Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பிகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பட மூலாதாரம், ANI

14 நவம்பர் 2025, 01:29 GMT

புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர்

பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. முதல் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 6ஆம் தேதியும், இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு நவம்பர் 11ஆம் தேதியும் நடைபெற்றது. வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்குத் தொடங்கியது.

பெரும்பான்மைக்கு தேவையானதை விட அதிகமான இடங்களில், தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கிறது. பகல் 12 மணி நிலவரப்படி, பிகாரில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி 190 இடங்களுக்கு மேல் முன்னிலை பெற்றுள்ளது. மகா கூட்டணி 48 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

243 தொகுதிகளைக் கொண்ட பிகார் சட்டப்பேரவையில், பெரும்பான்மை பெற 122 இடங்களில் வெற்றி பெற வேண்டும்.

பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம்

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்- 122

  • என்டிஏ189Seat count of என்டிஏ189

  • மகா கூட்டணி50Seat count of மகா கூட்டணி50

  • ஜேஎஸ்பி0Seat count of ஜேஎஸ்பி0

  • மற்ற கட்சிகள்4Seat count of மற்ற கட்சிகள்4

கடைசியாகப் புதுப்பிக்கப்பட்ட நேரம்: 12:23 PM

சமீபத்திய முடிவுகளைக் காண இந்த பக்கத்தை புதுப்பிக்கவும்.

முழு முடிவுகளையும் பார்க்க

பிகார் சட்டப் பேரவைத் தேர்தல் முன்னிலை நிலவரம்

ஜன் சுராஜ் கட்சியின் நிலை என்ன?

பிரசாந்த் கிஷோர் , பிகார் தேர்தல்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜன் சுராஜ் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் களம் கண்டார் பிரசாந்த் கிஷோர்

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர், ஜன் சுராஜ் எனும் கட்சியை நிறுவி பிகார் தேர்தலில் போட்டியிட்டார். 243 தொகுதிகளிலும் வேட்பாளர்களை இவரது கட்சி நிறுத்தியது. காலை 10.30 மணி நிலவரப்படி, 1 தொகுதியில் மட்டுமே இவரது கட்சி முன்னிலை பெற்று வருகிறது.

மைதிலி தாகூர் முன்னிலை

மைதிலி தாகூர்

பட மூலாதாரம், Santosh Kumar/Hindustan Times via Getty

பிகாரின் அலிநகர் தொகுதியில் பாஜக வேட்பாளர் மைதிலி தாகூர் முன்னிலை வகிக்கிறார்.

இந்த தொகுதியில் மைதிலியை எதிர்த்து ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் வினோத் மிஸ்ரா மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் பிப்லப் குமார் சவுத்ரி போட்டியிட்டனர்.

தேஜஸ்வி யாதவ் பின்னடைவு

தேஜஸ்வி யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பிகாரின் ரகோபூர் தொகுதியில் போட்டியிடும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சித் தலைவரும், மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளருமான தேஜஸ்வி யாதவ் பகல் 11.30 மணி நிலவரப்படி பின்னடைவை சந்தித்துள்ளார்.

பாஜகவின் சதீஷ்குமார் தேஜஸ்வி யாதவை விட 1200 வாக்குகள் அதிகம் பெற்றுள்ளார்.

இவரை எதிர்த்து பாஜகவின் சதீஷ்குமார் மற்றும் ஜன் சுராஜ் கட்சியின் சஞ்சல் குமார் போட்டியிட்டனர்.

தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவு

தேஜ் பிரதாப் யாதவ்

பட மூலாதாரம், Getty Images

பிகாரின் மஹுவா தொகுதியில் ஜன்சக்தி ஜனதா தளம் கட்சியின் தலைவரும், லாலு பிரசாத் யாதவின் மகனுமான தேஜ் பிரதாப் யாதவ் பின்னடைவை சந்தித்துள்ளார்.

