Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 29 வயதில் முகமது பின் சல்மான் துணை பட்டத்து இளவரசராக நியமிக்கப்பட்டார்.

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி செய்தியாளர்

  • 21 செப்டெம்பர் 2025, 03:11 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2015 ஜனவரி 23ஆம் தேதி, செளதி அரேபிய அரசர் அப்துல்லா நுரையீரல் புற்றுநோயால் இறந்தபோது, சல்மான் பின் அப்துல்அஜிஸ் புதிய மன்னரானார்.

புதிய மன்னர், உளவுத்துறையின் முன்னாள் தலைவர் முக்ரின் பின் அப்துல்அஜிஸை புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார், அப்போது அவருக்கு வயது 68.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, யாருமே எதிர்பாராத விதமாக புதிய பட்டத்து இளவரரை மன்னர் சல்மான் பதவி நீக்கம் செய்தார். அவருக்குப் பதிலாக, மன்னர் தன்னுடைய மருமகனான 55 வயது முகமது பின் நயெஃப்-ஐ புதிய பட்டத்து இளவரசராக நியமித்தார். தனது 29 வயது மகன் முகமது பின் சல்மானை துணை பட்டத்து இளவரசராகவும், பாதுகாப்பு அமைச்சராகவும் நியமித்தார்.

அதுவரை, முகமது பின் சல்மானின் (MBS) பெயர் செளதி அரேபியாவின் அரசியலில் ஒலித்ததில்லை.

அமெரிக்க நிர்வாகத்தினருக்கு நயெஃப் பிடித்தமானவராக இருந்தார். அவர் எஃப்.பி.ஐ.யில் பாதுகாப்பு குறித்த படிப்பை படித்தவர். ஸ்காட்லாந்து யார்டில் பயங்கரவாத எதிர்ப்பு தந்திரோபாயங்களில் பயிற்சியும் பெற்றவர்.

2009-ஆம் ஆண்டில், இளவரசர் நயெஃப்பைக் கொல்ல தற்கொலை குண்டுவெடிப்பு முயற்சி நடந்தது, இந்தத் தாக்குதலுக்கு அல்-கொய்தா அமைப்பே காரணம் என்று நம்பப்படுகிறது.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், AP

படக்குறிப்பு, முகமது பின் நயெஃப்

செளதி மன்னரின் 'கேட் கீப்பர்' ஆக மாறிய சல்மான்

"அவர் பாதுகாப்பு அமைச்சராகவும், மன்னரின் அரச நீதிமன்றத்தின் பொதுச் செயலாளராகவும் ஆனவுடன், தனது பதவியைப் பயன்படுத்தி மன்னரின் வாயில் காவலராக மாறத் தொடங்கினார்" என்று டேவிட் ஒட்டாவே தனது 'முகமது பின் சல்மான், தி இக்காரஸ் ஆஃப் செளதி அரேபியா' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முகமது பின் சல்மான் சுருக்கமாக எம்.பி.எஸ். (MBS) என்று அறியப்படுகிறார். "பல்வேறு காரணங்களுக்காக, எம்.பி.எஸ். தனது தந்தையை குடும்பத்தினரிடமிருந்தும் நண்பர்களிடமிருந்தும் தனிமைப்படுத்தினார். மன்னர் சல்மான் தனது மனைவியையும், எம்.பி.எஸ்.-இன் தாயாரையும் சந்திப்பதற்குக்கூட தடை விதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது."

"தனது தாயையும் இரண்டு சகோதரிகளையும் வீட்டுக் காவலில் வைத்திருந்தார், இந்த விஷயத்தைப் பற்றி அவர் தனது தந்தையிடம் ஒருபோதும் தெரிவிக்கவில்லை. தாயைப் பற்றி, தனது தந்தையும் மன்னருமான முகமது பின் நயெஃப் கேட்கும்போதெல்லாம், அவர் சிகிச்சைக்காக வெளிநாட்டில் இருப்பதாகக் கூறுவார்."

