Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு வறட்சியான நிலத்தில் ஒருகாலத்தில் உலகின் முதல் பெரிய நாகரிகங்களில் ஒன்று மலர்ந்திருந்தது என்பதை கற்பனை செய்வதே கடினம்.

பட மூலாதாரம், Zona Arqueológica Caral

படக்குறிப்பு, பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ஹீதர் ஜாஸ்பர்

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

பெருவின் பாலைவன மலைப்பகுதிகளில் தொல்பொருள் ஆய்வாளர்கள் 3,800 ஆண்டுகள் பழமையான ஒரு நகரத்தை கண்டுபிடித்துள்ளனர். இது அமெரிக்க நாகரிகத்தின் தொடக்கத்தைப் பற்றிய நம்முடைய புரிதலை மாற்றக்கூடும்.

லிமாவிலிருந்து நான்கு மணி நேர வடக்கில் உள்ள சூப் பள்ளத்தாக்கு, காற்று வீசும் வெறிச்சோடிய சமவெளி, இடிந்து போன அடோப் சுவர்கள், வெப்பம் மிளிரும் வறண்ட மலைச்சரிவுகள் போன்ற அனைத்தும் அங்கு வாழ்வதற்கே பொருத்தமில்லாத சூழலை உருவாக்குகின்றன.

ஆனால், இவ்வளவு வறட்சியான நிலத்தில் ஒருகாலத்தில் உலகின் முதல் பெரிய நாகரிகங்களில் ஒன்று மலர்ந்திருந்தது என்பதை கற்பனை செய்வதே கடினம்.

அந்த மணலுக்கு அடியில் புதைந்து கிடந்த ஒரு புதிய கண்டுபிடிப்பு, இப்போது அமெரிக்காவின் வரலாற்றை மறுபரிசீலனை செய்ய வைக்கும் அளவுக்கு முக்கியமானதாக இருக்கிறது.

ஜூலை 2025-ல், பெருவிய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முனைவர் ரூத் ஷாடி, கேரல் நாகரிகத்தைச் சேர்ந்த பெனிகோ என்ற நகரத்தை வெளிக்கொண்டுவந்தார். இந்த 3,800 ஆண்டு பழமையான நகரத்தில், கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்கள் உட்பட 18 கட்டமைப்புகள் உள்ளன.

முக்கியமாக, இந்த நகரம் ஒரு புதிய உண்மையை வெளிப்படுத்துகிறது. கேரல் மக்கள், போர் புரியும் மனநிலைக்கு மாறவில்லை என்பது தான் அந்த உண்மை.

அவர்கள் தேர்ந்தெடுத்த அந்த அமைதியான வாழ்வியல் உத்தி, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பும் எவ்வாறு வியப்பூட்டியதோ, இன்றும் அதே போல் வியப்பூட்டுகிறது.

"மோதல்கள் இல்லாத வாழ்க்கை என்பதையே கேரல் நாகரிகம் எப்போதும் முன்னிறுத்தியது. பெனிகோ அந்த பார்வையைத் தொடர்ந்து வெளிப்படுத்துகிறது." என்று சூப் பள்ளத்தாக்கில் முப்பது ஆண்டுகளாக ஆய்வுகளை நடத்திவரும் முனைவர் ஷாடி கூறினார்.

அமெரிக்காவின் அமைதியான நாகரிகம்

ஆஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்களுக்கு முன்னரே, பெருவின் வறண்ட கடற்கரைப்பகுதி கேரல் மக்களின் தாயகமாக இருந்தது. உலகின் மிகவும் பழமையான மற்றும் அமைதியான சமூகங்களில் ஒன்றாகக் கருதப்படும் இவர்களின் முக்கிய குடியேற்றம் கேரல்-சூப்.

அமெரிக்க நாகரிகத்தின் தொட்டிலாகக் கருதப்படும் இந்த இடம், 2009 முதல் யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் இடம்பெற்றுள்ளது. சுமார் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு, இது மெசபடோமியா மற்றும் எகிப்தின் ஆரம்ப நகரங்களுடன் இணைந்து செழித்து வளர்ந்தது. "கேரல் [கிமு 3000 முதல் கிமு 1800 வரை] மக்கள் வசித்த இடமாக இருந்தது," என்று தொல்பொருள் ஆய்வாளர் முனைவர் ரூத் ஷாடி விளக்குகிறார்.

பெனிகோவின் கண்டுபிடிப்பு கேரலின் நிலை குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

பட மூலாதாரம், Zona Arqueológica Caral

படக்குறிப்பு, பெனிகோவின் கண்டுபிடிப்பு கேரலின் நிலை குறித்து வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது.

