Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கையில் துப்பாக்கியுடன் ஷம்பாலா தேவி இருக்கும் ஒரு பழைய புகைப்படம்

பட மூலாதாரம், Shambala Devi

படக்குறிப்பு, ஷம்பாலா தேவி 2014-ல் அரசின் மறுவாழ்வுத் திட்டத்தின் கீழ் சரணடைந்தார்.

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,திவ்யா ஆர்யா

  • பதவி,பிபிசி செய்தியாளர், தெலங்கானா

  • 19 செப்டெம்பர் 2025

ஷம்பாலா தேவி தனது பழைய புகைப்படங்களில் ஒன்றைக் காட்டுகிறார். அதில் அவர் அடர் பச்சை நிற சட்டை மற்றும் பேண்ட் அணிந்துள்ளார். அவரது கையில் AK-47 ரக துப்பாக்கி உள்ளது, மணிக்கட்டில் கடிகாரம் மற்றும் இடுப்பில் வாக்கி-டாக்கி உள்ளது.

அவரிடம் இதுபோன்ற இரண்டு புகைப்படங்கள் மட்டுமே உள்ளன. இவை 25 ஆண்டுகளுக்கு முன்பு, அவர் இந்தியாவின் மாவோயிஸ்ட் கிளர்ச்சியாளர்களின் முதல் பெண் 'ராணுவ' கமாண்டராக மாறியபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

25 ஆண்டுகள் காட்டில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அவர் ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார்.

இந்த நேரத்தில் அவர் பலமுறை தனது பெயரை மாற்றிக்கொண்டார். கிளர்ச்சியாளர்களுடன் இணைந்தபோது, அவர் தேவக்கா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். அதற்கு முன்பு அவர் வட்டி அடிமே என்று அழைக்கப்பட்டார்.

பெரும்பாலான போராட்டங்களில் பெண்களின் பங்களிப்புக்கு முன்னுரிமை அளிக்கப்படுவதில்லை.

தேவியின் கணவர் ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டர்தான். அவரது அனுபவங்கள் டஜன் கணக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆனால், தேவி பற்றி மிகக் குறைவான தகவல்கள் மட்டுமே கிடைக்கின்றன.

நாங்கள் அவர் ஆயுதமேந்திய மாவோயிஸ்ட் கமாண்டர் ஆனது மற்றும் சரணடைந்தது குறித்த கதையை அறிய விரும்பினோம்.

முதலில் தனது வாழ்க்கைக் கதையை எங்களுடன் பகிர்ந்துகொள்ள அவர் தயங்கினார். இறுதியில், தனது கிராமத்தில் சந்திக்க ஒப்புக்கொண்டார். நாங்கள் அவரைச் சந்திக்க அவரது கிராமத்திற்குச் சென்றோம்.

தேவிக்கு இப்போது 50 வயது. நாங்கள் அவரைச் சந்தித்தபோது, அவர் நீலபச்சை நிற புடவை அணிந்திருந்தார். வேலை செய்யும் போது அது ஈரமாகிவிடக்கூடாது என்பதற்காக அதை உயர்த்திக் கட்டியிருந்தார்.

எங்களுக்கு அவர் தேநீர் கூட தயாரித்துக் கொடுத்தார். எங்கள் உரையாடல் இடைவெளி விட்டுவிட்டு நடந்தது. இதற்கிடையில், அவர் அரிவாளை எடுத்துக்கொண்டு வயலில் வேலை செய்யவும் சென்றார். நாங்களும் அவரோடு சென்று பேசினோம்.

ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைதல்

ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளின் குழுவில் மிகக் குறைந்த பெண்களே இருந்த நேரத்தில், தேவி ஒரு சாதாரண கிராமப்புற குடும்ப வாழ்க்கையை விட்டுவிட்டு, கிளர்ச்சி அரசியல் மற்றும் 'கொரில்லாப் போர்' பாதையைத் தேர்ந்தெடுத்தார்.

"நாங்கள் நிலமற்றவர்கள். ஏழைகள், பெரும்பாலும் பட்டினியாக இருந்தோம். அடிப்படை சுகாதார சேவைகளும் எங்களுக்குக் கிடைக்கவில்லை. நாங்கள் காட்டில் நிலத்தை உழ முயற்சிக்கும்போது, வனத்துறை அதிகாரிகள் எங்களைத் தாக்கினர். அவர்கள் போலீசாருடன் கைகோர்த்து செயல்பட்டனர்," என அவர் தெரிவித்தார்.