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Lynne Rienner Publishers Inc

படக்குறிப்பு, தி இக்காரஸ் ஆஃப் செளதி அரேபியா புத்தகம்

ஏமன் மீதான தாக்குதல்

நயெஃப் பட்டத்து இளவரசரான இரண்டு நாட்களுக்குள் அதாவது 2015 ஏப்ரல் 29 அன்று, எம்.பி.எஸ்.-இன் தந்தையான மன்னர் சல்மான், நயெஃபின் அவையைத் தனது அரசவையுடன் இணைத்தார், இதனால் நயெஃபின் அனைத்து அதிகாரங்களும் முடிவுக்கு வந்தன.

இந்தக் காலகட்டத்தில், பாதுகாப்பு அமைச்சராக தனது தளத்தை எம்.பி.எஸ். தொடர்ந்து விரிவுபடுத்தி வந்தார். ஏமன் தலைநகரைக் கைப்பற்றிய ஹவுதி கிளர்ச்சியாளர்களை விரட்டியடிக்க மார்ச் 26-ஆம் தேதி அவரது மேற்பார்வையின் கீழ் செளதி அரேபிய விமானப்படை அண்டை நாடான ஏமன் மீது தாக்குதலைத் தொடங்கியது.

"முதலில், செளதி அரேபிய மக்கள் இந்தத் தாக்குதலை பாராட்டினார்கள், இரானின் விரிவாக்கத்தை எதிர்க்கும் துணிச்சலை தங்கள் நாடு இறுதியாகக் காட்டிவிட்டதாக அவர்கள் உணர்ந்தார்கள். இருப்பினும், ஒருசில நாட்களுக்குப் பிறகு, இந்தத் தாக்குதல் எம்.பி.எஸ்.-க்கு மாபெரும் பிரச்னையாக மாறியது. இந்தத் தாக்குதலை, அவரது வெளியுறவுக் கொள்கையில் ஒரு பொறுப்பற்ற தன்மையாக சர்வதேச சமூகம் கண்டது."

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2015ல் மன்னர் சல்மான், நயெஃபின் அரசவையைத் தனது அரசவையுடன் இணைத்தார்.

காவலில் வைக்கப்பட்ட நயெஃப்

இதற்கிடையில், மன்னர் சல்மான், பட்டத்து இளவரசரான நயெஃப்பை நீக்கிவிட்டு, அவருக்குப் பதிலாக தனது மகன் எம்.பி.எஸ்.-க்கு அந்தப் பதவியைத் தர முடிவு செய்துவிட்டார்.

2015 ஜூன் 20-ஆம் நாள் இரவு, ரமலான் நோன்பின் இறுதி நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மெக்காவில் கூடியிருந்தனர். அன்று இரவு, நயெஃப் தலைமையிலான அரசியல் மற்றும் பாதுகாப்பு விவகார கவுன்சில் கூடுவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.

கூட்டம் தொடங்குவதற்கு சற்று முன்பு, நயெஃப்-ஐ சந்திக்க விரும்புவதாக மன்னர் சல்மானிடம் இருந்து செய்தி வந்தது. உடனே நயெஃப் தனது இரண்டு மெய்க்காப்பாளர்களுடன், ஹெலிகாப்டரில் சஃபா அரண்மனைக்கு கிளம்பிச் சென்றார்.

'தி ரைஸ் டு பவர், முகமது பின் சல்மான்' என்ற தனது புத்தகத்தில் பென் ஹப்பார்ட் இவ்வாறு எழுதியுள்ளார்: "நயெஃப்பும் அவரது இரண்டு மெய்க்காப்பாளர்களும் மன்னரைச் சந்திக்க லிஃப்டில் ஏறினார்கள். முதல் மாடிக்கு சென்றதும், மன்னரின் வீரர்கள் நயெஃப்பின் மெய்க்காப்பாளர்களின் ஆயுதங்கள் மற்றும் மொபைல் போன்களை எடுத்துச் சென்றனர்."

