Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இஸ்ரேல் - பாலத்தீனம், அமெரிக்கா, டிரம்ப், காஸா

பட மூலாதாரம், Getty Images

கட்டுரை தகவல்

  • டாம் பேட்மேன்

  • வெள்ளை மாளிகை வெளியுறவுத்துறை செய்தியாளர்

  • 30 செப்டெம்பர் 2025, 08:44 GMT

    புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், காஸா போரை முடிவுக்கு கொண்டுவரும் தனது திட்டம் "மனிதகுல வரலாற்றின் சிறந்த நாட்களில் ஒன்றாகவும், மத்திய கிழக்கில் நிலையான அமைதியைத் தரக்கூடியதாகவும்" இருக்கும் என்று கூறினார்.

இப்படி மிகைப்படுத்திப் பேசுவது டிரம்பின் வழக்கமான பாணிதான்.

ஆனால், திங்கள்கிழமை வெள்ளை மாளிகையில் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைச் சந்தித்தபோது அவர் வெளியிட்ட 20 அம்சங்களைக் கொண்ட இந்தத் திட்டம், அவரது சொற்களுக்கு இணையாக இல்லாவிட்டாலும், ராஜ்ஜீய ரீதியாக ஒரு முக்கியத் தருணமாகவே உள்ளது.

இந்தத் திட்டம், போருக்குப் பிறகு காஸாவின் எதிர்காலம் குறித்த டிரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டில் ஏற்பட்ட மாற்றத்தை பிரதிபலிக்கிறது. இந்த ஆண்டு இதுவரை அமெரிக்கா நெதன்யாகுவுக்கு கொடுத்ததை விட அதிகமாக அழுத்தம் கொடுத்து, அவரை ஒரு ஒப்பந்தத்தை ஏற்கும் நிலைக்கு கொண்டு செல்கிறது.

வரும் வாரங்களில் இது நடைமுறைப்படுத்தப்படுமா என்பது, நெதன்யாகுவும் ஹமாஸ் தலைமையும் போரைத் தொடர்வதை விட அதை முடிப்பதிலேயே அதிக பலன் இருக்கிறது என்று உணருகிறார்களா என்பதைப் பொறுத்து இது அமையும்.

இந்நிலையில், ஹமாஸ் தரப்பிலிருந்து இதுவரை தெளிவான பதில் எதுவும் வரவில்லை. பிபிசியிடம் பேசிய ஹமாஸ் பிரமுகர் ஒருவர், இந்த திட்டம் பாலத்தீன மக்களின் நலன்களை பாதுகாக்கவில்லை என்றும், காஸாவிலிருந்து இஸ்ரேல் முழுமையாக விலகுவதை உறுதி செய்யாத எந்தத் திட்டத்தையும் ஹமாஸ் ஏற்காது என்றும் தெரிவித்தார்.

அமெரிக்க அதிபரின் அருகில் நின்ற நெதன்யாகு, இஸ்ரேல் டிரம்பின் 20 அம்சங்களை ஏற்றுக்கொண்டதாக அறிவித்தார். ஆனால், அவரது கூட்டணியில் உள்ள சில தீவிர வலதுசாரி தலைவர்கள், அதன் சில அம்சங்களை ஏற்கனவே நிராகரித்திருந்தனர்.

ஆனால், டிரம்ப் முன்வைத்த கொள்கைகளை ஏற்றுக்கொள்வதை மட்டும், போரை முடிவுக்குக் கொண்டு வரும் அடையாளமாகக் கருத முடியாது. நெதன்யாகு பின்வரும் குற்றச்சாட்டை மறுத்தாலும், அவரது அரசியல் வாழ்வை ஆபத்துக்குள்ளாக்கக் கூடிய சூழலை உருவாக்கும் ஒப்பந்தங்களை முறியடிக்கும் பழக்கம் உடையவர் என்று இஸ்ரேலில் உள்ள அவரது எதிர் தரப்பு கூறுகிறது.