தேர்தல் ஆணைய இணைய தளத்தில் இடம் பெற்றுள்ள தரவுகளின் படி, 2 சுற்று வாக்கு எண்ணிக்கையின் முடிவில் லோக் ஜனசக்தி கட்சியின் சஞ்சய் குமார் சிங் முன்னிலை பெற்றுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியிலிருந்து வெளியேற்றப்பட்டதைத் தொடர்ந்து, தேஜ் பிரதாப் ஜன்சக்தி தள் எனும் கட்சியைத் தொடங்கி தேர்தலில் போட்டியிட்டார்.

கேசரி லால் யாதவ் பின்னடைவு

பிகார் தேர்தலில் ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் நட்சத்திர வேட்பாளரான கேசரி லால் யாதவ், பின்னடைவை சந்தித்துள்ளார்.

சாப்ரா தொகுதியில் போட்டியிட்ட போஜ்புரி சினிமா நட்சத்திரமான கேசரி லால், சுமார் 1,600 வாக்கு வித்தியாசத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

முக்கியத்துவம் ஏன்?

இந்த ஆண்டு பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் சில காரணங்களால் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது. பிகாரில் 1951ஆம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு, இந்தத் தேர்தலில்தான் அதிகளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

இந்த முறை பிகாரில் 67.13% வாக்குகள் பதிவாகியுள்ளன. இது கடந்த சட்டமன்றத் தேர்தலைவிட 9.6% அதிகம்.

ஆண் வாக்காளர்களுடன் ஒப்பிடும்போது பெண் வாக்காளர்களில் 8.15 சதவிகிதம் அதிகளவில் வாக்களித்துள்ளனர்.

ஆண் வாக்காளர்களில் 62.98 சதவிகிதத்தினரும், பெண் வாக்காளர்களில் 71.78 சதவிகிதத்தினரும் இந்தத் தேர்தலில் வாக்களித்துள்ளனர். 3.51 கோடி பெண் வாக்காளர்களும் 3.93 கோடி ஆண் வாக்காளர்களும் உள்ள பிகாரில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 7.45 கோடியாக உயர்ந்துள்ளது.

தொண்டர்கள் உற்சாகம், பிகார் தேர்தல்

படக்குறிப்பு, பாட்னாவில் உள்ள பாஜக அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாகம்

நிதிஷ் குமாருக்கு சாதகமா?

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளில், தேசிய ஜனநாயக கூட்டணி (என்.டி.ஏ) முன்னிலை வகிக்கிறது.

தேர்தலுக்கு சற்று முன்பு, செப்டம்பர் மாதத்தில் நிதிஷ் குமார் முதலமைச்சர் பெண்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தைத் தொடங்கினார். அதில், பிகார் முழுவதும் உள்ள பெண்களின் வங்கிக் கணக்குகளுக்கு பத்தாயிரம் ரூபாய் தொகை அனுப்பப்பட்டது. தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும், தலா 10,000 ரூபாய் செலுத்தப்பட்டது.

இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், இதுவொரு தொடர்ச்சியான திட்டம் என்று தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. எனவே, பெண்களின் உற்சாகமான பங்கேற்பு நிதிஷ் குமாருக்கு சாதகமாக அமையும் என நம்பப்படுகிறது.

பிகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்

நவம்பர் 11ஆம் தேதி இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்த பிறகு தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியிடப்பட்டன. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை வகிக்கும் என்று கணித்துள்ளன.

ஆக்ஸிஸ் மை இந்தியாவின் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பின்படி, பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி முன்னிலை பெறும், ஆனால் ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிகப்பெரிய கட்சியாக உருவெடுக்கலாம். என்.டி.ஏ-வுக்கு 121 முதல் 141 இடங்களும், மகா கூட்டணிக்கு 98 முதல் 118 இடங்களும் கிடைக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், பிகாரில் தேர்தல் களத்தில் இறங்கும் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு சில இடங்கள் கிடைக்கலாம்.

டுடேஸ் சாணக்யாவின் கருத்துக் கணிப்புப்படி, பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 160 இடங்களைப் பெறலாம், ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு 77 இடங்கள் கிடைக்கலாம்.

