Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிறிதரன்: தவறுகளும் மீளலும்

September 11, 2025

— கருணாகரன் —

தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனைப் பற்றிய ‘படங்காட்டுதல் அல்லது சுத்துமாத்துப் பண்ணுதல்‘ என்ற கட்டுரை, அவரைத் தனிப்பட்ட ரீதியில் தாக்குவதாக அமைந்திருக்கிறது என்று சிலர் குற்றம் சாட்டினர். அவர்களுடைய கேள்விகளில் முக்கியமானவை –

1.   சிறிதரன் மட்டும்தான் இப்படி (கட்டுரையில் குறிப்பிட்டவாறு கல்வி, மருத்துவம், விவசாயம், சூழல் விருத்தி, கடற்றொழில், பனை தென்னை வளத் தொழில், பெண் தலைமைத்துவக் குடும்பங்களுக்கான ஆதாரம், மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு, முன்னாள் போராளிகளின் வாழ்க்கைக்கு – 

பிரதேசங்களின் அபிவிருத்திக்கு, இளைய தலைமுறையினரின் திறன் விருத்திக்கு, தொழில் வாய்ப்புகளுக்கு, பண்பாட்டு வளர்ச்சிக்கு, வரலாற்றுத்துறைக்கு, இலக்கிய மேம்பாட்டுக்கு – 

சமூக வளர்ச்சிக்கு….) பங்களிப்புச் செய்யாத ஒருவரா? அவரையும் விட நீண்ட காலமாக செல்வம் அடைக்கலநாதன் வன்னியில்(மன்னாரில்) பாராளுமன்ற உறுப்பினராக இருக்கிறார். அவரைப்போல வேறு ஆட்களும் உள்ளனர். அவர்களைப் பற்றியெல்லாம் எழுதாமல், சிறிதரனை இலக்கு வைத்து தாக்குவது ஏன்? அதாவது தெரிவு செய்யப்பட்ட இலக்காக ஒருவரைக் கொள்வது ஏன்? என்பது.

2.   இவ்வாறான குற்றச்சாட்டுகளை வைத்தாலும் சிறிதரனுக்குத் தொடர்ச்சியாக மக்கள் ஆதரவு உள்ளதே! அதனால்தானே அவர் வெற்றியடைந்து கொண்டிருக்கிறார். அப்படியென்றால், மக்களின் உணர்வையும் தெரிவையும் தவறு என்று சொல்கிறீர்களா? மக்களின் தெரிவை (ஏற்பை) மறுதலிப்பதற்கான அதிகாரம் உங்களுக்கு இல்லையே! என்பது. 

3.   நீங்கள் (கட்டுரையாளர்) ஒரு அரசியற் சார்பில் நின்று கொண்டு, அதற்கெதிரான தரப்பில் நிற்கும் சிறிதரனை இலக்கு வைக்கிறீர்கள். இது அரசியற் போட்டியின் விளைவான காழ்ப்புணர்ச்சி  வெளிப்பாடாகும் என்பது.

ஏனைய குற்றச்சாட்டுகள் பொருட்படுத்தக் கூடியன அல்ல. 

இதேவேளை வேறு பலர் பாராட்டினார்கள். அவர்கள் பாராட்டியதற்குக் காரணம் –

1.   பேச வேண்டிய – குறிப்பிடப்பட வேண்டிய விடயத்தைத் துணிச்சலோடு பேசியுள்ளீர்கள். உரியவர்களுக்குரிய(சிறிதரனுக்கும் அவரை ஆதரிப்போருக்கும்) பொறுப்பைச் சுட்டிக் காட்டியுள்ளீர்கள். ஒரு எழுத்தாளர் அல்லது அரசியல் விமர்சகருக்கு இந்தத் துணிச்சலும் பக்கம் சாராமையும் அவசியமாகும். பொருத்தமான காலத்தில் அதைச் சுட்டிக்காட்டுவது முக்கியமானது. அது இங்கே(குறித்த கட்டுரையில்) உள்ளது என்பது. 

2.   போரினால் பாதிக்கப்பட்ட மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப் படுத்தும் மக்கள் பிரதிநிதி ஒருவர் ஆற்றியிருக்க வேண்டிய பணிகளைப் பட்டியலிட்டுள்ளீர்கள். அது முக்கியமானது. ஏனென்றால், அதில் ஒரு துறையில் கூட எந்த வகையான முன்னேற்றத்துக்கோ வளர்ச்சிக்கோ மாற்றங்களுக்கோ இவர்(சிறிதரன்) எத்தகைய பங்களிக்கவும் இல்லை என்பதைச் சவாலுக்கு உட்படுத்தியுள்ளீர்கள். நியாயமாக நடப்பவர்களாக இருந்தால், நிச்சயமாக இதைக் குறித்துச் சிந்திப்பார்கள் என்பது. 

