Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

yugabarathi.jpg?w=300&h=142

ஒரு முன்குறிப்பு :
=========
தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர்கள் பற்றிய தோழன் யுகபாரதியின் ”நேற்றைய காற்று” என்கிற புத்தகம் பற்றித்தான் இந்தவாரம் உங்களோடு கதைக்கப்போகிறேன்.

ஏறக்குறைய இருபது ஆண்டுகள் முன்னரே தமிழ் திரைப்படப் பாடல்களில் உள்ள ஆபாசங்கள்…. வக்கிரங்கள்… பகுத்தறிவற்றதனங்கள் குறித்தெல்லாம் எனது ”வாலி + வைரமுத்து = ஆபாசம்” என்கிற நூலில் துவைத்துக் காயப்போட்டு விட்டபடியால் மீண்டும் அவற்றுள் மூக்கை நுழைக்க விரும்பவில்லை.
.
இங்கு பேசப்போவது தம்பி யுகபாரதியின் நூல்குறித்து மட்டுமே. இந்நூல் குறிப்பிடும் பாடலாசிரியர்களில் மகத்தான பாடல்களைக் கொடுத்தவர்களும் இருக்கிறார்கள்…. கெடுத்தவர்களும் இருக்கிறார்கள்.

எனவே இது இப்பாடலாசிரியர்களின் பாடல்களைக் குறித்த யுகபாரதியின் பார்வையினூடே பயணிக்கும் ஒரு பயணம்தான்.
.
இனி….

.
neetraiya-kaarru-wrapper.jpg?w=219&h=300

சில ஆண்டுகளுக்கு முன்னர் வார இதழ் ஒன்றில் கவிஞர் யுகபாரதி எழுதிய தொடர் ஒன்றின் நீட்சிதான் இந்த “நேற்றைய காற்று.”
.
வார இதழ்களுக்கே உரிய பக்க நெருக்கடியால் சொல்லாமல் விட்டவற்றை விரிவாகவும் ஆழமாகவும் அலசி ஆராய்ந்து அளித்திருக்கிறார். அதுவும் ஐநூறைத் தொடும் பக்கங்களோடு.
.
இதைப் பற்றி எழுத உட்காரும்போதெல்லாம் யுகபாரதி குறிப்பிடும் பாடல்களைச் சுற்றியும்… கவிஞர்களைச் சுற்றியும் வட்டமிட ஆரம்பித்துவிடும் மனம்.
.
அப்புறம் சும்மாவா இருக்க முடியும் ?
.
யுகபாரதி ஒரு பாடல் குறித்துக் குறிப்பிட்டால் உடனே அதைக் கேட்டாக வேண்டும் என்கிற ஆவல் எழுந்து யூடியூப்பில் பார்க்கத் தொடங்கிவிடுவேன்.
.
மனம் அந்தப் பாடல்வரிகளில் மிதக்கத் தொடங்கிவிடும். இப்படியே யூடியூப்பில் மூழ்கிக் கிடந்தால் அப்புறம் எப்போதுதான் எழுதுவது? ச்சை…. முதலில் இதை நிறுத்தித் தொலைக்க வேண்டும் என முடிவெடுத்து எழுத ஆரம்பிப்பதற்குள் மூன்று நான்கு வாரங்கள் கடந்தோடி விட்டது.
.
வெறுமனே பாடல்களைப் பற்றி மட்டும் குறிப்பிடாமல்…

அந்தப் பாடலாசிரியர் பயணித்த பாதை எது…?

எந்த சித்தாந்தம் அவரை இப்படிப் பயணிக்க வைத்தது…?

அந்த வேளையில் கோலோச்சிக் கொண்டிருந்த சித்தாந்ததிற்கு அவர்கள் எப்படி உரமூட்டினார்கள் என்பது குறித்தெல்லாம் விரிவாக…. மிக விரிவாகப் பேசுகிறது “நேற்றைய காற்று”.
.
யுகபாரதி முன்னுரையில் குறிப்பிடுவதைப் போல “மொழியறியாத ஒருவர் இசையமைப்பாளர் ஆகலாம்…
.
இனமறியாத ஒருவர் இயக்குநராக ஆகலாம்…
.
ஆனால், தமிழைப் பிழையற அறியாதவர்களோ, தமிழினத்தைப் பற்றிய புரிதல் இல்லாதவர்களோ பாடலாசிரியராக ஆக முடியாது.”
உண்மைதான்.

