறையிட உள்ளதாக பிசிசிஐ தெரிவித்துள்ளது. இப்படியாக, சர்ச்சையுடன் தொடங்கிய ஆசிய கோப்பை, எந்தவொரு பிரச்னைக்கும் தீர்வு காணப்படாமல் மீண்டும் ஒரு மிகப்பெரிய சர்ச்சையுடனே முடிந்திருக்கிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cn95e9pvz20o

  • கருத்துக்கள உறவுகள்

பாக்கிஸ்தானின் தோல்விக்கு பாக்கிஸ்தானின் வேக‌ ப‌ந்து வீச்சாள‌ர் ஹ‌ரிஷ் ராவ் தான் கார‌ன‌ம்................

இவ‌ரை தெரிவு செய்த‌தும் பார்க்க‌ முகம‌ட் அமிர‌ தெரிவு செய்து இருக்க‌லாம்...............................

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.