3.   தனிப்பட்ட ரீதியில் சிறிதரன் குற்றம் சாட்டப்படவில்லை. அதாவது அரசியற் காழ்ப்புணர்ச்சியின் அடிப்படையில் குற்றச்சாட்டுகளில்லை. வெளிப்படையாக, சிறிதரனையும் அவரை ஆதரிப்போரையும் சேர்த்தே கேள்விக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. கேள்விக்குட்படுத்துவது, விமர்சிப்பது வேறு. குற்றம் சாட்டுவதும், அவதூறு செய்வதும் வேறு. இங்கே கட்டுரையில் செய்யப்பட்டிருப்பது கேள்விக்குட்படுத்தியதும் விமர்சனம் செய்திருப்பதுமேயாகும். ஆகவே இதற்கான பதிலை அவர்கள் தரவேண்டும். அது இந்தக் கட்டுரைக்கு(உங்களுக்கு அல்லது அதைப் பிரசுரித்த ஊடகத்துக்கு)  நேரடியான பதிலாகவும் இருக்கலாம். அல்லது தங்களுடைய முன்னேற்றகரமான எதிர்காலச் செயற்பாடுகளின் வழியாகவும் அந்தப் பதில் இருக்கலாம் என்பது. 

4.   சிறிதரனின் மீதான குற்றச்சாட்டு என்பது அவரை ஆதரிக்கும் மக்களையும் மக்களின் ஆதரவைத்திரட்டிக் கொடுப்போரையும் கேள்விக்கு உட்படுத்தாத ஊடகங்களையும் புத்திஜீவிகளையும் சாரும். இத்தகைய கேள்விகளை எழுப்புவது மக்களை விழிப்புணர்வு அடையச் செய்வது மட்டுமல்ல, கேள்வி கேட்கக் கூடிய ஜனநாயக வீரியத்தையும் துணிச்சலையும் உருவாக்கும். அது எவரை நோக்கியும் கேள்வி கேட்கக் கூடிய – எவரையும் விமர்சிக்கக்கூடிய முன்னேற்றகரமான ஒரு பண்பியல் வளர்ச்சியை மக்களிடம் உருவாக்கும். அதற்கு இந்தக் கட்டுரை பங்களிக்கிறது. இப்படியான ஒரு விழிப்புணர்வு தென்னிலங்கையில் ஏற்பட்டபடியால்தான் அங்கே ஒரு ஆட்சி மாற்றம் நிகழ முடிந்தது. பாரம்பரிய ஆட்சியாளர்கள் விரட்டியடிக்கப்பட்டனர். பயனில்லாதவர்கள் சமூகத்துக்குச் சுமையல்லவா என்பது.

5.   ஒரு மாவட்டத்தின் முன்னேற்றத்தை – வளர்ச்சியைக் குறித்துச் சிந்திப்பவரின் ஆதங்கமும் கருத்தும் கோபமும் இப்படித்தான் வெடித்து வெளிப்படும். இது இப்பொழுது ஒரு பத்திரிகையாளருக்குள் நிகழ்ந்திருக்கிறது. எதிர்காலத்தில் இந்த வெடிப்பும் கொந்தளிப்பும் மக்களிடத்திலும் ஏற்படும். அதைக் கட்டியமாகச் சொல்லியுள்ளது அந்தக் கட்டுரை. அதைப்போலப் போரினால் ஏற்பட்ட பாதிப்பைச் சொல்லியும் எடுத்தற்கு எல்லாம் அரசாங்கத்தை திட்டியும் தொடர்ந்தும் அரசியல் நடத்த முடியாது. மக்களைத் துயரங்களிலிருந்தும் அவலங்களிலிருந்தும் மீட்பதே அவர்களுடைய போராட்டகாலப் பங்களிப்புகளுக்கும் பாதிப்புக்கும் செய்யும் நீதியாகும். அதையும் கட்டுரை சுட்டிக் காட்டியுள்ளது. பொதுவான வாசகர்களித்திலும் கூட இத்தகைய கொந்தளிப்பும் வெடிப்பும் நிச்சயமாக நிகழும். அது அவசியமாகும் என்பது. 

இப்படி வேறும் சில கருத்துகள் வந்தன. இவை போதும் என்பதால் அவை தவிர்க்கப்பட்டுள்ளன. . 

சரி, இனி குறித்த விடயத்துக்கு வருவோம். 

முதலில், குற்றம்சாட்டியோரின் நியாயத்தைக் குறித்துப் பார்க்கலாம். 

குற்றம்சாட்டியோர் எதையும் முறையாக விவாதிக்கவும் பரிசீலிக்கவும் தயாராக இல்லை. அப்படியாக இருந்திருந்தால் அது ஆரோக்கியமான விவாதமாகவும் அறிவார்ந்த செயற்பாடாகவும் பயனுள்ள விடயமாகவும் இருக்கும். 

ஒரு மக்கள் பிரதிநிதியைத் தொடர்ந்து வெற்றியடையச் செய்யும் ஆதரவாளர்களிடமிருந்து ஒரு நல்ல பதில் கூட வரவில்லை; வரமுடியாமலிருக்கிறது என்பது அவருடைய வீழ்ச்சியையும் அந்தத் தரப்பின் இயலாமையுமே காட்டுகிறது. 

