Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

November 9, 2025

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

— கருணாகரன் —

தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு எதிராக NPP யின் எழுச்சி உருவாக்கியிருக்கும்  நெருக்கடிச் சூழலில் ‘தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ என்ற நூலினை ‘தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு உட்பட ஊடகத்துறையின் முக்கிய பொறுப்பிலிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. 

இந்த எட்டுக் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகளும் தமிழ்த்தேசியவாத அரசியலின் இருப்பு, அதனுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளை ஆதாரமாக முன்வைத்துப் பேசினாலும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை, கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள், தமிழ்த் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் பார்வை, யதார்த்த அரசியலை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதால் தமிழ்த்தேசியவாத அரசியலாளர்களும் மக்களும் சந்திக்கின்ற பின்னடைவுகள், மாகாணசபை முறையின் அவசியம், அரசியலமைப்பைத் திருத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், ஆட்சியிலிருக்கும் NPP அரசாங்கத்தின் பொறுப்புகள் எனப் பலவற்றையும் பேசுகின்றன. 

இவற்றைப் பற்றி வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஆராய்கிறார் தனபாலசிங்கம். ஒரு கட்டுரை மட்டும் மறைந்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தனுடைய அரசியல் வகிபாகம் பற்றியது. அதுவும் ஒரு வகையில் தமிழ்த்தேசியவாத அரசியலைப் பற்றிப் பேசுவதான். 

எழுந்தமானமாகவோ தன்னுடைய விருப்பு – வெறுப்பு நிலையிலிருந்தோ எதையும் பேச விழையாமல், வரலாற்று நிதர்சனங்களின் ஊடாக, யதார்த்த பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும். தனபாலசிங்கத்தின் முக்கியத்துவமும் இதுவே. 

இந்த நூலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், ‘எல்லாப் பக்கமும் கூருள்ள ஆயுதமொன்றைப் போல இந்த நூல் உள்ளது’ எனலாம். அதனால் எல்லாத் தரப்பினருக்கும் விழுகிறது பாரபட்சமில்லாத அடி. கூடவே எல்லோருடைய பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு நியாயமான முறையில் உணர்த்தப்படுகிறது. அதாவது, கடுமையான விமர்சனம். சிநேகபூர்வமான சுட்டிக் காட்டுதல்கள்.

இவை சமகாலத்தை மையப்படுத்திப் பேசினாலும் இலங்கைத்தீவின் அரசியல் நிலவரத்தையும் வரலாற்றையும் யதார்த்தப் பார்வையோடு, தேவைக்கேற்ப முன்பின்னாகப் பேசி, உண்மைகளைக் கண்டறிய விளைகின்றன. முழுமையாக நோக்கினால், இலங்கைத்தீவின் இனச்சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வைக் காண்பதையும் தமிழ்ச் சமூகம் பொருத்தமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றது எனலாம்.  

என்பதால் இன்றைய அரசியலாளர்களும் மக்களும் இந்த நூலைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. நூலில் உள்ள கட்டுரைகள் சொல்ல விளைகின்ற விடயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம்.

1.   ‘கறுப்பு ஜூலைக்குப் பிறகு 42 வருடங்கள்’ என்ற முதலாவது கட்டுரை, இந்தக் காலப் பகுதியில் மிகப் பெரிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்து விட்டது. பேரழிவுகளில் நாடு சிக்கி மீண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்துச் சமூகங்களிலும் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முற்றாகவே பின்னடைவு நிலைக்குள்ளாகியிருக்கிறது. அரசியல் ரீதியாக (மனித உரிமைகள் மற்றும் தீர்வு விவகாரங்களில்) சர்வதேச தலையீடுகளும் பொருளாதார ஆக்கிரமிப்புகளும் நிகழும் நிலை உருவாகியுள்ளது. இப்படியெல்லாம் இருந்தும் இன்னும் சிங்கள மக்களுடைய – சிங்கள அதிகார வர்க்கத்தினுடைய உள நிலையில் மாற்றத்துக்கான அறிகுறியைக் காணவில்லை; படிப்பினையைப் பெறவில்லை என்று கவலை தெரிவிக்கிறது. தீர்வுக்கான அரசியல் வரைவை உருவாக்குவதில் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் உள்ள தடுமாற்றத்தையும் அர்ப்பணிப்பற்ற தன்மையையும் சொல்கிறது.

