Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

November 17, 2025

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

— கருணாகரன் —

ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். 

இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறையை மக்கள் பின்பற்றுகிறார்கள் – தொடருகிறார்கள். இதற்குக் காரணங்கள் சில உண்டு. 

1.  தங்களுடைய விடுதலைக்காகப் போரடி மரணத்தைத் தழுவிய போராளிகள் பற்றிய உணர்வும் மதிப்பும் மக்களிடம் நீங்காமல் உள்ளது. இதனால் அவர்களை எப்படியும் நினைவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானவர்களிடம்உண்டு. மாவீரர் நிகழ்வுகளின் அடிப்படைகளில் ஒன்று இதுவாகும். 

2.  இன்னொரு தரப்பினருக்கு ஒரு வகையில் இதுவொரு குற்றவுணர்ச்சியும் கூட. வாழும் வயதில், தங்களுடைய இளமையை போராட்டத்துக்கென அர்ப்பணித்துச் செயற்பட்டு, இறுதியில் மரணத்தையும் தழுவிக் கொண்ட போராளிகளை நினைக்கும்போது, தங்களுக்காகப் போராடியவர்கள் சாவடைந்துவிட்டனர். ஆனால், நாமோ எல்லாவற்றைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இவர்களைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. இதை நீக்குவதற்கு குறைந்தபட்சம் இத்தகைய நினைவு கூருதல்களைச் செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால், குறைந்த பட்சம் இந்த நிகழ்விலேனும் பங்கு பற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

3.  போராடி மரணத்தைத்தழுவிக் கொண்டோரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், சக தோழதோழியரால் நினைவு கொள்ளப்படுதல். இது கூடி வாழ்ந்தவர்களை அஞ்சலித்தல் என்பதாகும். இவர்கள் நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்துகின்றனர். 

4.  அரசியற் காரணங்களுக்காக அல்லது தங்களுடைய அரசியல் நலனுக்காக மாவீரர் என்ற பெயரைப் பயன்படுத்திக்கொள்வதும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதும் அதில் பங்கேற்பதுமாக நடப்பது. அதாவது, இவர்களால் மக்களுக்கெனத் தியாகம் எதையும் செய்யமுடியாது. தம்மை அர்ப்பணித்து தேசத்துக்கான பணிகளைச் செய்வதற்கும் இயலாது. மற்றவர்களின் தியாகங்களைக் கூறி, பிழைக்க மட்டுமே முடியும். அடிப்படையில் இது ஒரு பிழைப்புவாத அரசியலாகும். 

5.  இந்த மரணங்களின் பெறுமதி எத்தகையது? இப்படி நினைவு கொள்வதன் அடிப்படைகள் என்ன? இவ்வாறு நினைவு கொள்வதன் மூலமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் தொடர்ச்சியும் வளர்ச்சியும் எவ்வாறானது? நினைவுகொள்ளப்படும் (நினைவுகூரப்படும்) மறைந்த வீரர்களுடைய கனவுகளை எப்படி நிஜமாக்குவது- நிறைவேற்றுவது? உண்மையான நினைவுகூருதல் என்பது என்ன? அது எவ்வாறு அமைய வேண்டும்? என்பதைப் பற்றிய கேள்விகளோ சிந்தனையோ எதுவுமே இல்லாமல், ஏதோ நடக்கிறது. அதில் நாமும் சேர்ந்து நிற்போம் என்ற மாதிரிக் கலந்து கொள்வது.  

இதுபோலப் பல காரணங்கள் உண்டு. 

இவ்வாறான காரணங்களால்தான் வெவ்வேறு அணிகளால் அல்லது பல அணிகளால் மாவீரர்நாள் கொண்டாடப்படுகிறது – அனுஸ்டிக்கப்படுகிறது. அவரவர் தத்தமது தேவைகளுக்காக மாவீரர் நாளைக் கொண்டாடுகின்ற – அனுஸ்டிக்கின்ற – ஒரு நிலை உருவாகியுள்ளது. அதாவது இது உருவாகிய தேவையும் சூழலும்வேறு. இன்று பின்பற்றப்படும் தேவையும் சூழலும் வேறு. 

ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும். 

இதேவேளை, அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் என ஒரு பொது நாளினைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். ஏனென்றால், ஈழ விடுதலைக்காகப் போராடி, மரணத்தைத் தழுவியவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்களே. அப்படியாயின் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, ஒரேநாளில் நினைவு கொள்ளலாம். அது விடுதலைப் புலிகளின் மாவீர்ர் நாளான நவம்பர் 27 ஆகவும் இருக்கலாம். அல்லது பிறிதொரு நாளாகவும் இருக்கலாம். அப்படி ஒரு பொதுநாள் ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அது அரசியல் ரீதியாகவும் நினைவு கூரலின் அடிப்படையிலும் சிறியதொரு முன்னேற்றத்தைத் தரக் கூடும்.  

இதற்கும் அப்பால் இந்த நினைவுகூரல் இப்பொழுது – அதாவது எந்த இயக்கமும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இல்லாத சூழலில் – நடப்பதற்கான காரணத்தை நாம் அர்த்தமாக்குவதாக இருந்தால், அதைக் குறித்து ஆழமாகச்சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கும்போதுதான் இந்தச்சடங்குத்தனமான, சம்பிரதாயமான நினைவு கூரல் என்ற அர்த்தக் குறைவான நடைமுறை மாறி, புதியபோக்கொன்று அர்த்தபூர்வமாக விளையும். 

1989 இல் மாவீர்ர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் மரணத்த போராளிகளை நினைவுகூரும் விதமாக அனுஸ்டிக்கத்தொடங்கியது. அதற்காக அது தன்னுடைய அமைப்பிலிருந்து முதல் சாவடைந்த போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் மரணித்த நவம்பர் 27 ஆம் நாளையும் அந்த நேரத்தையும் தேர்வு செய்தது. அதுவே இப்பொழுது மாவீரர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் அது தேர்ந்தெடுத்த ஆயுதப்போராட்ட வடிவமும் நேரடியாகவே ஒரு யுத்தத்தை விரித்தது. அப்படி விரிவடைந்த யுத்தம், பல நூற்றுக் கணக்கில் ஏன் சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கிலான போராளிகளின் உயிரைக்கோரியது. இப்படி பல நூறு பேர் யுத்த களத்தில் மடியும்போது, அது மக்களிடையே ஒரு பெரும்கலக்கத்தையும் கேள்வியையும் எழுப்பக் கூடும். முடிவற்ற சாவு என்பது இழப்பு உணர்வையே ஏற்படுத்தக் கூடியது. அரசியல் தீர்வோ, யுத்த முடிவோ அல்லாமல் யுத்தம் நீண்டு செல்லும்போது இந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். அதுவும் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம்மட்டுமல்ல, சிறிய பிரதேசத்திற்குள்ளேயே வாழ்கின்றவர்கள் என்பதால் அதிகரித்த மரணங்களை போராட்டத்தில் சந்திக்கும் போது, அது மக்களின் உளநிலையில் குழப்பங்களையும் போராட்டத்தைத் தொடர்வதில் தயக்கத்தையும் உண்டாக்கும். இப்படியே இந்த யுத்தம் சென்றுகொண்டிருந்தால், கூடிச்செல்லும் மரணங்களைக் குறித்த கேள்விகளும் தயக்கமும் குழப்பமும் எழுந்து போராட்டத்துக்கு எதிரான மக்கள் அலையாக – இயக்கத்துக்க எதிரானபோக்காக மாறக் கூடும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே, மாவீரர்நாளாகும். 

