Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அண்மைக்காலமாக அமெரிக்கா, கனடா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் புலம்பெயர்ந்தோருக்கு - குறிப்பாக இந்தியர்களுக்கு எதிரான மனப்போக்கு அதிகமாக நிலவுகிறது. ‘உன் நாட்டுக்குத் திரும்பிப் போ’ என்கிற எதிர்க்குரல் பல்வேறு நாடுகளில் ஒலிக்கத் தொடங்கியிருக்கிறது. கூடுதலாக, எப்போதோ முடிவுக்கு வந்துவிட்டது எனக் கருதப்பட்ட நிறவெறி புதிய வீரியத்தோடு பரவத் தொடங்கியிருக்கிறது. இவ்வளவுக்கும், அந்தந்த நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் பெரும்பங்கு ஆற்றிய குடியேறிகளில் கணிசமானவர்கள் இந்தியர்கள். பின் ஏன் இந்த எதிர்ப்பலை?

மெல்லிய கோடு: இந்த வன்மம் திடீரென வந்ததல்ல என்பதுதான் நிதர்சனம். 2004இல் நான் அமெரிக்காவுக்குச் சென்றிருந்தபோது, நியூயார்க் நகரிலிருந்து தங்களுடைய ஊருக்கு என்னை அழைத்துச் செல்வதற்காக நண்பரின் மகளும் அவரின் இணையரும் வந்திருந்தார்கள். நியூயார்க், நியூ ஜெர்சி நகரங்களை இணைக்கும் லிங்கன் கணவாயைக் கடந்து ஓர் இடத்துக்கு வந்தபோது, அங்கிருந்து பல்வேறாகப் பிரிகிற சாலைகளில் எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது எனச் சிறு குழப்பம் ஏற்பட்டது.

அப்போது ஓரிடத்தில் காரை நிறுத்திவிட்டு, அங்கிருந்த வாகன ஓட்டியிடம் விசாரித்தோம். அதற்கு அந்த அமெரிக்கர் அமைதியாக முகத்தை வைத்துக்கொண்டு, “உங்கள் நாட்டுக்குத் திரும்பிப் போங்கள்” என அழுத்தமான குரலில் சொல்லிவிட்டுக் கண்ணாடியை ஏற்றிவிட்டுப் போய்விட்டார்.

அதுவரை உற்சாகமாகப் பயணித்த எங்களை அச்சொற்கள் அதிர்ச்சியில் உறைய வைத்துவிட்டன. ஆனால், அதற்குப் பிறகு நாங்கள் யாரும் இந்த விஷயத்தைப் பற்றிப் பேசவே இல்லை. இது குறித்து நானும் இதற்கு முன் யாரிடமும் பேசியதோ எழுதியதோ இல்லை. ஆனால், அந்த வடு இன்னும் மறையவில்லை.

வெளிநாடுவாழ் இந்தியர்கள் இத்தகைய சூழல் பற்றி நிறையச் சொல்வார்கள். பெரும்பாலான வெள்ளையர்கள் வெளிப்படையாக நிறவெறியைக் காட்ட மாட்டார்கள். ஆனால், சிறு செயல்கள் மூலம் மறைமுகமாக வெளிப்படுத்துவார்கள்.

உதாரணமாக, சேவை மையங்கள் போன்ற இடங்களில் பணிபுரிபவர்கள், சக வெள்ளையினத்தவரிடம் சத்தமாகச் சிரித்து நட்பாகப் பேசுவார்கள். அடுத்து வரும் நம்மிடம் கூடுதலாக ஒரு வார்த்தை பேச மாட்டார்கள். வேலையை மட்டும்தான் பார்ப்பார்கள். அந்த மெல்லிய இழை போன்ற வேறுபாட்டைப் புரிந்துகொள்ள முடியும். இதன் பின்னே பல நுட்பமான விஷயங்கள் அடங்கியுள்ளன.

மூன்று பிரிவினர்: இந்தியாவிலிருந்து வெளிநாடுகளில், குறிப்பாக மேலை நாடுகளில் குடிபெயர்ந்தவர்கள், மூன்று விதமான அலைகளில் சென்றவர்கள். முதல் அலை, 60களிலும் 70களிலும் நிகழ்ந்தது. அப்போது மருத்துவர்கள், பொறியாளர்கள் போன்ற துறைசார் வல்லுநர்கள் சென்றார்கள், குடியுரிமை பெற்றார்கள். காலப்போக்கில் அந்தப் பண்பாட்டுடன் தங்களை இணைத்துக்கொண்ட அவர்கள், இப்போது அந்த நாடுகளிலேயே மூன்றாவது தலைமுறையினரையும் கண்டுவிட்டார்கள். அவர்களின் வழிவந்த இன்றைய தலைமுறைக்கு இந்தியாவுடன், தமிழ்நாட்டுடன் அவ்வளவாகப் பரிச்சயம் இல்லை.