முக்கியமாக 1983 இல் நடைபெற்ற வன்முறைச் சூழலை, அன்றைய அரசியல் சக்தியாக இருந்த UNP யும்  அதனுடைய தலைமையான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும்  மேற்கொண்ட அரசியல் தவறுகளை – மேலாதிக்கச் செயற்பாடுகளை – இனவாத அணுகுமுறையை தனபாலசிங்கம் ஆதாரபூர்வமான எடுகோள்களோடு முன்வைத்துள்ளார். இது மூத்தவர்களுக்கு நினைவூட்டலையும் இளைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றுச் சூழலைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துகிறது. 

2.   13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் என்ன  செய்யப்போகிறார்கள்? என்பது பற்றிய கட்டுரை சற்றுச் சுவாரசியமானது. அத்துடன் நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைக்கும் இடையில் சிக்குப்பட்டிருப்பது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான  மாகாணசபை முறைமை ஆகும். ஆனால், தற்போதுள்ள சூழலில் மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட அல்லது உரிமைக்கான போராட்டத்தின் பின்னர் மிஞ்சியிருப்பது இது ஒன்றேயாகும். இது தொடர்பாக சிங்களத் தரப்பிலும் ஏற்பும் மறுப்புமான நிலைப்பாடுகள் உண்டு. தமிழ்த்தரப்பிலும் அப்படித்தான் நிலைமை. இந்த நிலையில் இதை ஏற்றுக் கொள்வதில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டுடன் உள்ளனர்? என்பதே தனபாலசிங்கத்தின் கேள்வியாகும். இந்தக் கேள்வியை அவர் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் இலங்கை இனப்பிரச்சினையின் அணுமுறை தொடர்பான ஈடுபாட்டு எல்லைகளின் அனுபவங்களை முன்வைத்தே எழுப்புகிறார். என்பதால் இது முதன்மையான உரையாடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது. 

3.   தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பும் மையக்கட்டுரை இது. தேசிய மக்கள் சக்தி (NPP) யின் எழுச்சியும் அது ஆட்சியைக் கைப்பற்றியதும் வடக்குக் கிழக்கில் அதற்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் இன்னும் அதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள கவர்ச்சியும் அல்லது ஈர்ப்பும் தமிழ்த் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதா? என்பதே கட்டுரையின் சாரம். தேசிய இனப்பிரச்சினைக்கு NPP யிடம் உருப்படியான – வெளிப்படையான தீர்வைக் காண முடியவில்லை என்றாலும் சனங்கள் (தமிழ் மக்கள்) NPP யையும் அநுரகுமார திசநாயக்கவையும் தமக்கு நெருக்கமாகவே உணர்கிறார்கள். இதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் தவிக்கின்றன. இவ்வளவுக்கும் NPP இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை, எந்தக் காலப்பகுதிக்குள் முன்வைப்பது என்பதைப் பற்றி எந்தப் பதிலும் சொல்லாமலே NPP தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால்  கடுமையானதொரு நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் இனவாதப் போக்கில் எடுத்திருக்கின்றன என்கிறார் தனபாலசிங்கம். இது மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் ஒன்றாகவே மாறும். உண்மையான காரணம், தமிழ்த்தேசியவாதக் கட்சிகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிறைவின்மையே காரணம். அதைக் கண்டறிவதுதான் முக்கியமானது என்பது அவருடைய வாதம். இந்தக் கட்டுரையாளரின் கருத்தும் அதுதான். முக்கியமாக ‘பெரும்பான்மைச் சிங்கள மக்களின் 

ஒத்துழைப்பு இல்லாமல் இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்ற உண்மையை தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறைப்படவில்லை என்ற கவலைய்யும் – குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் தனம்.

4.   இலங்கைத் தமிழர் அரசியலில் சம்பந்தனின் வகிபாகத்தைப் பற்றிய கட்டுரை இது. சம்பந்தன், தமிழ்த் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு நிலையிலும் அவருடைய பாத்திரம் எவ்வாறிருந்தது? எத்தகைய பங்களிப்பைக் கொண்டிருந்தார் என்பதைப் பற்றி ஆராயப்படுகிறது. ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் அரசியலில் அனுபவமுடையவரான சம்பந்தன், 15 ஆண்டுகள் தமிழ்த் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலகட்டமானது, தமிழர்கள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்போராட்டத்தில் தோல்வியைத் தழுவிய சூழலைக் கொண்டது. அதாவது மிகக் கடினமான காலத்தில் – வெற்றிக் களிப்போடு இருந்த சிங்களத் தலைமைகளோடு, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலைக் கையாள வேண்டியிருந்தது என்கிறார் தனபாலசிங்கம். ஒரு பத்திரிகை ஆசிரியராக தனக்கு வாய்த்த அரசியல் உறவுகளை அடிப்படையாக வைத்து இந்த விடயங்களை அவர் நோக்குகின்றார். 