இந்த நிலையில், டிரம்ப் விரும்பும் முடிவைப் பெற இந்த திட்டம் மட்டுமே போதுமானதாக இருக்காது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸின் அரசியல் தரப்புகளுக்குள் இன்னும் பல தடைகள் உள்ளன. அவை இறுதியில் ஒரு ஒப்பந்தத்தை உருவாக்குவதைத் தடுக்கக் கூடும்.

இந்தத் திட்டம் குறித்து இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்பதால், இரு தரப்பினரும் அதை ஏற்றுக்கொள்வது போல காட்டலாம். அதே நேரத்தில், பேச்சுவார்த்தைகளின் போக்கைப் பயன்படுத்தி திட்டத்தை குலைக்கவும், தோல்விக்கு மற்றொரு தரப்பை குறை கூறவும் வாய்ப்புள்ளது.

இஸ்ரேல் - பாலத்தீனம், அமெரிக்கா, டிரம்ப், காஸா

பட மூலாதாரம், Getty Images

இந்த வழக்கமான முறை தான் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளிலும் காணப்பட்டது. அப்படி நடந்தால், டிரம்ப் நிர்வாகம் இஸ்ரேலின் பக்கம் நிற்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது.

ஹமாஸ் திட்டத்தை ஏற்கவில்லை என்றால், "நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்ய அமெரிக்காவின் முழு ஆதரவும் உங்களுக்கு இருக்கும்" என்று டிரம்ப் திங்களன்று நெதன்யாகுவிடம் கூறி தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தினார்.

டொனால்ட் டிரம்ப் இதை ஒரு முழுமையான அமைதி ஒப்பந்தமாகக் கூறினாலும், உண்மையில் இது பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஒரு அடிப்படைக் கட்டமைப்பாகவே உள்ளது. அவர் இதை "கொள்கைகளின் தொகுப்பு" என ஒரு கட்டத்தில் விவரித்திருந்தார்.

காஸா போரை முடிவுக்குக் கொண்டுவர தேவையான விரிவான திட்டமாக இது இன்னும் உருவாகவில்லை.

இது, மே 2024-ல் முன்னாள் அதிபர் ஜோ பைடன் அறிவித்த "நெறிமுறை" போன்று காணப்படுகிறது. ஒவ்வொரு கட்டமாக போர்நிறுத்தம் செய்து, மோதலை முடிவுக்குக் கொண்டுவர அத்திட்டம் முயன்றது. ஆனால், இஸ்ரேலும் ஹமாஸும் போர்நிறுத்தமும் கைதிகள் பரிமாற்றமும் செய்துகொள்ள எட்டு மாதங்கள் எடுத்தன.

டிரம்ப் ஒரு "முழுமையான" அமைதி ஒப்பந்தத்தை எதிர்பார்த்தார்.

அது, இஸ்ரேல் படைகள் எங்கு, எப்போது வெளியேற வேண்டும், பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான விவரம், விடுவிக்கப்படும் பாலத்தீன கைதிகளின் பெயர்கள், போருக்குப் பிந்தைய ஆட்சி முறை போன்ற பல முக்கிய விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்று அவர் விரும்பினார்.

ஆனால், அவரது 20 அம்சத் திட்டத்தில் இவை எதுவும் தெளிவாகக் கூறப்படவில்லை. இந்த விஷயங்கள் எல்லாம் அமைதி ஒப்பந்தத்தைத் தடுக்கும் அளவுக்கு பெரிய பிரச்னைகளை உருவாக்கலாம்.

இந்தத் திட்டம், ஜூலை மாதத்தில் வெளியான சௌதி-பிரெஞ்சு திட்டம் மற்றும் முன்னாள் பிரிட்டன் பிரதமர் சர் டோனி பிளேர் செய்த சமீபத்திய முயற்சிகளிலிருந்து சில கூறுகளை எடுத்துக்கொண்டது.

சர் டோனி பிளேர், டிரம்ப் தலைமையில் இயங்கும் "அமைதி வாரியத்தில்" உறுப்பினராக இருப்பார். இந்த வாரியம், இந்தத் திட்டத்தின் கீழ் காஸாவின் நிர்வாகத்தை தற்காலிகமாக கண்காணிக்கும்.