"அருகிலுள்ள அறை ஒன்றிற்கு அழைத்துச் செல்லப்பட்ட நயெஃப் வெளியேற அனுமதிக்கப்படவில்லை, பட்டத்து இளவரசர் பதவியை ராஜினாமா செய்ய அவருக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. ஆனால் அதற்கு நயெஃப் இணங்கவில்லை."

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், William Collins

படக்குறிப்பு, ரமலான் நோன்பின் இறுதி நாட்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த பலர் மெக்காவில் கூடியிருந்தனர்.

ராஜினாமா செய்த நயெஃப்

நயெஃப் வீட்டுக் காவலில் இருந்த அதே இரவில், ராயல் கவுன்சில் உறுப்பினர்களை அழைத்த அரசவை உயர் அதிகாரிகள், எம்.பி.எஸ்.-ஐ பட்டத்து இளவரசராக நியமிக்கும் அரசரின் முடிவுக்கு அவர்கள் உடன்படுகிறார்களா என்று தொலைபேசியில் கேட்டனர்.

கவுன்சிலின் 34 உறுப்பினர்களில் 31 பேர் அதற்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த தொலைபேசி அழைப்புகள் பதிவு செய்யப்பட்டு, நயெஃப்புக்கு போட்டுக் காட்டப்பட்டன. இதன் மூலம் அரசரின் முடிவை அவரது உறவினர்களில் பெரும்பாலானவர்கள் ஆதரித்தனர் என்பது தெரியவந்தது.

"அன்றிரவு, நயெஃபுக்கு உணவு மற்றும் நீரிழிவு மருந்துகள் மறுக்கப்பட்டன. மிகவும் சோர்வடைந்திருந்த அவர், ராஜினாமா ஆவணத்தில் கையெழுத்திட ஒப்புக்கொண்டார். அடுத்த நாள் காலையில், மன்னர் சல்மான் இருந்த பக்கத்து அறைக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு பாதுகாப்புப் பணியாளர்கள் மற்றும் கேமராக்கள் நிறைந்திருந்தன" என்று பென் ஹப்பார்ட் எழுதுகிறார்.

"நயெஃப்-ஐ அன்புடன் வரவேற்ற மன்னர், அவரது கையில் முத்தமிட்டார். நயெஃப் தாழ்ந்த குரலில் மன்னரிடம் தனது ஒப்புதலை வெளிப்படுத்தினார். இந்தச் சந்திப்பின் வீடியோ செளதி தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டது. அரசருடனான சந்திப்பிற்குப் பின் அறையை விட்டு வெளியேறிய நயெஃப், தனது மெய்க்காப்பாளர்கள் இல்லாததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பிறகு அங்கிருந்து ஜெட்டாவில் உள்ள தனது அரண்மனைக்கு வந்த அவர், மன்னருக்கு விசுவாசமான காவலர்களால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்."

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, எம்.பி.எஸ்.-ஐ பட்டத்து இளவரசராக நியமிக்கும் அரசரின் முடிவுக்கு கவுன்சிலின் 34 உறுப்பினர்களில் 31 பேர் ஆதரவு தெரிவித்தனர்.

அமைதி காத்த நயெஃப்

இந்த விவகாரம் குறித்து கேள்வி கேட்ட நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்குப் பதிலளித்த அரசவை செய்தித் தொடர்பாளர், அன்றிரவு நடந்தது என்ன என்பது குறித்து வேறொன்றை சொன்னார். நாட்டின் நலனுக்காக நயெஃப்-ஐ கவுன்சில் நீக்கியது என்றும், அவர் நீக்கப்பட்டதற்கான காரணங்கள் ரகசியமானவை என்பதால் அவற்றைப் பகிரங்கப்படுத்த முடியாது என்பதுமே அவர் சொன்ன விளக்கம்.

அதற்கு ஒரு மாதத்திற்குப் பிறகு, பெயர் குறிப்பிட விரும்பாத செளதி வட்டாரம் ஒன்று ராய்ட்டர்ஸிடம் பேசியபோது, மார்ஃபின் மற்றும் கோகைனுக்கு நயெஃப் அடிமையாகிவிட்டதால், அவரைப் பதவிநீக்கம் செய்ய மன்னர் முடிவு செய்ததாகத் தெரிவித்தது.