ஆனால், பழைய உலக நாகரிகங்களைப் போல அல்லாமல், கேரலில் தற்காப்புச் சுவர்களும், ஆயுதங்களுக்கான சான்றுகளும் இல்லை. 1994-இல் ஷாடி அகழ்வாய்வை தொடங்கியபோது, அவர் வர்த்தகம், இசை, சடங்கு மற்றும் ஒருமித்த கருத்து அடிப்படையில் அமைந்த ஒரு சமூகத்தை கண்டுபிடித்தார்.

ஷாடியின் ஆய்வின்படி, கேரலில் சுமார் 3,000 பேர் வாழ்ந்தனர். அருகிலுள்ள பல சிறிய கிராமங்களும் அதனுடன் இணைந்திருந்தன.

சூப் பள்ளத்தாக்கின் நிலப்பகுதி, பசிபிக் கடற்கரை, வளமான ஆண்டியன் பள்ளத்தாக்குகள் மற்றும் தொலைவிலுள்ள அமேசான் பகுதியை இணைக்கும் முக்கிய இடமாக இருந்தது. இதனால், கலாசாரம் மற்றும் வர்த்தகத்தின் பரிமாற்றம் நடைபெறும் ஒரு வலையமைப்பு உருவானது.

கேரல் மக்கள் பருத்தி, சர்க்கரைவள்ளிக்கிழங்கு, பூசணிக்காய், பழங்கள் மற்றும் மிளகாய்களை வளர்த்தனர். மலைப் பகுதிகளில் இருந்து கனிமங்கள், அமேசானில் இருந்து சிறு குரங்குகள் மற்றும் மக்காவ் போன்ற விலங்குகளை செல்லப்பிராணிகளாகப் பெற்றனர். கடற்கரையில், அவர்கள் நத்தைகள், கடற்பாசி மற்றும் மீன்களை சேகரித்தனர்.

"அவர்கள் காடு, மலை, மேலும் ஈக்வடார், பொலிவியா வரை உள்ள மக்களுடன் கலாச்சார தொடர்புகளை வைத்திருந்தனர். ஆனால் அந்த உறவுகள் எப்போதும் அமைதியானவையாகவே இருந்தன," என்கிறார் ஷாடி.

இதற்கு மாறாக, ஆஸ்டெக், மாயா, இன்கா நாகரிகங்கள் ராணுவ வலிமையை நம்பிய நாடுகளாக இருந்தன. அவை அண்டை இனக்குழுக்களுக்கு எதிராக, அடிக்கடி நீண்டகாலப் போர்களை மேற்கொண்டன.

கேரல் நாகரிகத்தின் புத்திசாலித்தனம், கட்டிடக்கலை மற்றும் கலைகளிலும் வெளிப்பட்டது. நகரின் ஆம்பிதியேட்டர் (வட்ட அரங்கு), பசிபிக் விளிம்பில் ஏற்படும் கடும் நிலநடுக்கங்களையும் தாங்கும் வகையில் கட்டப்பட்டது. அதில் பெரிய இசை நிகழ்ச்சிகளுக்கான சிறப்பான ஒலி வடிவமைப்பும் இருந்தது.

அகழ்வாய்வுகளில் 32 நீளமான புல்லாங்குழல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சில பெலிகன் எலும்புகளில் செதுக்கப்பட்டவை, சில குரங்கு மற்றும் காண்டோர் உருவங்களால் அலங்கரிக்கப்பட்டவை. இது தொலைதூர வர்த்தகமும் கலாச்சார இணைப்பும் நடந்ததற்கான பொருட்சான்றாகக் கருதப்படுகிறது.

"இந்த இசைக்கருவிகளைப் பயன்படுத்தி, அவர்கள் கடற்கரை, மலை மற்றும் காடுகளில் இருந்து வந்த மக்களை சடங்குகள் மற்றும் விழாக்களில் வரவேற்றனர்," என்று ஷாடி விளக்கினார்.

கேரல் மற்றும் பெலிகோவின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று அவற்றின் சுற்று மைய பிளாசாக்கள் ஆகும்.

பட மூலாதாரம், Zona Arqueológica Caral

படக்குறிப்பு, கேரல் மற்றும் பெலிகோவின் மிகவும் கவர்ச்சிகரமான அம்சங்களில் ஒன்று அவற்றின் சுற்று மைய பிளாசாக்கள் ஆகும்.

பாலைவனத்தின் சரிவு

சமூக ரீதியாக வெற்றிகரமாக இருந்தாலும், கேரல் நாகரிகம் ஒரு பெரிய சவாலை எதிர்கொண்டது. அதுதான் காலநிலை மாற்றம்.

சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முன்பு, உலகம் முழுவதும் தாக்கம் செலுத்திய ஒரு பருவநிலை மாற்றத்தின் காரணமாக 130 ஆண்டுகள் நீடித்த வறட்சி ஏற்பட்டது. இதனால் பயிர்கள் நாசமாயின, பஞ்சம் ஏற்பட்டது. கேரலின் பிரமாண்டமான பிளாசாக்களும் பிரமிடுகளும் பாலைவனத்துக்குள் மறைந்தன.

"காலநிலை மாற்றம் கேரலில் ஒரு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. ஆறுகளும் வயல்களும் வறண்டு போனதால், அவர்கள் நகரங்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதேபோன்ற நிலை மெசபடோமியாவிலும் ஏற்பட்டது," என்று ஷாடி கூறுகிறார்.

பல ஆண்டுகளாக, பசியால் வாடிய மக்கள் கடற்கரைக்குச் சென்று மட்டியும் மீனும் சேகரித்து வாழ்ந்ததாக ஷாடியின் குழு நினைத்தது. ஹுவாரா பள்ளத்தாக்கில் உள்ள விச்சாமா எனும் இடத்தில் நடந்த அகழ்வாராய்ச்சி இதை உறுதிப்படுத்துவதாகத் தோன்றியது.

ஆனால், சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பெனிகோ நகரம், அந்தக் கதைக்கு மாற்றாக ஒரு புதிய வரலாற்றைச் சொல்கிறது.

பெனிகோ: உயிர் வாழ உதவிய புதிய அணுகுமுறை

கடல் மட்டத்திலிருந்து 600 மீட்டர் உயரத்தில், கேரல் -சூப்பிலிருந்து வெறும் 10 கி.மீ தூரத்தில், ஆற்றின் மேல்பகுதியில் பெனிகோ நகரம் அமைந்துள்ளது. பனிப்பாறைகளில் இருந்து வரும் நீருக்கு அருகில் குடியேறிய சில கேரல் மக்கள், வறட்சியால் பாதிக்கப்பட்ட சூப் பள்ளத்தாக்கில் தங்களைத் தக்கவைத்துக் கொண்டனர். ஆறுகள் வற்றிய நிலத்தில், மலை உருகும் நீருக்கு அருகில் வாழ்வதே அவர்கள் உயிர் வாழ்வதன் முக்கிய காரணமாக இருந்தது.

இதில் வியக்கத்தக்கது, அவர்கள் இடமாற்றம் செய்தது மட்டுமல்ல.அந்த மாற்றத்திற்கு சமூகம் எப்படி பதிலளித்தது என்பதும் தான்.

பெனிகோவில் போர், ஆயுதங்கள், அல்லது கோட்டைச் சுவர்களுக்கான எந்த சான்றுகளும் கிடைக்கவில்லை. பற்றாக்குறை காலத்தில் இது மிகவும் அரிதான நிகழ்வாகும்.

தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன சிலைகள் மற்றும் சிற்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

பட மூலாதாரம், Zona Arqueológica Caral

படக்குறிப்பு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் அதிநவீன சிலைகள் மற்றும் சிற்பங்களை கண்டுபிடித்துள்ளனர்.

"பெனிகோ, இயற்கையுடன் இணக்கமாகவும், பிற கலாச்சாரங்களை மரியாதையுடன் ஏற்றுக்கொள்ளும் கேரல் பாரம்பரியத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறது," என்று முனைவர் ரூத் ஷாடி கூறினார்.

அகழ்வாய்வுகள், கலை மற்றும் சடங்குகளில் ஏற்பட்ட முன்னேற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன.

ஷாடியின் குழு அழகாக வடிவமைக்கப்பட்ட களிமண் சிலைகள், மணிகள் கொண்ட நெக்லஸ்கள், மற்றும் செதுக்கப்பட்ட எலும்புகளை கண்டுபிடித்துள்ளது. அவற்றில் ஒன்று மனித மண்டை ஓட்டின் வடிவில் இருந்தது.

ஒரு குறிப்பிடத்தக்க சிற்பம், சிகை அலங்காரம் செய்யப்பட்ட ஒரு பெண்ணின் தலை, ஹெமடைட் நிறமியால் சிவப்பாக வண்ணமிடப்பட்ட முகத்துடன் கண்டுபிடிக்கப்பட்டது.

இந்தப் பொருட்கள், மக்கள் தொகை குறைந்திருந்த போதிலும், அந்தச் சமூகம் தனது அடையாளத்தையும் ஒற்றுமையையும் காப்பாற்ற கலாச்சார வெளிப்பாட்டில் முக்கியத்துவம் கொடுத்ததை காட்டுகின்றன.

