Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பொதுரசனைச் செவ்வியல் உருவாகும் தருணம்

jeyamohanNovember 7, 2025

muru.jpeg

அண்மையில் ஒரு துயரமான மனநிலையில் புதுச்சேரியில் இருந்து கோவைக்கு காரில் வந்து கொண்டிருந்தபோது எண்ணங்களை மாற்றும் பொருட்டு இசையை பற்றி பேசிக் கொண்டிருந்தோம். வெவ்வேறு கவிஞர்கள் முருகனைப் பற்றி எழுதிய பாடல்களைப் பற்றி பேச்சு சென்றது. பூவை செங்குட்டுவன் எப்படி ஒரு பக்தி கவிஞர் ஆனார் என்பதை அவர் ஒரு உரையாடலில் சொன்னதை நான் நினைவு கூர்ந்தேன். 2006ல் அவர் இளையராஜாவை சந்திக்க வரும்போது ஒருமுறை சந்தித்திருக்கிறேன். இளையராஜா அவரை ஒரு முனிவரை எதிர் வருவது போல வணங்கி எதிர்கொள்வதை பார்த்தேன். அதன் பிறகு தான் அவர் எவர் என்று விசாரித்து தெரிந்து கொண்டேன்.

தமிழ் விக்கியில் அவரைப் பற்றிய ஒரு பதிவு போடும்போது மீண்டும் அவருடைய வாழ்க்கை வரலாற்றை தொகுத்துக் கொண்டேன். (பூவை செங்குட்டுவன் தமிழ்விக்கி). அவர் நாத்திகராக இளமையில் தன்  சிந்தனையை தொடங்கியவர். திராவிட இயக்க நாடக ஆசிரியராக தான் அவருடைய இலக்கியப் பணி உருவாகியது. தொடர்ந்து தமிழகம் முழுக்க பயணம் செய்து திராவிட இயக்கத்தின் கருத்துக்களை பிரச்சாரம் செய்து வரும் போது பொருளியல் தேவைக்காக அவ்வப்போது வானொலிக்கும் எழுதி வந்தார். வசதியான அம்பலக்காரர் குடும்பத்தைச் சேர்ந்தவர். திரைப்படப் பாடலாசிரியராகவும் நாடக ஆசிரியராகவும் ஆகவேண்டும் என்னும் கனவுடன் கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து குடும்பத்துடன் போராடிக்கொண்டிருந்தார்.

அன்று குன்றக்குடி வைத்தியநாதன் திருச்சி வானொலிக்காக பணியாற்றிக் கொண்டிருந்தார். தனியாக இசைத்தட்டுகளையும் வெளியிட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு திரைப்படக்கனவு இருந்தது, அதற்கான முயற்சிகள் கைகூடாமலிருந்தது. குன்னக்குடி வைத்தியநாதனுடன் பூவை செங்குட்டுவன் நட்புகொண்டார். திருச்சி வானொலிக்காக குன்னக்குடி வைத்தியநாதன் இசையில் பல நாடகங்களையும் ஓரிரு பாடல்களையும் பூவை செங்குட்டுவன் எழுதினார். ஒருமுறை மிகுந்த பணக்கஷ்டத்துடன் இருந்தபோது நாடகம் எழுத வாய்ப்பு தேடி குன்னக்குடி வைத்தியநாதனை அணுகினார்.

குன்னக்குடி வைத்தியநாதன் அப்போது நாடகத்திற்கான வாய்ப்பில்லை, ஒரு பாடல் எழுத வாய்ப்புள்ளது, அதை எழுத முடியுமா என்று கேட்டார்.  அது ஒரு முருக பக்தி பாடல். பூவை செங்குட்டுவன் அதற்கு தன்னால் முடியாது என்றும், எந்த வகையிலும் பக்தியுடனும் தனக்கு தொடர்பில்லை என்றும் சொன்னார். அதற்கு குன்னக்குடி ‘உங்களுக்கு தமிழ்தெரியும்தானே? தமிழ் தெரிந்த எவராலும் பக்திப்பாடல் எழுதமுடியும். தமிழையும் பக்தியையும் பிரிக்கமுடியாது’ என்று சொன்னார்.