.
ஆனால், இப்போது பாடல் எழுதிக் கொண்டிருப்பவர்களில் எத்தனை பேர் இந்த மொழி குறித்தும், இனம் குறித்தும் புரிதல் உள்ளவர்கள்? என்கிற கேள்வியும் யுகபாரதிக்குள் எழமலில்லை.
.
ஆனால் அவற்றுக்குள் தலையை நீட்டி சர்ச்சைகளுக்குள் மாட்டிக் கொள்ள விரும்பவில்லை அவர்.
.
திரைத்துறைக்கு வெளியில் இருக்கும் என்னைப் போன்றவர்கள் வேண்டுமானால் அடித்து ஆடலாம். ஆனால் தம்பியைப் போன்றவர்கள் கடுமையான விமர்சனத்தில் ஈடுபட்டால் அது பொறாமையின் நிமித்தமும், போட்டியின் நிமித்தமும் எழுந்ததாகவே பொருள் கொள்ளப்படும்.
.
ஆயினும் அவ்வப்போது நாசூக்காகச் சுட்டியும் செல்கிறார்.
.
யுகபாரதி தேர்ந்தெடுத்து எழுதியுள்ள இருபது பாடலாசிரியர்களில் கண்ணதாசனோ, கல்யாணசுந்தரமோ, வாலியோ, வைரமுத்தோ இடம்பெறவில்லை.
.
பரவலாக அறியப்பட்ட இவர்கள் குறித்து எழுதுவதை விட…. இன்னமும் விரிவாக அறிந்தாக வேண்டிய கவிஞர்களின் மீது கவனம் குவித்திருக்கிறார்.
.
நா. காமராசன் / புலமைப்பித்தன் / கவி. கா.மு. ஷெரீப் / உடுமலை நாராயணகவி / அறிவுமதி / மருதகாசி / பஞ்சு அருணாசலம் / ஆலங்குடி சோமு / கங்கை அமரன் / மு. மேத்தா என நீளுகிறது அப்பட்டியல்.
.
இவர்களில் திராவிட இயக்கச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு…
.
பொதுவுடைமைச் சிந்தனையில் வந்தவர்களும் உண்டு….
.
தமிழ்த் தேசிய சிந்தனை மரபில் வந்தவர்களும் உண்டு.
.
.
தனது “கருப்பு மலர்கள்” கவிதைத் தொகுப்பால் அதிரவைத்த நா. காமராசனை ”சிட்டுக்கு செல்லச் சிட்டுக்கு ஒரு சிறகு முளைத்தது” என “நல்லவனுக்கு நல்லவன்” படத்தின் பாடலைச் சொன்னால் சட்டெனப் புரியும் பலருக்கு.
.
அறுபதுகளில் பிறந்தவர்களுக்கோ நீதிக்குத் தலைவணங்கு படத்தில் வரும் “கனவுகளே ஆயிரம் கனவுகளே” பாடலும் அதில் வரும்….
.
“நகக்குறி வரைகின்ற சித்திரமோ / அங்கு நாணங்கள் தூரிகை வண்ணங்களோ / முகமென்று அதற்கொரு தலைநகரோ / கைகள் மூடிய கோட்டைக் கதவுகளோ” என்கிற வரிகளும் வந்துபோகும்.

na-kamarasan.jpg?w=300


வானிலே தேனிலா பாடுதே / வெளக்கு வெச்ச நேரத்திலே / பாட்டுத் தலைவன் பாடினால் போன்ற பாடல்களைக் கொடுத்த நா. காமராசனின் பாடல்களில் என்னை இன்னமும் இதமாக வருடும் பாடலும் ஒன்றுண்டு.
.
அதுதான் :
.
’ஊருக்கு உழைப்பவன்’ படத்தில் வரும்…. “இரவுப்பாடகன் ஒருவன் வந்தான்” என்கிற பாடலும்….
.
அதில் வரும்
”புத்தனின் முகமோ / என் தத்துவச் சுடரோ / சித்திர விழியோ / அதில் எத்தனை கதையோ “ என்கிற வரிகளும்தான்…
.
நா. காமராசனின் பாடல்களோடு நிற்காது அவருக்கும் கலைஞருக்கும் இருந்த தொடர்பு…