இஸ்ரேல் - பாலத்தீனம், அமெரிக்கா, டிரம்ப், காஸா

பட மூலாதாரம், Getty Images

டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் மற்றும் அவரது மருமகன் ஜாரெட் குஷ்னர், இஸ்ரேல், ஐரோப்பிய நாடுகள், கத்தார், எகிப்து போன்ற அரபு நாடுகளுடன் பேசிய பிறகு இந்தத் திட்டத்தை உருவாக்கினர்.

சண்டையை நிறுத்த வேண்டும், இஸ்ரேல் படைகள் சில இடங்களில் வெளியேற வேண்டும், ஹமாஸ் மீதமுள்ள பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும், பின்னர் இஸ்ரேல் நூற்றுக்கணக்கான பாலத்தீன கைதிகளை விடுவிக்க வேண்டும் போன்றவை, இத்திட்டத்தின் முக்கிய அம்சங்களாக உள்ளன.

போருக்குப் பிறகு, காஸாவில் அன்றாட நிர்வாகத்தை கையாள ஒரு உள்ளூர் நிர்வாகம் அமைக்கப்படும். இதை எகிப்தை தளமாகக் கொண்ட "அமைதி வாரியம்" மேற்பார்வையிடும்.

"அமைதியாக வாழ" உறுதி கொடுத்து ஆயுதங்களை கைவிடும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு மன்னிப்பு கிடைக்கும். மற்றவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அமெரிக்காவும் அரபு நாடுகளும் இணைந்து உருவாக்கும் "படை" காஸாவின் பாதுகாப்பை கவனிக்கும். இது பாலத்தீன ஆயுதக் குழுக்களின் ராணுவமயமாக்கலை முடிவுக்கு கொண்டுவரும்.

பாலத்தீன அரசு குறித்து இந்தத் திட்டம் மேலோட்டமாக மட்டுமே பேசுகிறது. ரமல்லாவில் உள்ள பாலத்தீன ஆணையம் மாற்றப்பட்டால், "பாலத்தீனர்களுக்கு சுயநிர்ணய உரிமையும் தனிநாடு அந்தஸ்தும் கிடைக்க ஒரு நல்ல பாதை உருவாகலாம்" என்று இத்திட்டம் கூறுகிறது.

அரபு நாடுகள் இந்தத் திட்டத்தை ஒரு பெரிய முன்னேற்றமாகக் காண்கின்றன. காரணம், இது டிரம்பின் பிப்ரவரி மாத காஸா "ரிவியரா" திட்டத்தை நிராகரித்துவிட்டது. அந்தத் திட்டம் பாலத்தீனர்களை வலுக்கட்டாயமாக இடம்பெயரச் செய்யும் ஒன்றாக இருந்தது.

பாலத்தீனம் தனிநாடு பற்றி உறுதியான வாக்குறுதி இல்லாவிட்டாலும், அதைப் பற்றி ஒரு சிறிய குறிப்பாவது இருப்பது அவர்களுக்கு முக்கியமாக உள்ளது.

அமெரிக்கத் திட்டம், "இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்காது அல்லது இணைக்காது" என்று கூறுகிறது. ஆனால், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைக்கு இப்படியொரு உறுதி அளிக்கப்படவில்லை. ஆனாலும், இது அரபு நாடுகளுக்கு மிக முக்கியமான விஷயம்.

இஸ்ரேல் தரப்பில், போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான தனது நோக்கங்களுடன் இந்தத் திட்டம் ஒத்துப்போவதாகச் சொல்கிறார் நெதன்யாகு. அதாவது, ஹமாஸ் ஆயுதங்களை கைவிட வேண்டும், காஸா ஆயுதமற்ற பகுதியாக வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் பாலத்தீன நாடு உருவாகக் கூடாது.