இந்த தொல்பொருள் தளம் ஏற்கனவே பொதுமக்களுக்கு திறக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் அங்குள்ள சடங்கு கோயில்கள் மற்றும் குடியிருப்பு வளாகங்களை நேரில் சென்று காணலாம்.

விளக்கக் கண்காட்சிகளுடன் கூடிய புதிய பார்வையாளர் மையம், கேரல் மற்றும் பெனிகோவின் தனித்துவ அம்சமான வட்ட மைய பிளாசாக்களை பிரதிபலிக்கும் வட்ட வடிவமைப்பில் கட்டப்பட்டுள்ளது.

இந்த பிளாசாக்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் நிர்வாகப் பகுதிகள் என்று கருதும் இடங்களில் அமைந்துள்ளன. இதுவே அந்த சமூகம் ஒருமித்த கருத்தின் அடிப்படையில் இயங்கியிருக்கலாம் என்பதற்கான சான்றாக பார்க்கப்படுகிறது. ஒருவேளை அது, சுமார் 2,000 ஆண்டுகள் கழித்து தோன்றிய பண்டைய கிரேக்க ஜனநாயக அமைப்பை போன்றதாக இருந்திருக்கலாம்.

கேரல் நகரத்தில் சுற்றுலா வழிகாட்டியாக பணிபுரியும் காஸ்பர் சிஹு, இந்த இடங்கள் இன்னும் பரவலாக அறியப்படுவதற்கு முன்பே பயணிகள் வர வேண்டும் என்று ஊக்குவிக்கிறார்.

"சூப் பள்ளத்தாக்கில் வழிகாட்டுவதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. ஏனெனில் இது முக்கிய சுற்றுலா பாதையிலிருந்து வெகுதூரத்தில் இருக்கிறது," என்று அவர் கூறுகிறார்.

பெனிகோவில் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளன. பல கட்டிடங்கள் இன்னும் பாலைவன மணலின் கீழே புதைந்திருக்கின்றன. "நாம் இன்னும் தெரிந்துகொள்ள நிறைய இருக்கிறது"என்று ஷாடி கூறுகிறார்.

பெனிகோவில் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளன.

பட மூலாதாரம், Zona Arqueológica Caral

படக்குறிப்பு, பெனிகோவில் அகழ்வாராய்ச்சிகள் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளன.

கடந்த காலத்திலிருந்து பெற்ற பாடங்கள்

பெனிகோவின் பிளாசாக்களில் நிற்கும்போது, ஒரு பண்டைய சமூகம் போரால் அல்லாமல், புதிய வாழ்க்கை முறைக்கு ஏற்றவாறு தன்னை மாற்றி, நெருக்கடியை எவ்வாறு எதிர்கொண்டது என்பதை நினைக்கும்போது வியப்பாய் உள்ளது.

உயிர்வாழ அவர்கள் தேர்ந்தெடுத்த உத்திகள்:

  • தண்ணீருக்கு அருகில் குடியேறுதல்,

  • வர்த்தக வலையமைப்புகளைப் பேணுதல்,

  • கலை மற்றும் சடங்குகளைத் தொடர்ந்து கடைப்பிடித்தல்

3,800 ஆண்டுகளுக்கு முன், கடுமையான அழுத்தத்திலும் ஒத்துழைப்பால் ஒரு சமூகம் நிலைத்திருக்க முடியும் என்பதை இவை நினைவூட்டுகின்றன.

இந்தப் பாடம் இன்று மிகவும் அவசரமாக உணரப்படுகிறது.

பெரு, இன்னும் தனது நீர் விநியோகத்திற்காக, ஆண்டியன் பனிப்பாறைகளையே நம்பியுள்ளது. ஆனால், கடந்த 58 ஆண்டுகளில் அதன் வெப்பமண்டல பனியின் 56% இழந்துவிட்டது என்று அரசாங்க பனிப்பாறை நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

"காலநிலை மாற்றத்தைக் கையாள பல விஷயங்களை நாம் செய்ய வேண்டும். மனித சமூகம் நல்ல வாழ்க்கை தரத்துடனும் பரஸ்பர மரியாதையுடனும் தொடர, வாழ்க்கையை நாம் எப்படிப் பார்க்கிறோம், நம் கிரகத்தில் நடக்கும் மாற்றங்களை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் மாற்றம் அவசியம்," என்று முனைவர் ஷாடி கூறுகிறார்.

பெருவின் பாலைவன மணலில் பாதியாக புதைந்து கிடந்தாலும், பெனிகோ நகரம் உலகிற்கு ஒரு முக்கியமான பாடத்தைக் கூறும் வரலாற்று கண்டுபிடிப்பாகவே உணரப்படுகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cq5jzwvd987o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.