Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

அணு ஆயுதப் பரிசோதனை!

ட்ரம்ப் - புட்டின், இரு துருவங்கள்

--- ------ -------

*ஜேர்மனிய நாஜி ஆட்சியை போன்று அமெரிக்காவை மாற்ற முற்படுகிறாரா ட்ரம்ப்?

*ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம்.

*அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் உடன்படுவதாக இல்லை.

-------- -------------

மூன்றாம் உலகப் போருக்கான ஏற்பாட்டை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறாரா என்ற கேள்விகள் தற்போது சர்வதேச அரங்கில் பேசப்படுகின்றன. அமெரிக்க உலக அதிகாரம் என்பதைவிடவும் ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக் காலத்தில் அமெரிக்க ஏகாதிபத்திய சர்வாதிகாரம் என்ற தொனியில் சில சர்வதேச ஊடகங்கள் சில வமர்சனங்களை முன்வைத்துள்ளன.

சீனா - ரசியா என்ற போட்டியில் ட்ரம்ப் புவிசார் அரசியல் செயற்பாட்டில் தேவையற்ற கருத்துக்களை விதைப்பதன் ஊடாக, ரசியா போன்ற நாடுகளை சீண்டி விடுகிறார் என்று சர்வதேச ஊடகங்கள் குற்றம் சுமத்தியுள்ளன.

சீன, ரசிய நாடுகள் மீது அவசியமற்ற முறையில், அதிகளவு கோபம் ட்ரம்பிடம் இருப்பதையே மிகச் சமீபகாலமாக அவதானிக்க முடிகிறது.

ஏனைய நாடுகளுடன் "சமமான அடிப்படையில்" (on an equal basis) அணு ஆயுத சோதனைகளை மீண்டும் ஆரம்பித்தால், உரிய திட்டங்களை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க பென்டகனுக்கு அறிவுறுத்தியமை பல கேள்விகளை எழுப்பியுள்ளன.

இதனையடுத்து, அணு ஆயுத பரிசோதனைக்கு தயாராக இருக்குமாறு ரசிய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மொனால்ட் ட்ரம் - புட்டின் ஆகியோரின் இத் தகவலை சிபிஎஸ் (cbsnews) செய்தித் தளம் வெளியிட்டுள்ளது.

அதேநேரம், அமெரிக்கா செய்தி நிறுவனமான சிபிசியின் 60 மினிட்ஸ் (60 Minutes) இதழுக்கு டொனால்ட் ட்ரம்ப் வழங்கிய நேர்காணலில், அணு ஆயுதங்களை பரிசோதனை செய்யும் ஒரு சில நாடுகளில் ரசியாவும் ஒன்று என ட்ம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

அதேநேரம், சென்ற புதன்கிழமை ரசிய பாதுகாப்பு சபையுடன் ஒரு கூட்டத்தில், அணு ஆயுத சோதனைகளைத் தடைசெய்யும் சர்வதேச விரிவான அணுசக்தி-சோதனை-தடை ஒப்பந்தத்தை (Comprehensive Nuclear-Test-Ban Treaty - CTBT) கடைப்பிடித்து வருவதாக ரசிய ஜனாதிபதி விளாடிமின் புடின் கூறியுள்ளார்.

ஆனால், அமெரிக்கா அல்லது ஒப்பந்தத்தில் உள்ள வேறு எந்த ஒரு நாடும் அத்தகைய சோதனைகளை நடத்தினால், ரசியா பரஸ்பர நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் என்றும் புட்டின் கூறியதாக சிபிஎஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அதேவேளை, ரசியாவின் அணு ஆயுத பரிசோதனை, சீனாவின் சோதனை, ஆனால் சீனா அதைப் பற்றிப் பேசுவதில்லை என்று. ட்ரம்ப் சிபிஎஸ் செய்தி நிருபர் நோரா ஓ டோனலிடம் (Norah O'Donnell) குற்றம் சுமத்தியுள்ளார்.