பிகார் சட்டமன்றத் தேர்தல்: வாக்கு எண்ணிக்கை நிலவரம்

பட மூலாதாரம், Getty Images

இருப்பினும், புதன்கிழமை வெளியான கருத்துக் கணிப்புகளை நிராகரித்துள்ள மகா கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர் தேஜஸ்வி யாதவ், 2020 சட்டமன்றத் தேர்தலுடன் ஒப்பிடும்போது, 76 லட்சம் வாக்காளர்கள் மாற்றத்திற்காக வாக்களித்துள்ளனர், நிதிஷ் குமார் அரசாங்கத்தைக் காப்பாற்றுவதற்காக அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், "தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றதாக கருத்துக் கணிப்புகள் கூறியபோது, மக்கள் வாக்களிக்க வரிசையில் நின்றிருந்தனர். இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை நம்ப முடியுமா? வாக்கு எண்ணிக்கையில் ஈடுபடவுள்ள அதிகாரிகள் மீது உளவியல் அழுத்தத்தை உருவாக்கும் முயற்சியைத் தவிர இது வேறெதுவும் இல்லை" என்று தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தார்.

தேஜஸ்வி யாதவ் இந்தத் தேர்தலுக்கான பிரசாரத்தில் 85க்கும் மேற்பட்ட பேரணிகளில் உரையாற்றியுள்ளார். பிகாரில் தான் ஆட்சி அமைத்தால் மாநிலத்திலுள்ள ஒவ்வொரு குடும்பத்தில் இருந்தும் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அவர் உறுதியளித்துள்ளார்.

பிகார் மக்களில் 16 முதல் 18 சதவிகிதம் பேர் மட்டுமே நிதிஷை முதலமைச்சராக்க விரும்புவதாகக் காட்டிய தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கோள் காட்டிய தேஜஸ்வி, கருத்துக் கணிப்பு முடிவுகளை நிராகரித்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4gpk4vvwklo

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

6 இடங்களில் மட்டுமே வெற்றி: பிகாரில் காங்கிரஸ் படுதோல்வி ஏன்? 5 முக்கிய காரணங்கள்

பிகார் சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் படுதோல்வி, ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்

கட்டுரை தகவல்

  • தில்நவாஸ் பாஷா

  • பிபிசி செய்தியாளர்

  • 15 நவம்பர் 2025, 08:04 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

பிகார் சட்டப்பேரவையில் உள்ள 243 இடங்களில் 202 இடங்களை வென்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது.

ராஷ்டிரிய ஜனதா தளம், இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளின் மகா கூட்டணி மிகப்பெரிய மற்றும் எதிர்பாராத தோல்வியைச் சந்தித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியில் நிலைமை இன்னும் மோசம். அக்கட்சி போட்டியிட்ட சுமார் 60 இடங்களில் 6 இடங்களை மட்டுமே வென்றது.

இந்த முறை, பிகார் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் 8.71 சதவீத வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. 2020 சட்டமன்றத் தேர்தலில் அது 9.6 சதவீதமாக இருந்தது. அந்த நேரத்தில் காங்கிரஸ் 70 இடங்களில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

கடந்த தேர்தலில் காங்கிரஸ் 19 இடங்களை வென்றிருந்தது. கடந்த சில தசாப்தங்களாக பிகார் அரசியல் ரீதியாக காங்கிரசுக்கு மிகவும் கடினமாக உள்ளது.

2015 இல் காங்கிரஸ் 27 இடங்களை வென்றது. 2010 இல், அது நான்கு இடங்களை மட்டுமே வென்றிருந்தது. இந்த முறை காங்கிரஸ் ஆறு இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதாவது ஒவ்வொரு பத்து வேட்பாளர்களில் ஒருவர் மட்டுமே வெற்றி பெற்றனர்.

காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாடு எதிர்பாராததாகவும் ஆச்சரியமாகவும் இருக்கலாம். ஆனால் தேர்தல் பிரசாரத்தின் போதே அதன் அறிகுறிகள் தென்பட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

1990 முதல் பிகாரில் காங்கிரசுக்கு முதல்வர் இல்லை, பெரும்பாலான நேரம் மாநிலத்தில் கட்சி அதிகாரத்திற்கு அப்பால்தான் காங்கிரஸ் இருந்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, காங்கிரசுடன் தொடர்புடைய பெரும்பாலான தலைவர்கள், 'இந்த முடிவுக்கு தேர்தல் ஆணையமே பொறுப்பு' என்று எதிர்வினையாற்றியுள்ளனர்.