அந்த ஆண்டின் இறுதியில் நயெஃப்-இன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன. அவர் தனது சிகிச்சை குறித்து ஒருபோதும் பகிரங்கமாகப் பேசியதில்லை.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நயெஃப்-இன் வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டன.

முகமது பின் சல்மானின் அரசியல் ஆளுமை

1985 ஆகஸ்ட் 31-ஆம் தேதி பிறந்த முகமது பின் சல்மான் எனும் எம்.பி.எஸ்., ஆறடி உயரம் கொண்டவர். செளதி அரேபியாவின் எல்லா இடங்களிலும் அவர் இருக்கும் சுவரொட்டிகளை காணமுடியும்.

அரச குடும்பத்தில் வெளிநாட்டுக் கல்வி பெறாத ஒருசில இளவரசர்களில் முகமது பின் சல்மானும் ஒருவர். ரியாத்தில் உள்ள அரசு மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் பயின்ற அவர், செளதி ராணுவம் அல்லது விமானப்படையில் உறுப்பினராக இருந்ததில்லை.

அவரது ஆங்கில ஆசிரியர்களில் ஒருவரான ரஷீத் செகாயிடம் பிபிசி பேசியபோது, "எம்.பி.எஸ். சிறுவயதில் மிகவும் குறும்புக்காரராக இருந்தார். ஆங்கிலம் படிப்பதை விட, அரச மெய்க்காப்பாளர்களுடன் வாக்கி-டாக்கியில் பேசுவதில் அவருக்கு அதிக ஆர்வம் இருந்தது" என்று கூறினார்.

2007-ஆம் ஆண்டில் எம்.பி.எஸ். பட்டப்படிப்பை முடித்தார். அவருக்கு சாரா பிந்த் மஷூர் என்ற மனைவியும் நான்கு குழந்தைகளும் உள்ளனர்.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அரச குடும்பத்தில் வெளிநாட்டுக் கல்வி பெறாத ஒருசில இளவரசர்களில் முகமது பின் சல்மானும் ஒருவர்.

பாரம்பரிய பியானோ இசையின் ரசிகர்

அமெரிக்காவிற்கு எம்.பி.எஸ். அரசுமுறைப் பயணம் மேற்கொண்டிருந்தபோது, அப்போதைய வெளியுறவு அமைச்சர் ஜான் கெர்ரியின் வீட்டிற்கு இரவு விருந்துக்குச் சென்றிருந்தார்.

அது குறித்து பென் ஹப்பார்ட் தனது 'MBS: The Rise to Power of Mohamed bin Salman' என்ற புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "எம்.பி.எஸ். மாலை நேரத்தில் கெர்ரியின் வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த பியானோவின் மீது அவரது பார்வை சென்றது."

"அதைக் கண்ட கெர்ரி, 'உங்களுக்கு பியானோ வாசிக்கத் தெரியுமா?' என்று கேட்டார். உடனே எம்.பி.எஸ். பியானோவில் ஒரு பாரம்பரிய பாடலை வாசித்தபோது, அறையில் இருந்த அனைவருக்கும் வியப்பு மேலிட்டது. வஹாபிகளுக்கு இசையின் மீது வெறுப்பு இருந்ததால், எம்.பி.எஸ். பியானோ வாசிப்பார் என்று கெர்ரி சற்றும் எதிர்பார்க்கவில்லை."

நீதிபதியின் மேசையில் வைக்கப்பட்ட துப்பாக்கி

ஆரம்பத்திலிருந்தே, முதலீடுகள் மூலம் தனது பொருளாதார சாம்ராஜ்யத்தை கட்டியெழுப்புவதில் இளவரசர் சல்மான் முனைப்புடன் இருந்தார்.