இவ்வளவுக்கும் தமிழரசுக்கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டவர் சிறிதரன். அந்தப் பொறுப்பேற்புத் தொடர்பான விவகாரம் கூட வழக்கில் உள்ளது. இருந்தும் அவ்வாறு தெரிவு செய்யப்பட்ட சிறிதரனுடைய மக்கள் பணிகளின் குறைபாடுகள், அரசியல் அணுகுமுறை போன்றவற்றைக் குறித்து முன்வைக்கப்பட்டு வரும் விமர்சனத்துக்கு கட்சிக்குள்ளிருந்து கூட எந்தக் குரலும் எழுவதில்லை.

பாராளுமன்றத்தில் உச்சக் குரலில் பேசுவது வேறு. பாராமன்றத்தையும் அரசியல் வெளியையும் கையாள்வது வேறு. இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது, ஜனாதிபதி அநுரகுமாரவுடன் சாணக்கியன் பேச்சுகளை மேற்கொண்டு, மக்களுக்கான பல விடயங்களைச் சாதமாக்கியுள்ளார். இப்படி முன்னரும் சில விடயங்களை அவர் சாத்தியப்படுத்தினார். 

ஒரே கட்சியில், அதுவும் இளைய பிரதிநிதி ஒருவர் அப்படிச் சாதிக்க முடியுமாக இருக்கும்போது, அந்தக் கட்சியில் தொடர்ந்து வெற்றியீட்டிய மூத்த பிரதிநிதியினால் அது முடியாமலிருப்பது ஏன்?

காரணம், எளிது. இதற்கொரு அண்மைய உதாரணம். தற்போது ஆட்சியலிருக்கும் NPP யின் பா. உறுப்பினரான ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி கடந்த வாரம் பளை – வேம்போடுகேணி பாடசாலையில் நடைபெற்ற நிகழ்வுக்குச் சென்றிருந்தார். அதே நிகழ்வில் இன்னொரு அழைப்பாளராகச் சிறிதரனும் சென்றிருந்தார். ரஜீவனைக் கண்டதும் சிறிதரன் நிகழ்வில் கலந்து கொள்ளாமல் திரும்பி விட்டார். 

இவ்வாறான தவறுகளே மக்களுக்கான அரசியல் பெறுமானங்களை சிறிதரனால் உருவாக்க முடியாதிருப்பதற்கான காரணமாகும். 

தவிர,  இலங்கையிலுள்ள முன்னணி அரசியற் கட்சிகளின் குறைபாடுகள், தவறுகள், பொறுப்பின்மைகள், மக்கள் விரோதச் செயற்பாடுகள் போன்றவற்றைப் பற்றி வெளிப்படையாகவே பேசப்பட்டு வந்துள்ளது. மட்டுமல்ல, அவற்றின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளோரின் செயற்பாடுகள், நடவடிக்கைகள், நடைமுறைகள் பற்றிய விமர்சனங்களும் தொடர்ந்து செய்யப்பட்டுள்ளது. பெயர் குறிப்பிட்டே அவை செய்யப்பட்டுள்ளன. யாரும் விலக்கல்ல. தனிப்பட்ட முறையில் யாரும் குறி வைத்து விமர்சிக்கப்படவுமில்லை. அப்படிச் செய்வது மக்களிடமிருந்து கட்டுரையும் குறித்த ஊடகமும் விலக்கம் செய்யப்படக் கூடிய சூழலையே உருவாக்கும். 

கட்டுரையைப் படிக்கும்போது வாசகர்களுக்கு இங்கே சுட்டிக்காட்டப்பட்டுள்ள செல்வம் அடைக்கலநாதனைப்போல, வேறு பலருடைய முகங்களும் நினைவுக்கு வரலாம். ஏன் இதைப்போல பிற சமூகங்களில் உள்ள அரசியல்வாதிகளைப் பற்றிக் கேள்விகளும் எழலாம். அப்படி நிகழுமானால், அது கட்டுரையின் வெற்றியாகும். மக்களை விழிப்படையச் செய்வதுதானே இத்தகைய கட்டுரைகளின் (எழுத்துகளின்) நோக்கமாகும். 

அதேவேளை தம்மீதான விமர்சனங்களுக்கும் கேள்விகளுக்கும் உரிய பதில்களை அவர்கள் காண முற்பட வேண்டும். அதனையே கட்டுரை விரும்புகிறது. நோக்கமும் அதுதான். 

தவிர, தனிப்பட்ட ரீதியில் சிறிதரன் விமர்சிக்கப்படவில்லை. அதாவது அவரைக் குறித்து சமூக வலைத்தளங்களிலும் பத்திரிகைகளிலும் மக்களிடத்திலும் பேசப்படும் ஊழல் குற்றச்சாட்டுகள், சொத்துக் குவிப்புப் போன்றவற்றையெல்லாம் கட்டுரை அக்கறைப்படவில்லை. அத்தகைய குற்றச்சாட்டுகளை சிவில் செயற்பாட்டாளரான சஞ்சய் மஹாவத்த என்பவர் சட்டரீதியாக ஊழலுக்கு எதிரான குற்றப்புலனாய்வுப்பிரிவில் முறையிட்டு ஆவணப்படுத்தியுள்ளார். இருந்தும் அவை இன்னும் நிரூபிக்கப்பட்ட குற்றச்சாட்டுகளாக மாறவில்லை என்பதால் இந்தக் கட்டுரையில் அவை எடுத்துக் கொள்ளப்படவில்லை.