puuvai-seng2.jpg

ஆனால் தன்னால் எழுத முடியும் என்ற நம்பிக்கை குன்னக்குடி வைத்தியநாதன் எத்தனை சொல்லியும் பூவை செங்குட்டுவனுக்கு வரவில்லை. ‘அப்படி என்றால் பணம் இல்லை, கிளம்புங்கள்’ என்று குன்னக்குடி சொன்னபோது பணத்தின் பொருட்டு அப்பாடலை எழுதலாம் என்று முடிவு எடுத்து  ஓர் அறையில் அமர்ந்து எழுத முயன்றார். தொடக்கம் அமையாமல் வெவ்வேறு வகையில் சொற்களுடன் முட்டி மோதிக்கொண்டிருந்தார். அன்றெல்லாம் இசைக்காக பாடல் எழுதும் பழக்கம் கிடையாது. பாடல் எழுதிய பிறகு பாடலில் உள்ளுறைந்துள்ள இசையை அறிந்து, அதற்கான ராகத்தை கண்டுபிடித்து, அதற்கு இசையமைத்து அதன் பிறகு பதிவு செய்வதுதான் பழக்கம். ஆகவே இசையும் அவரிடத்தில் தோன்ற வேண்டி இருந்தது.

பாடல் இசையுடன் நிகழ வேண்டியிருந்தது. அது எளிமையாக அனைவருக்கும் சென்றடையும் பாடலாக இருக்க வேண்டும். அதே சமயம் முருகனின் பெருமையை சொல்லும் பாடலாகவும் அமைய வேண்டும். திடீரென்று தோன்றி ஒரு பாடலை முழுமையாக எழுதி முடித்தார்.ஒரு வார்த்தைக்கு பின் இன்னொரு வார்த்தையை பற்றி யோசிக்கவில்லை. ஒரு வரி இன்னொரு வரியை இயல்பாகவே கொண்டு வந்தது. அது  அவருக்கும் முருகனுக்குமான ஒரு மிகக் குறுகிய உரையாடல்தான். ஒரு பத்தியை சரசரவென்று கிறுக்குவது போலத்தான் அதை எழுதினார்.

இளமையில் அவருடைய கிராமத்தில் முருகன் கோயிலின் பாறையை நோக்கி அவர்கள் கூச்சல் போட்டு அதிலிருந்து ஒரு எதிரொலி எழும் நினைவுதான் அப்பாடலுக்கான தூண்டுதல். அது சூலமங்கலம் சகோதரிகள் பாட ஒலிப்பதிவானது. அந்தப் பாடல் ஒலிபரப்பான நாள் முதல் தமிழகத்தின் மிக புகழ்பெற்ற முருகன் பாடல் அதுவே. முருகன் பாடல்களிலேயே இன்று வரைக்கும் தமிழகத்தில் மிக அதிகமாக ஒலிப்பதும் அதுதான். எழுபது ஆண்டுகளாக நான்கு தலைமுறையினரால் பாடப்படுவது. அனேகமாக அதை எவருமே கேட்டிருக்காமலிருக்க வாய்ப்பில்லை.

‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும். திருச்செந்தூரிலே வேலாடும் திருப்புகழ் பாடியே மயிலாடும்’. அந்தப் பாடலை ஒரு விழாவில் சூரமங்கலம் சகோதரிகள் பாடக் கேட்டபோது அந்த விழாவிற்கு வந்திருந்த கவிஞர் கண்ணதாசன் இயக்குனர் கே.சங்கரிடம் “உங்கள் கந்தன் கருணை என்ற பாடலில் படத்திற்கு முருகனைப் பற்றி வள்ளியும் தெய்வானையும் பாடும் ஒரு பாடலைக் கேட்டு இருந்தீர்கள். அதற்கு இதைவிடச் சிறந்த ஒரு பாடலை என்னால் எழுத முடியாது. இதெல்லாம் தெய்வ அனுக்கிரகத்தில் இயல்பாக வரும் பாடல். இந்த இத்தனை எளிமையும் இத்தனை ஒழுக்கும் இத்தனை ஆழமும் ஒரே சமயம் அமைவது என்பது தன்னிச்சையாக நிகழ்வது. இது முருகனே எழுதச் சொன்ன பாடல். இதை நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று சொன்னார்.

சங்கர் சூலமங்கல சகோதரிகளை அணுகி அந்த பாடலுக்கான உரிமை எங்குள்ளது என்று கேட்டார். சூலமங்கலம் சகோதரிகள் பக்கத்திலேயே நின்று கொண்டிருந்த பூவை செங்குட்டுவனை அறிமுகம் செய்து “இவர் தான் அதை எழுதினார்” என்றனர். செங்குட்டுவன் அப்போது ஒல்லியாக இளைஞனாக இருந்தார். பாடலின் உரிமையை கோரியபோது அவர் கண்ணதாசனை சென்று வணங்கி ஆசி பெற்றார். கண்ணதாசன் “வாழ்க்கையில் முருகன் அருளால் எல்லாமே வெற்றியாகும்” என்று வாழ்த்தினார். குன்னக்குடி வைத்தியநாதன் இசையமைத்த அதே வடிவில் அந்த பாடல் மறுநாளே ஒலிப்பதிவாகியது.