ஆனால், ஆயுதக் குறைப்பு மற்றும் பாலத்தீன நாடு பற்றிய விதிகளை அவரது அரசில் இடம் பெற்றுள்ளவர்கள் ஏற்பார்களா அல்லது நெதன்யாகு அழுத்தம் கொடுத்து விதிகளில் "மாற்றங்கள்" செய்வாரா என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இஸ்ரேல் - பாலத்தீனம், அமெரிக்கா, டிரம்ப், காஸா

பட மூலாதாரம், Getty Images

இப்போது ஹமாஸின் பதிலைப் பொறுத்து மற்ற விஷயங்கள் அமையும்.

எனது சக செய்தியாளர் ருஷ்டி அபு அலூஃப் முன்பு எழுதியது போல், இது ஒரு குழப்பமான தருணமாக இருக்கலாம். அதாவது, ஹமாஸ் திட்டத்தை ஏற்பது போல் காட்டி, அதே நேரத்தில் மாற்றங்கள் வேண்டும் என கேட்கலாம். எனவே, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முந்தைய "திட்டங்கள்" மற்றும் "கொள்கைகளை" போலவே, இந்தத் திட்டமும் வெள்ளை மாளிகைக்கு பெரிய சவாலாக இருக்கலாம்.

அதேபோல் மற்றொரு குறிப்பிடத்தக்க நிகழ்வும் அமைந்தது. கூட்டு அறிவிப்புக்கு சில நிமிடங்களுக்கு முன்பு, டிரம்ப் நெதன்யாகுவை கத்தாரிடம் மன்னிப்பு கேட்க வைத்தார்.

இந்த மாதத் தொடக்கத்தில் தோஹாவில் ஹமாஸ் தலைமைக் குழுவை குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் கோரியிருந்தது. தற்போது, கத்தார் மீண்டும் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே மத்தியஸ்தராக செயல்படுவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது.

டிரம்ப்-நெதன்யாகு சந்திப்புக்கு சில மணி நேரத்திற்கு முன்பு, காஸா நகரில் இஸ்ரேலின் ஷெல் மற்றும் வான்வழித் தாக்குதல்கள் அதிகமாயின. அங்கு இஸ்ரேலிய ராணுவம் தனது மூன்றாவது கவசப் பிரிவை அனுப்பியுள்ளது. இஸ்ரேலின் பரந்த தாக்குதல், ஹமாஸுக்கு அழுத்தம் கொடுக்கும் திட்டத்தின் ஒரு பகுதி. ஆனால், இது பொதுமக்களுக்கு மேலும் பெரும் பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பெரும்பாலான நாடுகள் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்துள்ளன. இதே நேரத்தில், காஸாவில் உள்ள ஹமாஸ் தளபதி எஸ் அல்-தின் அல்-ஹதாத், "இறுதி முடிவுக்கான போர்" என ஹமாஸ் களத் தளபதி ஒருவர் பிபிசியிடம் விவரித்த போருக்கு தயாராகி வருகிறார்.

பிரான்ஸ், சௌதி அரேபியா தலைமையில் ஐரோப்பிய மற்றும் அரபு நாடுகள், கோடை காலத்தில் ராஜ்ஜீய வழியை மீண்டும் உருவாக்க முயற்சித்தன. இஸ்ரேலின் களச் செயல்பாடுகள் அவர்களை அதிர்ச்சியடையச் செய்தன. இது இஸ்ரேல் சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்படுவதை மேலும் அதிகரித்தது. காஸா போர்க்குற்றங்களுக்காக நெதன்யாகு இன்னும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) கைது வாரண்டின் கீழ் உள்ளார்.

மோதல் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அதிகரிப்பதை ஐரோப்பியர்கள் கண்டனர். அவர்கள், இஸ்ரேலியர்களுக்கும் பாலத்தீனர்களுக்கும் இரு நாடுகள் தீர்வு இருப்பதாக நம்பினர். இதற்காக, இன்னும் உள்ள மிதவாத தலைவர்களிடம் முறையிடலாம் என்று அவர்கள் நம்பினர்.