சம்பந்தனுடைய அரசியற் தலைமைத்துவத்தை தமிழ் மக்களில் ஒருசாரார் நிறைவின்மையாகப் பார்க்கின்றபோதும், அவர் தன் வாழ்நாளில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடத்திலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் இலங்கை அரசின் தவறான போக்குகளையும் எந்தச் சமரசமும் இல்லாமலே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அவர் கடுந்தொனியில் கூட அவற்றைச் சொல்லியிருக்கிறார். ஒரு மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருடைய எல்லைகள் மட்டுப்பட்டன என்பதை நினைவூட்டுகிறார் தனபாலசிங்கம். ஆனால், என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தன் இருந்தவரையில் அவர் தமிழர்களின் தலைவர் என்ற ஒரு அடையாளத்தையும் உணர்வையும் ஏற்படுத்தியிருந்தார். சம்பந்தனுக்குப் பிறகு அப்படி ஒரு அடையாளம் தமிழ் அரசியற் பரப்பில் இல்லாமற் போயுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி, சம்பந்தனுடைய முக்கியத்துவத்தை – அவருடைய இருப்பின்மையை உணர்த்துகிறார். 

5.   இது மிகச் சவாலுக்குரிய – இன்றைய சமகால ஆட்சியாளர்களுடைய அரசியல் யாப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்ததாக உள்ளது. இனப்பிரச்சினையைக் கையாளும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றால், புதிய அரசியல் கலாச்சாரம் என்பது அர்த்தமற்றது என்பதை ஆராய்ந்து நிறுவுகிறது இந்தக் கட்டுரை. NPP அதிகாரத்தில் இருப்பதால் ‘இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருப்பதாகக் கருதக் கூடாது. அப்படிக் கருதவும் முடியாது. இதை இனவாத அரசியலின் முடிவாகவும் அமைந்து விடப்போவதில்லை.  பதிலாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக விதைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சரியான அரசியல் யாப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய செயற்பாட்டுத் துணிவும் ஏற்படும் என நிறுவப்படுகிறது. இது அதற்குப் பொருத்தமான – வாய்ப்பாக அமைந்த காலம். இதனை அரசாங்கமும் பிற சக்திகளும் தமிழ்ச் சமூகமும் இழக்கக் கூடாது என்பதே கட்டுரையின் தொனியாகும். 

6.   சமகால நிலவரத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியவாத சக்திகள் எத்தகைய முடிவுகளை – தீர்மானங்களை எடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி குறுகிய கால ஆட்சிக்குள் படித்துக் கொண்ட பாடங்கள் என்ன? என்பனவற்றை நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலை அடிப்படையாக வைத்து, ஒரு கண்ணோட்டமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழரசுக்கட்சி கவனிக்க வேண்டிய விடயங்கள் அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த்தேசியவாத சக்திகளின் இருப்புச் சற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் தலைக்கு மேலே தொங்கும் கத்தி அகலவில்லை. தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சித் தேர்தலிலும் வலுவான இடத்தில் – இரண்டாவது இடத்தில்தான் உள்ளனது என்பதை ஆதாரப்படுத்தி, நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழ்த் தரப்பை எச்சரிக்கிறார். 

7.   இதுவும் சமகாலத்தையொட்டியதொரு கட்டுரையே. சுமந்திரன் (தமிழரசுக் கட்சி) ஏற்பாடு செய்த ஆகஸ்ட் 2025 ஹர்த்தாலின் சாதக பாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் தனபாலசிங்கம், ஒரு பொதுக்கோரிக்கை எப்படி அமைய வேண்டும். ஒரு போராட்ட முன்னெடுப்பு எப்படி இருக்க வேண்டும். வெற்றியைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஏனையோருடைய பங்களிப்புகள் என்ன? அவற்றை எப்படிக் கோருவது? பலவீனப்பட்டுள்ள தரப்பை (தமிழ் மக்களை) மேலும் பலவீனப்படுத்தும் அடிப்படையிலான போராட்ட அறிவிப்பு – போராட்ட எதிர்ப்பு நிலைப்பாடுகள் விரும்பத்தகாதவை என்று வலியுறுத்திப் பேசுகிறார். ஒரு ஊடகவியலாளரின் கோபமும் நிதானமும் இதில் தெளிவாகவே புலப்படுகிறது.