தேர்தல் முடிவுகளின் போது, காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா, "இந்தத் தேர்தல் பிகார் மக்களுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான போட்டி. தேர்தல் ஆணையம் வெற்றி பெறுகிறது" என்று கூறினார்.

மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான திக்விஜய் சிங், "இந்த முழு விளையாட்டும் போலி வாக்காளர் பட்டியல்கள் மற்றும் போலி மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பற்றியது, எனது சந்தேகம் சரி என்று நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.

ஹரியாணா முன்னாள் முதல்வர் பூபிந்தர் ஹூடா, "மகா கூட்டணி ஒரு அரசாங்கத்தை அமைக்கும் என்று தோன்றியது. இந்த தோல்வி எதிர்பாராதது; காரணங்களை நாங்கள் மதிப்பாய்வு செய்வோம்." என்று கூறியுள்ளார்.

இருப்பினும், காங்கிரஸின் இந்த மோசமான செயல்பாட்டிற்கு, சமூக அடித்தளமின்மை, பலவீனமான கட்சிக் கட்டமைப்பு, கூட்டணியுடன் ஒருங்கிணைப்பு இல்லாமை மற்றும் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் கவனக்குறைவு ஆகியவையே காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பலவீனமான சமூக அடித்தளம்

பிகார் சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் படுதோல்வி, ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

பிகாரில் காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை என்றும், கட்சியின் மோசமான முடிவுகளுக்கு இதுவே மிகப்பெரிய காரணம் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மூத்த பத்திரிகையாளரும் அரசியல் ஆய்வாளருமான சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரசுக்கு வலுவான சமூக அடித்தளம் இல்லை. உயர் சாதியினர் ஏற்கனவே கட்சியை விட்டு வெளியேறிவிட்டனர். அதேநேரம், பிற்படுத்தப்பட்ட சாதியினரும் கட்சியில் சேரவில்லை."

"காங்கிரஸ் ஒரு சித்தாந்த அடிப்படையிலான கட்சி, ஆனால் சாதி மற்றும் சமூக இயக்கவியல் பிகார் அரசியலில் ஆதிக்கம் செலுத்துகிறது. தேர்தல் முடிவுகளை பாதிக்கும் அளவுக்கு வலுவான சமூக அடித்தளம் கட்சிக்கு இல்லை."

அதே நேரத்தில், பிகாரின் முன்னணி இந்தி நாளிதழான பிரபாத் கபரின் மாநிலத் தலைவரான அஜய் குமார், பிகாரில் பலவீனமடைந்து வரும் தனது அடித்தளத்தை மீண்டும் ஒன்றிணைக்க காங்கிரஸ் எந்த தீவிர முயற்சியும் எடுக்கவில்லை என்று நம்புகிறார்.

"பிகாரில் காங்கிரசின் சமூக அடித்தளம் படிப்படியாக பலவீனமடைந்து வருகிறது. 2005 முதல், கட்சி அதன் பழைய அடித்தளத்துடன் மீண்டும் இணைவதற்கு உறுதியான முயற்சியை மேற்கொள்ளவில்லை. மக்களவைத் தேர்தலின் போது ராகுல் காந்தி தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட சாதியினருடன் இணைய முயன்றார், ஆனால் இந்த தேர்தலில் அந்த முயற்சி தோல்வியடைந்தது" என்று அஜய் குமார் கூறுகிறார்.

காங்கிரஸ் கட்சி தனது சமூக அடித்தளத்தை வலுப்படுத்த எந்த தீவிர முயற்சிகளையும் எடுக்கவில்லை என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "தேர்தலுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு ராகுல் காந்தி பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் தொடர்பான தீர்மானத்தை வெளியிட்டார், ஆனால் கட்சி அதை விளம்பரப்படுத்தவில்லை. இதன் விளைவாக, பிற்படுத்தப்பட்ட சாதியினரிடையே கட்சியின் செல்வாக்கு பலவீனமாகவே இருந்தது. பாஜக மற்றும் ஜே.டி.யு.வின் வலுவான சமூக மற்றும் நிறுவன ரீதியான உத்திகள் தேர்தல்களில் சிறப்பாக பலன் தந்துள்ளன"

கருத்தியல் சவால்கள்

பிகார் சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் படுதோல்வி, ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

பாரதிய ஜனதா வலுவான இந்துத்துவா நிகழ்ச்சி நிரலைக் கொண்டுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் அக்கட்சி பல தேர்தல்களில் வெற்றி பெற்றுள்ளது.