அவருக்கும் எம்.ஜி.ஆருக்கும் இருந்த உறவு…

அவரது அதிரடி பேச்சு என பல்வேறு சுவையான செய்திகளையும் சொல்கிறார் யுகபாரதி.
.
.
”எனக்கு வியாபார புத்தியும் இல்லை. விளம்பர யுக்தியும் தெரியவில்லை.” என வருந்திய புலமைப்பித்தன் கோவை சூலூரில் மரத்தடி பள்ளியில் தமிழ் பயின்று தமிழாசிரியராய் உயர்ந்து எழுதிய பாடல்கள் ஏராளம்.
.
”பழுதுபார்த்து ஒதுக்க முடியாத பாடல்களை மட்டுமே எழுதிய பாடலாசிரியர்களாக இருவரைக் கொள்ளலாம்.
.
ஒருவர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், மற்றொருவர் புலமைப்பித்தன்” என்கிறார் யுகபாரதி.
.
1966 இல் வெளிவந்த ’குடியிருந்த கோயில்’ திரைப்பட்த்தில் வரும் “நான் யார், நான் யார் நீ யார்?” பாடலில் தொடங்குகிறது புலமைப்பித்தனின் திரையுலகப் பயணம்.

pulamaipithan.jpg?w=624
.
அணி இலக்கணத்தை முதன்மையாகக் கொண்டு அவர் எழுதியுள்ள பாடல்களின் பட்டியல் நீளமானது.
.
”நாயகனில்” வரும்…
”நீயொரு காதல் சங்கீதம் / வாய்மொழி சொன்னால் தெய்வீகம்…”
.
”நீதிக்குத் தலை வணங்கு” படத்தில் வரும் “இந்தப் பச்சைக் கிளிக்கொரு செவ்வந்திப் பூவில்….”
.
”ரோசாப்பூ ரவிக்கைக்காரி”யின் “உச்சி வகுந்தெடுத்துப் பிச்சிப்பூ வச்ச கிளி…”
.
’அடிமைப்பெண்’“ணின் “ஆயிரம் நிலவே வா… ஓராயிரம் நிலவே வா…” என ஏராளம் எழுதிக் குவித்திருக்கிறார் புலவர்.
.
தம்பி யுகபாரதி ”ஜோக்கரில்” எழுதிய “என்னங்க சார் உங்க சட்டம்” பாடலுக்கான உந்துதலே புலவர் எழுதிய ”நீதிக்குத் தண்டனை” திரைப்படத்தில் வரும் “ஓ மனிதர்களே கொஞ்சம் நில்லுங்கள்” பாடல்தான் என்பது யுகபாரதியின் கருத்து.
.
எம்.ஜி.ஆர் அவர்களுக்கு நெருக்கமாக இருந்தாலும் கலைஞரின் படங்களுக்குப் பாடல் எழுதும் துணிச்சல் புலவர் புதுமைப்பித்தனுக்கு இருந்திருக்கிறது.
.
திரைப்பாடல்கள் மட்டுமின்றி அவரது “புரட்சிப் பூக்கள்” கவிதை நூல் குறித்து…
.
தமிழீழ மக்களின் தேசியத் தலைவர் பிரபாகரனுக்கும் அவருக்கும் இருந்த நேசம்
.
குறித்தெல்லாம் விரிவாகச் சிலாகிக்கிறார் யுகபாரதி.
.
எனது மனதைத் தொட்ட பாடல்கள் வரிசையில் அவர் அழகன் திரைப்படத்தில் எழுதிய “சாதி மல்லிப் பூச்சரமே” பாடலுக்கு பிரதான பங்கிருக்கிறது.
.