ரசியா அணு ஆயுத பரிசோனை செய்யவுள்ளது. வட கொரியா சோதனை செய்து வருகிறது. பாகிஸ்தான் சோதனை செய்து வருகிறது. ஆகவே, அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை செய்யும் என்று டொனால்ட் ட்ரம் எச்சரித்துமுள்ளார்.

ஆனால் ட்ரம்ப் கூறுவது போன்று ரசியாவோ, வடகொரியாவோ அணு ஆயுத பரிசோதனைகளை செய்யவில்லை. நிறுத்தியுள்ளன. ஆனால் ட்ரம்ப் எச்சரிக்கை விடுவதால், இந்த நாடுகள் அணு ஆயுத பரிசோதனைக்கு முயற்சிக்கக் கூடும் என்று ரசியமற்றேர்ஸ் (russiamatters) என்ற ஆங்கில செய்தி ஆய்வுத் தளம் எதிர்வு கூறியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின் போது ஜேர்மன் இராணுவத் தலைமையால் ஆரம்பிக்கப்பட்டு, நாஜி ஆட்சியின் கீழ் முழு சமூகத்தையும் போருக்குத் தயார்படுத்தியது.

“ஒட்டுமொத்தப் போர்” என்ற கோட்பாட்டின் கீழ், அன்று நாஜி ஜேர்மனியின் தலைவர்கள் கிழக்கு ஐரோப்பாவில் ஒரு அழித்தொழிப்பு போரை நடத்தியது போலவே, ஜேர்மன் மக்கள் மீதும் பேரழிவை ஏற்படுத்தினர்

இன்று, அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சார்பாகப் பேசும் டொனால்ட் ட்ரம்ப், அமெரிக்காவில் சர்வாதிகாரத்தை நிறுவுவதற்கு மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் இராணுவ வன்முறைக்கும் நாஜி ஆட்சியை ஒரு முன்மாதிரியாகக் கருதுகிறார் என்ற முடிவுக்கு வர முடிகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதம் டொனால்ட் ட்ரம்ப், உடனடியாக ஒரு அதிநவீன இரும்புத் திரை போன்ற ஏவுகணை பாதுகாப்பு கேடயத்தை அமெரிக்கா நிர்மாணிக்கத் தொடங்கும் என்று அறிவித்தார். சவாலும் விடுத்திருந்தார்.

இதன் காரண - காரியமாக அமெரிக்காவின் அணு ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான கட்டமைப்பின் ஒரு பகுதியாக, அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அனைத்துக் கட்டுப்பாடுகளையும் நீக்க ட்ரம்ப் கடுமையாக முயற்சிக்கிறார்.

2019 ஆம் ஆண்டும் தனது முதலாவது பதவிக் காலத்தில் இவ்வாறான அணு ஆயுதப் பிரிசோதனை ஒன்றுக்கு ட்ரம்ப் முயற்சித்திருந்தார் என்பதை மறுப்பதற்கில்லை. 2018 ஆம் ஆண்டு ஒக்ரோபரில், அமெரிக்கா அணு ஆயுத பரிசோதனை ஒப்பந்தத்தில் இருந்து விலகும் என்று எச்சரித்தும் இருந்தார்.

அணு ஆயுதப் பரிசோதனை என்பது, வளிமண்டலத்தில் கொடிய கதிர்வீச்சைப் பரப்பும், நிலத்தடி நீரையும் மாசுபடுத்தும்.இதன் காரணமாகவே அணு ஆயுதப் பரிசோதனை தடுப்பு ஒப்பந்தம் கூட அன்று தயாரிக்கப்பட்டது.

குறிப்பாக 1963 இல், அமெரிக்காவும் சோவியத் ஒன்றியமும் கியூபா ஏவுகணை நெருக்கடியில், அணு ஆயுதப் போரின் விளிம்பிற்கு வந்த ஒரு வருடம் கழித்து, கென்னடி நிர்வாகம் அணு ஆயுத சோதனைகளை தடை செய்யும் ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தையை நடத்தியது.