8.   இறுதிக் கட்டுரை முக்கியமானது, புதிய அரசியலமைப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி ஆரம்பிக்கிறது. இது அநேகமாக அரசாங்கத்தரப்பையே கூடுதலாகக் கவனத்தில் எடுத்துப் பேசுகிறது. முக்கியமாக ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்புகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. கடந்த கால ஆட்சியாளரின் தடுமாற்றங்கள்,  இனத்துவ நோக்கு, அரசியல் வறுமை, ஊழல் போன்று இந்த ஆட்சித் தரப்பும் தவறுகளையே பராமரிக்குமாக இருந்தால், அது நாட்டை மேலும் பலவீனப்படுத்திப் பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்கிறது. ‘அதிகாரப் பரவலாக்கம் ஆட்சி முறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் இல்லை‘ என்று மிக ஆழமான ஒரு உண்மையை எடுத்துரைத்துள்ளார் தனபாலசிங்கம். ‘இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக் கூடாது‘ என்று முடிக்கிறார்.

எனவே மேற்படி எட்டுக் கட்டுரைகளும் இனமுரண் அரசியலின் தீய விளைவுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியம், அதற்கான வழிமுறைகள், அவற்றை முன்னெடுக்கும் பொறுப்புகள், சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள், இந்தியாவின் நிலைப்பாடு, அதன் எல்லை அல்லது மாறிவரும் பிராந்திய அரசியற் சூழல், தமிழ் மக்களின் சர்வதேசக் கற்பனை, ஒரு நாடு இரு தேசம் என்ற மிகுவிருப்பம், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையில் தத்தளிக்கும் தமிழ் மக்கள், தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகளின் பலவீனம், அதைக் களைய வேண்டிய அவசியம், இனவாத அரசியலில் இதுவரையில் மன்னிப்பே கோராத ஐ.தே.க மற்றும் அதனுடைய தலைமைகள், தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் பலவீனங்களும், புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ஈடுபாடும் யதார்த்தமும், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் அறிவாற்றல், விவேகம், செயற்றிறன், கோட்பாட்டுப் பயில்கை – கோட்பாட்டு வலிமை, ஜனநாயக அடித்தளம் எனப் பலவற்றை இந்த எட்டுக் கட்டுரைகளிலும் வைத்துப் பேசப்படுகிறது. முக்கியமாகத் தேர்வு செய்யப்பட வேண்டிய – தேவையான விடயங்களை அழுத்தம் கொடுத்துப் பேசுகிறது இந்த நூல். அதேவேளை சிறுபிள்ளைத்தனமான அரசியல் புரிதல்களையும் விமர்சிக்கிறது. குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுடைய முதலீடுகளுக்கு அரசாங்கம் இடமளித்தால், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எளிய சூத்திரத்தைத் தமிழ்த் தரப்பு வைத்திருக்கிறது என்பது சிரிப்புக்குரிய சங்கதி அல்லவா! புலம்பெயர் மக்களுடைய முதலீடுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால், அதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீரும் என்ற கற்பனைகள் செல்லுபடியற்றவை. அதைப்போலவே, மக்களுடைய தேவைகள் என்பது அரசியல் உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல, பல்வேறுபட்ட தேவைகளுக்குரியது. குறிப்பாக மேல் வர்க்கத்தின் பிரச்சினையும் உணர்தலும் வேறு. அதனால் அதற்குரிய நிலைப்பாடுகளும் வேறாகவே இருக்கும். அடிநிலை மக்களின் உணர்வும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. அவர்களுடைய நிலைப்பாடுகளும் வேறானவை. இதைப் புரிந்து கொள்ள  வேண்டும். 

ஆகவே எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால், சமகால அரசியல் முன்னெடுப்பாளர்களுக்குரியதொரு கையேடு. பொதுமக்கள் நிதானமான முறையில் சமகால – எதிர்கால அரசியலைத் தெளிவு கொள்வதற்கொரு வழிகாட்டி ஏடு. 

ஒரு ஊடகவியலாளராகவும் அரசியல் நோக்கராகவும் நேர்நிலை நின்று பகுப்பாய்வைச் செய்திருக்கிறார் தனபாலசிங்கம், பொருத்தமான முன்வைப்புகளையும் வைத்துள்ளார். ஆனால், இலங்கைத்தீவில் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் உள்ளனர். அனைத்துத் தீர்வும் அவர்களையும் உள்ளடக்கியதே. அவற்றையும் இணைத்துப் பேசியிருக்க வேண்டும். பன்மைத்துவத்தைப் பற்றிப பேசுவதென்பது, அனைவரையும் உள்ளடக்கியதே. யாரையும் விட்டு விடுவதல்ல. 

https://arangamnews.com/?p=12433

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.