.
”ஒன்று சேர்ந்த அன்பு மாறுமா?” என நம்மைக் கேட்ட கவிஞர் கா.மு. ஷெரீப் எழுதிய மற்றொரு பிரபல பாடல்தான் “பாட்டும் நானே பாவமும் நானே” என திருவிளையாடலில் வரும் பாடல்.
.
போட்டியும் பொறாமையும் நிறைந்த படவுலகில் தான் எழுதிய அப்பாடலை கண்ணதாசன் பெயரில் வெளிவருவதற்குச் சம்மதித்து இருக்கிறார் கா.மு. ஷெரீப் என்பது ஜெயகாந்தன் தனது “ஒரு எழுத்தாளனின் திரையுலக அனுபவங்கள்” என்கிற நூலில் எழுதிய பிறகுதான் வெளி உலகுக்கே தெரிய வந்திருக்கிறது.
.
கலைஞரின் நண்பராயினும் தமிழரசுக் கட்சியில் தன் பயணத்தைத் தொடர்ந்தவர். மதத்தைத் தாண்டிய மனிதநேயத்தை முன்னிறுத்தியதற்கு முன்னுதாரணமாகச் சொல்லலாம் கவிஞர் கா.மு. ஷெரீப்பை.

ka.mu_.sheriff.jpg?w=624
.
“வாழ்ந்தாலும் ஏசும் தாழ்ந்தாலும் ஏசும் வையகம் இதுதானடா” என்ற கவிஞர் “பணம் பந்தியிலே குணம் குப்பையிலே” என சுட்டிக்காட்டவும் தவறவில்லை.
.
”ஏரிக்கரையின் மேலே போறவளே பெண்மயிலே” பாடல் தந்த உந்துதலே தன்னை ”ஜிங்கு ஜிங்கு ஜிமிக்கு போட்டு” என எழுத வைத்ததென்பது யுகபாரதியின் வாக்குமூலம்.
.
திரைத்தமிழை எதார்த்த தத்துவத் தளத்திற்கு இழுத்து வந்ததில் கவிஞர் கா.மு. ஷெரீப்பிற்கு பெரும் பங்குண்டு.
.
”கவிஞன் தாய் மாதிரி. பத்தியம் இருக்கணும். ரசிகனை அவன் பிள்ளைமாதிரி நேசிக்க வேண்டும். எதைக் கொடுக்கக்கூடாது, எதைக் கொடுக்க வேண்டும் என்னும் பொறுப்புடன் எழுத வேண்டும்.”
.
என்ற கா.மு. ஷெரீப்பை இத்துறையில் இருந்து சந்நியாசம் வாங்க வைத்ததே “நான் மாந்தோப்பில் நின்றிருந்தேன் / அவன் மாம்பழம் வேண்டுமென்றான்” என்கிற வாலியின் பாடல்தான்.
.
“என்னை சினிமாவை விட்டுத் துரத்திய பாடல் அது” என்று 1986 பத்திரிகை நேர்காணலில் குறிப்பிட்டிருக்கிறார் கவிஞர்.
.
இந்நூலில் பாடலாசிரியர்களது திரையுலக அனுபவங்களை மட்டுமல்லாது அவர்களது அரசியல் அனுபவங்களையும் சுவாரசியமாகச் சொல்லிச் செல்லும் யுகபாரதி கா.மு. ஷெரீப்பிற்கு ஏற்பட்ட ஒரு சோகத்தையும் பட்டவர்த்தனமாகச் சொல்லிவிடுகிறார்.
.
தன் வாழ்நாளின் பெரும்பகுதியை தமிழரசுக் கழகத்தின் வளர்ச்சிக்காகவே பாடுபட்ட அவருக்கு அதன் தலைவர் ம.பொ.சி. கொடுத்த ”அல்வா” பற்றிய சம்பவம்தான் அது.
.
ம.பொ.சி. யின் ஐம்பதாவது பொன்விழா ஆண்டிற்கு ஐம்பது பவுன் தங்கம் வழங்கத் திட்டம் போடுகிறார்கள்.