ஹரியாணா, மகாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களுக்குப் பிறகு, இப்போது பாஜகவின் தே.ஜ. கூட்டணி பிகாரிலும் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின் போது, பாஜக தலைவர்கள் தங்கள் சித்தாந்த அடிப்படையை வெளிப்படுத்துவதில் எந்த தயக்கமும் காட்டவில்லை.

மூத்த பத்திரிகையாளர் சுரூர் அகமது கூறுகையில், "காங்கிரஸ் எதிர்கொள்ளும் ஒரு பெரிய சவால் என்னவென்றால், மக்களை அதன் சித்தாந்தத்துடன் இணைக்க முடியவில்லை. பிகார் மக்கள் காங்கிரஸின் சித்தாந்தம் மற்றும் உத்தி இரண்டையும் நிராகரித்துவிட்டனர். ஆனால் இந்த சவால் பிகாரில் மட்டும் அல்ல. இடது-மையவாத கட்சிகள் பிகாரில் மட்டுமல்ல, நாடு முழுவதும் சவால்களை எதிர்கொள்வதால், காங்கிரஸ் தனக்குள்ளேயே ஆழமாக சிந்திக்க வேண்டும். மறுபுறம், வலதுசாரிக் கட்சிகள் இன்னும் வலுவடைந்து வருகின்றன." என்றார்.

சமூக ஊடகங்கள் மற்றும் தகவல் யுகத்தில் மக்கள் உணர்ச்சி ரீதியாக அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும் ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரஸ் தேர்தலில் போட்டியிடும் பிரச்னைகள் சித்தாந்தம் சார்ந்தவை, ஆனால் உணர்ச்சி ரீதியான தொடர்பு இல்லை.

"சமூக ஊடகங்கள் மக்களின் வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டதாலும், தகவல்களின் பெருக்கம் அதிகரித்துள்ளதாலும், மக்கள் சிந்தனையை விட உணர்ச்சிவசப்பட்டே உள்ளனர். காங்கிரஸ் மற்றும் உலகெங்கிலும் உள்ள பிற இடது-மையவாதக் கட்சிகள் இந்த சவாலை எதிர்கொள்கின்றன. வலதுசாரிக் கட்சிகளைப் போல மக்களுடன் உணர்ச்சி ரீதியாக இணையவோ அல்லது அவர்களின் உணர்ச்சிகளைப் பாதிக்கவோ அவர்களால் முடியவில்லை" என்று சுரூர் அகமது கூறுகிறார்.

'வாக்கு திருட்டு பரப்புரை எடுபடவில்லை'

பிகார் சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் படுதோல்வி, ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

பிகார் சட்டமன்றத் தேர்தல்களில், காங்கிரஸ் தனது அறிக்கையில் வேலையின்மை, சமூக நீதி, இடஒதுக்கீடு, இலவச மின்சாரம், மோசமான நலத்திட்டங்கள், சுகாதாரம் மற்றும் கல்வி போன்ற பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தது.

ஆனால் கட்சியின் தேர்தல் பிரசாரத்தில் பிகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' போன்ற பிரச்னைகளே ஆதிக்கம் செலுத்தின. காங்கிரஸ் தொடர்பான ஊடக செய்திகளிலும் இது பிரதிபலித்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் மற்றும் 'வாக்கு திருட்டு' பிரச்னைகளுடன் பிகார் மக்களை காங்கிரசால் இணைக்க முடியவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

இது தேர்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

மூத்த பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறுகையில், "வாக்கு திருட்டை ஒரு தேர்தல் பிரச்னையாக மாற்றுவதை பிகார் மக்கள் புரிந்து கொள்ளவில்லை, இது காங்கிரசுக்கு சிக்கல்களை உருவாக்கியது."