பட்ட மேற்படிப்பு படிக்க 90களில் பல்லாயிரக்கணக்கில் சென்றவர்கள் இரண்டாவது அலையைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலர் பொறியியல், மேலாண்மைத் துறையில் பட்ட மேற்படிப்பு படிக்கச் சென்றவர்கள். இவர்கள் படிப்பு முடிந்தவுடன் அங்கேயே கிடைத்த வேலையைப் பார்க்கத் தொடங்கினார்கள். ஒரு சாதாரண உள்நாட்டுக்காரருக்குக் கிடைக்கும் சம்பளத்தில் மூன்றில் ஒரு பகுதியையே இவர்கள் வாங்கினார்கள். ஒன்றரை மடங்கு நேரம் கூடுதலாக வேலை செய்தார்கள்.

எளிமையாக வாழ்ந்து, சம்பாதித்த சொற்பப் பணத்தில் மிச்சம்பிடித்து இந்தியாவுக்கு அனுப்பினார்கள். அந்தப் பணமே இங்கே ஒரு குடும்பத்தை நடத்துவதற்குப் போதுமானதாக இருந்தது. இந்தியாவில், சொந்த வீடு வாங்குவதற்குப் பலருக்கு வாய்ப்பளித்தது.

மூன்றாவது அலை, 2000க்குப் பிறகு கணினித் துறையை மையமாகக் கொண்டு குடியேறியவர்கள். அமெரிக்காவில் தலைமை நிர்வாகம்; இங்கே கிளைகள் அல்லது இங்கே தலைமை; அமெரிக்காவில் கிளைகள் எனப் பற்பல நிறுவனங்கள் தொடங்கப்பட்டன (இவற்றில் போலிகளும் அடங்கும்) அப்படி வேலைக்குச் சென்றவர்கள் லட்சக்கணக்கானவர்கள்.

வெறுப்புணர்வின் வேர்கள்: சரி, இந்தியர்கள் மட்டும் ஏன் அதிகம் குறி வைக்கப்படுகிறார்கள்? முதல் இரண்டு அலைகளில் சென்றவர்களால் எந்தப் பிரச்சினையும் ஏற்படவில்லை. காரணம், அவர்கள் அந்தப் பண்பாட்டோடு ஒன்றிவிட்டார்கள். தங்களை அந்த நாட்டுக்காரர்களாகவே மாற்றிக்கொண்டனர். திருமணங்கள்கூட மனம் விரும்பியவரோடு சாதி, மதம் கடந்து இயல்பாக நடந்தன.

இரண்டாவது அலையில் சென்றவர்கள் அமைதியாக, குறிப்பாக யாரிடமும், சக இந்தியரிடம்கூட நட்பு பாராட்டாமல் விலகியே இருந்தனர். வீடு-அலுவலகம்-வீடு, வார இறுதி நாட்களில் இந்தியாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு, எப்போதாவது நண்பர்கள் வீடு, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை தாய்நாட்டுப் பயணம் என்கிற அளவில் வாழ்க்கையை வகுத்துக்கொண்டார்கள்.

மூன்றாவது அலையில் சென்றவர்களால்தான் பிரச்சினைகள் தொடங்கின. காரணம், முன்னர் சென்றவர்களைப் போல இவர்களுக்குத் தயக்கமோ, மனத்தடையோ இல்லை. எங்கெங்கு காணினும் நம்மவர்கள் என்கிற அசட்டுத் துணிச்சலும் அலட்சியமும் கூடின. கொத்துக்கொத்தாக ஒரே பகுதியில் குடிபெயர ஆரம்பித்தார்கள்.

தொடக்கத்தில் எல்லாரும் இந்தியர்கள் என வசித்த நிலை மாறி, என் மொழிக்காரர், சாதிக்காரர் என எல்லைகளைக் குறுக்கிக்கொண்டார்கள். பிறருக்கு வேலை தரும் பொறுப்பில் இருப்பவர்கள், ‘நம் ஆள்’ எனத் தேடிப் பிடித்து வேலைக்குச் சேர்த்தது போன்றவை உள்ளூர் ஆட்களுக்கு அறமற்ற போட்டியை ஏற்படுத்தியது. இது சாதாரணப் பிரச்சினை அல்ல.

தவிர, இந்தியர்களின் வசதி வாய்ப்புகள் பெருகப்பெருக, மதப் பண்டிகைகள், சாதிச் சடங்குகளைக் கோலாகலமாகக் கொண்டாடத் தொடங்கிவிட்டார்கள். பண்டிகைக் காலங்களில் நம் ஊர் போலவே ஒலிபெருக்கிகள் அதிரும். விளையாட்டுப் போட்டிகள் நடக்கும்போது ‘என் நாடு’, ‘என் அணி’ என்கிற மனப்போக்கு பட்டவர்த்தனமாக இவர்களிடம் வெளிப்பட்டது. அடுத்தவருக்கு இடையூறு ஏற்படாத வரைதான் நம்முடைய சுதந்திரம் என்பதை மறந்துவிட்டார்கள். பொது இடங்களில் உரக்கப் பேசுவதும், குப்பைகளைப் போடுவது, பீடா போட்டுத் துப்புவது என இந்தியத் தன்மைகளையும் இவர்கள் அங்கே இறக்குமதி செய்தனர்.

