Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

564622485_1253271916832098_7027639494082

ea4505f0-ac18-11f0-b2a1-6f537f66f9aa.jpg

பிரிட்டிஷ், சோவியத் மற்றும் அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்துள்ளன, ஆனால் அனைவரும் பின்வாங்க வேண்டியிருந்தது.

'பேரரசுகளின் கல்லறை': ஆப்கானிஸ்தானில்... பிரிட்டன், சோவியத், அமெரிக்கா தோற்றது ஏன்?

சமீபத்திய எல்லை மோதல்களைத் தொடர்ந்து, பாகிஸ்தானும் ஆப்கானிஸ்தானும் 48 மணி நேர போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனாலும், பதற்றம் தொடர்கிறது.

கத்தார் மத்தியஸ்தராக இருந்து அமைதிப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், மோதல் மோசமாகலாம் என்றும் சிலர் கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், இந்தியா வந்திருந்த தாலிபன் வெளியுறவு அமைச்சர் அமீர் கான் முத்தக்கியின் கூற்று சர்வதேச அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. அவர் பாகிஸ்தானின் பெயரை நேரடியாகச் சொல்லாமல், மறைமுகமாக எச்சரிக்கை விடுத்தார்.

"ஆப்கானியர்களின் தைரியத்தை சோதிக்க வேண்டாம், அவர்களை அதிகமாக துன்புறுத்த வேண்டாம். அதைச் செய்ய நினைத்தால், முதலில் பிரிட்டனிடம், சோவியத் யூனியனிடம், அமெரிக்காவிடம், நேட்டோவிடம் கேளுங்கள். அவர்கள் உங்களுக்குத் தெளிவாகச் சொல்வார்கள், ஆப்கானிஸ்தானுடன் விளையாடுவது எளிதல்ல," என்று அவர் கூறியிருந்தார்.

சமீபத்தில், தாலிபன் அரசின் செய்தித் தொடர்பாளர் ஒருவரும் இதேபோன்ற கருத்தை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஒரு பாரம்பரிய ராணுவமோ,பெருமளவில் வளங்களோ இல்லாத நாட்டில் உலகின் பல வல்லரசுகளும் ஏன் தோல்வியடைந்தன? ஏன் ஆப்கானிஸ்தான் 'பேரரசுகளின் கல்லறை' (Graveyard of Empires) என்று அழைக்கப்படுகிறது? என்ற கேள்வியை பலரும் முன்வைக்கின்றனர்.

'பேரரசுகளின் கல்லறை'

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம், தாலிபன், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கம்யூனிச ஆட்சியின் வீழ்ச்சியைத் தடுக்க ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய சோவியத் ராணுவம் பத்து ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பிச் செல்ல வேண்டியிருந்தது.

இந்தக் கேள்விக்கான பதில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றிலும் அதன் புவியியல் அமைப்பிலும் பதிந்துள்ளது.

19ஆம் நூற்றாண்டில், உலகின் மிக சக்திவாய்ந்த பேரரசாக இருந்த பிரிட்டிஷ் பேரரசு தனது முழு ராணுவ வலிமையையும் பயன்படுத்தி ஆப்கானிஸ்தானைக் கைப்பற்ற முயன்றது.

ஆனால் இறுதியில் 1919ஆம் ஆண்டு பிரிட்டன் தோல்வியை ஏற்று, ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டது.

அதன் பின், 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

1978ஆம் ஆண்டில் ஆட்சிக் கவிழ்ப்பின் மூலம் அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் அரசாங்கத்தின் வீழ்ச்சியைத் தடுப்பதே அதன் நோக்கமாக இருந்தது.

ஆனால் அவர்கள் ஒருபோதும் போரில் வெற்றி பெற முடியாது என்பதை உணர அவர்களுக்கு பத்து ஆண்டுகள் ஆயின.

பிரிட்டிஷ் பேரரசும் சோவியத் யூனியனும் சில விஷயங்களில் ஒற்றுமையைக் கொண்டிருந்தன.

ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த போது இரு பேரரசுகளும் தங்கள் அதிகாரத்தின் உச்சத்தில் இருந்தன. ஆனால் , அந்தப் படையெடுப்பிற்குப் பிறகு, இரு பேரரசுகளும் படிப்படியாகச் சிதையத் தொடங்கின.

அதன் பின், 2001ஆம் ஆண்டு அமெரிக்கா தலைமையிலான கூட்டணிப் படைகள் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தன.