வன நிலத்தில் விவசாயம் செய்வது சட்டவிரோதமானது. கிராம மக்களைத் தடுத்து, அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றுவது சாதாரணமானது என்று உள்ளூர் மக்களும், சமூக ஆர்வலர்களும் கூறுகின்றனர்.

ஷம்பாலா தேவியின் தற்போதைய புகார்

படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது மீண்டும் கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பியுள்ளார்.

தனது 13வது வயதில் தனது தந்தை வனத்துறை அதிகாரிகளால் மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதை பார்த்ததாக தேவி கூறுகிறார். அதன் பிறகு போலீசார் அவரது தந்தையைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இவை அனைத்தையும் பார்த்த பிறகு, தேவி வீட்டை விட்டு வெளியேறி வன்முறைப் பாதையில் இறங்கினார். "எனது கருத்தை சொல்ல ஒரே ஒரு வழிதான் இருந்தது – அது துப்பாக்கி முனையில் பேசுவதுதான்" என்று கூறுகிறார்.

கிராம மக்கள் ஏன் அதிகாரிகளிடம் புகார் செய்யவில்லை என்று நாங்கள் அவரிடம் கேட்டபோது அவர், "போலீஸ் ஒருபோதும் எங்கள் பேச்சைக் கேட்கவில்லை, மாவோயிஸ்டுகள் வந்த பின்னரே வனத்துறை அதிகாரிகள் பின்வாங்கினர்" என்று கூறினார்.

மாவோயிசம் முடிவுக்கு வந்ததாக கூறிய அரசு

1988-ல் தேவி ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் இணைந்தார்.

2000-களில், மாவோயிஸ்ட் கிளர்ச்சி அதன் உச்சத்தில் இருந்தது. 10 மாநிலங்களில் பரவியிருந்த இதில் ஆயிரக்கணக்கானோர் ஈடுபட்டிருந்தனர். அதன் வலிமை மத்திய மற்றும் கிழக்கு இந்தியாவின் தொலைதூர காடுகளில் இருந்தது.

இந்தியாவின் இந்த மாவோயிஸ்ட் கிளர்ச்சி சீனப் புரட்சியாளர் மா சே துங்கின், 'அரசாங்க அதிகாரத்திற்கு எதிரான மக்களின் போர்' என்ற சித்தாந்தத்தை அடிப்படையாகக் கொண்டது.

1967-ல் மேற்கு வங்கத்தின் நக்சல்பாரி கிராமத்தில் ஆயுதமேந்திய விவசாயிகள் கிளர்ச்சி ஏற்பட்டது.

இதனுடன் சேர்த்து இது நக்சலிச இயக்கம் என்றும் அழைக்கப்படுகிறது.

பல்லாண்டுகளாக நடந்து வரும் இந்த வன்முறைப் போராட்டத்தில் பல ஏற்ற இறக்கங்கள் வந்துள்ளன. சமீபத்திய ஆண்டுகளில் இது மிகவும் பலவீனமடைந்துள்ளது.

மறைந்திருந்து தாக்குதல் நடத்தும் கொரில்லா முறைகளைப் பின்பற்றும் இந்த கிளர்ச்சியாளர்கள், ஏழைக் குழுக்களிடையே நிலத்தைப் பகிர்ந்தளிக்கவும், ஆயுதப் போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை அகற்றி ஒரு கம்யூனிஸ்ட் சமூகத்தை நிறுவவும் போராடுவதாகக் கூறுகின்றனர்.

இந்தத் தொலைதூர கிராமப்புறப் பகுதிகளை அரசாங்கம் பல பத்தாண்டுகளாகப் புறக்கணித்து வருவதாகவும், காட்டு நிலங்களை பெரிய நிறுவனங்களுக்கு ஏலம் விடுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

மறுபுறம், இந்த கிராமப்புறக் குழுக்களுக்கு வன நிலத்தின் மீது உரிமை இல்லை என்று அரசு வாதிடுகிறது.

அந்த நிலத்தை உழ முடியாது. மேலும், பெரிய தொழில்கள் மூலமாகவே வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும் என்றும் அது கூறுகிறது.