ஆனால் குறிப்பிட்ட நாளுக்குள் ஐம்பது பவுனுக்கான தொகை வசூலாவதில்லை. விழா ஏற்பாட்டாளர்கள் முடியைப் பிய்த்துக் கொண்டு நிற்கிறார்கள்.
.
இத்தனைக்கும் அப்போது மோடி கிடையாது.
.
அதைப் பார்த்த அக்கழகத்தின் பொதுச் செயலாளரான கா.மு. ஷெரீப் தன் மனைவி கழுத்தில் போட்டிருந்த நகைகளைக் கழற்றி அவரது தலைவர் ம.பொ.சி. கழுத்தில் போடுகிறார்.
.
அதில்தான் அத்தலைவருக்கான காரே வாங்கப்படுகிறது. ஆனாலும் ”தலைவர்” தான் எழுதிய “எனது போராட்டம்” என்கிற போராட்ட காதையில் கா.மு. ஷெரீப் அவர்களைப் பற்றி கூடுதலாக ஒரு வரிகூட குறிப்பிடவில்லை என்பதுதான் அதிலுள்ள சோகம் என்கிறார் தம்பி யுகபாரதி.
.
.
பராசக்தி படத்தில் ”கா… கா… கா…” பாடலில் வரும் ”எச்சிலை தனிலே எறியும் சோற்றுக்குப் பிச்சைக்காரர் சண்டை ரோட்டிலே / வலுத்தவன் இளைத்தவன் இனச்சண்டை பணச்சண்டை / எத்தனையோ இந்த நாட்டிலே “ வரிகளைக் கேட்கும்போதெல்லாம் ஐம்பதுகளிலேயே இப்படியொரு கருத்தாழம்மிக்க பாடலை யார் எழுதியிருப்பார்கள் என்று யோசித்ததுண்டு.
.
பிற்பாடுதான் தெரிந்தது அந்த வரிகளுக்குச் சொந்தக்காரர் உடுமலை நாராயணகவி என்பது.
.
திராவிட இயக்கக் கருத்துக்களை மக்கள் மத்தியில் வரவேற்புக்குரியதாக மாற்றியதில் பெரும் பங்கு இவரையே சாரும்.