அங்கு பல ஆண்டுகளாக நடந்த போர்களில் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர்.

இருபது ஆண்டுகள் கடந்தபின், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அமெரிக்கப் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற முடிவு செய்தார்.

அதுவே ஆப்கானிஸ்தானில் தாலிபன் மீண்டும் ஆட்சிக்கு வர வழிவகுத்தது. இந்த முடிவு உலகம் முழுவதும் பெரும் விமர்சனத்தையும் சர்ச்சையையும் எழுப்பியது.

இன்றும் அதிபர் டொனால்ட் டிரம்ப், பைடனின் முடிவை கடுமையாக விமர்சித்து வருகிறார். அந்த முடிவே தாலிபன்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்ற வழிவகுத்தது.

"ஆப்கானியர்களே போராடத் தயாராக இல்லாத ஒரு போரில், அமெரிக்கர்கள் உயிரிழக்க கூடாது"என்று பைடன் கூறினார்.

"பேரரசுகளின் கல்லறை" என்ற பெயரால் பிரபலமான ஆப்கானிஸ்தானை நினைவு கூர்ந்து, "எவ்வளவு வலிமையான ராணுவம் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு நிலையான, ஒருங்கிணைந்த மற்றும் பாதுகாப்பான ஆப்கானிஸ்தான் உருவாவது சாத்தியமில்லை," என்றும் பைடன் தெரிவித்தார்.

கடந்த சில நூற்றாண்டுகளில், ஆப்கானிஸ்தானைக் கட்டுப்படுத்த முயன்ற உலகின் வலிமையான வல்லரசுகளுக்கு, அந்த நாடு உண்மையிலேயே ஒரு கல்லறையாக மாறியிருக்கிறது.

ஏனென்றால் ஆரம்பத்தில் சிறிய வெற்றிகளைப் பெற்றாலும், இறுதியில் எல்லா பேரரசுகளும் ஆப்கானிஸ்தானை விட்டு வெளியேற வேண்டியிருந்தது.

வல்லரசுகள் தோற்றது ஏன்?

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம், தாலிபன், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அமெரிக்கப் படைகள் 2001 இல் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கின,

ஆய்வாளர் டேவிட் ஆஷ்பி, 'Afghanistan: Graveyard of Empires' ('ஆப்கானிஸ்தான்: பேரரசுகளின் கல்லறை)என்ற தலைப்பில் ஆப்கானிஸ்தானின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நூலை எழுதியுள்ளார்.

"ஆப்கானியர்கள் மிக வலிமையானவர்கள் என்பதல்ல காரணம். ஆனால் ஆப்கானிஸ்தானில் நடந்த பெரும்பாலான நிகழ்வுகள், அந்த நாட்டை ஆக்கிரமிக்க முயன்ற வல்லரசுகளின் தவறான முடிவுகளால் ஏற்பட்டவை தான்"என அவர் அப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.

"நீங்கள் மேலோட்டமாகப் பார்த்தால், ஆப்கானிஸ்தான் ஒரு கடினமான நாடு. மிக மோசமான உள் கட்டமைப்பும், மிகக் குறைந்த வளர்ச்சியையும் கொண்ட ஒரு சிக்கலான நாடு" என ஆய்வாளர் ஆஷ்பி கூறுகிறார்.

"சோவியத் யூனியன், பிரிட்டன் அல்லது அமெரிக்கா என எந்தப் பேரரசும் ஆப்கானிஸ்தானுடன் இணக்கமாக நடந்துகொள்ளவில்லை. அவர்கள் தங்களது வழியில் போக விரும்பினர். ஆனால் ஆப்கானிஸ்தானின் உள்நாட்டுச் சிக்கல்களையும், அதன் சமூக-மத அமைப்புகளையும் அவர்கள் ஒருபோதும் புரிந்து கொள்ள முயலவில்லை"என்று அவர் குறிப்பிடுகிறார்.

'ஆப்கானிஸ்தானை யாராலும் தோற்கடிக்க முடியாது' என்று அடிக்கடி கூறப்படுகின்றது. அது உண்மை அல்ல. பாரசீகர்கள், மங்கோலியர்கள், மற்றும் அலெக்சாண்டர் ஆகியோர் ஒருகாலத்தில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றியிருந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானை ஆக்கிரமிக்க முயன்ற கடைசி மூன்று வல்லரசுகளும் தங்கள் முயற்சிகளில் படுதோல்வியடைந்தன' என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மூன்று முறை படையெடுத்த பிரிட்டிஷ் பேரரசு

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம், தாலிபன், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,1878 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாம் ஆப்கன்-பிரிட்டிஷ் போரின் ஓவியம்.