களத்தில் மடிந்த போராளிகளை மகத்தான வீர்ர்களாக, வரலாற்று நாயகர்களாக, விடுதலையின் வித்துகளாக, மண்ணின் முத்துகளாக சித்திரிப்பதன் மூலம் உங்களுடைய பிள்ளையோ கணவரோ, சகோதரரோ வெறுமனே சாவைத் தழுவிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சாவுக்கொரு மகத்துவமும் பெறுமதியும் உண்டு. அதற்கொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்ற உணர்வு நிலையைக் கட்டமைப்பது. இதற்கு தமிழ் வரலாற்றிலிருந்து வீர மரணத்தைத் தழுவிக்கொள்ளும் பெருமிதப் பாடல்கள்(சங்க இலக்கியம்) உதவின. இதைப் புலிகளின் ஆதரவுப்புலவர்களும் பேராசிரியர்களும் தமிழ்மொழி அறிஞர்களும் நிறைவேற்றி உதவினர். புறநானூற்றுப் பாடல்களில் வரும் நடுகல் பண்பாடு, முறத்தினால் புலியை விரட்டிய பெண், நெற்றியில் வீரத்திலகமிட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பிய அன்னை போன்ற கதையாடல்கள் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் மீட்டெடுத்துப் புதுமைப்படுத்தப்பட்டன. 

இதன்மூலம்  சாவடையும் போராளிகளுடைய உறவுகளுக்கும் தோழர்களுக்கும் ஒருவிதமாக ஆறுதலையும் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு நிறைவையும் கொடுப்பதாக உணர வைப்பதாகும். அதாவது இந்தச் சாவுகளுக்கு அர்த்தமும் பெறுமதியும் உண்டென நம்பவைப்பது. 

இத்தகையதொரு வரலாற்றுக்காரணம், போராடும் அல்லது போர் செய்யும் தரப்புக்கு அவசியம் தேவை. இதையே இன்னொரு பரிமாணத்தில் – இன்னொரு கோணத்தில் அரசும்செய்தது. அது படைகளின் உளநிலையையும் அவர்களுடைய உறவுகளின் உளத்தை ஆற்றுப்படுத்தவுமாக. இதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகளாவிய அளவில் அனைத்து அரசுகளும் செய்கின்றன. போரில் பலியாகும் வீரர்களைப் போற்றி, தேசிய வீரர்களாக மகத்துவப்படுத்தும் உத்தி இது. ஆனால், அந்த வீரர்கள் இன்னொரு தளத்தில் – எதிர்த்தரப்பில் – அழிவையும் சேதங்களையும் உண்டாக்கியோராகவே இருப்பர். இது பற்றித் தனியாகச் சிந்திக்கவேண்டும்.

இன்று சூழல் முற்றாகவே மாறி உள்ளது. இது போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிய சூழல். விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பப்பட்ட போராட்டம் அதற்கு மாறான விதத்தில் பெரும் பின்னடைவோடு முடிந்திருக்கும் காலம். போராட்டத்தில் வெற்றிகிட்டும் என்ற எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இல்லாதொழிந்த சூழல். என்பதால் இப்பொழுது புதிய அரசியல் முன்னெடுப்புகளும் அதற்கான வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டிய நிலை. இந்தச் சூழலில், கடந்த காலத்தின் அரசியல் அடையாளங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும்போது, அதை எத்தகைய அடிப்படையில் பின்பற்றுவது? அதனுடையபெறுமதி என்ன? அதற்கான இன்றைய தேவை என்ன? உணர்வைத் திருப்திப்படுத்தத்தான் நம்முடைய அரசியல் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மரணித்த வீரர்களின் கனவுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் அறிவுபூர்வமாகச் செயற்பட்டு, விடுதலையை நோக்கிய அரசியலை முன்னகர்த்துவதா? என்ற கேள்விகள் எழுகின்றன. 

இப்பொழுது மாவீரர் நிகழ்வுகளை நடத்தும்போது அல்லது போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்போது நாம் மனதிற்கொள்ள வேண்டியது, எதிர்கால அரசியலைக் குறித்த சிந்தனைகளை, வெற்றிகரமான செயல் வடிவமாக்குவது எப்படி என்பதாகவே இருக்க வேண்டும். அதையே ஒவ்வொரு போராளியும், மரணித்த ஒவ்வொரு வீரரும் தங்களுடைய கனவாக, விருப்பாகக் கொண்டிருந்தனர். 