இங்கே மக்களுக்கு (சமூகத்துக்கு) தேவையான வேலைகளைச் செய்யவில்லை. அதற்குப் பொறுப்புக் கூறவேண்டும். அதற்கான கடப்பாடு குறித்த பாராளுமன்ற உறுப்பினருக்கும் அவரை ஆதரித்து நிற்போருக்கும் உண்டு என்பதே வெளிப்படுத்தப்பட்டுள்ளது. 

அடுத்தது – 

ஒருவருக்கு தொடர்ந்தும் மக்கள் ஆதரவு இருக்கிறது என்பதற்காக அவருடைய அரசியற் செயற்பாடுகள் சரியானவை, ஏற்றுக் கொள்ளத் தக்கவை என்று கொள்ள முடியாது. கடந்த கால ஆட்சியாளர்களை தொடர்ந்தும் மக்கள் ஆதரித்து வந்தனர். அப்படி வந்தபடியால்தான் அவர்கள் 30, 40, 50 ஆண்டுகளாக அரசியலிலும் பாராளுமன்றத்திலும் வெற்றிகரமாக இருந்திருக்க முடிகிறது. 

ஆனால், அவர்கள் செய்ததெல்லாம் என்ன? நாட்டுக்கும் மக்களுக்கும் தீமைகளைத்தானே! அதனால்தானே நாடு இவ்வாறான வங்குரோத்து நிலைக்குள்ளானது? ஆகவே மக்களின் தொடர்ச்சியான ஆதரவைப் பெற்றவர்கள் என்பதற்காக அவர்கள் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள்? கேள்வி கேட்க முடியாதவர்கள் என்றில்லை. அவர்கள் மீதான பொறுப்புக் கூறலைக் கோர முடியாது என்று யாரும் கூறவும் முடியாது. 

அப்படி யாராவது கூற முற்பட்டால், அது ஜனநாயகத்துக்கு மாறானது. ஜனநாயக விழுமியம் என்பது எவரைப்பற்றிய நியாயமான விமர்சனங்களையும் எழுப்பலாம். எவரைக் குறித்தும் கேள்வி எழுப்பலாம் என்பதே. அதுதான் மக்களாட்சிச் சிறப்பாகும். 

மட்டுமல்ல, கேள்விகளும் விமர்சனங்களும்தான் மக்களைச் சிந்திக்க வைக்கும். இல்லையெனில், மக்கள் தொடர்ந்தும் தவறானவர்களையே – பயனற்றவர்களையே தெரிவு செய்து கொண்டிருப்பார்கள். அதனால்தான் குறித்த நபர்கள் தொடர்ந்தும் சுலபமாக வெற்றி பெற முடிகிறது.

அடுத்த விடயம், அரசியற் காழ்ப்புணர்ச்சியினால் சார்பு நிலைப்பட்டு கட்டுரை எழுதப்பட்டுள்ளது என்பது தொடர்பாக – 

கட்டுரையானது மக்களின் நிலை நின்றே பேசுகிறது. எழுப்பப்பட்டுள்ள கேள்விகளும் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனங்களும் மக்களின் நிலையிலானவையே. அங்கே பக்கச்சார்பு எதுவும் இல்லை. கட்டுரையாளரிடம் ஏதாவது அரசியற் சார்புகள் இருந்தால், அதற்கான ஆதாரங்களோடு எதிர்வினையை யாரும் ஆற்றலாம். அது அவசியமானது. 

இனி, தொடர்ந்து பேச வேண்டியதைப் பார்க்கலாம். 

நம்முடைய அரசியற் சூழலில் மட்டுமல்ல, நிர்வாகம், பொது அமைப்புகள், சமூகச் சூழல் போன்ற பல இடங்களிலும் நிலவுகின்ற குறைபாடுகள், தவறுகள் பற்றிப் பலரும் அறிந்திருப்பார்கள். அந்தக் குறைபாடுகளும் தவறுகளும் அவர்களுக்குப் பாதிப்பைக் கூட ஏற்படுத்தியிருக்கலாம். அதனாலும் அப்படித் தமக்குத் தனிப்பட்ட பாதிப்புகள் ஏதுமில்லாதபோதும் தார்மீக ரீதியில் இவற்றைக் குறித்து அவர்களுக்கு கோபமும் விமர்சனமும் உருவாகியிருக்கும்.

ஆனால், அவர்கள் அதை வெளிப்படுத்திக் கொள்வதில்லை. சிலர் மட்டும் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவர். அதுவும் பட்டும் படாமலும். ஏனையோர் தமக்கிடையில் பேசிக்கொள்வதும் குமைந்து கொள்வதுமே நடக்கிறது. 