பிகாரில் முதல் கட்ட வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பு, ஹரியாணா சட்டமன்றத் தேர்தலின் போது வாக்குகள் திருடப்பட்டதாகக் ராகுல் காந்தி கூறினார். பாரதிய ஜனதா மற்றும் தேர்தல் ஆணையம் மீது அவர் பல குற்றச்சாட்டுகளை சுமத்தினார்.

"பிகார் மக்களால் இந்தப் பிரச்னையைப் புரிந்து கொள்ள முடியவில்லை. மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள், அவர்களின் வாக்குகள் திருடப்படுவதாக ராகுல் காந்தி கூறிக் கொண்டிருந்தார்" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார்.

"ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருக்கும் போது, சுறுசுறுப்பாக இயங்கும் போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்படுகிறது. பிகார் தேர்தலிலும் காங்கிரஸ் தனது நிகழ்ச்சி நிரலை செயலாக்க தவறிவிட்டது."

மறுபுறம், லாலுபிரசாத் ஆட்சி பற்றி முன்வைக்கப்படும் 'காட்டாட்சி' என்ற விமர்சனத்தை தேஜ கூட்டணி தொடக்கத்திலிருந்தே தனது பிரசாரத்தின் அடிப்படையாக வைத்திருந்தது.

"தேஜ கூட்டணியின் மிகவும் வெற்றிகரமான உத்தி என்னவென்றால் தங்கள் ஆட்சியின் குறைபாடுகள் குறித்து கவனம் செலுத்தவோ அல்லது அது விவாதத்திற்கு வரவோ அனுமதிக்கவில்லை, மாறாக லாலுவின் சகாப்தத்தை தலைப்புச் செய்திகளில் வைத்திருந்தனர். விவாதமும் அதைச் சுற்றியே இருந்தது" என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணி கட்சிகள் இந்த பிரசார போரில் தோற்றன" என்று சுரூர் அகமது கூறுகிறார்.

காட்டாட்சி என்று குறிப்பிட்டு தேஜகூ செய்த பிரசாரம் வெற்றிகரமாக அமைய, "அதனை எதிர்கொள்ள காங்கிரஸிடம் எந்தவொரு உத்தியோ அல்லது எதிர் வாதமோ இல்லை" என்று நச்சிகேதா நாராயண் கூறுகிறார்.

கூட்டணியில் ஒருங்கிணைப்பு இல்லாமை

பிகார் சட்டமன்ற தேர்தல், காங்கிரஸ் படுதோல்வி, ராகுல் காந்தி, வாக்குத் திருட்டு பிரசாரம்

பட மூலாதாரம், Getty Images

பிகார் தேர்தலில், ஒருபுறம் புதிய கட்சிகளைச் சேர்ப்பதன் மூலம் தேஜகூ வலுவடைந்து வந்தது, மறுபுறம், மகா கூட்டணியின் முக்கிய கட்சிகளான காங்கிரஸ் மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் இடையே ஒருங்கிணைப்பு இல்லாமையும், நம்பிக்கையின்மையும் காணப்பட்டன.

மகா கூட்டணியில் எல்லாம் நன்றாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்த இரு கட்சிகளின் தலைவர்களும் பாட்னாவில் ஒரு கூட்டு பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

கூட்டாளிகளுடன் ஒருங்கிணைப்பு இல்லாதது மகா கூட்டணியில் தெளிவாகத் தெரிந்தது என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

"பிகாரில், காங்கிரஸ் கட்சி தனது கட்டமைப்பை வலுப்படுத்துவதிலோ அல்லது கூட்டணியுடன் ஒருங்கிணைவதிலோ கவனம் செலுத்தவில்லை. மண்டல் கமிஷனுக்குப் பிறகு, லாலுபிரசாத் யாதவுடன் நீடிப்பதா அல்லது தனியே நிற்பதா என்பதில் காங்கிரஸ் கட்சிக்குள் மோதல் ஏற்பட்டது. பிகாரில் மாநில காங்கிரசாரின் கருத்து எதுவாக இருந்தாலும், கட்சித் தலைமை ஆர்ஜேடியுடன் கூட்டணி வைப்பதை தேர்வு செய்தது. இந்தக் கூட்டணி பயன் தரவில்லை என்று தோன்றுகிறது" என்று அஜய்குமார் கூறுகிறார்.