19ஆம் நூற்றாண்டில், மத்திய ஆசியாவின் கட்டுப்பாட்டைப் பெற வேண்டும் என்ற நோக்கில், பிரிட்டிஷ் மற்றும் ரஷ்ய பேரரசுகளுக்கு இடையே நடந்த போரில் ஆப்கானிஸ்தான் முக்கியத் தளமாக இருந்தது.

இது ரஷ்யாவிற்கும் பிரிட்டனுக்கும் இடையே பல ஆண்டு கால ராஜ்ஜீய மற்றும் அரசியல் மோதலுக்கு வழிவகுத்தது. இறுதியில் பிரிட்டன் வெற்றி பெற்றாலும், அதற்கு பெரும் விலை கொடுக்க நேரிட்டது.

1839 முதல் 1919 வரை, பிரிட்டன் மூன்று முறை ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. ஆனால் மூன்று முறையும் இறுதியில் தோல்வியைத் தழுவியது.

முதல் ஆங்கிலோ–ஆப்கன் போரில் (1839), பிரிட்டன் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியது. ஏனென்றால், பிரிட்டன் விரைவாகச் செயல்படாவிட்டால் ரஷ்யா ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றும் என்று அது நம்பியது.

ஆனால் பிரிட்டன் விரைவில் ஒரு வரலாற்று தோல்வியைச் சந்தித்தது.

சில பழங்குடியினர், எளிய ஆயுதங்களின் உதவியால், உலகின் சக்திவாய்ந்த படையான பிரிட்டன் படையை முற்றிலுமாக அழித்தனர்.

மூன்று ஆண்டுகள் தொடர்ந்த ஆக்கிரமிப்புக்குப் பிறகு, ஆப்கானியர்கள் பிரிட்டன் ராணுவத்தை பின்வாங்கச் செய்தனர்.

1842ம் ஆண்டு ஜனவரி 6 ஆம் தேதி பிரிட்டிஷ் முகாமிலிருந்து ஜலாலாபாத்திற்குச் சென்ற 16,000 வீரர்களில், ஒரே ஒரு பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் தான் உயிருடன் திரும்பினார்.

இந்தப் போர், பிரிட்டிஷ் பேரரசின் விரிவாக்கக் கொள்கையை பலவீனப்படுத்தியது என்றும், ஆங்கிலேயர்களை ஒருபோதும் தோற்கடிக்க முடியாது என்ற நம்பிக்கையைச் சிதைத்தது என்றும் ஆய்வாளர் ஆஷ்பி குறிப்பிடுகிறார்.

நாற்பதாண்டுகள் கழித்து, பிரிட்டன் மீண்டும் முயற்சி செய்தது. அந்த முறை ஓரளவு வெற்றி கிடைத்தது.

1878 முதல் 1880 வரை நடந்த இரண்டாம் ஆங்கிலோ–ஆப்கன் போருக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானின் வெளியுறவுக் கொள்கையை தன் கட்டுப்பாட்டில் எடுக்கும் நிலைக்கு பிரிட்டன் வந்தது.

ஆனால் 1919ஆம் ஆண்டு, பிரிட்டனால் தேர்ந்தெடுக்கப்பட்ட எமிர், பிரிட்டனிடமிருந்து சுதந்திரம் பெற்றதாக அறிவித்தார். இதுவே மூன்றாம் ஆங்கிலோ–ஆப்கான் போர் வெடிக்கக் காரணமானது.

அந்த நேரத்தில், போல்ஷெவிக் புரட்சி ரஷ்யாவின் அச்சுறுத்தலைக் குறைத்திருந்தது. அதேசமயம், முதலாம் உலகப் போரால் பிரிட்டனின் ராணுவச் செலவுகள் பெரிதும் உயர்ந்திருந்தன.

இதனால், ஆப்கானிஸ்தான் மீதான பிரிட்டனின் ஆர்வம் மங்கியது.

நான்கு மாத நீண்ட போருக்குப் பிறகு, பிரிட்டன் ஆப்கானிஸ்தானை சுதந்திரம் பெற்றதாக அறிவித்தது.

ஆப்கானிஸ்தானில் அதிகாரப்பூர்வ ஆட்சி இல்லாவிட்டாலும், பிரிட்டன் அந்த நாட்டில் பல ஆண்டுகளாக தன் செல்வாக்கை பராமரித்து வந்ததாக நம்பப்படுகிறது.