அவ்வாறான சூழலில்தான் இத்தகைய விமர்சனங்கள் வரும்போது அது மக்களுக்கு உற்சாகமாகவும் பாராட்டக் கூடியதாகவும் இருக்கிறது. ஆனால், உண்மையில் தாமறிந்த உண்மையை எல்லோரும் தயக்கமின்றிச் சொல்லத்  துணிய வேண்டும். அதுவொரு சமூகக் கடமையாகும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினர் தொடர்ச்சியாக 15 ஆண்டுகளுக்கு மேல் அதே மாவட்டத்தில் அல்லது அதே பிரதேசத்தில் பதவியில் உள்ளார் என்றால், அவர், அந்த மாவட்டத்தில் பல பணிகளைத் திட்டமிட்டுச்செய்திருக்க முடியும்; செய்திருக்க வேண்டும். 

2010 இல் முதற்தடவையாகச் சிறிதரன் தேர்வு செய்யப்பட்டபோது அவருக்குப் பல நெருக்கடிகள் இருந்தன என்பது புரிந்து கொள்ளக் கூடியது. 

1.   சிறிதரன் அப்பொழுதுதான் அரசியலுக்கே புதியவராக இருந்தார். பாராளுமன்றத்துக்கும் புதியவர். ஆகவே தன்னை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கு அவகாசம் வேண்டியிருந்தது. ஆனால், அதற்கு ஓராண்டு காலம் ஓரளவுக்குப் போதுமானது. தவிர, ஒருவர் ஒரு பணிக்குத் தன்னைத் தயார்ப்படுத்திக் கொண்டுதான், அதில் இறங்க வேண்டும் என்பதையும் இங்கே நாம் கவனிக்க வேண்டும். இருந்தாலும் அவருடைய அனுபவத்துக்காக அந்தக் காலப்பகுதியை நாம் மேலும் நீட்டியும் கொள்ளலாம். 

2.   அது போர் முடிந்திருந்த சூழல். மகிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலம். ஜனநாயகச் சூழல் மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. அந்தச் சூழலில் சிறிதரன் போன்றவர்கள் தமது அரசியல் நடவடிக்கையை – மக்களுடைய பிரச்சினைகளைத் தீர்த்து, தேவைகளை நிறைவேற்றுவதற்கு நெருக்கடிகள் இருந்தன. ஆனால், மறுவளத்தில் அரசியல் ரீதியாக (அரச எதிர்ப்பைச் பேசி) தம்மை வளர்த்துக் கொள்வதற்கு அந்தச் சூழல் தாராளமாக வாய்ப்பளித்தது. 

3.   ஆனால், சிறிதரன் கிளிநொச்சி மாவட்டத்தைப் பிரதிநிதித்துவம் செய்தவர். அந்த மக்களின் கூடுதல் ஆதரவைப்பெற்றிருந்தவர். அந்த மாவட்டத்தில் படித்து, ஆசிரியப் பணியை ஆற்றியவர் என்பதால், அந்த மாவட்டத்தின் தேவைகள், பிரச்சினைகளைப் பற்றி மற்றவர்களை விடவும் அதிகமாகத் தெரிந்தவர். அத்துடன், நிர்வாகத்தில் பொறுப்பான பதவிகளில் இருந்தோரும் சமூக அமைப்புகளைச் சேர்ந்தோரும் பரஸ்பரம் அறிமுகமானவர்கள். மட்டுமல்ல, அப்போதிருந்த தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களில் சிறிதரனுக்கே புலம்பெயர் சமூகத்தில் பேராதரவு இருந்தது. போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தைச் சேர்ந்தவர், புலிகளின் தளபதிகளில் ஒருவரான தீபனின் குடும் உறவினர் போன்ற காரணங்கள் இந்த ஆதரவைப் பெருக்கக் காரணமாக இருந்தன. 

ஆகவே மாவட்டத்தை மீளக் கட்டியெழுப்புவதில் அவருக்கு அதிக வாய்ப்புகளிருந்தன; சிரமங்களிருக்கவில்லை. தனக்குக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களின் மீதான கரிசனையோடு முறையாகச் செயற்பட்டிருந்தால், தேவையான கட்டமைப்புகளை உருவாக்கியிருக்க முடியும். ஏற்கனவே இருந்த சமூக அமைப்புகளை நெறிப்படுத்தி, வினைத்திறன் மிக்கவை ஆக்கியிருக்கலாம். அப்படிச் செய்திருந்தால் இப்பொழுது கிளிநொச்சி மிகப் பெரிய வளர்ச்சியை எட்டியிருக்கும்.