இது நில கீழ் சோதனைகளைத் தவிர அனைத்து அணு ஆயுத சோதனைகளையும் தடை செய்தது. 1992 ஆம் ஆண்டில், சோவியத் யூனியன் பிரிந்து ஒவ்வொரு மாநிலங்களும் தனிநாடாகியதைத் தொடர்ந்து, அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் எச்.டபிள்யூ. புஷ், அணு ஆயுத சோதனைக்கு ஒருதலைப்பட்சமான தடையை அறிவித்தார்.

இந்த சோதனை தடை செய்யப்படுவதற்கு முந்தைய தசாப்தங்களில், இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட அணுக்குண்டு வெடிப்புகள் நடத்தப்பட்டன. அவற்றில் பாதிக்கும் மேற்பட்டவை அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டன. இந்த சோதனைகள் அமெரிக்காவின் மேற்கு மற்றும் தெற்கு பசுபிக் முழுவதிலும் உள்ள சமூகங்களை நோய்வாய்ப்படுத்தி, முழுப் பகுதிகளையும் வாழத் தகுதியற்ற இடமாக மாற்றியதை இலகுவாக மறந்துவிட முடியாது.

ஆகவே, இந்த அழிவுகளின் பின்னணி தெரிந்த ஒரு நிலையில் தானா டொனால்ட் ட்ரம், மீண்டும் அணு ஆயுத பரிசோதனை என்ற ஆபத்தான கதையை மீண்டும் கிளறுகிறார் என்ற கேள்வி எழுகிறது.

அமெரிக்கா-சீனா வர்த்தகப் போர் குறித்து தென் கொரியாவில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கை கடந்த ஒக்ரோபர் மாதம் சந்தித்த போது, ட்ரம்ப் தனது அணு ஆயுத சோதனை பற்றிய அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். இதனை சீன ஊடகங்கள் கண்டித்திருந்தன.

உலக அரங்கில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கொள்ளையடிக்கும் நலன்களைப் பாதுகாக்கும் ஒரு வழிமுறையாக, அமெரிக்க அணு ஆயுதக் களஞ்சியத்தைப் பயன்படுத்திக் கொண்டிருக்கும் ட்ரம்ப், அணு ஆயுதப் போர் மூலம் அழித்தொழிக்கும் அச்சுறுத்தலை உலகில் உருவாக்கி வருகிறார்.

ரசியா மற்றும் சீனா இணைந்து செலவிடுவதை விட, உலகின் மிகப்பெரிய அணு ஆயுத திட்டத்தைக் கொண்டுள்ள அமெரிக்கா, இரண்டு மடங்குக்கு அதிகமாக அணு ஆயுதங்களுக்காக செலவிடுகிறது.

இரண்டாம் உலகப் போரின் முடிவில் சோவியத் ஒன்றியத்தை அச்சுறுத்துவதற்காக, ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் உள்ள பாதுகாப்பற்ற மக்களை அழித்த ஒரே நாடு அமெரிக்கா மட்டுமே ஆகும்.

ட்ரம்பின் அறிவிப்பைப் பற்றி செய்தி வெளியிடும் போது, அமெரிக்க பிரதான ஊடகங்கள் (Mainstream Media) எந்தவொரு வரலாற்று சூழலையும் அல்லது அதற்கு முந்தைய நிகழ்வுகளையும் முன்வைக்கத் தவறுகின்றன..

ஆனால், திடீரென நிகழ்ந்த ஒரு செயலாக இருக்காமல், அமெரிக்க இராணுவ நடவடிக்கையை திட்டமிடுபவர்கள், குறைந்தது 2020 முதல் அணு ஆயுத சோதனைகளை மீண்டும் தொடங்குவது குறித்து தீவிரமாக விவாதித்து வருகின்றனர்.

வேறு எந்த ஒரு நாட்டையும் விட அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் உள்ளன. இதனை எவரும் மறுக்க முடியாது.