அண்மைக் காலங்களில் உலகெங்கும் அழைப்பு மையங்கள் வழியாக, அப்பாவி மக்கள், குறிப்பாக முதியவர்கள் ஏமாற்றப்
படுகிறார்கள். இதில், இந்தியர்கள்கூட ஏமாந்து பெரும் பணத்தை இழந்து இருக்கிறார்கள். கொடுமை என்னவென்றால், இத்தகைய அழைப்பு மையங்கள் பெரும்பாலும் இந்தியாவிலிருந்து செயல்படுபவை.

இப்படி இங்கொன்றும் அங்கொன்றும் நடப்பவற்றை வெளிநாட்டு ஊடகங்கள் ஊதிப்பெருக்கும்போது, ஒட்டுமொத்தமாகவே நம் நாட்டின் மீது கெட்ட பெயர் ஏற்படுகிறது. எல்லை மீறப்படும்போது ஏற்கெனவே கோபம் கொண்டிருந்த உள்ளூர்க்காரர்கள் எரிச்சல் அடைகின்றனர். இது பல்வேறு விதங்களில் வெளிப்படுகிறது.

இனி என்ன? - உலகப் பொருளாதாரம் செழிப்பாக இருக்கும்வரை பெருமளவில் கண்டுகொள்ளப்படாமல் இருந்த பிரச்சினைகள், இப்போது பூதாகரமாகிவிட்டன. பொருளாதார மந்தநிலை, வேலையின்மை, விலையேற்றம் எனப் பல்வேறு காரணிகள் இதில் சுட்டிக்காட்டப்படுகின்றன. செயற்கை நுண்ணறிவு தன்னுடைய வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது. வரலாற்றில் எப்போதெல்லாம் வறுமை, பசிப் பிணி அதிகரிக்கிறதோ அப்போதெல்லாம் பிற்போக்குச் சிந்தனைகள் எழுவது வாடிக்கை.

வெளிநாடுகளில் திடீரென நாட்டுப்பற்று, மதப்பற்று, நிறப்பற்று வரிசைகட்டி மக்களை ஒரு புள்ளியில் கொண்டுவந்து நிறுத்துகின்றன. எல்லாவற்றுக்கும் காரணம், குடியேறிகள்தான் என எளிதாக எதிர் மனநிலை கட்டமைக்கப்படுகிறது. அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் காலங்களில் வாக்குகளைப் பெற இது வசதியாக அமைகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை இன்னொரு காரணமும் இருக்கிறது. ரஷ்யா உடனான உறவை இந்தியா துண்டிக்க வேண்டும், அவர்களிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கக் கூடாது. அப்போதுதான் ரஷ்யப் பொருளாதாரம் சரியும்; உக்ரைனில் போரை ரஷ்யா முடிவுக்குக் கொண்டுவரலாம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் கருதுகிறார்.

அமெரிக்கா விதித்திருக்கும் 50 சதவீதத்துக்கும் அதிகமான அபராத வரி ஒரு பக்கம் நமது பொருளாதாரத்தின் கழுத்தை இறுக்கிப் பிடிக்கிறது; இன்னொரு பக்கம், இந்தியக் குடியேறிகளை விரட்டும் நடவடிக்கைகள் மூலமாக இந்தியாவை வழிக்குக் கொண்டுவரலாம் என்று அமெரிக்கா கருதுவதாகப் புவிசார் அரசியல் வல்லுநர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். அமெரிக்காவுக்குச் சுற்றுலா செல்கிற அல்லது குறுகிய காலப் பயணிகளாகச் செல்கிற இந்தியர்களுக்கு அமெரிக்கா விதிக்கும் கடும் நிபந்தனைகள் இதை உறுதிப்படுத்துகின்றன.

வெளிநாடுகளில் இந்தியர்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் நாளுக்கு நாள் அதிகமாகிவரும் நிலையில், இந்திய வெளியுறவுத் துறையின் நகர்வுகளைப் பொறுத்தே அதிகாரபூர்வமாக இந்தியர்களுக்குப் பாதுகாப்புக் கிடைக்கும். அதேவேளையில், இந்தியர்கள் குறித்த பார்வை மாறுவதற்கான வாய்ப்புகள் குறித்தும் நாம் சிந்தித்தாக வேண்டும்!

- தொடர்புக்கு: olivannang@gmail.com

ஏன் வெறுக்கப்படுகிறார்கள் இந்தியர்கள்? | Why are Indians hatered explained - hindutamil.in

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.