udumalai-narayana-kavi.jpg?w=624
.
திண்ணைப் பள்ளிக்கூடத்தில் நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்த நாராயணகவிக்கு தமிழையும் கலையையும் கற்றுத் தந்தவர் முத்துசாமிக் கவிராயராம்.
.
பெரியாரின் மீதும் அவரது கொள்கைகள் மீதும் பற்றுக் கொண்டவர் நாராயணகவி.
.
சோவியத்து ரஷ்யாவைப் பார்த்துவிட்டு வந்த பெரியாருக்கு கலைத்துறையினர் பாராட்டுவிழா ஒன்றிற்கு ஏற்பாடு செய்ய… வரமாட்டேன் என்று மறுத்து விடுகிறார் பெரியார்.
.
ஆனால் அவசியம் நீங்கள் கலந்து கொள்ளவேண்டும் என நாராயணகவி வேண்டுகோள் விடுக்க…
.
”யாருக்காக இல்லாவிட்டாலும் நாராயணகவிக்காகக் கலந்து கொள்கிறேன்” என்று கூறி கலந்து கொண்டிருக்கிறார் பெரியார்.
.
திரைத்துறை மீது அவ்வளவு நல்ல எண்ணம் இருந்ததில்லை பெரியாருக்கு என்பது ஊரறிந்த ரகசியம்.
.
ஆனால் அவரையே யோசிக்க வைத்த பாடல் உண்டென்றால் அது ”டாக்டர் சாவித்திரி” படத்தில் இடம்பெற்ற “காசிக்குப் போனால் கருவுண்டாகுமென்ற காலம் மாறிப் போச்சு” என்கிற நாராயணகவியின் பாடல்தான்.
.
அவருக்கும் கலைவாணருக்கும் இருந்த உறவு….
.
அவருக்கும் பாபநாசம் சிவனுக்கும் இருந்த உறவு என இதில் விரிவாகச் சொல்லியிருக்கிறார் யுகபாரதி.
.
இதில் சுவாரசியமான ஒரு தகவல் உண்டென்றால் அது உடுமலையார் இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு கன்னத்தில் விட்ட அறைதான்.
.
தேவதாஸ் படத்தில் இடம்பெற்ற புகழ்பெற்ற பாடலான “உலகே மாயம், வாழ்வே மாயம்” பாடல் பதிவின் போது நடந்த சம்பவம்தான் அது.
.
நாராயணகவி எழுதிய அப்பாடலை பாடிய கண்டசாலா தமிழையும் தெலுங்கு போல உச்சரித்து “உல்கே மாயம், வால்வே மாயம்” எனப் பாட ”தமிழை ஏண்டா இப்படிக் கொலை செய்கிறீர்கள்?” என்று விழுந்திருக்கிறது அறை எம்.எஸ்.வி.க்கு.
.
இதைச் சொல்லிவிட்டு ஆனால் அதற்குப் பிறகு தம்பி யுகபாரதி சொல்வதுதான் உச்சகட்டமான சமாச்சாரம். அதை அவரது வரிகளிலேயே சொல்வதானால்….
.
“காலத்திற்கேற்ப பாடுவதாகச் சொல்லிக் கொண்டு, என்னுடைய பலபாடல்களை இந்தப் பாடகர்கள் கொன்று புதைத்திருக்கின்றனர்.
.
இசையமைப்பாளரை அறையக்கூடிய கவிராயர்கள் இப்போதில்லை என்பதல்ல, எழுதக்கூடிய கவிராயர்கள் பலருக்கே தமிழ் சரியாகத் தெரியாது என்பதுதான் இன்றைய நிலை.” என்கிற யுகபாரதியின் ஆதங்கத்துக்கு யார் ஆறுதல் சொல்வது?
.
.
என்னடா இவன் இன்னும் அறுபதுகளையே தாண்டவில்லையே எப்போது இவன் நம்ம காலத்துக்கு வந்து சேரப் போகிறான் என நீங்கள் சலித்துக் கொள்வது புரிகிறது.
.
என்ன செய்வது…. நேற்றைய செய்திதானே நாளைய வரலாறு…?
.
.
இசைஞானியை திரையுலகுக்கு அறிமுகப்படுத்திய பஞ்சு அருணாசலத்தின் பக்கம் வருவோம். 1962 இல் அவர் எழுதிய “மணமகளே மருமகளே வா வா” என எழுதிய அந்தப் பாடல்தான் தமிழக மக்கள் மத்தியில் அவரைப் பிரபலப்படுத்தியது.
.
இன்றைக்கும் திருமண வீடுகளில் ஒலிக்கும் பாடல்களில் அதுவும் ஒன்று. நமது நோஸ்டால்ஜியாவைக் கிளப்பிவிடும் பாடல்களில் ஏகப்பட்ட பாடல்கள் பஞ்சு அருணாசலத்தினுடையவைதான்.
.
panchu-arunachalam.jpg?w=300&h=187
.
”சித்திரச் செவ்வானம் சிரிக்கக் கண்டேன்” /

”தெய்வீக ராகம் தெவிட்டாத பாடல்” /

“கண்மணியே காதலென்பது” /

“அடிப்பெண்ணே பொன்னூஞ்சல் ஆடும் இளமை” /

“பருவமே புதிய பாடல் பாடு” /

“விழியிலே மலர்ந்தது” /

“ராஜா என்பார் மந்திரி என்பார்” /

“குயிலே கவிக்குயிலே” /

”தூரத்தில் நான் கண்ட உன்முகம்” என எண்ணற்ற அற்புதமான பாடல்களுக்குச் சொந்தக்காரர் அவர்.
.
அவர் எழுதியவற்றிலேயே எனக்கு மிகவும் பிடித்தது என்றால் 1965 இல் வெளிவந்த ”கலங்கரை விளக்கம்” படத்தில் வரும் “பொன்னெழில் பூத்தது புதுவானில் வெண்பனி தூவும் நிலவே நில்” என்கிற பாடல்தான்.
.
இளையராஜாவின் ஆளுமையைப் புகழ்வதற்கென்றே எண்ணற்ற பாடல்களை எழுதியவர் பஞ்சு அருணாசலம்.
.
ஆனால் அவர் வசனம் எழுதிய இயக்கிய படங்களில் சிலவற்றில் பெண்கள் பற்றிய பார்வை பிற்போக்கானவைதான் என்பதை யுகபாரதியும் ஒப்புக் கொள்கிறார்.
.
நான் ஏற்கெனவே குறிப்பிட்டபடி இங்கு நூல் குறித்து மட்டுமே எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன் என்பதால் விமர்சனங்களைத் தவிர்த்திருக்கிறேன்.
.
அதை வேறொரு தளத்தில்… வேறொரு தருணத்தில் பார்ப்போம்.
.
.
அடுத்ததாக யுகபாரதி சிலாகித்து எழுதியிருக்கிற ”அண்ணன்” எனக்கும் அண்ணன் தான்.
.
அதுதான் பாவலர் அறிவுமதி.
.
மலையாளத்தில் இருந்து தமிழுக்கு மொழிமாற்றம் செய்யப்பட்ட ”சிறைச்சாலை” படத்தின் பாடல்களைக் கேட்டு சொக்கிப் போயிருக்கிறேன் நான்.
.
அதிலும் அதில் வரும்…