இந்தத் திட்டத்தில் இரு நாடுகள் தீர்வு வெளிப்படையாக குறிப்பிடப்படவில்லை என்றாலும், காஸாவுக்கான முன்மொழிவுடன் டிரம்பை இணைத்துக்கொள்வது முக்கியம் என அவர்கள் கருதினர்.

இந்த அமெரிக்கத் திட்டம், பேச்சுவார்த்தையின் வேகத்தை மீண்டும் தூண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், டிரம்ப் கூறுவது போல போருக்கான முழுமையான முடிவைப் பெறவும், அதைச் செயல்படுத்தவும் பல வாரங்களோ அல்லது மாதங்களோ கடினமான முயற்சிகளும் நுட்பமான பணிகளும் மேற்கொள்ள வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/c70157z0w34o

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

காஸா போர் நிறுத்தத்திற்கு டிரம்ப் முன்மொழிந்த 20 அம்ச திட்டங்கள் என்ன?

டொனால்ட் டிரம்ப், பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், EPA/Shutterstock

2 மணி நேரங்களுக்கு முன்னர்

காஸாவில் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஏற்றுக்கொண்டுள்ளார். ஆனால், ஹமாஸ் இதுகுறித்து இன்னும் அதிகாரபூர்வ பதிலை வெளியிடவில்லை.

அமெரிக்காவால் வழங்கப்பட்ட இத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள்:

1. அமைதியான, அண்டை பகுதிகளுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தாத, பயங்கரவாதத்திலிருந்து விடுபட்ட பகுதியாக காஸா இருக்கும்.

2. அதிகளவிலான துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள காஸா மக்களுக்கு பயனளிக்கும் வகையில் காஸா மீட்டுருவாக்கம் செய்யப்படும்.

3. இரு தரப்பும் இந்த முன்மொழிவுக்கு ஒப்புக்கொண்டால், போர் உடனடியாக நிறுத்தப்படும். பணயக்கைதிகளை விடுவிப்பதற்கு தயாராகும் வகையில் இஸ்ரேலிய படைகள் திரும்பப் பெறப்படும். இந்த சமயத்தில் வான்வழி மற்றும் பீரங்கி தாக்குதல் உள்ளிட்ட அனைத்து ராணுவ நடவடிக்கைகளும் நிறுத்தப்படும். மேலும், திட்டமிடப்பட்டபடி படைகள் முழுவதும் திரும்பப் பெறப்படும் வரை போரிடும் பகுதிகளில் துருப்புகள் நகராது.

4. இந்த ஒப்பந்தத்திற்கு இஸ்ரேல் பொதுவெளியில் ஒப்புக்கொண்ட 72 மணிநேரத்திற்குள் உயிருடன் உள்ள பணயக்கைதிகள் நாடு திரும்புவர், இறந்த பணயக்கைதிகளின் உடல்களும் ஒப்படைக்கப்படும்.

5. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், இஸ்ரேல் தங்களிடம் உள்ள 250 ஆயுள்தண்டனை சிறைவாசிகள், அக்டோபர் 7, 2023க்குப் பிறகு தடுப்புக் காவலில் வைக்கப்பட்ட அனைத்து பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 1,700 பேரையும் விடுவிக்கும். விடுவிக்கப்படும் ஒவ்வொரு இறந்த இஸ்ரேலிய பணயக்கைதிக்கும், அந்நாடு காஸாவை சேர்ந்த இறந்த 15 பேரின் உடல்களை திரும்பி வழங்கும்.

இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு

6. அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கப்பட்ட பின்னர், அமைதியுடன் இணைந்து வாழவும் தங்கள் ஆயுதங்களை கைவிடவும் தயாராக உள்ள ஹமாஸ் உறுப்பினர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படும். காஸாவை விட்டு வெளியேற விரும்பும் ஹமாஸ் உறுப்பினர்களுக்கு, அவர்கள் செல்லும் நாடுகளுக்கு பாதுகாப்பான வழி ஏற்படுத்தித் தரப்படும்.