இப்போது கிளிநொச்சியின் நிலை –

1.   போரினால் பாதிக்கப்பட்ட மக்களில் ஒரு தொகுதியினர் இன்னும் கையேந்தும் நிலையிலேயே உள்ளனர். ஆனால், பெருமளவு புலம்பெயர் நிதி வந்தது. அரச நிதியும் அரச சார்பற்ற நிதியும் பொருத்தமற்ற முறையில் அதிகாரிகளின் முறையற்ற திட்டமிடற் குறைபாடும் 

2.   நகருக்கு அப்பால் எந்த இடமும் எத்தகைய வளர்ச்சியையும் பெறவில்லை. கிராமங்கள் பாழடைந்து நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக அக்கராயன். ஸ்கந்தபுரம், உருத்திரபுரம், வன்னேரிக்குளம், கோணாவில், பாரதிபுரம், செல்வாநகர், சாந்தபுரம், மலையாளபுரம், பொன்னகர், அம்பாள்குளம், மருதநகர், ஊற்றுப்புலம், கல்மடு, புதுமுறிப்பு போன்றவற்றோடு பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுகள் முற்றாகவே பின்தங்கிய நிலைக்குள்ளாகியுள்ளன. இங்கே கல்வி, சமூக வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் எல்லாமே பெரும் பிரச்சினையாக உள்ளன. இதனால், இந்தப் பிரதேசங்களில் குற்றச்செயல்களும் தவறான நடத்தைக்களும் அதிகரித்துள்ளன. சட்டவிரோத மது உற்பத்தி(கசிப்பு) விற்பனை, மணல் அகழ்வு, மரம் தறித்தல் அல்லது காடழிப்பு, போதைவஸ்து வியாபாரமும் பாவனையும் திருட்டு, பாலியல் பிறழ்வு, குடும்ப வன்முறைகள் எனப் பல சீரழிவு நிலை உருவாகியுள்ளது. பொலிஸ், நீதிமன்றப் பதிவுகளும் சமூக சேவைகள் திணைக்களம், சிறுவர் நன்னடைத்தைப் பிரிவு போன்றவற்றின் புள்ளிவிவரங்களும் இதைக் காட்டுகின்றன. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் (13 – 35 வயதுக்குட்பட்ட) இளைய தலைமுறையினரே ஆகும். 

3.   தொழில்துறை மேம்பாட்டுக்கான ஏற்பாடுகள் எதுவுமே உருவாக்கப்படாத காரணத்தினால் வசதியுள்ளோர் வெளிநாடுகளை நோக்கிச் செல்கின்றனர். ஏனையோர் சமூகச் சீரழிவுச் செயற்பாடுகளில் ஈடுபட்டு அழிகின்றனர். 

4.   2010 க்குப் பிறகு கேந்திர முக்கியத்துவம் மிக்க இடங்களில் உள்ள அரச காணிகள் பலவும் செல்வாக்குள்ளோருக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளன. இதில் நாமல் ராஜபக்ஸ, டக்ளஸ் தேவானந்தா,அங்கயன் இராமநாதன் போன்றோரின் செல்வாக்கு அதிகமுண்டு. ஆனால், இதை சிறிதரன் எதிர்த்திருக்க முடியும். அதைச் செய்யவில்லை. மட்டுமல்ல, அந்தத் தவறுக்கு சிறிதரனின் கட்டுப்பாட்டின் கீழுள்ள பிரதேச சபைகள் தாராளமாக ஒத்துழைத்துள்ளன. இதற்குக் காரணம், சிறிதரனின் அணியினரும் இந்தக் காணி அபகரிப்பில் பயன்பெற்றுள்ளனர். 

5.   கமக்காரர் மற்றும் விவசாய அமைப்புகள் உளுத்துப்போய் விட்டன. அவை விவசாயிகளின் மேம்பாட்டுக்கு எத்தகைய பயனையும் விளைக்கவில்லை என்பதோடு தொடர்ந்தும் ஒரே தரப்பினரே 10 ஆண்டுக்கும் மேலாக பதவிகளில் உள்ளனர்.

6.   கிளிநொச்சியிலிருந்து இதுவரையிலும் ஒரு சட்டநிபுணரோ, பேராசிரியரோ, விஞ்ஞானத்துறையில் அறியப்பட்டவரோ, சிறந்த இசைக்கலைஞர்களோ, பேச்சாளர்களோ, சமூகத் தலைவர்களோ, பத்திரிகையாளர்களோ, நாடகவியலாளர்களோ, மருத்துவ நிபுணர்களோ  உருவாகவில்லை. ஏன் ஒரு இசை, ஓவிய, நடன, நாடகக் கல்லூரி கூட இல்லை. கூட்டுறவுத்துறை படுத்து விட்டது. கரைச்சி கிழக்கு (வட்டக்கச்சி) ப.நோ.கூ. சங்கம் மூடப்பட்டு விட்டது. கிராமப்புறப் பாடசாலைகளின் கல்வி நிலையும் பெற்றோர் பாடசாலைகளோடு கொள்ளும் உறவு நிலையும் சீரற்றிருக்கிறது. 

7.   பருவ முதிர்ச்சியைப் பெறாத பெண் பிள்ளைகளும் குடும்பப் பிறழ்வுக்கான பெண்களும் அதிகமாகக் கர்ப்பம் தரிக்கும் நிலை கூடியுள்ளது. இவ்வாறானவர்களைப் பரிமரித்துப் பாதுகாத்துக் குழந்தைகளைப் பெற்றெடுக்கின்ற கட்டமைப்பு ஒன்று 2010 க்குப் பிறகு (கனகபுரத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது. அங்கே வரவரக் கூடுதலானோர் புனர்வாழ்வு பெற வருகின்றனர். 