ஆசை அகத்திணையா /

வார்த்தை கலித்தொகையா /

அன்பே நீ வா வா புது காதல் குறுந்தொகையா… என்கிற வரிகளாகட்டும்….

கனவு கொடுத்த நீயே என் உறக்கம் வாங்கலாமோ /
கவிதை விழிக்கும் நேரம் நீ உறங்கப் போகலாமோ?

என்கிற வரிகளாகட்டும்….
.

”நிலாவின் பிள்ளை இங்கு நீ தானோ?

பூஞ்சோலைப் பூக்களுக்குத் தாய்தானோ…?” என வளைய வரும் வரிகளாகட்டும் இன்றும் என் பொழுதுகளை இனிமையாக்கக் கூடியவை.

arivumathi.jpg?w=300&h=185
.
பலநாட்கள் யார் எழுதியது என்பதை அறிந்து கொள்ளாமலேயே “முத்தமிழே முத்தமிழே முத்தச்சந்தம் ஒன்று கேட்பதென்ன” பாடலை ரசித்திருக்கிறேன்.
.
பாலு மகேந்திரா இயக்கி இளையராஜா இசையில் வெளிவந்த ”ராமன் அப்துல்லா” படப்பாடல் அது.
.
அதில் வரும் ”நாணக்குடை நீ பிடித்தும் வேர்வரைக்கும் சாரல் மழை….”
.
“உந்தன் பேரைச் சொல்லித்தான் காமன் என்னைச் சந்தித்தான்… “ என்கிற அறிவுமதியின் வரிகள் கிறக்கம் வரவழைப்பவை.
.
”சேது”வில் வரும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை”யாகட்டும்…
.
”மாலை என் வேதனை கூட்டுதடி…”யாகட்டும் எல்லாம் அறிவுமதியின் சாதனையைக் கூட்டும் பாடல்கள்தான்.
.
அவரது பாடல்களை விடவும் நாம் கொண்டாட வேண்டிய குணாம்சம் ஒன்று இருக்கிறதென்றால் அது அநீதிகளைக் கண்டு கொதித்தெழும் அவரது அறச்சீற்றம்தான்.
.
எழுத்தாளர் சுஜாதாவின் புறநானூற்று உரைக்கான மறுப்பாகட்டும்….
.
மணிரத்னத்தின் ”இருவர்” படத்துக்கான எதிர்ப்பாகட்டும்….
.
எல்லாமே அவரது அறச்சீற்றத்தின் அடையாளங்கள்தான்.

”மதுரை வீரன் தானே”….

“அழகூரில் பூத்தவளே”…

“தோம் தோம் தித்தித்தோம் தொலைவில் இருந்தும் சந்தித்தோம்”…

”பொய் சொல்லக்கூடாது காதலி”… என நீண்டுகொண்டே போகும் பாவலர் அறிவுமதியின் பட்டியல்.
.
.
அரசவைக் கவிஞர் பதவியைப் பெற்ற கடைசிக் கவிஞர் முத்துலிங்கம் எழுதிய