இந்த ஆண்டு ஜூன் மாதம், உள்துறை அமைச்சர் அமித் ஷா நக்சலிசத்தை "ஏழை பழங்குடி பகுதிகளுக்கு ஒரு பெரிய பேரிடர்" என்று விவரித்தார்.

இதனால் பழங்குடி மக்கள் "உணவு, மின்சாரம், கல்வி, வீட்டுவசதி, கழிப்பறைகள் மற்றும் சுத்தமான குடிநீர் போன்ற அடிப்படைத் தேவைகளை இழந்துள்ளனர்" என்று அவர் கூறினார்.

சரணடைய விரும்பாத மாவோயிஸ்டுகளுக்கு எதிராக அரசு இப்போது ஒரு "கடுமையான அணுகுமுறை" மற்றும் "சகித்துக்கொள்ளாத கொள்கை" ஆகியவற்றை பின்பற்றுகிறது.

இதைச் செயல்படுத்துவதற்காகப் பாதுகாப்புப் படைகள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளன.

2026 மார்ச் 31-க்குள் "இந்தியா நக்சல் இல்லாத நாடாகிவிடும்" என்று உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.

போராட்டத்தில் இறந்தவர்கள்

1980-களைப் பற்றிய தேவியின் கூற்றுக்களைச் சுயாதீனமாக உறுதிப்படுத்துவது எங்களுக்குச் சாத்தியமில்லை.

அவர் 30 பேர் கொண்ட படைப் பிரிவுகளுக்குத் தலைமை தாங்கி, ஒருபோதும் ஒரே இடத்தில் தங்கவில்லை என்று கூறுகிறார்.

பாதுகாப்புப் படைகள் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் அவர் பல்வேறு மாநிலங்களில் சுற்றித் திரிந்துள்ளார்.

அவர், "நான் முதல் முறையாக மறைந்திருந்து தாக்கியது எனக்கு நினைவிருக்கிறது. நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள கண்ணிவெடியை அமைத்து ஒரு கண்ணிவெடியால் தகர்க்க முடியாத வாகனத்தை வெடிக்கச் செய்தேன். அதில் பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டனர்" என்று கூறுகிறார்.

இத்தகைய தாக்குதல்களுக்குத் தலைமை தாங்கியதில் அவருக்குப் பெருமை உள்ளது. மேலும், இதில் கொல்லப்பட்ட பாதுகாப்புப் படையினர் குறித்து அவருக்கு எந்த வருத்தமும் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது.

இருப்பினும், அவரது கைகளால் கொல்லப்பட்டவர்கள் குறித்து நாங்கள் பலமுறை வற்புறுத்திக் கேள்வி கேட்டோம்.

காட்டில் ஷம்பாலா தேவியின் புகைப்படம்.

பட மூலாதாரம், Shambala Devi

படக்குறிப்பு, காட்டில் ஷம்பாலா தேவியின் புகைப்படம்.

காவல்துறையின் ஒற்றர்கள் என்று தவறாக நினைத்துத் தாங்கள் கொன்ற அல்லது பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல் நடத்தும் போது துப்பாக்கிச் சூட்டில் சிக்கி இறந்த பொதுமக்களின் மரணத்திற்காக அவர் வருத்தத்தை வெளிப்படுத்துகிறார்.

அவர், " நாங்கள் எங்கள் சொந்த மக்களைக் கொன்றுவிட்டோம் என்பதால் இது தவறாகத் தோன்றியது. நான் அவர்களின் கிராமங்களுக்குச் சென்று இறந்தவர்களின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டேன்," என்று கூறுகிறார்.

ஒருமுறை அவரது படைப்பிரிவு, பாதுகாப்புப் படையினர் மீது பதுங்கித் தாக்கியபோது, பாதுகாப்புப் படை வீரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒரு சாதாரண குடிமகனும் கொல்லப்பட்ட ஒரு சம்பவத்தை அவர் நினைவுகூர்ந்தார்.

அவரது தாய் மிகவும் கோபமாக இருந்தார், அழுதுகொண்டிருந்தார். படைப்பிரிவு ஏன் இரவில் தாக்குதல் நடத்தியது என்று கேட்டார் என்று அவர் கூறுகிறார்.