செளதி அரேபியாவின் வரலாற்றை கூர்மையாகக் கவனிக்கும் ரிச்சர்ட் லேசி, "முகமது பின் சல்மான் பட்டத்து இளவரசராவதற்கு முன்பு, அவரது தந்தை, ரியாத்தில் உள்ள மதிப்புமிக்க நிலம் ஒன்றை வாங்க ஆசைப்பட்டார். ஆனால், நிலத்தின் உரிமையாளருக்கு அதை விற்க விருப்பமில்லை" என்று குறிப்பிடுகிறார்.

"நில உரிமையாளருக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென நீதிபதி ஒருவரிடம் சல்மான் கேட்டுக்கொண்டார். ஆனால், நீதிபதி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. உடனே, நீதிபதியின் மேசையில் துப்பாக்கித் தோட்டாவை வைத்த எம்.பி.எஸ்., தனது பேச்சைக் கேட்கவில்லை என்றால் சுட்டுவிடுவேன் என நீதிபதிக்கு சமிக்ஞை காட்டினார்."

எம்.பி.எஸ்.-இன் இந்த நடத்தை குறித்து மன்னர் அப்துல்லாவிடம் நீதிபதி புகார் செய்தார். முகமது பின் சல்மான் இதனை ஒருபோதும் மறுக்கவில்லை.

2011-ஆம் ஆண்டு எம்.பி.எஸ்.-இன் தந்தையை பாதுகாப்பு அமைச்சராக நியமித்தபோது மன்னர் அப்துல்லா அவரிடம் வைத்த நிபந்தனை என்ன தெரியுமா? அவரது மகன் எம்.பி.எஸ். ஒருபோதும் அமைச்சகத்தில் நுழையக்கூடாது என்பதே அந்த நிபந்தனை ஆகும்.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Erin A. Kirk-Cuomo

படக்குறிப்பு, சல்மான் பின் அப்துல்அஜிஸ் (கோப்புப்படம்)

பெண்களுக்கு கார் ஓட்டும் உரிமை

79 வயதில் செளதி அரேபியாவின் மன்னராக இளவரசர் சல்மானின் தந்தை பதவியேற்றபோது, அவர் அல்சைமர் நோயால் பல ஆண்டுகளாக பாதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் பரவின. தனது தந்தை மன்னராக பதவியேற்ற குறுகிய காலத்திற்குள், அதிகாரத்தை அவர் தனது முழுக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டார்.

செளதி அரேபியாவின் இளம் தலைமுறையினரையும், பெண்களையும் தனக்குப் பின்னால் அணிதிரட்ட எம்.பி.எஸ். பாடுபட்டு வருகிறார். 2018-ஆம் ஆண்டில், பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாட்டை தளர்த்திய அவர், பொது இடங்களில் பெண்கள் 'அபாயா' அணியத் தேவையில்லை என்றும் அறிவித்தார்.

அதே ஆண்டில், பெண்களுக்கும் ஓட்டுநர் உரிமம் கொடுக்கப்பட்டது. இதன் மூலம் ஆண்களின் துணையின்றி வேலைக்குச் செல்வதும், தனியாக ஷாப்பிங் செல்வதும் பெண்களுக்குச் சாத்தியமானது.

மார்க் தாம்சன் தனது 'Being Young, Male and Saudi' என்ற புத்தகத்தில் இந்த அனுமதியை இவ்வாறு குறிப்பிடுகிறார். "தாராளமயமாக்கலை நோக்கிய இந்த நடவடிக்கைகள் பெண்களுக்கு சுதந்திரம் அளிக்கும் நோக்கத்துடன் மட்டுமல்ல, பொருளாதார காரணங்களுக்காகவும் எடுக்கப்பட்டன. இவை அனைத்தும் பெண்கள் வேலை செய்யவும், தாங்கள் சம்பாதித்தப் பணத்தை ஆண்களின் அனுமதியின்றி செலவிடுவதற்காகவுமே செய்யப்பட்டன."

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, 2018ஆம் ஆண்டு சௌதி பெண்கள் ஓட்டுநர் உரிமம் பெற அனுமதிக்கப்பட்டனர்.