காங்கிரஸ் - ஆர்ஜேடி கூட்டணி தொடர்பாக எழுந்த குழப்பமும் தேர்தல் முடிவுகளில் தாக்கத்தை செலுத்தியிருக்கலாம் என்று சுரூர் அகமது நம்புகிறார்.

இருப்பினும், காங்கிரஸ் மகா கூட்டணியிலிருந்து பிரிந்திருந்தால், நிலைமை இன்னும் மோசமாக இருந்திருக்கும் என்று அவர் நம்புகிறார்.

"ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து காங்கிரஸ் பிரிந்திருந்தால், அது ஒரு பெரிய தவறாக இருந்திருக்கும். ஏனெனில் அவ்வாறு செய்திருந்தால், அதன் வாக்கு சதவீதம் மிகவும் குறைந்து பிகாரில் தன் இருப்பைக் காப்பாற்றவே காங்கிரஸ் போராடியிருக்கும்" என்று சுரூர் அகமது கூறுகிறார்.

"காங்கிரசுக்கும் அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும் இடையே ஒருங்கிணைப்பு இல்லாதது ஒரு முக்கிய காரணியாக இருந்தது. சில தொகுதிகளில் நட்புரீதியான போட்டிகள் நடந்தன, இது தேர்தல் உத்திக்கு தீங்கு விளைவிக்கும்." என்று பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் கூறினார்.

கட்டமைப்பு பலவீனம், வேட்பாளர் தேர்வு பற்றி எழும் கேள்விகள்

பிகாரில் காங்கிரஸ் கட்சியில் வலுவான களப் பணியாளர்கள் அல்லது அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. சமீபத்திய ஆண்டுகளில் கட்சி கட்டமைப்பு ரீதியாக இன்னும் பலவீனமாகிவிட்டதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். காங்கிரசின் வேட்பாளர் தேர்வு குறித்தும் ஆய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

"காங்கிரசுக்குள் கட்சி கட்டமைப்பு வலுவாக இல்லை. நடுத்தர வர்க்கத்தினரும் சில ஊக்கமுள்ள மக்களும் காங்கிரசுடன் தொடர்புடையவர்கள், ஆனால் அது பெரிய அளவில் ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க உதவவில்லை. உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாதி அல்லது பிகாரில் ஆர்ஜேடி போல பிகாரில் காங்கிரசுக்கு அர்ப்பணிப்புள்ள தொண்டர்கள் இல்லை. இது பிகாரில் காங்கிரஸ் மிகவும் வலுவான நிலையில் இல்லை என்பதை தெளிவுபடுத்துகிறது" என்று சுரூர் அகமது கூறுகிறார்.

"ஒரு கட்சி தெளிவான நிகழ்ச்சி நிரலைக் கொண்டிருந்தால், சுறுசுறுப்பாக இருக்கும்போது, மக்களுடன் இணைந்திருக்கும் போது சிறப்பாகச் செயல்பட முடியும். இது காங்கிரஸ் கட்சியின் நீண்டகால பற்றாக்குறையாக இருந்து வருகிறது. பிராந்தியக் கட்சிகள் வலுவாக இல்லாத மாநிலங்களில் காங்கிரஸ் ஒரு வலுவான அமைப்பை உருவாக்கியுள்ளது. வலுவான பிராந்தியக் கட்சிகள் உள்ள உத்தரபிரதேசம், பிகார் மற்றும் மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களில் அதுபோன்ற ஒன்றை உருவாக்குவதில் காங்கிரஸ் பெரும்பாலும் தோல்வியடைந்துள்ளது." என்று அஜித்குமார் தெரிவித்தார்.

அதே நேரத்தில், காங்கிரஸ் வேட்பாளர்களைத் தேர்வு செய்வதும் கூட கேள்விக்குரியதாக இருப்பதாக பத்திரிகையாளர் நச்சிகேதா நாராயண் நம்புகிறார்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cqjwk248jygo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.