7. இந்த ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்ட உடனேயே, காஸாக்கு அனைத்து விதமான உதவிகளும் அனுப்பப்படும். இந்தாண்டு ஜனவரி 19ம் தேதி ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள மனிதநேய உதவிகளான, மறுவாழ்வுக்கான கட்டமைப்புகள் (தண்ணீர், மின்சாரம், கழிவுநீர் வசதி), மருத்துவமனைகள் மற்றும் பேக்கரிகளை மீட்டுருவாக்கம் செய்தல் மற்றும் இடிபாடுகளை அகற்றுவதற்கு தேவையான உபகரணங்களை வழங்குதல் மற்றும் சாலைகளை திறந்துவிடுதல் ஆகியவற்றுக்குக் குறையாமலும், இவற்றை ஒத்த உதவிகளும் வழங்கப்படும்.

8. காஸாவில் உதவிகளை வழங்குவது, இருதரப்பின் தலையீடும் இன்றி ஐ.நா மற்றும் அதன் முகமைகளான செம்பிறைச் சங்கம் ஆகியவை மூலமும் இருதரப்புடனும் தொடர்பில் இல்லாத சர்வதேச நிறுவனங்களுடனும் சேர்ந்து வழங்கப்படும். இரு திசைகளிலும் ரஃபா எல்லையை திறந்துவிடுவதற்கு, ஜனவரி 19, 2025 ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள வழிமுறைகள் பின்பற்றப்படும்.

9. காஸா மக்களுக்கு அன்றாட பொதுச் சேவைகள் மற்றும் நகராட்சி நிர்வாகத்தை வழங்கும் பொறுப்பைக் கொண்ட வல்லுநர்கள் அடங்கிய, அரசியல் சார்பற்ற பாலத்தீனக் குழுவால் ஒரு இடைக்கால நிர்வாகத்தின் கீழ் காஸா ஆளப்படும்.

இக்குழுவில் தகுதியான பாலத்தீனர்கள் மற்றும் சர்வதேச வல்லுநர்கள் இடம்பெறுவார்கள். இந்தக் குழுவை ஒரு புதிய சர்வதேச இடைக்கால "அமைதி வாரியம்" (Board of Peace) மேற்பார்வை செய்யும்.

இந்த அமைதி வாரியத்திற்கு டொனால்ட் டிரம்ப் தலைமை தாங்குவார். இதில் இடம்பெறும் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் உட்பட மற்ற உறுப்பினர்கள் மற்றும் உலகத் தலைவர்கள் பின்னர் அறிவிக்கப்படுவார்கள்.

டிரம்பின் 2020 அமைதித் திட்டம் மற்றும் செளதி-பிரெஞ்சு திட்டம் உட்பட பல்வேறு முன்மொழிவுகளில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி பாலத்தீன அதிகார சபை தனது சீர்திருத்தத் திட்டத்தை நிறைவேற்றி பாதுகாப்பாகவும் திறம்படவும் காஸாவின் கட்டுப்பாட்டை மீண்டும் எடுத்துக் கொள்ளும் வரை, இந்த வாரியம் காஸாவின் மறுசீரமைப்புக்கான கட்டமைப்பை உருவாக்கி, நிதி விவகாரங்களைக் கையாளும்.

காஸா மக்களுக்குச் சேவை செய்யும் மற்றும் முதலீட்டை ஈர்க்க உதவும் நவீன மற்றும் திறமையான நிர்வாகத்தை உருவாக்க இந்த வாரியம் சிறந்த சர்வதேச தரநிலைகளைப் பயன்படுத்தும்.

10. காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும், புத்துயிர் ஊட்டவும், டிரம்பின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் ஒன்று உருவாக்கப்படும். மத்திய கிழக்கில் சில செழிப்பான நவீன நகரங்களின் உருவாக்கத்திற்குக் காரணமாக இருந்த நிபுணர்கள் அடங்கிய குழுவை அமைப்பதன் மூலம் இந்தத் திட்டம் உருவாக்கப்படும்.