8.   சிறார் இல்லங்கள் பெருகியுள்ளன. சிறார் இல்லங்களுக்கு வருகின்ற சிறார்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. போர்க்காலத்தில் இவ்வாறான நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாதது. இது போர் முடிவுக்குப் பிறகான காலமாகும். இந்தக் காலத்தில் இவை குறைவடைந்திருக்க வேண்டும். மட்டுமல்ல, அதிகரித்த மதுப்பாவனை, போதைப்பொருள் பாவனையினால் பாதிக்கப்பட்டோருக்கான புனர்வாழ்வு நிலையமும்(தருமபுரத்தில்) உருவாக்கப்பட்டுள்ளது.

9.   இந்த நிலையும் இந்த அமைப்புகளும் பெருகுவதற்குப் பதிலாகக் குறைவடைந்திருக்க வேணும். அல்லது மூடப்பட வேண்டும். பதிலாக அறிவையும் தொழிற்திறன்களையும் ஆற்றச் சிறப்பையும் வளர்க்கக்கூடிய – பெருக்கக்கூடிய புதிய நிறுவனங்களும் அமைப்புகளும் உருவாக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறான திறன் அமைப்புகள் உருவாக்கப்பட்டிருந்தால்(செயற்பட்டிருந்தால்) சீரழிவுகளும் குற்றச்செயல்களும் பாதிக்குமேல் குறைவடைந்திருக்கும். 

10. மாவட்டத்தின் வளங்களான மணல், காடு, ஆறுகள், குளங்கள், காணி அல்லது நிலம் சிதைக்கப்பட்டுள்ளது. அபகரிக்கப்பட்டுள்ளது.அழிக்கப்பட்டுள்ளது. இதைக் கட்டுப்படுத்தியிருக்க வேண்டும். பதிலாக இவற்றைச் செய்வோர் சிறிதரனின் பகிரங்கமான ஆதரவாளர்களாக உள்ளனர். இதைக்குறித்த வெளிப்படையான சமூக வலைத்தளப் பதிவுகளும் நீதி மன்ற, பொலிஸ் ஆவணங்களும் ஊடக அறிக்கைகளும் ஆதாரமாக உண்டு.

11. கோயில்களிலும் தலைமைத்துவப்போட்டியும் ஊழலும்  பெருகியுள்ளது. காரணம், அங்கும் அரசியலே.

இவற்றைத் தவிர, ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வினைத்திறனோடு இயங்க வைத்திருக்கலாம். கரைச்சி தெற்குப் ப.நோ. கூ சங்கத்துக்கு 2012 இல் 15 மில்லியன் ரூபாய் செலவில் (பல தரப்பின் நிதிப்பங்களிப்போடு) உருவாக்கப்பட்ட மிகப் பெரியதொரு அரிசி ஆலை போதிய இயக்கமின்றி உள்ளது. கூட்டுறவுச் சங்கங்களின் சமாச அரிசி ஆலை தனியாருக்கு விடப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் சீராக இயங்க வைப்பதற்கான வழிமுறைகளைக் கண்டிருக்க முடியும். இப்படிப் பல. பழம் பதனிடும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. நன்னீர் மீன்பிடியில் முன்னேற்றம் எட்டப்படவில்லை. பனை, தென்னைவள உற்பத்திகள் மேம்படுத்தப்படவில்லை. 

குறைபாடுகளின் பட்டியல்  நீண்டது. அதைச் சொல்வதால் பயனில்லை. 

செய்யக் கூடியவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.

கிளிநொச்சியை ஒரு விவசாயப் பொருளாதார நகரமாக உருவாக்கியிருக்க முடியும். அதற்கான கருத்திட்டத்தை நிபுணர்கள் குழுவொன்று மக்கள் சிந்தனைக் களத்தின் மூலம், கிளிநொச்சி பொறியியற் பீடம், விவசாய பீடம் ஆகியவற்றில் நடந்த ஆய்வரங்கில் முன்வைத்திருந்தனர். அதை அல்லது அவ்வாறான ஒன்றை ஆரம்பித்திருக்கலாம்.

கிளிநொச்சியில் உற்பத்தி செய்யப்படும் நெல்லை வெளியே அப்படியே அனுப்பாமல், அதை முடிவுப் பொருளாக்கி (அரிசி, மா, அவல் போல) சந்தைக்கு அனுப்புவதற்கான தொழில் முயற்சிக்கு வித்திட்டிருக்கலாம். இதைப் பற்றிப் பலரும் தொடர்ந்து பேசி வருகின்றனர். 

கிளிநொச்சியில் 09 நீர்ப்பாசனக் குளங்கள் உண்டு. சிறுகுளங்கள் 400 வரையில் உண்டு. இவற்றில் நன்னீர் மீன்பிடி நடக்கிறது. நன்னீர் மீன்வளர்ப்பும் சிறிய அளவில் மேற்கொள்ளப்படுகின்றன. இதை துறைசார்ந்தவர்களுடன் இணைந்து சிறப்பான கட்டமைப்பாக்கம் செய்து, இந்தத் தொழிலை விரிக்க  வேண்டும். 