முடிவுக்கு வந்த 'ஷௌரா'

செளதி அரேபியாவை கண்காணிக்கும் நிபுணர்கள், 'ஷௌரா' மற்றும் மூத்த இளவரசர்களுடன் கலந்தாலோசித்த பிறகு முடிவுகளை எடுக்கும் மரபை எம்.பி.எஸ். கைவிட்டுவிட்டதாக நம்புகின்றனர்.

அவர் தன்னை மட்டுமே முடிவெடுப்பவராகக் காட்டிக்கொள்வதற்காக, தன்னால் முடிந்த அனைத்தையும் செய்து வருகிறார். தனது முடிவுகளுக்கும் அரசியலுக்கும் எதிரான எந்தவொரு எதிர்ப்பையும், விமர்சனத்தையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

"செளதி அரச குடும்பத்தின் ஒற்றுமைக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் 'ஷௌரா'வின் கருத்துகளை முழுமையாக புறக்கணிப்பதாகும்" என 1990 வளைகுடாப் போரின் போது செளதி அரேபியாவிற்கான அமெரிக்க தூதராகப் பணியாற்றிய சாஸ் ஃப்ரீமேன் நம்புகிறார்.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தன்னை மட்டுமே முடிவெடுப்பவராகக் காட்டிக்கொள்ள முயலும் எம்.பி.எஸ்.

விலையுயர்ந்த பொருட்கள் மீது விருப்பம்

பட்டத்து இளவரசராவதற்கு முன்பே, ஆடம்பரப் பிரியராகப் பிரபலமானவர் எம்.பி.எஸ். ரஷ்யாவைச் சேர்ந்த ஒருவரிடமிருந்து, 500 மில்லியன் டாலருக்கு 440 அடி உயர சொகுசு படகை வாங்கினார்.

2017 நவம்பர் மாதத்தில், லியோனார்டோ டா வின்சியின் புகழ்பெற்ற ஓவியமான 'சால்வேட்டர் முண்டி'யை வாங்க 450 மில்லியன் டாலர்களை செலவிட்டார் முகமது பின் சல்மான்.

விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காக, அந்த ஓவியத்தை அபுதாபியில் உள்ள ஒரு அருங்காட்சியகத்திற்கு நன்கொடையாக வழங்குவதாக அவர் தெரிவித்திருந்தார். இருப்பினும், ஓவியத்தை வாங்கிய சில நாட்களுக்குப் பிறகு, அது அவரது பிரபலமான சிரீன் படகில் அலங்காரமாக தொங்க விடப்பட்டிருப்பதைக் காண முடிந்தது.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 500 மில்லியன் டாலர் செலவில் 440 அடி உயர சொகுசு படகை வாங்கினார் எம்.பி.எஸ்.

தொடர் கைதுகள்

செளதி அரேபியாவில் குறைந்தது பத்தாயிரம் இளவரசர்கள் இருப்பதாகக் கூறப்பட்டாலும், அதில் சுமார் 100 பேர் மட்டுமே அரசியல் ரீதியாக தீவிரமாக உள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மாதாந்திர உதவித்தொகையை அரசு வழங்கிவருகிறது. குறைந்தபட்ச உதவித்தொகை $800 என்றால், அதிகபட்சம் $270,000 கொடுக்கப்படுகிறது.

எம்.பி.எஸ். பட்டத்து இளவரசரானதும், இந்த உதவித்தொகைகள் கணிசமாகக் குறைக்கப்பட்டன. 2017 நவம்பர் 4-ஆம் தேதி பொது நிதியை மோசடி செய்தக் குற்றச்சாட்டில், இளவரசர்கள், தொழிலதிபர்கள், மூத்த அரசு அதிகாரிகள் என 380 பேர் கைது செய்யப்பட்டனர்.