ஒரு நிலையற்ற புதிய அணு ஆயுத யுகத்திற்கான நவீன ஆயுதக் களஞ்சியத்தை உருவாக்குவதன் மூலம், அமெரிக்காவை அணு ஆயுத சக்தியாக மாற்றுவதற்கான ரகசியத் திட்டம் குறித்து நியூ யோர்க் ட்ரைம்ஸ் ஒரு சிறப்புக் கட்டுரையை கடந்த ஒரு வருடத்துக்கு முன்னர் வெளியிட்டது.

நீர்மூழ்கிக் கப்பல்கள் தயாரிக்கும் இடத்திலோ அல்லது ஏவுகணை குழிகள் தோண்டப்படும் இடத்திலோ நீங்கள் வசிக்கவில்லை என்றால், அது நடக்கிறது என்பதை நீங்கள் அறியாமல் இருக்க வாய்ப்புள்ளதாக நியூயோர்க் ட்ரைம்ஸ் (New York Times) சுட்டிக்காட்டியிருந்தது.

அமெரிக்க மத்திய அரசு, இத் திட்டத்தைப் பற்றி பகிரங்கமாக, அமெரிக்க காங்கிரசின் விசாரணைகள் மற்றும் மூலோபாய ஆவணங்களுக்கு வெளியே, அல்லது பெருமளவிலான தொகை இதற்கு செலவழிக்கப்படுவதைப் பற்றி அதிகம் கூறவில்லை.

கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்க காங்கிரஸ் 895 பில்லியன் டொலர் தேசிய பாதுகாப்பு அங்கீகாரச் சட்டத்திற்கு (NDAA) ஒப்புதல் அளித்தது, இது மனிதகுல வரலாற்றில் எந்தவொரு நாட்டையும் விட மிகப்பெரிய இராணுவ வரவு-செலவுத் திட்டமாகும். இதில் அணு ஆயுத நவீனமயமாக்கல் முயற்சிகளுக்கான சாதனை நிதியும் அடங்குகின்றது.

அதேவேளை, அணுசக்தி சொற்பொழிவுப் போரில் மற்றொரு சுற்றுக்கு வழிவகுத்த ரசிய ஜனாதிபதி புடின், ஒக்டோபர் 29 ஆம் திகதி போஸிடான் அணுசக்தியால் இயங்கும் நீருக்கடியில் ட்ரோனின் வெற்றிகரமான சோதனையை அறிவித்துள்ளார்.

அதை “வேகத்திலும் ஆழத்திலும் ஒப்பிடமுடியாது" மற்றும் "தடுக்க இயலாது" என்று அழைத்தார். இது ட்ரம்ப் நிர்வாகத்துக்கு ரசியா கொடுத்த பெரும் சவால்.

ஆனாலும், அமெரிக்க அரசியல் - இராணுவ நிர்வாகம், ட்ரம்ப் கட்டளையிடும் அனைத்துக்கும் செவிசாய்த்து செயற்படும் என்று கூற முடியாது. இக் கருத்தை ரொய்டர்ஸ் செய்தி சேவை வெளியிட்டிருந்தது.

அதேநேரம் அமெரிக்காவில் உள்ள சில பொறுப்புள்ள அச்சு ஊடகங்கள் ட்ரம்பின் கருத்துக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதைவிடவும், அமெரிக்க தேசிய நலன் என்பதில், செய்திகளை வெளியிடும் முறைமைகளில் மிகக் கவனமாக கையாண்டு வருவதை அவதானிக்க முடிகிறது.

ஆகவே, இந்த அணு ஆயுதப் பரிசோதனை என்ற ட்ரம்பின் அச்சுறுத்தல் சில மாதங்களில் அல்லது சில வாரங்களில் முடிவுக்கு வரலாம். ஆனால், அது உறுதியான மனித குலத்துக்கு ஆபத்தில்லாத புரிந்துணர்வாக இருக்க வேண்டும் என்பதே வல்லரசு அல்லாத நாடுகளின் வேண்டுதலாகும்.

அத்துடன் அமெரிக்க கொள்கை வகுப்பாளர்கள் ட்ரம்ப்புடன் பல விடயங்களில் உடன்படுவதாக இல்லை என்பதும் ஆரோக்கியமான செய்திதான்.

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/share/p/1BUWbCk2Fs/

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.