அந்த நேரத்தில் பொதுமக்களை அடையாளம் காண்பது கடினம். தேவியின் கூற்றுப்படி, இரவு நேரத் தாக்குதல்கள் மிகவும் பயனுள்ளவை.

தாம் எத்தனை பேரைக் கொன்றோம் என்பது தனக்குத் தெரியாது என்று தேவி கூறுகிறார்.

ஆனால், பாதுகாப்புப் படைகளுக்கும் மாவோயிஸ்டுகளுக்கும் இடையிலான வன்முறை மோதல்களில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலானோர் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

தெற்காசியாவில் பயங்கரவாதம் மற்றும் 'குறைந்த தீவிரம் கொண்ட போர்' குறித்த மிகப்பெரிய தரவுத்தளமான 'தெற்கு ஆசிய தீவிரவாத தளம்' தரவுகள்படி, 2000-ஆம் ஆண்டு முதல் 2025-ஆம் ஆண்டு வரை இந்த மோதலில் சுமார் 12 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் குறைந்தபட்சம் 4,900 மாவோயிஸ்டுகள், 4,000 பொதுமக்களும் மற்றும் 2,700 பாதுகாப்புப் படையினரும் அடங்குவர்.

வன்முறையை அனுபவித்த மற்றும் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் விமர்சனங்கள் இருந்தபோதிலும், உள்ளூர் கிராம மக்கள் பெரும்பாலும் மாவோயிஸ்டுகளுக்கு ஆதரவு அளித்ததாகவும், அவர்களுக்கு உணவு மற்றும் பிற அத்தியாவசிய பொருட்களை வழங்கியதாகவும் தேவி கூறுகிறார்.

பல பழங்குடி சமூகங்கள் மாவோயிஸ்டுகளைத் தங்கள் மீட்பர்களாகக் கருதினர் என்று அவர் கூறுகிறார்.

அவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில், அவர்கள் காட்டு நிலங்களை சாதாரண மக்களுக்குப் பிரித்துக் கொடுத்தனர். மேலும், தண்ணீர் மற்றும் சுகாதார சேவைகளைப் பெற அவர்களுக்கு உதவினர்.

இது தொடர்பாக நாங்கள் சில கிராம மக்களுடன் பேசினோம். அவர்களும் தேவியின் இந்த கூற்றுக்களை உறுதிப்படுத்தினர்.

சவால்களும் 'சுதந்திரமும்'

முதலில், கொரில்லாப் போரின் உடல் மற்றும் மன ரீதியான சவால்கள் தேவிக்கு புதியவையாக இருந்தன.

அவர் அதற்கு முன்பு ஒருபோதும் பொதுவில் ஆண்களுடன் பேசியதில்லை. எனவே, அவர்களுக்குத் தலைமை தாங்குவதையும், அவர்களுக்குக் கட்டளையிடுவதையும் அவர் கற்றுக்கொள்ள வேண்டியிருந்தது.

பல ஆண்டுகளாக நிலத்தில் வேலை செய்த பிறகு அவர் இந்த நிலையை அடைந்ததால், ஆண்கள் அவரை மதித்தனர் என்று அவர் கூறுகிறார்.

அவரது கூற்றுப்படி, மாவோயிஸ்ட் அமைப்பில் தினமும் தண்ணீர் கொண்டு வருவது பெண்களின் பொறுப்பு. பாதுகாப்புப் படைகள் அங்குத் தேடுவதால், முகாம்கள் தண்ணீர் இருக்கும் இடத்திலிருந்து தொலைவில் அமைக்கப்பட்டன. மாவோயிஸ்ட் படைப்பிரிவு தொடர்ந்து காடுகளிலும், பாறைகள் நிறைந்த பகுதிகளிலும் அலைந்து திரிந்தது. கடினமான மாதவிடாய் காலங்களில் கூட பெண்களுக்கு எந்த விடுப்பும் அளிக்கப்படவில்லை.

ஆனால், தேவி ஒரு 'சுதந்திர' அனுபவத்தைப் பற்றியும் பேசுகிறார். தன்னை நிரூபிப்பதன் மூலமும், தனது அடையாளத்தை உருவாக்குவதன் மூலமும் இந்த 'சுதந்திரத்தை' அவர் உணர்ந்தார்.