பல நல்லெண்ணம் கொண்ட சர்வதேசக் குழுக்களால் முதலீட்டு முன்மொழிவுகளும், அற்புதமான மேம்பாட்டு யோசனைகளும் வடிவமைக்கப்பட்டுள்ளன.

காஸா, இஸ்ரேல்

பட மூலாதாரம், Getty Images

11. ஒரு சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படும், இதில் பங்கேற்கும் நாடுகளுடன் வரி மற்றும் அணுகல் விதிகள் குறித்து பேச்சுவார்த்தை செய்து ஒப்புக்கொள்ளப்படும்.

12. யாரும் காஸாவைவிட்டு வெளியேற வற்புறுத்தப்பட மாட்டார்கள், அதேசமயம் யாரெல்லாம் காஸாவை விட்டு வெளியேற நினைக்கிறார்களோ அவர்கள் அதை செய்யலாம், மீண்டும் காஸாவுக்கே கூட திரும்பலாம். காஸாவிலேயே மக்கள் இருக்க ஆதரிக்கப்படும். சிறப்பான காஸாவை உருவாக்க வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படும்.

13. ஹமாஸ் மற்றும் பிற பிரிவினர் காஸாவின் நிர்வாகத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ அல்லது எந்த வடிவத்திலோ எந்தப் பங்கையும் வகிக்கக் கூடாது என்று ஒப்புக்கொள்கின்றனர்.

சுரங்கங்கள் மற்றும் ஆயுத உற்பத்தி வசதிகள் உட்பட அனைத்து ராணுவ, பயங்கரவாத மற்றும் தாக்குதல் உள்கட்டமைப்பும் அழிக்கப்படும், மீண்டும் கட்டப்படாது. காஸாவில் சுயாதீன கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையின் கீழ் ராணுவ நீக்க (Demilitarisation) செயல்முறை இருக்கும்.

இதில், இணக்கம் காணப்பட்ட வழிமுறையின் மூலம் ஆயுதங்களை நிரந்தரமாகப் பயன்படுத்த முடியாதவாறு அகற்றுவது மற்றும் சர்வதேச அளவில் நிதியளிக்கப்பட்ட மறுசீரமைப்புத் திட்டம் ஆகியவை அடங்கும். இவை அனைத்தும் சுயாதீனக் கண்காணிப்பாளர்களால் சரிபார்க்கப்படும். புதிய காஸா, வளமான பொருளாதாரத்தை உருவாக்குவதிலும், அதன் அண்டை நாடுகளுடன் அமைதியாக சகவாழ்வு வாழ்வதிலும் முழுமையாக உறுதியுடன் இருக்கும்.

14. ஹமாஸ் மற்றும் பிற பிரிவினர் தங்கள் வார்த்தைக்கு இணங்குவதையும், புதிய காஸா அதன் அண்டை நாடுகளுக்கோ அல்லது அதன் மக்களுக்கோ எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தவில்லை என்பதையும் உறுதிப்படுத்த பிராந்தியப் பங்காளிகளால் ஓர் உத்தரவாதம் வழங்கப்படும்.

15. காஸாவில் உடனடியாக நிலைநிறுத்தப்பட ஒரு தற்காலிக சர்வதேச ஸ்திரப்படுத்தும் படையை (International Stabilisation Force - ISF) உருவாக்குவதற்கு அரபு மற்றும் சர்வதேசப் பங்காளிகளுடன் அமெரிக்கா இணைந்து பணியாற்றும்.

ISF படை, காஸாவில் பாலத்தீனப் போலீஸ் படைகளுக்குப் பயிற்சி அளித்து ஆதரவளிக்கும். மேலும், இந்தத் துறையில் விரிவான அனுபவம் கொண்ட ஜோர்டான் மற்றும் எகிப்து நாடுகளுடன் கலந்தாலோசிக்கப்படும்.