சோவியத் ஒன்றியத்தின் படையெடுப்பு

1920களில், எமீர் அமானுல்லா கான் ஆப்கானிஸ்தானில் பல சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த முயன்றார்.

பெண்கள் புர்கா அணிய வேண்டிய கட்டாயத்தை நீக்குதல் உள்ளிட்ட அவரது சில சீர்திருத்தங்களை பழங்குடியினரும் மதத் தலைவர்களும் கடுமையாக எதிர்த்தனர். இதனால் நாட்டில் உள்நாட்டுப் போர் வெடித்தது.

இந்த உள்நாட்டுப் போரின் காரணமாக, ஆப்கானிஸ்தான் பல தசாப்தங்களாக அமைதியின்றி இருந்தது.

பின்னர் 1979ஆம் ஆண்டு, சோவியத் யூனியன், கம்யூனிச அரசாங்கத்தை பாதுகாக்கும் பொருட்டு ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது.

இதற்கு எதிராக பல முஜாஹிதீன் அமைப்புகள் உருவாகி, சோவியத் படைகளுக்கு எதிராக போரிட்டன.

அந்த அமைப்புகள் அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, இரான் மற்றும் சௌதி அரேபியா ஆகிய நாடுகளிடமிருந்து நிதியுதவியும் ஆயுதங்களும் பெற்றன.

பதிலுக்கு, சோவியத் படைகள், பிரச்னையின் மூலமாக கருதிய பல கிராமங்கள் மற்றும் பகுதிகளின் மீது கடுமையான தாக்குதல்களை நடத்தின.

இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறவோ அல்லது உயிரிழக்கவோ நேர்ந்தது.

இந்தப் போர், பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. சுமார் 15 லட்சம் பேர் கொல்லப்பட்டனர், ஐந்து மில்லியன் மக்கள் அகதிகளாக மாறினர்.

சில காலத்திற்கு சோவியத் படைகள் முக்கிய நகரங்கள் மற்றும் வர்த்தக மையங்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தாலும், முஜாஹிதீன்கள் கிராமப்புறங்களில் தீவிரமாக செயல்பட்டனர்.

சோவியத் ராணுவம் பலவிதமான போர் தந்திரங்களை முயற்சித்தும், கொரில்லா போராளிகள் அவர்களின் தாக்குதல்களைத் முறியடித்து வந்தனர்.

இதனால் முழு நாடும் போரால் பாதிக்கப்பட்டது.

இதற்கிடையில், அப்போதைய சோவியத் தலைவர் மிகைல் கோர்பச்சேவ், ரஷ்ய பொருளாதாரத்தை சீர்திருத்தும் போது போரைத் தொடர முடியாது என்பதை உணர்ந்து, 1988 இல் ஆப்கானிஸ்தானில் இருந்து படைகளைத் திரும்பப் பெற முடிவு செய்தார்.

இந்தப் போர், சோவியத் யூனியனுக்கு பொருளாதார ரீதியாக மிகுந்த பொருட்செலவை ஏற்படுத்தியது. இது சோவியத் யூனியனின் மிகப்பெரிய அரசியல் தவறுகளில் ஒன்றாக கருதப்படுகிறது என்று ஆஷ்பி கூறுகிறார்.

இந்தப் போருக்குப் பின்னர், சோவியத் யூனியன் சிதைவடைந்து, பிளவுபடத் தொடங்கியது.

அமெரிக்காவின் ராணுவ நடவடிக்கையும் பேரழிவும்

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம், தாலிபன், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2009 ஆம் ஆண்டில் வீரர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம் அமெரிக்கா தாலிபான்களை பின்னுக்குத் தள்ளியது, ஆனால் இது நீண்ட காலம் நீடிக்கவில்லை.

பிரிட்டன் மற்றும் சோவியத் யூனியனின் தோல்விகளுக்குப் பிறகு, 9/11 தாக்குதலைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானில் அல்-கொய்தா அமைப்பை அழிக்க அமெரிக்கா தனது படைகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பியது.

முந்தைய இரண்டு பேரரசுகளைப் போலவே, அமெரிக்காவும் ஆப்கானிஸ்தானை விரைவாகக் கைப்பற்றி, தாலிபன்களை சரணடையச் செய்தது.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, ஆப்கானிஸ்தானில் புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டது,

ஆனாலும் தாலிபன் தாக்குதல்கள் தொடர்ந்து நடந்தன.