கே.வி மகாதேவன் அப்படத்திற்கு இசையமைத்தார். கே.வி.மகாதேவன் அதை மறு அமைப்பு செய்தபோது பின்னணிஇசை மட்டுமே சற்று மாறுபட்டது சூலமங்கலம் ராஜலட்சுமியும் பி.சுசிலாவும் இணைந்து அந்த பாடலை பாடினார்கள். கந்தன் கருணை படத்தில் அந்த பாடலும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அப்படத்துக்காக மகாதேவன் தேசிய விருது பெற்றார். விருதுக்கான பாராட்டுவிழாவில் அவ்விருது குன்னக்குடி வைத்தியநாதனுக்கும் உரியது என மகாதேவன் அறிவித்தார். குன்னக்குடி வைத்தியநாதனும் பின்னர் இசையமைப்பாளராக அறிமுகமாக அந்தப்பாடலே வழியாகியது.

இரவு முழுக்க அந்த பாடலை தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்தேன். அதன் பிறகு தொடர்ந்து இரண்டு இரவுகளில் அந்த பாடலை கேட்டேன்.அந்த பாடல் இளமையில் என்னை மிக கவர்ந்த பாடலாக இருந்தது. அதை நான் பாடி அலைந்ததை நினைவு கூர்ந்தேன். அந்த பாடலின் வெற்றிக்கு என்ன காரணம் என்று இன்றைய என்னுடைய பார்வையைக்கொண்டு யோசித்தேன்.

அதில் உள்ள கச்சிதமான தாளம் முதன்மைக்காரணம். பக்திப் பாடல்களில் நெகிழ்வு அமையும் போது நிறைய தருணங்களில் தாளம் அமைவதில்லை. நல்ல பாடல் நினைவில் நிற்பதற்கு கச்சிதமான தாளம் ஒரு முக்கியமான காரணமாக அமைகிறது. இந்தப் பாடல் ஒரு ஒரு நடனப் பாடல் அளவுக்கு தாளத்துடன் இருக்கிறது. தாளம் சரியாக வந்த பாடலில் அந்த வேகம் அமையும்போது நெகிழ்வு இல்லாமலாகிவிடும். இந்த பாடலில் எல்லா தருணங்களிலும் பக்தியின் நெகிழ்வும் நிகழ்கிகறது. சூலமங்கலம் சகோதரிகளின் பாடலிலேயே ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ போன்ற வரிகளில் ஆழ்ந்த நெகிழ்வு கண்ணீர்மல்க வைக்கும் அளவுக்கு வெளிப்படுகிறது. அதை அப்படியே திரைப்படப் பாடலிலும் கொண்டுவர முடிந்திருக்கிறது. பக்திப் பாடல்களில் வழக்கமாக நிகழும் செயற்கையான நெகிழ்வாக இல்லாமல் மிக  இயல்பான உருக்கம் இதில் அமைந்துள்ளது.

Kunnakudi_Vaidyanathan.jpg

இதன் வரிகள் எந்த சிறு குழந்தைகள்கூட நினைவில் வைக்கக் கூடிய அளவு எளிமையானவை. குழந்தைக்கு புரியுமளவுக்கு நேரடியானவை. ஆனால் ‘திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் முருகா திருத்தணி மலை மீது எதிரொலிக்கும்’ என்ற வரி மொத்த தமிழகத்தின் ஒரு நிலக்காட்சியை அளிக்கிறது. முதல் வரியிலேயே தமிழகநிலம் முழுக்க ஆட்சி செய்யும் முருகனின் சித்திரம் வந்துவிடுகிறது. ‘சென்னையிலும் கந்த கோட்டம் உண்டு ‘என்ற வரி வழியாக நவீன காலகட்டத்திற்கு வருகிறது. அதன் பிறகு ‘உனக்கான மனக்கோயில் கொஞ்சம் இல்லை’ என்ற வரி வழியாக இத்தனை ஆயிரம் ஆலயங்களுக்கு மேல் கோடான கோடி இதய ஆலயங்களிலும் நீ குடியிருக்கிறாய் என்று முடிகிறது.