அப்படியாயின் இதனை எவ்விதம் முன்னெடுப்பது? யார் முன்னெடுப்பது? என்றகேள்விகள் மேலும் எழுகின்றன. ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் தாம் சொல்வதே சரி. அதுவே நிஜம் என்றே முடிவற்று வாதிடப்படுகிறது. இந்தச் சூழலில் எத்தகைய நிலைப்பாட்டை, எத்தகைய கருத்து நிலையை ஏற்றுக் கொள்வது? அல்லது எந்தத் தரப்பை அங்கீகரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு உண்டு. 

முதலில் நடைமுறை ரீதியாகச் சாத்தியப்படக் கூடிய அரசியலை முன்னெடுப்பவர்களையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அவர்களே வெற்றியின் நாயகர்கள். அவர்களே பொறுப்பான முறையில் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கே மக்களுடைய வலியும் சுமையும் புரிகிறது. அவற்றைக் குறித்து அவர்களே ஆழமாக உணர்கிறார்கள். அவர்களுக்கே பிராந்திய, சர்வதேச அரசியல், பொருளாதார அசைவுகளைப் பற்றிய – அவற்றின் யதார்த்தத்தைப் பற்றிய புரிதல் உண்டு. என்பதால் அவர்களே மரணித்த வீர்களின் கனவுக்கு விசுவாசமாக உள்ளனர். ஒப்பீட்டளவில் அவர்களே இதற்கு நேர்மையாளர்கள். இவற்றைப்பற்றி அக்கறைப் படாமல் வெறும் வார்த்தைகளால் மாண்டவீரர்களைப் போற்றிப்புகழ்பவர்கள், அந்த வீரர்களையும் அவர்களுடைய கனவையும் தமது அரசியல் நலக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூருதலுக்கு எதிரானவர்களாகும். 

என்பதால், இந்தக் கயவர்களை எதிர்த்து, நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் சிந்திப்பவர்களின் –  செயற்படுவோரின் வழியில்திரள்வதும் அந்தப் போக்கைப்பலப்படுத்துவதும் அவசியமாகும். அதுவே மாவீரர்களுக்கு அல்லதுபோராட்டத்தில் மரணத்ததோழர்களுக்கு செலுத்தும்உண்மையான அஞ்சலியாகும்.  

அதேவேளை மாவீர்ர்களைப் போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அந்த வீரர்களின் கனவுக்கும் உணர்வுக்கும் மாறாக உள்ளோர் வியாபாரிகள், வரலாற்று மூடர்கள், எதிரிகள், சமூக – மக்கள் விரோதிகள் என்பதை மக்களுக்குத் தெளிவுறச் சொல்ல வேண்டும். இவர்களை எதிர்ப்பதும் அம்பலப்படுத்துவதும் மாவீரர்களுக்கு செய்கின்ற அஞ்சலி. அவர்களுக்குச் செலுத்துகின்ற மதிப்பாகும்.

என்பதால் வரலாறு, ஒரு மாறுதலுக்கான காலக்கட்டத்தில் நின்று இந்தக் கேள்விகளை – இந்தச் சிந்தனையை எழுப்புகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை.  

ஆகவே விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத சூழலில் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த மாவீரர் நாள், இன்றைய சூழலில் எத்தகைய பெறுமானத்துக்குரியது? அதனுடைய எதிர்கால விளைச்சல் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு காலகட்டத்து விடுதலைப் போராளிகள் என்று கருதப்பட்டோரின் கனவுகளுக்கு இன்று எத்தகைய மதிப்பு வழங்கப்படுகிறது? இதை நாம் எப்படிச் சீராக்கி முன்னெடுப்பது? என்பதே இந்த மாவீர்ர் நாள் சிந்தனைகளாகவும் நடைமுறைகளுக்கான கேள்விகளாகவும் இருக்கட்டும். 

https://arangamnews.com/?p=12440

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.