2009ஆம் ஆண்டு, அப்போதைய அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா, கூடுதல் படைகளை அனுப்பி தாலிபன்களுக்கு தற்காலிக பின்னடைவை ஏற்படுத்தினார்.

ஆனால் அதுவும் நீண்ட காலம் நீடிக்கவில்லை.

2014 ஆம் ஆண்டில் அதிக சேதங்கள் ஏற்பட்டன. பின்னர் நேட்டோ தனது பணி முடிந்ததாக அறிவித்து, ஆப்கானிய ராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைத்தது.

இதற்குப் பிறகு, தாலிபன்கள் மீண்டும் பல பிரதேசங்களை கைப்பற்றினர்.

அடுத்த ஆண்டு, 2015இல், காபூலில் உள்ள நாடாளுமன்றம் மற்றும் விமான நிலையத்துக்கு அருகே பல தற்கொலை குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா மேற்கொண்ட தாக்குதலில் பல தவறுகள் நடந்ததாக ஆஷ்பி விளக்குகிறார்.

"ராணுவமும், ராஜ்ஜீய முயற்சிகளும் இருந்தபோதிலும், ஒரு பெரிய சிக்கல் என்னவென்றால், அமெரிக்காவாலும் சர்வதேச சமூகத்தாலும், ஆப்கானிஸ்தானை ஒரு மறைமுகப் போர் நடத்துவதிலிருந்து தடுக்க முடியவில்லை. அந்த மறைமுகப் போர், மற்ற எல்லா ஆயுதங்களையும் விட அதிக வெற்றியை பெற்றது," என்று அவர் கூறுகிறார்.

அமெரிக்காவுக்கு செலவு மிக்க போர்

ஆப்கானிஸ்தான், அமெரிக்கா, பிரிட்டன், சோவியத் ஒன்றியம், தாலிபன், பாகிஸ்தான்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடைந்த தோல்வி தெற்கு வியட்நாமில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்படுகிறது.

ஆப்கானிஸ்தானில் சோவியத் யூனியன் நடத்திய போர் அதிக உயிர்ச் சேதத்தை ஏற்படுத்தியது என்றால், அமெரிக்க படையெடுப்பு அதிக செலவு மிக்கதாக இருந்தது.

சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தான் போருக்கு ஆண்டு ஒன்றுக்கு 2 பில்லியன் டாலர் செலவிட்டது. அமெரிக்கா 2010–2012 காலத்தில் ஆண்டுக்கு சுமார் 100 பில்லியன் டாலர் செலவிட்டதாகக் கருதப்பட்டது.

ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா அடைந்த தோல்வி தெற்கு வியட்நாமில் நடந்த நிகழ்வுகளுடன் ஒப்பிடப்பட்டுள்ளது.

அமெரிக்காவில், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்டெபானிக், "இது ஜோ பைடனின் சயகான்" (வியட்நாம் போரில் தெற்கு வியட்நாமின் தலைநகராக திகழ்ந்த சயகான் நகரத்தை வடக்கு வியட்நாம் படைகள் கைப்பற்றியது வரலாற்றில் அமெரிக்கப் படைகளின் பெரும் தோல்வியைக் குறிக்கிறது) என்று ட்வீட் செய்துள்ளார்.

"சர்வதேச அரங்கில் இது ஒரு மிகப்பெரும் தோல்வி, அதை ஒருபோதும் மறக்க முடியாது."

அமெரிக்கப் படைகள் பின்வாங்கியதைத் தொடர்ந்து, ஆப்கானிஸ்தானை தாலிபன்கள் கைப்பற்றியது ஒரு மனிதாபிமான நெருக்கடிக்கு வழிவகுத்தது, லட்சக்கணக்கான மக்களை இடம் பெயர நேர்ந்தது.

"வரும் நாட்களில் தாலிபன் அரசு சர்வதேச சமுதாயத்தால் அங்கீகாரம் பெறுகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். அதைப் பற்றி எனக்கு பெரும் சந்தேகங்கள் உள்ளது," என்கிறார் ஆஷ்பி.

சர்வதேச சமுதாயம் தாலிபன்களை கையாள முடியாமல் போனால், பேரரசுகளின் கல்லறை என்று அழைக்கப்படும் ஆப்கானிஸ்தானை மீண்டும் தாக்க ஒரு வேறு சக்தி முயற்சி செய்யுமா?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

எழுதியவர்,நோர்பெர்டோ பிரேட்ஸ்

Edited by தமிழ் சிறி

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.