அத்துடன் ஒன்றை இசையறிந்தவர்கள் சொல்வார்கள். தமிழ்ச்செவிகளுக்கு மிகப்பழக்கமான ‘நாதஸ்வரப் பிடிகள்’ இப்பாடலில் உள்ளன. திருப்பரங்குன்றத்தில் நீ சிரித்தால் – முருகா என்ற வரியிலுள்ள முருகா என்னும் சொல்லில் உள்ள விசையை உதாரணமாகக் காட்டலாம். திருப்பரங்குன்றத்தில் என்ற சொல் நான்கு அலகுகளாக சரியான தாளச்சொல் போலவே அமைந்துள்ளதும் காரணம். பல்லாயிரம் முறை நாதஸ்வர நிகழ்வுகள் வழியாக இப்பாடல் தமிழுள்ளத்தில் நிலைகொண்டது. இன்றும் இந்தப்பாடலை பெரும்பாலான நிகழ்வுகளில் வாசிக்கிறார்கள். ‘அங்கு உருவாகும் அன்புக்கோ பஞ்சமில்லை’யிலுள்ள அந்த லை சுழலும் விதம் நாதஸ்வரத்துக்கே உரியது.

இந்த பாடல் எளிமையில் அமைந்த இயல்பான ஆழத்தால் தமிழ்மொழியில் எழுதப்பட்ட தலைசிறந்த பாடல்களில் ஒன்று என்று சொல்லலாம். இந்த பாடல் பூவை செங்குட்டுவனை ஒரு பக்திக் கவிஞராக நிலை நிறுத்தியது. அவர் விரும்பாமலே அவர் முருகனைப் பற்றிய பாடல் எழுத வேண்டிய நிலைமைக்கு ஆளானார். மிகச் சில ஆண்டுகளில் மிகத் தீவிரமான முருக பக்தராக மாறினார். நான் அவரை சந்தித்தபோது என்னிடம் அவர் சொன்னார் . ‘நான் முருகனை நோக்கி செல்லவில்லை. அவன் வந்து என்னை தூக்கிக்கொண்டு சென்றான். நான் வீட்டிலிருந்து கிளம்பி அருகிருக்கும் டீக்கடை வரைக்கும் நடந்து சென்று விட்டு திரும்பி வந்தால் என்னுடைய முருக பக்திப் பாடல் ஏதேனும் ஒன்று என் காதில் விழும்’

‘பாப்புலர் கிளாசிக்’ என ஒருவகை எப்போதும் இலக்கியத்திலும் கலையிலும் உண்டு. அவை ஒரு தனிக்கலைஞரின் அகவெளிப்பாட்டால், கலைத்திறமையால் அந்த நிலையை அடைவன அல்ல. மக்களின் கூட்டான உள்ளமும் ஒரு குறிப்பிட்ட கலைவெளிப்பாடும் ஒரு வரலாற்றுத்தருணத்தில் இயல்பாக ஒருங்கிணைவதன் வழியாக நிகழ்பவை. அவை ஒருவகையான தற்செயல்கள்தான். அவற்றை திட்டமிட்டு திரும்ப நிகழ்த்தவே முடியாது. சிலசமயம் மிகமிக எளிய வரிகள், மிக எளிய மெட்டு, மிக எளிய கதை அந்த பெரும் அலையை உருவாக்கிவிடும். அது நிகழ்ந்தபின் அது ஏன் நிகழ்ந்தது என ஆய்வதே நாம் செய்யக்கூடுவது.

நாலாயிரத்துக்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை செங்குட்டுவன் எழுதியிருக்கிறார். பெரும்பாலான பாடல்கள் புகழ்பெற்றவை. இன்றும் அவருடைய பாடல்கள் தமிழகமெங்கும் ஒலித்துக் கொண்டு இருக்கின்றன. நான் வீட்டில் அமர்ந்து ஒருமுறை அந்தப் பாடலை கேட்ட பின்னர் யோசித்தேன். கிளம்பி அருகில் இருக்கும் டீக்கடைக்குள் சென்று ஒரு டீ குடித்துவிட்டு வருவதற்குள் அவரது பாடல்களில் ஏதேனும் ஒன்று கேட்கிறதா என்று பார்க்கலாம் என்று. டீ குடித்துவிட்டு வரும்போது தொலைவில் ஓர் ஆலயத்தில் செங்குட்டுவனின் பாடல் ஒலித்துக் கொண்டிருந்தது.  ‘திருப்புகழை பாடப்பாட வாய் மணக்கும். எதிர்ப்புகளை முருகா உன் வேல் தடுக்கும்’

பூவை செங்குட்டுவன் தமிழ் விக்கி

https://www.jeyamohan.in/223391/

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.