மாஞ்சோலைக் கிளிதானோ /

muthulingam.jpg?w=300&h=225

பொன்மானத் தேடி /

இதயம் போகுதே /

சங்கீதமேகம் என பலபாடல்களைக் குறிப்பிடுகிறார் “நேற்றைய காற்றில்.”
.
.
.
இந்த நூலைப் படிக்கும் வரையில்கூட “மனுசனை மனுசன் சாப்பிடறாண்டா தம்பிப் பயலே” பாடலை எழுதியவர் நிச்சயம் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரமாகத்தான் இருக்க வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்தேன் நான்.
.
ஆனால் 1956 இல் வெளிவந்த ”தாய்க்குப் பின் தாரம்” படத்திற்காக இப்பாடலை எழுதியவர் கவிஞர் மருதகாசி.
.
அதைப் போலவே “வசந்த முல்லை போலே வந்து அசைந்து ஆடும் பெண்புறாவே” பாடலை எல்லோரும்கண்ணதாசன் தான் எழுதியிருப்பார் என்று நினைத்துக் கொண்டிருந்தால் அதை எழுதியவரும் மருதகாசிதான் என்கிற செய்தியை உரக்கச் சொல்கிறார் யுகபாரதி.

maruthakasi.jpg?w=300&h=170
.
மருதகாசி அவர்களின் ”சத்தியமே லட்சியமாய்க் கொள்ளடா….”

”காவியமா நெஞ்சின் ஓவியமா…”

”மணப்பாற மாடுகட்டி….”

”சமரசம் உலாவும் இடமே…” போன்ற அற்புதமான பாடல்கள் தோன்றிய விதம்…

அதன் பின்னே ஒளிந்திருக்கும் சுவாரசியமான சம்பவங்கள் என நம்மை அழைத்துக் கொண்டு போகிறது ”நேற்றைய காற்று.”
.
.

ஆலங்குடி சோமுவின்…

”உள்ளத்தின் கதவுகள் கண்களடா”

alangudi-somu.jpg?w=202&h=300

“பொன்மகள் வந்தாள்”

”மஞ்சக்குளிச்சி அள்ளி முடிச்சு” போன்ற பாடல்கள் குறித்தும்….
.
.

கு.மா. பாலசுப்ரமணியத்தின்…

”அமுதை பொழியும் நிலவே”
.
”சிங்கார வேலனே தேவா”
.
”குங்குமப்பூவே கொஞ்சும் புறாவே”
.
”இன்பம் பொங்கும் வெண்ணிலா” போன்ற நினைவை விட்டு அகலாத பாடல்கள் குறித்தும்….
விலாவாரியாகச் சொல்கிறது தம்பி யுகபாரதியின் கைவண்ணத்தில் வெளிவந்திருக்கும் இந்தப் படைப்பு.
.
.
இங்கு சொன்னதை விடவும் நான் சொல்லாமல் விட்டதே அதிகம்.
.
உண்மையில் இந்தநூல் ஒரு முனைவர் பட்டம் பெறுவதற்கான சகல தகுதியும் கொண்ட ஆய்வேடு என்றுகூட சொல்லலாம்.
.
அவ்வளவு சுவாரசியம்மிக்க தகவல்கள்.
.
தன் சமகாலத்துக் கவிஞர்கள் குறித்தும் இதில் விடுபட்ட முந்தைய தலைமுறைக் கவிஞர்கள் குறித்தும் அடுத்தடுத்து வரும் தனது தொகுப்பில் சேர்க்க இருக்கிறார் யுகபாரதி. அதன் பொருட்டு அவற்றை இத்தொகுப்பில் தவிர்த்திருக்கிறார்.
.
வரிக்கு வரி…. பக்கத்திற்குப் பக்கம்… சுவாரசியமூட்டும் இந்நூல் எனது பல பொழுதுகளை இனிமையாக்கியது.
.
எனது காலக்குதிரையை பின்னோக்கி பயணிக்க வைத்ததில் தம்பி யுகபாரதியின் இப்புத்தகத்திற்குப் பெரும்பங்கிருக்கிறது.
.
எனவே….. யான் பெற்றதை நீங்களும் பெற…
.
“நேற்றைய காற்றை”…

https://pamaran.wordpress.com/2019/12/04/%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b8%e0%af%8d%e0%ae%b5%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5/

  • கருத்துக்கள உறவுகள்

பல பாடல்களை அட இந்தப் பாடலை இவரா எழுதினார் என்று திகைக்க வைக்கிறது இந்தக் கட்டுரை .........! 🙂

நன்றி ஏராளன் .......!

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.