"கைது செய்யப்பட்ட 380 பேரில் குறைந்தது 11 இளவரசர்களும் அடங்குவர். பொருளாதாரம் மற்றும் திட்டமிடல் அமைச்சர் அடெல் ஃபகிஹ் மற்றும் நிதி அமைச்சர் இப்ராஹிம் அப்துல் அஜீஸ் ஆகியோரும் கைது செய்யப்பட்டவர்களில் அடங்குவர்" என்று பென் ஹப்பார்ட் தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

"கைது செய்யப்பட்ட அனைவரின் மொபைல் போன்களும் பறிமுதல் செய்யப்பட்டன, அவர்கள் ஐந்து நட்சத்திர ஹோட்டலான ரிட்ஸ் கார்ல்டன்-க்கு அழைத்துச் செல்லப்பட்டு காவலில் வைக்கப்பட்டனர். ஊழல் மூலம் அவர்கள் சம்பாதித்ததாகக் கூறப்பட்ட பணத்தை அரசாங்கத்திடம் திருப்பிக் கொடுத்த பின்னரே விடுவிக்கப்பட்டனர். மொத்தம் ஒரு பில்லியன் டாலர் தொகை அபராதமாக வசூலிக்கப்பட்டது."

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, முகமது பின் சல்மான் உடன் சாத் அல் ஹரிரி

செளதி அரேபியாவில் ராஜினாமாவை அறிவித்த லெபனான் பிரதமர்

செளதி அரேபியாவிற்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டிருந்த லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரியை எம்.பி.எஸ். காவலில் வைத்தபோது, மிகப் பெரிய அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

"எம்.பி.எஸ்.-ஐ சந்திக்க வாகனங்கள் புடைசூழ லெபனான் பிரதமர் ஹரிரி வந்தார். அவர் உள்ளே அழைத்துச் செல்லப்பட்ட நிலையில், அவருடன் வாகனங்களில் வந்தவர்கள் வெளியிலேயே நிறுத்தப்பட்டனர். லெபனான் பிரதமர் ஹரிரி உடனடியாக பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று அழுத்தம் தரப்பட்டதாக கூறப்பட்டது" என பென் ஹப்பார்ட் எழுதுகிறார்.

"லெபனான் நாட்டுக் கொடியின் அருகில் நின்றுக் கொண்டு, லெபனான் பிரதமர் ஹரிரி தனது ராஜினாமா அறிக்கையை வாசித்ததை தொலைக்காட்சி மூலம் உலகமே பார்த்தது. தனது ராஜினாமா, லெபனானை வலிமையாகவும் சுதந்திரமாகவும் மாற்றும் என்று ஹரிரி கூறிய போதிலும், ராஜினாமா அறிக்கையை வாசிக்கும்போது, அவர் பல முறை இடைநிறுத்தினார், அதுவே, அந்த அறிக்கையை அவர் சுயமாக எழுதவில்லை என்பதைக் காட்டுவதாக இருந்தது. ராஜினாமா செய்ய விரும்பியிருந்தால், ஹரிரி அதை ஏன் வெளிநாட்டு மண்ணில் அறிவிக்கவேண்டும் என்ற கேள்விகளும் எழுந்தன."

இந்த ராஜினாமா விவகாரத்தில் மற்றொரு திருப்புமுனையாக, சில நாட்களுக்குப் பிறகு நாட்டிற்குத் திரும்பிய லெபனான் பிரதமர், தனது ராஜினாமாவை திரும்பப் பெற்றுக்கொண்டார். இந்த விசித்திரமான சம்பவத்தைச் சுற்றியுள்ள மர்மமுடிச்சு இன்னும் அவிழ்க்கப்படவில்லை.

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, லெபனான் பிரதமர் சாத் அல் ஹரிரியை எம்.பி.எஸ். கைது செய்தபோது, மிகப்பெரிய அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டது.

மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள்

"செளதி அரசாங்கம் 2,305 பேரை ஆறு மாதங்களுக்கும் மேலாக தடுத்து வைத்துள்ளது, அவர்களில் 251 பேர் மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர், ஒரு முறை கூட அவர்கள் நீதிபதி முன் நிறுத்தப்படவில்லை" என்று 2018, மே மாதம் மனித உரிமைகள் கண்காணிப்பகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

செளதி அரேபியாவில் 26 பத்திரிகையாளர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இது சீனா மற்றும் துருக்கிக்குப் பிறகு உலகிலேயே அதிக எண்ணிக்கையிலானது என்றும் நியூயார்க்கை தளமாகக் கொண்ட பத்திரிகையாளர்கள் பாதுகாப்புக் குழுவின் அறிக்கை தெரிவித்திருந்தது.

2019-ஆம் ஆண்டில், செளதி குடிமக்களில் ஆயிரம் பேருக்கு பயணத் தடை விதிக்கப்பட்டது.

ஜமால் கஷோகி படுகொலை

சௌதி அரேபியா, முகமது பின் சல்மான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜமால் கஷோகி

எம்.பி.எஸ்.-ன் விமர்சகர்களில் ஒருவரான ஜமால் கஷோகி கொல்லப்பட்டபோது எம்.பி.எஸ். அதிக விமர்சனங்களை எதிர்கொண்டார்.

கஷோகி, அரபு செய்திகள் மற்றும் அல்-வதன் போன்ற செய்தித்தாள்களின் ஆசிரியராக இருந்தார். இந்தக் கொலையில் எம்.பி.எஸ்.-க்கு எதிராக ஆதாரங்கள் இருப்பதாக கூறப்பட்ட போதிலும், எம்.பி.எஸ் அதனை தொடர்ந்து மறுத்தார்.

டேவிட் ஒட்டவே இவ்வாறு எழுதுகிறார்: "இந்தப் படுகொலை எம்.பி.எஸ்.-இன் இரண்டு நெருங்கிய கூட்டாளிகளின் மேற்பார்வையின் கீழ் திட்டமிடப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, கொலைக்கு உத்தரவிட்டது எம்.பி.எஸ் தான் என சி.ஐ.ஏ. முடிவு செய்தது."

"செளதி அரேபியாவுக்குத் திரும்பவில்லை என்றால் கஷோகிக்கு எதிராக தோட்டாக்களைப் பயன்படுத்தப் போவதாக எம்.பி.எஸ். ஒருமுறை பேசியிருந்தார். அந்த பழைய பதிவை தேசிய பாதுகாப்பு ஏஜென்சி கண்டுபிடித்தது."

படுகொலைக்கு பொறுப்பேற்ற முகமது பின் சல்மான்

2019 செப்டம்பர் 30-ஆம் தேதி, சிபிஎஸ் (CBS) ஊடக்த்திற்கு எம்.பி.எஸ். பேட்டி அளித்தபோது, தொகுப்பாளர் நோரா டோனல் அவரிடம் கஷோகியின் கொலை பற்றிய கேள்வியை நேரடியாகவே கேட்டுவிட்டார்.

"கஷோகியைக் கொல்ல நீங்கள் உத்தரவிட்டீர்களா?" என்ற கேள்விக்கு பதிலளித்த எம்.பி.எஸ்., "இல்லவே இல்லை, இது மிகவும் கொடூரமான குற்றம். ஆனால் செளதி அரேபியாவின் தலைவராக, நான் இதற்கு முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன், ஏனெனில், இந்தக் குற்றத்தைச் செய்தவர்கள் செளதி அரசாங்கத்திற்காக வேலை செய்ததால் முழுப் பொறுப்பேற்கிறேன்" என்று கூறினார்.

2019 டிசம்பர் மாதத்தில் கஷோகி கொலைக்காக செளதி நீதிமன்றம் ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்தது. மேலும் மூன்று பேருக்கு 24 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது.

இருப்பினும், 2020-ஆம் ஆண்டு மே 20-ஆம் தேதி கஷோகியின் மகன் சலே கஷோகி, தனது தந்தையைக் கொன்ற கொலையாளிகளை தான் மன்னித்துவிட்டதாக சொன்னபோது உலகமே வியப்பில் ஆழ்ந்தது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ce844d8587lo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.