பனம்பொருட்கள் இன்று உச்ச விலைப் பெறுமானத்தை அடைந்துள்ளன. ஆனால், உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. இதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. பனை அபிவிருத்திச் சபை, பனை, தென்னை வளச் சங்கங்கள், சமாசங்கள், இணையங்கள் எல்லாம் உள்ளன. இவற்றை ஒரு வலையமைப்பின் கீழ் கொண்டு வந்து உற்பத்தியை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். 

பனை, தென்னை மதுசார உற்பத்தியை சிறப்பாகச் செய்யலாம். அதுவொரு வலுவான பொருளாதார நடவடிக்கையாகும். அதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.

பழப்பொருட்களைப் பதனிடும் ஆலைகள் மூடப்பட்டுள்ளன. அவற்றை மீள்நிலைப்படுத்துவதன் மூலம் சிறப்பாக பழ உற்பத்தியும் பழப்பொருள் உற்பத்தியும் கிடைக்கச் செய்ய முடியும்.

கரைச்சி, பூநகரி, பச்சிலைப்பள்ளி, கண்டாவளை ஆகிய பிரதேசங்களில் அபிவிருத்தி வலயங்களை உருவாக்கியிருக்க முடியும். அதற்கான  அடிப்படைகள் அங்கே தாராளமாக உண்டு. அரசாங்கம் அதற்கு அனுமதிக்காது என்று எளிதாகச் சொல்லித் தப்பி விட முடியாது.

கார்கில்ஸ், நோர்த் லங்காபோன்ற நிறுவனங்கள் கிளிநொச்சியிலும் இயக்கச்சியிலும் பால் பதப்படுத்துதலை அமைத்து, கால்நடை மேம்பாட்டில் முதலீடு செய்துள்ளன.

வேளாண் பொருட்கள் பதனிடலையும் செய்ய முடியும்.

கிளிநொச்சியில் (தம்புள்ளவுக்கு முதல்) 1970, 80 களில் இருந்த பெரும்சந்தையை வடக்கின் பெரும் சந்தையாக உருவாக்க முடியும் – உருவாக்க வேண்டும். 

பல்வேறு வழிகளிலும் பலர் முதலீடுகளைச் செய்வதற்குத் தயாராக இருந்தனர்; இருக்கின்றனர். 

இயக்கச்சியில் ReaCha சுற்றுலா மையம், பூநகரி – கௌதாரிமுனையில் சுற்றாலாத் தளம் போன்றவற்றைப்போல வெவ்வேறு வாய்ப்புகள் தாராளமாக உள்ளது. 

இவற்றையெல்லாம் தனியொருவராக அவரால் செய்ய முடியாது என்றால், யாரையெல்லாம் இணைத்துக் கொள்ள வேண்டுமோ, அவர்களை இணைத்துச் செயற்படுத்தியிருக்கலாம். மக்களுக்கான பணிகளைச் செய்வதற்கு உலகமெங்கும் பல்வேறு தரப்பினர் உள்ளனர். அரசியல் வேறுபாடுகளுக்கு அப்பால் இணையக் கூடிய புள்ளிகள் நிறைய உண்டு.

ஆனால், அப்படிப் பலரையும் இணைத்துச் செயற்படுவதற்கு சிறிதரனின் இயல்பு (குணாம்சம்) தடையாக உள்ளது. இன்று தமிழ்த்தேசியப் பரப்பில் இயங்கிக் கொண்டிருக்கின்ற அரசியல் கட்சிகள், அரசியல்வாதிகளில் ஒரு சிலரைத் தவிர, வேறு எவரும் சிறிதரனோடு உறவில் இல்லை. ஏன், தமிழரசுக் கட்சிக்குள்ளேயே அவர் தனிமையாகிக் கொண்டே போகிறார். 

மக்களுடைய அரசியல் பிரதிநிதியாக இருப்பவர் சொந்த விருப்பு வெறுப்புகளையும் தனி நலன்களையும் ஓரங்கட்ட வேண்டும். முடிந்தளவுக்கு இறங்கியும் இணைந்தும் செயற்பட வேண்டும். இந்தப் பண்பு இல்லாதிருப்பதே சிறிதரனின் தோல்வியாகும். இந்தக் குறைபாட்டை விலக்கவில்லை என்றால், தேர்தல்களில் அவர் தொடர்ந்து வெற்றியீட்டலாம். வரலாற்றில் தோல்வி கண்ட அரசியல்வாதியாகவே அவர் மதிப்பிடப்படுவார். வரலாற்றின் நாயகர்கள் யாரென்றால் சமூக வளர்ச்சியை, சமூக மாற்றத்தை உருவாக்கியவர்களே. அவர்களுக்கே வரலாறுண்டு. 

https://arangamnews.com/?p=12313

முந்தைய கட்டுரை

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.