இந்தப் படையே நீண்ட கால உள்நாட்டுப் பாதுகாப்புத் தீர்வாக இருக்கும். ISF படையானது, புதிதாகப் பயிற்சி பெற்ற பாலத்தீனப் போலீஸ் படைகளுடன் இணைந்து எல்லைப் பகுதிகளைப் பாதுகாக்க இஸ்ரேல் மற்றும் எகிப்துடன் இணைந்து செயல்படும்.

காஸாவில் ஆயுதங்கள் நுழைவதைத் தடுப்பதும், காஸாவை மீண்டும் கட்டியெழுப்பவும் புத்துயிர் ஊட்டவும் பொருட்களின் விரைவான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்தை எளிதாக்குவதும் மிக முக்கியமானது.

16. இஸ்ரேல் காஸாவை ஆக்கிரமிக்கவோ அல்லது இணைத்துக் கொள்ளவோ செய்யாது. ISF படை கட்டுப்பாடு மற்றும் ஸ்திரத்தன்மையை நிலைநாட்டும் போது, இஸ்ரேல் ராணுவம் வெளியேறும்.

இந்த வெளியேற்றம் இஸ்ரேல் ராணுவம், ISF, உத்தரவாதம் அளிக்கும் நாடுகள் மற்றும் அமெரிக்கா இடையே ஒப்புக் கொள்ளப்படும் தரநிலைகள், மைல்கற்கள் மற்றும் காலக்கெடு ஆகியவற்றின் அடிப்படையில் இருக்கும்.

இஸ்ரேல், எகிப்து அல்லது அதன் குடிமக்களுக்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாத ஒரு பாதுகாப்பான காஸாவை உருவாக்குவதே இதன் நோக்கமாகும். நடைமுறையில், இஸ்ரேல் ராணுவம் ஆக்கிரமித்துள்ள காஸா பகுதியை, இடைக்கால நிர்வாகத்துடன் மேற்கொள்ளும் ஒப்பந்தத்தின்படி ISF படையிடம் படிப்படியாக ஒப்படைக்கும், பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் மீண்டும் ஏற்படாதவாறு காஸா முறையாகப் பாதுகாக்கப்படும் வரை ஒரு பாதுகாப்புச் சுற்றளவு இருப்பு மட்டும் தொடரும்.

17. இந்த முன்மொழிவை ஹமாஸ் தாமதப்படுத்தினால் அல்லது நிராகரித்தால், மேலே கூறப்பட்டவை, குறிப்பாக அதிகரித்த உதவிகளை வழங்கும் நடைமுறை, இஸ்ரேல் ராணுவத்தால் ISF-இடம் ஒப்படைக்கப்படும் பயங்கரவாதம் இல்லாத பகுதிகளில் தொடரும்.

18. அமைதியால் கிடைக்கும் நன்மைகளை வலியுறுத்துவதன் மூலம் பாலத்தீனர்கள் மற்றும் இஸ்ரேலியர்களின் மனநிலையையும், கருத்துக்களையும் மாற்ற முயற்சிக்கும் 'மதங்களுக்கு இடையேயான உரையாடல் செயல்முறை' (Interfaith dialogue process), சகிப்புத்தன்மை மற்றும் அமைதியான சகவாழ்வு ஆகிய மதிப்புகளின் அடிப்படையில் நிறுவப்படும்.

19. காஸா மீள் உருவாக்கம் தொடர்ந்து, பாலத்தீன அதிகார சபை (PA) சீர்திருத்தம் நம்பிக்கையுடன் செயல்படுத்தப்பட்டால், பாலத்தீன மக்களின் விருப்பமான பாலத்தீன தன்னாட்சி மற்றும் சுதந்திரமான நாடு உருவாவதற்கான நம்பகமான பாதைக்கான சூழல்கள் உருவாக்கப்படும்.

20. அமைதியுடனும் நல்லிணக்கத்துடன் ஒன்றிணைந்து வாழ்வதற்கான அரசியல் கட்டமைப்பை உருவாக்க இஸ்ரேல் மற்றும் பாலத்தீனர்களுக்கு இடையே அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/cj4y0jjzzj1o

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.