"பழங்குடி சமூகத்தில் பெண்கள் செருப்புகளைப் போல் நடத்தப்பட்டனர். அவர்கள் யாருடைய மனைவியோ அல்லது தாயோ என்பதைத் தவிர வேறு எந்த அடையாளமும் இல்லை. ஆனால், மாவோயிஸ்ட் அமைப்பில், எங்கள் வேலை மூலம் நாங்கள் அடையாளம் காணப்பட்டோம் – அப்படி கமாண்டர் ஆனது எனது அடையாளம்," என்று அவர் கூறுகிறார்.

தான் தனது கிராமத்திலேயே இருந்திருந்தால், சிறு வயதிலேயே கட்டாயத் திருமணத்திற்கு உட்படுத்தப்பட்டிருப்பேன் என்று தேவி கூறுகிறார். மாவோயிஸ்டாக மாறிய பிறகு, அவர் தனது விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள முடிந்தது.

ஷம்பாலா தேவியின் கணவர் ரவிந்தர்

பட மூலாதாரம், Shambala Devi

படக்குறிப்பு, தேவியின் கணவர் ஷம்பாலா ரவிந்தரும் ஒரு மாவோயிஸ்ட் கமாண்டராக இருந்தார்.

ஆனால், மாவோயிஸ்டுகள் மற்றும் பாதுகாப்புப் படைகளின் தாக்குதல்கள் தீவிரமடைந்து, அதிக மக்கள் கொல்லப்பட்டபோது, தேவி தனது வாழ்க்கையைப் பற்றி மீண்டும் சிந்திக்கத் தொடங்கினார்.

வாக்குறுதியளிக்கப்பட்ட புரட்சி எங்கும் காணப்படவில்லை என்று அவர் உணர்ந்தார்.

"ஒருபுறம், பாதுகாப்புப் படைகள் தேடுதல் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தின. மறுபுறம், நாங்களும் அதிக தாக்குதல்கள் மற்றும் கொலைகளைச் செய்து கொண்டிருந்தோம்" என்று அவர் கூறினார்.

அந்த வாழ்க்கையை விட்டு வெளியேற மற்றொரு காரணம், அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவருக்கு எலும்பு காசநோய் (bone TB) ஏற்பட்டது.

சிகிச்சைக்காக அடிக்கடி காட்டுக்குள்ளிருந்து நகரத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு மறைந்து மறைந்து செல்ல வேண்டியிருந்தது.

"எந்தவொரு நிரந்தர மாற்றமும் நாடு தழுவிய விரிவாக்கத்தால் மட்டுமே வர முடியும். ஆனால், நாங்கள் சோர்ந்துவிட்டோம். எங்கள் செல்வாக்கு குறைந்துகொண்டிருந்தது. மக்களின் ஆதரவும் குறைந்துகொண்டிருந்தது," என்று தேவி கூறினார்.

தொலைதூரப் பகுதிகளில் வாழும் சமூகங்கள் ஒரு காலத்தில் மாவோயிஸ்டுகளிடம் உதவி பெற்றன.

இப்போது அவர்களின் வாழ்க்கையிலும் மாற்றங்கள் ஏற்படத்தொடங்கின. மொபைல் ஃபோன்கள் மற்றும் சமூக ஊடகங்கள் மூலம் அவர்கள் வெளி உலகத்துடன் சிறப்பாக இணைந்தனர்.

இதற்கிடையில், பாதுகாப்புப் படைகள் டிரோன்கள் போன்ற நவீன உபகரணங்களைக் கொண்டு ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளை கிராமங்களிலிருந்து தொலைவில் உள்ள காடுகளுக்குத் தள்ளினர். இது அவர்களை மேலும் தனிமைப்படுத்தியது.

சரண்

கையில் அரிவாளுடன் ஷம்பாலா தேவி

பட மூலாதாரம், Shambala Devi

படக்குறிப்பு, ஷம்பாலா தேவி இப்போது அரசு கொடுத்த நிலத்தில் விவசாயம் செய்கிறார்.

25 ஆண்டுகள் காடுகளில் வாழ்ந்த பிறகு, 2014-ல் அரசின் கொள்கையின் கீழ் தேவி ஆயுதங்களைக் கைவிட்டு சரணடைந்தார்.

இந்தக் கொள்கையின் கீழ், மாவோயிஸ்டுகள் மீண்டும் ஆயுதங்களை எடுக்க மாட்டோம் என்று உத்தரவாதம் அளித்து சரணடைகிறார்கள். அரசு அவர்களின் மறுவாழ்வுக்காக நிதி, நிலம் மற்றும் விலங்குகளை வழங்குகிறது.

இப்போது தேவி, தான் ஓடி வந்த அதே கிராமப்புற வாழ்க்கைக்குத் திரும்பி வந்துவிட்டார்.

சரணடைந்த பிறகு, தேவி மற்றும் அவரது கணவருக்கு அரசிடமிருந்து நிலம், ரொக்கப் பணம் மற்றும் குறைந்த விலையில் 21 செம்மறி ஆடுகள் கிடைத்தன.

தனது கணவர் ரவிந்தர் மற்றும் மகளுடன் ஷம்பாலா தேவி

பட மூலாதாரம், Shambala Devi

படக்குறிப்பு, தனது கணவர் ரவிந்தர் மற்றும் மகளுடன் ஷம்பாலா தேவி

சரணடைதல் கொள்கை, மாவோயிஸ்டுகளின் குற்றங்கள் மன்னிக்கப்படும் என்று வெளிப்படையாக கூறவில்லை.

இதன் கீழ், ஒவ்வொரு வழக்கையும் தனித்தனியாகப் பார்த்து, ஒருவருக்கு எதிராக வழக்குத் தொடர வேண்டுமா இல்லையா என்பது தீர்மானிக்கப்படும்.

தங்களுக்கு எதிராக வன்முறை தொடர்பான சட்ட வழக்குகள் எதுவும் இப்போது இல்லை என்று இந்தத் தம்பதியர் கூறுகின்றனர். அதிகாரப்பூர்வ அறிக்கைகளிலும் அத்தகைய வழக்குகள் எதுவும் பதிவு செய்யப்பட்டதாக எங்களுக்குத் தெரியவில்லை.

மத்திய அரசின் கூற்றுப்படி, கடந்த 10 ஆண்டுகளில் 8,000 மாவோயிஸ்டுகள் சரணடைந்துள்ளனர்.

மறுபுறம், எத்தனை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகள் எஞ்சியுள்ளனர் மற்றும் எத்தனை பேர் அவர்களின் உச்சத்தில் தீவிரமாக இருக்கின்றனர் என்பது குறித்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை.

சரணடைந்த பிறகு, தேவி கிராம சபையில் வார்டு உறுப்பினர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

வார்டு உறுப்பினர்கள் மக்களின் புகார்களை கிராமத் தலைவரிடம் எடுத்துச் சென்று, அரசுத் திட்டங்களைச் செயல்படுத்த உதவுகின்றனர். "அரசுடன் வேலை செய்வது எப்படி இருக்கும் என்று நான் பார்க்க விரும்பினேன்" என்று அவர் கூறுகிறார்.

அடுத்த ஆண்டு மார்ச் மாத இறுதிக்குள் அனைத்து மாவோயிஸ்டுகளையும் ஒழித்துவிடுவோம் என்ற அரசின் அறிவிப்பு பற்றி அவர் என்ன நினைக்கிறார் என்று நாங்கள் தேவியிடம் கேட்டோம்.

கிராமத்தில் ஷம்பாலா தேவி மற்றும் அவரது கணவர்

படக்குறிப்பு, கிராம மக்களிடையே ஷம்பாலா தேவி மற்றும் அவரது கணவர்

அவர் சிறிது நேரம் அமைதியாக இருந்து, "இறுதியில் இந்த இயக்கம் தோல்வியடைந்தாலும், அது ஒரு வரலாற்றை உருவாக்கிவிட்டது. உலகம் ஒரு பெரிய போராட்டத்தைக் கண்டுள்ளது. இது எங்கோ இருக்கும் ஒரு புதிய தலைமுறைக்கு தங்கள் உரிமைகளுக்காகப் போராட உத்வேகம் அளிக்கலாம்" என்று கூறினார்.

ஆனால், தனது எட்டு வயது மகளை ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளுடன் அனுப்புவாரா என்று நான் அவரிடம் கேட்டபோது, அவரது பதில் தெளிவாக இருந்தது.

"இல்லை, இங்குள்ள சமூகம் வாழும் வாழ்க்கையை நாங்கள் இப்போது வாழ்வோம்" என்று அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c78n4yky4mdo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.